Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 5

அத்தியாயம் – 5

 

ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை,.. அன்று மாலைப் பொழுது மெல்ல சரிந்து கொண்டிருந்தது, மிருதுளா தனது வீட்டின் பின்புறம் இருந்த அந்தப் தோட்டத்தில் தான் நின்றிருந்தாள், சுற்றிலும் படர்ந்திருந்த அடர் பச்சை நிறச் செடிகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்திருந்த பூக்களும் அவளுக்கு ஒரு மெல்லிய இதத்தைக் கொடுத்தன…

அந்தத் தோட்டம் அவளுக்கு ஒரு தியானக் கூடம் போல இருந்தது, மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் சத்தம், எங்கோ ஒரு குருவி எழுப்பும் மெல்லிய கீச்சொலி… இதெல்லாம் கூடிய அமைதிதான் அவளது காயங்களுக்கு மருந்தாக இருந்தது.



Advertisement

கண்களை மூடி அந்த சுத்தமான காற்றைச் சுவாசித்தபடி, உலகத்தையே மறந்து நின்றிருந்தாள், ஆறு வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தன் நிம்மதியை, இந்தச் செடி கொடிகளுக்கு நடுவில்தான் தேடிக் கொண்டிருந்தாள்…

அவளது அந்த ஆழ்ந்த அமைதியைக் குலைப்பது போல பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்து… “மேடம்… உங்க போன் விடாம அடிச்சுக்கிட்டே இருக்கு,” என்று மூச்சிரைக்கக் கூறி போனை நீட்டிட, மிருதுளா மெல்லக் கண்களைத் திறந்தாள், அந்த அமைதி கலைந்ததில் அவளுக்குச் சற்று வருத்தம் தான், வழக்கமாக அவளது தோழிகள் யாராவதுதான் இந்த நேரத்தில் அழைப்பார்கள்…

ஆனால் காலையில் தான் அவர்களிடம் பேசினாள், அதனால் இப்போது ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனையுடன் போனை வாங்கியவள், திரையில் மின்னிய அந்தப் புதிய எண்ணைக் கண்டு நெற்றியை சுருக்கிவிட்டு
​அழைப்பை ஏற்று காதில் வைத்த அடுத்த நொடி… ​”ஹாய் டார்லிங்… எப்படி இருக்க?” என்று வழவழப்பான குரலில் ஒருவன் கேட்க, மிருதுளாவின் ரத்தமெல்லாம் ஒரு நிமிடம் உறைந்து பின் கொதிக்கத் தொடங்கியது. அந்த ஒரு வார்த்தையிலேயே அது யார் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டது…

Advertisement

​”பொறுக்கி!” என்று அவள் ஆக்ரோஷமாகத் திட்ட, அந்தப் பக்கத்திலிருந்து ஒரு வக்கிரமான சிரிப்பு சத்தமாக ஒலித்தது.

Advertisement

​எரிச்சலில் போனை சட்டெனத் துண்டித்துவிட்டவளின் அமைதி இப்போது முற்றிலுமாகச் சிதைந்து போயிருந்தது, அந்தப் புதிய எண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டு இருக்கவே, வேறு வழியின்றி மீண்டும் போனை எடுத்தவள், “இப்போ உனக்கு என்ன வேணும்?” என்று ஆத்திரத்துடன் வினவினாள்…

​”நீ தான் வேணும்…” என்றான் மறுபக்கத்தில் இருந்தவன்…

​”இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா? உனக்கு இன்னொரு பொண்ணு கூடக் கல்யாணம் முடிவாகிடுச்சுல… இப்போவும் வந்து என்கிட்ட இப்படிப் பேசுற?” என்று அவள் எகிறிட,.. ​”அது எனக்குப் பிடிக்காம என் அப்பா முடிவு பண்ணது டார்லிங், எனக்கு உன்னைதான் பிடிச்சிருக்கு, அப்பா கிட்டச் சொன்னா கேட்க மாட்டேங்கிறாரு, என்னாலயும் உன்னை விட முடியாது,” என்று பேசியது அவளது மாமா சுந்தரத்தின் மகன் விஷ்வாதான்…

Advertisement

அவனது குரலில் காதல் இல்லை, மிருதுளாவின் மீதான ஒரு அசிங்கமான மோகம் மட்டுமே இருந்தது, அவள் சொந்த அத்தை மகள் என்றும் பாராமல் வக்கிரமாக பார்ப்பது மிருதுளாவிற்கு கொஞ்சமும் பிடிக்காது, அவள் தாய் தந்தை உயிரோடு இருந்தவரை விஷ்வா அவளை நிமிர்ந்து பார்க்கக்கூடத் துணிந்ததில்லை…

​ஆனால், எப்போது அவள் தன் பெற்றோரை இழந்து அநாதையாய் தாத்தா வீட்டிற்கு வந்து சேர்ந்தாளோ, அப்போதே அது விஷ்வாவிற்குச் சாதகமாகிவிட்டது. அவன் தனது தாய் தந்தையோடு வேறு வீட்டில் வசித்து வந்தாலும், போன் மூலமாக அவளுக்குத் தரும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
​அவன் தன் பெற்றோருடன் தாத்தா வீட்டிற்கு வரும்போதெல்லாம், யாரும் இல்லாத சமயம் பார்த்து அவளைச் சீண்டுவதும், அருவருப்பான பார்வையால் அவளை நிலை குலைய வைப்பதும் அவளுக்குப் பெரும் வேதனையைத் தந்தது, ஒரு பெண்ணாக அவனது அந்த மோகம் நிறைந்த பார்வையை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை…

​இதைப் பற்றித் தாத்தா வீரமாணிக்கத்திடம் கூற அவளுக்கு ஒரு நிமிடம் போதும், அவள் ஒரு வார்த்தை சொன்னால், தாத்தா விஷ்வாவை அந்த வீட்டிற்குள்ளேயே விடமாட்டார் என்பதும் அவளுக்குத் தெரியும்.

​ஆனால், ஏற்கனவே வயதான காலத்தில் இருக்கும் தாத்தாவிற்க்கு எதற்கு வீண் மனக்கஷ்டம்? சொந்தப் பேரன் இப்படி என தெரிந்தால் எவ்வளவு உடைந்து போவார்? தேவையில்லாமல் குடும்பத்தில் ஏன் பிரட்சனை வர வேண்டும்? என்ற காரணத்தினாலேயே அவள் அத்தனை அவமானங்களையும் விழுங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறாள்…

​அவளது இந்த அமைதி, விஷ்வாவிற்கு இன்னும் துணிச்சலைக் கொடுத்திருந்தது, அவன் பேச்சை கேட்க சகிக்காமல்
போனை அணைத்துவிட்டுத் தூர வைத்த மிருதுளாவிற்கு, அதுவரை அந்தத் தோட்டத்தின் அமைதியில் கிடைத்த இதம் முற்றிலும் வடிந்து போனது. அந்தச் செடிகளும், மலர்களும் கொடுத்த நிம்மதி இப்போது ஒரு கசப்பான உணர்வாக மாறியிருந்தது…

வெறுப்போடு அங்கிருந்த சிமெண்ட் பென்ச்சில்​ அமர்ந்தாள், தோட்டத்தின்  இருள் மெல்லப் படரத் தொடங்கியது, அந்த இருளைப் போலவே மிருதுளாவின் எதிர்காலமும் ஒரு கேள்விக்குறியாகத் தெரிந்தது, விஷ்வாவின் பிடியில் இருந்தும், தாத்தா பார்க்கும் அந்தத் தெரியாத வரனிடம் இருந்தும் அவளுக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? என்ற எண்ணத்துடனே மெதுவாக வீட்டிற்குள் நடந்தாள், அவளது ஒவ்வொரு அடியிலும் ஒருவிதமான கனம் இருந்தது, அந்த வீட்டில் அவள் இப்போது ஒரு கைதியைப் போலவே உணர்ந்தாள்…

இரவு உணவிற்குப் பிறகு, மன பாரத்தோடு தனது அறையின் பால்கனிக்கு வந்துவிட்டவளுக்கு தூக்கம் கண்களைத் தழுவ மறுத்தது, ஏற்கனவே தன் தாய் தந்தையின் இழப்பை எண்ணி வதங்கி போயிருந்தவளுக்கு விஷ்வாவின் அந்த வக்கிரமான பேச்சும்  மனதை ஒரு சிலுவையில் அறைந்ததைப் போல வாட்டிக் கொண்டிருந்தன…

​வாழ்க்கையே வெறுத்துப் போன உணர்வு அவளுக்கு… ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?’ என்ற கேள்வி அவளுக்குள் ரீங்காரமிட்டது.

நேரங்கள் நகர நகர, ஊரே மயான அமைதியில் மூழ்கியது, தெருவிளக்குகளின் மங்கலான வெளிச்சம் கூட அவளது அறை வரை எட்டவில்லை…

​அந்தக் கணம் தான்… அமைதியாக இருந்த அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஒரு மெல்லிய சலசலப்பு கேட்டது, காய்ந்த இலைகள் நசுங்கும் சத்தம் அவளது கூர்மையான செவிகளில் விழுந்ததும் அவளது சிந்தனை கலைந்தது,..

யாரோ அங்கே நடமாடுவது போல அவளுக்குத் தோன்றிட, பால்கனியின் கைப்பிடியைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, கீழே தோட்டத்தைக் கூர்ந்து கவனித்தாள், இருள் அடர்ந்து கிடந்ததால் முதலில் எதுவும் பிடிபடவில்லை…

​’ஏதோ அசைஞ்ச மாதிரி இருந்ததே… என் பிரம்மையா?’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டளுக்கு
அடுத்த வினாடியே அவளது இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது, மரங்களின் நிழல்களுக்கு இடையே, ஒரு உருவம் மெல்ல நகர்வது அவளது கண்ணில் பட்டது, அது வெறும் காற்றினால் அசையும் நிழல் அல்ல ஒரு மனிதனின் உருவம்!

​அந்த உருவம் மெதுவாக நகர்ந்து, அவளது பால்கனிக்கு நேர் கீழே வந்து நின்றது, இருட்டில் முகம் தெரியவில்லை என்றாலும், அந்த நிழலின் உயரமும், அது நின்றிருந்த தோரணையும் ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தியது…

​’விஷ்வாவா? இவ்வளவு தைரியமா இந்த நேரத்துல இங்கே வந்திருக்கிறானா?’  மிருதுளாவின் ரத்தமெல்லாம் ஒரு நிமிடம் உறைந்து போனது, பயமும் கோபமும் ஒருசேர அவளை ஆட்கொள்ள, அவளது விழிகள் இரண்டும் விரிந்தன…

​அந்த நிழல் உருவம் மெல்லத் தலைநிமிர்ந்து மேலே பார்த்தது, இருளின் கருமைக்கு நடுவே, அந்த உருவத்தின் கண்கள் மட்டும் வைரத்தைப் போல மின்னின, அது விஷ்வாவின் வக்கிரமான கண்கள் போலத் தெரியவில்லை… மாறாக, ஒரு சிங்கம் தனது இரையை நோக்குவதைப் போன்ற தீர்க்கமான பார்வையாக இருந்தது!

சட்டென்று விபரீதத்தை உணர்ந்தவள், “செக்யூரிட்டி… செக்யூரிட்டி!” என்று உரக்கச் சத்தம் போட ஆரம்பித்துவிட்டாள்,
​அந்த நள்ளிரவு நேரத்தில் அவளது அலறல் சத்தம் அந்தப் பெரிய பங்களாவையே உலுக்கியது.

வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் மாலை முடிந்து தத்தம் வீடுகளுக்குப் புறப்பட்டுவிட்டதால், பிரதான நுழைவாயிலில் காவல் பணியில் இருந்த இருவர் மட்டும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்…

​அவள் சத்தம் போட்ட அடுத்த நொடியே, அந்த மர்ம உருவம் மின்னல் வேகத்தில் மரங்களின் மறைவில் மறைந்துவிட்டது.

​”என்னாச்சு மேடம்? ஏன் இப்படி சத்தம் போடுறீங்க?” என்று மூச்சிரைக்கக் கேட்டான் ஒரு காவலாளி…

​”கீ… கீழே யாரோ இருந்தாங்க! யாரோ காம்பவுண்ட் செவுறு ஏறி உள்ளே நுழைஞ்சிருக்காங்கனு நினைக்கிறேன்!” என்று மூச்சிரைக்க, கைகள் நடுங்கச் சொல்ல, ​அந்தக் காவலாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு… பின்.. “நாங்க வாசல்லயே தான் மேடம் இருந்தோம், யாரும் உள்ளே வந்த மாதிரி தெரியலையே? கேட் பூட்டிதான் இருக்கு,” என்றான் மற்றொருவன் தயக்கத்துடன்…

​”அப்போ நான் பார்த்தது என்ன? என்னோட பிரமையா? நான் கண்ணால பார்த்தேன்!” என்று அவள் கடுகடுக்க, காவலாளிகள் உடனே சுதாரித்துக் கொண்டு..
​”மன்னிச்சிடுங்க மேடம்… இதோ இப்போவே தோட்டத்தைச் சுத்தி ஒரு ரவுண்டு பார்க்கிறோம்,” என்று கூறிவிட்டுத் தங்கள் கையில் இருந்த டார்ச் லைட்டுகளை அடித்துத் தோட்டத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் அலசத் தொடங்கினர்…

​மிருதுளா பால்கனியில் நின்றபடியே கீழே பார்வையால் தேடினாள், இரவு நேரத்தில் ஒரு அந்நியனைத் தன் வீட்டுத் தோட்டத்திற்குள் பார்த்த அந்த நடுக்கம் அவளை விடாமல் துரத்தியது, அவளது இதயம் இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது…

​’தாத்தாகிட்ட போய் சொல்லலாமா?’ என்று ஒரு கணம் யோசித்தவள், அடுத்த கணமே.. ​’இல்ல வேணாம்… அவர் இப்பதான் டேப்லட் போட்டுட்டுத் தூங்கிட்டு இருப்பாரு, இந்த நேரத்துல அவரை எழுப்பிப் பயமுறுத்த வேண்டாம், ஒருவேளை உண்மையிலேயே அது என் பிரமையா இருந்தா? தாத்தா தேவையில்லாம பதட்டப்படுவாரு,’ என்று நினைத்துக்கொண்டாள்.

​ஆனால், அவளுக்குத் தெரியும்… அது பிரமை அல்ல. அந்த தீர்க்கமான கண்கள் இன்னும் அவளது மனக்கண்ணில் அப்படியே நின்றன…

​தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த காவலாளிகள் மீண்டும் அவளது பால்கனிக்குக் கீழே வந்து நின்று.. “யாரும் இல்ல மேடம்… செவுத்துல ஏறி குதிச்ச மாதிரி தடம் கூடத் தெரியல, ஒருவேளை பூனை ஏதாவது ஓடியிருக்கும்,” என்று அவர்கள் சமாதானம் சொல்ல,
​மிருதுளா ஒன்றும் பேசாமல் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். ஜன்னல் திரைகளை இழுத்து மூடினாலும், அந்தப் பார்வையிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை…

மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டவளுக்கு அந்த அறையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வெளியே ஏதோ ஒரு மெல்லிய சத்தம் கேட்பது போல் இருந்தது.

யாரோ நடமாடும் காலடிச் சத்தம்… இல்லை கதவை வருடும் சத்தம் போல் இருந்தது, அவள் நெஞ்சே அடைத்து விட்டது,..

​’பயத்துல இருப்பதுனால இப்படித் தோணுதா?’ என்று எண்ணி, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஆனால், அவளது இதயம் இப்போது காதுகளுக்குள் மேளம் அடிப்பது போல் துடித்தது. மீண்டும் அதே சத்தம்… இந்த முறை சற்றுத் தெளிவாக, அவளது அறைக் கதவுக்கு மிக அருகில் கேட்டது.

​இனிமேல் அமைதியாக இருக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. பயத்தை மீறிய ஒரு தற்காப்பு உணர்வு அவளுக்குள் எழுந்தது. சட்டென்று எழுந்தவள், தன்னைத் தற்காத்துக் கொள்ள அறையில் ஏதாவது ஆயுதம் கிடைக்கிறதா என்று தேடியவளுக்கு, மேஜை மீது ஆப்பிள் நறுக்க வைத்திருந்த அந்தச் சிறிய கத்தி கண்ணில் பட, அதைத் தனது நடுங்கும் கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டாள்…

​மெல்லத் தனது அறைக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்தவளுக்கு “கிர்…” என்ற அந்த மெல்லிய சத்தமே அந்த நிசப்தத்தில் இடியைப் போல ஒலித்தது, மூச்சை அடக்கிக்கொண்டு, கத்தியை முன்னால் நீட்டியபடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்…

​அந்தப் பெரிய வீடு அமைதியில் மூழ்கி, இருள் சூழ்ந்து கிடந்தது. மேல் ஹாலில் ஓரமாக இருந்த ஒரு சின்ன ‘நைட் லேம்ப்’மட்டுமே மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்தில் நீண்ட நிழல்கள் சுவர்களில் ஆடிக்கொண்டிருந்தன.

​மேல் ஹாலின் நடுவே வந்து நின்றவள், “யார் அது?” என்று தான் கேட்க நினைத்தாள், ஆனால் குரல் வெளியே வரவில்லை. அங்கிருந்த சோபாக்கள், பெரிய ஜன்னல்கள் அனைத்தும் இருட்டில் ஏதோ ஒரு உருவம் மறைந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தின…

அந்த கணம் ​திடீரென்று, அவளது முதுகுக்குப் பின்னால் ஒரு குளிர்ந்த காற்று வீசுவது போல இருந்தது, யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதை அவளது பெண்மை உணர, ​கையில் கத்தியுடன் சட்டென்று பின்னால் திரும்பியவள், அங்கே நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்!..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!