Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 30

அத்தியாயம் 30

அடுத்த மூன்று நாட்களுக்கு கொஞ்சமும் முகத்தில் சுரத்தின்றி தான் வீட்டிற்கும் வெளியிலும் என சுற்றி வந்தான் கீர்த்திஸ்வரன்.

தந்தை மூலம் தான் நிச்சயம் தன் திருமணத்தில் பிரச்சனை வரும் என ஏற்கனவே அவன் நினைத்தது தான் என்றாலும் இப்படி அவள் படிப்பை முடிக்கும் முன்பே இத்தனை பெரிய பிரச்சனை… அதுவும் தன்னைக் கொண்டு அவளுக்கு மட்டும் தண்டனை என்பதாய் அதிகத்திற்கும் மனம் நொந்துவிட்டான் ஈஸ்வர்.

அவளைப் பார்க்கவும் பேசவும் என அவ்வளவு மனம் தவித்துக் கிடந்தாலும் அவளின் நிம்மதியை குலைப்பதை கொஞ்சமும் அவன் விரும்பவில்லை.



Advertisement

“அவர் சொன்னா நடந்துடுமா ஈஸ்வர்? பல்லவி தான் என் மருமக.. நான் பாத்துக்குறேன். அம்மாவை நம்பு!” என உடைந்து அவன் அமர்ந்திருந்த தருணம் லதா மகனிடம் சொல்ல,

“இப்ப எதுவும் பேச வேண்டாம் ம்மா. அப்பா பேசினது பேசினதாவே இருக்கட்டும். இப்ப நாம அதை மறுத்து பேசினாலும் இது வளந்துகிட்டே தான் இருக்கும். அதனால பல்லவி கான்ஸன்ட்ரெஷன் மிஸ் ஆகும் படிப்புல. சோ இப்ப இதை வளர விட வேண்டாம்” என்று கூறிவிட்டான் கீர்த்திஸ்வரன்.

“இப்ப வேண்டாம்னா? என்ன சொல்ற ஈஸ்வர்? இங்க பாரு! உன் அப்பா இஷ்டத்துக்கு இந்த வீட்டுல எல்லாம் நடக்குதா… சரி நடக்கட்டும் அதை எல்லாம் நான் இத்தனை நாளும் சரி இனியும் சரி ஏன்னு கேட்க போறதில்ல. ஆனா உன் கல்யாண விஷயம் அப்படி இல்ல ஈஸ்வர். பல்லவி நம்ம உறவுக்காரப் பொண்ணுன்ற முறையிலேயே இருந்திருந்தாலோ உனக்கு அவளை பிடிச்சது எனக்கு தெரியாமலே போயிருந்தாலோ நிச்சயமா நானும் உன் விஷயத்துல இவ்வளவு தலையிட மாட்டேன்”

Advertisement

“ஆனா அன்னைக்கு நீ எவ்வளவு சந்தோஷமா சொன்ன பல்லவி பத்தின உன் விருப்பத்தை? அதை ஒட்டுகேட்டு இப்படி பிரச்சனையை இழுத்து வச்சவரை சும்மா விட சொல்றியா நீ?” என்றார் கோபமாக லதா.

Advertisement

“அதுக்கென்ன ம்மா பண்ண முடியும்? அப்பா பேசினதை கேட்டீங்க தானே? நான் பேசினதுக்கும் சேர்த்து அவளை தான் பேசுறாங்க. அவளால தான் நான் இவ்வளவு பேசுறேன்னு சொல்றாங்க. இப்படி நினைக்கும் போது எனக்காக நீங்க பேசினாலும் அந்த கோபம் பல்லவிகிட்ட தான் போகும். ஏற்கனவே கேப் விட்டு இப்ப தான் படிப்பை முடிக்குற அளவுக்கு வந்திருக்கா. இப்ப மறுபடியும் பிரச்சனைனு இந்த படிப்பு வேண்டாம்னு தூக்கி போட்டா என்ன பண்ணுவீங்க?” என்று தானும் கோபமாய் கூறிய கீர்த்திஸ்வரன்,

“அமைதியா இருப்போம். எதுவா இருந்தாலும் அவ படிப்பை முடிச்சே ஆகணும். அது மட்டுமில்ல… படிப்பை முடிச்சாலும் பல்லவிக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் இந்த பேச்சும் கல்யாணமும். அப்படி இல்லைனா எதுவுமே இல்லை புரியுதா?” என தெளிவாய் சொல்லிவிட்டு மனம் கனக்க தான் அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான் அவன்.

தன் உணர்வுகளை அன்னையிடம் காட்டிட தோன்றவில்லை அவனுக்கு. ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவர் தன்னைக் கண்டு கொண்டால் அது இன்னும் வருத்தத்தையும் உடன் எதாவது பிரச்சனைக்களையும் தான் கொடுக்கும் என தனியே வந்து அமர்ந்துவிட்டான். ஆனால் மட்டும் தாய் அறியாத சூழா என்ன!.

Advertisement

மூன்று நாட்கள் கடந்துவிட்டது இன்னமும் யாரும் பல்லவியை பார்க்க முயற்சிக்கவில்லை. பல்லவியும் இவர்களைப் பார்க்க முயற்சிக்கவில்லை.

அஞ்சலி மட்டும் இது தான் பிரச்சனை என புரிந்து தெரிந்து கொண்ட அன்றே இரவு பல்லவிக்கு செய்தி அனுப்பி இருந்தாள்.

“அப்பா பண்ணின தப்புக்கு அம்மாவையும் அண்ணாவையும் ஹர்ட் பண்ணிட்டீங்க இல்ல? போங்க அண்ணி நான் உங்க மேல கோபம்!” என்று அனுப்பி இருக்க, பார்த்தும் பல்லவி பதிலனுப்பவில்லை.

அஞ்சலியின் பேச்சையும் அவள் பெரிதாய் எடுக்கவில்லை. அவள் சிறுபிள்ளை என்ற எண்ணம் தான்.

ஆனாலும் அவள் சொல்லிய உண்மை தான் உள்ளே குத்திக் கொண்டே இருந்தது.

இங்கிருந்து வெளியில் செல்லும் போது லதாவும் கூறினாரே மகேஸ்வரன் வந்ததோ பேசியதோ என எதுவுமே லதாவிற்கும் அவரது மகனிற்க்கும் தெரியாது என்று.

இவர்களுக்கு தெரியாமலேயே வந்து ஏன் அவர் இப்படியெல்லாம் சம்மந்தமே இல்லாமல் பேச வேண்டும் என்ற குழப்பமும் இப்பொழுது சேர, நிஜமாய் இதற்கே அவளால் படிப்பில் கவனத்தை செலுத்த முடியவில்லை.

அத்தனை பாடுபட்டு திரும்ப தனக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு என்று எண்ணி அத்தனை சிரத்தை எடுத்து தான் ஒவ்வொரு தேர்வையும் அத்தனை சிரத்தையாய் முடித்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது இந்த குழப்பம் அவளை அவள் கவனத்தை அவள் படிப்பை என இந்த மூன்று வாரங்களில் அவ்வளவு பாதித்துவிட்டது.

அதுவும் அன்று வந்து சென்றபின் லதா, கீர்த்திஸ்வரன் என அடுத்து பேசவோ தன்னை எட்டிப் பார்க்கவோ இல்லையே என அதற்கும் ஒரு அல்லாடல் அவளிடம்.

திருப்பி தான் பேசி விட்டதில் எல்லாம் எந்த கவலையும் இல்லை பல்லவிக்கு. தன்னை அக்கறையாய் பார்க்க வந்தவர்களிடம் கோபத்தை கொட்டி இருக்க, அதன்பின் அவர்கள் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற கவலை தான்.

யாரோ என்னவோ பேசியதற்கு இவர்களை தண்டித்து விட்டோமோ லதாம்மா தன்னிடம் கோபம் கொண்டாரோ என மனம் ஏகத்திற்கும் கலங்கிப் போனது.

ஓரத்தில், “வாங்கம்மா போவோம்!” என லதாவின் கைபிடித்து தன்னைப் பார்த்த கீர்த்திஸ்வரனின் பார்வையும் அவ்வபோது அவளை யோசிக்க வைத்தது.

மூன்று நாட்களிலேயே இவ்வளவுக்கு ஒவ்வொருவரும் என உள்ளுக்குள் தங்களுக்குள் மருகிக் கொள்ள, மகன் கூறியதற்காகவும் பல்லவியின் படிப்பிற்காக்கவும் என லதாவும் அமைதியாய் இருக்க, அடுத்த இரண்டு நாட்களும் பொறுமையாய் இருந்த பல்லவி அன்று தனது கல்லூரிக்கு செல்ல வேண்டிய நாள் என்பதில் காலை கல்லூரி சென்று வந்தவள் சரியாய் லதா வீட்டின் தெருவைக் கடக்கும் நேரம் இறங்கிவிடலாமா என்று கூட யோசித்தாள்.

அன்று மகேஸ்வரன் பேசிய வார்த்தைகளில் மீண்டும் அங்கே செல்ல சுத்தமாய் விருப்பம் இல்லை. 

தன் வீட்டிற்கு வரும் முன்னதாவது அவ்வபோது தான் எடுக்கவிட்டாலும் அழைத்து பார்க்கும் அஞ்சலியும் லதாவும் இந்த ஐந்து நாட்களில் சுத்தமாய் அழைக்கவே இல்லை என்பதில் இப்பொழுது அவர்கள் மேலுமே கோபம் வந்தது.

வீட்டிற்கு வந்து வார்த்தையாய் அதை சொல்லி சொல்லி புலம்பியபடி தான் அன்று முழுதும் வீட்டை சுற்றி வந்தாள்.

“அதான் அவங்களோட பேச்சு வேண்டாம்னு சொல்லியாச்சே பல்லவி. ஏன் இப்ப நீ உருண்டுட்டு வர்ற?” என சித்ரா மகளை அதட்ட,

“அதெப்படி அப்படி விட முடியும் ம்மா? அப்போ இத்தனை வருஷமும் என்கிட்ட பேசினதெல்லாம் இல்லைனு ஆகிடுமா? அதுவும் லதாம்மா கூட என்னை தேடலை பாருங்க!” என்று சொல்ல,

“நீ தானே நானும் வரமாட்டேன் நீங்களும் என்னை தேடி வராதீங்கனு சொல்லி அனுப்பின பல்லவி? இப்ப ஏன் புலம்புற? அவங்கவங்க வீட்டுல அந்தந்த ஆம்பளைங்க என்ன சொல்றாங்களோ அதை தான் பொம்பளைங்க கேட்டாகனும். உன் மாமா என்ன சொல்லிருப்பாருன்னு நான் உனக்கு சொல்லனுமா? அப்பா சொல்றதை தானே அம்மா கேட்பேன். அதே மாதிரி உன் மாமா இங்க பேச்சு வார்த்தை வைக்க கூடாதுன்னு சொல்லவும் அண்ணிக்கு எதிர்த்து பேச முடிஞ்சிருக்காது. இது தான் எல்லார் வீட்டுலயும் நடக்குது” என்ற சித்ரா தான் பேசப்பேச மாறிப் போன மகள் முகம் கண்டு அவள் அருகில் வந்து தலை கோதினார்.

“அவங்க எல்லாம் நல்லவங்க தான் பல்லவி. ஏற்கனவே அவங்க பையனுக்கு கல்யாணம் நிச்சயமாகி அந்த பொண்ணை வேண்டாம்னு அந்த பையனே சொன்னதா நீ தானே என்கிட்ட சொன்ன? அப்போ அப்படி இருக்கும் போது உன்னை பத்தின இந்த பேச்சு ஏன் அங்க வரணும்? எதாவது பயமா கூட இருக்கலாம். அது தான் அண்ணனுக்கு கோவத்தை குடுத்துருக்கு. அவங்களோட உயரத்துக்கு சமமா தானே அவங்க எதிர்பார்ப்பாங்க? அது தான் அண்ணனை இங்க வந்து அவ்வளவு தூரம் பேச வச்சிருக்கு. நாம ஒதுங்கி போய் அவங்க பையனுக்கு அவங்க நினைச்ச மாதிரி கல்யாணம் நடந்துட்டா நம்ம மேல தப்பில்லனு அவங்களுக்கே தெரிஞ்சிடும்” என்றார் பொறுமையாய்.

“ஆனாலும் இனி அந்த வீட்டு பழக்கம் நமக்கு வேண்டாம் டா பல்லவிம்மா. இப்ப இருக்குறது தான் சரி. அவங்க பேமிலி பிரச்சனையை அவங்களே பார்த்துக்கட்டுமே!” என்று சித்ரா சொல்ல சொல்ல, அப்படி நினைக்கவே முடியவில்லை பல்லவியால்.

“அதெப்படி ம்மா இல்லாத ஒன்னை கற்பனை பண்ணி நம்மள அவங்க பேசலாம்? இப்ப பாருங்க நான் தான் அவங்க என்ன பன்றாங்களோன்னு தவிச்சு நிக்குறேன். தேவையா எனக்கு இது?” என்றவள்,

“அப்படி எல்லாம் விட முடியாது ம்மா. உன் அண்ணன் நினைக்குறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. எனக்கு லதாம்மா எப்பவும் முக்கியம் தான். வேற யார் எப்படி போனா எனக்கு என்ன!” என்றவள்,

“அவங்களுமே என்னை தேடலைன்னு தான் கோவம் கோவமா வருது” என்றும் சொல்ல, மகள் உணர்வும் புரிந்தவறாய் தலையை ஆட்டி சென்றுவிட்டார்.

மேலும் ஒரு வாரம் கடந்திருக்க, இந்த பிரச்சனைகள் எல்லாம் நடந்து முடிதுமே ஒரு மாதம் கடந்திருந்தது.

இருபக்கமுமே எதையும் மறக்கவும் இல்லை இலகுவாகி இருக்கவும் இல்லை. அந்த நாளின் தாக்கத்தோடு அடுத்தடுத்த நாட்களை கடத்தி வந்தனர்.

இன்னும் ஒருமாத காலம் விடுமுறை கூடவே ஆறு மாதங்களில் பல்லவிகான செயல்முறை வகுப்பு என கல்லூரி முடிய இருந்தது.

அதுவரை அமைதியாய் இருந்த பல்லவி அன்று காலை பத்து மணிக்கு கல்லூரி சென்று தனது வகுப்பு குறித்த நேரங்களை வாங்கிக் கொண்டவள் மூன்று மணிக்குள் வேலையை முடித்துக் கொண்டு லதா எண்ணை எடுத்தாள்.

“அவங்களே எனக்கு கால் பண்ணல. அப்ப நான் மட்டும் ஏன் கூப்பிடனும்?” என அதை எடுத்துவிட்டு பின்வந்து ஈஸ்வர் எண்ணை எடுத்து அழைத்தும் விட, இந்தப்பக்கம் கீர்த்திஸ்வரன் தான் அந்த அழைப்பைக் கண்டு கண்ணை சிமிட்டி, தலையை உலுக்கி என பல்லவி எண் தானா, தான் தான் அப்படி எண்ணிக் கொள்கிறோமா என உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ம்மா! என அருகில் நின்ற அன்னையிடமும் அதை அவன் காட்ட, பல நாட்களுக்கு பின் அன்று தான் லதாவின் கண்களில் ஆயிரம் வண்ண விளக்குகளின் ஒளி.

“என்னனு கேளு ஈஸ்வர். எதாவது எமெர்ஜென்சியா இருக்க போகுது!” என லதா அவசரப்படுத்த, அவளின் குரலைக் கேட்கவே ஆசை ஆசையாய் அழைப்பை ஏற்றான் கீர்த்திஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!