Skip to content
Post Views: 7,694
“எங்கமேல வருத்தம் தானே அதனாலதான் இதை எங்ககிட்ட சொல்லலையா” என்றார் பவுனு, ஏதோ மகன் நேற்று போலீஸ் ஆகி இன்று காக்கியில் வந்து நிற்பதாக என்னம் அவனைச் சுற்றி நடப்பது அனைத்தையும் இப்பொழுது புதிதாகத் தெரிந்துகொண்ட ரகசியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தே வருந்தியது அவர் மனம்.
“அம்மா… அம்மா…” என்றவன் கோசாலையை பிடித்து நிறுத்தி “மொதல்ல எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று நிற்க மனதார வாழ்த்தி அனைவருமே திருநீறு பூசி விட்டனர்.
Advertisement
அன்னையை ஒரு பக்கமும் அப்பத்தாவை ஒரு பக்கமும் அமர்த்திக்கொண்டவன் “போலீஸ் வேலைல சேர முடியாத கோபம் ஆதங்கம் எல்லாம் இருந்துச்சு நான் எத்தனை தடவ முயற்ச செஞ்சாலும் இவங்க தடுத்துட்டே தான் இருப்பாங்கன்னும் புரிஞ்சது அந்தநேரம் வேற ஒரு நல்லவர் மூலமா இதே துறைல வேலைபார்க்க ஆபர் வந்துச்சு, அப்படித்தான் கிரைம் பிராஞ்சுல சேர்ந்தேன்”.
Advertisement
Advertisement
“மூணு வருஷமா அதுலதான் இருக்கேன் சிலை கடத்தல், நிர்மல் கேஸ் எல்லாமே என் டீம் தான் கண்டுபிடிச்சோம் அது ரகசியமா வேலை செய்ற இடம், என்னைக்கு இப்படி காக்கி போடமுடியுதோ அன்னைக்குதான் உங்க எல்லார்கிட்டயும் சொல்லணும்னு நான் முன்னாடியே முடிவு பண்ணிட்டேன் என் கனவு பலிக்கனும்னு என்னைவிட அதிகமா வேண்டிக்கிட்டது நீங்கதான் மா அது எனக்குத் தெரியாதா” என்றவன்.
Advertisement
“உங்க மேல கோபமோ வருத்தமோ இல்ல இதுதான் என் குடும்பம் என் வீடுன்னு வாழ்த்துட்டேன் திடீர்ன்னு உன்னோட வேர் வேறன்னு சொல்லவும் கொஞ்சம்… கொஞ்சம்… ஏத்துக்க கஷ்டமா இருக்கு, எத்தனை வயசானாலும் பக்குவம் வந்தாலும் கூட இருந்தவங்க உன்னை வளத்தவங்க பெத்தவங்க வேறன்னு சொல்றதை ஏத்துக்க முடியுமா சரியாகக் கொஞ்சம் நாள் பிடிக்கும் சரியாயிடுவேன்”.
“அதனால நான் போய்டுவேனோ கோபாமாவோ வருத்தமாவோ இருக்கேனா அப்படிலாம் யோசிக்காதீங்க அதெல்லாம் இல்ல என்றான்” தெளிவாகப் பல நாட்களாக உள்ளே குடைந்துகொண்டிருந்தது மெல்ல அடங்கியது வீட்டினருக்கு.
அப்பத்தாவின் கையை எடுத்துத் தன் கைகளில் அவன் பொதிந்துகொண்டு “மயூ சொன்னா நான் ரொம்ப அதிர்ஷ்டசாலியாம், அம்மாவும் அப்பாவும் என்னை ஏத்துக்கிட்டது வேற ஆனா நீங்க உங்க மகனுக்கு நான் பிறக்கலன்னு தெரிஞ்சும் எப்படி அப்பாத்தா என்னை இவப்படி நேசிக்க முடிஞ்சது உங்களால” என்றான் குரல் கம்ம.
“உன்னைக் காப்பாத்துற சாமியா என் மகனை அந்த டாக்டர் பாத்தாங்க என் மருமகளையும் என் மகனோட வாழ்க்கையையும் காப்பாத்த வந்த சாமியா உன்னை நான் பாத்தேன், உன் அப்பனுக்கு வாழணும்னு ஆசையே விட்டுபோச்சு வேற கல்யாணம் செஞ்சுக்க சொல்லிக் கெஞ்சுற பொண்டாட்டி யாருக்காக ஓடி ஓடிச் சம்பாரிக்குறோம்னு அவனுக்கு ஒரு வெறுப்பு தட்டிருச்சு”.
“நீ வந்தப்பறம்தான் அவன் திரும்பவும் வாழவே ஆரம்பிச்சான் என் பிள்ளைக்கு இதைச் செய்யணும் அதைச் செய்யணும் இப்படி படிக்க வெக்கணும் அப்படின்னு அவங்க ரெண்டு பேரோட நாள் எல்லாம் உன் நினைவிலே போச்சு, ஏதோ பேருக்குன்னு வாழ்ந்த பிள்ளை ஆசையா வாழறதை பாக்குறத விடப் பெரிய பாக்கியம் என்னய்யா இருக்கு ஒரு பெத்தவளுக்கு” என்றவர்.
அவன் கன்னத்தை வருடி “என்னைக்கும் நீ எனக்கு ராசாதான் உன்னைப் பெத்தவகிட்ட மன்னிப்பை வேணா கேக்குறோம் ஆனா உன்னைத் தூக்கி கொடுக்க முடியாது ராசா” என்க அந்த முதிய பெண்மணியைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“உன் ஜாதகம் எழுதினப்போ அப்பாவை மாதிரி இந்தப் பிள்ளைக்கும் ஆயுசுக்கு கண்டம் இருக்கு கல்யாணம் பண்ற பொண்ணோட தாலி பாக்கியம்தான் உசுரை பிடிச்சு வைக்கும் அந்த மாதிரி ஒரு ஜாதகம் கூட மட்டும்தான் முடிச்சு போடணும்னு சொன்னாங்க, ஒரு இடம் இல்ல ராசா நானும் உன் அப்பனும் பத்து பேர்கிட்ட கேட்டோம் அந்தப் பயம்தான் இந்தப் பிள்ளையைக் கட்டிக்கக்கூடாதுன்னு என்னைச் சொல்ல வெச்சுது, இப்போ எல்லா பாரத்தையும் அந்த மாரியம்மா கிட்ட விட்டுட்டேன் உங்க மனசு போல நிறைவா வாழ்வீங்கய்யா ஒரு குறையும் வராது” என்றவர் மயூரியையும் சேர்த்து அணைத்துக்கொண்டார்.
பொள்ளாச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வண்டியில் ஆழ்ந்த அமைதி கணவனைத் திரும்பிப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள் மயூரி, இரு தினங்களுக்கு முன்புதான் பூஜாவின் திருமணம் முடிந்திருந்தது வினோதுடன், பெரிதாக ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக அழகாக ஒரு திருமணம்.
தெய்வானையின் மனதின் சந்தோசம் அவர் முகத்திலே பிரதிபலித்தது வினோதோடு பூஜா இன்னும் இருபது நாளில் வெளிநாடு சென்றுவிடுவாள், மலேஷியாவில் இருக்கும் சிறிய பிசினஸ்ஸை வினோத் பார்த்துக்கொள்கிறான் இத்தனை நாட்களாக அவன் தந்தை பார்த்துக்கொண்டார், வயதான காலத்தில் ஊரில் வந்து தங்கிவிட வேண்டும் என்று அவர் ஆசைப்பட மகனுக்குத் திருமணத்தை நடத்தி மனைவியோடு அங்கே அனுப்பிவிட்டு அவரும் அவர் மனைவியும் இங்கே செட்டில் ஆகிறார்கள்.
“சாரி” என்ற குரலில் திரும்பிப் பார்த்தான் சேனா பூர்விகா அவன் முன்னில் மன்னிப்பை வேண்டி நின்றாள் “எதுக்கு” என்றவனை பார்த்தவள்.
“இல்ல மாமா நான் உங்கள மோசமா பேசியிருக்கேன் உங்களுக்கு மரியாதை தந்ததில்லை அப்பா சொல்ற எல்லாமே சரின்னு அப்படியே இருந்திட்டேன், உண்மைகள் புரிய கொஞ்சம் நாள் ஆயிடுச்சு உங்க முன்னாடி பேசலானாலும் வீட்டில… பிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் உங்களைத் தப்பாதானே பேசியிருக்கேன் மன்னிச்சுடுங்க” என்றவளை பார்த்து அவன் மெல்ல சிரிக்க.
“மன்னிச்சுடீங்களா மாமா” என்றாள் ஆர்வமாக.
“ஏய் வாண்டு அதெல்லாம் நான் ஒன்னும் நினச்சுக்குல போ உன் அக்கா கல்யாணம் என்ஜாய் பண்ணு” என்று அவள் தலையில் கை வைத்து ஆட்ட அவன் கையை இறுக்கமாகப் பற்றுக்கொண்டவள் “தேங்க்ஸ் மாமா” என்ற சந்தோஷ கூச்சலோடு துள்ளி ஓடினாள்.
“ஹும்ஹும்… என்ன இங்க மாமா பொண்ணு கூடக் கொஞ்சல்” என்ற மனைவியின் பொறாமை குரலில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் “குட்டிமா பொறாமையா இருக்கா” என்றான் கன்னக்குழி தெரிய சிரித்துக்கொண்டே.
“ஏய் போலீஸ் வெளில இப்படி சிரிக்காதீங்க அப்புறம் கடிச்சு வெச்சுடுவேன்” என்றவள் கைகள் கன்னக்குழி நோக்கி உயர்ந்து இருக்கும் இடம் அறிந்து மெல்ல தாழ்ந்தது, அதற்கும் சிரித்தவன் அவள் இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்து நிறுத்தினான்.
“அச்சோ கல்யாண மண்டபம் எல்லாரும் பாப்பாங்க” என்று சிணுங்கியவள் அவன் அணைப்பிலிருந்து தள்ளிப்போகவில்லை.
“என் பொண்டாட்டி நான் பிடிக்கிறேன் அவங்க அவங்க பொண்டாட்டியை அவங்க பிடிச்சுக்கட்டும் நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” என்றான் நல்லவனாக.
“கூட்டத்துக்குள்ள சில பல சில்மிஷம் நடக்குது ஓவர் ஓவர்” என்று சொல்லிக்கொண்டே சென்ற சக்தி “பொண்டாட்டியை பிடிக்கணுமாம் கட்டிவெச்சா பிடிக்க மாட்டோம்ன்னா சொல்றோம்” என்றவன் “அடியே மோனிகா என்னைக்கு இந்தக் கேஸ் முடியறது என்னைக்கு நாம கல்யாணம் பண்றது” என்று அவளிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.
இருவரும் ட்ரைனிங் சமயத்திலிருந்து விரும்புகிறார்கள் இருவருமே மற்றவரிடம் சொல்லிக்கொள்ளவில்லை திருமணம் என்று வீட்டில் பேச்சுவரவும் காதல் விழித்துக்கொண்டது இருவீட்டு சம்மதத்தோடு காதலித்துக்கொண்டிருக்கிறார்கள், இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கேஸ் முடிந்தபிறகு திருமணம் என்று முடிவுசெய்து அதன் பின்னே ஓடுகிறார்கள்.
தந்தையிடமிருந்து கிட்டிய சில விவரங்களை வைத்துக்கொண்டு கோயம்பத்தூர் சென்றான் சேனா, உடன் சக்தியும் மோனிகாவும் சேர்த்துக்கொண்டனர்.
“நாங்களும் வரோம் ஆளுக்கு ஒருபக்கம் போனா சீக்கிரம் வேல முடியும்” என்றார்கள், அவனைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்துகொள்ள போகிறான் அங்கே அவனைத் தனியே அனுப்ப மனம் இல்லாமல் உடன் வருகிறார்கள் என்று அவனுக்கும் புரிந்தது.
நேரே மருத்துவமனைக்குச் சென்றான் அந்த மருத்துவர் இல்லை அவர் பிள்ளைகளும் வெளிநாட்டில், மருத்துவமனை வேறு ஒருவரின் கீழே இயங்கிக்கொண்டிருந்தது அங்கிருந்து ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை நேரே அந்த ஏரியாவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டான்.
தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் விசாரித்தான் “முப்பது வர்ஷம் முன்னாடி இங்க ஒரு போலீஸ்காரரை நடுரோட்ல கொலை பண்ணியிருக்காங்க” என்றவன் தன்னுடைய பிறந்த தியதியை வைத்து நாள் வருடம் அனைத்தையும் கூறி விசாரித்தான்.
“எனக்குத் தெரியல சார் அப்போ வேலைல இருந்தவங்க யாரவது இருந்தா கேட்டுப்பாக்குறேன்” என்றவர் ஸ்டேஷனில் இருந்த பழைய ஆட்களை அழைத்து விசாரித்தார், அதில் பணிஓய்வு பெற சில மாதங்கள் மட்டும் உள்ள ஒருவர் மட்டும் சில விவரங்கள் கூறினார்.
“ஆமா சார் இன்ஸ்பெக்டர் அவர், ரொம்ப நல்ல மனுஷன் ரொம்ப கண்டிப்பு தப்பு யார் செஞ்சாலும் விடமாட்டார் ஏதோ ஒரு எம்.எல்.எ கூடப் பிரச்சனை அந்த ஆளோட ஆளுங்கதான் வெட்டினாங்க, அவரு சம்சாரம்கூட அப்போ முழுகாம இருந்தாங்க ஆனா கொழந்தை இறந்தே பொறந்திடுச்சு” என்றார் வருத்தத்துடன்.
“அவர் பேர்…” என்றான் சேனா அவரை நெருங்கி.
“பேரு…” என்று சில நொடிகள் யோசித்தவர் “சட்டுன்னு வரல சார் வருஷம் முப்பது ஆயிடுச்சே, ஏதோ வீரன்னு வரும் சரியா ஞாபகம் வரல” என்றார்.
சில நொடிகளில் அந்த ஸ்டேஷனுக்கு கமிஷ்னரிடமிருந்து அழைப்பு வந்தது “தேவசேனாபதி கேக்குற டீட்டைல்ஸ் உடனே குடுங்க” என்று.
அதுவரை கொஞ்சம் மந்தமாக இருந்த ஸ்டேஷன் அடித்துபிடித்து நாலு திசைக்கும் ஓடியது, இரண்டுமணி நேரத்தில் அவன் தந்தையை பற்றிய கேஸ் பைல் அவன் கைகளில், வீரராகவன் அவன் தந்தையின் பெயர் ஊர் பொள்ளாச்சி பக்கம் சாமாத்தூர் விவசாய குடும்பம் அவரின் அப்பா அம்மா பெயர்களுடன் கீழே ஒய்ப் என்ற வார்த்தைக்கு நேரே இருந்த கட்டத்தில் அவன் விரல்கள் ஓடியது “ராஜலக்ஷ்மி” என்றிருந்தது.
வீட்டின் விலாசம் அதில் இருக்க, நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர் சக்தியையும் மோனிகாவையும் திருப்பி அனுப்பிவிட்டான், மனைவியை அழைத்துக்கொண்டான் “என்கூடவே இரு” என்றான் குழந்தையாக இதோ அவனின் வேர் தேடி ஒரு பயணம்.
ஊருக்குள் நுழைந்து அங்கிருந்த டீக்கடையில் “வீரராகவன் போலீசா இருந்தார்” என்று விசாரிக்க.
“நம்ம வீர தம்பி வீடு… அவங்க இறந்துட்டாங்களே தம்பி நீங்க யாரு” என்று விட்டு அவனைக் கூர்ந்து கூர்ந்து பார்த்தார்கள் டீக்கடையில் அமர்ந்திருந்த பெருசுகள்.
“தம்பி வீரய்யாவுக்கு சொந்தமோ” என்க தாத்தாவின் பெயர் “வீரய்யா” என்று பார்த்த ஞாபகம் வந்தது அவனுக்கு “ஆமா” என்றவன் கூற.
“அதான் பெரியவரை அப்படியே உறிச்சி வெச்சுருக்கீங்க ரொம்ப நெருங்குன சொந்தமோ” என்றவர்கள் “இப்படியே போய் வலப்பக்கம் திரும்பி மூணாவது வீடு, அந்தத் தெருவிலேயே அந்த வீடுதான் பெரியவீடு” என்றவர்கள் ‘யாராகாயிருக்கும்’ என்ற பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
error: Content is protected !!