Skip to content
Post Views: 1,614
கிட்டத்தட்ட என்பது கிலோமீட்டர் நடந்தது கூட உறைக்கல எனக்கு..” என்றவனின் மூச்சுக்காற்றில் எழுந்த சீறல் அவனின் கோபத்தில் அளவை காட்ட,
“அப்புறம் மறுபடியும் எப்படி இவங்க கூட..?” என்றாள் யமுனா,
Advertisement
‘இன்றும் அந்த கோபம் இருக்கும் போது மறுபடியும் எப்படி இங்கு வர முடிந்தது..? அதோடு அவரை அப்பா என அழைக்க முடிகிறது..?’ என்ற சந்தேகத்தோடு.
Advertisement
“ரோசமே இல்லாம வந்து இருக்கீயேடான்னு கேட்க வர்றே..?” என்றிட,
Advertisement
“ச்சே.. அப்படி இல்ல.. இங்கே வந்து இருக்கீயே வெக்கங்கெட்டவனே.. ன்னு கேட்க வந்தேன்..” என்றாள் நக்கலாய்.
Advertisement
அதில் லேசான புன்னகை அரும்பினாலும் அவளின் கோபமும் எதற்கு என புரிந்தவன்,
“இங்கிருந்து ஒரு வேகத்துல போனாலும் நான் திரும்ப வந்து வாணிய கூட்டிட்டு போயிடனுமுன்னு முடிவோட தான் போனேன்.
வாணிக்கு தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு தான் தெரியுமே.. அவளையும் அப்பா அவரோட பொண்ணான்னு கேட்டது. அதுக்காக தான் அந்த முடிவும்.
திருப்பூர் போய் அங்கே தங்கமணி அண்ணே என்னை தாங்கிக்க., வேலை பழகி அங்கே நிரந்தர வருமானமுன்னு பார்க்க ஆறு மாசம் ஆச்சு எனக்கு.
அதுவரை இந்த வீட்டோட எந்த விதத்துலையும் தொடர்பே வச்சுக்கல.
வீடு பார்த்து எங்க செலவை சமாளிக்க முடியுமுன்னு எனக்கு நம்பிக்கை வரவும் நேரா இங்கே வந்து நின்னேன்.
அப்போ வாணிக்கும் சக்தி மாமாக்கும் கல்யாணம் பேசி முடுச்சிருந்தாங்க. எனக்கு தாங்கவே முடியல.
அப்பா அவளை மகளாவே பார்க்காத போது, சக்தி மாமாவ கட்டிக்கிட்டா காலம் முழுக்க அவ இவங்கள விட்டு விலகவே முடியாதே..
எதோ ஒரு கட்டத்துல அவளுக்கும் அம்மா இறந்தது எப்படி ன்னு தெரிஞ்சிட்டா அவ என்ன ஆவான்னு எனக்கு பயம். ஏன்னா அம்மா மேல அவளுக்கு அவ்வளவு பாசம். எனக்கு முன்னாடியே அவளை தங்கமா தாங்கி வளர்த்தவங்க ஆச்சே..
அதோட அவளை வேலக்காரி மாதிரி தான் சித்தி வச்சிருந்தாங்க. வீட்டுல எல்லா வேலையும் அவ செய்யறத பார்க்க அவ்வளவு கஷ்டமா இருக்கும்.
“இங்கே நீ இவ்வளவு கஷ்டப்படறே. நா பெருசாகி நிறைய சம்பாதிச்சு உன்ன ராணி மாதிரி பாத்துக்கற மாப்பிள்ளைக்கு கட்டி வைப்பேன்” னு.. நிறைய தடவ அவகிட்ட சொல்லியிருக்கேன்.
இப்போ அவ வாழ்க்கை முழுக்க அவங்களுக்கு வேலைக்காரியா இருக்கனுமா.. ன்னு அப்படி ஒரு கோபம்.
அதுவுமில்லாம சித்தியோட அம்மா வேற படுக்கையில.. அவங்களையும் வாணி தான் பார்க்கனும்.
சக்தி மாமாவ எந்த லிஸ்ட்லயும் சேத்தவே முடியாது. மனுஷனுக்கு வாய் இருக்கா.. இல்லையா.. ன்னு தேடனும். அவ்வளவு அமைதி. வாணிக்கு சப்போர்ட்டா இருப்பாருன்னு எனக்கு அப்போ நம்பிக்கையே வரல.
அந்த வயசுல அவர் மேல இருந்த புரிதல் அவ்வளவு தான் எனக்கு.
இந்த மாதிரி வீட்டுக்கு வாணி போகனுமா..? வேணாம்.
அவள இங்கிருந்து கூட்டிட்டு போயிடனுமுன்னு பேசப்போய்.. நானும் நிரந்தரமா இங்கே சிக்கற மாதிரி ஆகிடுச்சு..” என்றவன் விரக்தியாய்.
“ஏன்..? என்னாச்சு.. தயா..?” என்றாள் யமுனா.
“அவ என்ற மவன்னா என்ற சொல் பேச்சு கேட்டு தே நடப்பா..
அப்படி அவ என்னைய தாண்டி போனா அவ என்ற பொண்ணே இல்லன்னு ஊரூ பூராவும் சொல்வேன்.
ஏற்கனவே உன்ற ஆத்தாக்காரி தீக்குளிச்சது இந்த உண்மை எனக்கு தெரிஞ்சதால வந்த பயத்துல ன்னு சொல்வேன்..” அப்படின்னு அவர் சொல்ல வாயடச்சு போயிட்டேன் நான்.
பதினெட்டு வயசு சுயமா முடிவெடுக்கற வயசுன்னு கவர்மெண்ட் சொல்லலாம்.
ஆனா இந்த மாதிரி வார்த்தைகள் வரும் போது உடனே யோசிச்சு திரும்ப பேசி.. முடிவெடுக்கும் திறமை எல்லாருக்கும் இருக்காது இல்லையா..?!
அந்த கேட்டகிரில தான் நான் இருந்தேன். கொஞ்ச நேரம் என்னால எந்த பதிலும் சொல்ல முடியல.
அவர் சொன்னதை செஞ்சா.. என்னோட அம்மா இறந்தும்.. அவங்க பேர் கெடுமே.. ன்னு மட்டும் தான் பயம் வந்தது.
எதாவது செய்யனுமுன்னு வேகம் மட்டும் இருந்தது தான்.. பட், எந்த பக்கம் போறதுன்னு பயங்கர குழப்பம் அப்போ” என்றான், இன்றைய இயலாமை தந்த வருத்தத்தை பிரதிபலித்து.
“ஏன் தயா, அன்னைக்கு வாணி அண்ணி இருந்திருப்பாங்களே அவங்க எதுவும் சொல்லலையா..?” என்றதும்,
விரக்தியாய் சிரித்தவன், “அவரோட நேரம் நல்லா இருந்திருக்கும் போல. கல்யாணம் முடிவாகி இருந்ததால ட்ரஸ் எடுக்கன்னு சக்தி மாமாவோட அக்காவும் சித்தியும் கோயமுத்தூர் வரை போயிருந்த நேரத்துல தான் நா இங்கே வந்தேன்.
அவ இங்கே இல்லாததால அப்பவும் அவளுக்கு விசயம் தெரியாது..” என்றான்.
“சரி, அவங்க இல்ல ஓகே.. அவர் சொல்லறது பொய்யின்னு நிருபிக்க வாய்ப்பா இல்லை..?
உங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து டிஎன்ஏ டெஸ்ட் ன்னு ஒண்ணு இருக்கே. அதை செஞ்சிருந்தா உண்மை தெரியாம போகுமா..? அதை யோசிக்கலையா நீங்க..? அதை சொல்லி அவரை கார்னர் பண்ணியிருக்கலாமே..?” என்றாள், ‘இது தெரியாமலா இருந்தார்.?’ என்ற ஆதங்கத்தோடு.
“என்ன கேட்ட டி என் ஏ டெஸ்ட்டா..? அதை யோசிக்காம இருப்பேனா..? அதெல்லாம் அப்பவே எனக்கு நியாபகம் வந்துச்சு தான்.
ஆனா அந்த டெஸ்ட்டுக்கு போனாலே அவரோட சந்தேகத்துக்கு மட்டுமல்ல அவர் பரப்பப்போற வதந்திக்கு தீனி போடற மாதிரி ஆகாதா..?
இதை செய்யப்போனா வாணிக்கும் அவர் பேசினது எல்லாம் தெரிய வருமே..
நான் தான் நிம்மதி இல்லாம தவிக்கிறேன்னா அவளையும் இதுல கொண்டு வரனுமான்னு ஒரு எண்ணம்..
அதோட இது கிராமம் யமுனா. இங்கே வீசற காத்துல கூட விசயம் பரவும். இவர் சொன்னதை நம்ப நிறைய ச்சான்ஸ் இருக்கு.
உனக்கே அது நல்லா தெரியுமே.. நீயும் இதுமாதிரி கிராமத்துல பிறந்து வளந்த பொண்ணு தானே.
அது மட்டுமா.. அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி அந்த தயாநிதி கூட பழகினதை பார்த்த சாட்சிகள் நிறைய இருக்கே..!!
‘அவங்களுக்கிடையே இருந்த உறவு எந்த அளவுன்னு யாருக்கு தெரியும்..’ ன்னு ஒத்த ஆள் அதுல சொன்னா போதாதா..?
டெஸ்ட்ல உண்மை வெளிய வந்தாலும் அதை எத்தன பேருக்கு போய் சொல்லி நம்ப வைக்க முடியும்..?
அதுக்கு அப்படி ஒரு விசயத்துக்குள்ள போகாம முடிச்சிடறது நல்லதுன்னு தான் அப்படி ஒரு முடிவுக்கு நான் போகல.
அப்புறம் யோசிச்சப்போ.. வாணிக்கும் சக்தி மாமாக்கும் கல்யாணமுன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவள நா கூட்டிட்டு போய் வேற மாப்பிள்ளை பார்த்தா.. அங்கேயும் இவரு மாதிரி எதாவது பேச வாய்ப்பு வந்திடுமோன்னு பயமும் வந்திடுச்சு.
சக்தி மாமா சித்தியோட தம்பி. பல வருஷமா இங்கே வரப்போக இருந்திருக்கார். அப்போ பேச வாய்ப்பு இருக்கு தானே..?” என்றான் எல்லாவற்றையும் ஆராய்ந்தவனாய்.
‘அவன் டிஎன்ஏ விசயத்தில் சொல்வது உண்மையாக இருந்தாலும், அதை செய்திருந்தால் இந்த தளைகளில் இருந்து இவனாவது விடுபட்டு இருக்கலாமே..!’ என்ற எண்ணம் யமுனாவிற்கு தோன்றாமல் இல்லை.
அதே எண்ணத்தோடு, “வாணி அண்ணி விசயத்துல எதுவும் செய்ய முடியாதுன்னு பயந்தது சரி.
நீங்க விலகி போனது போனதாவே இருந்திருக்கலாமே.. ஏன் இத்தன வருஷம் இவங்கள சகிச்சுட்டு இருக்கனும்..? வாணி அண்ணிக்காகவா..?” என்றாள் சந்தேகத்தோடு.
“அக்காவுக்காக மட்டுமில்லை. நான் ஏற்கனவே சொன்னேனே அவளுக்காக பேசப்போய் நான் மாட்டிக்கிட்டேன்னு..
வார்த்தையால ஒருத்தர மடக்கற யுக்தி இவருக்கு கைவந்த கலை.
உதாரணத்துக்கு என்னை இங்கே பிடிச்சு வைக்க தங்கமணி அண்ணனை பேசலையா..? அது மாதிரி தான்.
அன்னைக்கு வாணி பிறப்பை இப்படி கேவலப்படுத்தி பேசறீங்களே நீங்க ஒரு அப்பாவா..? ன்னு நான் வார்த்தைய விட்டுட்டேன்.
அதை பிடிச்சுட்டு, “இதோ உன்ற வாயிலயே வருதே.. அப்பாவான்னு .. அதே சந்தேகந் தே எனக்கு வந்துச்சு.
அதை கேட்டதும் உன்ற ஆத்தா உத்தமி கணக்கா தீக்குளிச்சுட்டா.. உண்மை உறுத்தியிருக்கு.
வாணிக்கு மட்டுமில்லே உனக்குமே நா அப்பான்னா இந்த குடும்பத்து தலமவனா என்ற எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியது உன்ற கடமே.
அப்புடி நீ செய்யலன்னு வச்சுக்கோ அப்ப நாஞ்சொன்னத தே இப்பவும் எல்லாருகிட்டையுஞ் சொல்லி.. உன்ற ஆத்தாளோட மானத்த வாங்குவேன்..” ன்னு சொல்லிட்டார்.
அதுக்கும் மேல வாதாடவோ இல்ல அவரை எதிர்கொள்ளவோ எனக்கு தெம்பு இல்ல.
அம்மாவோட மரியாதைக்காக இந்த குடும்பத்துக்கு ஒரு ஏடிஎம் மிஷினா இருந்து தான் ஆகனுமுன்னா வாழ்க்கை முழுசும் இருந்துட்டு போய் சேர்ந்திடலாமுன்னு ஒரே முடிவோட மறுபடியும் வேலைக்கு போயிட்டேன் வாணி வர்றதுக்குள்ளையே.
ஒரு கட்டத்துல வாணிக்காவ மாமா நல்லா பார்த்துப்பார். இனி இவரால எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாமுன்னு நம்பிக்கை வந்துச்சு தான். ஆனா நா மொத்தமா விலகிட்டா ஜெகதீஷ் தான் கஷ்டப்படுவான்.
கண்டிப்பா அவனுக்கும் அவர் நல்ல அப்பாவா இருக்க மாட்டார்ன்னு சில வருஷத்துல புருஞ்சிடுச்சு.
இதோ இப்ப சித்தி நடந்துக்கிட்டது கூட அவரால தான்னு என் மனசு சொல்லுது..
இப்படி சிக்கல்கள் மட்டுமே நிரஞ்சு இருக்கற என் வாழ்க்கையில தேவையில்லாம ஆசைய வளர்த்து அதனால இன்னும் சிக்கல உண்டாக்க வேண்டாமுன்னு நா எனக்காக எந்த ஆசையும் வளர்த்துக்கவே இல்ல.
தனியா வீடு பார்த்து தங்கினா வாணி அடிக்கடி வர தங்கன்னு ஆரம்பிச்சு.. எதோ ஒரு கட்டத்துல என்னையே அறியாம அம்மா பத்தி சொல்லி அவளையும் வேதனைபடுத்திடுவேனோன்னு தான் அதையும் செய்யாம அவளையும் விலக்கி வச்சேன்.
கல்யாணம் அப்படிங்கறத கற்பனையா கூட நினைக்கல.
ஏன்னா இது ஒரு நரகம். இதுல ஒரு பொண்ணை சிக்க வைக்க நா விருப்பல.
ஆனா எனக்குள்ளையும் ஒரு ஏக்கம் என்னை அறியாம இருந்திருக்கு. எனக்கே எனக்காக என்னை தாங்கிக்கிற அந்த உறவுக்கான ஏக்கம்.
அதான் உன் காதல் தெரிஞ்சதும் உடனே உன் பக்கம் சாய்க்க பார்த்திடுச்சு என்னை.
நானும் அதுக்கு கடிவாளம் போட்டு தான் வச்சேன். ஆனா அன்னைக்கு நீ இருந்த வீட்டுல தீ புடுச்சதுன்னு தெரிஞ்ச நொடி எனக்கு நா போட்டிருந்த மொத்த கடிவாளமும் தூளாகி போச்சு.
கல்யாணம் முடுஞ்சா உன்னை ராணி மாதிரி பார்த்துக்கனுமுன்னு நினைச்சாலும், இதோ இப்படி நிம்மதியா தூங்கக்கூட முடியாத நிலைமையில தான் என்னால வச்சிருக்க முடியுது.
என்னை கல்யாணம் செஞ்சதால தானே இந்த மாதிரி வாழ்க்கை உனக்கு.. சாரி யமுனா.. ரியல்லி சாரி..” என்றவனின் கரகரத்த குரலும் அவளின் இரு கையையும் அவன் பற்றியிருந்த விதமும் அவளின் காதல் கொண்ட மனதை வால் கொண்டு அறுத்தது.
அவளில் எழுந்த வலி அது உண்டாக காரணமானவர்களுக்கு திரும்பி கொடுக்கும் உத்வேகத்தை கொடுக்க அதற்கான சரியான நேரத்தில் அவர்களுக்கான பாடத்தை படுப்பிப்பாளா யமுனா..?!
தன் தலைவனின் மனவலி கலைவது தான் இப்போது மிக முக்கியமான ஒன்றென நினைத்தவள் ஆதூரமாய் அவனை தாயென மடி தாங்கி தலை கோத, அதுவரை உள்ளத்தை அழுத்திக்கொண்டிருந்த பெரும் பாரத்தை ஒருவரிடம் இறக்கி வைத்த நிம்மதியோ.. சில தினங்களாய் உறங்காத களைப்போ அவனின் விழிகள் மெல்ல மூடியது.
தாரமாய் வந்தவள் தாயாய் மடி தாங்க தன் தாயின் மடி மறுமுறை கிடைத்த நிம்மதியில் ஆழ்ந்த உறக்கமது தீனாவை தழுவியது.
இன்னொரு தாயாய் நானும் மாறி
உன்னை தாங்கிடுவேன்
உன்னிழலாக வாழ்ந்திட கோடி
ஜென்மம் வாங்கிடுவேன்
error: Content is protected !!