Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 28.2

அதில் அதிர்ந்து விழி விரித்து அவன் பார்க்க, “அன்னைக்கு விருந்து அப்பவே இத சொல்ல வந்தேன். உன்னோட அப்பா அங்கே வந்ததால தான் சொல்லல.
இன்னைக்கு என்னோட ரெண்டு புள்ளைங்களும் கோடிஸ்வர வாழ்க்கை வாழ காரணம் நான் மட்டும் இல்லை. 


Advertisement

இந்த பத்து வருஷத்துல உன்னோட உழைப்போட தீவிரம் தான் அது. 
நீ இங்கே காலடி எடுத்து வைக்கும் போது இது வெறும் 20 பேர் வேலை பார்த்த சின்ன யூனிட் தான். வெளியிருந்து கட்டெடுத்து செஞ்சு கொடுத்துட்டு இருந்தோம்.

Advertisement

Advertisement

நீ வந்து தனியா ஆர்டர் பிடிச்சு செய்ய ஆரம்பிச்சு வந்தது தான் இதெல்லாம்.
இன்னைக்கு நூறு பேருக்கும் மேல இங்கையும், நாப்பதுக்கும் மேல வெளி யூனிட்டுக்கும் வேலை கொடுத்திருக்கேன்னா அதுல நா போட்டது முதலீடு மட்டும் தான்.

Advertisement

உழைப்பு மொத்தமும் உன்னோடது. மனசாட்சி உள்ள மனுஷனா இதை நான் செஞ்சு தான் ஆகனும்.
அது எனக்கு மட்டுமல்ல என்னோட மாப்பிள்ளைங்களுக்கும் தெரியும். ரெண்டு மாப்பிள்ளைங்களையும் உட்கார வச்சு எல்லா கணக்கு வழக்கும் அவங்ககிட்ட காட்டி பேசி தான் இவ்வளவு பர்சன்டேஜ் உனக்குன்னு நாங்க போட்டதே.. 
நீ வாய் வார்த்தைக்கு அண்ணா ன்னு கூப்பிட்டு இருக்கலாம்.. ஆனா நா உன்ன எங்க குடும்பத்துல ஒருத்தனா தான் பார்க்கறேன்..” என்றதும் உணர்ச்சிவசத்தால் அவரை கட்டிக்கொண்டவனுக்கு கண் கலங்கி போனது.
சொந்த பிள்ளையிடமிருந்து பிடுங்க நினைக்கும் ஒருவரை மட்டுமே கடிவாளம் கட்டியவாரு பார்த்தவனுக்கு.. தன்னை சுற்றி இருப்பவர்களின் கரைகாணாத அன்பு திக்குமுக்காட செய்தது.
எதிர்காலத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவனுக்காக எப்படியெல்லாம் யோசித்து தனக்காக செய்திருப்பவர்களை நினைத்து.. அவ்வளவு பெருமிதம் அவனுள்.
***
அன்று சனிக்கிழமை வேலை நேரம் முடிந்து, கணக்கு பார்த்து.. வீடு வர எப்போதையும் விட நேரமாகும் என்பதால் திண்ணையில் அமர்ந்திருந்தாள் யமுனா தீனாவை எதிர்நோக்கி.
அவளோடு அவளுக்கு துணையாக ஜெகதீஷ். 
இப்பொழுது எல்லாம் அவன் வாயிலிருந்து அதிகமாய் வரும் வார்த்தை, “அண்ணி..” என்றாகி போக,
அவளுக்கும் அவனின் இருப்பு ஒருவித மனநிறைவை உண்டாக்கியிருந்தது என்றே சொல்லலாம்.
காரணம் பிறந்த வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவளுக்கு அங்கிருக்கும் ஒருவனின் பிரதிபிம்பமாய் இப்போது இவன் உடனிருக்க கொஞ்சமே கொஞ்சம் அந்த ஏக்கம் குறைந்து போனது.
தீனா தனக்காக வாங்கி தந்த போனிலிருந்து இங்கே நடப்பதை அவ்வப்போது அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் ஆடியோவாகவோ புகைப்படமாகவோ அனுப்புவது மட்டுமே அவளின் பிறந்த வீட்டோடான தொடர்பு என்றிருக்க,
ஜெகதீஷ் முற்றும் முழுதாய் அவளின் தம்பி கிருஷ்ணனின் இடத்தை பெற்றிருந்தான் இந்த நாட்களில்.
கிருஷ்ணன் அவளிடம் பெறும் அத்தனை சலுகையும் இப்போது இவனுக்கு கிடைக்க, ஜெகதீஷூக்கு அத்தனை சந்தோஷம்.
அவளை வால் பிடித்துக்கொண்டே திரிவது அவனின் மிக முக்கிய வேலை. 
இன்றும் அவளருகே அமர்ந்து பள்ளியில் நடந்ததை பேசி, யமுனாவிடம் கம்பெனியில் நடக்கும் சுவாரசியமான நிகழ்ச்சியை பற்றி கேட்டு.. என பொழுதை போக்கிக்கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவள் மீதே சாய்ந்து உறங்கியிருக்க, அவனை எழுப்ப முயன்றவளின் முயற்சி பயனற்று போனது.
குளிர் காற்று வேறு வீச, “உள்ள போய் படுக்காம.. இப்போ இவன எப்படி தூக்க..?” என யோசித்தவள், வேறு வழியின்றி தன் மடியை தலையணை ஆக்கி புடவை முந்தானையை அவன் மேல் போர்த்தி படுக்க வைத்திருந்தாள் தாயன்போடு.
தாயாய் அவள் செயலை ஓரக்கண்ணால் கண்டு முகம் சுழித்து தனது கட்டிலில் உறக்கத்தை தொடர்ந்தார் ஜெயசீலன்.
 
ஜெகதீஷ் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற நேரம், சடாரென தங்கள் காலருகே வந்து நின்ற இருசக்கர வாகனத்தை கண்டு அதிர்ந்து கத்த போனவள், 
ஹெல்மெட்டை கழட்டி ஸ்டைலாக சுழற்றி பெட்ரோல் டைங்க் மீது வைத்து, ‘எப்படி இருக்கு..?’ என ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்ட தீனாவின் பாவனையில், 
யமுனா திறந்த வாயை மூடாமல் விழியை மட்டும் அதிர்வில் மூடி மூடி திறக்க அம்சமான புன்னகை தீனதயாளனிடம்.
“எப்புடிங்க..?!” என்றபடி புது வண்டியை ஆர்வத்தோடு பார்த்தவளை பார்த்தபடி ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி இறங்கியவன், 
“நல்லா இருக்கா..?” என்றான்.
“சூப்பரா இருக்குங்க.. நம்ம வண்டியா..?” என உற்சாகமாக கேட்க,
“எஸ்.. இனி தினமும் நீ நாலு மணிக்கு எழுந்து அவசரமா சமைக்க ஓட வேண்டாம்.. ஒரு மணி நேரம் கழிச்சு போயிக்கலாம்..” என்றதும்,
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நாந்தா மதியமா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கறேனே..” என்றவளை கண்டவன், 
ஜெகாவையும், அதோடு தள்ளி படுத்திருந்த ஜெயசீலனையும் பார்த்து அவர்களின் ஆழ்ந்த தூக்கத்தை உறுதிபடுத்திக்கொண்டு அவளுக்கு மறுபுறம் நெருங்கி அமர்ந்து,
“அப்படி அந்த ஒரு மணி நேரம் முன்னே எழுந்தே ஆகனுமுன்னா.. அதையும் எனக்கே எனக்குன்னு கொடுத்துடு.. சிம்பிள்..” என கிசுகிசுப்பாக அவர்கள் இருவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் சரசமாய் சொல்ல,
“அய்யே.. இல்லைன்னா மட்டும் அப்படியே விட்டுட்டு தான் வேற வேல பாக்கறீங்க..! 
இது மட்டும்.. இன்னும் ஒண்ணு.. இதோட கடைசி.. ன்னு திரும்ப சொல்லிச்சொல்லி..” என அவனை போன்றே கிசுகிசுத்தவளின் வாயை கரம் கொண்டு மூடி தடுத்தவன், 
“நம்ம சீக்ரெட் அம்பலமாகனுமா.. பாப்பா..?” என வெக்கத்தால் சிவந்த முகத்தை மறைக்க பாடாத பாடு பட்டபடி  கேட்க,
“அத முதல்ல நீங்க ஃபாலோ பண்ணுங்க பாஸ்..” என்றாள் கிண்டலாய்.
“உங்கிட்ட போய் வாய கொடுத்தேன் பாரு.. என்னச்சொல்லனும்..” என ஜாகா வாங்கிய தீனா, சலிப்பாக சொல்வது போல இருந்தாலும் மனதில் அத்தனை நிம்மதி.
தனிமையை மட்டுமே இரவில் துணையாக கொண்டு.. கடினப்பட்டு கடத்தி.. ‘எப்போதடா விடியும்..? ஆட்களுக்குள் நுழைந்து தன் தனிமையை போக்கலாம்..’ என கடந்திருந்த கருப்பு பக்கமெல்லாம் இன்று வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்க.. அவனின் நிம்மதிக்கு குறைவேது.
அவனின் நெஞ்சில் பிறந்த நேசம் அவனின் தேகத்தை சிலிர்ப்போடு தழுவிக்கொள்ள.. இது போதுமே இந்த பிறப்பிற்கு.. என்பது போலான நிலை.
அதில் அவன் அவளின் தோளில் முகம் சாய்த்து அமர்ந்திருக்க சற்று நேரம் அவனை தன்னோடு தாங்கிக்கொண்டவள்,
“தம்பிய தூக்குங்க.. குளிர் அதிகமாகுது. நீங்க வர லேட் ஆகுமுன்னு இங்கே இருந்தோம். 
தூங்குன புள்ளைய என்னால தூக்க முடியாதுன்னு தான் காத்துட்டு இருந்தேன். 
நல்லவேளையா நீங்களும் வண்டிங்கறதால சீக்கிரமா வந்துட்டீங்க..” என யமுனா சொல்ல,
“ஒரு நிமிஷம் வண்டில இருக்கறத எடுத்து வச்சுட்டு வர்றேன்..” என்றவனை தடுத்தவள்,
“அத நா எடுக்கறேன்.. இவன தூக்குங்க..” என்றதும், 
ஜெகதீஷை தீனா தூக்க, தீனாவின் உணவு பையோடு கொண்டு வந்திருந்த சில நோட்டுக்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் யமுனா.
இருவரும் உள்ளே சென்றதை உறுதி செய்த பின் லேசாக விழி திறந்த ஜெயசீலனின் முகத்தில் அப்படமான அருவருப்பு பாவம் மட்டுமே..!!
ஜெகதீஷை உள் அறைக்கு கொண்டு சென்று அவன் மெத்தையில் படுக்க வைத்த தீனா, நன்றாக போர்வையை போர்த்திவிட்டு பரிவோடு அவன் தலையை கோதிவிட்டு வெளியே செல்ல,
வண்டி சத்தத்தில் லேசாக தூக்கம் கலைந்த சகுந்தலாவிற்கு தீனா வந்தது முதல் செய்தவற்றை பார்த்து, முதல்முறை அன்று தான் செய்த தவறு பெரும் பாரமாய் அழுத்தியது.
யமுனா வந்த நாள் முதல் அவரும் பார்க்கிறாரே.. ஜெகதீஷை அவர்கள் இருவரும் தங்களின் மூத்த பிள்ளை போல தாங்குவதை.
அவர் கூட செய்ய முடியாது.. என சொல்லி தவிர்த்த விசயத்தை கூட, ஆசையாய் அவனுக்கு யமுனா செய்து தருவதை கண்டவருக்கு ஜெயசீலன் சொன்ன வார்த்தைகள் அர்த்தமற்றதாய் தோன்ற தொடங்கியிருந்தது.
‘என்ற புள்ள நல்லா இருக்கோனுமுன்னா எதையும் செய்யலாம்.. தப்பில்ல..’ என நினைக்கும் சராசரி தாயாக யோசித்து செய்த முட்டாள்தனம் இப்போது பெரும் பாவமாய் அவர் முன் நின்று பயம் காட்டியது. 
அதற்கு தக்க சமயத்தில் பரிகாரம் செய்வாரா..? அதற்கான அவகாசத்தை அந்த விதி அவருக்கு அளிக்குமா..?!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!