Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 31.3

இதுவரை காதில் விழுந்த வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் இறங்கி.. மீளா சுழலுக்குள் இழுத்துக்கொண்டு இருந்த போது.. காதில் விழுந்த தன்னவனின் குரலில் தனது மொத்த உயிர் சக்தியையும் திரட்டி கண் திறக்க முயன்றாள் யமுனா.
ஆனால் ஏற்கனவே அதீத ரத்தப்போக்கால் பலகீனமான உடல், இப்போது தலையில் விழுந்த அடி.. காய்ச்சலோடு அவளருகே கொட்டிய நீரால் உடலில் உண்டான குளிர் எல்லாம் சேர்த்து அவளின் உடல் வெட்டி இழுக்க தொடங்கியிருந்தது.


Advertisement

அதனை கண்டே அலறி அழைத்திருந்தான் ஜெகதீஷ்.
அவள் நிலை கண்டு, “பாப்பா…!!” என கதறி, அவளை அள்ளித்தூக்கியவன் கரத்திலிருந்து அவள் உடலோ நழுவிச்செல்ல மொத்தமாய் உடைந்து போனான் அந்த ஆண்மகன்.

Advertisement

Advertisement

தீனாவோடு, வாணியும் சகுந்தலாவும் சேர்ந்தே உள்ள வந்திருக்க யமுனாவின் நிலை கண்டு, 
“தம்பி சீக்கிரம் அவள தூக்குடா.. ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம்..” என வாணியும் அழுகையோடு சொல்லும் போதே சக்தி தனக்கு தெரிந்த ஒருவரின் காரோடு அங்கு வந்து சேர்ந்தான்.

Advertisement

வாணிக்கு சகுந்தலா தகவலை சொல்ல, மில்லுக்கு சென்றிருந்த சக்திக்கு தகவலை சொன்ன படியே தான் அவளின் தந்தை இல்லத்தை நோக்கி வந்திருந்தாள்.
அவனும் அங்கிருந்து தனக்கு தெரிந்த நபரிடம் பேசி காரை எடுத்து வர ஆன நேரத்திற்குள் பெரும் சூறாவளியே வீசியிருந்தது இங்கே.
வெட்டி இழுத்த உடலை தனது இரு கரத்திலும் வலிமையை கூட்டி இறுக்கமாய் தனது பிடிக்குள் வைத்து தூக்கிய தீனா வேகமாய் வெளியேற,
“நானும் உங்கூடவே வந்திடவா..? இவரோட இருக்க பயமா இருக்கு..” என்றான் அஞ்சி நடுங்கிய குரலில் ஜெகதீஷ்.
நடந்த அனைத்திற்கும் தீனாவிற்கோ ஜெயசீலனை துண்டுத்துண்டாக வெட்டும் அளவு வெறி ஏறிய போதும், தன் கையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தன் உயிரானவளுக்காக மற்றதை விடுத்து.. தலையை மட்டும் அவனிடத்தில் அசைத்து விட்டு வேகமெடுத்திருந்தான் காரை நோக்கி.
வாணிக்கு அப்படியே உருகி போனது பிள்ளை நின்ற நிலையை எண்ணி.
அவளின் சிறு வயதில் பெரிய தம்பிக்கு தாயானவள்.. இன்று அவளே தாயான பின் அவளுள் தாய்மை ஊற்றெடுக்காதா..?
அவசரமாய் அவனிடம் சென்று அவன் கரம் பற்றியவள், “இனி எப்பவும் நீ எங்க கூட மட்டும் தான் இருப்பே.. வா..” என சொல்லி அவனுடனே வெளியேறினாள்.
சகுந்தலாவும் மேல் சட்டை இல்லாது நின்ற ஜெகாவிற்கு உடையும்.. யமுனாவிற்கு தேவைப்படும்‌.. என நினைத்த சிலதை எடுத்துக்கொண்டு காருக்கு ஓட,
அங்கே குப்புற விழுந்து.. போதையிலும், தன் மீது விழுந்த அடியிலும் உருண்டு கொண்டிருந்தவரை கண்டு கொள்ள தான் நாதியில்லை.
“போதீ.. போ..‌எப்புதியும் இங்க வந்து ஆவ டானே.. வச்சுக்றே..” என சகுந்தலா தன்னை அடித்துவிட்டதை எண்ணி பிதற்றிக்கொண்டிருந்தார் நெடு நேரமாய்.
***
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவளின் நிலை தான் இன்னும் என்னவென தெரியாத தவிப்பில் இருந்தனர் அனைவரும்.
நடந்ததை சொல்லி அழுதே ஓய்ந்து போயிருந்த வாணியை.. பரிவோடு நெஞ்சில் சாய்த்து பிடித்து அமர்ந்திருந்த சக்திக்கு, ஜெயசீலன் மட்டும் இப்போது கண் முன் இருந்தால் வெட்டி வீசி எறியும் அளவு கோபம் இருந்தது.
‘எப்படி ஒரு மனிதனால் இப்படியெல்லாம் பேச என்ன.. யோசிக்க முடிந்தது..?’ என்ற எண்ணமே அவனுள்.
ஜெகதீஷை நினைக்கும் போது இன்னுமே கவலை அதிகமானது அவனுக்கு.
‘இந்த சிறு வயதில் கேட்கும் வார்த்தைகளா இவை எல்லாம்..? தாயாய் பார்க்கும் அண்ணியோடு சேர்த்து வைத்து இப்படியான பேச்சு என புரியும் போது அவன் நிலை..?’ யோசிக்கும் போதே தலை சுழன்றது அவருக்கே.
‘யமுனா போன்ற பெண்ணை எப்படி அவரால் தவறாக நினைக்க முடிந்தது..? அதுவும் தன்னோடும் சேர்த்து..’ என நினைக்க கை முஷ்டி இறுகியது அவனுக்கு.
நேரம் கடக்க ஒருவழியாய் வெளியே வந்த மருத்துவர், “நத்திங் டூ வொரி.. அதிக ப்ளீடிங், ஸ்ட்ரெஸ் காய்ச்சல் ன்னு எல்லா காம்ப்ளிகேஷனும் சேர்ந்ததால தான் ஃபிட்ஸ் வந்திருக்கு. 
ஐ சி யூ.. ல அப்சர்வேஷன்ல இன்னைக்கு நைட் இருக்கட்டும். 
ஃபீவர் குறஞ்சதும் செக் பண்ணிட்டு நாளைக்கு நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிக்கலாம்..” என்று விட்டு செல்ல, அப்போதும் தான் உயிரே வந்தது அனைவருக்கும்.
இவை நடக்கவே இரவை நேரம் தொட்டிருக்க சக்தியை அழைத்த தீனா, “மாமா, பாலா ஸ்கூல்ல இருந்து வந்து எவ்வளவு நேரம் பக்கத்து வீட்டுல இருப்பான்..?
ஐசியூங்கறதால யாரையும் உள்ள அலோவ் பண்ண மாட்டாங்க. வெளியேவும் இத்தன பேர் இருக்க முடியாது.
நீங்க இவுங்க எல்லாரையும் கூட்டிட்டு கிளம்புங்க. நா யமுனாவ பாத்துக்கறேன்..” என சொல்ல,
அவர்கள் அங்கிருந்தும் செய்வதற்கு ஒன்றுமில்லை.. என்பதால் காலை வருவதாக சொல்லி எல்லோரும் கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்ற பின் வெளியே இருக்கும் காத்திருப்போர் இருக்கையில் கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டான் தீனா ஓய்ந்து.
காலை கம்பெனியில் வேலையை பார்க்க ஆரம்பித்தாலும்.. மனம் முழுவதும் ஒருவித பயம் அழுத்த, ஒரு கட்டத்தில் முடியாமல் தங்கமணியிடம் சென்று நின்றிருந்தான்.
அவரும் இவன் முகம் கண்டு கேட்டு விசயம் தெரிந்ததும், “நீ முதல்ல கிளம்பு.. யமுனாவ போய் பாரு. குமரன வச்சு நா இங்கே பார்த்துக்கறேன்..” என்றுவிட,
காற்றில் பறந்து வந்தது போல வேகமாய் வந்து சேர்ந்திருந்தான் தன் இல்லத்திற்கு.
வாசலில் கால் வைத்தவன் கண்டது வாணி அதிர்ச்சியில் சமைந்து நின்றதையே..!
‘ஏன்..?’ என்ற யோசனையோடு அவளை நெருங்க, ஜெயசீலனின் வார்த்தைகள் அவனின் காதில் விழுந்தது.
தன் மனைவி பற்றி அவர் பேசியதில் கோபம் கொண்டு அடிக்க நினைத்து ஓரடி எடுத்து வைத்தவனை அவரின் இறந்து போன மனைவி பற்றிய பேச்சு பதட்டத்தை கூட்டியது.
எது வாணிக்கு தெரிந்துவிடவே கூடாது.. என நினைத்தானோ அது தெரிந்த அதிர்வோடு, 
அன்று இவன் கேட்ட போது சொன்னதை விட இன்று அவர் சொன்ன விசயங்கள் அவனுக்குமே புதிது.
அவனும் அதை கேட்டு சமைந்து நின்ற நேரம் தான் வாணி அவரை அடித்துவிட்டு கதறியது.
நடந்த அனைத்தையும் நினைத்துப்பார்த்த தீனா ஓய்ந்து  அமர்ந்திருந்திருக்க, அவனை யாரோ அழைக்கும் ஓசையில் கண் விழித்தவன் முன் நின்ற சக்தி, 
“மாப்ளே, உன் ட்ரஸ்ல அங்கங்கே ரத்தமாகி இருக்கு. உள்ளார கூப்பிட்டா இதோட போக முடியாது இல்ல..?!
அதா, ட்ரஸ் வாங்கிட்டு.. உனக்கு சாப்பிடவும் வாங்கியாந்தேன்..” என்றவரை இயலாமையோடு பார்த்து தலை அசைத்தவனின் நிலை உணர்ந்த சக்தி,
“நா இருக்கேன் மாப்ளே.. பாத்துக்கலாம். இத்தன வருசோ இத சொல்லாம இப்புடி இருக்கோனுமா..? 
ஒத்த வார்த்த என்றகிட்ட சொல்லியிருக்கலாம்..” என்றவர், ‘உம்ம்ம்..’ என்ற பெருமூச்சோடு,
“விடு.. இனி என்னன்னாலும் இந்த மாமா பாத்துப்பேன்.. நீ யமுனாவ பாரு.. தைரியமா இரு..” என்றுவிட்டு வெளியேறினார்.
சக்தி சொன்னது போல உடையை மாற்றி வந்த தீனா அங்கே வந்த நர்ஸிடம் யமுனாவை ஒருமுறை பார்க்க அனுமதி கேட்க,
அவனின் தவிப்பை கண்டு மனமிரங்கிய அவரோ, “பேசண்ட்ட டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வந்திடனும்..” என்ற கட்டளையோடு தகுந்த பாதுகாப்பை செய்து உள்ளே அனுமதித்தார்.
அறைக்குள் வந்தவன் கண்கள் தன்னால் கலங்கியது தன்னவளின் வெளிரிப்போன முகம் கண்டு.
அவளுக்கு அருகே ஒரு சேர் இருக்க அதில் அமர்ந்து அவளின் தலை அருகே தனது தலை வைத்து படுத்துக்கொண்டான்.
‘எந்த கண்ணில் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும்..’ என சங்கல்பம் எடுத்திருந்தாளோ, அந்த கண்ணில் வடியும் நீரை துடைக்க கூட உணர்வில்லாத நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் யமுனா.
“சாரி.. பாப்பா. இதுக்காக தான் நா உன்ன விட்டு ஒவ்வொரு நிமிஷமும் விலகி ஓடினேன். 
அங்கே உன்னோட மரியாதை காப்பாத்தப்படாம போயிடுமேன்னு தான் நா கவலப்பட்டேன். நா பயந்த மாதிரியே நடந்திடுச்சு இல்ல..?
பெத்த தாயையே புள்ளையோட சேத்து பேசின ஆள நம்பி.. எப்படி என் மனைவிய விட்டேன்னு இப்ப என்னை நானே அடுச்சுக்கனும் போல இருக்கு.
தயவு செஞ்சு எழுந்ததும் என்னை ஏன்டா இப்படி ஒருத்தன்கிட்ட கூட்டிட்டு போய் வச்சேன்னு கேட்டு என்ன அடுச்சிடு பாப்பா..
அப்பவாவது இந்த வலி குறையுதா ன்னு பார்க்கறேன்..?
நா என்ன பாவம் பண்ணேன் பாப்பா..? எதுக்கு எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை..?
என்னோட சபிக்கப்பட்ட வாழ்க்கையில ஜீவநதியா வந்து என்னோட அத்தனை சாபத்தையும் தொடச்சு போட்டவ நீன்னு இருந்தேனே.. ஆனா, அந்த புனிதமான நதியையே கேவலப்படுத்திட்டானே அந்த பாவி.. 
இதுக்கு காரணம் நான் தானே.. என்ன மன்னிச்சிடு பாப்பா..” என காதோரம் மெல்லிய குரலில் அழுகையோடு பேசிய வார்த்தையாவும் கல்லில் செதுக்கிய வார்த்தையாய் அவளின் மனதில் சென்று சேர்ந்திருந்தது.
அது கொடுத்த வலி.. சாபமாய் அங்கொருவனை சென்று சேர்ந்தது.
அதன் படியே லேசாக தெளிந்த போதையால் விழுந்த அடியின் வீரீயம் உடல் வலியாய் தெரிய தொடங்க, மீண்டும் அதே மதுவை நாடி சென்று கொண்டிருந்தான் அந்த பாவி.
சரியாக அந்த நேரம் சூழற்றி வீசியது ஊழிக் காற்று ஒன்று.
காற்றில் பறந்த குப்பை கண்ணை மறைக்க.. தட்டுத்தடுமாறி சென்று கொண்டிருந்த ஜெயசீலன் மொத்தமாய் தடுமாறி விழப்போக.. ஆதரவுக்காய் கையை தூழாவிய போது சிக்கியதை கெட்டியாக பற்ற,
அலறக்கூட அவகாசம் இன்றி மொத்தமாய் கருகி போனது அவரின் உடல்.
மறுநாள் காலை செய்தித்தாளில்.. 
“பலமாக வீசிய காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி மதுப்பிரியர் ஒருவர் பலி..”
என கொட்டை எழுத்தில் வெளிவந்தது செய்தி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!