Skip to content
Post Views: 3,119
அன்பு – 20
“என்னையை விடுடா பொறுக்கி!!!!” என ஜெயசிம்மனின் வலிமையான கைகளுக்குள் சிறைபட்டிருந்த தன் கரத்தை விடுவித்துக்கொள்ள போராடிய கவியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது அவளின் பிரபாவை நினைத்து!!
Advertisement
புறநகர் பேருந்து நிலையத்தில் வைத்து, ஜெயசிம்மன் அடித்ததில் அதிகப்படியான ரத்தம் வெளியேற, மயக்கத்திற்குள் சென்றிருந்த பிரபாவை, ஜெயசிம்மனின் ஆட்கள் தங்களின் வாகனத்தில் அள்ளிப்போட்டு எங்கோ சென்றிருக்க,
Advertisement
நடந்ததை அவதானிக்கக் கூட அஞ்சலிக்கு அவகாசம் வழங்காமல், ஒரு வெற்றிச் சிரிப்புடன் அவளை வலுக்கட்டாயமாக தன் மகிழுந்தில் அமர வைத்த ஜெயசிம்மன், அவள் அருகில் சட்டமாக அமர்ந்து கொண்டு அவள் கைகளைத் தன் பிடியிலே வைத்திருக்க, அவனின் கண்ணசைவில் மகிழுந்தும் கிளம்பியது!!
Advertisement
“அய்யோ பிரபா!! ரத்தம்!!! எல்லாம் என்னால தான்!!!” என குற்ற உணர்ச்சியில் கவிக்கு நெஞ்சமெல்லாம் பதற, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
Advertisement
“பிரபா!! பிரபா!!” என அவளின் மனம் அரற்ற, அவளின் கண்ணீரை குரூர திருப்தியுடன் பார்த்து ரசித்துக்கொண்டு வந்த ஜெயசிம்மனைக் கொன்று போடும் ஆத்திரம் பிறந்தது பெண்ணுக்குள்.
“யார்ரா நீ!!! என் பிரபா!! என் பிரபாவை எதுக்கு அடிச்ச?? உன்னை சும்மாவே விட மாட்டேன்!!! பொறுக்கி ராஸ்கல்!!!” என அதீத கோபத்தில், தன் கையைப் சிறை பிடித்திருந்த அவனின் கைகளை வெறி வந்தவள் போல் ஆக்ரோஷமாக கடித்து வைக்க,
அவளின் தாக்குதலை எதிர்பார்க்காத ஜெயசிம்மனுக்கு, பெண்ணவள் ஏற்படுத்திய காயம் வலியைக் கொடுக்க, சட்டென தன் முழுபலத்தையும் திரட்டி, அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, கன்னத்தில் பளார் என விட்டான் ஒரு அடி!!!!
அதில் பெண்ணின் கன்னம் பழுத்த தக்காளிப் பழம் போல் பட்டென சிவந்து விட, அவனின் ஐவிரல்களும் அழுத்தமாக அவளின் கன்னத்தில் பதிந்து போனது!!
திகுதிகுவென பற்றி எரியும் அவள் கன்னத்தை விட அவளின் மனம் அதிகமாய் வலியில் துடித்தது அவளின் பிரபாவை எண்ணி!!
“யாரு டா நீ?? எதுக்கு இப்படிப் பண்ற?? அறிவில்லை!! அதான் உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு தெரியுதுல!!! அப்பறம் எதுக்கு பிடிக்காத பொண்ணை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போற!!! அசிங்கமா இல்லை!!” என கோபத்தில் கவியின் வார்த்தைகள் கன்னாபின்னாவென்று சிதற, இதுவெல்லாம் பின்னாளில் அவளை எந்த அளவு பாதிக்கப்போகிறது என அந்த சிறுபெண்ணிற்கு அப்போது சுத்தமாக எண்ணம் இல்லை.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனின் ஆழ்மனதில் அப்படியே பதிந்து போக, கவி மேல், மேலும் மேலும் வன்மத்தை வளர்த்துக்கொண்டு, இகழ்ச்சிப் புன்னகையுடன் அமர்ந்திருந்தவன், ஓட்டுனருக்கு ஏதோ கண்காட்ட,
அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம், மெயின் ரோட்டில் இருந்து விலகி, ஒரு மண்பாதைக்குள் நுழைந்தது!!!
“என்னை என் பிரபா கிட்ட விடு!!! எனக்கு அவனைப் பார்க்கணும்!! எங்க என் பிரபா!!!” என வழியெங்கும் பிரபஞ்சனைப் பற்றி கேட்டு அழுதுகொண்டே வந்த கவியை சுவாரசியமாகப் பார்த்த ஜெயசிம்மனுக்கு, அவளின் கண்ணீர் தனிவித போதை ஒன்றை அவனுக்குக் கொடுத்தது!!!
‘ இன்னும் நல்லா அழனும் நீ!!!’ என குரூரமாக நினைத்தவன், அந்த குறிப்பிட்ட இடம் வரவும் வாகனத்தை நிறுத்தச் சொல்ல,
அங்கே ஏற்கனவே பிரபாவை ஏற்றிக்கொண்டு வந்த வாகனமும் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது.
“இறங்கு!!!” என கதவைத் திறந்து கவியின் தோள்பட்டையை பிடித்து கீழே தள்ளிய ஜெயசிம்மன்,
சேதுராமனுக்கு முன்பே அழைத்து வரச் சொல்லியிருக்க, அவர் வந்தாயிற்றா என கேட்டுக்கொண்டே காரில் இருந்து இறங்கினான்.
அங்கே மயக்கத்தில் கிடந்த பிரபாவை போய் மடியில் ஏந்திக்கொண்ட கவி,
“பிரபா!! பிரபா!! பிளீஸ் எந்திரி டா!! எல்லாம் என்னால தான்.. நான் ஒரு பாவி!!!” என தலையில் அடித்துக்கொண்டு அழுக,
அவர்களை வெறுப்புடன் பார்த்த ஜெயசிம்மன், கவியின் முடியை கொத்தாகப் பற்றி பிரபாவிடமிருந்து அவளைப் பிரித்து,
“கட்டிக்கப்போற புருஷன் நான் இங்க இருக்கேன்!! நீ என்ன கண்டவனையும் மடியில தூக்கி வச்சி அழுதுட்டு இருக்க??” என மீண்டும் அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அடி வைக்க,
அவன் அடித்த வேகத்தில், இரண்டு சுற்று சுற்றி, நிலைதடுமாறி கவி கீழே விழுக, அவள் இத்தனை நாட்களாய் மறைத்து வைத்திருந்த தாலியும் வெளியே வந்து, அதன் இருப்பைக் காட்டிக்கொடுத்தது.
தனக்கு மனைவியாகப் போகிறவள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என்பதே அவனை மூர்க்கனாக்கி இருக்க, இப்போது இந்த தாலி சொன்ன செய்தி அவனை மொத்தமாக மிருகம் ஆக்கியிருந்தது!!!
“என்ன டி இது!!!! கல்யாணமே பண்ணிட்டியா??? சொல்லு டி சொல்லு!!!” என கோபம் தலைக்கேற, கீழே சரிந்து கிடந்த கவியை எழுப்பி அவன் உலுக்க,
அவன் அழுத்திப் பிடித்ததில் தோள்பட்டையில் உண்டான வலியையும் பொறுத்துக்கொண்டு, கோபம் மின்ன அவனை ஏறெடுத்து பார்த்த கவி,
“ஆமாண்டா!! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!! இப்போ என்ன?? நான் இன்னொருத்தன் பொண்டாட்டி!! முதல்ல என் மேல இருந்து கையை எடுடா!!” என ஆங்காரம் கொண்டு அவனின் கையைத் தட்டிவிட்ட கவி, மீண்டும் பிரபாவிடம் ஓட,
ஜெயசிம்மனின் இதயம் உலைக்கலனாக கொதித்தது!!!
கிட்டத்தட்ட இருபது வருடமாக அவளை மட்டுமே மனைவியாக மனதில் தரித்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, இந்த ஏமாற்றம் பெருங்கோபத்தை உண்டுபண்ண, கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் தவறிக் கொண்டிருந்தான் அவன்.
‘ என் பார்யா!!! யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது!! இந்த சிம்மன் யாருகிட்டயும் தோற்க மாட்டான் ‘ என தலையைத் தட்டிக்கொண்டே ஒரு நிலையில்லாமல் குறுக்கும் நெடுக்கும் அவன் நடந்து கொண்டே இருக்க,
கவியின் கண்ணில் அதெல்லாம் பதிவே இல்லை.
தன் துப்பட்டாவை எடுத்து, ரத்தம் வெளியேறாமல் இறுக்கமாக பிரபாவின் தலையில் கட்டியவள், பிரபாவை முதலில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என அவள் நினைத்து எழுந்து கொள்ள,
சடாரென அவளை இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில், தன் கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு பிரபாவை குத்தப் போய்விட்டான் ஜெயசிம்மன்.
“பிரபா!!!!” என கவி உச்சாஸ்ததியில் கத்த, அமைதியான அந்த காட்டிற்குள், அவளின் கதறல் சப்தம் எட்டுத்திக்கும் எதிரொலித்தது.
அவளின் பதட்டத்தை நிதானமாக ரசித்த ஜெயசிம்மன், ஒரு குரூரச் சிரிப்புடன் பிரபாவிடம் கொண்டு சென்ற கத்தியை, குத்தாமல் மெதுவாக பின்னால் எடுத்துக்கொள்ள,
“பிளீஸ்!! பிளீஸ்!! பிரபாவை விட்டுடு!! அவன் பாவம்.. அவன் வேணாம்னு எவ்வளவோ சொன்னான் .. நான் தான் பிடிவாதமா நின்னு அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. என்னை என்ன வேணும்னாலும் பண்ணு!! அவனை விட்டுடு!!” என இத்தனை நேரம் இருந்த கோபத்தை விட்டுவிட்டு, பிரபாவைக் காத்துக்கொள்ள ஜெயசிம்மனின் காலைப் பிடித்து கெஞ்சினாள் அஞ்சலி!!
அவளின் கதறல், இன்னுமின்னும் கேட்கத் தூண்டும் சங்கீதமாக ஜெயசிம்மனுக்குத் தோன்ற, மிதமான புன்னகையுடன்,
“பத்தலை!! இன்னும் … இன்னும்.. நல்லா கெஞ்சு!!!” என தன் காலைப் பற்றியிருந்த அஞ்சலியின் முகத்தை தன் பாதம் கொண்டு நிமிற்றி ஜெயசிம்மன் சொல்ல,
“உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.. பிரபா.. பிரபாவை ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்.. பிளட்.. பிளட் ரொம்ப லாஸ் ஆயிடுச்சு!!! பிளீஸ்.. ஹெல்ப் பண்ணு!! நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்!!!” என மன்றாடியவளை ரசனையுடன் பார்த்திருந்த ஜெயசிம்மன்,
“ரொம்ப காதலோ!!! அவனுக்காக இவ்வளவு கதறுர!!!”
என அவன் கேட்டுக் கொண்டிருக்கையிலே சேதுராமனும் பொற்கொடியும் வந்துவிட,
உடையெல்லாம் நலுங்கி, தலை கலைந்து, முகமெல்லாம் ஜெயசிம்மனிடம் வாங்கிய அடியில் கந்திப் போய், அலங்கோலமாக காட்சியளித்த மகளைக் கண்டு பொற்கொடிக்கு பெற்ற வயிறு துடிக்க,
“அஞ்சலி!!!” என பதற்றத்துடன் மகளிடம் ஓடினார்.
சேதுராமனோ, அங்கே ரத்தம் ஒழுக மயக்கத்தில் கிடந்த பிரபஞ்சனைக் கண்டு ஒரு நிமிடம் நெஞ்சம் அதிர நின்றவர், பின்னே மகளின் கழுத்தில் தொங்கிய தாலிச்சரடைக் கண்டு கோபம் கொப்பளிக்க அஞ்சலியை நெருங்கி, அவரின் பங்கிற்கு அடித்து விளாச,
“ஏங்க!! என்னங்க பண்றீங்க?? விடுங்க!!” என தடுக்கப் பாய்ந்த பொற்கொடியையும் சேர்த்து அடித்து தீர்த்துவிட்டார் மனிதர்.
” வயசுக்கோளாறுல காதல் பண்ணுறன்னு போனா போதுன்னு உன்னை விட்டுவச்சா, கல்யாணம் பண்ணுற அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டியா நீ??? உன்னையெல்லாம் கொன்னு போட்டாக்கூட என் ஆத்திரம் அடங்காது!!!” என ஆத்திரம் அடங்காமல் அஞ்சலியை அவர் அடித்துத் தீர்க்க,
அதை ரசனையுடன் பார்த்திருந்த ஜெயசிம்மனுக்கு, மனம் லேசாய் அமைதியடைந்தது.
உடலெல்லாம் வாங்கிய அடியில் தடித்துப்போக, நிற்கக்கூட முடியாமல் தள்ளாடிய கவி,
“பிரபா!! பிரபாவை ஹாஸ்பிடல்.. போகணும்!!” என அவனைக் காப்பாற்றிவிடுங்களேன் என பார்வையால் அங்கிருந்த அனைவரிடமும் இறைஞ்ச,
சேதுராமனுக்கு வந்ததே வெறி!!
“இவ்வளவு அடி வாங்கியும் அந்த நாய் பேரு தான் உன் வாயில வருது!!” என சொல்லி கீழே மடிந்து அமர்ந்திருந்த கவியை எழுப்பி மீண்டும் அடித்து விளாச, உடலெல்லாம் ரத்தம் கசிய, மெதுவாய் கவியும் மயக்கத்தின் பிடியில் சென்று கொண்டிருந்தாள்.
கண்கள் மூடப்போகும் சமயம் கூட, பிரபாவை யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என அவள் தவித்த தவிப்பு, பொற்கொடிக்குப் புரிய, மகளை எண்ணி கோபமாய் வந்தது!!
‘ சின்ன வயசுல இருந்து பொத்திப் பொத்தி வளர்த்தது, இப்படி அடிபட்டு சாகத்தானா?? உன் வாழ்க்கையோடு சேர்த்து அந்தப் பையன் வாழ்க்கையையும் குழி தோண்டி புதைச்சுட்டியே பாவி!!!’ என மகளை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவர் ஒரு பக்கம் கண்ணீர் சிந்த,
அங்கே கைகளைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் அமைதியாக பார்த்திருந்த ஜெயசிம்மனை நெருங்கிய சேதுராமன்,
“அல்லுடு!!! என்னை மன்னிச்சிருங்க!! என் பொண்ணு இந்த அளவுக்கு துணிஞ்சு இறங்கிருப்பான்னு நான் நினைக்கலை!! உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க!! இவளா பண்ணிக்கிட்டது எல்லாம் கல்யாணமே இல்லை!! இந்தக்கயிரை அறுத்து வீசிடலாம்.” என மகளை எப்படியாவது ஜெயசிம்மனுக்கே கட்டிவைத்து தன் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்ள சேதுராமன் முனைய,
அவரை அழுத்தமாக பார்த்த ஜெயசிம்மன்,
“என் பொண்டாட்டியா நான் நினைச்சி வாழ்ந்துட்டு இருந்தவ கழுத்துல இன்னொருத்தன் தாலி காட்டுவான்.. அதை கழட்டிட்டு மறுபடியும் நான் தாலி கட்டுவேன்னு எப்படி நினைச்சீங்க?? நெவர்!!!! உங்க பொண்ணு கழுத்துல என் கையால என்னைக்கும் தாலி ஏறாது!!!” என முடிவாக அவன் சொன்ன சமயம்,
மெதுவாக மயக்கத்தில் இருந்து கண்விழித்த பிரபஞ்சனுக்கு, ஜெயசிம்மனின் கடைசி வார்த்தை அட்சரம் பிசகாமல் காதில் விழுந்தது!!
மயக்கம் லேசாய் தெளிந்தாலும், இமைகள் மீது பாறையை வைத்ததைப் போல் கண்களைத் திறக்க அவ்வளவு சிரமமாக இருந்தது அவனுக்கு.
இருந்தும் அவனின் கவிக்கு என்னானதோ, என அவனின் உள்ளம் பதைபதைக்க, கண்களைத் திறக்க மிகவும் போராடினான் அவன்.
இங்கே ஜெயசிம்மனின் பேச்சைக்கேட்டு சேதுராமன் அதிர்ச்சியடைய, என்ன செய்வது இனி என அவர் அடுத்து யோசிக்கும் முன்னே,
“முதல்ல வண்டியை எடுங்க!! அஞ்சலி கண்ணை முழிக்க மாட்டேங்குறா!!” என பொற்கொடி பதற,
“செத்துத் தொலையட்டும் அந்த நாய்!! விடு!!” என கோபத்தில் சேதுராமன் கத்த,
ஜெயசிம்மன் தான் விரைவாக அஞ்சலியிடம் ஓடியவன், அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு தன் காரை நோக்கி விரைய,
இவனை எந்தக்கூட்டில் சேர்ப்பது என்று புரியாத சேதுராமனும் அவனைப் பின்தொடர்ந்து தன் காருக்கு சென்றார்.
“அண்ணயா!!! இவனை என்ன செய்ய??” என பிரபஞ்சனை சுட்டிக்காட்டி ஜெயசிம்மனின் ஆட்கள் கேட்க,
“அவனை அப்படியே விட்டுட்டு வா.. இந்த காட்டில இருக்க மிருகங்களுக்கு சாப்பாடாச்சும் கிடைக்கட்டும்!!” என மனசாட்சியே இல்லாமல் பேசியவன், தன் மகிழுந்தை எடுக்கச் சொல்ல, விருட்டென அங்கிருந்து கிளம்பி மறைந்தது ஜெயசிம்மனின் வாகனம்.
அவனைத் தொடர்ந்து, அவனின் அடியாட்களும் கிளம்ப,
அதைத் தொடர்ந்து சேதுராமனும்,
“வந்து தொலை!!” என பொற்கொடியை அழைக்க,
கணவனைக் கண்டு பயமிருந்தாலும், ஒரு உயிரை அப்படியே விட்டுவர மனம் கேளாமல், அரசு ஆம்புலன்சிற்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டே கணவனுடன் கிளம்பினார் பொற்கொடி!!
பொற்கொடியின் செயலில் கோபம் வந்தாலும், இதுவரை கொலை செய்யும் அளவிற்கு சென்றிடாத சேதுராமனுக்கு, பிரபஞ்சன் மீது கோபம் இருந்தாலும், அவன் பிழைத்தால் பிழைத்துவிட்டு போகட்டும் எனும் எண்ணம் தான்.
எனவே மனைவியை முறைத்தவர், வேறொன்றும் சொல்லாமல் வண்டியைக் கிளப்பி, ஜெயசிம்மனின் வாகனத்தைப் பின் தொடர, மெதுவாய் தன் இமைகளைக் கஷ்டப்பட்டு பிரித்த பிரபா கண்டதெல்லாம் அங்கே உடைந்து கிடந்த அவனின் கவியின் கண்ணாடி வளையல்களில் சிதறியிருந்த அவளின் ரத்தத் துளிகளைத் தான்.
அவனிடமிருந்து அவனின் கவியை பிரித்து சென்றே விட்டனர் என அறிந்த பிரபாவிற்கு, உள்ளமெங்கும் தாங்கிக்கொள்ளமுடியா வேதனை ஒன்று ஊடுருவ,
“கவி!!!!!” என தீனமான குரலில் அழைத்தவன் மீண்டும் ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்றுவிட்டான்!!!
“காதல் கொண்ட இதயங்கள் காயம் கண்டு பிரிந்து தவிக்க,
காலம் காயம் ஆற்றி, காதலைச் சேர்க்குமா??”
error: Content is protected !!