Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 11

அத்தியாயம் – 11

சகுந்தலா சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் மட்டும் தான் அமர்ந்திருந்தார்.

தேவேந்திரன் மாலை நேரம் நடைப்பயிற்சியை முடித்த பிறகு வெளியில் சென்றிருந்தார். சித்தரஞ்சனும் வீட்டில் இல்லை.

இதைப் பார்த்துக்கொண்டே அபர்ணா சாப்பாட்டு மேசையை நோக்கி நடந்தாள்.



Advertisement

நிச்சயமாய் அவர்கள் தனக்கு சரிசமமாய் அமர்ந்து சாப்பிட சகுந்தலா விரும்பமாட்டார். மதன்ராஜை முன்னே விட்டது தவறு.

அவள் யோசனையில் இருக்கும்போதே, சென்னையில் ராம் பிரசாத் வீட்டில் சாப்பிட்ட பழக்கத்தில் மதன்ராஜ் நேரே சென்று சாப்பாட்டு மேசைக்கருகில் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

சகுந்தலா நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் அத்தனை ஆங்காரம்.

Advertisement

“தட்டுகெட்டு அலைஞ்சதெல்லாம் தராதரம் தெரியாம எனக்கு சரிசமமா சாப்பிட வந்துடுச்சுங்க. டேய் சண்முகம். என்னடா பண்றே? வாடா இங்கே. டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டாதான் சாப்பாடு இறங்குமா?”

Advertisement

கோபமாக கத்தியவாறே சாப்பாட்டு மேசையில் இருந்த பாத்திரத்தைத் தள்ளிவிட்டார்.

அது சாப்பாட்டோடு உருண்டு கீழே விழுந்தது.

மதன்ராஜ் அவர் கோபத்தைக் கண்டு நடுங்கிவிட்டான்.

Advertisement

அபர்ணா அதிர்ந்து போனாள்.

சகுந்தலா இந்தளவிற்கு மோசமாக நடந்து கொள்வார் என்று அவள் நினைக்கவில்லை.

ஏதாவது திட்டுவார். அதுவும் மதன்ராஜ் சிறுவன் என்பதால், அவனை விடுத்துத் தன்னைத்தான் திட்டுவார் என்று நினைத்தாள்.

அபர்ணாவைக் கண்டதும் மதன்ராஜ் அவள் காலைக் கட்டிக்கொண்டான். இன்னமும் அவன் உடலில் நடுக்கம் இருந்தது.

எதுவும் பேசாமல் அவனை அணைத்தவாறே அறைக்குத் திரும்பியவள் கட்டிலில் அமர்ந்து அவனைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.

அவன் வாய் விட்டு அழவில்லை. ஆனால் தேம்பினான்.

‘சாரிடா மது. உன்னை இங்கே அழைத்து வந்திருக்கக்கூடாது. அப்பவே ராஜிம்மா உன்னை விட்டுப் போகச் சொன்னாங்க. நான்தான் என்னோட பொறுப்பை அடுத்தவர்கள் தலையில் கட்ட வேண்டாம் என்று உன்னை இங்கே அழைத்து வந்துவிட்டேன்.’

மனதிற்குள்ளேயே அவனிடம் பேசினாள்.

‘அவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? அவரது கோபம் மட்டும்தான் அவனுக்குப் புரியும். ‘

‘அவன் குழந்தை. அவர் என்ன பேசினார் என்று அவனுக்குப் புரியவா போகிறது?’

அதைக் கூட புரிந்து கொள்ளாமல் சகுந்தலா பேசியதை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.

‘அந்தளவிற்கா சாதி, மத, அந்தஸ்து பேதம் அவர் கண்ணை மறைத்திருக்கிறது.’

‘இல்லை என் மீதான கோபமா?’

சென்னையில் ராஜலட்சுமி அம்மா அவனைக் கொண்டாடுவார்.

அருண் பிரசாத், நவீன் பிரசாத்தின் செல்லம் அவன்.

அவர்கள் மட்டுமல்ல, பெற்றோரை இழந்தவன் என்று ராம் பிரசாத் எப்போதுமே அவனை கனிவுடன் நடத்துவார்.

இங்கே தேவேந்திரன் அதே போல நடந்து கொண்டதால் மதன்ராஜ் இங்கே வித்தியாசமாக நினைக்கவில்லை போலும்.

என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் அவள் இங்கே வந்திருந்தாள்.

கதவைத் தட்டும் ஒலி கூட காதில் விழவில்லை.

“அபர்ணாம்மா.” என்றவாறே கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார் சண்முகம்.

“அபர்ணாம்மா.” என்று திரும்பவும் அவர் அழைக்கவும்தான் சுயநினைவுக்கு வந்தாள் அபர்ணா.

“சொல்லுங்கண்ணா.”

“அம்மா. தம்பியும் நீங்களும் சாப்பிடாமல் வந்திட்டீங்களேம்மா. அதான் சாப்பாடு எடுத்து வந்தேன்.”

“இனியும் இந்த சாப்பாட்டை சாப்பிடனுமாண்ணா.” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

“அம்மா. நாம பெரியவங்க. கோபம், ரோசம்னு பட்டினி கிடக்கலாம். தம்பி சின்னப்புள்ள. பசி தாங்காதும்மா.”

அவளுக்கும் புரிந்ததுதான்.

இங்கே வரும் போது நேரே வீட்டிற்கு வந்துவிட்டதால் அவனுக்குத் தின்பண்டங்கள் வாங்கக் கூட முடியவில்லை.

நாளை போய் வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தாள்.

இப்போது பிஸ்கட், சாக்லெட் ஏதாவது இருந்தால் கூட சாப்பிடக் கொடுக்கலாம்.

இப்போது தொண்டைக்குழியில் சாப்பாடு இறங்கும் என்று தோன்றவில்லை.

மதன்ராஜைப் பார்க்க அவன் தேம்பியவாறே தூங்கியிருந்தான்.

“ப்ளீஸ்ண்ணா. எனக்கு சாப்பாடு வேண்டாம். மதுவும் தூங்கிட்டான். நீங்க எடுத்துட்டுப் போயிடுங்க.”

“புள்ள எழுந்த பிறகு கொடுக்கலாம்மா.”

“இல்லண்ணா. அதன் பிறகு அவன் சாப்பிட மாட்டான்.”

அவளது மறுப்பில் உறுதி தெரியவே, வேறு வழியில்லாமல் சண்முகம் உணவுப்பாத்திரத்துடன் திரும்பிவிட்டார்.

அவர் முகம் வேதனையில் வாடியிருந்தது.

எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இங்கே வந்திருந்தாள்.

தனக்கு ஒரு அவமானம் என்றால் அவள் பொறுத்துக்கொள்வாள்.

ஆனால் மதன்ராஜ் பாதிக்கப்பட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

‘இனியும் இங்கே இருக்க வேண்டுமா? கிருஷ்ணாவுக்கு அழைக்கலாமா?’

‘வேண்டாம். அவனிடம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். அவன்தான் இங்கே வர வேண்டாம் என்று அவனால் முடிந்த அளவிற்குத் தடுத்துப் பார்த்தானே? நான்தானே பிடிவாதமாய் இங்கே வந்தேன்.’

‘இப்போது என்ன செய்யலாம். உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும்.’ அது மட்டும்தான் அவள் மனதில் தோன்றியது. உடனே தங்கள் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அப்போது அலைபேசியில் அழைப்பு வந்தது. அருண் பிரசாத். அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ சார்.”

“இரு வீடியோ காலில் வர்றேன்.” என்று அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் அழைத்தான். அவள் அழைப்பை ஏற்ற உடன் அவன் திரையில் தெரிந்தான்.

“சார்.”

“அப்பு. எப்படியிருக்கே? என்னாச்சு உனக்கு?”

அவள் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

குரலில் சிறிது வித்தியாசம் தெரிந்த உடனே அவளைக் காண்பதற்காக மீண்டும் வாட்சப் வீடியோ கால் செய்திருக்கிறான்.

“நல்லாருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லாரும் எப்படியிருக்காங்க?”

அவன் பதில் கூறாமல் அவளையேப் பார்த்தான்.

“என்னாச்சு அப்பு? நல்லாருக்கியா?” மீண்டும் அழுத்தமான குரலில் கேட்டான்.

அவள் கண்கள் கலங்கிவிட்டன.

அப்போது கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

சண்முகம் மீண்டும் மனம் கேட்காமல் வந்துவிட்டார் போலும் என்று நினைத்தவள் கதவைத் திறந்தாள்.

அங்கே நின்றிருந்த சித்தரஞ்சனை அவள் எதிர்பார்க்கவில்லை.

“சொல்லு அப்பு.” என்றான் மறுமுனையில் இருந்த அருண் பிரசாத்.

“நல்லாருக்கேன் சார்.”

“அப்புறம் ஏன் அழறே? உனக்கு ஏதாவது பிரச்சினையா? உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்கிறதை மறந்துட்டியா?”

“ஒன்றும் பிரச்சினையில்லை சார்.”

“அப்புறம்…”

“சார். கவலையோ, பிரச்சினையோ இருந்தால்தான் கண்ணீர் வருமா?”

“மத்தவங்களுக்கு எப்படியோ உனக்கு கண்ணீர் வருவதற்கெல்லாம் என்னால் காரணம் சொல்ல முடியாதும்மா.” என்று பாவமாய் கூறினான்.

அவள் சிரித்துவிட்டாள்.

“ம். குட். இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. அதிகமா உணர்ச்சி வசப்படாதே. எது வந்தாலும் பார்த்துக்கலாம். உனக்கு நாங்க இருக்கோம்.”

“சரி சார்.”

“சாப்பிட்டியா?”

“ம்.” என்றாள்.

“மது?”

“தூங்கிட்டான் சார்.”

“சரி. நான் கேட்டதா சொல்லு. எதற்கும் அலட்டிக்காமல் தூங்கு. நாளைக்கு நினைச்சுப் பார்க்கும் போது நாம இதற்கா இத்தனை வருத்தப்பட்டோம் என்று தோன்றும். சரியா?”

“சரி. சார்.”

“ம். நீயும் தூங்கு. குட் நைட்.”

“குட் நைட் சார்.”

அவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாவிட்டாலும், ஆறுதலான வார்த்தைகளுடன் அழைப்பைத் துண்டித்தான் அருண் பிரசாத்.

அவள் இன்னும் கண்ணீருடன் இருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தரஞ்சன்.

அவள் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததால் அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை.

அவனும் பேச முயலவில்லை.

இப்போது அவனை ஏறிட்டாள் அவள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” அவன் குரலும் உணர்ச்சியற்று இருந்தது.

அவனுடைய பார்வை உள்ளே சென்றது.

அங்கே மதன்ராஜ் உறக்கத்தில் இருந்தான்.

அருகில் அவர்களுடைய பொருட்கள் எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்ததைக் கவனித்தான்.

மீண்டும் அவளது அலைபேசி அழைத்தது.

நவீன் பிரசாத் தான் அழைத்தான்.

அவள் அழைப்பை ஏற்காமல் துண்டித்தாள்.

மீண்டும் அழைப்பு வர, “நீ பேசு.” என்றவன் ஜன்னல் அருகில் சென்று கதவைத் திறந்தான்.

குளிர் நிறைந்த காற்று சுதந்திரமாய் உள்ளே நுழைந்து அவன் முகத்தில் மோதியது.

வெளிப்பக்கம் தோட்டம் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதால் கொசுத்தொல்லை இல்லை.

“அப்பு. எப்படி இருக்கே?”

ஆரவாரமாய் கத்தினான் நவீன் பிரசாத்.

“நல்லாருக்கேன். ஏன் இப்படி கத்தறே?”

“நீ எதுக்கு இப்படி அடக்க ஒடுக்கமா பேசறே?”

“சரி என்ன விசயம் சொல்லு?”

“ஏதோ உன் கண்ணீரில் நீ இருக்கிற ஊரே மிதக்குதாமே. அதான் எப்படியிருக்குன்னு பார்க்க கூப்பிட்டேன்.”

“ஆமா. இங்க போட் சர்வீஸ் ஆரம்பிக்கலாமான்னு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டிருக்கு.”

“ஒன்னும் பிரச்சினையில்லைல்ல. நீ நல்லாருக்கியா?”

“ஒன்னுமில்லை அப்பு. அருண் சார் அக்கறையா பேசினாரா. அதான்.”

“அதுதானே பார்த்தேன். அவனுக்கு எப்ப பாரு உன்னை அழ வைக்கிறதுதான் வேலை. மது நல்லாருக்கானா?”

“நல்லாருக்கான்.”

“ஓ.கே. பை. அப்புறம் பேசறேன். குட் நைட்.”

“குட் நைட்.”

அவள் அலைபேசியை வைத்த பிறகும் சிறிது நேரம் சித்தரஞ்சன் எதுவும் பேசாமல் நின்றான்.

அவளும் எதுவும் கேட்க முயலவில்லை.

“சாரி.” ஜன்னல் பக்கமிருந்து திரும்பாமலே கூறினான். அதுவும் அவனது குரல் வெகு தயக்கத்துடன் இருந்தது.

அவள் எதுவுமே பேசவில்லை. அவளிடம் இருந்து பதில் வராததால் திரும்பிப் பார்த்தான்.

“அம்மா அப்படி நடந்துக்கிட்டது தவறு. அப்படி நடந்திருக்கக் கூடாது. இனி அப்படி நடக்காமல் நான் பார்த்துக்கிறேன்.”

இப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.

“உன்னை அப்பாதான் இங்கே வரவழைச்சார். இப்ப நீ வருத்தத்தோட போனா அவர் ரொம்ப சங்கடப்படுவார். அம்மா மேலும் கோபம் வரும்.”

‘ஓ. அப்போது உன் அம்மா மீது உன் அப்பா கோபப்படுவார் என்றுதான் என்னை சமாதானப்படுத்த வந்திருக்கிறாயா?’

மனதிற்குள்ளேயே கேட்டவள் இப்போதும் வாயைத் திறக்கவில்லை.

அவளருகில் நெருங்கி வந்தான். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“நீ போகக் கூடாது.”

“நான் போறதை நினைத்து நீங்க சந்தோசம்தானே படனும். அதுதானே உங்க ஆசையும்.”

“ஆமா. ஆனால் இப்படி உன்னை பட்டினி போட்டு வருத்தத்தோட அனுப்பற எண்ணம் எனக்கு இல்லை.”

மதன்ராஜின் அருகில் வந்தவன் அவன் தலையைக் கோதினான்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் அவளருகில் வந்து அவள் கைகளைப் பற்றித் தன் கரங்களுக்குள் பொதித்துக்கொண்டான்.

“ப்ளீஸ். எனக்காக நீ இங்கேயிருக்கனும். அம்மா இனி அப்படி நடக்காமல் நான் பார்த்துக்கிறேன்.”

கரகரத்த குரலில் பேசியவன் அவள் முகம் பார்க்காமல் வெளியேறிவிட்டான்.

அவனது இந்த செயலில் அவள் திகைத்தாள்.

இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

அவள் இப்போது கிளம்பினாலும் எங்கே செல்வாள்?

கிருஷ்ணாவுக்குத் தெரிந்தால் உடனே மூட்டை கட்டிக்கொண்டு ஊர் போய் சேர் என்று அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.

கட்டிலில் அமர்ந்து யோசித்தவள், ஏனோ அவன் கோரிக்கையை மறுக்க முடியாமல் அப்படியே மதன்ராஜின் அருகில் படுத்துக்கொண்டாள்.


காலையில் அவள் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, மதன்ராஜ் விழித்திருந்தான்.

“மது. போய் பிரஷ் பண்ணிட்டு வா.”

அவள் சொன்ன வேலையை அவன் முடித்துவிட்டு வர, இருவரும் வெளியில் கிளம்பினர்.

இருள் பிரிய ஆரம்பித்திருந்தது. இருவருமே காலையில் சீக்கிரம் எழுந்து பழகியவர்கள் ஆதலால் கிளம்பிவிட்டனர்.

“அபர்ணாம்மா. புது இடங்கிறதால் தூக்கம் வரலையா?”

சண்முகம் வாஞ்சையுடன் கேட்டார்.

“இல்லண்ணா. இதுக்கு மேல் தூங்க முடியாது. எப்போதும் சீக்கிரம் எழுந்து வேலை செஞ்சு பழகிருச்சு. மதுவும் என் கூடவே எழுந்துடுவான்.”

“சரிம்மா. பால் காய்ச்சிட்டேன். இப்ப காபி போட்டுத்தர்றேன்.”

“அண்ணா. நேத்து ரஞ்சன் சார்கிட்ட நீங்க ஏதாவது சொன்னீங்களா?”

நடந்தது அவனுக்குத் தெரிய வேண்டுமென்றால் அந்த சம்பவம் நடந்த போது இருந்தவர்கள் கூறினால்தான் உண்டு.

தான் கூறவில்லை. சகுந்தலாவும் கூறியிருக்க வாய்ப்பில்லை.

“ஆமாம்மா. எப்போதும் முதலாளிங்க என்ன செஞ்சாலும் கண்டுக்காம போறவன்தான். நேத்து ராத்திரியும் நானா ரஞ்சன் தம்பிக்கிட்ட எதுவும் சொல்லலை. கொட்டியிருந்த சாப்பாட்டை துடைத்து சுத்தம் செஞ்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் ரஞ்சன் தம்பி வீட்டுக்கு வந்துச்சு. என் முகத்தைப் பார்த்தே ஏதோ நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு. நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களான்னு கேட்ட உடனே என் மனசு பொறுக்கலைம்மா. அதான் சொல்லிட்டேன்.”

அவள் எதுவும் சொல்லவில்லை.

“அபர்ணாம்மா. இந்தாங்கம்மா காபி. கூட கொஞ்சம் பிஸ்கட் இருக்கு. இங்கே உட்காருங்க.” என்று புதிதாக அங்கே போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசையைக் காட்டினார்.

நான்கு பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவில் சிறியதாக இருந்தது. நேற்று பார்த்தபோது இல்லை.

“ரஞ்சன் தம்பிதாம்மா ராத்திரி கொண்டு வந்து போட்டது.” என்றார்.

இருவரும் காபி குடித்து முடித்ததும் கிளம்பினர்.

“சரிண்ணா. நாங்க கொஞ்சம் நடந்துட்டு வர்றோம்.”

வீட்டின் பின்பக்கம் வந்தனர்.

வீட்டைச் சுற்றிலும் சில மரங்கள், பூச்செடிகள் இருந்தன.

மற்றபடி சுத்தமாக இருந்தது. வீட்டின் பின்புறம் தோப்பு ஆரம்பித்தது.

தோப்பு பக்கம் போகாமல் வீட்டைச் சுற்றி வரலாம் என முடிவெடுத்தாள் அபர்ணா.

காலையில் சூரிய ஒளியில் மதன்ராஜை ஓடி விளையாட விட்டுவிட்டு, அவள் நடைப்பயிற்சி செய்வதுதான் அவள் வழக்கம்.

அங்கே ஊரில் இருந்தபோது அவர்களுடன் ராஜலட்சுமி இணைந்து கொள்வார்.

இருவரும் பேசிக்கொண்டு நடக்க மதன்ராஜ் ஓடி விளையாடுவான்.

“மது. நீ விளையாடு.” என்றவள் நடைப்பயிற்சியை ஆரம்பித்தாள்.

“என்னம்மா அபர்ணா சீக்கிரம் எழுந்தாச்சா? சரியா தூங்கலையா?” என்றார் அங்கே வந்த தேவேந்திரன்.

“குட் மார்னிங் சார். புது இடம்கிறதால தூங்க கொஞ்சம் நேரமாச்சு சார். அதான் இன்னிக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.”

“அப்படியாம்மா. காபி குடிச்சாச்சா?”

“சண்முகம் அண்ணன் குடிச்ச பிறகுதான் எங்களை வெளியில் விட்டார்.” என்றாள் சிரித்துக்கொண்டே.

“பின்னே அவன் தன்னோட நளபாகத்தை சோதிக்க ஆள் கிடைச்சா விட்டுடுவானா என்ன?” என்றார் கிண்டலாய்.

“ரூமில் எல்லாம் வசதியா இருக்காம்மா.”

“அதுவே அதிகம் சார்.”

“அப்படி சொல்லாதம்மா. என்னை நம்பித்தான் சந்திரன் உன்னை இங்கே அனுப்பியிருக்கான். உனக்கு எந்த குறையும் வர நான் விடக்கூடாது. அதோட என் பிள்ளையை நீ நல்லா கவனிச்சிக்கிற. உனக்குத் தேவையானதை நாங்களும் பார்க்கனுமேம்மா.”

“ஒன்னும் பிரச்சினையில்லை சார். எல்லாம் வசதியாத்தான் இருக்கு.”

“சரிம்மா. நான் கொஞ்சம் தோப்பைப் பார்த்துட்டு வர்றேன். நீயும் வர்றதானா வா.”

“இப்ப வேண்டாம் சார். இன்னும் மனோவைப் போய் பார்க்கலை. இன்னொரு நாள் பார்க்கலாம்.”

“சரிம்மா.” என்றவர் சென்றுவிட்டார்.

“மது. நீ கொஞ்சம் விளையாடிக்கிட்டிரு. நான் வந்துடேறேன்.” என்றவாறே அவள் மனோரஞ்சனைப் பார்க்க சென்றபோது அவன் இன்னும் விழித்திருக்கவில்லை.

மீண்டும் வாயிலுக்கு வரும்போது சித்தரஞ்சன் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தான். வெளியில் சென்றுவிட்டுத் திரும்பினான் போலும்.

“தேங்க்ஸ்.” என்றவன் அவளை நிமிர்ந்தும் பாராமல் உள்ளே சென்றுவிட்டான்.

இவள் மீண்டும் மதன்ராஜ் இருக்குமிடம் சென்று தன் நடைப்பயிற்சியைத் தொடர்ந்தாள்.

ஏனோ இந்த சித்தரஞ்சன் புதிதாகத் தெரிந்தான்.

இந்த வீட்டிற்குள் வரும் வரைக்கும் இருந்தவன் வேறு. இப்போது வேறாகத் தெரிகிறான்.

ஒருவேளை நேற்று இரவு அவன் தாயார் நடந்துகொண்டதை நினைத்து வருந்தியதால் இப்படி தன்மையாக நடந்து கொள்கிறானா?

இல்லை அவன் குணமே இதுதானா?

அப்போது மருத்துவமனையில் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் காய்ந்தது எதற்காக?

அவளுக்குப் புரியவில்லை.

சித்தரஞ்சனும் அப்போது அவளைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தான்.

நினைத்தது மட்டுமல்ல, தன் அறையின் ஜன்னல் வாயிலாக அவர்கள் இருவரையும்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏதோ யோசனையுடன் அபர்ணா நடந்து கொண்டிருக்க, மதன்ராஜ் ஓடி விளையாடிக்கொண்டிருந்தான்.

இது எப்போதும் நடக்கும் இயல்பான செயல் போலும்.

‘இவள் எப்படிப்பட்டவள்? பாம்பா இல்லை பழுதா?’

நேற்று இரவு நடந்ததை சண்முகம் கூறியதும், தன் அன்னையைக் காணத்தான் முதலில் சென்றான்.

ஆனால் அதற்குள் அவர் படுத்துவிட்டார்.

அவர் வயது, உடல்நிலையை மனதில் கொண்டு அவரை அப்போது எழுப்பாமல் விட்டான்.

சாப்பிட வந்த சிறுவன் சாப்பிடாமல் சென்றுவிட்டான் என்றதும் அவன் மனம் பதைத்தது.

தான் கொண்டு சென்ற சாப்பாட்டையும் அபர்ணா மறுத்துவிட்டாள் என்றும், பசியோடு மதன்ராஜ் உறங்கிவிட்டான் என்றும் சண்முகம் கூற அவள் இருந்த அறைக்கு விரைந்தான்.

கதவைத் திறந்த அவளது கண்களில் கண்ணீரைக் கண்டதும், அதுவும் அவளுக்கு என்ன பிரச்சினை என்று அவளது அலைபேசியில் மறுமுனையில் ஒரு ஆண் பேசியது, எல்லாம் கண்டதும் அவனுக்குள் உணர்வுக்குவியல்.

பேசியது யார் என்று அவனுக்குத் தெரியாது.

ஆனாலும் அவனுக்கு அபர்ணாவின் மீது அதிக அக்கறை இருக்கிறது என்று புரிந்தது.

பிறகு பேசியவனும் விளையாட்டுத்தனமாக பேசுவது போல் தெரிந்தாலும், அவனும் அவள் மீது அக்கறை கொண்டுள்ளவன் என்று புரிந்தது.

அதுவும் கிளம்புவதற்குத் தயாராக அவள் தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்திருந்ததும், போய் விடுவாளோ? என்ற எண்ணம் வந்ததுமே அவள் செல்லக்கூடாது என்று மனம் முரண்டியது.

அது ஏன் என்று புரியவில்லை.

அவளிடம் என்ன பேசினான் என்று இப்போது நினைத்தால் எதுவும் நினைவில் இல்லை. அப்போது வேகத்தில் ஏதோ பேசிவிட்டான்.

இனி ஒரு முறை இந்த மாதிரி தவறு நிகழ விடக்கூடாது என்று அப்போதே தங்கள் கடையில் இருந்து அந்த சாப்பாட்டு மேசையைக் கொண்டு வந்துவிட்டான்.

காலையில் எழுந்ததும் என்ன சொல்லப் போகிறாளோ? என்ற சந்தேகம் அவன் மனதில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது.

இப்போது அவளை இயல்பாகக் காணவும் மனதில் ஓர் இனம் புரியாத நிம்மதி. ஏன் என்று தெரியவில்லை. அவனுக்கு இது பிடித்திருந்தது.


நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மனோரஞ்சன் விழித்திருந்தான்.

“குட்மார்னிங் அண்ணி.”

“குட்மார்னிங் மனோ. முன்னமே வந்து பார்த்தேன். தூங்கிக்கிட்டிருந்தே.”

“ஆமா. எழுந்து என்ன செய்யப்போறேன்?” அவன் குரலில் விரக்தி இருந்தது.

“இப்ப எதற்காக இந்த சலிப்பு. நீயா தேடிக்கிட்டதுதானே?” கடிந்தாள்.

அவன் எதுவும் பேசவில்லை.

“இந்த அறையிலேயே அடங்கிக் கிடக்கிறதால்தான் உனக்கு இப்படி இருக்கு. இனி இப்படி இருக்கக் கூடாது.”

“நான் இரண்டு வருசமா இப்படித்தான் அண்ணி அடைஞ்சு கிடக்கிறேன்.”

“நடந்தது நடந்து போச்சு. இனியும் அதையே நினைச்சுக்கிட்டு இருந்தால் எதுவும் மாறாது. இனி நாங்க காலையில் வாக்கிங் போகும்போது நீயும் வரனும்.”

“நான் எப்படி வாக்கிங் போக முடியும்.”

“முடியும். சீக்கிரம் எழுந்து நடக்கனும்னு மனதில் நினைச்சுக்கோ. அதுவரைக்கும் வெளியில் வந்து காத்தாட இரு. நீ பார்க்கலைன்னு சூரிய பகவான் ரொம்ப வருத்தத்தில் இருக்காராம். அவருக்கு ஒரு ஹாய் சொல்லு.”

“ம். அப்புறம்.”

“ரொம்ப மூடியா இருக்காதே. மனதில் என்ன இருக்கோ அதை பளிச்சுன்னு பேசு. அடுத்தவங்களுக்காக எதையும் செய்யனும்னு நினைக்காதே. உனக்கே மனதில் அது சரின்னு பட்டால் அதை செய்.”

“ப்ளீஸ் அண்ணி. இன்னிக்கு இத்தோட போதும். நீங்க இங்கேதானே இருக்கப் போறீங்க. மீதியை அப்புறம் பார்த்துக்கலாமே.”

“சரி. எழுந்துக்கற ஐடியா இருக்கா? இல்லையா?”

“நான் நேத்தைக்கு அண்ணாக்கிட்ட மேல் நர்ஸ் கேட்டிருந்தேன் இல்லையா? அவர் ஏற்பாடு பண்ணிட்டாராம். அவர் வந்துக்கிட்டிருக்கார்.”

“அப்ப நான் இங்கே அதிகப்படிதானே மனோ. நான் கிளம்பிடவா?”

“ஒரு நோயாளி குணமாகனும்னா மனதிற்கும் வைத்தியம் பார்க்க வேண்டும் அண்ணி.”

“அப்ப உங்க அண்ணாகிட்ட சொல்லி ஒரு மனோதத்துவ நிபுணரை வரச்சொல்ல வேண்டியதுதானே?”

“எனக்கு வேற நிபுணர் தேவையில்லை. அதுதான் நீங்க இருக்கீங்களே.”

 “நல்லா தேறிட்டே மனோ. நீ ரொம்ப மூடியா இருப்பேன்னு கேள்விப்பட்டேன்.”

“இப்பத்தானே மனதில் பட்டதை பளிச்சுன்னு பேசனும்ன்னு சொன்னீங்க. அதான்.”

அப்போது அவன் அலைபேசி இசைக்க, எடுத்துப் பேசியவன் “லலிதா. உனக்கு நான் இருக்கேன்.” என்று பதறினான்.

 காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!