Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 13

அத்தியாயம் – 13

அன்று நாட்டுக்கோழி குழம்பு, வறுவல் செய்த சண்முகம், அபர்ணாவிற்காக வத்தக்குழம்பு செய்தார்.

அபர்ணாவும், சண்முகத்திடம் அப்பளம் வாங்கி நெருப்பில் சுட்டுக்கொண்டாள்.

அத்துடன் தோட்டத்தில் இருந்த மாங்காயைப் பறித்துக்கொண்டு வந்து அரிந்து உப்பு, சீரகம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டுக்குலுக்கி வைத்தாள்.



Advertisement

“அபர்ணாம்மா. உங்க சாப்பாடு எல்லாம் ரொம்ப எளிமையா இருக்கு. நீங்க அசைவத்தை ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னா பிறகு விடமாட்டீங்க.” என்றார் சண்முகம்.

அவள் வந்த இத்தனை நாட்களில் அவர் கவனித்ததை வைத்துத்தான் கேட்டார்.

அவள் சிரித்துக்கொண்டாள்.

Advertisement

அவள் மனக்கண்ணில் தன்னுடைய இளவயதில் தான் சாப்பிட்ட சாப்பாடு நினைவுக்கு வந்தது. அதிகம் அவள் உண்டது எல்லாம் அசைவச் சமையல்தான்.

Advertisement

ஆனால் அதன் பின்பு உள்ள காரணத்தை அவள் அறிய வந்த பிறகு அவள் அசைவச் சாப்பாட்டை வெறுத்துவிட்டாள்.

தேவேந்திரனோடு மதன்ராஜ் சாப்பிட்டுச் சென்றுவிட்டான்.

“வாங்கண்ணா. நாம சாப்பிடலாம்.”

Advertisement

“இல்லம்மா. இன்னிக்கு சித்தரஞ்சன் தம்பியை இன்னும் காணோம். அவர் வந்த பிறகு நான் சாப்பிடறேன்மா.” என்றுவிட்டார் சண்முகம்.

“சரிண்ணா. நானும் அப்ப லேட்டாவே சாப்பிடறேன்.”

“வேண்டாம்மா. உங்களுக்கு சாப்பாடு லேட்டாச்சுன்னா தம்பி என்னைத் திட்டும். அதனால் நீங்க சாப்பிடுங்க.” என்றார்.

அவளும் அதை உணர்ந்திருந்தாள்.

அன்றொரு நாள் சகுந்தலாவினால் அவர்கள் உணவு உண்ண முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு அவன் அவர்கள் உணவு விசயத்தில் கவனமாக இருந்தான்.

அவள் சாப்பிட ஆரம்பித்த நேரத்தில் சித்தரஞ்சன் வந்துவிட்டான்.

“கை கால் கழுவிக்கிட்டு வாங்க தம்பி சாப்பிடலாம். நான் டைனிங் டேபிளில் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்.”

“இருங்க அங்கிள். அங்கே தூக்கிட்டுப் போக வேண்டாம். நானும் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன். எனக்கு ரொம்ப பசிக்குது.”

கை கால் கழுவிக்கொண்டு வந்து அபர்ணாவிற்கு எதிரே அமர்ந்தான்.

அவள் உடனே எழுந்தாள்.

“அட உட்காருங்க நர்சம்மா. நான் உங்க சாப்பாட்டை ஒன்னும் பிடுங்கிட மாட்டேன்.” என்றான் கிண்டலாய்.

அவள் தயக்கத்துடன் அமர்ந்தாள்.

“என்ன அங்கிள்? இன்னிக்கு நாட்டுக்கோழி சமைக்க சொன்னதா அம்மா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இது என்னவோ வேற மாதிரி தெரியுதே.”

“அபர்ணாம்மா சைவம் தம்பி. அதான் அவங்களுக்கு வத்தக்குழம்பு வச்சேன்.”

“சைவமா?” சந்தேகத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஆமா தம்பி.”

“சரி அங்கிள். அதுக்கு அப்பளத்தை பொரித்துக் கொடுத்திருக்கலாமே. நம்ம வீட்டில் எண்ணெய்க்குப் பஞ்சமா என்ன?”

“அபர்ணாம்மா சுட்டு சாப்பிட்டால் நல்லாருக்கும்னு நெருப்பில் சுட்டுக்கிட்டாங்க தம்பி.”

“ம். சரி எனக்கும் வத்தக்குழம்பே தாங்க. அசைவம் அதிகமா சாப்பிட்டு அலுத்துப் போச்சு.”

“தம்பி…” இழுத்தார்.

“பரவாயில்லை அங்கிள். எனக்கும் சுட்ட அப்பளம் இருந்தால் தாங்க.” என்றவன் வத்தக்குழம்பே வாங்கிக்கொண்டான்.

“அதிகமா சுடலை தம்பி.”

“அதுக்கும் பஞ்சமா? பரவாயில்லை நானும் அப்பளத்தை இப்படி சாப்பிட்டுப் பார்க்கிறேனே.” என்றவன் அவள் தட்டில் இருந்த அப்பளத்தை எடுத்துக்கொண்டான்.

அவனை திகைத்து நோக்கினாள்.

“ம். டேஸ்ட் நல்லாத்தான் இருக்கு. அங்கிள் இவங்களுக்கு அப்பளத்தைப் பொரித்து எடுத்துட்டு வாங்க. இல்லன்னா எனக்கு சாப்பாடு செரிக்காது போலருக்கு.” என்றவன் மாங்காயையும் எடுத்துக்கொண்டான்.

அவன் சாப்பிட்டுச் சென்ற பிறகும் அவன் செயல் புரியாது நின்றாள் அவள்.

“தம்பி அப்படித்தாம்மா. எந்த பாகுபாடும் பார்க்காது.” என்று எப்போதும் போல் அவனைப் பற்றிப் பெருமை பேசினார் அவர்.

அவன் மற்றவர்களிடம் அப்படி பேதம் பார்க்காமல் இருக்கலாம்.

ஆனால் தன்னைக் கண்டதிலிருந்து காய்ந்து கொண்டிருந்தவன் ஏன் இப்போது இப்படி நடந்து கொள்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.


அன்று மாலை மனோரஞ்சனை சக்கர நாற்காலியில் வைத்து வெளியில் அழைத்து வந்தாள் அபர்ணா.

“சும்மா அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காதே மனோ. இப்படி வெளியில் வந்து பாரு. அப்பத்தான் சீக்கிரம் எழுந்து நடமாடனும்னு உனக்கு ஆசை வரும்.”

“வராது.”

“ஏன் வராது? ஆசை வரனும். அப்பத்தான் நீ சீக்கிரம் குணமாவே.”

“நான் குணமாகிட்டால் நீங்க கிளம்பிடுவீங்க.” என்றான்.

“அதுக்காக நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க முடியும்?”

அவன் அமைதியானான்.

“சும்மா சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காமல் ஒழுங்கா எழுந்து நடக்க முயற்சி பண்ணு. உன்னோட அப்பாவும், அண்ணாவும் இந்தக் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிறாங்க. இதுக்கு முன்னாடிதான் நீ எதையும் கண்டுக்கலை. இனியாவது பொறுப்பா இருக்கனும் மனோ.”

அவன் எதுவும் பேசவில்லை.

“சரி. அண்ணி. இப்ப நான் உங்களோட வெளியில் வந்துட்டா போதும்தானே?”

“ஆமாம்.”

“என்னோட மதுவையும் வரச்சொல்லுங்க.”

அவள் மதன்ராஜ் எங்கே என்று தேடினாள்.

“பெரியய்யா தான் மது தம்பியை அழைச்சுட்டுப் போனாங்கம்மா.” என்றார் சண்முகம்.

அவர்கள் இருவரும் மாடியில் இருந்த அறையில் இருந்தனர்.

அது சித்தரஞ்சன் மற்றும் மனோரஞ்சன் சிறுவர்களாக இருந்த போது பயன்படுத்திய அறை.

அவள் அறை வாசலில் நின்றாள்.

உள்ளே மதன்ராஜ் மரக்குதிரை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான்.

“மது. இங்கே எல்லாம் வரக்கூடாது. வெளியில் வா.”

அவள் கூப்பிட்ட உடனே மதன்ராஜ் வெளியில் வந்துவிட்டான்.
“ஏன்மா அவனைக் கூப்பிடறே? சின்னப்பிள்ளைதானே?”

அவர் பெருந்தன்மையாகக் கூறிவிடலாம்.

ஆனால் இங்கெல்லாம் அவர்கள் வந்தது தெரிந்தால் சகுந்தலா என்ன சொல்வாரோ? என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

“பரவாயில்லை சார். இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கனும். அதுதான் அவனுக்கு நல்லது சார்.”

“நான்தாம்மா கூப்பிட்டுக்கிட்டு வந்தேன். இதெல்லாம் என் பசங்க சின்னப் பிள்ளைகளா இருக்கும்போது விளையாடியது. இப்ப இவனாவது விளையாடட்டுமே. இந்த மாதிரி சின்னப்பசங்க விளையாட எனக்குக் கொடுத்து வச்சிருக்கோ இல்லையோ? ஆனால் மதுவைப் பார்த்த உடனே கடவுளே அனுப்பி வச்ச மாதிரி தான் நினைக்கிறேன். இவன் வந்த நேரமாவது என் வீட்டில் பிள்ளைங்க விளையாட காலம் பிறக்கட்டுமே.”

ஏக்கம் மிகுந்திருந்தது அவர் குரலில்.

“ஏன் சார் இப்படி சொல்றீங்க? உங்களுக்கு இரண்டு பசங்க இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை?”

“என்ன கவலைம்மா எனக்கு? ஊரில் மத்தவங்க பேசற மாதிரியே பேசறியே? கல்யாணமே வேண்டாம்னு மறுக்கிற மூத்த மகன். திருமணம் ஆகியும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிற இளைய மகன். இப்ப யார் மூலமா இந்த குடும்பம் விருத்தியாகும்?”

“தயவு செய்து கவலைப்படாதீங்க சார். அவங்க இரண்டு பேருக்கும் என்ன வயசாச்சுன்னு இப்படி கவலைப்படறீங்க? நீங்க அவங்ககிட்ட உங்க ஆசையை சொல்லுங்க. உங்களுக்ககாகவாவது அவங்க யோசிப்பாங்க.”

“உன் பேச்சைக் கேட்கறது எனக்கு எவ்வளவோ ஆறுதலா இருக்கும்மா? இப்பவே அதெல்லாம் நடந்துட்ட மாதிரி மகிழ்ச்சியா இருக்கு. அதுவரைக்கும் இந்தக் குட்டிப்பையன் இங்கே ஓடியாடி விளையாடட்டுமே. நீ தடுக்காதேம்மா.” கெஞ்சலாகக் கூறினார்.

அவளால் மறுக்க முடியவில்லை. அவளுக்கு மட்டும் இதெல்லாம் செய்ய வேண்டாம் என்று தடுக்க ஆசையா என்ன?

ஆனால் சகுந்தலா எப்படி எடுத்துக்கொள்வாரோ? என்ற யோசனைதான்.

“சரி சார். இப்ப மனோவை நான் தோட்டத்திற்குக் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அங்கே மதுவையும் அழைச்சுட்டு வரச்சொல்லி மனோ கூப்பிடவும்தான் நான் இங்கே வந்தேன்.”

“அப்படியாம்மா. நானும் மதுவும் வர்றோம். நீ மனோவை அழைச்சுட்டுப் போம்மா.”

“சரி சார்.” என்றவள் கிளம்பிவிட்டாள்.

செல்லும் வழியில் அவளுக்கு சகுந்தலாவைப் பற்றிய யோசனை.

அன்றைக்கு சகுந்தலா அப்படி நடந்து கொண்ட பிறகு அவரை நேருக்கு நேர் பார்க்கப் பிடிக்காமல் ஒதுங்கித்தான் போனாள் அபர்ணா.

மதன்ராஜைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சகுந்தலா அவர்களிடம் அப்படி பேசியதை அறிந்து கொண்ட சித்தரஞ்சன் இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரத்தில் தன் தாயிடம் அதைப் பற்றிப் பேசியது எதார்த்தமாக அவள் காதில் விழுந்தது.

கிட்டத்தட்ட அவனும் தன் தந்தையைப் போன்றேதான் பேசினான்.

“ஏம்மா இப்படி பண்ணீங்க? அவன் சின்னப் பிள்ளைம்மா. அவனுக்கு என்ன தெரியும்? ஏன் அவன் உங்களுக்கு சமமா உட்கார்ந்து சாப்பிடக்கூடாதா?”

“நீயும் உங்கப்பா மாதிரியே மாறிட்டியா ரஞ்சன். இப்ப அந்தச் சின்னப்பயலை விட்டு நோட்டம் பார்ப்பாள் அவள். பிறகு அவளே அதை செய்வாள்.”

“இப்படி சாதி, சனம்னு பார்த்துத்தானேம்மா மனோவோட வாழ்க்கையில் விளையாண்டீங்க?”

“அது என்னவோ ஒரு முறை தவறாப்போச்சு?”

“அப்ப இன்னொரு முறை அதே தவறை செய்யப் போறீங்க? அப்படித்தானே? இப்ப சொல்றேன் கேட்டுக்குங்கம்மா. அன்னிக்கு மனோவுக்கு நடந்தது விபத்து இல்லை. தற்கொலை முயற்சி. இனியொரு முறை அவன் விருப்பத்தை அறியாமல் அப்படி நடந்தீங்கன்னா அவன் நம்மளுக்கு இல்லை.”

“என்ன மிரட்டிப்பார்க்கிறே? உனக்கும் ஏதாச்சும் அப்படி ஒரு ஐடியா இருக்கா? ஏன் நீயும்தானே அந்தப் பொண்ணைத் தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா சரிவராதுன்னு சொன்னே? இப்ப  என்னை மட்டும் சொன்னால் எப்படி?”

“அந்தப் பொண்ணோட குணம் தெரிஞ்சு சொன்னேன்மா. ஆனால் மனோவுக்குக் கொஞ்சம் டயம் கொடுத்திருக்கலாம். அதை விட்டுட்டு நீங்களும், உங்க தம்பியும் அவசரப்பட்டு உங்க பிள்ளைங்களோட வாழ்க்கையில் விளையாடிட்டீங்க. அம்மா இப்ப சொல்றதுதான் கேட்டுக்குங்க. இந்த வீட்டில் ஒரு சின்னக் குழந்தையோட காலடி படறதுக்குக் கொடுத்து வச்சிருக்கோ இல்லையோ? எனக்குத் தெரியாது. அந்த சிறுவனாவது ஓடியாடி விளையாடட்டும். அது உங்க கையில்தான் இருக்கு.” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை.

அவன் எதற்குத் திருமணத்திற்கு மறுக்கிறான் என்று தெரியவில்லை.

ஆனால் ஒரு வாரிசு உருவாக வேண்டுமே என்ற கவலை தேவேந்திரனுக்கு.

அந்த வாரிசு தங்கள் சாதி சனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சகுந்தலாவுக்கு.


மனோரஞ்சனை அபர்ணா தோட்டத்திற்கு அழைத்து வந்தாள்.

பின்னேயே தேவேந்திரனுடன் மதன்ராஜ் பெரிய பந்து ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான்.

“மது. இங்கே வா. நாம இரண்டு பேரும் பந்து விளையாடலாம்.” என்றான் மனோரஞ்சன்.

மதன்ராஜ் திரும்பி அபர்ணாவைப் பார்த்தான். அவளும் சம்மதமென தலையசைக்கவே மதன்ராஜ் மனோரஞ்சன் பக்கம் சென்றான்.

தேவேந்திரன் மெச்சுதலுடன் அவளைப் பார்த்தார்.

“நல்ல பழக்க வழக்கம்மா பிள்ளைக்கு. ரொம்ப அமைதியான புள்ளை. இப்படி ஒரு புள்ளை இந்த வீட்டில் விளையாடக் கொடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே?” என்றார் பெருமூச்சுடன்.

“ஏன் சார் இப்படி கவலைப்படறீங்க?”

ஒரு நிமிசம் யோசித்தார்.

“உன்கிட்ட சொல்றதுக்கென்னம்மா? என் மனசில் ரொம்ப நாளா உறுத்திக்கிட்டேயிருந்த விசயம். அதுதான் எனக்குப் பயத்தைக் கொடுக்குது.”

அவள் அவர் சொல்லட்டும் என்று அமைதி காத்தார்.

“எனக்குப் பெண் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம்மா. அது என்னவோ என்னோட மனைவிக்குப் பிரியமில்லை. மனோவுக்குப் பிறகு ஒரு குழந்தை உண்டானது. அது பெண் குழந்தையாயிருக்கும்னு ஜாதகத்தில் சொன்ன உடனே என் மனைவி அந்தக் கருவை கலைச்சிட்டா. என்னால் அதைத் தாங்கிக்க முடியலை. என் பிள்ளைங்களுக்கு திருமண வாழ்க்கை சரியா அமையலேன்ன உடனே எனக்கு அந்தக் கருவில் உள்ள குழந்தையோட சாபம்தானோன்னு தோணுது.” என்றார் மனக்கலக்கத்துடன்.

அதை அபர்ணாவினால் ஜீரணிக்கவே முடியவில்லை.

பெண் குழந்தைகளைக் கொல்வது என்ற விசயம் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருவதுதான்.

அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சீர் செய்ய வசதி இல்லாதவர்கள்.

இப்போது சட்டென்று அவளுக்கு ராஜலெட்சுமி அம்மாவின் ஞாபகம் வந்தது.

“இரண்டு கட்டைத் தடியன்களைப் பெத்துவிட்டேன்.” என்று அடிக்கடி புலம்புவார்.

“எனக்குப் பெண் குழந்தைகள்னா அப்படி ஆசைடா அம்மு. ஆனால் அவர் நவீன் பிறந்த உடனே அதற்கு மேல் எனக்கு உடல்நிலை ஒத்துவராதுன்னு அவரே குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேசன் செய்துக்கிட்டாரு. நாம பெத்தாதான் மகளா? நமக்கு வர்ற மருமகளை மகளா நினைச்சுக்கோ. இல்லைன்னா ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு ஒரேடியா சொல்லிட்டாரு.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அடிக்கடி புலம்புவார்.

“என்னம்மா? நான் சொன்னதைக் கேட்டதும் வாயடைச்சுப் போயிட்டியா?”

“அதை எல்லாம் நினைச்சுக் கவலைப்படாதீங்க சார். இப்ப இருக்கிறதை மகிழ்ச்சியா அனுபவியுங்க. காலம் நமக்கு நல்லதைத் தரும்னு நம்புங்க.”

“அந்த நம்பிக்கை தான்மா என்னை நடமாட வச்சிருக்கு.”

தேவேந்திரன் தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்திருந்தார்.

அவள் அவர் முகத்தைப் பார்த்தவாறு கீழே அமர்ந்திருந்தாள்.

அருகில் சக்கர நாற்காலியில் மனோரஞ்சன் அமர்ந்திருக்க, மதன்ராஜ் அவனிடம் அந்த பந்தை தூக்கிப் போட்டு விளையாண்டான்.

அதைக் கவனித்த தேவேந்திரன் முகத்தில் ஒரு நிம்மதி.

“இப்படி இந்தப் பையனைப் பார்த்தே ரொம்ப நாளாயிடுச்சும்மா. ஜாதகத்தில் ஏதோ பிரச்சினைன்னு இவனோட அம்மாவோட கட்டாயத்தில் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்தே பிள்ளை முகத்தில் சிரிப்பே இல்லைம்மா. இப்பத்தான் கொஞ்சம் சிரிப்பு வருது.”

“இனி இப்படித்தான் சார் பார்ப்பீங்க.”

“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்மா.”

அப்போது அங்கே சித்தரஞ்சன் வந்தான்.

“என்னப்பா எல்லாரும் இங்கே உட்கார்ந்துட்டீங்க?”

“ஆமாப்பா. மனோவை கொஞ்சம் காத்தாட இருக்க சொன்னால் அவனுடன் நாங்களும் இருக்கனுமாம். அதான் இங்கே உட்கார்ந்துட்டோம்.”

சித்தரஞ்சன் வந்த பிறகு அவள் எழுந்துவிட்டாள்.

“ஏம்மா எழுந்துட்டே?”

“சண்முகம் அண்ணன் டீ போட்டாரான்னு பார்த்துட்டு வர்றேன் சார்.”

“இதோ வந்துட்டேம்மா.”

“ஏன் இங்கேயே கொண்டு வந்துட்டீங்கண்ணா?”

“எல்லாரும் இங்கேயே இருக்கவும் வந்துட்டேன்மா.” என்ற சண்முகத்தின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

விசுவாசமானவர். குடும்ப நலனில் அக்கறை கொண்டவர் என்பது இப்போது அவரைப் பார்க்கும்போதே தெரிந்தது.

“பெரியய்யா. இது உங்களுக்கு.”

“நான்தான் காபி டீ எல்லாம் குடிக்க மாட்டேனேப்பா.”

“இல்ல. இது சத்து மாவுக் கஞ்சி. உங்களுக்கு சத்துமாவுக் கஞ்சி கொடுக்கச் சொல்லி அபர்ணாம்மா சொன்னாங்க.”

“ஏன்மா?”

“இல்ல சார். நீங்க காபி டீ குடிக்கிறது இல்லை. அட்லீஸ்ட் இந்த கஞ்சியையாவது குடிங்க. காலையில் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயித்தில்தான் வாக்கிங் போறீங்கன்னு இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும். அதனால் காலையிலும், சாயங்காலமும் கண்டிப்பா நீங்க இந்தக் கஞ்சியைக் குடிங்க.”

“ஒரே இனிப்பா இருக்கும்மா.”

“நாளையில் இருந்து அரை இனிப்பா குடிக்கலாம். இல்லன்னா உப்பு போட்டுக் கூட குடிக்கலாம்.”

அவர் அந்தக் கஞ்சியைக் குடிக்க சண்முகம் முகம் மலர்ந்தார்.

முதலாளி வெறும் வயித்தோடு போகிறார் என்பது அவருக்கு கவலை அளித்துக்கொண்டிருந்தது.

ஆனால் ஒரு வேலைக்காரனாக அவரால் அதை நினைத்துக் கவலைப்படத்தான் முடிந்தது.

“வேறு ஏதாவது குடிக்கத் தரவா?” என்று ஓரிருமுறை கேட்டுப் பார்த்தார் சண்முகம். ஆனால் தேவேந்திரன் வேண்டாம் என்று மறுக்கவே அதற்கு மேல் அவரால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

“இப்ப உனக்குத் திருப்திதானே சண்முகம்.” என்றார் சிரிப்புடன்.

“ஆமாய்யா.” என்றார் சண்முகம்.

“உன் பாசத்துக்கு அளவே இல்லைப்பா.”

அவர்கள் குடித்து முடித்து தம்ளரை தர, அதைப் பெற்றுக்கொண்ட சண்முகம் கிளம்பினார்.

கூடவே அபர்ணாவும் கிளம்பிவிட்டாள்.

“ஏன்மா கிளம்பிட்டே?”

“எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு சார்.” என்றவள் விடைபெற்றாள்.

“லலிதா இப்ப எப்படி இருக்கிறாள்?”

“எந்த முன்னேற்றமும் இல்லப்பா.”

“குழந்தை எப்படியிருக்கு?”

“இப்ப பரவாயில்லைப்பா. அத்தைதான் பார்த்துக்கிறாங்க.”

“என்ன இருந்தாலும் தாய்ப்பால் கொடுத்து, தாயோட அரவணைப்பில் குழந்தை வளர்ற மாதிரி இருக்குமா? ஏதோ கெட்ட காலம். அந்தப் பொண்ணு இப்படி போய் ஒருத்தன்கிட்ட மாட்டிக்கனும்னு இருந்துருக்கு.”

அவர்களின் முகத்தில் வேதனை பிரதிபலித்தது.

சென்று கொண்டிருந்த அபர்ணாவிற்கு இவை எல்லாம் காதில் விழுந்தன.

லலிதா செய்த காரியத்திற்கு அவள் மீது கோபப்படாமல் இருந்தது அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

மனோரஞ்சன் அவளை மன்னித்ததும் மற்றவர்களும் லலிதா மீது கோபப்படவில்லை.

ஆனால் சகுந்தலா தான் அவர்களைத் திட்டினார்.

“அந்தக் கழுதை நம்ம குடும்ப மானத்தைக் கப்பலேத்திட்டுப் போனாள். அவளைப் பார்க்க ஏன் நீ போனே?” என்று அவர் கோபப்பட்டாலும் மற்றவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் அபர்ணாதான் காரணம் என்று சகுந்தலா எண்ணினார்.

அவள் வந்த பிறகுதான் மூத்த மகனின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கின்றன என்று கணித்தார்.

அவர்களைக் கண்காணித்த வரையில் அவர் சந்தேகப்படுவது போன்று எதுவும் தெரியவில்லை. ஒருவேளை தான்தான் தவறாக எண்ணுகிறோமோ? என்று தன்னைத்தானே சந்தேகித்தார்.

இப்போதும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக தோட்டத்தில் இருப்பதைக் கண்டவருக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது.

தன்னுடைய கணவர் அவளுக்கு அதிக இடம் கொடுப்பதாகத் தோன்றியது.

ஆனால் மூத்த மகன் வந்ததும் அபர்ணா அங்கிருந்து கிளம்பியது கண்டு அவர் திருப்தியுற்றார்.

‘ம். அந்தப் பயம் இருக்கட்டும். இதுகளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும். அப்பத்தான் சரியா வருங்க.’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.

நேரமாவதை உணர்ந்து அவர்கள் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட சகுந்தலா வீட்டிற்குள் வந்துவிட்டார்.

மனோரஞ்சனை சித்தரஞ்சன் அழைத்து வர, அவர்களுக்கு முன்பே வீட்டிற்குள் ஓடிவந்த மதன்ராஜ் விளையாடுவதற்காக எடுத்த பந்தை அதே அறையில் வைப்பதற்காக மேலே ஓடினான்.

அதைக் கண்ட சகுந்தலா வெகுண்டார்.

அவர்கள் வந்த அன்றே மாடிக்குச் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.

அவரும் மதன்ராஜின் பின்னேயே ஏற அவன் விளையாட்டு அறைக்குள் சென்று பந்தை விட்டுவிட்டு வெளியில் வந்தான்.

“ஏய். இங்கே என்ன பண்றே? இங்கே ஏன் வந்தே?” என்று கோபத்துடன் நின்றார் சகுந்தலா.

அன்றைய நிகழ்வுக்குப் பிறகு அவரைக் கண்டாலே ஒதுங்கிச் சென்ற மதன்ராஜ், இப்போது அவரை எதிர்பாராமல் பார்த்ததும் பயந்து போனான்.

அவர் என்ன கேட்டார் என்றெல்லாம் பார்க்காமல் உடனே வேகமாக ஓடினான்.

“ஏய் நில்லு.” என்று பின்னேயே சகுந்தலா கூப்பிடவும் மாடிப்படிகளில் வேகமாக ஓடியவன் தடுமாறி விழுந்தான்.

விழுந்த வேகத்தில் ‘அம்மா’ என்ற அலறலுடன் மயங்கிப் போனான்.

அவன் தலையில் ரத்தம் வழிந்தது.

 

காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!