தன் தந்தையின் நிலையைக் கண்ட சித்தரஞ்சன் “அங்கிள்!” என்று அதிர்ச்சியுடன் அவரை அழைத்தான்.
“ஒன்னும் பயப்படாதப்பா. தூக்கம்தான். நான் தான் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இரண்டு நாளா சாப்பாடு தூக்கம் இல்லைன்னா அவன் உடம்பு என்ன ஆகும்?”
“அத்தோட மனோவைப் பற்றிய கவலையும் சேர்ந்துடுச்சு. உன் அம்மாவாவது மகனைப் பற்றி புலம்பறாங்க. ஆனால் இவன் மனதிற்குள் என்ன நினைக்கிறான்னு யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. தனக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு மருகிக்கிட்டு இருப்பான்.”
நண்பனை கவலையுடன் பார்த்துக்கொண்டே ஜெயச்சந்திரன் பேசப்பேச சித்தரஞ்சனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
Advertisement
“சரிங்க அங்கிள். நீங்களும் ஓய்வெடுங்க. நான் வெளியில் போறேன்.” என்று அவன் கிளம்பினான்.
ஜெயச்சந்திரன் தன் நண்பனை பாசத்துடன் பார்த்தார். அவர் மட்டும் இல்லை என்றால் தன்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும்?
ஜெயச்சந்திரனும், தேவேந்திரனும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள்.
Advertisement
‘கேஆர்பி’ என்ற குடும்பப் பெயர் எந்த தலைமுறையில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சில தலைமுறைகளாகவே அவர்கள் குடும்பத்தை அப்படித்தான் அழைத்து வருகிறார்கள்.
Advertisement
அவர்கள் ஆரம்பித்து நடத்தி வந்த தொழிலிலும் அந்தப் பெயர்தான் வழங்கி வருகிறது. யாரும் அந்தப் பெயரை மாற்றி தங்கள் பெயரை நிலைநாட்ட முயலவில்லை.
அடுத்தடுத்து புதிய புதிய தொழில்கள் துவங்கி தங்கள் சொத்துக்களைப் பெருக்கியவர்கள் அனைவரும் அந்தக் குடும்பப் பெயரில்தான் அனைத்தையும் செய்தனர்.
தேவேந்திரன், அடுத்து சித்தரஞ்சன் என்று இந்த இரண்டு தலைமுறைகளில் அவர்கள் குடும்ப வளர்ச்சி அபாரமானது.
Advertisement
இத்தகைய குடும்பப் பெருமைக்கு உரிய தேவேந்திரனின் நட்பு, அவர்கள் தோட்டத்தில் வேலை பார்த்த ஒரு ஏழைப் பெண்மணியின் மகனான ஜெயச்சந்திரனுக்கு கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றே அவர் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அதையே தன் மனைவியிடமும், மகன் கிருஷ்ணாவிடமும் கூறி வருகிறார்.
இளவயதில் எந்தக் கவலையும் தெரியாத வயதில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
நண்பனின் உயரம் தெரியாத ஜெயச்சந்திரன் அவனை வாடா போடா என்றே அழைத்தான்.
தேவேந்திரனும் நண்பனிடம் எந்த பாகுபாடும் காட்டியதில்லை.
ஒருநாள் ஜெயச்சந்திரன் வகுப்பறையில் மயங்கி விழுந்தான். அதன் பிறகுதான் தெரிந்தது அவன் அன்று காலையில் எதுவும் சாப்பிடவில்லை என்று.
அவனது தாயார் கிருஷ்ணவேணி எப்போதுமே தன் மகனின் வயிற்றை நிரப்பி அனுப்பிவிடுவாள்.
தனக்கு இருக்கிறதோ இல்லையோ மகனது வயிற்றை அவள் வாட விட்டதில்லை.
அதனால் ஏழையாக இருந்தாலும் பசி என்ற ஒன்றை அவன் அறியாமல் தான் வளர்ந்தான்.
அன்று கிருஷ்ணவேணிக்கு உடல்நிலை சரியில்லை. காலையில் எதுவும் சமைக்க இயலவில்லை.
மகன் பள்ளிக்கூடம் சென்றால் மதிய உணவாவது கிடைக்குமே என்று மகனை பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தாள் கிருஷ்ணவேணி.
மகனுக்கோ தாயின் உடல்நிலைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனும் பசியுடனே பள்ளிக்குக் கிளம்பினான்.
பசி தாள இயலாமல் மயங்கியும் விழுந்தான். இதையறிந்த தேவேந்திரன் தான் கொண்டு வந்த உணவை அவனுக்கு சாப்பிடக் கொடுத்தான்.
அன்று மதியம் இரண்டு பேரும் பள்ளியில் சத்துணவு சாப்பாட்டை வாங்கி உண்டனர்.
அதிலிருந்து தேவேந்திரன் ஜெயச்சந்திரனுக்கும் சேர்த்தே உணவு எடுத்து வருவான்.
ஜெயச்சந்திரனின் தாய் கிருஷ்ணவேணிக்கு தன் மகனைப் படிக்க வைத்து ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்று ஆசை.
அவளது கணவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து போனான்.
அதனால் தன் மகனை ஒரு மருத்துவராக்கி விட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.
தன் வசதிக்கு அது நடக்குமா? என்றெல்லாம் அவள் யோசிக்கவேயில்லை.
ஜெயச்சந்திரனும் தாயின் ஆசை புரிந்தவனாக நன்றாகப் படித்தான். பள்ளியிறுதி வரும்போது நண்பர்கள் இருவருக்குமிடையே நட்பு இறுகியிருந்தது.
கொஞ்சம் உலகம் புரிய ஆரம்பிக்கும் வயதில் தன் நண்பன் தேவேந்திரன் தங்கள் முதலாளியின் மகன் என்பதை உணர்ந்த ஜெயச்சந்திரன் நண்பனை மரியாதையாக அழைக்க அவனுடன் கோபம் கொண்டு பேசாமல் இருந்தான் தேவேந்திரன்.
தன்னை வழக்கம் போல் ஒருமையாக அழைத்தால்தான் பேசுவேன் என்று கட்டாயப்படுத்தினான். அதன் பிறகு இருவரும் சாதி, அந்தஸ்து பேதம் பார்க்காது பழகினர்.
இதை தேவேந்திரனின் பெற்றோரும் மறுக்கவில்லை.
பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய ஜெயச்சந்திரனுக்கு மருத்துவம் படிக்க எளிதில் இடம் கிடைத்தது.
இருந்தும் அதற்கும் செலவு செய்ய பணம் வேண்டுமே.
தேவேந்திரனின் தந்தை சித்தார்த்தன் அவனுக்கு உதவி செய்ய முன் வந்தார்.
அவருக்கு தன் மகன் மருத்துவம் படிக்கவில்லையே என்ற பொறாமை எல்லாம் இல்லை.
நம் ஊரில் இருந்து ஒரு பையன் மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான் என்பதே அவருக்குப் பெருமையாக இருந்தது.
மகன் மருத்துவம் படிக்க தேர்வாகிவிட்டான். அவனுக்கு தன்னுடைய முதலாளியே உதவி செய்கிறார் என்பதை கண் கூடாகக் கண்ட மகிழ்ச்சியிலேயே ஜெயச்சந்திரனின் தாய் கிருஷ்ணவேணி இறைவனடி சேர்ந்துவிட்டாள்.
தேவேந்திரனும், அவனது தந்தையும் இடிந்து போன ஜெயச்சந்திரனை தேற்றி படிப்பதற்காக அனுப்பி வைத்தனர்.
சித்தார்த்தன் தான் சொன்னது போலவே அவனது படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார்.
அவன் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது தனிமையில் அவனை விடாமல் தங்களுடனே அழைத்து வைத்துக் கொண்டனர்.
தேவேந்திரனின் பெற்றோர் அவனை வேற்றாளாய் நினைக்கவில்லை. தங்கள் மகனைப் போன்றே நடத்தினர். அதனால் ஜெயச்சந்திரனுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
மருத்துவம் இளநிலை படிப்பை முடித்த கையோடு மேற்படிப்பிற்கும் நல்ல மதிப்பெண்களோடு தேர்வானார்.
அறுவை சிகிச்சை நிபுணராக மேற்படிப்பு முடித்த ஜெயச்சந்திரன் ஊரிலேயே மருத்துவம் பார்க்க கிளம்பி வந்தார்.
அதைக் கண்டு சித்தார்த்தனுக்கு அத்தனை நிறைவு. தங்கள் இடத்திலேயே சிறியதாக ஒரு கிளினிக் வைத்துக்கொடுத்தார்.
அதற்கு அவருடைய பெயரை ஜெயச்சந்திரன் வைக்க முயன்றதற்கு சித்தார்த்தன் தடுத்துவிட்டார்.
“நீ ஒரு டாக்டராகனும்ங்கிறது உன் அம்மாவோட ஆசை. என்னதான் நான் செலவு பண்ணியிருந்தாலும் உன் அம்மாதான் அந்த ஆசையை உன்னுள் உண்டு பண்ணியது. உன் அம்மாவின் ஆத்மாதான் உனக்கு உறுதுணையா இருந்து உன்னை இந்த அளவிற்கு நல்ல நிலைமையில் கொண்டு வந்திருக்கு. அதனால் உன் அம்மாவோட பேரை வை.” என்று நிச்சயமாக சொல்லிவிட்டார்.
அதன் பிறகுதான் கிருஷ்ணா என்ற பெயரில் மருத்துவமனையை ஆரம்பித்து இப்போது வரையும் நல்ல முறையில் நடத்தி வருகிறார்.
அவரது மகன் கிருஷ்ணாவும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக தேர்ச்சி பெற்று தன் தந்தையுடன் பணியாற்றுகிறான்.
அந்த சிறிய நகரத்தில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. பல துறை நிபுணர்களும் அங்கே வருகை புரிந்து சிகிச்சை செய்து வருகின்றனர்.
ஜெயச்சந்திரன் கைராசிக்காரர் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
இது அத்தனைக்கும் தன் நண்பனின் குடும்பமும், நண்பனின் அன்பும்தான் காரணம் என்று அசைய முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார் ஜெயச்சந்திரன்.
ஆனால் தேவேந்திரன் அதை மனதில் கொள்ளாமல் வழக்கம் போல் நண்பனிடம் அன்பு செலுத்துவார்.
உறங்கும் நண்பனை வாஞ்சையுடன் பார்த்தவர் வெளியேறினார்.
எப்படியாவது மனோரஞ்சனை காப்பாற்றி நண்பனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் அவர் என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரது கவலை புரியாமல் மனோரஞ்சனோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து போக துடித்துக் கொண்டிருக்கிறான்.
சித்தரஞ்சன் தன் அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்றுக் கவனமுடன் மறுமுனையில் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தான்.
“சார். நீங்கள் சொன்ன பள்ளியில் அந்த மேடம் ஏற்கனவே வேலையை விட்டுப் போயிட்டாங்களாம் சார். இரண்டு வருடங்களாச்சாம். அந்தக் கடையில் வேலை பார்த்ததாக சொன்னீர்களே ஒரு பெரியவர், அவரும் வேலையை விட்டு நின்றுவிட்டாராம்.”
கேட்கக் கேட்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தம்பியின் வாழ்க்கையில் இருந்துதான் அவளை விலகச் சொன்னான். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக எங்கே சென்றிருப்பார்கள்?
“சார். அப்புறம் ஒரு விசயம். அவங்க ரெண்டு பேருமே தாங்களாக வேலையை விட்டுச் செல்லவில்லை.”
“அப்படின்னா?”
“வேலையை விட்டு அனுப்பச் சொல்லியிருக்காங்க. அதனால் அவர்களை வேலையே விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து கூட வெளியேற்றியிருக்கிறார்கள்.”
அவனுக்கு எல்லாமே புதிய தகவல்களாக இருந்தன.
“யார் செய்தது?”
“சார்… அது….” மறுமுனையில் குரல் தயங்கியது.
“தயங்காமல் சொல்லுங்க. யார் அது?”
“உங்கள் மாமா சந்தானம் சார்தான் அதை எல்லாம் செய்திருக்கார்.”
அதைக் கேட்ட உடன் அவனுக்கு தன் தாய் சகுந்தலாவின் மீதுதான் கோபம் வந்தது.
தன் தந்தையிடம் கூட மறைத்த விசயத்தை அவர் தன் தம்பியிடம் கூறியிருக்கிறாரே.
“சரி. அந்தக் குடும்பம் எங்கே இருக்கிறது என்பதை சீக்கிரம் கண்டுபிடியுங்கள்.” கட்டளையிட்டான்.
“சரிங்க சார்.” மறுமுனையில் பவ்யமான குரலில் பதில் வந்தது.
அந்த சரண்யாவின் மீது நல்லெண்ணம் இல்லை என்றாலும் தன்னால் ஒரு பெண்ணோட வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்றுதானே அவன் தன் தாயை மட்டும் அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சென்று அவர்களிடம் பேசினான்.
அப்போதும் சகுந்தலாவிடம் படித்துப் படித்து சொன்னான்.
இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று. ஆனால் அவரோ தன் தம்பியிடம் சொல்லி அவரும் அந்த சரண்யா இருந்தால் தன் பெண் இந்த வீட்டில் வாழ முடியாது என்று சுயநலத்துடன் முடிவெடுத்து அந்தக் குடும்பத்தை விரட்டிவிட்டார்.
அவரது மகளாவது ஒழுங்காக இங்கே வாழ்ந்தாளா என்றால் அதுவும் இல்லை.
அன்றைய இரவும் மனோரஞ்சனிடம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கழிந்தது.
மறுநாள் காலை.
சித்தரஞ்சனுக்குக் கிடைத்த தகவல் அத்தனை அதிர்ச்சியைக் கொடுத்தது.
“என்ன சொல்றீங்க?”
“ஆமாம் சார். அவங்க எங்கே போனாங்கன்னு கண்டு பிடிச்சாச்சு. ஆனால் தீ விபத்து நடந்தது நிஜம் சார். அதில் பெரியவங்க இரண்டு பேரும் அந்த இடத்திலேயே கருகி இறந்துட்டாங்க.”
“அந்தப் பெண் என்னவானாள்?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“என்ன நடந்தது என்று கண்டு பிடிக்க முடியவில்லை சார். யாருக்குமே எதுவுமே தெரியாது என்கிறாங்க.”
“அவங்க குடியிருந்த குடிசை ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு. இரவு நேரத்தில் அங்கே மக்கள் நடமாட்டம் அவ்வளவா இருக்காதுன்னு சொல்றாங்க.”
“அத்துடன் அவங்களும் யாரிடமும் அந்தளவிற்கு பழக்கம் வைத்துக்கொள்ளவில்லை போல.”
“இந்த ஊருக்கு வந்த சில நாட்களிலேயே விபத்து நடந்திருக்கிறது. அதனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அவர்கள் வீட்டில் யார் யார் இருந்தார்கள் என்று கூட தெரியவில்லை.”
“சரி. அந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க முடியுதான்னு பாருங்க.”
“சரிங்க சார்.”
அலைபேசியை அணைத்து பையில் வைத்தவன், வேதனையுடன் கண்களை மூடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
அந்தப் பெண் தன் தம்பியின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினால் போதும் என்று மட்டும் தான் அவன் நினைத்தான்.
அவள் வராததினால் பயந்து போய் ஒதுங்கிவிட்டாள் என்று நினைத்திருந்தான்.
அதுவும் மனோரஞ்சன் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகு அவன் சரண்யாவை தொடர்பு கொள்ள முயலவில்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பின் அவன் அவர்களைப் பற்றி மறந்தே போனான் என்றுதான் கூற வேண்டும்.
இப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே அவனுக்கு தெரிய வந்திருக்கிறது.
அவன் கண் முன்னால் சரண்யாவின் பெற்றோர் வந்தனர். ஒருமுறைதான் அவர்களை அவன் நேரில் பார்த்தது.
சரண்யாவைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கானே தவிர அப்போதுதான் பார்த்தான்.
அவன் பார்த்தபோதே தான் கேள்வி பட்டது எந்தளவிற்கு உண்மை.
அவளிடம் தன் தம்பியால் தாக்குப் பிடிக்க முடியாது. அவன் ஒரு அப்பாவி என்று உணர்ந்து கொண்டதால்தான் அவன் சரண்யாவை தன் தம்பியின் வாழ்வில் இருந்து அகற்ற முயன்றான்.
அவளுடைய தந்தை வயதானவர். அப்பாவி. மகளின் செயல் கண்டு அதிர்ச்சியில் அவர் விழித்தது இப்போதும் அவன் கண்ணுக்குள் நிற்கிறது.
அந்தப் பெண்ணின் அன்னையும் நடுத்தர வயதில் பார்க்கவே பாவமாகத்தான் இருந்தார்.
அவர்கள் இங்கேயே இருந்திருந்தால் ஒருவேளை அவர்கள் பிழைத்திருப்பார்களோ?
நினைக்கவே வேதனையாக இருந்தது. தன்னால் ஒரு குடும்பமே சிதைந்து விட்டது என்று நினைக்கவே அவனால் முடியவில்லை.
தலையைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தவனின் கண்களில் அவள் பட்டாள்.
அந்த மருத்துவமனை வாசலில் அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்தாள்.
அவன் முகத்தில் அதிர்ச்சி. அந்த மருத்துவமனை வளாகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு பரபரப்புடன் அலைந்து கொண்டிருக்க அவள் மட்டும் நிதானமாக நடந்து வந்தாள்.
அதனாலேயே அவள் அவன் கவனத்தில் வந்தாள். அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.
‘இவளா…?’
ஒரு கையில் பெட்டியுடன் வந்தவள், மறுகையில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள்.
அவன் அச்சு அசலாய் அவளின் வார்ப்பாய் இருக்கக் கண்டவன் கடுஞ்சினம் கொண்டான்.