Skip to content
Post Views: 4,156
அவள் தோள் தொடர்ந்து உசுப்பப்பட்டது.
“அபர்ணா. எழுந்திரு.” பொன்னிதான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் எழுந்தமர்ந்த அபர்ணா சிறிது நேரத்திற்கு எங்கிருக்கிறோம் என்று புரியாமல் விழித்தாள்.
“என்ன கனவா?” பொன்னி சிரித்தவாறு நின்றிருந்தாள்.
Advertisement
“பொழுது விடிஞ்சுடுச்சா? புது இடமில்லையா? லேட்டாதான் தூங்கினேன்.” தயக்கத்துடன் கூறினாள்.
“ஏய். இதுக்கு ஏன் இப்படி தயங்கறே? நம்ம வேலையில் நேரம் கிடைக்கும்போது நல்லா தூங்கிக்கனும். மது எழுந்துட்டான். பாவம் சின்னப்பிள்ளை. காலையில் என்ன குடிப்பான்? டீயா இல்லை காபியா? என் கூட வர மாட்டேங்கறான். அதான் உன்னை எழுப்பினேன். எனக்கு வேலை முடிஞ்சுடுச்சு. இனி நைட்தான் வருவேன்.”
“சரிப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்.”
Advertisement
“உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த மனோரஞ்சன் சாருக்கு நேத்து நைட்டே நினைவு திரும்பிடுச்சு.” சந்தோசமுடன் கூறினாள்.
Advertisement
“அப்படியா? சந்தோசம்.”
“அவர் இங்கே வந்து அட்மிட் ஆனதில் இருந்து நம்ம பெரிய டாக்டர் வீட்டுக்கே போகலை. அவரோட ப்ரண்டோட பையன். அவர் கண் விழிச்ச பிறகு இன்னிக்குக் காலையில்தான் வீட்டுக்குப் போயிருக்கார். சரி நான் கிளம்பறேன்.”
கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
Advertisement
அங்கிருந்த குளியல் அறைக்குள் நுழைந்து புத்துணர்ச்சியோடு வெளியில் வந்தாள்.
தனக்கு வந்த கனவை ஒதுக்கினாள். ஆரம்பத்தில் அடிக்கடி இப்படி கனவு வந்து தொல்லை செய்ததுதான்.
அவள் அதற்கு இடம் கொடுக்காமல் தனக்கு ஓய்வில்லாதவாறு பார்த்துக்கொண்டாள். ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.
அசந்து உறக்கம் வரும் வரையில் வேலை செய்துவிட்டு படுப்பாள்.
அப்படியும் சில நேரங்களில் இது போன்ற கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும்.
நடந்தது அத்தனையும் கனவாகவே இருந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கம் எப்போதும் போல் பிறக்கும்.
ஆனால் தேவை இல்லாத இத்தகைய சிந்தனைகளால் வருத்தம் தான் அதிகரிக்கும் என்று தன் எண்ணப் போக்கை மாற்றிக்கொள்வாள்.
இப்போது இங்கே வருவதற்கு முடிவெடுத்த பிறகு இந்தக் கனவு வர ஆரம்பித்திருக்கிறது என்று புரிகிறது.
எங்கே பெற்றோர் தன்னைக் கண்டுவிடுவார்களோ என்ற பயமா? அவர்கள் குணம் மாறாமல் இருக்கலாம்.
பெற்றோரை மலை போல் நம்பிய அந்த சின்ன வயதிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயத்தை இப்போது அவளைக் கொண்டு செய்ய வைக்க அவர்களால் முடியாதுதான்.
ஆனால் அவர்களை நேரில் காணக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.
பெற்றோரைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கிவிட்டு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள்.
மதன்ராஜை அழைத்துக்கொண்டு சிற்றுண்டிவிடுதிக்குச் சென்று அவனுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தவள் தனக்கும் வாங்கிக்கொண்டாள்.
அன்று அவளுக்கு பகல் நேரத்து வேலை. மனோரஞ்சன் எப்படியிருக்கிறான் என்று காணும் ஆவல் வந்ததுதான்.
ஆனால் தேவையில்லாமல் அங்கே செல்லக் கூடாது என்று முடிவெடுத்தாள்.
இப்போது அவசரப்பட்டால் பிறகு தான் வந்த காரியம் கெட்டுவிடக்கூடும் என்று பொறுமை காக்க முடிவெடுத்தாள்.
அதனால் மற்ற நோயாளிகளைப் பார்க்கும் பொறுப்பை மட்டும் ஏற்று செய்தாள். அன்றைய பொழுது விரைந்து சென்றது.
“ஏய். கொரோனான்னு புது வியாதி பரவிக்கிட்டிருக்காம்பா சீனாவுல. இங்கேயும் பரவப்போகுதுன்னு சொல்றாங்க. ஏதோ லாக்டவுன் போடப்போறாங்களாம்.”
யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பது இதைப் பற்றித்தான்.
லாக்டவுன் என்ற வார்த்தையே பொது மக்களுக்குப் புதிதானதுதான்.
இந்த புதிய நோயை எப்படி சமாளித்து மீண்டு வரப்போகிறோம் என்பது விவரம் தெரிந்தவர்களின் கவலை.
விவரம் அறியாதவர்கள் அதை ஏதோ ஒரு செய்தியாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
தான் அறிந்ததை மற்றவர்களிடம் கூறி தனக்கும் தெரியும் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம்.
எதையும் அனுபவிக்கும்போதுதானே அதைப் பற்றி தெரியும்.
அன்றைய மாலை பொன்னி வந்ததும் அவள் கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறி கிளம்பினாள்.
“என்ன வாங்கப் போறே அபர்ணா?”
“மதுவுக்கும், எனக்கும் டிரஸ் எடுக்கனும்பா. நான் ரொம்ப எடுத்து வரலை. இப்பதான் வேலை கிடைச்சுடுச்சே. கையில் கொஞ்சம் பணம் இருக்கு. மாத்துக்கு டிரஸ் வேணும்ல.”
“அபிஸ் டெக்ஸ் போப்பா. நல்லா இருக்கும். அது நம்ம மனோரஞ்சன் சார் இருக்காருல்ல. அவங்க கடைதான்.”
‘மனோரஞ்சன் எப்ப நம்ம சார் ஆனான்?’ பொன்னியின் உரிமையான அழைப்பில் அபர்ணாவிற்கு சிரிப்பு வந்தது.
‘இது மட்டும் அந்த சித்தரஞ்சனுக்குத் தெரிய வந்தால் பொன்னியின் கதி என்னவாகும்?’
அதை வெளியில் கூறினால் பொன்னி கதி கலங்கிப் போய்விடுவாள் என்று தனக்குள்ளேயே சந்தேகத்தை மென்று விழுங்கிவிட்டு சமர்த்தாக கடைக்குக் கிளம்பினாள்.
பொன்னி கூறியிருக்காவிடினும் அந்தக் கடைக்குத்தான் அவள் செல்வதாக இருந்தாள்.
ஏற்கனவே அரவிந்தன் மனோரஞ்சன் குடும்பத்தைப் பற்றிக் கூறியிருந்தான்.
அத்துடன் அவள் ஊருக்கு வருகிறாள் என்று தெரிந்ததும் மனோரஞ்சன் குடும்பத்தினரின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்திருந்தான்.
எதற்கும் இருக்கட்டும். அவர்கள் யார் என்று தெரிந்தால்தான் நேரில் சந்திக்கும்போது தான் தடுமாறாமல் இருக்க முடியும் என்று அவள்தான் புகைப்படத்தைக் கேட்டிருந்தாள்.
அதனால்தான் சித்தரஞ்சனை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
அவள் இங்கே வேலை கேட்டு வந்தபோது பின்னேயே ஜெயச்சந்திரனின் அறைக்குள் அவன் வந்தபோதும் அவளால் தடுமாறாமல் ஜெயச்சந்திரனிடம் பேச முடிந்தது.
“அபிஸ் டெக்ஸ்” இது ஒரு கேஆர்பி நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்ற பெயரில் கம்பீரமாக நின்றிருந்தது.
பெயருக்கேற்றாற்போல் சின்ன கடையாக இல்லாமல் நான்கு தளங்களில் உயர்ந்து நின்றிருந்தது.
அந்த சிறிய நகரத்தில் அதுதான் முக்கியமான கடைத்தெரு.
அந்தக் கடை இருந்த தெருவிலேயே அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த மற்ற நிறுவனங்களும் இடைவெளிவிட்டு இருந்தன.
அவற்றிற்கெல்லாம் சேர்த்து பொதுவாக ஒரு வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றும் அவர்கள் நிறுவனம் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இல்லை என்றால் அந்த முக்கிய சாலையில் வாகனங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருந்திருக்கும். வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணமும் இல்லை என்பதால் மக்கள் அதைப் பயன்படுத்தினார்கள்.
அபர்ணா ஊருக்குக் கிளம்பிய அவசரத்தில் நிறைய உடைகள் எடுத்து வரவில்லை.
இங்கே சூழ்நிலை என்னவென்று தெரியாததால் சமாளித்துக்கொள்ளலாம் என்றுதான் அவள் கிளம்பி வந்திருந்தாள்.
இங்கே கிருஷ்ணா இருந்ததால் வேலை கிடைப்பது சுலபமாகிற்று. இனி நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
மெதுவாகக் கடையை நோட்டமிட்டவாறே உள்ளே நுழைந்தாள்.
“வாங்க மேடம்.” ஒரு பெண் கைகுவித்து அவர்களை வரவேற்றாள்.
அவளருகில் சென்றதும் என்ன வேண்டும் என்று புன்னகையுடன் கேட்டாள்.
அபர்ணா தன் தேவையைப் பற்றிக் கூறியதும், அவள் எந்தெந்த தளங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினாள்.
அவளுக்கு சுடிதார் மற்றும் உள்ளாடைகள் எடுக்க வேண்டும். மதுவுக்கும் உடைகள் எடுக்க வேண்டும்.
சேலை, வேட்டி சட்டை, பட்டுப் பிரிவு, ஆயத்த ஆடைகள் பிரிவிலேயே சிறியவர்கள், பெரியவர்கள், அதன் பிறகு ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியே தளங்களில் பிரிவுகளாகப் பிரித்து உடைகள் விற்கப்பட்டன.
அத்துடன் உடைகள் வைக்கப்பட்டிருந்ததும் விலை வாரியாகத்தான்.
மேலே உடைகளின் விலை தொங்கிக்கொண்டிருந்ததால் வரும் வாடிக்கையாளர்களுக்கும் எந்த சங்கடமும் இல்லை.
இல்லை என்றால் எந்த விலையில் உடை வேண்டும் என்று தயக்கத்துடன் கூற வேண்டியிருக்கும்.
அபர்ணாவின் தோழிகள் சிலர் இது போன்ற அனுபவங்கள் பற்றி ஒரு நாள் பேசியது அவள் நினைவிற்கு வந்தது.
“நாம என்ன விலையில் வாங்கப் போறோம்னு அவனுக்கு என்னடி தெரியும்? நாம டிரஸ்ஸை எடுத்துத் தரச் சொல்லும்போதே அதை எடுக்காமல் அதோட விலையைச் சொல்லுவானுங்க பாரு எனக்குப் பத்திக்கிட்டு வரும். சில நேரத்தில் கோபத்தில் அந்தக் கடையில் துணி எடுக்காமல் கூட வந்திருக்கேன்.”
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த அந்த தோழி குமுறினாள்.
இது நிறைய இடங்களில் நடப்பதுதான்.
நாம் ஒரு பொருளைப் பற்றிக் கேட்டால், இவங்க எல்லாம் இதை எங்க வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் எடுத்த உடனே அதன் விலையை அலட்சியமாக கூறுபவர்களை அவளும் கண்டிருக்கிறாள்.
நிச்சயமாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் யோசித்துச் செயல்பட்டிருக்கிறார்கள்.
மெதுவே பார்வையிட்டவாறே நடந்தாள்.
பணியாளர்கள் அனைவரும் இன்முகத்துடன் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொண்டனர்.
பொறுமையுடன் அவர்கள் கேட்டதை எடுத்துக் காண்பித்து வேண்டாம் என்று ஒதுக்கியதை உடனடியாக மடித்து ஓரம் கட்டினர்.
அனைத்துத் தளங்களும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தன.
இதற்கும் மேலாக கண்காணிப்பாளர்கள் வேறு சுற்றிக்கொண்டிருந்தனர்.
வாடிக்கையாளர்களின் தேவை என்னவென்று கேட்டறிந்து அதை உடனே செய்து கொடுத்தனர்.
முதல் தளத்தில்தான் சுடிதார் வாங்க வேண்டும். முதல் தளத்திற்குச் செல்ல படிக்கட்டு இல்லாமல் சரிவான பாதை போடப்பட்டிருந்தது.
வயதானவர்களும் எளிதாக சிரமம் இல்லாமல் மேலே செல்லலாம்.
ஒருபக்கம் மின்தூக்கியும் இயங்கிக்கொண்டிருந்தது.
முதல் தளத்தில் ஒருபக்கம் துணிகள் வியாபாரம் நடந்து கொண்டிருக்க ஒரு ஓரத்தில் சிற்றுண்டிச்சாலையும் இருந்தது.
அங்கே தின்பண்டங்கள், குளிர்பானங்கள், காஃபி மற்றும் தேநீர் எல்லாம் கிடைத்தன.
அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
மறுபக்கம் கழிவறைகள் இருந்தன.
அந்த இடமே பரபரப்புடனும், கலகலப்புடனும் இருந்தது அவளை ஈர்த்தது.
அபர்ணாவும் மதன்ராஜ் விரும்பிச் சாப்பிடும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு தனக்கு மசாலா தேநீர் வாங்கிக் கொண்டு மதன்ராஜ் அருகில் அமர்ந்தாள். எல்லோர் முகத்திலும் திருப்தி தெரிந்தது.
துணிகள் மட்டுமல்லாது அடுத்த தளத்தில் ஆடைகளுக்குப் பொருத்தமாக அணிகலன்களும் இருக்கின்றனவாம்.
அங்கிருந்த பெண்களின் பேச்சு மூலம் அறிந்து கொண்டாள். மூன்று தளங்கள் மட்டுமே ஆடைகள் விற்பனை செய்யும் இடம்.
நான்காவது தளம் சரக்குகளை சேமிப்பதற்கும், இங்கே வேலை பார்க்கும் பணியாளர்கள் தங்குவதற்கும், தையல் வேலை செய்து கொடுப்பதற்கென்றும் பிரிக்கப்பட்டிருந்தது.
உடைகளில் பிடித்தம் செய்ய வேண்டியிருந்தால் உடனடியாக செய்து தரப்பட்டது.
நாம் துணியாக எடுத்தவற்றை அங்கேயே தைக்கவும் கொடுக்கலாம்.
ஜாக்கெட்டுகளில் வேலைப்பாடுகளும் செய்து தரப்பட்டன.
அதற்கென்று தனியே பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.
அபர்ணாவிற்கு எல்லாம் பிரமிப்பாக இருந்தது.
பெரிய நகரத்தில் இது போன்ற ஒரு கடையைப் பார்ப்பது சாதாரண விசயம்.
ஆனால் இந்த சிறிய நகரத்தில் இது மாதிரி யோசித்து செயல்பட்டவர்களை அவளால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
துணியும் நல்ல தரமானதாக இருந்தது. விலையும் நடுத்தர மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்கவும்தான் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று நினைத்தாள். அத்துடன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. மதுவும் ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்த்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் மதன்ராஜை அழைத்துக் கொண்டு சுடிதார் பிரிவிற்குச் சென்று தனக்குத் தேவையானதை தேர்வு செய்தாள்.
“ஏற்கனவே ஏதாவது வாங்கினீங்களா மேடம்?” அந்த விற்பனைப் பெண் மரியாதையுடன் கேட்டாள்.
“இல்ல. இப்பதான் முதல்ல வாங்கறேன்? ஏன்?”
“டோக்கன் தர்றதுக்காகத்தான் மேடம் கேட்டேன்.”
“டோக்கனா? அது எதற்கு?” புரியாமல் கேட்டாள்.
அந்த விற்பனைப் பெண்ணிற்கு அபர்ணா இந்தக் கடையின் புதிய வாடிக்கையாளர் என்று புரிந்துவிட்டது.
“நீங்க எந்த பொருள் வாங்கினாலும் உங்களுக்கு நாங்க தர்ற டோக்கனை காட்டினீங்கன்னா அது எல்லாம் பில் போடற இடத்துக்குப் போயிடும். நீங்க வாங்கறது எல்லாம் முடிச்சிட்டீங்கன்னா நீங்க பில் போடற இடத்தில் போய் காத்திருக்க வேண்டாம். நேரா கவுண்டருக்குப் போய் பணம் கட்டிட்டுப் பொருளை வாங்கிட்டுப் போகலாம்.” புன்னகையுடன் கூறினாள்.
சரியென்று தலையாட்டியவாறே தனக்கான வில்லையை வாங்கிக் கொண்டு மதுவுக்கு வாங்கவென்று அடுத்த தளத்திற்குச் சென்றாள்.
மதன்ராஜிற்குப் பொருத்தமான உடைகளைத் தேர்ந்தெடுத்தவள் தன்னுடைய வில்லையைக் காண்பித்துவிட்டு தன்னுடைய தேவை முடிந்துவிட்டது என்றும் கூறினாள்.
“சரிங்க மேம். நான் பில் செக்சனுக்கு அனுப்பி வச்சிடுறேன்.” என்று புன்னகையுடன் கூறி அந்தப் பணியை செவ்வனே செய்தாள் அந்த விற்பனையாளர்.
தன்னுடைய அறையில் இருந்த சித்தரஞ்சன் சிசிடிவி காமிரா வழியாக எதார்த்தமாகத்தான் அவள் கடைக்குள் நுழைவதைக் கண்டிருந்தான்.
மனோரஞ்சனுக்கு அந்த விபத்து நடந்த பிறகு இன்றுதான் கடைக்கு வந்திருந்தான்.
அதனால் கொஞ்சம் வேலை இருந்தது. அப்போதுதான் முடித்துவிட்டு மருத்துவமனைக்குக் கிளம்பலாம் என்று எண்ணியபோது அவள் உள்ளே நுழைந்தாள்.
அவனுடைய மூளை ‘அவளைப் பார்க்காதே. பார்க்காதே.’ என்று அறிவுறுத்தினாலும் அவனுடைய மனம் அதைக் கண்டு கொள்ள மறுத்தது.
அவள் முடித்துக்கொண்டு கிளம்பப் போகிறாள் என்று உணர்ந்ததும் அவன் தன் அறையை விட்டு வெளியில் வந்து மூன்றாம் தளத்திற்கு வந்தான்.
ஓரளவிற்குக் கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது. அபர்ணாவும் கிளம்பத்தயாரானாள்.
அங்கே சிறுவர்களுக்கான ஆடைகள் விற்கப்பட்டதால் அவர்களைக் கவரும் வகையில் நிறைய பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை ஆர்வமாகப் பார்வையிட்ட மதன்ராஜை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
எதற்கும் ஆசைப்படாத பிள்ளை. வேடிக்கை பார்க்கவாவது செய்கிறானே என்று அவனைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
சட்டென்று தன்னருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்த சித்தரஞ்சனைக் கண்டு திகைத்தான் மதன்ராஜ்.
“ஹேய் செல்லம். என்ன உங்களுக்கு அந்தப் பொம்மை வேணுமா? உங்க பேர் என்னன்னு சொல்லுங்க நான் தர்றேன்.” புன்னகையுடன் அவன் கேட்டதும் அவன் முகத்தில் பயம் தெரிந்தது.
சித்தரஞ்சனுக்கு அந்தச் சிறுவனின் பெயர் மதன்ராஜ் என்று தெரியும்.
ஆனால் அவனால் பேச முடியாது என்பதை அவன் நம்பத் தயாராக இல்லை.
அந்தச் சிறுவனை அவள் பொய் சொல்ல வைத்திருக்கிறாள்.
அதனால்தான் அவன் பயப்படுகிறான் என்று அவன் நிச்சயமாக எண்ணினான்.
சித்தரஞ்சனுக்குப் பதில் சொல்லாமல் அபர்ணாவிடம் ஓடி அவள் பின்னே மறைந்து கொண்டான்.
அந்த நேரத்தில் அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை.
அவனைத் தாண்டித்தான் கீழே இறங்கிப் போகும் வழியிருக்கிறது.
அவள் அசையாமல் நிற்க அவன் அவளை நெருங்கினான்.
“வேற யாரும் கூட வந்திருக்காங்களா மேடம்?” மரியாதையான குரலில் கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.
தன்னிடம்தான் பேசினானா? அவனுடைய இடம்தான்.
ஆனால் அவனிடம் வேலை பார்ப்பவர்கள் முன்னே எதுவும் தவறாகப் பேசிவிடமாட்டான்தான்.
எப்படியும் அவனுடைய மரியாதையை அவன் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே.
அவளிடம் கேட்டவாறே இன்னும் நெருங்கியிருந்தான்.
அத்துடன் அங்கே நின்றிருந்த விற்பனையாளரையும் ஒரு பார்வை பார்த்தான். அவளும் புரிந்து கொண்டதுபோல் தலையாட்டினாள்.
‘அய்யோ. என்ன கிட்டக்க வர்றான்? யாராவது ஏதாவது நினைத்துவிட்டால்? மது..”
“மேடம். பயப்படாதீங்க மேடம். எங்க முதலாளி இப்படி யாராவது வாடிக்கையாளர்கிட்ட பேசறது அடிக்கடி நடக்கிறதுதான். அப்பத்தானே ஏதாவது மாற்றம் செய்யனும்னா எங்களுக்கும் தெரிய வரும்.”
அவளுடைய பேச்சில் உண்மை இருந்தது.
இப்படி வரும் வாடிக்கையாளர்களிடம் அவன் அடிக்கடி பேசுவதால்தான் இப்போதும் அந்த மாதிரி பேசுவதற்காக அவளிடம் வந்திருக்கிறான் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
அதனால்தான் அவனும் தைரியமாக இங்கே வந்து பேசிக்கொண்டிருக்கிறான்.
“மேடம். நீங்க சார்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. நான் தம்பிக்கு பொம்மைகளைக் காட்டறேன்.” என்று பவ்யமாகக் கூறினாள் அந்தப் பெண்.
அபர்ணாவிற்கும் அந்தப் பெண் கூறுவதும் சரியெனப்பட்டது.
அவன் வில்லங்கமாக ஏதாவது பேசி வைப்பான்.
அது மதன்ராஜின் காதில் விழுந்தால் நன்றாக இருக்காது.
“என்ன சொன்ன உடனே பையனை அனுப்பி வச்சிட்டே. பையனுக்குத்தான் காது கேட்காதே.” சட்டென்று ஒருமைக்குத் தாவியவன் அவளை கூர்ந்து நோக்கினான்.
“அவனுக்கு வாய்தான் பேச முடியாது. மத்தபடி காது நல்லாக் கேட்கும்.”
அமைதியான குரலில் ஆனால் அழுத்தமாகக் கூறினாள் அபர்ணா.
இங்கே இவனுடன் விவாதம் பண்ணிக் கொண்டிருக்க முடியாது.
“கூட யாரும் வந்திருக்காங்களான்னு கேட்டேனே?” மீண்டும் அழுத்தமான குரலில் கேட்டான்.
“நாங்க ரெண்டு பேரும்தான் வந்திருக்கோம். நீங்க யாரை எதிர்பார்க்கறீங்க?”
“ஏன் அந்த கிருஷ்ணா தொத்திக் கொண்டு வந்திருப்பானே? பில் கட்ட வேண்டுமே. அப்புறம் வாங்கியவற்றை தூக்க வேண்டும். அதற்கெல்லாம் ஒரு இளிச்சவாயன் வேண்டாமா?”
நக்கல் குரலில் கேட்டான்.
அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்று புரிய அமைதியாக நின்றாள்.
“நான் வேண்டுமானால் பில் கட்டவா?”
“தேவையில்லை. நாங்க கிளம்பனும்.”
“இப்படி சொல்லிட்டா எப்படி மேடம்? என் தம்பி வேற உங்க ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆயிருக்கான். நீங்க அவனை நல்லபடியா கவனிச்சுக்க வேண்டாமா?”
“அது என்னோட ஹாஸ்பிட்டல் கிடையாது. அது நான் வேலை செய்யற இடம்.”
அழுத்தமாகக் கூறினாள்.
“நீ அது என்னோடதுன்னு சொன்னால் கிருஷ்ணா என்ன கோபப்படவா போறான்? மகிழ்ச்சியோட உன் காலடியில் கொண்டு வந்துதானே போடுவான்.”
அவன் குரலில் உள்ள பேதம் புரியாமல் அவனை நோக்கினாள்.
இவனைப் பற்றித் தெரிந்தும் இவனுடன் பேச நின்ற தன் முட்டாள்தனத்தை அவள் நொந்து கொண்டாள்.
“எனக்கு நேரமாகிறது. நான் போகனும்.”
“நான் வேண்டுமானால் கொண்டு வந்து விடவா?” அவன் குரலில் என்ன இருந்தது? புரியவில்லை.
அவனுக்குப் பதில் கொடுக்க அவள் விரும்பவில்லை. வாதத்தை வளர்க்கவும் விரும்பவில்லை.
நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். விலகி நடக்க ஆரம்பித்தாள்.
“மது.” அவள் அழைப்பில் மதன்ராஜ் ஓடிவந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்தாள்.
‘அபர்ணா. இங்கே வந்திருக்கவே கூடாது. எதற்காக, என்னத்த தெரிஞ்சுக்க நீ இங்கே வந்தே? நீ வந்த வேலை என்ன? இப்ப செஞ்சுக்கிட்டு இருக்கிறது என்ன?’
தன்னையே திட்டிக்கொண்டாள்.
தன்னறைக்கு வந்த சித்தரஞ்சனும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தான்.
‘டேய் இப்ப எதுக்குடா அவக்கிட்ட பேச்சு கொடுத்தே? உனக்குத்தான் அவளைக் கண்டாலே ஆகாதே அப்புறம் எதுக்கு அவளைத் தேடிப்போய் பேசறே? அவ எப்படி போனால் உனக்கென்ன? அவளோட யார் சுத்தினால் உனக்கென்ன? உனக்கு செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கு. அதில் எதற்கு இந்த வேண்டாத வேலை?’‘
தன்னையே திட்டிக்கொண்டவனுக்கு எதற்காக அங்கே போனோம் என்று நினைவில் வர திடுக்கிட்டான்.
‘அவள் மீது அத்தனை வெறுப்பு இருக்கிறது. இருந்தும் எனக்கு எப்படி இப்படி தோன்றியது?’
தன்னையே நொந்து கொண்டான்.
அவளின் வார்ப்பாக இருந்த மதன்ராஜை கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்ற உந்துதல் வந்ததால்தான் அவன் அவனையறியாமல் அவ்விடத்திற்கே வந்திருந்தான்.
இன்னும் சிறிது நேரம் மட்டும் மதன்ராஜ் அபர்ணாவிடம் செல்லாமல் நின்றிருந்தான் என்றால் அதைத்தான் செய்திருப்பான்?
அப்படி மட்டும் செய்திருந்தான் என்றால் என்னவாகியிருக்கும்?
அவளும் கிடைத்தது புளியங்கொம்பு என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பாள்.
அருவருப்புடன் நினைத்தான்.
இனி கவனமாக இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே அறிவுறுத்திக்கொண்டான்.
எதனால் அந்த சிறுவன்பால் ஈர்க்கப்பட்டான் என்று இப்போதும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சென்றனர்.
அன்றைய அலைச்சலாலோ என்னவோ போன உடனே படுத்துவிட்டான் மதன்ராஜ்.
அவளும் அவனருகில் படுத்தாள். உறக்கம் வருவேனா என்றது.
உறக்கத்தில் எங்கே அந்த கனவு மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது.
‘அம்மா’ என்ற முனங்கலுடன் அவளை நோக்கித் திரும்பிப்படுத்த மதன்ராஜை அணைத்துத் தட்டிக்கொடுத்தவள் சுற்றுமுற்றும் யாராவது தங்களை கவனித்தார்களா? என்று பார்த்துக்கொண்டாள்.
சீக்கிரம் தனியிடம் பார்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
காதல் வளரும் . . . . . .
error: Content is protected !!