Skip to content
Post Views: 4,472
அத்தியாயம் – 4.1
அந்த இரவு வேளையிலும் கிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பரபரப்பாக இருந்தது.
பொன்னி கத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் ஜெயச்சந்திரன் அவசரமாக ஓடிவந்தார்.
அவரோடு அன்றைய இரவு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களும் ஓடி வந்தனர்.
Advertisement
சித்தரஞ்சனும் பதற்றத்துடன் வாயிலில் நின்றான். உள்ளே சென்ற மருத்துவர்கள் இன்னும் வரவில்லை.
தேவேந்திரன் மட்டும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தது போல் அவரது அமைதி இருந்தது.
Advertisement
அன்றைய இரவு தூங்கிவிடுவோமோ என்று ஜெயச்சந்திரன் கொடுத்த பாலை மறுத்துவிட்டு மகன் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயிலிலேயே அவர் அமர்ந்திருந்தார்.
Advertisement
அதனால்தான் அவரால் அறைக்குள் நுழைந்த அபர்ணாவைக் காண முடிந்தது.
அவள் அப்போது செவிலியர் உடையில் இல்லை. அதனால் அவள் யார் என்று அவர் அறியவில்லை.
அவள் ஏன் உள்ளே செல்கிறாள்.
Advertisement
அதுவும் சுற்றுமுற்றும் பார்த்தவாறே ஏன் செல்கிறாள்? என்ற கவலை ஒரு நிமிடம் அவருக்கு வந்து போனது.
அவள் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால் அவளைக் காணும் போது ஏனோ அவளைத் தவறாக எண்ணவும் அவரால் முடியவில்லை.
மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கிறான்.
அவனை யார் என்ன செய்துவிட முடியும்? அவள் என்ன செய்கிறாள் என்று மட்டும் பார்த்துவிட்டு வந்து அவரது இடத்தில் அமர்ந்துகொண்டார்.
அவள் வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே உள்ளே பணியில் இருந்த பொன்னி கத்தியதும் அவர் உள்ளே எழுந்து சென்று என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள முயலவில்லை.
மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் நம்பிக்கை. மகன் எழுந்து வந்துவிடுவான் என்று திடமாக எண்ணினார்.
கடவுள் தன்னைக் கைவிடமாட்டார். தான் யாருக்கும் மனமறிந்து எந்த கெடுதலும் செய்யவில்லை. அதனால் கடவுள் துணையிருப்பார்.
மருத்துவர்கள் பரபரப்புடன் உள்ளே சென்றதையும், மூத்த மகன் தவிப்புடன் வெளியே காத்திருப்பதையும் வேடிக்கை பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்திலேயே ஜெயச்சந்திரன் வெளியில் வந்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது.
அதுவே எந்த பிரச்சினையும் இல்லை என்று சித்தரஞ்சனுக்கு கூறியது.
நண்பனின் அருகில் ஆதூரத்துடன் அமர்ந்தார் ஜெயச்சந்திரன்.
“தேவா. நம்ம மனோ நம்மிடம் திரும்பி வந்துவிட்டானப்பா.” என்று ஒரு வரியில் நிலைமையயைக் கூறினார் ஜெயச்சந்திரன்.
கண்கள் கலங்க நண்பனின் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒத்திக்கொண்டார் தேவேந்திரன்.
இந்த வார்த்தைகளை கேட்கத்தானே மூன்று நாட்களாக இந்த அறையின் வாயிலில் தவம் கிடக்கிறார்.
சிறிது நேரம் நண்பனை அப்படியே விட்டார் ஜெயச்சந்திரன். அவரது மனதில் என்ன மாதிரி தவிப்பு இருந்தது என்பது உணர்ந்தவர்தானே? அவரும் ஒரு தந்தை.
“இனியாவது உன்னைப் பத்தி யோசி தேவா. இனி அவனை நாங்க பார்த்துக்கிறோம். நீ வீட்டுக்குப் போ.”
“இருக்கட்டும்பா. நான் நாளைக்குப் போறேனே.” சின்னக் குழந்தையைப் போல் கெஞ்சலாகக் கேட்ட நண்பனை கனிவுடன் பார்த்தார்.
“சரிப்பா. அப்படின்னா. வா என்னோட அறைக்குப் போகலாம். நீ இங்கே இருக்கிறதா இருந்தால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.” கண்டிப்புடன் கூறினார்.
“சரி.” என்று எழுந்த நண்பனை முன்னே போகச் சொல்லிவிட்டு தயக்கத்துடன் சித்தரஞ்சனைப் பார்த்தார்.
“என்ன அங்கிள்?”
“மனோ இப்ப முழுமையா குணமாகலை. ஆனால் அவனுக்கு சுயநினைவு வந்து திரும்பியிருக்கு. இனி பிரச்சினையில்லை. அவன் உடல்நிலையில் முன்னேற்றம் வந்துடும். அவன் யாரோ சரண் சரண் என்ற பெயரை சொல்லி முனங்கினான். அந்த சரணை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப் பாருங்க. இனி தான் அவனுக்கு என்னென்ன பிரச்சினைன்னு பார்க்கனும்.”
“நீங்க சொல்றதை நானும் முயற்சி பண்றேன் அங்கிள். இனி அவன் குணமாகிவிடுவான். நீங்க அவனைத் தேற்றிக்கொண்டு வந்துடுவீங்க.”
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு.” என்று பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு அகன்றார் ஜெயச்சந்திரன்.
சித்தரஞ்சன் அவர் கூறிவிட்டுச் சென்றதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த சரண்யா எங்கே சென்றாள் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பெற்றோர் விபத்தில் இறந்து விட்டார்கள். அவள் அவளுடைய உறவினர்கள் வீட்டிலும் இல்லை.
யாரிடமும் எந்த பதிலும் இல்லை. ‘அவள் எங்கே சென்றாள் என்று தெரியாது’ என்று பட்டும் படாமலும் பதில் சொன்னவர்களைக் கண்டு அவனுக்கு எரிச்சலாக வந்தது.
வயதுப்பெண் அவள். பெற்றோரை பறிகொடுத்த நிலையில் அவள் என்னவானாள்? என்று தெரிந்து கொள்ளும் அக்கறை கூட அவர்களிடம் இல்லையே.
இத்தனைக்கும் அவர்கள் அவளது நெருங்கிய உறவினர்கள். தாய் வழி, தந்தை வழி உறவுகள்.
சித்தரஞ்சன் உள்ளே சென்றான். மனோரஞ்சன் மயக்கத்தில் இருந்தான். இனி பயம் வேண்டாம் என்று ஜெயச்சந்திரன் கூறியிருந்தார்.
‘மனோ. சீக்கிரம் எழுந்து வந்துருடா. இந்த இரண்டு வருடங்களாக என்னிடம் பேசாமல் எனக்குத் தண்டனை கொடுத்தது போதும்டா. இனி நீ வருத்தப்படற மாதிரி நான் நடந்து கொள்ள மாட்டேன்டா. என்னை மன்னிச்சிடுடா.’
சகோதரனின் கரத்தினை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டே மனதார அவனுடன் பேசினான்.
பொன்னி ஒதுங்கி நின்று அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தாள்.
அவனிடம் எதுவும் பேச முயலவில்லை. அவனிடம் பேசுமளவிற்கு அவளுக்குத் தைரியம் கிடையாது. அவர்கள் குடும்பம் பற்றி நன்கு அறிந்தவள் அவள்.
சிறிது நேரம் உள்ளே இருந்துவிட்டு வெளியேறினான்.
——————————————-
ஜெயச்சந்திரனின் அறையில் படுத்திருந்த தேவேந்திரனின் மனதில் அபர்ணாவே இருந்தாள்.
அவள் யார் என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. எப்படியும் இங்கேதான் இருக்கிறாள்.
காலையில் அவள் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
“தேவா. அதுதான் உன் மகன் உன்னிடம் வந்துவிட்டானே. இன்னும் ஏன் உன் உடம்பைக் கெடுத்துக்கறே. அலட்டிக்காமல் படுத்துத் தூங்கு. இல்லைன்னா உன்னை வீட்டிற்கு விரட்டிவிடுவேன்.” செல்லமாக அதட்டினார் ஜெயச்சந்திரன்.
நண்பனின் செல்ல அதட்டலை ரசித்து சிரித்தவர் கண்களை மூடிக்கொண்டார்.
இந்த மூன்று நாட்களும் ஒளியிழந்து கிடந்த அவர் முகத்தில் சிரிப்பைக் கண்ட ஜெயச்சந்திரனும் நிம்மதியாக உறங்க ஆயத்தமானார்.
——————————————-
செவிலியர்கள் ஓய்வறையில் மதன்ராஜ் அருகில் படுத்திருந்த அபர்ணா இன்னும் உறங்கவில்லை.
மருத்துவமனையில் இருந்த பரபரப்பு அறிந்தும், எதனால் என்று தெரிந்தும் அவள் அவ்விடம் விட்டு அகலவில்லை.
அவள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். அரவிந்தன்.
“என்ன அரவிந்தா இது? நான்தான் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றேனே? யாருக்காவது சந்தேகம் வந்துவிட்டால்?”
“அக்கா என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்னால்தான் மனோவுக்கு இந்த நிலைமை.”
“அதெல்லாம் இல்லை. நீ தேவை இல்லாமல் வருத்தப்படறே.” ஆறுதலுடன் கூறினாள்.
“இல்லக்கா. நான் அந்த விபத்து நேரில் நடந்த இடத்திற்குப் போனேன். அங்கே உள்ள ஒருவர் கூறித்தான் அது தற்செயலாக நடந்த விபத்து கிடையாது. அவன் வேண்டுமென்றே போய் மோதினான் என்று சொன்னார். அப்படின்னா அது தற்கொலை முயற்சிதானே? இந்த இரண்டு வருடங்களாக தற்கொலைக்கு முயலாதவன் ஏன் இப்போது இப்படி செய்தான்? நான் அவனிடம் பேசியதால்தானே? அந்த முட்டாள் என்ன புரிந்துகொண்டான் என்று தெரியவில்லை. இப்படி பண்ணிட்டான்.”
அரவிந்தனின் குரலில் அவன் மனோரஞ்சனின் மீது வைத்த பாசம் புரிந்தது.
இத்தகைய நண்பர்கள் கிடைக்க மனோரஞ்சன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
“நீ கவலைப்படாதே. மனோ ஆபத்துக் கட்டத்தை தாண்டிட்டான்.”
“ரொம்ப சந்தோசமா இருக்குக்கா. அவனைப் பார்க்கலாம்னா அங்கே சித்தரஞ்சன் சார் இருப்பார். அவருக்கு என்னைப் பிடிக்காது. என்னவோ அவங்ககிட்ட இருக்கிற பணத்திற்காகத்தான் நாங்கள் அவனோடு பழகுவது போன்று அவர் எண்ணம்.”
‘அவருக்கு யாரைத்தான் பிடித்திருக்கிறது? எல்லாரையும் பணக்கணக்கு கொண்டு பார்த்தால் யாரும் நல்லவர்களாக தெரியமாட்டார்கள்.’
மனதிற்குள் முணுமுணுத்தாள்.
“என்னக்கா?”
அவள் முணுமுணுத்தது புரியாமல் மறுமுனையில் அரவிந்தன் கேட்டான்.
“ஒன்றுமில்லை அரவிந்த். நீ கவலைப்படாமல் தூங்கு. மனோ கொஞ்சம் தெளிவானதும் நீ நேரில் வந்து பார். அவனோடு பேசு. ஆனால் என்னைத் தெரியும் என்பது போல் காட்டிக்கொள்ளாதே. அப்புறம் நான் வந்த வேலை கெட்டுவிடும்.”
“இல்லக்கா. நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்.”
“சரி அரவிந்த். நீ இப்ப தூங்கு.”
“சாரிக்கா. உங்களை தூங்கற நேரத்தில் தொந்தரவு பண்ணிட்டேன். இப்ப யாரும் கூட இருக்க மாட்டாங்க என்ற தைரியத்தில்தான் கூப்பிட்டேன்.”
“நீ எப்பவும் எனக்கு தொந்தரவா இருந்தது இல்லை. உதவிதான் பண்ணியிருக்கே. அதனால் நிம்மதியா தூங்கு.” ஆறுதலுடன் கூறினாள்.
“ரொம்ப நன்றிக்கா. குட் நைட்.” என்று அவன் அழைப்பைத் துண்டித்தான்.
அபர்ணாவிற்கு உறக்கம் வரவில்லை. இப்போது என்றில்லை. அவள் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கி பல வருடங்கள் ஆகின்றன.
மனோரஞ்சனின் விபத்தைப் பற்றி கூறியவன் அரவிந்தன் தான்.
மனோரஞ்சனை அந்த நிலையில் பார்த்த போது அவள் மனம் துடித்தது.
அவளது தொழிலில் இதைப் போன்று எத்தனையோ நோயாளிகளைப் பார்த்தவள்தான்.
மனோரஞ்சனை அவள் நேரில் பார்த்ததில்லை. அவனைப் பற்றி கேள்விப்பட்டு தெரிந்து கொண்டதுதான்.
இப்போது அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையையும் வாழ முடியாமல், அவனுக்கு வாய்த்த வாழ்க்கையையும் வாழாமல் உயிர் துறக்க முயற்சி செய்த அவன் வயதில் தன்னைவிட இளையவன்.
பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஏன் அவனாலும் நிம்மதியாக வாழ முடியவில்லை.
பணம் இல்லாவிட்டாலும் நிம்மதி பறிபோகிறது.
அதிகமாக இருந்தாலும் நிம்மதியாக வாழ விடுவதில்லை.
இந்தப் பணம் அனைவரையும் ஆட்டிவைக்கிறது என்று விரக்தியுடன் நினைத்தவள் அருகில் படுத்திருந்த மதன்ராஜை அணைத்துக் கொண்டு உறங்க முயற்சி செய்தாள்.
——————————————-
“செல்லம். தங்கம். எழுந்திரிடா. அம்மா உனக்காக என்னவெல்லாம் சமைத்து வைத்திருக்கிறேன் தெரியுமா? எழுந்து வாடா.” தாய் விஜயாவின் கொஞ்சல் குரலில் கண்விழித்தாள் அபர்ணா.
“அம்மா. இன்னும் கொஞ்சம் தூங்கறேனே அம்மா.” கெஞ்சலான குரலில் கேட்டாள்.
“இல்லடா தங்கம். நேரத்துக்கு சாப்பிட்டால்தானே உடம்பு நல்லா இருக்கும். முதல்ல எழுந்து சாப்பிடுவியாம். அப்புறம் திரும்ப தூங்குவியாம். இன்னிக்கு தீபாவளி. புது டிரஸ் எல்லாம் போடனும் இல்லை.”
அம்மா இனி தூங்க விடமாட்டாள் என்று அபர்ணாவிற்குப் புரிய செல்லச் சிணுங்கலுடன் எழுந்தாள் அபர்ணா.
“அம்மா. இன்னிக்குக் காலையிலேயே சிக்கனாம்மா?” முகத்தைச் சுளித்தவாறே கேட்டாள்.
“ஆமாடா கண்ணா. இன்னிக்கு தீபாவளி. அதான் அப்பா காலையிலேயே போய் சிக்கன் வாங்கிட்டு வந்துட்டார்.”
“அம்மா. எனக்கு இட்லி சாம்பார் தர்றியாம்மா. எனக்கு சிக்கன் பிடிக்கலைம்மா. எப்போதுமே அதைத்தான் சாப்பிடறேன். சலிச்சுப் போச்சு.”
“அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுடா தங்கம். இதெல்லாம் சாப்பிட்டால்தான் நீ பெரிய பெண்ணாகலாம்.” எழுந்த மகளின் தலையைக் கோதி முத்தமிட்டாள் விஜயா.
“இப்பவே நான் என் கிளாஸ் பிள்ளைகளை விட பெரிய பொண்ணாத்தான் இருக்கேன்மா. எல்லாரும் என்னை ஒட்டகசிவிங்கின்னு கிண்டல் பண்றாங்க.”
“அப்படியாடா தங்கம். அதெல்லாம் உன்னோட அழகைக் கண்டு பொறாமைப்பிடிச்ச கழுதைங்க. அவங்களுக்கு இந்த அழகு வாய்க்கலை இல்லை. இன்னிக்கு அம்மா உனக்கு திருஷ்டி சுத்திப் போடறேன்.”
“என்ன அம்மாவும் மகளுமா கொஞ்சுக்கிட்டு இருக்கீங்க?” கேள்வியுடன் உள்ளே நுழைந்த கணவன் முருகேசனிடம் மகளிடம் பேசியதைக் கூறினாள்.
“ஆமா பாப்பா. அவங்க எல்லாருக்கும் நீ ரொம்ப அழகுன்ற பொறாமை. அவங்க சொல்றது எதையும் நீ காதில் வாங்கிக்காதே.”
‘அப்படியும் இருக்குமோ?’ என்ற எண்ணத்துடன் குளிக்கக் கிளம்பினாள் அபர்ணா.
“இப்படி நீள முடி வேண்டாம்னு எத்தனை தடவை சொல்றதுடா தங்கம்? இப்பப் பாரு நீ எப்ப தலை குளிச்சுட்டு வந்து சாப்பிடறது? வயிறு வாடிப்போயிடும்ல.” கரிசனத்துடன் கேட்டாள் விஜயா.
அது என்னவோ மகள் தலை முடியை நீளமாக வளர்ப்பது ஆரம்பத்தில் இருந்தே விஜயாவிற்குப் பிடிக்கவில்லை.
“நீ போடுற மாடர்ன் டிரஸ்ஸிற்கு இந்த நீள தலை முடி அவ்வளவா நல்லாயில்லை பாப்பா.” என்று அவளது தந்தையும் அவளிடம் கூறியிருக்கிறான்.
அது என்னவோ முடி மீது அபர்ணாவிற்கு அத்தனை பற்று. என்ன சொன்னாலும் தாயும், தந்தையும் கேட்பதில்லை.
“அம்மா. இப்படி நீள முடி இருக்கிறதுதான் நல்லதுன்னு பரத நாட்டிய டீச்சர் கூட சொன்னாங்கம்மா.” என்று பழியை அவளுக்குப் பரத நாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசிரியை மீது தூக்கிப் போட்டாள்.
அவரும் அவளுடைய முடியைப் பற்றி சிலாகித்தது உண்டு.
அவளுக்கு செயற்கை முடி வைக்கத் தேவையில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார்.
அதனால் அவள் கூறியது முற்றிலும் பொய் என்றும் கூற முடியாது.
“அப்படியாடா தங்கம். அப்படின்னா சரி. இருந்துவிட்டுப் போகட்டும்.” என்று வேறு வழியில்லாமல் அவளுடைய பெற்றோர் அதை ஏற்றுக்கொண்டனர். இனி அவர்கள் தன் முடியைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்று அவள் நிம்மதியடைந்தாள்.
அது என்னவோ அவள் கேட்டது, கேட்காதது என்று அனைத்தும் அவளுக்குக் கிடைக்கிறது.
அவர்கள் அந்தளவிற்கு வசதியில்லை என்று தெரிந்தும், ஒரே பெண் என்று பெற்றோர் தன் மேல் உள்ள பாசத்தினால் தன்னைத் தாங்குகிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது.
வசதியில்லை என்பதும் அக்கம் பக்கத்தினர் அவர்களைப் பற்றி குறையாகக் கூறுவதைக் கேட்டதினால்தான் அவளுக்குத் தெரிய வந்தது.
“இதுங்களுக்கு வசதி குறைவுன்னாலும் பண்ற பந்தா தாங்கலை. தேவை இல்லாமல் அந்தப் பொண்ணுக்கு எதுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்து தாங்கறாங்க. பிள்ளை அடம் பிடித்தால் வீட்டு நிலைமையை சொல்லி புரிய வைக்கிறதை விட்டுட்டு அவ ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குவிக்கிறாங்க.”
இப்படி சில பேர் பேசியதைக் கேட்ட அபர்ணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் எதுவும் கேட்டு அடம் பண்ணியதில்லை. அவளது பெற்றோராகத்தான் இதை எல்லாம் செய்கிறார்கள்.
அவள் மேல் அவர்கள் உயிராய் இருக்கிறார்கள்.
அவளும் தன் பெற்றோர் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.
அக்கம்பக்கத்தினர் பேசுவதை அவள் தன் பெற்றோரிடம் கூற, “அந்தப் பேச்சை எல்லாம் விட்டுத்தள்ளுடா. உன்னைப் பார்த்து எல்லாருக்கும் பொறாமைடா. இத்தனை அழகோட அவங்க வீட்டுப் பிள்ளைங்க இல்லையே. அதனால்தான் அப்படிப் பேசறாங்க.” அம்மா அவளுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழிப்பாள்.
அவளுடைய பெற்றோர் அவளது பெயர் சொல்லி அழைத்த ஞாபகமே அவளுக்கு இல்லை.
அவளுடைய அன்னை “தங்கம், செல்லம் வைரம்” என்றுதான் கொஞ்சுவாள்.
அவளுடைய தந்தையின் அழைப்பு எப்போதுமே “பாப்பா” தான்.
அவள் குளித்துவிட்டு வந்ததும் அவளுக்கு தீபாவளிக்கென்று எடுத்த உடையைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்றாள் விஜயா.
அந்த உடையைக் கண்டதும் மீண்டும் பெற்றோரை என்ன சொல்ல என்று ஒன்றும் புரியாமல் நின்றாள் அபர்ணா.
இத்தனை பளபளப்புடன் அதிக விலையில் இந்த உடை தேவையா?
“அம்மா.”
“என்னடா தங்கம்?”
“உங்களுக்கு என்னம்மா எடுத்தீங்க?”
“எங்களுக்கு எதுக்குடா புதுசெல்லாம்?”
“அம்மா இவ்வளவு விலைக்கு எனக்கு மட்டுமே எடுத்ததுக்கு எனக்கு இன்னும் கொஞ்சம் விலை குறைத்து எடுத்துவிட்டு, உங்களுக்கும் சேர்த்து எடுத்திருக்கலாமே?” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“என் குட்டித்தங்கம் என்னமா யோசிக்குது? புதுசு போடலைன்னா நாங்க என்ன கெட்டா போயிட்டோம். நீதான் வளர்ற புள்ளை தங்கம். ஆசைப்பட்டதை எல்லாம் போட்டுப் பார்க்கனும். சீக்கிரம் போட்டுக்கிட்டு வாடா. சாப்பாடு ஆறுது.”
அவர்களுக்கு வசதி குறைவு என்றாலும் அந்த வீட்டில் இருந்த ஒரே அறையை அவள் பயன்பாட்டிற்கு என்று கொடுத்திருந்தனர்.
அதில் டிரஸ்ஸிங் டேபிள் ஒன்று இருக்கும். அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கிறது.
அவள் அலங்காரம் செய்வதெற்கு என்று அத்தனை பொருட்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறாள் விஜயா.
அவள் உடையை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள்.
டிரஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடியில் அவளைக் காணும்போது மிகவும் அழகாக இருந்தாள்.
ஆனாலும் சிக்கென்று உடலோடு ஒட்டியிருந்தது மனதிற்குள் குடைந்தது. அதுவும் முட்டி வரையே இருந்தது அந்த உடை.
அவள் சாப்பிட சாப்பிட பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள் விஜயா.
அவள் சாப்பிட்டு முடித்தாள். எப்போதும் அவள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் அவள் பெற்றோர் சாப்பிடுவார்கள்.
“சரிடா. நீ போய் மேக்கப் போட்டுக்கோ. நாங்க சாப்பிட்ட பிறகு கோயிலுக்குப் போயிட்டு வருவோம்.”
அவள் மறுத்தாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். அமைதியாக சென்று கண்ணாடி முன்பு அமர்ந்தாள்.
இந்தப் பேரழகே மற்றவர்களை பொறாமைப்பட வைக்கிறது.
அதுவே அவளிடம் மற்றவர்களை நட்புடன் ஒட்டவிடாமல் ஒதுங்க வைக்கிறது.
இப்போதெல்லாம் மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பார்வையை அவள் கவனிக்க ஆரம்பித்திருக்கிறாள்.
அதைப் பற்றிக் கேட்டால் பொறாமைப் பார்வை என்று பதில் வரும்.
அதுவும் சரிதான். பெண்கள் மட்டும்தான் அந்த மாதிரிப் பார்த்தார்கள்.
சில ஆண்களின் விழிகளில் பளபளப்பு தெரியும். அப்போதெல்லாம் கூச்சம் கொண்டு விஜயாவுடன் ஒட்டிக்கொள்வாள் அபர்ணா.
இப்போதும் கோயிலுக்குப் போகும்போது கூட தன் அன்னையை ஒட்டியே நடந்தாள்.
அடிக்கடி சுற்றிலும் யாரையோ தேடிப்பார்த்தாள். ஏமாற்றமும், நிம்மதியும் மாறி மாறி அவள் மனதை நிரப்பின.
கோயில் சன்னதியில் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.
“பாப்பா. தீபத்தை கண்களில் ஒத்திக்கோ.” என்று அவளுடைய பெற்றோர் அவள் தோளை அசைத்துக்கூறினர்.
ஆனால் அது எதுவும் காதில் விழாமல் அவளுடைய எண்ணம் வேறெங்கோ இருந்தது.
கண்களை அவள் திறக்கவில்லை.
’நான் எந்த தப்பும் செய்யலை கண்ணா. நீ என்னை அப்படி பார்க்காதே. உன்னோட கோபத்தைக் கூட தாங்கிப்பேன். ஆனால் உன்னோட வெறுப்பை என்னால் தாங்கிக்க முடியலை. என்னால் தாங்கிக்க முடியலையே. ப்ளீஸ் என்னை நம்பேன்.’
மனதிற்குள்ளேயே புலம்பினாள்.
error: Content is protected !!