Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 19

அத்தியாயம் 19

​”இப்போ போலாமா?” தன்னிடம் கேட்ட அஜய்யிடம் தலையசைப்புடன் சம்மதம் தந்தாள். இருவரும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மழைத் தூறல் போட ஆரம்பித்தது. மின்னல் பளிச்சென்று வந்து போக, அடுத்த நொடிகளில் இடியும் இடித்தது…



Advertisement

“மழை வரும் போலிருக்கு, சீக்கிரம் போலாம்,” எனச் சொன்ன அஜய்யிடம், “மழையைப் பார்த்து ஏன் இப்படி பயப்படுறீங்க, அது உங்களை எதுவும் செஞ்சிடாது,” என கிண்டலான பார்வையில் சொல்லியவள், “நீங்க மட்டும் கொர்னெட்டோ சாப்பிட்டீங்களே, என்னைப் சாப்பிடுறியானு ஒரு வார்த்தையாச்சும் கேட்டீங்களா? பசில என் வயிறு வேற சத்தம் போட ஆரம்பிடுச்சி,” சோகமான முகத்துடன் சொன்னவளைக் கண்டு சிரித்தவன், தங்களுக்கு எதிர் திசையில் ஐஸ் வண்டி நிற்பதைக் கண்டு, அவளுக்கு வாங்கி வந்து கொடுத்தான்…

​அதே நேரம் சரசரவென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது, மக்கள் வேக வேகமாக அவ்விடத்தை விட்டுக் காலி செய்தனர். “நான் சொல்லும் போதே போயிருந்தா இப்படி நனைய வேண்டியது வந்திருக்காது,” மழையில் நனைந்திருந்த தனது கேசத்தைப் புறம் தள்ளியபடி சொன்னான் அஜய்…

Advertisement

Advertisement

​”போயிடலாம், வண்டி எங்க இருக்கு?” என்றாள் ஸ்மிருதி.

​”இன்னும் கொஞ்சம் தூரம் நடக்கணும்,” என்றவன், “மழைல ஐஸ் சாப்பிடுறதால கோல்ட், ஃபீவர் வரும்னு உனக்குத் தெரியாதா?” என்றான் அக்கறையுடன்…

Advertisement

​”எனக்கு அதெல்லாம் வராது, நான் நிறையததடவை சாப்பிட்டிருக்கேன்,” என்றாள்.

சிறிது தொலைவு நடந்தவர்கள் வண்டியை வந்து சேர்ந்தனர்.

​இருவரும் முன் சீட்டில் தங்களது இருக்கையில் அமர, பின் சீட்டிலிருந்து ஒரு டவலை எடுத்த அஜய், “இந்தா, தலையை துவட்டிக்கோ,” என்றபடி அவளிடம் நீட்டினான்.

​”கார் உள்ள டவலா?” ஆச்சரியமாகக் கேட்டவளிடம், “யூஸ் ஆகும்னு இங்கே, ஒரு டிரஸ் செட், டவல் இன்னும் அர்ஜென்ட்க்குத் தேவையான திங்ஸ் வச்சிருப்பேன்,” என்றான்.

வியந்தவள், “ஓகே, நீங்க துவட்டிக்கோங்க, எனக்கு இப்போ தேவை இல்லை,” என்றவள் தும்மல் போடத் துவங்கினாள்…

​”இப்போதும் உனக்கு இது தேவை இல்லையா?” மூக்கை உறிஞ்சியபடி இருந்தவளிடம் அவன் கேட்க,.. “வேணாம்,” எனச் சொல்ல வந்தவள், தொடர்ச்சியாக சில முறை தும்மினாள்.

​புருவத்தை உயர்த்திப் பார்த்தவனிடம், பற்களைக் காட்டியபடி டவலை வாங்கிக்கொண்டவள், தலையைத் துவட்டினாள், அஜய் வண்டியை ஸ்டார்ட் செய்து அப்பார்ட்மெண்டை நோக்கி விரைந்தான்,..

​வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள், ஈர உடையை மாற்றிவிட்டு வந்தனர். இரவு உணவை முடித்ததும், தத்தம் இடத்தில் படுத்து உறங்கினர்.

​

​மறுநாள் விடியலில் உறக்கத்திலிருந்து விடுபட்ட அஜய்யின் கண்களில் பட்டது, தலை முதல் கால் வரை போர்வையால் போர்த்தபடி படுத்திருந்த ஸ்மிருதியைத் தான்.

​’என்ன ஆச்சு இவளுக்கு,’ என யோசித்தவன், அவளருகில் சென்று “ஸ்மிருதி,” என அழைக்க, அவள் அப்போதும் அதே நிலையில் தான் இருந்தாள்…

​சிறிதும் யோசிக்காமல் அவள் முகத்திலிருந்த போர்வையை விலக்கியவன், அவள் கண் மூடி இருப்பதை கண்டான். கூடவே அவளின் உதடுகள் துடித்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதையும் கண்டான். ஒரு நொடி யோசிக்காமல், அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவனுக்கு அனலாகக் கொதிப்பது தெரிந்தது…

​”ஷிட்… உடம்பு நெருப்பா சுடுது, எப்போதுலருந்து இப்படி இருக்குன்னு தெரியலையே,” பதற்றத்துடன் ஏசியை ஆஃப் செய்தவன், அவளின் பெயர் சொல்லி அவளை எழுப்ப முயன்றான்…

​அஜய்யின் குரலில், உறக்கத்திலிருந்து சோர்வுடன் விழிகளை திறந்தாள் அவள்,… “ஃபீவர்னா என்கிட்ட சொல்ல மாட்டியா? எப்போதிலிருந்து இப்படி இருக்கு?” என்றவன், “வா ஹாஸ்பிட்டல் போலாம்,” என உரிமையாக அழைத்தான்…

​”எது ஹாஸ்பிட்டல்க்கா? நான் வர மாட்டேன், ஹாஸ்பிட்டல் ஸ்மெல்லே எனக்குப் பிடிக்காது, பயத்தைத் தான் உண்டாக்கும். நான் டேப்லட் போட்டேன், சரியாகிடும்…” என்றாள் சோர்வான குரலில்…

​”எப்போ போட்ட?” எனக் கேள்வி எழுப்பியவனிடம், “நைட் ஃபீவர் வர மாதிரி இருந்ததுனு தூங்கும் போது பேரசிடமால் போட்டுட்டுத் தான் படுத்தேன்,” என்றாள்…

​”நைட் போட்டிருக்க, இப்போ வரைக்கும் உடம்பு அனலாக் கொதிக்கிது,” என்றவன் தெர்மாமீட்டரை எடுத்து வந்து டெம்பரேச்சர் பரிசோதித்தான்.

​102 டிகிரி எனக் காட்ட, “இப்போ என் கூட கிளம்பு,” அதிகாரத் தொனியில் சொன்னான். அவனின் வார்த்தையைத் தட்ட முடியாமல் அவனுடன் புறப்பட்டாள் அவள்..

​

​மருத்துவமனையில், ஸ்மிருதி பரிசோதிக்கப்பட்டு, சில மருந்துகளைப் பரிந்துரைத்தார் மருத்துவர். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் கையுடன் வாங்கி வந்த இட்லியைச் சாப்பிடச் சொல்லி, அவள் மருந்து எடுத்துக்கொள்ளும் வரை அவளுடனே இருந்தான் அஜய்…

​அந்த நேரம் அஜய்யின் போன் ஒலித்தது. அறையின் வெளிப்பக்கம் சென்று, “சொல்லு ப்ரீத்தி,” என்றவன், “இல்ல, நான் இன்னைக்கு ஆஃபிஸ் வரல. மீட்டிங் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடு,” என்றான் ப்ரீத்தியிடம்.

​”ப்ச்… மிஸ்டர் விஸ்வநாத்தை டுமாரோ மீட் பண்ணுறேன்னு இன்பார்ம் பண்ணிடு.”

_________

​”சோ வாட், அதனால என்ன? அவர் எவ்வளவு பெரிய ஆளா வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும், என்னால டுடே வர முடியாது.”

___________

​”ரீசன் என்னனு உனக்குத் தெரியாதா ப்ரீத்தி? மெஸ்ஸேஜ் பண்ணிருந்தேன்ல, என் வொய்ஃப்க்கு ஹெல்த் பிராப்ளம்னு. எத்தனை தடவை கேட்ப நீ?”

___________

​”அவர் கிட்ட நான் பேசிக்கிறேன், மத்ததை நீ பார்த்துகோ,” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு

​ஸ்மிருதியின் அருகில் வந்தவன்,.. “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீன்னா, ஃபீவர் குறைஞ்சிடும். நான் இங்கே ஹால்ல தான் இருப்பேன். ஏதாச்சும் வேணும்னா சொல்லு,” என்றவன், அறையிலிருந்து வெளியேறினான்.

​இத்தனை நேரம் அஜய் போனில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்மிருதிக்கு மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது. தனக்காகத் அவனுடைய மீட்டிங் அத்தனையையும் கேன்சல் செய்கிறாரா என்பதை நினைத்துப் பார்க்கும் போது, சொல்ல முடியாத உணர்வுகள் தோன்றி மறைந்தது. உடம்பெல்லாம் புல்லரிப்பது போல் சிலிர்ப்பு உண்டாகியது…

​இதழில் புன்னகை பூக்க, அஜய் போனில் உரையாடியதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவள், மருந்தின் வீரியத்தால் தன்னையும் மீறி உறங்கிப் போனாள்…

​கடிகாரம் பன்னிரண்டை காட்டியது. ஸ்மிருதி உறக்கத்தில் இருக்க, அடிக்கடி அவள் உடல்நிலையைப் பரிசோதித்துக்கொண்டே இருந்தான் அஜய். அறையின் டேபிளில் மடிக்கணினியில் இருந்த நேரம், ஸ்மிருதி உறக்கத்திலிருந்து விடுபட்டாள். விடுபட்டவளின் முகம் மாறியிருக்க, குமட்டல் ஏற்படத் துவங்கியது. பாத்ரூமின் கதவைத் திறந்தவள் வேகமாக உள்ளே ஓடினாள்…

​சத்தம் கேட்டுத் திரும்பிய அஜய், பாத்ரூமினுள் அவள் வாமிட் எடுக்கும் சத்தத்தைக் கேட்டுச் சிறிதும் யோசிக்காமல் அவனும் உள்ளே நுழைந்தவன், சோர்வில் கீழே விழ இருக்கும் அவளை, சரியான நேரம் சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான்…

அவளுக்கு மேலும் குமட்டல் ஏற்பட்டு வாமிட் வர, அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

​”இப்போ பெட்டரா இருக்கா?” என்றவனிடம், பேச முடியாமல் தலையசைத்தவள், அவன் உதவியுடன்  கட்டிலில் வந்து அமர்ந்தாள். அவளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தவன், குடிக்கச் சொல்ல, அவளும்

​மறுபேச்சின்றி குடித்தவள், அப்படியே மெத்தையில் சாய்ந்தாள்…

“என்ன ஆச்சு ஸ்மிருதி, என்ன பண்ணுது?” என்றான். கண் மூடிப் படுத்திருந்தவள் கண்களைத் திறந்து, அவன் முகத்தில் தெரிந்த கவலையைச் சரியாகக் கணித்துக்கொண்டாள்…

​”ஒன்னும் பண்ணல, இப்போ பெட்டரா இருக்கு,” என்றாள்.

​”வெயிட் பண்ணு, நான் உனக்குச் சாப்பிடக் கொண்டு வரேன்,” எனச் சென்றவன், ஒரு கிண்ணத்தில் சுடுகஞ்சியுடன் வந்தான்…

​எழுந்து அதனை கையில் வாங்கிக்கொண்டவள், அதனை ருசி பார்த்தபடி, “உங்களுக்கு இதெல்லாம் பண்ணத் தெரியுமா?” என்றாள்…

​”ஹ்ம்ம்… அத்தை பண்ணும் போது பார்த்திருக்கேன்,” என்றவன், “நீ இதைச் சாப்பிட்டு இந்த டேப்லட்டைப் போட்டுக்கோ,” என மேஜையின் பக்கம் வைத்தான்…

​’இந்த அத்தை யாரா இருக்கும்?’ என யோசித்தவள், ‘இவரைப் பத்தி எனக்கு ஒரு குண்டூசி அளவு கூடத் தெரியாதே. ச்சே, ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு, கட்டிக்கிட்ட ஹஸ்பண்டை பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம இருக்கேன்,’ எனத் தன்னைத் திட்டிக்கொண்டவள், ‘அத்தையைப் பத்தி அவர் கிட்டயே கேட்டுடுவோம்,’ என அவள் கேட்கப் போன சமயம் சரியாக ஸ்மிருதியின் போன் ஒலித்தது…

​”வெயிட் நான் எடுத்து தரேன்,” என்றவன், திரையில் ‘அம்மா” என்று வருவது கண்டு, “அத்தை கால் பண்ணுறாங்க,” என அவளிடம் நீட்டியவன்,.. ​”நீ பேசிட்டு இரு, நான் வந்துடுறேன்,” என  அவள் பேசுவதற்குத் தனிமையைக் கொடுத்துச் சென்றான்…

​”ஹெலோ… ஸ்மிருதி, எப்படிடா இருக்க? காய்ச்சல் லாம் பரவாயில்லையா? ஏன்டா மழைல நனைஞ்சு, போதாததுக்கு ஐஸ்கிரீம் வேற சாப்பிட்டிருக்க, பாரு இப்போ எப்படி காய்ச்சல்ல கஷ்டப் படுறன்னு.” எடுத்து எடுத்ததுமே அவள் தாய் கவலையுடன் பேசிக் கொண்டே போக, அந்த நேரம்

​”கொடு நான் பேசுறேன்,” என்றவாறு மறுமுனையில் இருந்து பாட்டியின் சத்தம் வந்த அடுத்த கணம்,.. “ஏன்டி மழைல எவளாவது ஐஸ் சாப்பிடுவாளாடி? சின்னக் குழந்தையா நீ? செய்றத எல்லாம் செஞ்சுட்டு காய்ச்சல் வந்து படுத்துடுறது! வைத்தியரைப் பார்க்கப் போனியா? இல்லையா? உனக்கெல்லாம் ரெண்டு மூணு ஊசிய போட்டு குத்தச் சொல்லணும், அப்போ தான் நீ சரி பட்டு வருவ,” என்றவாறு ஸ்மிருதியை வாய் திறக்க விடாமல் இருவரும் பேசிக்கொண்டே போகினர்…

​”ஸ்மிருதி எப்படிடா இருக்க, இப்போ உடம்பு பரவாயில்லயா?” என்றபடி தனது தந்தையின் குரல் கேட்க, “ஆமாம்பா, இப்போ பரவாயில்ல. நீங்களாச்சும் எனக்குப் பேச வாய்ப்பு கொடுத்தீங்களே,” என்றாள் சோகமான குரலில்…

சிரித்தவர், “உன் அம்மாவையும் பாட்டியையும் பத்தி உனக்குத் தெரியாதாம்மா,” என்றவர், “உன் அண்ணி பேசனுமாம்” என்று கூறிய அடுத்த நொடி, “எப்படி இருக்க ஸ்மிருதி?” என்றவாறு ஹேமாவின் குரல் கேட்டது…

​”நல்லா இருக்கேன் அண்ணி,” என்றாள்.

​”சரி, உடம்பைப் பார்த்துக்கோ,” சென்றவள், “உன் மருமகன் பேசனுமாம்” என்பதை தொடர்ந்து “ஹெலோ அத்தை,” என்ற அம்ரிஷின் குரல் கேட்டது…

​”அம்ரி,… எப்படிடா இருக்க?”

​”சூப்பரா இருக்கேன் அத்தை. உனக்கு ஃபீவரா? எத்தனை இன்ஜெக்ஷன் போட்டாங்க? ஐயோ பாவம் அத்தை நீ…”

​”டேய்,… இதை கேட்கத் தான் வேகமா அண்ணிகிட்ட போனைப் பிடுங்கிப் பேசுறியா?”

​”ஆமா, வீட்டுக்கு மாமாவை கூட்டிட்டி வா அத்தை, ஐ மிஸ் யூ சோ மச்,” என்றான்…

​”அச்சோ, என் செல்லக்குட்டி, என்னை அவ்ளோ மிஸ் பண்றானா?”

​”உன்னை இல்ல அத்தை, மாமாவைத் தான் நான் மிஸ் பண்றேன்,” என சொல்லி விட்டு கல கலவென சிரித்தான் அவன்…

​”உன்னை அங்க வரும் போது கவனிச்சிக்கிறேன்டா,” என்றதும் அவனும் சிரித்துக்கொண்டே பாட்டியிடம் கொடுத்து விட, சகுந்தலா மீண்டும் ஆரம்பித்தார்.

​”பார்த்துப் பத்திரமா இருடா. இனி ஐஸ்கிரீம்லாம் சாப்பிடாத. கொஞ்ச நாள் பக்குவமா இருந்துக்கோ. என் மனசுலாம் அங்க தான் கிடக்குது.”

​”சரிமா சரி, நீ பேசுனா பேசிக்கிட்டே இருப்ப. நான் அப்புறம் கால் பண்றேன்,” என்றபடி இணைப்பைத் துண்டித்தவள்,..

​’எனக்கு ஃபீவர் வந்ததை மட்டும் சொல்லாம, எதனால ஃபீவர் வந்தது, அப்படிங்கிறதையும் சொல்லிருப்பாரு போல,’ என கோபமாக முனகியவள் மறுநொடியே அவன் தனக்காகச் செய்யும் பணிவிடைகளையும் எண்ணி பூரிப்புடன் புன்னகைத்துக் கொண்டாள்,…

​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!