Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே…

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே… 4, 5, 6

விட்டுச் செல்லாதே – 4

 

நேரம் ஒரு மணி ஆன பின்பும் அவனை இன்னும் காணவில்லை.

 



Advertisement

இவளோ தூக்கம் வராமல் தலையணையை இறுக்கியபடி புரண்டு கொண்டு இருந்தாள்.

 

பாவம்… பெண் அவள்.

Advertisement

விவாகரத்து பத்திரத்தை பார்த்தவளுக்கு எப்படி தூக்கம் வரும்?

Advertisement

 

அர்ஜுனிற்காக தன் உயிரையே துச்சமாக நினைத்தவள் அவள்.

அதற்கு சாட்சி—அவள் முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே பதிந்திருந்த அந்த தீக்காயங்களின் வடுக்கள்.

Advertisement

 

அதனாலோ என்னவோ… நான்கு வருடங்கள் ஆன பிறகும், அவனின் சுண்டுவிரல் கூட அவள் மேல் பட்டதில்லை.

 

ஒரே அறையில் இருந்தபோதும், கட்டிலின் இந்த பக்கம் அவளும்… அந்த பக்கம் அவனுமாகவே அவர்களின் திருமண வாழ்க்கை சென்றது.

 

கண்ணின் ஓரமாக வழிந்துகொண்டிருந்த கண்ணீரை துடைத்தவள் மெதுவாக இமைகளை மூடியாள்.

 

எப்போது தூக்கம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

 

காலையில் ஜன்னல் வழியே உள்ளே வந்த சூரிய ஒளி அவள் முகத்தில் மெதுவாக விழுந்தது.

 

இரவு முழுவதும் அழுததால் அவள் கண்கள் சிறிது எரிச்சலுடன் இருந்தன.

 

கண்களை முழுவதும் திறக்க முடியாமல் சிணுங்கியவளை பார்த்து,

“குட் மார்னிங், பிரியா…” என்றான் அர்ஜுன்.

 

அவன் காந்தக் குரல் கேட்ட திசையில் திரும்பியவள், அவன் எங்கோ கிளம்பத் தயாராகி இருப்பதை பார்த்தாள்.

 

அவளின் எரியும் கண்களுக்கு குளிர்ச்சி தருவது போல, அவன் குளித்துவிட்டு வந்திருந்தான்.

சுருட்டான அவன் முடி இன்னும் லேசாக ஈரமாக இருந்தது.

 

அந்த ஈரமான முடியை கைகளால் பின்னே தள்ளியபடி நின்ற அவன் தோற்றம்…

ஆணுக்குரிய வசீகரத்தை வெளிப்படுத்தியது.

 

ஏனோ, பெண் அவளின் இதயம் சற்று வேகமாக துடிக்கத் தொடங்கியது.

 

கண்களை அவனிடமிருந்து விலக்க முடியாமல் தவித்தவள்,

“என்ன இவ்வளவு காலைலேயே கிளம்பிட்ட?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

 

அவளின் கண்ணிமைக்காத பார்வையின் அர்த்தம் அறிந்தது போல,

கண் பார்வையை விலக்கிக்கொண்டு கண்ணாடியின் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.

 

“ஆபீசில் முக்கியமான வேலை இருக்கு. நேத்து நைட் சொன்னேன்ல… ஒரு மீட்டிங் இருக்குனு. அதான் கிளம்பிட்டேன்…”

 

“ஹம்… சரி. காபி எடுத்திட்டு வரேன். டிபன் என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டுக்கொண்டே படுக்கையை சரிசெய்தாள்.

 

“காபி போதும். டிபன் நான் வெளியே பாத்துக்கிறேன்,” என்றான்.

 

“ஹம்… சரி.”

 

அவர்களின் காலை சுப்ரபாதம் ஒலியுடன் தொடங்கியது.

 

பிரியா எப்போதும் போல் குளித்துவிட்டு, பூஜை அறையில் சாமி கும்பிட்டுவிட்டு ஆரத்தியை அர்ஜுனிடம் எடுத்து சென்றாள்.

 

அவன் திருநீறு வைத்துக்கொண்டு, அவளின் நெற்றியிலும் தாலியிலும் குங்குமம் வைத்தான்.

 

ஆம்… இது அவர்களின் வழக்கம்.

 

ஆனால் இன்று, அவனிடம் ஏதாவது மாற்றம் இருக்குமோ என்று பிரியா அவனை உற்றுப் பார்த்தாள்.

 

ஆனால் அவன் முகத்தில் எந்த ஒரு சஞ்சலமும் இல்லை.

 

சிறிது நேரத்தில் காபியை அருந்திவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் அர்ஜுன்.

 

அன்று காலை, எப்போதும் போல இயல்பாகவே சென்றது…

அனைவருக்கும்.

 

இவளைத் தவிர.

 

வேலைக்காரர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருக்க,

இவளோ இன்று அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல், வெளியே இருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தாள்…

 

சென்னையின் பரபரப்பான சாலைகளைக் கடந்து வந்த அர்ஜுனின் கார்,

“காளிதாஸ் Exports & Imports Ltd.” என்ற பெரிய பெயர் பலகையின் முன் மெதுவாக நின்றது.

 

கண்ணாடி சுவர்களால் மின்னும் அந்த உயரமான கட்டிடம்,

அந்த நிறுவனத்தின் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தது.

 

காரிலிருந்து இறங்கிய அர்ஜுன், தன் கோட் பட்டனை சரிசெய்தபடி உள்ளே நடந்து சென்றான்.

 

அவனை பார்த்தவுடன் ரிசப்ஷனில் இருந்த பெண் மரியாதையாக எழுந்து,

“குட் மார்னிங் சார்…” என்றாள்.

 

அவன் சுருக்கமான தலைஅசைவால் பதில் அளித்தபடி நேராக லிப்ட் நோக்கி நடந்தான்.

 

அவனின் வருகையை கவனித்த ஊழியர்கள் உடனே எழுந்து நின்றனர்.

அவர்களின் முகத்தில் இருந்த மரியாதையும் சிறு பதட்டமும்,

அர்ஜுனின் அதிகாரத்தை காட்டியது.

 

லிப்ட் கதவு மெதுவாக திறந்தது.

 

அவன் உள்ளே நுழைந்தபோது,

இன்று நடைபெறப் போகும் அந்த முக்கியமான மீட்டிங் பற்றிய தகவல்களை அவனின் பி.ஏ சொல்லிக்கொண்டிருந்தார்.

 

லிப்ட் மெதுவாக மேல்தளத்தில் நின்றது.

 

கதவு திறந்தவுடன், அர்ஜுன் நேராக போர்டு மீட்டிங் ரூம் நோக்கி நடந்தான்.

 

அந்த அறையின் வெளியே ஏற்கனவே சில முக்கிய அதிகாரிகள் காத்திருந்தனர்.

 

அவர்களில் சிலர் தங்கள் கோப்புகளை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அந்த அறையின் கதவு திறந்தவுடன், உள்ளே இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்—

இருவரை தவிர.

 

ஒருவர்—

காளிதாஸ்.

அர்ஜுனின் தாத்தா….

 

இந்த நிறுவனத்தை தன் இரத்தமும் உழைப்பாலும் கட்டியெழுப்பிய மனிதர்.

அவரின் பார்வை மட்டும் போதும், அந்த அறையில் இருக்கும் அனைவரையும் அமைதியாக்க.

 

இவர் போட்ட அடித்தளமே இன்று இந்த நிறுவனத்தின் செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் காரணம்.

 

அவரின் அருகில் அமர்ந்திருந்தார்

இளவேந்தன்.

அர்ஜுனின் தந்தை…

 

தந்தையின் நிறுவனத்தின் நிர்வாகத்தை தன்னால் முடிந்த அளவு லாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்.

 

ஆனால், இந்த நிறுவனம் இன்று எட்டியுள்ள உயரத்திற்கு காரணம் அர்ஜுன்.

 

தனது நிறுவனத்தின் அடுத்தடுத்த கிளைகளை முக்கிய நகரங்களில் தொடங்கி, அதை மேலும் வளர்த்தவன் அவன்.

 

அர்ஜுன் உள்ளே வந்தவுடன்,

“வா அர்ஜுன்…” என்று காளிதாஸ் மெதுவாக கூறினார்.

 

அவன் அமைதியாக தலைஅசைத்து, நீளமான மேசையின் முன்புறத்தில் அமர்ந்தான்.

 

அதற்குப் பிறகு மீட்டிங் தொடங்கியது.

 

அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக,

நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி தீவிரமாக விவாதம் நடந்தது.

 

காளிதாஸ் Exports & Imports Ltd. தங்களது புது கிளைகளை

பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் தொடங்குவது குறித்து திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

 

மார்க்கெட் ஆய்வு, முதலீடு, புதிய கூட்டாளர்கள் என ஒவ்வொரு விஷயமும் விரிவாக பேசப்பட்டது.

 

அறையில் இருந்த அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

 

ஆனால் இறுதி முடிவை கூற வேண்டியது அர்ஜுன் மட்டுமே.

 

அந்த நேரத்தில், அறையில் இருந்த அனைவரின் பார்வையும்

அர்ஜுன் மீது தான் விழுந்தது…

 

அவர்கள் முன்வைத்த திட்டங்களின் லாப நஷ்டங்களையும், அதனால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் பயன்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவன் விளக்கி தீர்ந்தவுடன், அறையில் இருந்த அனைவரும் ஒப்புதல் தெரிவிக்கும் விதமாக தலைஅசைத்தனர்.

 

காளிதாஸோ அமைதியாக தனது பேரனை பார்த்தார்.

 

அந்த பார்வையில் பெருமை தெளிவாக தெரிந்தது.

 

தான் அடையும் நல்லதை பற்றி மட்டும் நினைக்காமல், அனைவரின் நலனிற்காகவும் யோசிக்கும் அவன் குணமே இந்த வெற்றியின் காரணம் என்று நினைத்தவர் லேசாக புன்னகைத்தார்.

 

விட்டுச் செல்லாதே – 5

 

அனைவரும் சென்ற பின், அங்கிருந்த முக்கிய கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்த பி.ஏ-வை பார்த்து,

 

“இது எல்லாம் என்னோட டேபிள் மேல வச்சிடுங்க மதன். அப்புறம், கையெழுத்து போட வேண்டிய பைல்ஸ் எல்லாம் தனியா வச்சுடுங்க…” என்றான் அர்ஜுன்.

 

“சரிங்க சார்…” என்றவர் ரூமில் இருந்து வெளியேறினார்.

 

வேலை முடிந்தது என்று கிளம்ப இருந்தவனிடம்,

“கொஞ்சம் இரு பா…” என்றார் இளவேந்தன்.

 

“என்னன்னு சொல்லுங்க…” என்று காலில் வெண்ணிறை ஊற்றியது போல் அவன் அவசரப்பட்டான்.

 

தன் அப்பாவிடம் பேசுகிறான் என்ற உணர்வு, அவன் குரலில் எள் அளவு கூட இல்லை.

 

“இப்போ எங்க அவ்வளோ சீக்கிரமா கிளம்புற, அர்ஜுன்…” என்றார் காளிதாஸ் அவனை உற்றுப் பார்த்தபடி. அவர் குரலில் லேசான கவலையும் இருந்தது.

 

“என்ன விஷயமோ அதை மட்டும் சொல்லுங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்றான் அர்ஜுன்.

 

அவன் பேசும் வார்த்தைகள், பெற்ற தந்தையிடமோ வளர்த்த தாத்தாவிடமோ பேசுவது போல இல்லாமல்,

முகம் தெரியாத ஒருவரிடம் பேசுவது போல இருந்தது.

 

அதற்குக் காரணம்—நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கருத்து வேறுபாடும், அது கொடுத்த கசப்பான நினைவுகளும், அவனின் குரலில் இன்றும் கோபமாய் வெளிவந்தது.

 

“ஒரு நல்ல விஷயம் வெற்றிகரமா தொடங்க இருக்குது. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு ஒரு பூஜை பண்ணிட்டு வரலாம்…” என்றார் காளிதாஸ்.

 

“ஹம்… சரி. எத்தனை மணிக்கு கிளம்பணும்?”

 

“விடியற்காலையிலேயே கிளம்பினால் தான் சரியா இருக்கும்.

மருமகளையும் கூட்டிட்டு வா, அர்ஜுன்…” என்றார் இளவேந்தன்.

 

ஒரு நொடி தயங்கியவன்… “சரி” என்று மட்டும் சொல்லிவிட்டு,

மேலும் எதையும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.

 

அவன் சென்ற பாதையை… அவர்களின் பார்வை மட்டும் அமைதியாக பின்தொடர்ந்தது.

 

“இவன் எப்போ நம்ம பழைய அர்ஜுனா வந்து நம்ம கிட்ட பேசுவான்னு தெரியலையே ப்பா…” என்று கவலையுடன் கூறினார் இளவேந்தன்.

 

“அவனுக்கு நம்ப மேல கோபம் இருக்கு… ஆனா மனசுல நம்ம மீதுள்ள பாசம் போயிடல. பழைய காயங்கள் எல்லாம் ஆறும் போது அவனே திரும்பி வருவான்,” என்றார் காளிதாஸ் மெதுவாக.

 

—————

 

வேலைகளை அனைத்தையும் முடித்துவிட்டு, தனது கண்ணாடி சுவர்களால் சூழப்பட்ட கேபினில், காபியை ஏந்தியபடி நின்றிருந்தான் அர்ஜுன்.

 

மாலை வானம், சூரியனின் கடைசி நிழலை தழுவியபடி…நகரத்தின் மேல் ஒரு கவிதையை எழுதி கொண்டிருந்தது.

 

கீழே சாலைகளில் ஓடும் வாகனங்களின் விளக்குகள், ஒளி வரிசைகளாக நீண்டு, அந்த பரபரப்பான நகரத்திற்கே ஒரு விதமான அழகை கொடுத்தது.

 

உயரமான கட்டிடங்கள் அனைத்தும் அந்த மாலையின் ஒளியில் மின்ன,

அந்த காட்சியை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் அவன் மனம் மட்டும் அவனிடம் இல்லை.

 

அது… அவனை விட்டுச்சென்றவளின் நினைவிலே சிக்கி இருந்தது.

 

—————

 

ஜூலை மாதம் 2018-இன் முதல் வாரம்…

 

கல்லூரி வளாகம் புதிய மாணவர்களின் சிரிப்பாலும் சலசலப்பாலும் உயிர் பெற்று இருந்தது.

 

புதிய முகங்கள்…

புதிய குரல்கள்…

புதிய வாழ்க்கை.

 

தங்கள் கனவுகளை நிறைவேற்றும் உற்சாகத்துடன் வந்திருந்த மாணவர்கள்,

அந்த புதிய சூழலை குழந்தை மனதுடன் ரசித்துக்கொண்டிருந்தனர்.

 

முதலில் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தாலும்…

சில நாட்களிலேயே மெதுவாக பழக்கமான முகங்களாக மாறிக் கொண்டிருந்தனர்.

 

வகுப்பறைகளில் ஆசிரியர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தாலும்,

அந்த வார்த்தைகள் எல்லாம் மாணவர்களின் மனதில் முழுமையாக பதியவில்லை.

 

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்தவர்களுக்கு,

கல்லூரி வாழ்க்கை சற்றே கவலைகளில்லாமல்,

சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய ஒரு புதிய உலகமாக தோன்றியது.

 

அதே நேரத்தில்…

மூத்த மாணவர்களின் பார்வையும் அந்த புதியவர்களை தவறவிடவில்லை.

திரைப்படங்களில் மட்டும் ராகிங் பார்த்து பழகியவர்களுக்கு,

அதை நிஜத்தில் அனுபவிப்பது சில நேரங்களில் பயத்தையும்…

சில நேரங்களில் சிரிப்பையும் கொடுத்தது.

 

ஆனால் அந்த அனுபவங்களும் கூட…

பின்னாளில் நினைத்தால் சிலருக்கு இனிமையான நினைவுகளையும்,  சிலருக்கு மறக்க முடியாத வலியையும் தரப்போகிறது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

அந்த முதல் வாரம்…

 

அர்ஜுனுக்கு அவன் வாழ்க்கையை மாற்றிய தொடக்கமாக அமைந்திருந்தது…..

 

யாருக்கும் முன் தாழாதவன் அவன்…

தன் உலகமே தன் கட்டுப்பாட்டில் என்று கர்வம் கொண்டவன் அவன்…

தன் நிழலுக்கே கட்டுப்படாதவன்…

ஆனால்—

அவள் முன் நின்ற அந்த நொடி…

தன் அகங்காரம் கூட

அவன் கைகளில் இருந்து அமைதியாக வழுந்தது.

அப்படி அவன் மனதை கொள்ளையடித்த தேவதை யார்…?

அதை…

அடுத்த அத்தியாயத்தில் அறிவோம்……

 

 

விட்டு செல்லாதே – 6

 

காதல் கொண்ட இதயம் மட்டும்,

சுக்குநூறாக உடைந்த பின்பும்,

அதை அள்ளிக் கொண்டு,

காயப்படுத்தியவரிடமே

ஆறுதலைத் தேடி திரும்பி செல்கிறது.

 

அந்த மாயையில் சிக்கிய இவன் மட்டும்…

விதிவிலக்கா என்ன?

 

விட்டு சென்றவளை,

இடைவிடாது தேடி

வருடக்கணக்காக அலைந்தான்,

அறியாமையில் மூழ்கியவன்.

 

அவளை மறக்கவும் முடியாமல், காரணமின்றி விட்டு சென்றவளை மன்னிக்கவும் முடியாமல் அவன் இதயம் படும் படு அவனே அறிவான்!!

 

அவன் தேடல்கள் எல்லாம்

தோல்வியில் முடிய,

பித்துபிடித்தவன் போல

நகரம் நகரமாக அலைந்தான்.

 

நகரங்களில் கிடைக்காதவலை, வெளிநாடுகளிலும் தேடினான்..

 

அவளின் ஒரு பார்வையும்…

உதட்டின் ஓரத்தில் மிதந்த அந்த சிறிய சிரிப்பும்…

நினைவுகளாக அவனை துரத்திக் கொண்டிருக்க,

 

அந்த நினைவுகளில் சிக்கித் தவித்தவனுக்கு…

கடந்த வாரம் தான் ஒரு நற்செய்தி கிடைத்தது.

அந்த ஒரு செய்தி…

 

அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகிறதையும்,

அவனை சோதிக்க வருகிற இன்னல்களையும்,

இதுவரை மறைந்து கிடந்த உண்மைகளை

ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தப்போகிறதையும்

அவன் அறியவில்லை.

 

“ டக் டக்…”

கைபேசியில் வந்த அறிவிப்பு என்ன என்று பார்க்க, ஆடவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

 

கார் சாவியை எடுத்தவன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பினான் அவளை தேடி ….

 

போகும் தூரம் தெரியாமல், மின்னல் வேகத்தில் ஓடிய அவன் வண்டி, இறுதியில் ஒரு பூங்காவின் வாசலில் நின்றது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

 

மாலை நேரம் என்பதால்

பூங்கா வழக்கம்போல் கூட்டமாக இருந்தது. மெல்ல வீசும் காற்றில்

மரங்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்ட சத்தம்…

 

ஒரு பக்கம் குழந்தைகள்—

ஓடி விளையாடி,

சிரிப்பை சத்தமாக சிதறவிட்டுக் கொண்டிருந்தனர்.

“ஏய்! பந்து என்கிட்ட போடுடா!”

 

“அம்மா… இன்னும் ஐந்து நிமிஷம்! பிரெண்ட் எல்லாரும் விளையாடிட்டு இருக்காங்க…நம்ப அப்புறம் போலாம் ம்மா…” என்று ஒரு குட்டி பையன் தன் அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்க,

 

“அதான் நீ ஐந்து நிமிஷம்னு சொல்றது அரை மணி ஆகுது… அப்பா வந்திடுவாரு, வா டா போலாம்,” என்றார் அவன் தாய்.

 

அருகில் வேறொருவர்—

“நாளைக்கு நடக்க போற மீட்டிங்க்ல தான் தெரியும்…” என்று பேசிக்கொண்டிருக்க,

 

“அட, சும்மா மீட்டிங் என்றாலே பிரச்சனை தான்…” என்று அவன் நண்பன் சிரித்தான்.

 

பாதையில் நடந்து கொண்டிருந்த ஒருவர்,

“மெதுவா விளையாடுங்க பசங்களா… கீழே விழுந்துடுவீங்க,” என்று சொன்னார் அங்கே விளையாடும் குழந்தைமலர்களிடம்.

 

அங்கிருந்த அனைவரும் அவரவர் உலகத்தில் மூழ்கியிருந்தனர்—

அவனைத் தவிர.

அந்த கூட்டத்தில்,

அவன் கண்கள் மட்டும்

யாரையோ தேடி அலைந்தது.

 

தனக்கு கிடைத்த செய்தி தவறாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும்…

ஏனோ, அவன் மனதில் ஒரு சஞ்சலம்.

 

அவளை இத்துணை தேடலுக்கு பிறகு பார்க்கப்போகும் அந்த உணர்வை விளக்க வார்த்தைகள் போதவில்லை.

 

சிறு தூரம் நடந்து சென்றவன், சுற்றி முற்றி பார்க்க மரங்களின் நிழலில்

சில மூத்தவர்கள் அமைதியாக அமர்ந்து,

தங்களின் பழைய கதைகளை பகிர்ந்துகொண்டனர்.

 

காற்று மெதுவாக வீசியது

அதில் மண் வாசமும்,

மலர் மணமும் கலந்திருந்தது.

 

அருகில் இருந்த ஊஞ்சல்கள்

மெல்ல ஆடிக்கொண்டிருந்தன,

ஒவ்வொரு தள்ளுதலிலும்

ஒரு சிரிப்பு, ஒரு கத்தல்.

 

அதன் பக்கத்தில், அங்கு இருக்கும் ஐஸ் கிரீம் வண்டியின் முன் நிறைய குழந்தைகள் சிரிப்புடன் வாங்கி ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

 

“அம்மா… என்கும் வாங்கி தா.. ம்மா.. ப்ளீஸ்..” என மழலை மொழியில் அடம் பிடிக்க,

 

“சஞ்சு மா… உனக்கு அது ஒத்துக்காது  தெரிஞ்சும் ஏன் டா அம்மா வா இப்படி தொல்லபன்ற..” என்று அவள் தாய் சமாதானப்படுத்தினால்.

 

அவன் பார்வை…

அந்த குரல் வந்த திசையை நோக்கி நகர்ந்தது.

 

சிறிய முடிச்சு போட்ட தலைமுடி…

கையில் ஒரு பொம்மையை பிடித்தபடி, அந்த சின்னஞ்சிறு மழலை அழுது கொண்டு இருக்க,

 

அவளை கையில் அணைத்த படி “அம்மா வீட்டுக்கு போய் உனக்கு  ரொம்ப பிடிச்ச பாதாம் குல்பி செஞ்சி தரேன் சரியா??. என் செல்லம்ல இப்போ சிரி பாக்கலாம்.” என்று பிஞ்சு கண்ணம் பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

 

அந்த குரல் மீண்டும்

கேட்டவன் இதயம் ஒரு துடிப்பை தவறவிட்டது….

சாதாரணமான உடை…

மெல்ல காற்றில் அசையும் முடி…

பின்னிருந்து பார்க்க, அந்த தோற்றத்தில்

ஏதோ ஒரு பரிச்சயம்.

 

அவனை அறியாமல் அவன் அடிகள் முன்னேற, ஒவ்வொரு அடியும் அவன் இதய துடிப்பை அதிகரித்தது..

 

அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்த அந்த பெயர், அவன் ஓராரியிரம் முறை கூப்பிட்ட அதே பெயர் அவன் நாவில் வர மறுக்க, அவன் குரல் அவனுக்கே கேட்காதவாறு அழைத்தான் அவளை, “ரத்னா…”

 

கையில் இருந்த சஞ்சுவின் விரலை இறுக்கமாக பிடித்தபடி,

அவள் உடல் ஒரு நொடி உறைந்தது.

 

மறுநொடி, ஒன்றும் அறியாதவளாய் திரும்பினால். ஏதோ புதிதாக பார்க்கும் ஓர் அந்நியரைப் பார்ப்பதுபோல்,

அவன் கண்களை நேராக பார்த்தபடி,” யார கூப்பிட்ரிங்க? என்ன வேணும்?” என்று கேட்டால்.

 

அவன் எதிர்பார்த்த

அதே கண்கள்…

அதே முகம்…

அதே குரல்…

 

ஆனால், அவள் பார்வையில்

முன்பு இருந்த அந்த காதலும்,

அன்பும் இல்லை…

ஒரு சிறிய அறிமுகத்தின் சாயலும் இல்லை.

 

“ரத்னா…என்ன தெரியலையா??” என்று இம்முறை தெளிவாக அவளை உற்று பார்த்தபடி கேட்டான் அர்ஜுன். ஆனால் அவன் மனதில் குழப்பமும் சந்தேகமும் நிறைந்து இருந்தது.

 

“ஹலோ யாருங்க ரத்னா?? அப்புறம் தெரியலையானு கேக்குறீங்க? யாருங்க நீங்க? என்ன வேணும்?” என்று அவள் கேட்க, இம்முறை அதில் கோபமும் எரிச்சலும் இருந்தது.

 

அதை கண்ட இவனுக்கோ,

இத்தனை கால தேடலின்

பதில் இதுவா என்ற கோபம்

ஒரே நேரத்தில் வெடித்தது.

சற்று குரலை உயர்த்தியபடி,

“என்ன டி… நடிக்கிறியா?

இப்படி கேட்டா நான் விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சியா…?”

என்று சொன்னவனின் கை,

தன்னாலேயே முன்னேறி

அவள் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றியது.

 

“ஹே…என்ன பிரச்சனை சார் உங்களுக்கு? யாருனு கேட்ட கைய பிடிக்குறீங்க? இப்போ கைய விடல அப்புறம் தப்பாக்கிடும். பார்க்க படிச்சவரு, பெரிய இடத்து பிள்ளை மாறி இருக்கீங்க ஒரு டீசன்சி இல்ல? விடுங்க சார்” என்று அவள் திடுக்கிட்டு சொல்லி,

தன் கையை அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றாள்.

 

அவள் அணைப்பில் இருந்த சஞ்சனா, தான் தாயின் குரலில் இருந்த பதட்டத்தில் பயந்து அழ ஆரமித்து விட்டாள்.

 

“ம்ம்மா….”

 

சஞ்சுவின் அழுகையை கேட்ட ஒருசிலரின் பார்வை இவர்கள் பக்கம் திரும்ப, “என்ன பிரச்சனைம்மா? தெரிஞ்சவங்களா?”

என்று ஒரு பெண் அவளிடம் கேட்டாள்.

 

அர்ஜுனை முறைத்தபடி, “ இல்லமா.. யா…யாருனு தெரில… கைய பிடிச்சு பிரச்சனை பண்றாங்க…” என்று சொல்லிக்கொண்டே அவள் கையை விடுவிக்க மீண்டும் முயன்றால். அதில் தெளிவான கோவம் இருந்தது.

 

அவள் சொற்களை கேட்டவன் இதயம் மீண்டும் மீண்டும் உடைய, அந்த வலியின் தாக்கம் அவன் பிடியை தளர செய்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவளோ, தன் கையை விடுவித்து கொண்டாள்.

 

“அழாத செல்லம், அம்மாக்கு ஒன்னும் இல்ல… வா நம்ப போலாம்..” என்றவள் அவனின் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினால்.

 

ஆனால் அவனிடம் இருந்து பிரிந்து சென்றவளின் கண்ணில் இதுவரை மறைத்த வலி தெரிந்தது. கண்கள் சற்றே கலங்கியவள் அவனை முற்றிலும் அந்நியனாக விட்டுவிட்டு சென்றாள்.

 

அங்கிருந்த சிலரோ,

 

“பார்க்க நல்ல பையன் மாறி இருந்திட்டு செய்யுற வேலைய பாத்தியா?? கையில குழந்தை இருக்கும் போதே கைய பிடிச்சு இழுகிறான்… இந்த மாதிரி ஆளுங்கல போலீஸ்ல தான் புடிச்சிகொடுக்கணும்..”

 

“இத்தன பேர் இரும்போதே இப்படின்னா…தனியா வந்த என்ன பண்ணுவாங்க?? கலிகாலம்… இங்க எவனையும் நம்ப முடியல…”  என்று அர்ஜுனின் செயலை தவறாக புரிந்துகொண்டு அவனை முறைத்தபடி சிலர் விலகி சென்றனர்.

 

அவளின் அந்நிய தன்மையை புரிந்துகொள்ள முடியாதவனாய், அவன் கண்கள் மட்டும் தன்னை கடந்து செல்பவளின் பாதையை பின்தொடர்ந்தது…..

 

 

காணாமல் போனவளை இவன் தேடிக்கொண்டே இருக்க…

கண்டவள் மறந்தவளாய் நடித்துவிட்டு சென்றால்…

ஒருவன் நினைவில் வாழ்ந்த காதல்—

மற்றொருத்தி மனதில் மறைந்து கிடந்தது.

 

இவர்களின் பாதை மீண்டும் ஒன்று சேருமா???

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!