அவளின் பேச்சில் நங்கையும் சிந்துவும் மோகனும் சிரித்திருக்க, ‘அடப்பாவி’ என்பது போல் அவளைப் பார்த்திருந்தான் இன்பா.
பாலாஜிக்கும் அசோக்கிற்கும் தமிழ் தெரியாது என்பதால் புரிந்தும் புரியாததுமாக அவர்கள் மென்னகை புரிந்தவாறு அமர்ந்திருந்தனர்.
“ஹ்ம்ம் அவர் சொன்னாரு. நீ இன்டர்வியூல உங்க முழுப் பேரே இன்பா தானானு கேட்டியாமே! அது என்ன பொண்ணுங்களால முடியாத வேலைன்னு பொண்ணுங்களையே உங்க டீம்க்கு எடுத்ததில்லைனு பெருமையா சொல்லிட்டு இருக்கீங்கனு அவர்கிட்ட கோபமா கேட்டியாமே! அதுக்குப் பிறகு நீ செலக்டட்னு சொல்லி நைட் ஷிப்ட்ல வரனும்னு சொன்னதும் நீ திருதிருனு முழிச்சிட்டு அசடு வழிஞ்சதை பத்தி அன்னிக்கு நாள் முழுக்க நினைச்சு நினைச்சு சொல்லி சிரிச்சிட்டு இருந்தாரு” என்று சிந்துஜா விளக்கமாக அன்னத்துடனான நேர்முகத் தேர்வில் நடந்தவற்றை இன்பா தன்னிடம் கூறியதை இங்கே சிரித்தவாறு அப்படியே கூறியிருக்க அசடு வழிந்தாள் அன்னம்.
Advertisement
இன்பா அன்றைய தினத்தை எண்ணிப் புன்னகைத்தவனாய் அமர்ந்திருக்க, மோகனும் நங்கையும் வாய்விட்டு சிரித்திருந்தனர்.
Advertisement
“உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி தான் அன்னம்” என்றவாறு மேலும் சிரித்திருந்தாள் நங்கை.
“ம்மாஆஆ! ம்மாஆஆ” என்று குழந்தை சிணுங்கவும், “என்னடா நந்துக்குட்டி! பசிச்சிருச்சா?” எனக் கேட்டவாறு தனது பையினில் மகளுக்காக எடுத்து வந்திருந்த உணவினை எடுத்துக் கொடுத்த நங்கையிடம்,
Advertisement
“குழந்தைக்கு எத்தனை வயசாகுது?” எனச் சிந்துஜா கேட்க, அதற்குப் பதிலளித்த நங்கையும் யுகேந்திரனைப் பற்றி சிந்துஜாவிடம் கேட்டாள். இருவரும் அவரவர் குழந்தைகளின் சேட்டைகள், செயல்கள், அவர்களின் பிறப்பு, கர்ப்பமான நேரத்தில் வந்த உடல் உபாதைகள் என இப்பேச்சினில் மூழ்கிப் போக, அமைதியாக இதனைக் கேட்டவாறு அமர்ந்திருந்தான் இன்பா.
அச்சமயம் நங்கையின் கைபேசி அலற, பையினுள் இருந்த கைபேசியை எடுத்த அன்னம், “அண்ணி, அண்ணா தான் கால் செய்றாங்க” என்றவாறு நங்கையிடம் கொடுத்தாள்.
“சொல்லு சுந்தர்!” என்றவாறு காதில் கைபேசியை வைத்து அவள் பேச துவங்கவும், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான் இன்பா.
கைபேசியில் நங்கையின் சுந்தர் என்ற விளிப்பில் அவளை அதிர்வுடன் பார்த்தான் இன்பா.
‘சுந்தரையா இவ கல்யாணம் செஞ்சிருக்கா’ பேரதிர்ச்சியான செய்தியாய் இருந்தது அவனுக்கு.
கண்கள் ஒளிர அந்த அழைப்பை ஏற்றுப் பேசியவளின் முகம் அவனுடன் பேசிய சில நொடிகளில் சுருங்கிப் போக, “சரி நான் இப்ப பிசியா இருக்கேன்! அப்புறம் வீட்டுக்குப் போய்ப் பேசுறேன்” என்று உரைத்து அழைப்பைத் துண்டித்தாள்.
அவளின் முக மாற்றங்களைக் கவனித்தவனாய் அமர்ந்திருந்த இன்பாவிற்கு அவள் சுந்தருடன் மகிழ்வாய் வாழவில்லையோ என்று தோன்றியது. என்றோ தான் செய்த பாவச்செயல் இன்றும் அவளின் வாழ்வை வருத்திக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணும் போதே அவனின் நெஞ்சில் சுருக்கென வலி வந்து போனது.
அன்னத்தின் அண்ணா என்ற விளிப்பிலேயே நங்கையின் கணவனிடம் தான் பேசுகிறாள் என்பதை உணர்ந்த சிந்துஜா, “நங்கை உங்க ஹஸ்பெண்ட் வரலையா?” எனக் கேட்டாள்.
“அண்ணா வேலை விஷயமா ஹைத்ராபாத் போயிருக்காங்க. அதான் அண்ணி பசலை நோய் வந்து வாடிப் போயிருக்காங்க” என்று கண் சிமிட்டி அன்னம் கேலி செய்ய, விழிகளை உருட்டியவளாய் அன்னம் என்றவாறு அவளின் கையினில் இடித்தாள் நங்கை.
“They both are made for each other you know. கல்யாணம் செஞ்சா இவங்களை மாதிரி வாழனும்ங்கிற ஆசையை எனக்கு உண்டு பண்ணினவங்க இவங்க” என்று மென்னகையுடன் உரைத்தாள் அன்னம்.
“போதும் போதும் அன்னம் எங்க புகழை பாடினது” என்று அழுத்தமாய்க் கூறி அவளை அடக்கினாள் நங்கை.
அவள் மகிழ்வான நிம்மதியான மணவாழ்வை வாழ்கிறாள் என்பதைக் கேட்டு அத்தனை நிம்மதியாக உணர்ந்தான் இன்பா. நெடுங்காலமாக மனத்தினை அழுத்தியிருந்த பாரம் குறைவதாய் உணர்ந்தான் அவன்.
அந்நேரம் நிகழ்ச்சி துவங்கவும் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் திசை திரும்பியது. மேடையைக் கவனித்த வண்ணம் இருந்தாலும் நங்கையின் கண்கள் கலங்கி அவள் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதைப் பார்த்தும் பாராதது போல் பார்த்திருந்தான் இன்பா.
அன்னம் குறிப்பிட்டதுப் போல் கணவனின் பிரிவாற்றாமையில் அழுகிறாள் என எண்ணிக்கொண்டான் இன்பா.
சில மணி நேரங்களுக்குப் பிறகு விழா மேடையில் இவர்களின் பிராஜக்ட்டை குறிப்பிட்டு அழைக்க, இன்பாவின் குழு மொத்தமாக அங்கே செல்ல, அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்திருந்து கைத்தட்டி மகிழ்ந்திருந்தனர்.
அந்தக் குழுவில் ஒரே பெண்ணாகப் புடவை அணிந்து அழகுப் பதுமையாக நின்றிருந்த அன்னத்தைத் தான் ரசித்துப் பார்த்தன அனைவரின் கண்களும்.
நங்கை மென்னகை புரிய, “இன்பாக்கு அன்னத்தைப் பார்க்கும் போது அவரைப் பார்த்த மாதிரியே இருந்துச்சுனு சொன்னாரு. அவரோட டிவின் மாதிரி ஃபீல் ஆகுதுனு சொன்னாரு. அவர் வேலைக்குச் சேர்ந்த புதுசுல இவளை மாதிரி தான் இருந்தாராம். அப்புறம் வாழ்க்கையோட அனுபவம் கூடவே அவரோட வேலை கொடுத்த அனுபவம்னு அமைதியாகிட்டதா சொல்வாரு. முதல் நாள் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு வந்து, வீட்டுல தானா சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. என்னனு கேட்கும் போது தான் அன்னத்தைப் பத்தி இதையெல்லாம் சொன்னாரு. அதுக்குப் பிறகு தினமும் அவ செய்ற சேஷ்டைகள் எல்லாமே சொல்வாரு. என்னடா அவ இவனு பேசுறேன்னு நினைக்க வேண்டாம். தினமும் அவளைப் பத்தி பேசி பேசி அவ எங்க வீட்டுல ஒரு ஆளு போலத் தான் எனக்கு. அன்னத்தைப் பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிருக்கு” என்று சிந்துஜா பேசிக் கொண்டே போக,
“so sweet of you சிந்து. நீங்க இவ்வளோ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றாள் நங்கை.
அனைவரும் சேர்ந்து வெற்றி கோப்பையை வாங்கி விட்டு அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
அதன் பின்பு சினிமா பாடல்களுடன் மெல்லிசைக் கச்சேரி நடைபெற, பஃபே முறையில் தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் வைக்கப்பட்டிருந்த பலவிதமான உணவினை அவரவருக்குப் பிடித்தவாறு எடுத்து வந்து அமர்ந்து உண்டு கொண்டே கேட்டு ரசித்திருந்தனர்.
சூப்பர் சிங்கர் பாடல் போட்டி மூலம் பிரபலமான இளம் பாடகர் ஒருவரும், பாடகி ஒருவரும் இந்த இசை கச்சேரியில் பாடல்கள் பாடி தெறிக்க விட்டிருக்க, உணவை உண்டவாறே ரசித்துக் கொண்டிருந்தனர் பணியாளர்கள்.
நன்றியுரை பேசியவாறு நிகழ்ச்சி நிறைவு பகுதியை எட்டியிருந்த சமயம், சிந்துஜா தனது மகனைத் தூக்கியவாறு கழிவறைக்குச் செல்ல வேண்டுமென வழி கேட்க, தானே அழைத்துச் செல்வதாய்க் கூறி உடன் சென்றாள் அன்னம்.
“சிந்து அக்கா உங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ்ஜா லவ் மேரேஜ்ஜா?” எனக் கேட்டவாறு சிந்துவுடன் நடந்தாள் அன்னம்.