Skip to content
Post Views: 4,436
அத்தியாயம் 10
காலை நடைபயிற்சி முடித்துவிட்டு கந்தகுருவும் அருணாளினியும் பாட்டியின் வீட்டிற்கு வந்தனர். தினசரி வழக்கமாக மாறி இருந்தது இந்த காலைவேலை நடைப்பயிற்சி. சில நாட்கள் பாட்டியும் இவர்களுடன் இணைந்து கொள்வார். காலை ஏழு மணிக்கு எல்லாம் அன்று நடைப்பயிற்சி முடித்து வந்துவிட்டனர்.
Advertisement
பாட்டியின் தோட்டத்தில் மூன்று நாற்காலிகள் போட்டு, நடுவே சிறிய மேஜை ஒன்றும் புதிதாக இடம் பிடித்திருந்தது.அருணாளினி அங்கே சென்று பாட்டியின் அருகே அமர்ந்து கொண்டாள். குரு நேரே அடுப்படிக்கு சென்று மூவருக்கும் தேநீர் தயாரித்தான்.
ருக்மணி போடும் தேநீர் மிகவும் சுமார் ரகம். பாட்டியின் தேநீரும் சுமார் ரகம் தான். அதனால் கந்தகுரு ஒரு முறை “நான் டீ போடவா பாட்டி?” என்று கேட்டு, அவன் சொர்ணம் பாட்டி போடுவதை போல இஞ்சி மிளகு ஏலக்காய் கிராம்பு எல்லாம் தட்டி போட்டு, மசாலா டீ தயாரித்து கொடுத்தான். அதிலிருந்து பாட்டி கந்தகுருவின் தேநீருக்கு பெரிய விசிறி.
Advertisement
Advertisement
ஐந்து நிமிடங்களில் மணக்க மணக்க தேநீருடன் வந்தான் குரு.
“அப்புறம், பெரிய பெரிய வசனம் எல்லாம் பேசின? இப்ப அடுத்து என்ன அப்படின்னு ஒன்னும் சொல்ல காணுமே?” என்றார் பாட்டி அருணாவிடம்.
Advertisement
“நீங்க தானே ஒன்னுக்கு பத்து முறை யோசிக்க சொல்லிருக்கீங்க. அதான் நேரமாகுது” என்றால் அருணாவும் பதிலுக்கு.
குரு இவர்கள் பேச்சுக்குள் நுழையவில்லை. அமைதியாக அன்றைய ஹிந்தி தினசரியை படித்துக்கொண்டிருந்தான். ஹிந்தி எழுத படிக்க தெரியும் இருவருக்கும். அம்மாக்களின் உபயமே இதுவும். வெளி ஊருக்கு வேலைக்கு போக உதவியாக இருக்கும், என்று சிறு வயதில் கட்டாயப்படுத்தி படிக்க வைத்திருந்தார்கள்.
இங்கே இந்த வாழ்க்கை முறைக்கு தேவை என்று கருதி தினமும் தினசரியை படித்துவிடுவான் குரு. புரியாத வார்த்தைகளுக்கு உடனே கைபேசியில் அர்த்தம் பார்த்து தெரிந்தும் கொள்வான். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் குருவின் இந்த குணம் பாட்டிக்கு மிகவும் பிடிக்கும்.
“நாங்க மார்க்கெட் போயிட்டு வர்றோம், உங்களுக்கு என்ன காய்கறி வேண்டும்” என்று கேட்டாள் அருணா பாட்டியிடம்.
இதுவும் இவர்களுது தினசரி வழக்கத்தில் ஒன்று. அங்கே இருக்கும் பெரிய காய்கறி மார்க்கெட் கந்தகுருவிற்கு மிகவும் பிடித்த இடம். அவனுக்கு அவன் சொக்கன் தாத்தா, அவரது காய்கறி கடை, மயிலாடுதுறை அனைத்தையும் நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது ஹல்த்வானி சப்ஜி மண்டி.
“காய் எல்லாம் அப்புறம் வாங்கலாம். முதல்ல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. கையில இருக்க காசு செலவாயிடும்னு, பூதம் புதையலை பாதுகாக்கிற
மாதிரி, எங்கயும் போகாம வீட்லயே இருந்தா என்ன ஐடியா வரும்?”
“என்ன சொல்ல வர்றீங்க? நான் பூதமா?” என்றாள் அருணா மூச்சு வாங்க.
“பின்ன? நானும் எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். பக்கத்துல எங்கயாச்சும் போயிட்டு வாங்க இரண்டு பேரும்ன்னு. எங்க தேவபூமிய சுத்தி பார்க்க பார்க்க தெவிட்டாது தெரியுமா?”
அதுவரை இவர்கள் பேச்சிற்குள் நுழையாத குரு, இப்பொழுது “மெதுவா போகலாம் பாட்டி, உண்மையா செலவு ஆயிடும் இல்ல” என்றான் கந்தகுரு.
“இங்க இருந்து நைனிட்டால் இரண்டுமணி நேரம் தான், பஸ்ல டிக்கெட் ஐநூறு ரூபாய் தான் வரும். அது செலவு பண்ண முடியாதா? நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு கிளம்புங்க. ஹனிமூன்க்கு எங்க இருந்து எல்லாமோ இங்க வராங்க. நீங்க போனா என்ன?” என்றார் பாட்டி விடாமல்.
“பேட்டா முகமே வாடி இருக்கு அருணா. நீ சொல்றது, செய்றது எல்லாம் சரின்னு வச்சுக்கிட்டாலும், ஒரு ஆணாய் குடும்பத்தை காப்பாத்துற பொறுப்பு அவனுக்கு இருக்கு இல்லையா? அது அவனுக்கு மனதளவில் பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கு. அதை சீக்கிரமா சரி செய்யலைனா கஷ்டம், புரிஞ்சுக்கோம்மா. எளிமையான வாழ்க்கை போதும்ன்னு நினைக்கிறது தப்பில்லை. ஆனால் எதிர்காலம் என்னன்னு தெரியாம ஒரு குழப்பத்தில் இருக்கிறது மன அழுத்தத்தை கொடுக்கும். முதலில் கொஞ்சம் வெளியே போயிட்டு வாங்க. மனம்விட்டு பேசுங்க. சுற்றத்தை புரிஞ்சுக்கோங்க. அப்ப ஒரு தெளிவு கிடைக்கும்” என்று முன்தினம் அருணாவிடம் தனியாக கூறி இருந்தார்.
அதற்காக தான் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள் இரு பெண்களும்.
“சரி பாட்டி, நாளைக்கு நாங்க போயிட்டு வர்றோம்” என்றான் குரு.
சொன்னதை போலவே மறுநாள் இருவரும் பேருந்தில் நைனிட்டால் கிளம்பினார்கள்.
“எனக்கு ஜன்னல் சீட்”, என்று அருணா ஜன்னல் பக்கம் அமர்ந்துகொண்டாள். பக்கத்தில் சின்ன புன்னகையுடன் அமர்ந்துகொண்டான் குரு.
ஜில்லென்று இருந்த வானிலையும், பேருந்தில் மெல்லிதாக ஒலித்து கொண்டிருந்த பழைய ஹிந்தி பாடல்களும் ரம்மியமான சூழலை உருவாக்கி கொடுத்தது இருவருக்கும்.
பாட்டி அருணாவிற்கும் குருவிற்கும் ஒன்று போல அழகான உல்லன் குல்லாக்களை பரிசளித்திருந்தார். சிவப்பு நிறத்தில், ஆங்காங்கே வெள்ளை பூக்கள் கலந்த குல்லா. அவரே பின்னியது. இருவரும் அதை அணிந்திருந்தனர்.
சிவப்பு நிற சுடிதார் அணிந்து அதற்கு மேலே வெள்ளை ஸ்வட்டர் அணிந்திருந்தாள் அருணா. கணவனின் தோளில் வாகாக சாய்ந்துகொண்டாள்.
“செல்லம்மா, இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க தெரியுமா?” என்றான் கந்தகுரு.
அருணா தோளில் சாய்ந்துகொண்டே ஓரக்கண்களால் கணவனை பார்த்தாள்.
“இந்த சிவப்பு குல்லாக்கு அடியில தெரியுற உன் கன்னத்தை பார்த்தா அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல ஆசையா இருக்கு” என்றான் மனைவியின் காதுகளில்.
அருணாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க தொடங்கியது..
“ஆஹா.. இப்ப உன் கன்னமும் குல்லா கலர் வந்துடுச்சே, பிரெஷ் ஆப்பிள் மாதிரி இருக்கு செல்லம்மா” என்றான் கந்தகுரு காதலாக.
“போங்க குரு” என்று சினுங்கினாள் அருணா.
“நமக்கு இந்த பயணம் தேனிலவு மாதிரி இருக்கு இல்ல செல்லம்மா”
“ம்ம்ம்”
இருவருக்கும் பழைய நினைவுகள்.
“அருணா, ஹனிமூன் எங்க போறதுன்னு முடிவு பண்ணிருக்கீங்க?” திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மஞ்சுளா, மகளிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தார்.
“நிறைய லீவ் எடுக்க முடியாதும்மா, அதனால ஊட்டி கொடைக்கானல் மாதிரி பக்கத்துல போகலாம்ன்னு யோசிக்கிறோம்”
“யார் ஐடியா இது? உங்க மாமியாரா?”
“குரு தான் சொன்னான். அத்தை சொன்னாங்களா தெரியாது ”
“அவதான் சொல்லி இருப்பா. எங்க கல்யாணத்துக்கு அப்புறம், ‘அண்ணா நாங்களும் ஹனிமூன் எங்கயும் இன்னும் போகல. நீங்க போகும் பொழுது நாங்களும் வரோம். தூரமா போனா கஷ்டம், பக்கத்துல போயிட்டு வந்துடலாம்ன்னு பேமிலி டூர் மாதிரி ஊட்டிக்கு கூட்டிட்டு போக வச்சிட்டா. இப்ப என் பொண்ணையும் ஊட்டிக்கே அனுப்ப பார்க்கிறா. நீ ஒத்துக்காத அருணா “
“பரவால்ல அம்மா. எங்க போனா என்னம்மா”
“என்னடீ , நான் சொன்னா உன் நல்லதுக்கு தான் இருக்கும். ஸ்விஸர்லாண்ட், மொரீசியஸ் இப்படி எங்கயாவது பிளான் பண்ணுங்க”
அருணா குருவிடம் கேட்கவும், சரி அருணா பார்க்கலாம் என்றான்.
“ஊட்டிக்கு டிக்கெட் போட்டுட்டீங்களா? “ என்று கேட்ட அஞ்சனாவிடம், “வெளிநாடு போகலாம்ன்னு யோசிக்கிறோம் அம்மா” என்றான் குரு.
“எல்லாம் உங்க மாமியார் யோசனையா?”
“இல்லம்மா. நாங்க இரண்டு பேரும் தான் யோசிக்கிறோம்”
“எதுக்கு இப்ப வெட்டி செலவு. ஹனிமூன் போறது கணவன் மனைவிக்கு ஒரு தனிமை கிடைக்க, அதுக்கு எதுக்கு வெளிநாடு போய் லட்சகணக்குல செலவு செய்யணும்? ஊட்டி வேண்டாம்ன்னா அங்க பெங்களூரு பக்கத்துல கூர்க், மங்களூரு இப்படி எங்கயாவது போயிட்டு வாங்க போதும்”
“இருவருக்கும் என்ன செய்வது? யார் சொல்வதை கேட்பது?” என்ற குழப்பத்தில் தேனிலவிற்கு செல்லவே இல்லை.
பழசை நினைக்க கூடாது என்று இருவரும் நிகழ்காலத்திற்கு தங்களை இழுத்து வந்தனர்.
ஒருவர் கைகோர்த்து ஒருவர், இனிமையாக சுற்றிபார்த்தனர் நைனிடாலை. மிகவும் அழகான மலைப் பிரதேசம். அவசரமில்லாமல், நிதானமாக ஒவ்வொரு இடமாக சுற்றிபார்த்தனர்.
முதலில் நைனா தேவி கோவிலுக்கு சென்றனர். அது பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான மலைக்கோயில் ஆகும். அம்மனை தரிசித்துவிட்டு பின் ஸ்நொவ் வியூ பாயிண்ட் சென்றார்கள்.
அங்கே, வெள்ளை பனி ஆடை அணிந்து காட்சி அளித்த இமயமலையை காண கண்கள் இரண்டு போதவில்லை.
மனதில் உள்ள கவலைகளெல்லம் விலகி செல்வது போல இருந்தது. சுற்றி இருக்கும் பனி போல மனதும் குளிர்ச்சியாக இருப்பதை போல உணர்ந்தார்கள். மனதின் காயத்தை ஆற்றும் சக்தி இயற்ககைக்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா.
பிறகு இருவரும் நைனி ஏரியில் படகு சவாரி செய்தனர். பின்மாலை போது ஏரியை சுற்றி அமைதியாக நடந்தனர். ரம்மியமான அனுபவமாக இருந்தது.
இன்னும் நிறைய இடங்கள் இருந்தது அங்கே சுற்றி பார்ப்பதற்கு. மீண்டும் ஒரு முறை இங்கே வரவேண்டும் என்று பேசி முடிவு செய்து விட்டு அங்கே இருந்து புறப்பட்டார்கள். இருவரும் திரும்ப ஹல்த்வானி செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.
“பக்கத்தில் தானே இருக்கு, அடிக்கடி இங்கே வருவோம். மனசுக்கு நல்லா இருக்கு செல்லம்மா”என்றான் குரு.
“ஆமா எனக்கும் மனசுக்கு இதமா இருக்கு. அது என்ன இப்பல்லாம் செல்லம்மா, புதுசா.. கேட்க நல்லா தான் இருக்கு. நானும் உங்களுக்கு ஒரு பெயர் வைக்கிறேன் இருங்க” என்று கூறிவிட்டு யோசிக்க தொடங்கினாள்.
“அது எல்லாம் மெதுவா வை. இப்ப நம்ம அடுத்த பிளான் என்னன்னு யோசிக்கணும்”
“சொல்லுங்க.. நீங்க என்ன யோசிக்கிச்சு வச்சிருக்கீங்க?”
“இரண்டு யோசனை இருக்கு. ஒன்னு நம்ம ஒரு காய்கறி கடை மாதிரி ஆரம்பிக்கலாம். இங்க மார்க்கெட் பார்த்ததும், எங்க தாத்தா மாதிரி நானும் வியாபாரம் பண்ணா என்னன்னு ஒரு யோசனை வந்துச்சு”
“சரி, நல்ல யோசனையா தான் தெரியுது. இன்னொன்னு”
“நம்ம தெருமுனையில ஒரு இஸ்திரி கடை இருக்கு இல்ல. அவங்க கடையை காலி பண்ணிட்டு அவங்க ஊருக்கு போக போறதா சொன்னாங்க. அந்த இடம் வாடகைக்கு கிடைக்குமான்னு கேட்டு பார்க்கனும்”
“அது நல்ல இடம். நாலு தெருவும் சந்திக்கிற முக்கம். அங்கே இருந்து பஜாருக்கு போற ரோடும் சேருது. அதுக்கு எதிர்த்த பக்கம் நிறைய ஹோம் ஸ்டே காட்டேஜ் எல்லாம் இருக்கு.”
“நானும் அது எல்லாம் தான் யோசிச்சு பார்த்தேன். பாட்டிகிட்ட சொல்லி விசாரிக்கலாம்”
“அங்கேயே காய்கறி கடை ஆரம்பிக்கலாமா?”
“இல்ல அருணா. அந்த இடம் கிடைச்சா, நாம ஒரு டீ கடை ஆரம்பிக்கலாமன்னு ஒரு யோசனை”
அருணா சற்று நேரம் யோசித்தாள்.
“நமக்கு அது பத்தி ஒன்னும் தெரியாது. ஆனால் நீ போடற டீ மாதிரி யாராலயும் போட முடியாது. நல்ல யோசனையா தான் தெரியுது.”
“அந்த இடம் கிடைச்சா டீ கடை நல்ல தேர்வா இருக்கும். நம்ம பட்ஜெட்க்கும் சரியா வரும்ன்னு தோனுது. நீ என்ன நினைக்கிற?”
“இரண்டு யோசனையும் நல்லாத்தான் தெரியுது. நம்ம இரண்டையும் அலசி ஆராய்வோம். நல்லது கெட்டது எல்லாம் பார்க்கலாம். சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துப்போம். அப்புறம் பாட்டிகிட்ட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்றாள் அருணாவும் உற்சாகமாக.
“டீ கடை ஆரம்பிக்கிறோம், காய்கறி கடை ஆரம்பிக்கிறோம்ன்னு தெரிஞ்சா நம்ம அம்மாக்களுக்கு நெஞ்சு வலியே வந்துடும்” என்றான் கந்தகுரு.
“நீ வேற, அவங்களுக்கு நெஞ்சு வலி வராது, நம்மளை வச்சு செய்வாங்க. நமக்கு தான் நெஞ்சு வலி வரவைப்பாங்க”
“ஆனால் எனக்கு இப்ப மனசு ரொம்ப நிறைவா இருக்கு. இந்த வேலை எனக்கு பிடிக்கும்னு தான் தோணுது செல்லம்மா”
“நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும், சரி தானே ”
பேசிக்கொண்டே வந்ததில் நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. அதற்குள் ஹல்த்வானி வந்துவிட்டது.
பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தனர். இரண்டு கிலோமீட்டர் தூரம். பேசிக்கொண்டே நடப்போம் என்று இருவரும் நடந்தே சென்றனர்.
“சரி யோசிச்சிட்டியா?”
“அதுக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும். இரண்டு பேரும் யோசிச்சு…”என்று அருணா பேசிக்கொண்டே வரவும், “அது இல்ல செல்லம்மா, என்ன எப்படி கூப்பிட போறேன்னு”
“கந்து ன்னு கூப்பிடவா?”
“கந்து வட்டி காரன் மாதிரி இருக்கு”
“ வேற, கந்தா”
“உன் இஷ்டம். எப்படி கூப்பிட்டாலும் எனக்கு சந்தோசம் தான்”
“இல்ல இல்ல கண்டுபிடிச்சிட்டேன் ‘சொக்கரே’ “
“அது என்ன சொக்கரே “
“நீங்க ஒரு சொக்கத்தங்கம் குரு, அதோட சுருக்கம்தான் சொக்கரே. ஆமா நீங்க எதுக்கு செல்லம்மான்னு கூப்பிடறீங்க?”
அது நீ என் செல்ல சீமாட்டி, அதோட சுருக்கம்ன்னு வச்சுக்கோயேன்.
“நமக்கு இப்ப தான் புதுசா கல்யாணம் ஆனா பீல் வருது செல்லம்மா”
“ஆமா சொக்கரே, உங்க மேலே புதுசா சொக்கிபோய் தான் இருக்கேன் போங்க”
இப்படி ஸ்வீட் நத்திங்ஸ், இருவரும் பேசிக்கொண்டே வீடு திரும்பினார்கள் புத்துணர்ச்சியாக.
அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றது இருவருக்கும்.
error: Content is protected !!