Skip to content
Post Views: 2,702
அத்தியாயம் 21
பூவிடைப் பனித்துளிகள்
வீட்டை விட்டு வெளியேற தடை விதித்து வெர்மெளண்ட் மாகாணத்தின் சினேடர் ஆணை பிறப்பித்தார். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், அப்படி வருபவர்கள் முழுவதுமான கவச உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்லப்பட்டிருக்க, நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது.
Advertisement
“என்னடா வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாதுன்னு பயமுறுத்தறாங்க. அவ்வளோ கொடுமையான வைரஸா டா?” என்று அனைவரும் நடுங்கித்தான் போயினர். வைரஸை விடவும், வீட்டில் இருந்து பெற்றோரிடமிருந்து பிரிந்து இத்துனை தொலைவில் இருப்பதன் அசௌகரியம் அவர்களை மேலும் மேலும் வாட்டியது.
யஷ்வந்தின் பெற்றோர் பஞ்சாபில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்தனர். அவர்களில் வீடியோ கால் செய்து பேசிய யஷ்வந்த், “சஸ்ரிகால் பாபா ஜி. சஸ்ரிகால் மம்மி.” என்று வணக்கம் சொல்லிவிட்டு அங்கே நிலைமை பற்றி விசாரித்தான். அவர்கள் கிராமம் வழக்கமான சோம்பல் தன்மையுடன் இயங்கிக் கொண்டிருந்தது. அவனது பெற்றோருக்கு யஷ்வந்த் இங்கே தனியே என்ன செய்வானோ என்ற கவலை தான் பெரிய அளவில் இருந்தது.
அதே போன்று தான் திவ்யாவின் வீட்டினரும் பயந்து போயினர். “முடிஞ்சா அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்துரு சாமி. தனியா காய்ச்சல் குளிருன்னா என்ன பண்ணுவ? நியூஸ்ல சொல்லறதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு சாமி” என்று அவள் தந்தை சொல்ல, திவ்யாவிற்கும் இந்தியா சென்று பெற்றோருடன் பத்திரமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அனைத்து விமான போக்குவரத்தும் காலவரையின்று ரத்து செய்யப்பட்டிருக்க, வீட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் போவது கூட அசாத்தியமான விஷயம் என்று நிலைமையின் தீவிரம் உணர்த்தியது.
Advertisement
முதல் இரு வாரங்கள் கொரோனா பற்றிய அச்சுறுத்தல்களில் அவ்வீட்டினர் மூழ்கியிருந்தனர் என்றால், அதன் பின்னர், “வொர்க் ஃபரம் ஹோம்” என்ற ஆயுதத்தை கையில் ஏந்தியிருந்தது அவர்களது அலுவலகம். அங்கே மட்டும் என்றில்லை. அனைத்து பன்நாட்டு கணிப்பொறி ஜாம்பவான்களும், வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை செய்யத் தோதாக ஆவணம் செய்திருக்க, இவர்களுக்கு பொழுது மடமடவென்று கழிந்து போயிற்று.
Advertisement
உணவு பண்டங்கள் வாங்க மட்டும் அருகே இருந்த பெட்ரோல் நிலையில் இருக்கும் 7/11 கடைக்கு ஆண்களில் ஒருவர் சென்று வருவர். அதுவும் போருக்குச் செல்லும் வீரனை வழியனுப்புவது போன்று உடல் கவசம், முகமூடி, கையுறை, சானிடைசர் என்று சகல ஆயுதத்தையும் ஏந்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத அசுரனை சமாளித்து வென்று பொருட்களை வாங்கி வர வேண்டிய நிர்பந்தம்.
முதல் முறை வருண் சென்று வந்தான். வீட்டினுள் வரும் முன்னர், விண்வெளிக்குச் செல்லும் பயணி போல அவன் அணிந்திருந்த முழு சூட்டை வெளியே நின்று கழற்றி, சானிடைசர் கலந்த நீரில் இட்டு துவைத்து அதன் பின்னரே உள்ளே வந்தான். வந்த பின்பும் கூட வாய் திறவாமல் செய்கையாலேயே பேசிக் கொண்டு சில மணி நேரம் சுற்றினான். ஏதோ வாய்க்குள் கொரோனாவை அடக்கி வைத்திருப்பது போலவும், வாய் திறந்தாலே மற்றவர் மீது பாய்ந்து குதறிவிடும் பாவனையிலும் சுற்றினான்.
“ஊர்ல ஒரு பயல காணோம். 7/11 கடையில கூட ஆளுங்க நடமாட்டம் இல்ல” என்று புலம்ப, “அப்படியே இந்த ஊர்ல எல்லாரும் ரோட்டில நடமாடிட்டாலும்” என்று அங்கலாய்ப்பு தான் அப்போதைக்கு அனைவருக்கும் தோன்றியது. தன் தாய் நாட்டிற்கு சென்றுவிட மனம் உந்தியது. அனைத்து பேருந்து, ரயில், விமானம் ஏன் ரோட்டில் நடப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருக்க, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம்.
Advertisement
‘இதே நம்மூர்லன்னா நாலு மனுஷ மக்களை பார்த்தாலாச்சும் கொஞ்சம் தெம்பா இருக்கும்’ என்று நினைத்துக் கொள்வான் பரணி. அதிலும் ஊரிலிருந்து வரும் செய்திகள் அத்தனை உவப்பாக இருக்கவில்லை. வெளிப்படையாக பயத்தைக் காட்டாவிடினும், உள்ளூர அனைவருக்குமே உயிர் பயம் இருக்கவே செய்தது. இங்கே இருப்போருக்கு, ‘நம் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என யாருமே அருகில் இல்லாமல் இருக்கும் நேரத்தில் நமக்கேதும் ஆகிவிடுமோ’ என்ற அச்சம், அதே நேரம், ‘நாம் இங்கே தொலை தூரத்தில் இருக்க, இந்தியாவில் இருக்கும் பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ ஏதேனும் ஆகிவிடுமோ’ என்ற கவலை பேரச்சமாக மனதினுள் நீங்காமல் நிறைந்து போனது.
கொரோனா பற்றிய செய்திகளும், கொத்து கொத்தாக மக்கள் மடிகிறார்கள் என்றும், தனித்தனியாக உடல்களை எரிப்பதற்குக் கூட வசதியின்றி பெரிய குழிகளில் உடல்களை போட்டு எரிக்கின்றனர் போன்ற செய்திகளைக் கேள்வியுறும் போது இதயத்தின் அடிதளமே ஆட்டம் கண்டு போனது.
“கிருஷ்ணகிரிலாம் அவளோ டெவலப்பே ஆகலை. ஏதோ எக்ஸாம் லீவு விட்ட குழந்தைங்க மாதிரி எல்லாரும் வாசல்ல கூடி உட்கார்ந்து தாயம், சீட்டுன்னு விளையாடிட்டு இருக்காங்க. இங்க யாருக்குமே இன்னும் நிலைமையோட தீவிரம் புரியலை” என்று திவ்யாவின் தந்தை ரகுராமன், அவளிடம் தொலைபேசியில் பேசும்போது குறைபட்டுக் கொண்டார்.
கைப்பேசியை வைக்கும் வரையில், “நீ பத்தரமா இரு சின்னப்பாப்பா… பத்தரம் டா. வெளிய எங்கிட்டும் போயிராத! காச்சல் சளின்னு வந்தா தனியா நீ எப்படி சமாளிப்பயோன்னு நினைச்சாலே எனக்கு கெதக்குனு இருக்குடா” என்று அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பெற்ற மனம், தனியே தொலைதூரத்தில் வசிக்கும் மகளை எண்ணி தவித்துப் போனது. அதே போல் தான் திவ்யாவிற்கும். ‘ஏற்கனவே கொஞ்சம் உடம்பு முடியாதவரு. இப்போ திடீர்னு சளி காய்ச்சல்னு கொரோனா புடிச்சுட்டா, என்னாகறது. அக்கா அங்கையே இருக்கான்னு பேரு தான். அவ வீட்டை கவனிக்கவே அவளுக்கு தோதுபடாது. இதில சின்ன சின்ன வேலைக்கும் அப்பாவை போக சொல்லி வேலை வாங்குவா. இப்போவும் அப்படி வெளிய அனுப்பித் தொலைச்சிடாம இருக்கணும்.’ என்று பயந்து போய் தான் இருந்தாள்.
தன் அக்கா செளமியாவிடம் நாசுக்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவும் செய்தாள். பின்னே, உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட்டிருந்த காரணத்தினால், அவளுக்கோ, அவள் மகனுக்கோ என்ன தேவை என்றாலும் முதலில் அவள் வேலை வாங்குவது தந்தையிடமே. “அவருக்கு ஆபீஸ் வேலையே தீரலைப்பா. நீங்க கொஞ்சம் வந்து வாங்கி குடுத்துட்டு போங்களேன்” என்று தந்தைக்கு என்ன சிரமம் இருக்குமோ என்றெல்லாம் துளியும் கவலை கொள்ளாமல் வேலை வாங்குவாள்.
இப்போது பேசுகையில் கூட தந்தைக்கு அறிவுரை தான் வழங்கினாள் திவ்யா. “செளமி மார்கெட் போக சொன்னா, காய் வாங்க சொன்னா, சின்ன பையன் கறி திங்கலை இந்த வாரம்னு வாங்கிட்டு போறேன்னு வெளிய சுத்தாதீங்கப்பா. பக்கத்துல கடையில என்ன கிடைக்குதோ அதை செஞ்சு சாப்பிட்டுட்டு வீட்டுல இருக்க சொல்லுங்க உங்க பெரிய பொண்ண. அவளுக்கு சேவகம் செய்ய அவங்க வீட்டுக்காரர் இருக்காரு, அவர் பார்த்துக்குவாரு.
நீங்க அங்கையும் இங்கையும் அலைச்சல் படாதீங்க. ப்பா, இந்தியால மக்கள் தொகை வேற ரொம்ப ஜாஸ்தி. இந்த தொத்துவியாதி சீக்கிரம் பரவும்பா. அதெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சாதாரணமா இருந்துராதீங்க” என்று தந்தையிடமிருந்து அழைப்பு வந்தாலே புராணமாய் கொட்டித் தீர்த்தாள் எனலாம். அவள் கவலை அவளுக்கு. எங்கே வயதான காலத்தில் கொரோனா தொற்று வந்துவிட்டால் என்னாவது என்ற தவிப்பு.
இங்கே வெர்மெளண்ட் வீட்டில், அவ்வப்போது கிட்சனில் அனைவருமாக அமர்ந்து உணவு செய்யும் வேளையிலோ, சாப்பிடும் வேளையிலோ, அவர்கள் பேச்சு முழுக்கவே இந்தியாவையும், வீட்டினரையும் அங்கே நிலவும் சூழலையும் மட்டுமே சுற்றி வரும்.
யஷ்வந்தின் பெற்றோர், பஞ்சாபில் ஒரு சிறிய கிராமத்தில் தான் வசிக்கின்றனர். அங்கே நிலைமையின் தீவிரம் அவ்வளவாக இருக்கவில்லை என்றே சொன்னான். “அன்றாட வாழ்க்கை அங்கே கொஞ்சமும் பாதிக்கலை. பாப்பாஜியும் காலையிலயே வயலுக்கு போயிடுவார், மம்மி வீட்டு வேலை முடிச்சுட்டு மதியம் பாப்பாஜிக்கு சாப்பாடு கொண்டு போவாங்க. கொரோனா பத்தி பெருசா அங்க யாரும் பயப்படலை. அவங்க அவங்க தினப்படி வேலைய செஞ்சிட்டே இருக்காங்க. அங்க லாக்டவுன்லாம் இல்ல” என்று கூறினான்.
ஒரு பக்கம் நல்ல விஷயம் தானே என்று தோன்றினாலும், உலகமே லாக்டவுனில் மூழ்கியிருக்க, இவர்களுக்கு இச்செய்தியின் தீவிரம் உணராமல் தங்கள் போக்கில் இருக்கின்ற அறியாமை அச்சமூட்டியது.
அதே போல் தான் பரணியின் வீட்டிலும். பரணியின் தாய் ருக்மணி, ஈரோட்டின் அருகே ஒரு கிராமத்தில் வாழ்கிறார். வயல் வேலை, மஞ்சள் நாற்று நடவு, செடிக்கு தண்ணீர் கட்ட என அவரது அன்றாட வேலைகள் எந்த தோய்வும் இல்லாமல் நடந்தேறியது. பரணியுடன் பேசும் சமயம் திவ்யா கவனித்திருக்கிறாள். அவர் பேச்சு முழுக்க பரணி அன்று சாப்பிட்டானா, உணவுக்கு என்ன செய்தான் என்பதைச் சுற்றியே வலம் வரும்.
“மத்தியானத்துக்கு என்ன சமைச்சீங்க கண்ணு? வெறும் ரொட்டியா சாப்பிடற தினமும். வெண்டு வெடுக்குன்னு கோழி, ஆடுன்னு வாங்கி செஞ்சு சாப்பிடு கண்ணு. நம்ம பக்கத்து தோட்ட சிவநேசன் மவன் அருணுலாம் கொரோனான்னு ஆபீஸ் மூடிட்டாங்கன்னு வீட்டுக்கு வந்துட்டான் கண்ணு. வீட்டுல இருந்தே வேலை பாக்கலாமாம், அப்படியா? உனக்கு அப்படி வீட்டுக்கு வந்து வேலை பாக்கற உத்தியோகம் இல்லையா சாமி? வெறும் ரொட்டியும், சப்பாத்தியுமே எத்தனை நாளைக்கு தின்னுட்டு இருக்கறது?” என்று எங்கே சுற்றி பேசினாலும் திரும்ப சாப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்.
அவ்வீட்டினருக்கு அனைவரும் ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதே பெரும் ஆறுதலாக இருந்தது. வருண் முதல் வாரம் சூப்பர் மார்கெட் சென்று வந்த மூன்றாவது நாளே இருமல் சளி என்று ஆரம்பம் ஆகிவிட்டது அவனுக்கு. என்ன தான் முகக்கவசம், கையுறை என அனைத்தும் அணிந்து வெளியே சென்று வந்திருந்த போதும் அவனுக்கு காய்ச்சல் கண்டிருந்தது. அவன் அறையில் உடன் வசித்த பரணிக்கும் தொண்டை கவ்வுவது போன்று அவ்வப்போது தோன்றும், ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை.
வருண் அந்த அறையில் தனிமைபடுத்திக் கொள்ள, வேறு வழியில்லாமல் பரணி தன் படுக்கையை ஹாலிற்கு மாற்ற வேண்டியானது. வருணுக்குத் தேவையான உணவை அவன் அறையின் வாயிலில் வைத்து விடுவர். அவன் சாப்பிட்டு, அவனே தட்டுகளை சுத்தம் செய்து வெளியே வைக்க, அதை அணுகுண்டை கையில் எடுத்துக் கொண்டு வருவது போல, யஷ்வந்த் எடுத்து வந்து கிச்சன் சிங்கில் போட்டுவிட்டு, கைகளை கழுவோ கழுவு என்று கழுவுவான்.
சில சமயம், வருணுக்கு உணவு கொண்டு செல்லும்போது, பரணி அறையினுள் சென்று அவன் சாப்பிடும் வரையிலும் உடனமர்ந்து பேசிக் கொண்டிருபான். “நீ வெல்லு டா. உனக்கும் தொத்திக்க போகுது” என்று சொன்னால் கேட்கமாட்டான்.
“அதான் எட்டடி டிஸ்டன்ஸ் உட்கார்ந்திருக்கேன்ல. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ சாப்பிடு. நான் இருக்கேன்” என்று சொல்லிவிடுவான்.
ஒருபக்கம் பரணியின் செய்கை நெகிழ்ச்சியாக இருந்தாலும், திவ்யாவிற்கு சற்றே பயம் கொடுக்கும். “தேவையில்லாத ரிஸ்க் எடுக்கறீங்க நீங்க. கொரோனா வந்து படுத்துட்டா என்னாகறது?” என்று ஆதங்கம் தாளாமல் கூறிவிட்டாள்.
அவளின் சின்ன கோபமும், அதற்குப் பின்னால் பொதிந்திருந்த அக்கறையும் அவனுக்கு உள்ளூர அப்படியொரு உற்சாகம் கொடுத்தது. அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்று ஏனோ தோன்றாமல் போக, அவள் சொன்னதைக் கேட்டு தலையை அசைத்தவனை ஆச்சர்யத்துடன் தான் பார்த்துச் சென்றாள்.
‘வெளி முகமே பார்க்காம, நாலு செவுத்துக்குள்ள பேச்சு துணைக்குக் கூட ஆளில்லாம எப்படி ஒருத்தனால இருக்க முடியும்?’ என்று தன் செய்கைக்கு அர்த்தம் கற்பித்தவன், வருணுக்கு உணவு கொடுத்துவிட்டு சம்பிரதாயமாக சில வார்த்தைகள் உதிர்த்துவிட்டு முன்பு போல் அவன் உண்டு முடிக்கும் வரையிலும் அமர்ந்திராவிட்டாலும் சில நிமிடங்கள் செலவழித்த பின்னரே இறங்கி வருவான்.
தான் சொன்னதைக் கேட்டு சரியென ஒப்புக் கொண்ட போதும் தன் சுயம் மாற்றிக் கொள்ளாமல் தன் மனம் படி நடந்து கொள்வதும் கூட திவ்யாவிற்குப் பிடித்தது. முன்பு கல்லூரியில் அவன் வெளித்தோற்றம் ஈர்த்தது என்று கொள்ளலாம். ஆனால், இப்போது தினமும் அவனுடன் பழகும் வேளைகளில் அவன் குணம் அவளை வெகுவாக ஈர்த்தது.
அதை வெளிக்காட்டிக் கொண்டால் எங்கே ரொம்பவும் உதாசீனப்படுத்தி விடுவானோ என்ற அச்சம் காரணமாக அவனை உள்ளூர ரசித்ததோடு நிறுத்திக் கொண்டாள். இன்னமும் அவள் மீது காதலோ அன்போ இருப்பது போல அவன் இப்பொதெல்லாம் நடந்து கொள்வதில்லை. மற்றவரிடம் பேசும் அளவிலேயே தன்னுடனும் பேசினான். ‘ஹி ஹேஸ் மூவ்ட் ஆன். அதனால தான் கேஷுவலா நடந்துக்கறான். அவன் மனசில நாம இல்லை.’ என்று முடிவுக்கு வந்திருந்தாள்.
‘என் மனதில் அவன் இருக்கிறானா?’ என்ற கேள்வியும் அவ்வப்போது அவளுள் எழும் தான். கல்லூரி முடித்திருந்த இந்த நான்கு ஆண்டுகளில் பல ஆண்களைக் கடந்தாகி விட்டது. சிலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டும் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் சில தினங்களில் காணாமல் போய்விடுவதுண்டு. சிலருடன் பழகிய பிறகு அவர் மீதிருந்த ஆர்வம் குறைந்து போய்விடுவதுண்டு.
சிற்சிலர் இவளிடம் பிடித்தம் தெரிவித்த போதும் அவர்கள் பெருமளவு தாக்கத்தை இவள் மனதில் ஏற்படுத்தியதில்லை. பரணி விட்டுச் சென்ற இடம் இன்னமும் காலியாக குடியேற ஆளில்லாமல் அப்படியே தான் காத்திருக்கிறது.
இதையும் திவ்யா உணர்ந்திருந்தாள். பரணியை அப்போதும் பிடிக்கும். இதோ இப்போது அவன் குணத்தினால் இன்னமும் பிடிக்கிறது. அதைச் சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கம் உண்டு. இப்படியான ஒரு சம்பவம் தங்கள் வாழ்வில் நடந்தது போல இருவருமே காட்டிக் கொள்ளவில்லை. அதிலும் பரணி, இன்னமும் தன்னைப் பிடிக்கும் என்று எந்த விதத்திலும் வெளிப்படுத்தவோ அல்லது சொல்லால் செய்கையால் தெரியப்படுத்தவோ இல்லை எனும் போது, தானாக பிடித்தம் தெரிவித்து என்னாகப் போகிறது.
இங்கிருந்து சென்றுவிட்டால் இதுவும் மறந்து போகும். இவனையும் கடந்து விடுவோம் என்றே எண்ணியிருந்தாள் திவ்யா.
வருணுடன் ஒரு அறையில் தங்கியிருந்தவன், வருணின் கொரோனா தனிமைப்படுத்துதல் காரணமாக இப்போது யஷ்வந்துடன் தன் ஜாகையை மாற்றிக் கொண்டிருந்தான். வருணுக்கு அவ்வப்போது சூடான பானம் ஏதேனும் திவ்யா செய்து கொடுப்பாள். எங்கே இவள் காட்டும் கரிசனத்தைக் காதல் என்று தப்பர்த்தம் கற்பித்துக் கொள்ளப் போகிறானோ என்ற அச்சம் காரணமாக, செய்த பானத்தை, மற்றவரிடம் கொடுத்து வருணுக்கு கொடுக்கச் சொல்வாள்.
ஒரு முறை, வருணுக்காக சூடாக மிளகு ரசம் வைத்திருந்தாள். அதை கோப்பையில் ஊற்றி, சோஃபாவில் அமர்ந்து கணினியில் மூழ்கியிருந்த பரணியிடம் கொண்டு வந்தவள், “ரசம் வச்சேன்” என்று மட்டுமாக மொழிய, தனக்குத் தான் கொண்டு வந்திருக்கிறாளோ என்ற எண்ணத்தில், கோப்பையை வாயில் வைக்க எத்தனித்தவனிடம், “வருணுக்கு” என்று அவசர அவசரமாகக் கூறினாள்.
அதுவரையிலும் கணினியின் திரையிலேயே கண்களைப் பதித்திருந்தவன், இவள் வருணுக்கு என்று சொல்லவும் சற்றே முறைத்த வண்ணம் கோப்பையை அருகேயிருந்த மேஜையில் டொங்க் என்று சப்திக்க கீழே வைத்தான்.
“அவ்வளோ அக்கறை இருந்தா கொண்டு போய் குடுக்கறதுக்கு என்ன? வீட்டுக்குள்ளயே கொரியர் சர்வீஸ் வேற” என்று அலுப்புடன் சொல்லிவிட்டு, கோப்பையுடன் மாடிப்படிகளில் ஏறலானான்.
error: Content is protected !!