Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 11

அத்தியாயம் 11

காலை வழக்கமான நேரத்தில் அருணா கண்விழிக்கையில், குரு தீவிரமாக அமர்ந்து வேலை பாத்துக்கொண்டிருந்தான்.



Advertisement

“சீக்கிரமா எழுந்திட்டிங்களா குரு?” என்று அருணா கேட்டதற்கு, “நான் தூங்கவே இல்லை செல்லம்மா” என்றான் குரு.  

“அப்படி தூங்காம என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே  பின்புறம் இருந்து அவனை அணைத்து கொண்டே, எட்டி பார்த்தாள்.

Advertisement

Advertisement

“டீ கடை ஆரம்பிக்க பிசினஸ் பிளான் தயார் பண்ணிட்டு இருந்தேன். ஓரளவிற்கு முடிஞ்சுடுச்சு. பார்க்கிறீயா?” 

“அதுக்குள்ள ரெடி பண்ணிட்டீங்களா?” என்று ஆர்வமாக கேட்டுக்கொண்டே அவனை சுற்றிலும் பரவிக்கிடந்த பேப்பர்களை பார்வை இட்டாள்.

Advertisement

“காலைல எழுந்து தான் ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனால் தூக்கமே வரலை. ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. சில யோசனைகள் வந்தது. அப்புறம் மறந்து போனா என்ன பண்றது, குறிப்பு எடுத்து வச்சிக்கலாம்னு  ஆரம்பிச்சேன். அப்புறம் நிப்பாட்ட மனசு வரலை. அதான் அப்படியே செஞ்சிட்டு இருக்கேன். கொஞ்சம் ஆர்வம் அதிகமாயிடுச்சு போல”

“ஆர்வம்ன்னு சொல்லாதீங்க சொக்கரே, ஆர்வக்கோளாறுன்னு சொல்லுங்க”

“சீக்கிரமா போய் பாட்டிகிட்ட சொல்லி அந்த இடத்தை வாடகைக்கு கிடைக்குமான்னு விசாரிக்க சொல்லணும் செல்லம்மா. சீக்கிரம் ரெப்பிரஷ் செஞ்சிட்டு வா. போயிட்டு வந்துடலாம்”

“இனி இந்த வண்டி நிக்காது போலவே. இருங்க நைட்டெல்லாம் தூங்காம வேலை பார்த்திருக்கீங்க. நான் முதலில் ரெப்பிரஷ் ஆகிட்டு வந்து உங்களுக்கு டீ போட்டு தர்றேன். அப்புறமா பாட்டியை பார்க்க போகலாம், இந்த பேப்பர்ஸ்  எல்லாம் எடுத்து வச்சிடுங்க. அங்க போய் எனக்கும் பாட்டிக்கும் சேர்த்து ஒரே தடவை விளக்கம் சொல்லுங்க” என்று படபடத்துவிட்டு பாத்ரூம் உள்ளே  நுழைந்துகொண்டாள்.

“சரியான சரவெடி தான் இப்பெல்லாம். நீயே பேசிட்டு போய்டற, எனக்கு பேச கொஞ்சம் கேப் விடு செல்லம்மா” என்று பாத்ரூம் நோக்கி குரல் கொடுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்று தேநீர் தயாரிக்க தொடங்கினான்.

வேகமாக வந்த அருணா ”நான் தான் வந்து போடறேன்னு சொன்னேன் இல்ல. அதுக்குள்ள நீங்க எதுக்கு போடறீங்க?” என்றாள் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு.

“என்ன செல்லம்மா நீ? அய்யா டீ மாஸ்டர் ஆகபோறேன். அதனால வித விதமா டீ போட்டு டெஸ்ட் பண்ணனும் இல்லையா? அதனால இன்றுமுதல், நம்ம டெஸ்டிங் ஆரம்பம். நீ தான் டேஸ்ட் பார்த்து குறிப்பெடுக்கணும்” என்றான்.

அருணா வேலை பார்த்தது டெஸ்டிங் டீமில் தான். ஒரு அணி செய்த ஆப்பை இன்னொரு அணி, சோதனை செய்யவேண்டும். பல்வேறு சூழல்களில், அதிகமான உபயோகத்திற்கு இடையில், அது சரியாக வேலை செய்கிறதா? அதனால் வேற பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதா? என்று அந்த ஆப்பை  பலவிதமாக பரீட்சிப்பதே இந்த அணியின் வேலையாக இருக்கும்.

“படிச்ச படிப்பும் கத்துகிட்ட கலையும் எப்பவும் வீணாகாது இல்ல குரு? அந்த வேலைல கத்துக்கிட்டதை இங்கே சரியா பயன்படுத்திப்போம். இன்னிக்கே  டெஸ்ட் கேஸஸ் நான் ரெடி பண்றேன். அப்புறம் பாருங்க என் வேலையை. பீ ரெடி போர் தி டெஸ்டிங் “ என்று ஸ்டைலாக கூறி மேடையில் குதித்து ஏறி உட்கார்ந்தாள்.

முதலில் பாட்டிக்கு என்று ஒரு கிளாஸ்

தேநீரை பிளாஸ்கில் ஊற்றி தனியாக எடுத்து வைத்தான்.

பிறகு இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு க்ளாசில் ஊற்றினான். அருணாவின் அருகிலேயே மேடையை ஒட்டி நின்றுகொண்டு தேநீரை சுவைத்து பருகினான்.

இருவரும் இப்பொழுது மாமா பையன் அத்தை மகள் என்ற உறவுடன் பழகுவதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் புதிதாக காதலிக்க தொடங்கியிருந்தார்கள். இதமான காலை பொழுதில், அருகருகே இருவரும் சேர்ந்து பருகும் தேநீர் அந்த நிமிடங்களை ரம்மியமாக செய்தது.

 

பிறகு, பிளாஸ்க் எடுத்துக்கொண்டு இருவரும் பாட்டி வீட்டிற்கு சென்றார்கள்.

பாட்டி இவர்களுக்காக தோட்டத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

பாட்டிக்கு முதலில் தேநீர் ஊற்றி கொடுத்தான்.

பின் வழக்கம் போல இரு பெண்களும் பேசிமுடிக்கும் வரை குரு தினசரியை புரட்டினான். அருணா நேற்று தாங்கள் சென்று வந்ததை பற்றி அளவலாவி கொண்டிருந்ததாள். 

குருவிற்கு அருணாவிற்கும் பாட்டிக்குமான பந்தம் ஆச்சர்யத்தை கொடுத்தது. பாட்டியும் அவ்வளவு எளிதாக மனிதர்களோடு பழகுபவராக தெரியவில்லை. இவன் கவனித்த வரையில், எல்லோரையும் ஒரு எல்லையில் நிறுத்தி வைத்திருந்தார். அருணாவும் பாட்டியிடம் காட்டும் நெருக்கம் வேறு யாரிடமும் காட்டி அவன் பார்த்ததில்லை.  

பாட்டி தேநீர் குடித்து முடிக்கவும், குரு தனது யோசனையை கூறினான்.

பாட்டி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி இல்லை.

“படிச்ச பையன், உன்னால இந்த வேலை செய்ய முடியுமா? எந்த வேலை செய்றதும் தப்பில்லை. ஆனாலும் உங்க வாழ்கை முறையை அங்கே பெங்களூரில் நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு மாதிரி நிறைய மக்களோடு சேர்ந்து பயணிக்கிற ஒரு பயணமா இருக்கும். இது உங்களுக்கு பழக்கமில்லாத ஊர். தொழிலும் பழக்கமில்லாததாக இருந்தால், சிரமம் அதிகமா இருக்கும்.” என்று அவரது எண்ணத்தை கூறினார்.

“என்னோட யோசனைகளை சொல்றேன் பாட்டி. நீங்க இரண்டு பேரும் முதலில் கேளுங்க. அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று இரு பெண்களுக்கும் தன் திட்டத்தை விளக்கினான் 

அவனது விளக்கம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை கூட சேர்த்திருந்தான். அவன் விளக்கம் கூறுகையில் அவன் கண்களில் ஒரு ஒளி இருந்தது. குரு எப்பொழுதும் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் இன்று அவன் உள்ளார்ந்து, முழு மகிழ்ச்சியுடன் அதை செய்வதை போல தோன்றியது அருணாவிற்கு.

“சூப்பரா இருக்கு உங்க திட்டமிடல் எல்லாம்” என்றாள் அருணா. பாட்டிக்கும் குருவின் விளக்கத்தை கேட்கவும், முயற்சி செய்து பார்க்கட்டுமே என்ற எண்ணம் தோன்றியது.

அப்பொழுதே பாட்டியுடன் சென்று அந்த கடை வாடகைக்கு கிடைக்குமா என்று அந்த இடத்து முதலாளியிடம் பேசினார்கள்.

இன்னும் ஒரு மாதத்தில் புதிதாக பெயிண்ட் அடித்து தருவதாக ஒப்புக்கொண்டார். ஓர் சிறு தொகையை முன்பணமாக கொடுத்து உறுதி  செய்துவிட்டு வந்தார்கள்.

அடுத்த ஒரு மாதம் மின்னல் வேகத்தில் சென்றது என்று தான் கூற வேண்டும். ஹல்த்வானியிலே நல்ல தேநீர் விளைச்சல் இருந்தது. இவன் நேரடியாக சென்று அங்கே இருக்கும் தேநீர் வகைகளை எல்லாவற்றிலும் சாம்பிள் வாங்கி வந்தான். அதே போல அங்கே இருக்கும் மாட்டு பண்ணைகளை நேரடியாக சென்று பார்வை இட்டு, முதல் தரமான பால் தினமும் பிரெஷாக வேண்டும் என்று பேசி, அங்கே இருந்து இந்த ஒரு மாதம் மட்டும் தினம் ஒரு லிட்டர் பால் வாங்கி வந்தான். கடை திறந்ததும் அவர்களே டெலிவரி செய்வதாக கூறினார்கள்.

அங்கே உள்ள இடங்களுக்கு செல்வதற்கு பாட்டியின் உதவி மிகவும் தேவைப்பட்டது. கம்லா  டீச்சர் என்றால் நிரம்ப மரியாதை இருந்தது அந்த ஊர் மக்களிடம்.

அங்கே அக்கம் பக்கம் உள்ள தேநீர் கடைக்கு சென்று அங்குள்ள தேநீரை சுவைத்து பார்த்தான். ஆன்லைனிலும் தேநீர் சம்பந்தமாக நிறைய படித்தான்.

‘சின்ன கடை ஆரம்பிக்க இவ்வளவு யோசிக்க வேண்டுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது அருணாவிற்கு, குரு காலில் சக்கரம் கட்டிக்கொண்டதை போல ஓடிக்கொண்டே இருந்தான். அலைந்து திரிந்து வீடு திரும்புகையில் மலர்ந்த முகத்துடன் வரவேற்கும் மனைவி அமைந்து விட்டால், அதைவிட பெரிய வரம் என்ன இருந்து விட முடியும்?

மலர்ந்த முகத்துடன் கணவனுக்கு துணையாக நின்றாள் அருணா. 

இவன் தயாரிக்கும் தேனீர் காலை மாலை இரண்டு வகை என்று பாட்டியும் அருணாவும் சுவைத்து பார்ப்பார்கள். அதற்கு மேலே அவர்களுக்கு கொடுக்க மாட்டான்.

ருக்மணி, அவர் பிள்ளைகள், ருக்மணியின் தம்பி கோலு என்று அவர்களிடம் சுவைத்துப்பார்க்க கொடுப்பான். அனைவரது கருத்துகளையும் அருணா குறிப்பெடுத்து கொள்வாள்.

பாய்லர் ஒன்று வாங்கினார்கள். “அருணா எனக்கு இந்த பாய்லர் மேலே எப்பவும் ஒரு கண்ணு. பெங்களூருல அதிகம் இருக்காது. நம்ம ஊர் பக்கம் இது தானே. ஆனால், இதுலயும் பிராக்டீஸ் பண்ணனும்.”

அதிலும் தேநீர் தயாரித்து பக்குவம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டான்.

கடைக்கு தேவையான பொருட்களை இருவரும் சேர்ந்து லிஸ்ட் போட்டு சென்று வாங்கி வந்தார்கள்.

பாட்டி பொருட்களை அவர் வீட்டில் தற்காலிகமாக வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

செலவுகள் பார்த்து பார்த்து செய்தாலும், கையில் உள்ள பணம் வேகமாக கரைய தொடங்கியது.

அருணா கையில் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்களை விற்றுவிடுமாறு கூறினாள். கந்தகுரு  தயங்கவும், “இதுல யோசிக்க எதுவும் இல்லை. நமக்காக இதை செய்வோம், சந்தோசமா வாங்கிக்கோங்க. எல்லாம் நல்லதா நடக்கும் ” என்று கூறி மகிழ்ச்சியாக வளையல்களை கழட்டி கொடுத்தாள்.

கழுத்தில் உள்ள தாலி சங்கிலியும், கையில் இரண்டு வளையல்களையும்  மட்டுமே எடுத்து வந்திருந்தனர். மீதம் இருக்கும் நகைகளை, பத்திரமாக  வைத்துக்கொள்ளுங்கள் என்று தன் அன்னையிடம் கொடுத்துவிட்டு  வந்திருந்தாள்.

உத்ரகாண்டில் திருமணமான பெண்கள் கையில் பஹுன்சி என்று அழைக்க படும் ஒரு வளையலை அணிந்திருப்பார்கள். சிவப்பு துணி மேலே தங்கத்திலோ, வெள்ளியிலோ ஆன சங்கு வடிவ மணிகளை கோர்த்து  அமைக்கப்பட்டிருக்கும் அந்த வளையல். பாட்டியுடன் சென்று அதுபோல ஒரு பஹுன்சி  வெள்ளியில் செய்து வாங்கி வந்தாள் அருணா.

அன்று இரவு கணவன் கையில் கொடுத்து ஆசையாக தன் கையில் அணிவிக்க சொன்னாள்.

பின்,சஞ்சலமில்லாமல் தங்க வளையல்களை விற்று அதில் வந்த கணிசமான தொகை வைத்து அணைத்து ஏற்பாடுகளையும்  செய்து முடித்தனர்.

கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தனர்.

நீங்க நாலு பெயர்கள்  யோசிங்க, நான் நாலு…” என்று அருணா தன்  கைவரிசையை ஆரம்பிக்கவும், “தெய்வமே.. எப்படியும் நீ சொல்ற பெயர் தான் வைக்கணும். அதனால் நீயே சொல்லிடு” என்றான் சிரித்துக்கொண்டே.

“ ‘சொக்கன் சாய் துக்கான்’ எப்படி?”

“சொக்கன் நானா? எங்க தாத்தாவா?”

“உங்களுக்கு உங்க தாத்தா சொக்கலிங்கம் பெயரில் இருந்து சொக்கன். எனக்கு, என் ஆசை மச்சான் சொக்கரோட பெயர் சொக்கன். ஓகேவா ”

‘சொக்கன் சாய் துக்கான்’ என்று ஹிந்தியிலும் கீழே ‘சொக்கன் டீ ஸ்டால்’ என்று ஆங்கிலத்திலும் அழகாக பெயர் பலகை  தயாராகியது.

கடையில் தேநீருடன் கொஞ்சம் சிற்றுண்டியும் தேவை என்பதால், அங்கே சில பேக்கரிக்களுக்கு சென்று சாப்பிட்டு பார்த்தான். தரமும் சுவையும் மனதிற்கு திருப்தியாக இருந்த இரண்டு மூன்று கடைகளில் இருந்து வீட்டிற்கும் சாம்பிள் வாங்கி வந்தான்.

“டீ கடையில் வெறும் டீ மட்டும் எப்படி போதும். ஸ்னாக்ஸ் ஏதாவது வேணுமில்லயா? கொஞ்ச நாளைக்கு வெளியே ஆர்டர் கொடுக்கணும். நல்ல பேக்கரி இரண்டு மூணு விசாரிச்சு சுவை பார்த்து சாம்பிள் வாங்கி வந்திருக்கேன். நீயும் பாட்டியும் சாப்பிட்டு பார்த்து சொன்னீங்கன்னா நாளைக்கு போய் ஆர்டர் கொடுத்திட்டு வந்திடலாம்” என்றான் அருணாவிடம்.

பாட்டியும் அந்த கடைகளை பற்றி குருவிடம் விசாரித்து, அதில் ஒன்றை தெரிவு செய்தார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் கடை திறக்க நல்ல நாள் குறித்தார்கள்.

அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு, அருணாவும் குருவும் சீக்கிரமே  படுத்துவிட்டனர்.

இருவரும் அருகருகே படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

“வேலைக்கு ஒரு ஆள் சேர்க்கணும் அருணா”

“ஹ்ம்ம்.. இன்னும் கடை ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள உங்களுக்கு எவ்வளவு வேலை? ரொம்ப கஷ்டமா இருக்கா?”

“இஷ்டப்பட்டு செய்ற வேலை கஷ்டமா இருக்காது செல்லம்மா”

“அதுவும் சரிதான். இப்ப எனக்கும் மனசு லேசா இருக்கு”

“நான் அடிக்கடி வெளிய போயிடுறேன். வீட்ல டிவி கூட இல்லை. உனக்கு போர் அடிக்குதா?”

“அப்படி ஒன்னும் போர் அடிக்கல குரு. நீங்க போனதும், வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு, நம்ம கடைக்கான டீ டெஸ்டிங் கொஞ்ச நேரம் பார்ப்பேன். அப்புறம் இங்க பக்கத்துல ஒரு குழந்தை இருக்கு. அவங்க அம்மா என் கிட்ட ஒரு மணி நேரம் கொடுத்திட்டு போய் குளிச்சிட்டு அவங்க வேலையே முடிச்சிட்டு வருவாங்க. அந்த பாப்பா கூட கொஞ்ச நேரம். அப்புறம் காய் வாங்க போவேன். கொஞ்ச நேரம் பாட்டி வீட்டுக்கு போவேன். அங்க ருக்மணி அம்மா கிட்ட இந்த ஊர் சமையல் எல்லாம் கேட்டுப்பேன். ஒரு மாதிரி நல்லா இருக்கு குரு. எனக்கு சொல்ல தெரியல, மனசுக்கு நல்லா இருக்கு, ஐ அம் ஹாப்பி” என்றாள் சின்ன சிரிப்புடன்.

“என் செல்லம்மா ஹாப்பின்னா நானும் ஹாப்பி தான்” என்று மெதுவாக அவள் நெற்றியில் முட்டினான்.

“அப்புறம்  எனக்கு ஒரு யோசனை குரு”

“சொல்லு செல்லம்மா”

“நேத்து பாட்டி வீட்டுக்கு போயிருந்த போது  பாட்டியோட சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. அவங்க பையனுக்கு திடீர்ன்னு கல்யாணமாயிடுச்சாம். பாட்டிய கூப்பிட முடியலன்னு சொல்லி பொண்ணு மாப்பிள்ளையை ஆசிர்வாதம் வாங்க கூட்டிட்டு வந்திருந்தாங்க..”

“ம்ம்..”

“அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்துச்சு. அவங்க மாலா கிராமமாம். அந்த பக்கத்து கிராமங்களை பஹாடின்னு சொல்லுவாங்கலாம்.”

“ம்ம் ..”

“அவங்க ஒரு பலகாரம் கொடுத்தாங்க. ரவுட் அப்படின்னு பெயராம்.”

“ம்ம்..”

“நீங்க ஒரு லூஸாம்” 

“ம்ம்..” 

“ஹே…என்ன சொன்ன.. என்ன சொன்ன?”

“பின்ன எல்லாத்துக்கும் ம்ம்.. ம்ம்.. சொல்லிட்டே இருக்கீங்க. போங்க நான் ஒன்னும் சொல்லல“

“செல்லம்மா..செல்லம்மா… நான் கேட்டுட்டு தானே இருக்கேன். நீ கதை சொல்ற அழகை பார்த்துட்டே கேக்கறேன். நீ பேசும்பொழுது உன் முகத்தில எத்தனை எத்தனை அபிநயங்கள் தெரியுமா? அதை ரசிச்சிகிட்டே ம்ம் சொல்றேன், அதுக்கு எதுக்கு டென்ஷன்?”

“நமக்கு என்ன இப்ப தான் புதுசா கல்யாணம் ஆயிருக்கா? என் மூஞ்சிய இப்ப தான் பார்க்கிறீர்களா?”

“எனக்கு இப்பதான் நம்ம புதுசா தெரியறோம். இதுக்கு முன்னாடி இப்படி நம்ம பொறுமையா பேசினதா நியாபகம் இல்லை. நீயும் இப்படி கதை சொன்னதில்லை. நானும் உன் அபிநயங்களை ரசிச்சதில்லை. இனி இப்படித்தான்”

“சொக்கரே… வர வர ரொமான்டிக் ஹீரோவா மாறிட்டு வரீங்க போங்க” என்று அழகாக வெட்கப்பட்டாள் அருணா..

“ஆஹான்.. செல்லம்மா என்ன இப்படி வெட்கப்படற,  நீ வெட்கப்படறது கூட இப்ப தான் புதுசா பார்க்கிறேன்” என்று மேலும் அவளை சீண்டினான்.

“உங்களை..” நறுக்கென்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் அருணா.

சிறு சிறு செல்ல சீண்டல்கள் தித்திப்பாய் நடந்தேறியது.

“அப்புறம் சொல்லு, ரவுட் நல்லா இருந்துச்சா?

“நல்லாவா..? சூப்பரா  இருந்துச்சு. அது இங்கே கல்யாணத்தப்ப பொண்ணோட சீர் வரிசையோடு ஒரு டின் இந்த கவுட்டும் அனுப்புவாங்கலாம்”

“நம்ம ஊர்ல முறுக்கு அதிரசம் மாதிரியா..?” 

“ஆமாம், வீட்லயே செய்றது. கோதுமை மாவு, வெல்லம், நெய் சேர்த்து பக்குவமா செய்திருக்காங்க. வாயில போட்டதும் கரைஞ்சிடுது”

“சரிம்மா.. நீயும் செய்ய போறியா?”

“நான் என்ன நினைச்சேன்னா, இந்த ஊர் பெண்கள் இதை சுலபமா செய்றாங்க. நாம ஏன், இந்த ரவுட் மாதிரி பலகாரம் வீட்ல இருக்க பெண்கள் செய்து தர சொல்லி வாங்கி நம்ம கடையில வைக்க கூடாது?”

“நல்ல யோசனை செல்லம்மா”

“அது மாதிரி இங்க இந்த ஊர் பலகாரம் நிறைய இருக்கு. நான் பாட்டி கிட்ட கலந்து பேசி இது சரிவருமான்னு பேசி பார்க்கிறேன்”

“சரி செல்லம்மா” என்று கூறும்பொழுதே கொட்டாவி விட்டான்.

“தூங்குங்க, நாளைக்கு நிறைய வேலை வச்சிருக்கீங்க. மிச்சத்தை நாளைக்கு பேசுவோம்”

“பேசுறதை மிச்சம் வைக்கிறது எல்லாம் சரி…. ஆனால் உன் சொக்கரை கொஞ்சம் சொக்க வைக்கிறது” என்று கூறிக்கொண்டே தன்  செல்லம்மாவை ஆசையாக தழுவிக்கொண்டான்.

யார் யாரிடம் அதிகம் சொக்கி போனார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!