Skip to content
Post Views: 5,515
அத்தியாயம் 2
பாதி தூக்கம் பாதி கலக்கம் என்று சென்றது, அன்றைய இரவு கணவன் மனைவி இருவருக்கும். “கவலை படாதே கந்தா, இதுவும் கடந்து போகும்” என்று ஒரு குரல் மயில் இறகு போல வருடி சென்றது கந்தகுருவை.
Advertisement
“தாத்தா” என்று வேகமாக எழுந்து சுற்றியும் தேடி பார்த்தான் கந்தகுரு.
இவன் அசைவில் அருணாவும் விழித்து பார்த்தாள்.
Advertisement
“உங்க சொக்கன் தாத்தா நியாபகமா?” என்றாள் அருணா.
Advertisement
“இதுவும் கடந்து போகும்னு தாத்தா சொன்ன மாதிரி கேட்டுச்சு, அருணா”
அவன் முகத்தில் ஒரு சிறு ஆசுவாசம் தெரிந்தது.
Advertisement
“உங்க தாத்தா நமக்கு துணையா இருப்பாருன்னு சொல்லுவீங்க. நம்ம தங்கத்தை காப்பாத்தி கொடுத்திருக்கலாம் இல்ல” என்றாள் ஏக்கமாக.
“ஏன் அருணா மனச போட்டு வருத்திக்காத. நம்மள மீறி நடக்கிற விசயத்துக்கு நாம பொறுப்பாக முடியாது. ஆனா எங்க சொக்கன் தாத்தா எப்பவும் என்ன சொல்லுவாங்க தெரியுமா? நல்லதே நடக்கும்னு நம்புனா நல்லதே நடக்கும்னு. ஆனா நாம ஒரு வித பயத்துல இப்படி நடக்குமோ? அப்படி நடக்குமோன்னு? ஒரு எதிர்மறை சிந்தனைகளோடவே இருந்துட்டோம். அது தான் நம்ம பண்ண தப்பு” என்றான் மிகவும் வருந்தி.
சொக்கலிங்கம் சொர்ணாம்பிகை கந்தகுருவின் அப்பா வடிவேலுவின் பெற்றோர்கள்.
“கல்யாணம் ஆகி இந்த மூணு வருஷத்துல, நாம நம்மளாக இருந்தோமா குரு?நம்மள இருக்க விட்டாங்களா?” என்றாள் அருணா கணவனிடம்.
மனைவி சொன்னதை யோசித்து பார்த்தான் குரு.
முதலில் இவர்களுக்கு திருமணம் என்று சொன்னதும், இருவருமே மறுத்தனர். நெருங்கிய சொந்தத்தில் திருமணம் நல்லது இல்லை என்று.
பெரியவர்கள் “எங்க காலத்தில இப்படி நடந்து நல்லா இருக்கலயா? எங்களுக்கு அப்புறம் இரண்டு குடும்பத்துக்கும் நீங்க தான் தலைப்பிள்ளைகள். ஒண்ணுக்குள்ள ஒண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டா ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது. பாட்டி ஆசை.” அப்படி இப்படி என்று பலதும் கூறி இருவரையும் சம்மதிக்கச் செய்தார்கள்.
அஞ்சனா மஞ்சுளா இருவரும் இவர்கள் திருமணம் முடியும் வரை நல்ல தோழிகளாகத் தான் இருந்தார்கள். திருமணம் முடிந்ததும் அஞ்சனாவிற்கு “என் அண்ணனை கைக்குள்ள போட்டுக்கிட்டா. என் அப்பா அம்மாவையும் அவகூடவே அவ பிள்ளைகளை வளர்க்க வச்சுக்கிட்டா. என் பிள்ளைகளை ஒரு நேரம் கூட அவங்களை பார்த்துக்க விடலை. எதோ நல்ல மாமியார் மாமனார் கிடைக்கவும் என் வண்டி ஓடுது. இப்ப இந்த மஞ்சுளா அவ இஷ்டத்துக்கு என் பையன் வீட்லயும் நாட்டம்மை செய்ய நினைக்கிறா? ” என்ற எண்ணம் வந்தது.
“என் புருஷனைத்தான் அண்ணா அண்ணான்னு பேசி அவ சொல்ற மாதிரி ஆட வைக்கிறான்னு பார்த்தா, இப்ப என் புள்ளயையும் ஆட்டி வைக்க பார்க்கிறா” என்ற எண்ணம் தோன்றியது மஞ்சுளாவிற்கு.
அதனால் கந்தகுருவையும் அருணாளினியையும் ” இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள்” என்று கைபேசியில் எப்பொழுதும் வழிநடத்த தொடங்கினார்கள் இருவரும். அவர்கள் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பாடாமலிருக்க இணக்கமாக இருந்தவர்கள், அவர்கள் பவர் என்ன என்பதை சிறியவர்கள் மூலம் மறைமுகமாக காட்டத் துவங்கினார்கள்.
விளைவு, அம்மாக்களின் பொம்மலாட்டத்தில் திணறி போனார்கள் இருவரும்.
அம்மாக்கள் இருவரும் அரசு உத்தியோகம் பார்ப்பவர்கள்.
கந்தகுரு அருணா இருவரும் சாப்ட்வேரில் வேலை செய்பவர்கள். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நேரம், அம்மாக்கள் கைபேசியில் இவர்களது நேரத்தை எடுத்து கொண்டனர். அத்தை மகன், மாமா மகள் என்று இருவருக்கும் புரிதல் இருந்ததுதான். ஆனால் கணவன் மனைவியாக புரிதல் வர இரு அம்மாக்களும் விடவில்லை.
இவர்கள் வீட்டில் வேலைக்காரி சேர்ப்பது முதல், என்ன சமையல் என்பது வரை அணைத்து விசயங்களிலும் மூக்கை நுழைத்தார்கள் இரு அம்மாக்களும்.
இவர்கள் இருவருக்கும் காபியா? டீயா? என்பது கூட சிக்கலான விசயமாகியது. மஞ்சுளா காபி என்றால் அஞ்சனா டீ என்பார்.
திருமணமாகி முதல் வருடம் முடியவும், இன்னும் குழந்தை இல்லை என்று நச்சரிக்கத் தொடங்கினார்கள். எல்லாம் கைப்பேசி வாயிலாக மட்டுமே. வேலைக்கு லீவு போடுவது பெரிய தெய்வகுற்றம் போல கருதினார்கள்.
இவர்கள் இருவரையும் வற்புறுத்தி லோன் போட்டு ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்க வைத்தனர். அதை வாங்குவதற்குள் இருவரையும் தலைகீழே நிற்கவைத்து தண்ணீரும் குடிக்க வைத்தனர்.
மேலும் ஒரு வருடம் செல்லவும், “குழந்தை பிறக்காததிற்கு நெருங்கிய சொந்தத்தில் திருமணமே காரணமோ?” என்று இவர்களை குழப்பி விட்டனர்.
இதில் இவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருப்பவர் சொர்ணாம்பிகை பாட்டி மட்டுமே. அவரும் சொக்கன் தாத்தாவின் மறைவிற்கு பின் வீட்டிலே முடங்கி விட்டார்.
இரண்டாம் திருமண நாள் முடிந்து இரண்டு மாதத்தில் அருணா கர்ப்பம் ஆனாள். அருணா கர்ப்பம் உறுதி ஆனதும், இரு அம்மாக்களுமே வந்து இறங்கினார்கள் பெங்களூரில்.
மருத்துவரிடம் ஆயிரம் சந்தேகங்கள் கேட்டனர் இருவரும். “குழந்தை மனவளர்ச்சி பாதிக்கப்படுமா? மூளை வளர்ச்சி நல்லா இருக்குமா? சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டாங்க” என்று.
மருத்துவர் அடுத்த முறை கணவன் மனைவி மட்டுமே வந்தால் போதும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று கறாராக சொல்லி அனுப்பினார்.
குழந்தை உண்டான மகிழ்ச்சியை ஒருநொடி கூட அனுபவிக்க விட வில்லை இருவரையும்.
“அம்மா, பாட்டியை இங்க கூட்டிட்டு வந்து வச்சிக்கிறோமே” என்று கேட்ட கந்தகுருவிடம் , “ உங்களை மட்டும் பார்க்க முடியுமா? பாட்டி இங்க வந்தா, அங்க வீட்டை யாரு பார்த்துகிறது. குழந்தை பிறந்தப்புறம் யோசிக்கலாம். மாசமா இருக்கிறதுக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாம்.”என்று மறுத்துவிட்டார் அஞ்சனா.
அஞ்சனா ஆனந்தனின் பெற்றோர்கள் பார்வதியும், செந்திலும் ஆனந்தன் வீட்டில் இருந்தார்கள். எப்பொழுதும் பாரு பாட்டிக்கும் அருணாவிற்கும் முட்டிக்கொள்ளும். அதனால் அவரை அழைக்கவில்லை. அழைத்தாலும் வருவாரா என்று சொல்ல முடியாது.
ஆயிரம் அறிவுரைகளை கூறிவிட்டு மறு நாளே ஊருக்கும் புறப்பட்டு சென்றுவிட்டனர் அம்மாக்கள்.
“வேகமா நடக்காதே” என்பார் அம்மா.
“மெதுவா நடந்தா பிள்ளை அசமந்தமா இருக்கும்” என்பார் அத்தை.
“ஜூஸ் குடிச்சா நல்லது” என்பார் அம்மா.
“பழமா சாப்பிட்டா தான் தெம்பு.” என்பார் அத்தை.
இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திணறினாள் அருணாளினி.
கணவன் மனைவி இருவருக்கும் அன்யோன்யம் வருவதற்கு பதில், இருவருக்கும் வாழ்க்கை மீதே ஒருவித சலிப்பு தன்மை வந்தது.
ஏழாம் மாதம், ‘லீவு போட்டுட்டு ஊருக்கு வந்துடறேன்’ என்றாள் அருணா.
“இப்பவே எதுக்கு லீவ். ஒன்பது மாதம் வரை வேலைக்கு போ. நான் எல்லாம் லீவு போட்டு இரண்டாம் நாள் நீ பொறந்துட்ட”என்றார் அம்மா.
“வீடு வாங்கணும், கார் வாங்கணும்னு லோன் வாங்கி வச்சிருக்கீங்க. இப்பவே லீவு போட்டா அப்புறம் குழந்தை பிறந்ததும் நிறைய லீவு தேவைப்படும். லாஸ் ஆப் பே தான் ஆகும். அப்புறம் எப்படி லோன் கட்டமுடியும்?” என்றார் மாமியார்.
குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதாக மருத்துவர் கூறினார். உற்சாகமாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
ஒன்பதாம் மாதம் ஆரம்பமானது. லீவ் பற்றி கேக்கவே பிடிக்கவில்லை அருணாவிற்கு.
“வளைகாப்பு நிச்சயம் செய்ய வேண்டும்” என்று சொர்ணாம்பிகை பாட்டி கூறினார்.
“இப்ப லீவு போட முடியாது” என்று அஞ்சனா, மஞ்சுளா இருவரும் ஒன்று போல கூறினார்கள். “அவங்க அங்கே ஏற்பாடு செய்யட்டும். நாம இங்க இருந்தே ஆன்லைன்ல பார்த்து செஞ்சுடலாம். குழந்தை பிறக்கவும் லீவு தேவைப்படும். நாங்க மாத்தி மாத்தி அப்ப லீவ் போட்டுகிறோம்” என்று விட்டார்கள்.
வெள்ளிகிழமை அன்று நாள் குறித்தனர். அப்பாக்கள், நாங்கள் ஒருவராவது போயிட்டு வருகிறோம் என்றார்கள். “ஆம்பளைங்க போய் என்ன பண்ணுவீங்க?” என்று அதையும் தடுத்துவிட்டார்கள். பாட்டி, “நான் போயிட்டு வரவா?” என்றார்.
“நீங்க போயிட்டு வந்தா கால் வலி வந்துடும். இப்ப டிசம்பர் மாசம், பெங்களூரு குளுரு ஒத்துக்காது” என்று மாமியார் மீது அகக்கரையாக கூறினார் மஞ்சு.
திருமண சேலை உடுத்துமாறு அஞ்சனா கூறினால், அது கனமா இருக்கும் உனக்கு கஷ்டம் என்றார் மஞ்சு..அக்கம் பக்கம் அழைப்போம் என்று மஞ்சு கூறினால், வேலை அதிகம் வேண்டாம் என்றார் அஞ்சு.
முறைப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கைபேசியின் மூலம் எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
காலை பத்திரை மணிக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று கூறினார்கள். காரணம் அவர்கள் அரை நாள் தான் லீவு போட்டிருந்தார்கள்.
‘நீ மட்டுமாவது வந்திருக்கலாம்’ என்று அருணா அன்று தாயிடம் கூறவும் “அம்மா வரலைன்னு வருத்த படக்கூடாது அருணா. அதான் நான் போன்ல எல்லாம் சொல்றேன் இல்ல. பாப்பா பொறந்ததும் பத்து நாள் லீவ் சொல்லியிருக்கேன்.” என்றார் தாய், அதுவே பெரிது என்னும் விதமாக.
“குரு கடையில அஞ்சு வகையான சாதம் ஆர்டர் பண்ணிடு” என்றார் அஞ்சனா.
ஆனால் அவன் பாட்டியிடம் கேட்டு, புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், சக்கரை பொங்கல் என்று அவனே செய்து விட்டான். வெளியே சாப்பிடுவது அருணாவிற்கு சேர்வது இல்லை.
‘அம்மாவும் மகளும் கொடுத்து வச்சிருக்காங்க..அங்க என் அண்ணா தாங்குறான். இங்க என் புள்ள தாங்குறான்’ என்ற ஆதங்கமே அஞ்சனாவிடம்.
ஐந்து வகையான பழ தட்டுகள்.தேங்காய், வெற்றிலை, என்று ஒரு தட்டு. அனைத்திற்கும் இரு அம்மாக்களும் ஆயிரம் கட்டளைகள்.
காலை ஒன்பது மணிக்கு அருணா தலைக்கு குளித்து முடியை உணர்த்தி, தளர பின்னலிட்டு, மாம்பழ நிறதில் அரக்கு பார்டர் சில்க் காட்டன் புடவையை அழகாக உடுத்தி கொண்டாள்.
குருவும், மெரூன் நிற சட்டையும் வேட்டியும் அணிந்து கிளம்பி தயாராகினான்.
“ரொம்ப அழகா இருக்க அருணா? வா நாம ஒரு செல்பீ எடுத்துப்போம்” என்று மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு இருவரும் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
நிறை மாத வயிற்றுடன் மிக அழகாக வந்திருந்தது அந்த புகைப்படம்.
“இந்த போட்டோவை பிரேம் போட்டுக்கலாம்” என்றாள் அருணா. உடனே அதை பிரிண்ட் போட்டு பிரேம் போட ஆன்லைனில் அனுப்பி வைத்தான்.
இப்படி அருணாவின் சின்ன சின்ன ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றினான். தன்னால் ஆன அணைத்து உதவிகளும் செய்தான் குரு. தாய் போல தாங்கினான் என்றே கூற வேண்டும்.
“நீ கொஞ்ச நேரம் உட்காரு அருணா, எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன்.” என்றான்.
“நான் நின்னுட்டு எடுத்து தர்றேன், நீங்க குனிஞ்சு கீழே வைங்க” என்று கூறினாள்.
பழ தட்டுகள், வளையல்கள், சந்தனம், குங்குமம், விளக்கு என்று அனைத்தும் அழகாக அடுக்கினார்கள் இருவரும் சேர்ந்து.
பத்து மணிக்கு அனைவரும் ஜூம் மீட்டில் இணைந்தனர். தஞ்சாவூரில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் பெங்களூருவிற்கு வர முடியாத தங்கள் பெற்றோர்ககளிடம் எந்த குறையும் இல்லை. மகிழ்ச்சியுடன் இருவரும் அனைவரையும் வரவேற்றனர் ஆன்லைனில்.
“விளக்கு ஏத்து அருணாம்மா”என்றார் சொர்ணாம்பிகை பாட்டி.
“இருங்க, இருங்க. எங்க பிள்ளையார்? மஞ்சள் பிடிச்சு வைக்க சொன்னேன் இல்ல” என்றார் பாரு பாட்டி.
“மறந்துட்டோம் பாட்டி. இருங்க நான் எடுத்துட்டு வரேன்.”என்று விரைந்தான் கந்தகுரு.
“அதுக்கு இரண்டு அருகம் புல்லு வைக்கணும். எத்தனை சொல்றது, ஒன்னும் ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறீங்க” என்று அங்கலாய்த்தார் அஞ்சனா.
“இங்க அபார்ட்மெண்ட் வாசல்லே இருக்கு நான் போய் எடுத்து வரேன்” என்று எழுந்தாள் அருணா.
“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி இரண்டு பேருக்கும் சொல்றோம்” என்று நொடித்து கொண்டார் மஞ்சு.
அருணாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.
“நீ இரு அருணா நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மஞ்சளையும் தண்ணீரையும் ஒரு சிறு தட்டையும் மனைவி கையில் கொடுத்துவிட்டு கீழே விரைந்தான் கந்தகுரு. அருணா, ‘பிள்ளயாரப்பா’ என்று வேண்டிக்கொண்டு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்தாள்.
“அதை விளக்கு பக்கத்துல வை அருணா” என்றார் மஞ்சுளா.
வைத்து விட்டு திரும்புகையில் நீர் கொஞ்சம் கீழே சிந்தி விட்டது. அவள் அதை கவனிக்கவில்லை.
அருகம்புல் எடுத்து கொண்டு மூச்சு வாங்க வந்தான் குரு.
“சாமியை கும்பிட்டு கிழக்கு பார்த்து உட்காரு அருணா” என்றனர்.
யார் கூறுகிறார்கள் என்று அருணா கவனிக்கவும் இல்லை, திரையை பார்க்கவும் இல்லை.
அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
பின், “குரு, அந்த சந்தனத்தை அருணாக்கு பூசி குங்குமம் வைத்து விடு. கொஞ்சம் பூ எடுத்து அவள் தலையில் வை.” என்று ஒவ்வொன்றாக நிதானமாக கூறினார் சொர்ணாம்பிகை பாட்டி.
“அடுத்து முதலில் சிவப்பு வளையலை போடுப்பா” என்றார்.
வளையல் வாங்க கூறினார்கள் தவிற கலர் கூறவில்லை. அதில் மஞ்சள், பச்சை, லாவெண்டர், இருந்தது. சிவப்பு கலர் இல்லை.
திரும்பவும் இரண்டு அம்மாக்களும், “என்ன கலர்ன்னு கேட்கனுமா இல்லையா? இன்னும் குழந்தைகளா? நாங்களே எவ்வளவு சொல்றது?” என்று மாறி மாறி பேசினார்கள்.
“ஒரு நிமிஷம் பாட்டி, ரூம்ல சிகப்பு கலர் வளையல் இருக்கு. நான் எடுத்துட்டு வரேன்” என்று எழுந்தாள் அருணா.
“குரு, அடுத்து பச்சை, அப்புறம் மஞ்சள், நீ எடுத்து வச்சுக்கோ. அப்புறம் என்ன கலர் வேணாலும் போடலாம்” என்றார் பாட்டி.
“சீக்கிரம் எடுத்துட்டு வா அருணா. நாங்க வேலைக்கு கிளம்பனும்” என்று அவசர படுத்தினார்கள் அம்மாக்கள்.
வேகமாக எழுந்து செல்லுகையில் கீழே சிந்தி இருந்த தண்ணீரை கவனிக்காமல் கால் வைத்து அதில் வழுக்கி விழுந்து விட்டாள். பக்கத்தில் இருந்த குத்து விளக்கு கீழே சாய்ந்து அதன் மேலே குறுக்காக அருணா விழுந்திருந்தாள் ‘அம்மா’ என்ற அலறலுடன்.
“அருணா..”என்று குரு விரைந்து வந்து அவளை பிடித்தான். வயிற்றில் நல்ல அடி.
“என்னாச்சு? என்னாச்சு? அய்யோ..” என்று கூவினார்கள் ஆன்லைனில் இருந்தவர்கள்.
கீழே விழுந்ததில் வயிற்றில் நல்ல அடி. வலியில் துடித்தாள் அருணா. “கடவுளே!” என்று புலம்பினார்கள் அனைவரும்.
“சீக்கிரமா ஹாஸ்பிடல் போங்க” என்றார் ஆனந்தன். வடிவேலுவும், “எல்லாரும் அமைதியா இருங்க” என்று அங்கே கூச்சலிட்டவர்களை அடக்கி, “சீக்கிரம் கிளம்புங்கப்பா.” என்று மகனை கிளப்பிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
அனைவருக்கும் ஒருவித பதற்றம்.
error: Content is protected !!