Skip to content
Post Views: 3,877
அத்தியாயம் 23
“ஏங்க சீக்கிரம் வாங்க.. நான் கோவிலுக்கு போயிட்டு வந்து சீக்கிரம் கிளம்பனும், இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. பத்து மணிக்கு ஆபிஸ்ல இருக்கனும்” என்றார் மஞ்சுளா.
Advertisement
“ஏன்டா ஆனந்தா பொம்பளைங்க நாங்க இரண்டு பேரும் கிளம்பியாச்சு, நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?” என்றார் பாரு பாட்டி.
“இதோ வந்துட்டேன், வாங்க புறப்படலாம்” என்று வேகமாக கிளம்பி வந்தார் ஆனந்தன்.
Advertisement
Advertisement
மூவரும் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு செல்கிறார்கள். அருணா கருவுற்றிப்பதால், காலையில் சிறப்பு பூஜைக்கு கொடுத்திருந்தனர். ரித்விகாவும் தாத்தாவும் முன்னமே ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டார்கள். பத்து நிமிடங்கள் நடக்க வேண்டிய தூரம் தான். மஞ்சுளாவும் பாரு பாட்டியும் ஆனந்தனுடன் காரில் வந்திறங்கினார்கள்.
பிள்ளையார் மனம் குளிர குளிர பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் வரிசையாக தயிர், விபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் என்று அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அருணாளினி கந்தகுரு பெயருக்கு அர்ச்சனை முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பினார்கள்.
Advertisement
“நான் கிளம்புறேன் அத்தை நேரமாகிடுச்சு” என்று பரபரத்தார் மஞ்சுளா.
“ஒரு வாய் வேகமா, சாப்பிட்டு போ மஞ்சு”
“இல்ல அத்தை, இன்னிக்கு நான் காலையில விரதம் இருக்கிறதா வேண்டிக்கிட்டு இருக்கேன். நம்ம அருணா மாசமா இருந்தா காலையில விரதம் இருந்து தான் கோவிலுக்கு வரதா வேண்டிக்கிட்டு இருந்தேன்”
“உன் உடம்புக்கு இது எல்லாம் ஒத்துக்குமா மஞ்சு? வெறும் வயித்தோடு ஆபிஸ் வேற எப்படி போவ?” என்றார் ஆனந்தன்.
“இல்லங்க, இரண்டு வருஷமா நான் தினமும் கடவுள்கிட்ட கேட்டுட்டு தான் இருக்கேன். இப்ப தான் கடவுள் கண்ணை திறந்திருக்காரு. எதுவும் சொல்லாதீங்க… நான் மதியம் இன்னிக்கு வீட்டுக்கு வந்திடலாம்னு இருக்கேன், வந்து சாப்பிட்டுக்கிறேன்”
“பாருடா ஆனந்தா, உன் பொண்ணுகிட்ட சொல்லு, அவளுக்காக தான் எல்லாம் செய்யறா மஞ்சு. அவ மனச நோகடிக்க வேண்டாம்னு சொல்லு. பெத்தவ மனசை வருத்த கூடாதுடா, நான் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை.. இப்படி பாசமே இல்லாம இருக்காளே.. கண்ணுக்குள்ளே நிக்குறா, சொல்லுடா.. பெத்தவளும் வளர்த்தவளும் அவளை நினைச்சு ஏங்கிப்போய் நிக்குறோம்னு சொல்லி புரியவை” என்று மூக்கை உறிஞ்சினார் பாரு பாட்டி.
“விடுங்க அத்தை, நீங்க மட்டும் தான் எப்பவுமே என் பக்கம் உள்ள நியாயத்தை புரிஞ்சு பேசுறீங்க. நீங்க மட்டும் இல்லைன்னா நான் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வேலைக்கும் போய் இருக்கவே முடியாது. அந்த கடவுள் தான் எனக்கு உங்களை அத்தையா அனுப்பி வச்சிருக்காரு, நான் கிளம்புறேன் அத்தை”
“பாத்து போயிட்டு வாம்மா.. நான் மதியம் சீக்கிரமா சாப்பாடு தயார் செஞ்சிடறேன், உன்னால வர முடியலைன்னா சொல்லு மாமா கிட்ட கொடுத்து விடறேன். விரதம் இருந்துட்டு வெளியே சாப்பிட்டா ஒத்துக்காது”
மஞ்சுளா கிளம்பி சென்றதும், “என்னடா பிடிச்சு வச்ச கொழுக்கட்டையாட்டும் நிக்குற, என்ன பேசுனாலும் உங்க அப்பா மாதிரி பதிலே சொல்றதில்லை”, என்று தோள்பட்டையில் முகவாயை இடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“ஏன் தாத்தா.. நீங்க பதில் சொல்றது இல்லைனு சொல்றாங்க, உங்களை மாதிரி அப்பாவும் இருக்காங்கன்னு வேற சொல்றாங்களே, ஒரு நாளாவது உங்க இரண்டுபேருக்கும் பதில் சொல்ல கேப் விட்ருக்காங்க???” என்றாள் ரித்விகா.
“அதை சொல்லுடா.. அவ போறா போ… நீ காலேஜ் போக ஏதோ பேக் எல்லாம் வாங்கணும்னு சொன்னியே? இன்னிக்கு போயிட்டு வந்துடுவோமா?”
“சரி தாத்தா”
ரித்விகா அம்மாவுடனும் பாட்டியுடனும் போராடி, சென்னையில் பி.காம் சேர்ந்திருக்கிறாள். அடுத்த வாரம் முதல் கல்லூரி தொடங்குகிறது.
—-
அருணா வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள்
“என்ன செல்லம்மா, என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டு கொண்டே அன்று கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் கந்தகுரு.
“வாங்க சொக்கரே.. சும்மா புக் படிச்சிட்டு இருந்தேன்”
வெய்யில் காலம் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. அதனால் கதவை திறந்தே வைத்திருந்தாள். அங்கே பயம் எல்லாம் இல்லை. அனைவரும் தூங்க செல்லும் பொழுது தான் கதவை அடைப்பார்கள்.
குரு வேகமாக சென்று கை கால் கழுவி உடை மாற்றி வந்தான்”
“செல்லம்மா.. என்ன சமையல் இன்னிக்கு, நான் செய்யட்டுமா?”
“ரொட்டி தான் செய்யலாம்ன்னு இருக்கேன். மாவு பிசைஞ்சு வச்சிட்டேன், சாப்பிடும்போது போட்டுக்கலாம். வெல்லம் வச்சு சாப்பிட்டுக்கலாமா? “
“உனக்கு ஏதாச்சும் சாப்பிடணும் போல இருந்தா சொல்லு செல்லம்மா.. நான் செஞ்சு தரேன். நீ ஒரு வாரமாகவே சரியா சாப்பிடவே இல்லை. “
“ஆமா, எதுவும் சாப்பிடணும் போல இல்லை. இந்த தடவை வாந்தி எதுவும் இல்லை, ஆனா பசியும் அவ்வளவா இல்லை, சாப்பிடவே பிடிக்கலை”
“டாக்டர் கிட்ட கேட்கணுமா? பசி இல்லனா என்ன செய்றது?”
“நான் பாட்டி கிட்ட கேட்டுட்டேன், சில சமயம் மாசமா இருக்கும் போது அப்படி இருக்குமாம். ஏதாவது விளையாடுவோமா?“
“விளையாடலாமே…”
இருவரும் கேரம் போர்ட் விளையாடலாம் என்று முடிவு செய்து அமர்ந்தனர்.
ஹல்த்வானி வந்ததில் இருந்து கணினி கைபேசி இதை எல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இப்படி விளையாடுவது இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு.
இருவரும் ஆட்டத்தில் முழ்கி இருந்த சமயம், கடைசி ரெட் அண்ட் பால்லொவ் யார் அடிப்பது என்ற நிலை.
அருணா ரெட்யை பாக்கெட் செய்துவிட்டு பால்லொவ் அடிக்க குறி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“செல்லம்மா, கொஞ்சம் ரைட்ல வச்சு அடி, பாக்கெட் ஆயிடும்”, அருணா முறைக்கவும் அமைதியாகிவிட்டான்.
அருணா அடிக்கவும் சரியாக காயின் பாக்கெட்டில் விழுந்தது.
“சூப்பர் அண்ணி..” என்று கை தட்டும் சத்தம்.
இருவரும் வாசலை பார்த்தால், சொர்ணம் பாட்டியும் அபிநந்தனும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“ஆச்சி … ஆச்சி..” என்று கந்தகுருவிற்கு பேச்சே வரவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறான் அவன் ஆச்சியை. கண்ணீர் கண்களை மறைத்தது. அவன் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டான்.
“வாங்க வாங்க பாட்டி.. வா நந்தா.. வாங்க..” என்று வரவேற்றாள் அருணா.
இவர்களின் வரவை துளியும் எதிர்பார்க்கவே இல்லை அருணாவும் குருவும்.
“பாட்டி தான் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு சொன்னாங்க, அதான் சொல்லாம வந்தோம்” என்றான் நந்தன்.
“ஆச்சி..” என்று குரு பாட்டியை கட்டி பிடித்துக்கொண்டான். பாட்டி பேரன் இருவரது கண்களும் கலங்கி தான் போனது.
அருணா அமைதியாக அவர்கள் அருகில் சென்று நின்றுகொண்டாள்.
“எப்படி இருக்க அம்மாடி?” என்றார் அருணாவை பார்த்து வாஞ்சையாக.
“நல்லா இருக்கேன் பாட்டி, முதல்ல உட்காருங்க” என்று விரைந்து சென்று இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவர்கள் பயணத்தை பற்றி கேட்டறிந்தனர்.
“குளிச்சிட்டு வந்துடறீங்களா? கொஞ்சம் பிரெஷா இருக்கும்” என்று இருவருக்கும் குளிக்க எல்லாம் எடுத்து கொடுத்தனர்.
அதற்குள் அருணா, இரவிற்கு ரொட்டியுடன் ஒரு குருமாவையும் சீக்கிரமாக தயாரித்துவிட்டாள். வெய்யிலுக்கு இதமாக இருக்கும் என்று கொஞ்சம் தயிர் சாதமும் செய்து வைத்தாள். அவர்கள் குளித்து வரவும் உணவை பரிமாறினாள்.
“விமானத்துல வந்தது எப்படி இருந்துச்சு ஆச்சி?” என்றான் குரு.
“பயமா தான் இருந்துச்சு குரு.. இவன் கிட்ட சொன்னா, ‘இதோ ஆச்சி.. இந்த மேகத்துக்குள்ள தான் தாத்தா இருப்பாரு.. தாத்தா எந்த மேகத்துல இருக்காருன்னு பாரு.. அதுக்குள்ள டெல்லி வந்துடுமுன்னு’ சொல்றான் “
“அப்புறம்.. தாத்தாவை கண்டுபிடிச்சீங்களா?” என்றாள் அருணா குறும்பாக.
“போக்கிரி பொண்ணே, பேச்சை பாரு.. நான் சொன்னேன், ‘உங்க தாத்தா என் மனசுக்குள்ள தான்டா இருக்காரு, உன் வருங்காலத்தை வேணா நீ மேகத்துல தேடுன்னு’ ”
“ஹா ஹா ஹா.. “
“உன்னையும் குருவையும் பார்க்கணும் போல இருந்துச்சு, அதான் கண்ணை மூடிக்கிட்டு கடவுளை வேண்டிகிட்டே வந்துட்டேன்”
“அண்ணி சாப்பாடு சூப்பரா இருக்கு அண்ணி. தயிர் சாதம் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன், அதையும் செஞ்சிட்டிங்களே? வைங்க..” என்று தட்டை நீட்டினான் நந்தன்.
“டேய் நந்து, நம்ம கொண்டு வந்த பையில மாங்காய் தொக்கு இருக்கு பாரு அதை எடுப்பா” என்றார் சொர்ணம் பாட்டி.
“நீயும் உக்காரும்மா” என்று அருணாவையும் அழைத்தார் பாட்டி.
பாட்டியின் மாங்காய் ஊறுகாயை பார்த்ததும் “நீங்க செஞ்சதா பாட்டி, பார்த்தாலே ஆசையா இருக்கு…” என்று சப்பு கொட்டினாள்.
உடனே குரு வேகமாக சென்று அருணாவிற்கும் தட்டு வைத்து தயிர் சாதம் வைத்து ஒரு ஸ்பூன் தொக்கையும் வைத்து கொடுத்தான்.
குருவின் வேகத்தை பார்த்து பாட்டியும் நந்தனும் சிரித்து கொண்டனர்.
“எதுவுமே சாப்பிட பிடிக்கலைனு சொன்னா பாட்டி, இப்ப தான் சாப்பிட ஆசையா இருக்குன்னு சொல்றா, அதான்” என்றான் பாட்டியிடம்.
சாப்பிட்டு முடித்ததும் அருணாவும் குருவும் எல்லாம் எடுத்து வைத்தனர்.
“நான் வந்து உதவறேன்” என்று சொன்ன பாட்டியை, “அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கீங்க, பேசாம இருங்க, நாங்க பார்த்துகிறோம்” என்று விட்டனர்.
முன்பு பார்த்த அருணாவிற்கும் இப்பொழுது பார்க்கும் அருணாவிற்கும் ஆறல்ல ஆயிரம் வித்யாசங்கள் இருந்ததாக தோன்றியது பாட்டிக்கு.
அவருக்கும் களைப்பாக இருக்கவும் அமைதியாக அமர்ந்துவிட்டார்.
அனைவரும் அன்று வரவேற்பரையில் பாய் போட்டு படுத்துக்கொண்டனர்.
“நந்து.. வீட்டுக்கு நம்ம வந்து சேர்ந்துட்டோம்னு தகவல் சொல்லிட்டியா?”
“அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்”
“நீங்க வர எப்படி அத்த ஒத்துக்கிட்டாங்க பாட்டி?” என்றாள் அருணா.
“அண்ணி.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்க அம்மா எங்க அப்பாவை விட்டிட்டு கூட இருந்துடுவாங்க, எங்க ஆச்சியை விட்டுட்டு இருக்க மாட்டாங்க. அப்படி ஒரு லவ் இரண்டு பேருக்கும்”
“அது தெரியும் நந்தா, எங்க அம்மாவும் சரி, உங்க அம்மாவும் சரி, மாமியார் கூட வியக்க வைக்கும் உறவு தான்..எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை”
“அம்மாடி, எல்லாருக்கும் எல்லாமே நினைக்கிற மாதிரி அமையாது. உறவுகள் இல்லாமலே எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா இந்த உலகத்துல. உங்களுக்கு ஒரு பெரிய கஷ்டம் வந்தது, அதை இரண்டு பேரும் சேர்ந்து தாண்டி வந்துட்டீங்க. இப்ப நிகழ்காலத்தை நினைச்சு நிம்மதியா இருக்க பழகிக்கணும். இது அப்படி இருந்திருக்கலாம், அவங்க கொஞ்சம் நல்லா நடந்திருக்கலாம் அப்படின்னு தேங்கி நிக்க கூடாது. நீரோடையின் ஓட்டத்தோடு போகிற படகு மாதிரி வாழ்க்கையோட ஓட்டத்தோடு போயிட்டே இருக்கனும். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனா தவறை திருத்திக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா அதை பயன் படுத்திக்கணும். அதே மாதிரி, மன்னிக்கிறதும் மறக்கிறதும் தான் உறவுகளோடு சேர்ந்து சந்தோசமான வாழ்க்கைக்கான ரகசியம்.
என்னடா இந்த பாட்டி, நமக்கே அட்வைஸ் சொல்றாங்கன்னு நினைக்காத. யாரு கேப்பாங்களோ அவங்களுக்கு தான் சொல்ல முடியும். நீயம் குருவும் என்னிக்கும் சந்ததோஷமா இருக்கனும். அதுக்கு நீ பழசை எல்லாம் முழுசா மறக்கனும், புரியுதா”
“சரி பாட்டி” என்றாள் அருணா உடனே.
நந்தன் சொன்னதை போல அங்கே அஞ்சனா தான் பெரிதும் தவித்து போனார். கை உடைந்தது போல இருந்தது. தன்னிடம் இன்னும் பேசவில்லையே என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.
“அம்மா போய் ஒரு நாள் கூட ஆகலை. நம்மகூட தானே அஞ்சு எப்பவுமே இருக்காங்க, அவங்களுக்கும் பேரனை பார்க்கணும்னு ஆசையா இருக்கும்ல. சும்மா புலம்பிட்டே இருக்காதே” என்றார் வடிவேலு.
“ஆமா அம்மா, பாட்டி போனது அண்ணாக்கும் அண்ணிக்கும் துணையா இருக்கும் இல்லம்மா” என்றாள் அபிநயா.
அஞ்சனா மூன்று குழந்தைகளை சுமந்திருந்த பொழுதுகளில் பாரு பாட்டி பார்த்துக்கொண்டாலும், சொர்ணம் பாட்டி இருந்தால் தான் அஞ்சனாவிற்கு தெம்பாக இருக்கும்.
“ஆமா, அத்தை இருந்தா தைரியமாதான் இருக்கும். முதல் தடவை அருணா மாசமா இருந்தப்ப குரு கெஞ்சி கேட்டான் என்கிட்ட ‘பாட்டியை கொஞ்ச நாள் அனுப்புங்கன்னு’ நான் அனுப்பவே இல்லை” என்றார் மெதுவாக.
வடிவேலுவும் அபிநயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“நான் அப்ப அனுப்பி இருக்கனும் இல்லங்க?” என்றார்.
வடிவேலு மௌனமாக இருந்து விட்டார்.
“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?”
“நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது அஞ்சு, ஆனா இனி நடக்கிறதை சரியா செய்யலாம். நான் எப்பவுமே உனக்கு துணையாதான் நின்னிருக்கேன். அருணா தான் மருமகள்ன்னு முடிவு செஞ்சுதே நீதானே”
உனக்கும் எங்க அம்மாவுக்குமான பந்தம் எவ்வளவு அழகானது. பாரு அவங்களை விட்டுட்டு உன்னால் ஒரு நாள் கூட இருக்க முடியலை, நீயே யோசி, உன்னால நிச்சயம் அழகான உறவுகளை உருவாக்க முடியும் “ என்று விட்டு அவர் படுக்க சென்றுவிட்டார்.
error: Content is protected !!