Skip to content
Post Views: 4,251
மார்கழி – 10
எந்த முன்அறிவுப்புமின்றி திடுமென வீட்டு வாயிலில் வந்து நிற்கும் மகளைக் கண்டு அதிர்ந்து களித்து கண்ணீர் சிந்திய வேம்பு வாஞ்சையாய் மகளின் கையை பற்றினார்.
“அம்மா…”
Advertisement
“இயலு… எப்படிடி இருக்க. தினம் உன் நினைப்புதான். எங்க இருக்க என்ன பண்றன்னு எதுவும் தெரியாம தினந்தினம் செத்து புழைச்சேன். நல்ல காலத்துக்கு நீயே வந்துட்ட.” ஆனந்தம் கொண்டு நின்றது சில நொடிகளே. சூழ்நிலையும் ஐயமும் போட்டிபோட்டுக்கொண்டு நினைவுக்கு வர, “ஐயோ இப்படி பட்டப்பகல்ல வந்து நிக்குறியே எவனாவது பாத்து அமைச்சர் ஆளுங்ககிட்ட சொல்லிடப்போறான்.” என்று மகளின் கைப்பிடித்து உள்ளே இழுத்து கதவை அடைத்தவர் படபடப்பு குறையமாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.
“வேந்தன் சார் உன்னை பத்திரமா தங்க வச்சிருக்கேன்னு சொன்னாரே. இன்னும் அந்த கேஸ் நடந்துட்டு இருக்காமே. அதுக்குள்ள வந்துட்ட, அப்போ இனிமே எந்த பிரச்சனையும் இல்லையா? எல்லாம் ஒழிஞ்சுதா? அப்போவே சொன்னோம் சாட்சி சொல்றேன் அதுஇதுனு போய் நிக்காதேன்னு. கேக்காம நியாயம் வாங்கிக்கொடுப்பேன்னு இருந்ததுக்கு உயிரை கையில புடிச்சுகிட்டு இருக்க வேண்டியதாகிட்டு. இதோட எல்லாம் ஒழியட்டும், இனி உன் வாழ்க்கையை பாக்கலாம். உங்கப்பாவுக்கு போன் போட்டு சொல்லணும் முதல்ல.” பட்டாசாய் பொரிந்தவர் அலைபேசி எடுத்து கணவருக்கு அழைத்துக்கொண்டே மகளைப் பார்க்க, வந்ததிலிருந்து மகள் வாய்த்திருக்கவில்லை என்பதை உணர்ந்து நிதானித்து மகளை கூர்ந்து பார்த்தார்.
அத்தனை நேரம் பார்வைக்கு புலப்படாதது அந்நொடி கருத்தில் பதிய, அலைபேசியை தவறவிட்டவர் நெஞ்சில் கைவைத்துவிட்டார்.
Advertisement
“என்னடி மஞ்ச கயிறு தொங்குது.” நெஞ்சம் அடித்துக்கொண்டாலும் உண்மையை விளங்கிக்கொள்ளும் பொருட்டு மகளை நெருங்கி அவள் கழுத்தில் இருந்த கயிறை வெளியே எடுக்க, கயிறோடு கோர்க்கப்பட்டிருந்த மாங்கல்யம் இயலணிக்கு திருமணமாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது.
Advertisement
“ஐயோ என்னடி இது. என்ன பண்ணி வச்சிருக்க.” தாய் கண்டுகொண்டதில் தொண்டை நீர் வற்றிப்போக, அவரை சந்திக்க முடியாது கண்களை இறுக மூடி நின்றாள் இயலணி.
“அடியே என்னடி இது? ஐயோ என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல. வாயை திறந்து தொலைடி.” அதிர்ச்சியில் இயலணியை உலுக்க, மெளனம் சாதித்தாள் இயலணி. அதில் பெற்றவரின் பயம் அதிகரிக்க, அலைபேசி எடுத்து கணவரை உடனே வரச் சொன்னார்.
கலங்கித் தவித்த அன்னையைப் பார்த்து இயலணியின் கண்களும் கலங்க, முன்தினம் இரவு சாப்பிட்டது அதன் தொட்டு நடந்தவைகள் என்று அன்று முன்மாலை வரை உண்ணவில்லை. பசி கொடுத்த சோர்வில் தொய்ந்து அமர்ந்தவள் தலையை பிடித்துக்கொண்டு விழிகளில் திரையிட்ட நீருடன், “பசிக்குது ம்மா.” என்றிட, பெற்ற மனம் உருகிப்போனது.
Advertisement
மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் பின்தள்ளியவர் மளமளவென்று காபி போட்டு கொண்டு வந்தார்.
“இதை முதல்ல குடிச்சிட்டே இரு. நான் சாப்பிட ஏதாவது செஞ்சி எடுத்துட்டு வரேன்.” சிட்டாய் பறந்தவர் விரைவில் செய்யக்கூடிய உணவை செய்து எடுத்துவந்தார்.
அதற்குள் குளித்து உடை மாற்றி இருந்தவள் வழக்கமாக அமரும் நாற்காலியில் கால் மடித்து சாய்ந்து அமர்ந்து ஆழ்ந்து சுவாசித்தாள். வீடு வந்து சேர்ந்துவிட்ட உணர்வு மனதின் சஞ்சலத்தை குறைத்து அமைதிப்படுத்தியது. அன்னையின் கைப்பக்குவம் நாசியை நிறைக்க, கண்களை மூடி அதன் வாசத்தை உள்ளிழுத்தவள் தட்டில் இருந்து ஒரு வாய் எடுத்துவைக்க, நாவின் சுவை அரும்புகள் யாவும் உயிர் பெற்றது.
மூன்று மாதங்களாக கடை உணவு சாப்பிட்டு வாழ்ந்தவளுக்கு வேம்புவின் எளிமையான உணவு தேவாமிர்தமாய் இறங்கியது.
‘மூணு மாசத்துக்கே நாக்கெல்லாம் செத்து போயிருக்கே. எப்படி தான் பல வருஷமா அந்த கடை சாப்பாட்டையே சாப்பிட்டு அவங்க காலேஜ் போறாங்களோ.’ அனுமதியின்றி வந்தது அவன் நினைவுகள்.
‘இவ்ளோ பேச்சு வாங்கி பட்டத்துக்கு அப்புறமும் திருந்தலையா நீ.’ என்று சிந்தை மனதை அடக்கி வைக்க, இரண்டொரு வாய் உண்டு மனதை திசை திருப்பினாள்.
இருப்பினும் சில நினைவுகள் எழாமல் இல்லை. பொங்கல் முன்னிட்டு அறிவழகன் வீட்டிற்கு செல்லும் போதே வீட்டு உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றவளுக்கு அதனை அனுபவித்து உண்ணும் சூழல் அமையவே இல்லை. எந்நேரமும் திக்திக்கென்று இரணகளமும் போர்களமுமாய் சென்ற அந்த நாட்களை எண்ணுகையிலேயே அதன் அலைவரிசை ஒத்து பேசினார் வேம்பு.
“நீ இல்லாம பொங்கல் பொங்கவே மனசில்லை இயலு. பேருக்கு குக்கர்ல சக்கரை பொங்கல் மட்டும் வச்சி சாமி கும்பிட்டு இல்லாதவங்களுக்கு குடுத்துட்டோம்.” வருத்தத்துடன் பகிர்ந்த வேம்பு அவ்வப்போது மகள் முகத்தை பார்த்துக்கொண்டார் ஏதாவது வாய் திறப்பாளா என்று.
பொங்கல் என்றதுமே அதனை சுற்றி நடந்தவைகள் நினைவு வந்து சுருக்கென்றாலும் தொண்டை அடைத்த உணவை முயன்று உள்ளிறக்கி தட்டை காலி செய்த பின்னரே நிமிர்ந்தாள்.
“இன்னும் எடுத்துட்டு வரவா இயலு.” கேள்வி கேட்டவர் பதிலுக்கு காத்திராமல் இன்னும் கொஞ்சம் எடுத்து வந்து வைத்தார்.
அவர் தட்டில் நிரப்புவதைக் கண்டு விழி விரித்தவள் தட்டை நகர்த்திப்பிடித்து, “ஐயோ ம்மா. வயிறு புல், போதும் எனக்கு.”
“என்ன போதும்? சாப்பாட்டையே பாக்காதவ மாதிரி சாப்பிட்டுட்டு இருக்க. மூணு மாசம் என்ன சாப்பிடியோ. ஒழுங்கா சாப்பிடு.” என்று அவர் மனம் திருப்தியடையும் வரை அவளை உண்ண வைத்து நகர்ந்தார்.
வயிறு நிரம்பியதற்கு அடையாளமாக ஏப்பம் விட்டவள் தலையை தாங்கிப்பிடித்து அமர்ந்தாள். பாத்திரத்தை தேய்க்க போட்டு வந்த வேம்பு மகள் எதிரே வந்து நிற்க, அவரை ஏறிட்டு பார்க்கும் தைரியமற்று மூன்று மாதங்களில் நடந்த அனைத்தையும் விளக்க, நெஞ்சில் கைவைத்து விட்டார் வேம்பு.
“‘உன்னை விவரமான பொண்ணுன்னு நினைச்சா என்னடி பண்ணிட்டு வந்திருக்க.” அடிக்க கை பரபரத்தாலும் அதனையும் மீறி மகள் வாழ்க்கை குறித்தான ஐயம் அவரை பதறச் செய்தது.
“தெரியாத ஊருல போய் இப்படி யார் கையாலையோ தாலி வாங்கத்தான் இந்த மூணு மாசமா தூக்கம் கெட்டு உன் பாதுகாப்பை நினைச்சி பதறிட்டு இருந்தோமா நாங்க. இப்படி சுலபமா சொல்றியேடி…” நெஞ்சில் அடித்துக்கொள்ளாத குறையாக அழுதார் வேம்பு.
“அம்மா…” கலங்கிப்போய் பார்த்த இயலணிக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. மகள் அழைக்கவும் அழுகையுடன் பார்த்தவருக்கும் பேச்சு வரவில்லை.
அந்நேரம் வாயில் மணி அடிக்க சிறு பதட்டத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தார் வேம்பு. அவர் கணவர் பரந்தாமன் பரபரப்புடன், “எங்க பாப்பா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.
தந்தையைக் கண்டதும் எழுந்து நின்ற இயலணி அழுகையுடன் கைபிசைந்து நிற்க, பரந்தாமன் கவனமெல்லாம் மகளின் நலனை உறுதி செய்யும் விதமாய் அவளை ஆராய்ந்தது, “உனக்கு ஒண்ணுமில்லைல பாப்பா.”
“அப்பா…” என்றவள் உணர்ச்சியின் பிடியிலும் குற்றம் புரிந்த குறுகுறுப்பிலும் தொண்டை அடைக்கப் பார்த்தாள்.
“ஒண்ணுமில்லைடா… நான் வேந்தன் சாருகிட்ட பேசுறேன். எப்படி வந்த நீ?” மகளைக் கண்ட பூரிப்பில் பேசியவர் சற்றே நிதானித்து யோசனையுடன் பார்த்தார். மகளின் கழுத்தில் இடம்பெற்றிருந்த தாலி பளிச்சென்று கண்ணில் பட்டது. நம்ப மறுத்தவராய் கண்ணாடியைக் கழட்டி கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் உற்றுப்பார்த்தார். மகள் வேதனையில் முகம் கசங்கினாள்.
“வேம்பு என்.. என்னதிது?” நம்பமாட்டாமல் அதிர்வில் மனைவியை நோக்கி திக்கித்திணறி வந்தது கேள்வி.
கணவரின் கேள்வியில் மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்தது வேம்புவுக்கு. குற்றம்சாட்டும் விதமாய் மகளை பார்த்துக்கொண்டே மகள் சொன்னக் கதையை சொன்னார்.
“அந்த இன்ஸ்பெக்ட்டரை நம்பித்தான இவளை அனுப்பி வச்சோம். பொண்ணு காணோம்னு போலீசிலையும் கம்பளைண்ட் கொடுத்தோம். இப்படி இவ வாழ்க்கையையே பாழாக்கி வச்சிருக்காரு. அவர் என்ன பண்ணாலும் கேக்க திராணியில்லைனு நினைச்சிட்டாரா?” என்று பொரிந்தவர் உடனே அலைபேசி எடுத்து அழைத்துவிட்டார் வேந்தனுக்கு.
“உங்களை நம்பித்தானே அவளை அனுப்பி வச்சேன். இப்போ என் பொண்ணு தாலியும் கழுத்துமா வந்து நிக்குறா. அவ வாழ்க்கைக்கு என்ன சார் பதில். அதிகாரத்துல இருக்கீங்க சாதாரண மக்கள் நாங்க என்ன பண்ணிட முடியும்னு உங்க இஷ்டத்துக்கு எம் பொண்ணு வாழ்க்கையில விளையாடுறீங்களா. இதை நான் சும்மா விடமாட்டேன்.” என்று நியாயம் கேட்க,
“இயல் அங்கதான் இருக்காளா. நாங்க இங்க ஊரெல்லாம் தேடிட்டு இருக்கோம்.” என்று ஆசுவாசத்தில் வெகு இயல்பாக பேசி பரந்தாமனை இன்னும் கடுப்பாக்கினான் வேந்தன்.
“ஹலோ சார். என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்னு கேட்டா எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க.”
“இங்க பாருங்க சார், பாதுகாப்பா இருக்கட்டும்னு நம்பிக்கையான என் பிரெண்ட் வீட்ல தான் தங்க வச்சிருந்தேன். அவனுக்கு அவன் அத்தை பொண்ணோட நிச்சயம் பண்றதா இருந்துச்சு. குறுக்க உங்க பொண்ணு தான் விழுந்து குழப்பிட்டா. நியாயமா நாந்தான் உங்களை சத்தம் போடணும். உங்க பொண்ணோட பாதுகாப்புக்காக நீங்க கேட்டுக்கிட்டிங்கன்னு தனிப்பட்டு ஹெல்ப் பண்ணி இப்போ என் நண்பனோட வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கு. அதோட உங்க பொண்ணுக்கு இருக்குற ஆபத்தும் இன்னும் விலகல. அதுக்குள்ள இப்படி வெளில வந்து ஏதாச்சு ஆச்சுன்னா யார் சார் பொறுப்பு? அப்போவும் எங்களைத்தான் சொல்லுவீங்க. மூணு மாசம் பாதுகாத்து வச்சது எல்லாம் வீணுங்குற மாதிரி அவசரப்பட்டு வெளில வந்துட்டா உங்க பொண்ணு.” என்று அவர் பக்கமே திருப்பிவிட்டான் வேந்தன்.
கடுகென பொரிந்தவர் உங்கள் மகள் தான் நண்பன் வாழ்க்கையில் குறுக்கே வந்துவிட்டாள் என்று சாடவும் அமைதியாகிவிட்டார். அவர் கையை பற்றிய இயலணி மறுப்பாக தலையசைக்க அழைப்பை துண்டித்தவர் தொய்ந்து நாற்காலியில் அமர,
“அப்பா…” நடுக்கம் மகளிடம்.
“மத்தவங்க சொல்றதை விடு. நீ சொல்லு என்ன நடந்துச்சுனு அப்பா கேக்குறேன்.” என்று பொறுமையாகவே கேட்டார் பரந்தாமன்.
தாய் போல் பதறி ஆதங்கத்தில் திட்டியிருந்தால் கூட அத்தனை குத்தியிருக்காது, தான் என்று வருகையில் நிதானம் கடைபிடிக்க முயலும் தந்தையை பார்த்து வேதனை மண்டியது இயலணிக்கு. இவர்களை நினைக்காமல் எப்படி தாலி வாங்கிக்கொண்டேன் என்று எண்ணிக்கையில்லா முறையாய் நொந்து கொண்டாள்.
“பாப்பா…” எதுவும் சொல்லாமல் அமைதியாக அழுகும் மகளை பேசச் சொல்லி கண்காட்டினார்.
கேவலொன்று வெடிக்க நடந்த அனைத்தையும் சொன்னவள் அறிவழகனின் முரட்டுத்தனங்களை மட்டும் தவிர்த்திருந்தாள், “சத்தியமா உங்களுக்கு தெரியாம செய்யணும்னு செய்யல அப்பா. அப்போ அவங்க குடும்பத்துல கல்யாணம்னு பேசவும் எனக்கு ராஜேஷ் மாமா நியாபகம் தான் வந்துச்சு. அவரை கல்யாணம் பண்றதுக்கு அறிவை பண்ணிக்கிட்டா எல்லாம் சரியாகிடும்னு ஆசுவாசம் தான் வந்துச்சு. தப்புனு தெரிஞ்சும் தடுக்கத் தோணல அப்பா. பொங்கல் அன்னைக்கு உங்க கூட எல்லாம் இருக்க முடியலையேன்னு அவ்ளோ அழுதேன். ஆனா அங்க உங்களுக்குத் தெரியாம கல்யாணத்துக்கு தயாராகிட்டு எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு திரும்ப உங்களை பாப்பேன்னு குற்றவுணர்ச்சி என்னை அரிச்சிக்கிட்டே இருந்துச்சு. தப்பு தான், ஆனா ஏன் அப்போ சுயநலமா அப்படி நடந்துக்கிட்டேன்னு தெரியல அப்பா.” என்று அவர் மடியில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவளை அவரின் அடுத்த கேள்வி வாயடைக்க வைத்தது.
“உனக்கே தப்புனு தெரிஞ்சி கல்யாணம் பண்ணி இருக்கீன்னா அந்த பையன் மேல உனக்கு விருப்பம் இருக்கணும். அந்த பையனை கூட கூட்டிட்டு வராம ஏன் தனியா வந்திருக்க?”
“அப்பா…” இயலணி அதிர்ந்து நிமிர, வேம்பு பொங்கிவிட்டார்.
“என்னங்க கொஞ்சிட்டு இருக்கீங்க. விருப்பம்னு நினைச்சி கல்யாணம் பண்ணிட்டேன் ஆனா அது வெறும் ஈர்ப்புனு சொல்லிட்டு இருக்கா. இப்போ வந்து அந்த பையனை ஏன் கூட்டிட்டு வரலைன்னு கேக்குறீங்க? கல்யாணமெல்லாம் விளையாட்டா போச்சா உங்க ரெண்டு பேருக்கும்?”
“ம்ச்… நம்மளை பத்தி கூட யோசிக்காம கல்யாணத்துக்கு தயாராகியிருக்கானா அதுக்கு ஈர்ப்பு மட்டும் காரணமா இருக்காது.” அடித்துப்பேசினார் மனிதர்.
“அப்பா…”
“ஆனா சரியான மோடுமூட்டி குடும்பமா இருக்கும் போல. பொண்ணு யார் என்னன்னு விசாரிக்காம இவங்க சொன்னதை நம்பிகிட்டு இப்படி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.” என்றவர் குரலில் ஏகத்திற்கும் கோபம் எட்டிப்பார்த்தது.
“அவளை கேளுங்கன்னா நீங்க அந்த குடும்பத்தை பேசிட்டு இருக்கீங்க. இவ பாதுகாப்புக்காக ஒரு பையன் வீட்ல இருந்ததை நாம வேணும்னா ஏத்துக்கலாம். அவங்க புரிஞ்சிகிட்டு ஏத்துக்கணும்னு இல்லையே.” நியாயம் பேசிக்கொண்டு வந்தார் வேம்பு. மகள் மீதும் தவறு இருக்கிறது என்பதை அழுத்தமாக நம்பினார்.
“ம்ச்… நாம இருந்தும் யாருமில்லாதவங்க மாதிரி கல்யாணம் நடந்திருக்கு. வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற நீ.” மகள் மீதும் தவறு இருக்கிறது என்று புரிந்தாலும் காரியம் பெரியது என்பதால் மனைவியிடம் பாய்ந்தார் பரந்தாமன்.
“எதுவும் சொல்ல வேண்டாம். அடுத்து என்னன்னு பாக்க வேண்டாமா. அந்த கேஸ் இன்னும் நடந்துட்டு இருக்கு, சாட்சி சொல்ல இவ திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்சா அந்த அமைச்சர் என்ன பண்ணுவான்னு தெரியல. ராஜேஷ் கழுகு மாதிரி இவளுக்காக காத்திட்டு இருக்கான். இவ யாருகிட்டேயோ தாலியை வாங்கிட்டு இப்படி ஒத்தையா வந்து நிக்குறா.” பதிலுக்கு பாய்ந்தார் வேம்புவும். மகளின் எதிர்காலம் பூதாகரமாய் தெரிந்தது. அவள் வாழ்க்கை குறித்த நெருடல் புழுவாய் உள்ளுக்குள் துடித்தது.
பெருமூச்சு விட்டவர், “அந்த பையனை வர சொல்லு.” என்றார் மகளிடம்.
“அப்பா…” அதிர்ச்சி இயலணியிடம்.
“பேசலாம்.” என்று அவர் முடித்துக்கொள்ள, அவன் வரவை மறுத்து இயலணி வாதம் செய்ய, அறிவழகனுக்கு முன் வந்து சேர்ந்தான் ராஜேஷ் வினையுடன்.
error: Content is protected !!