Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 24

அத்தியாயம் 24

“என்ன அஞ்சு இரண்டு நாளா போனே காணும், நானும் கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்”



Advertisement

“அத்தை ஊருக்கு போய் இருக்காங்க இல்ல மஞ்சு, அதான் வீட்லயும் வேலை சரியா இருக்கு”

“ஊருக்கா? எங்க மயிலாடுதுறையா? என்ன திடீர்ன்னு.. உன் நாத்தனார் வீட்டுக்கா?”

Advertisement

Advertisement

“உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரேன்… அத்தை குரு வீட்டுக்கு போயிருக்காங்க”

“என்ன அஞ்சு சொல்ற? எப்ப போனாங்க? எப்படி போனாங்க? யாரு கூட போனாங்க? எதுக்கு போனாங்க?” மஞ்சு படபடவென கேள்விகளாக கேட்டார்.

Advertisement

“என்ன மஞ்சு இத்தனை கேள்வி கேக்கற? ஏன் எங்க மாமியார் அவங்க பேரன் வீட்டுக்கு போக கூடாதா?” என்றார் அஞ்சு சூடாக.

மஞ்சு வேண்டும் என்று கேட்கவில்லை. தீடீர் என்று அஞ்சு கூறவும் ஒரு ஆர்வத்தில் தான் கேட்டார்.

“அப்படி இல்ல அஞ்சு, தினமும் பேசுறோம், ஒரு வார்த்தை சொல்லல நீ,  முன்னமே தெரிஞ்சிருந்தா அருணாவிற்கு பிடிச்சதை செஞ்சு கொடுத்து விட்ருப்பேன். அதான் கேட்டேன்”

“இப்ப என்ன உன் பொண்ணை நேர்ல போய் பார்த்து செஞ்சு கொடுத்திட்டு வாயேன், யார் வேணாம்னு சொல்றது?”

“ஆங்..”

‘என்ன இந்த அஞ்சு, திடீர்ன்னு அந்தர் பல்ட்டி அடிக்கிறா, என் பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு இவ என்ன சொல்றது’ என்று மனதிற்குள்ளே வறுத்தெடுத்தார் மஞ்சுளா.

“என்ன மஞ்சு சத்தத்தையே காணும் ?”

“ஒன்னும் இல்ல அஞ்சு, எனக்கும் தான் அருணாவை பார்க்கணும் போல இருக்கு. குருவையாவது ஒரு தடவை நடுவுல பார்த்தோம். அருணாவை இன்னும் பார்க்கவே இல்லை, இன்னும் இரண்டு நாள்ல ரித்துவை காலேஜில் சேர்க்கணும். அப்புறம் தான் யோசிக்கணும்.”

“ஆமால்ல.. நம்ம இரண்டு பேருக்கும் ஒரே சமயத்துல லீவ் கிடைக்குமான்னு தெரியாது, அதனால யாருக்கு எப்ப தோணுதோ, எப்ப முடியுதோ, அப்ப போய் பார்த்துட்டு வந்துடலாம். சரியா?“

‘நாசூக்கா எப்படி கழட்டி விடறா.. இவ கூட சேர்ந்து பெத்த பொண்ணையே பகைச்சு வச்சிருக்கேன். எனக்கு நல்லா வேணும்’ மனதிற்குள் தன்னையே திட்டி கொண்டார்.

“சரி மஞ்சு நான் வைக்கிறேன். எனக்கு வேலை இருக்கு… அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை வைத்துவிட்டார் அஞ்சு.

அஞ்சுவுடன் பேசி முடித்ததும் உடனே பாரு பாட்டிக்கு அழைத்தார் மஞ்சு.

“அத்தை உங்களுக்கு விஷயம் தெரியுமா? சொர்ணம் சித்தி நம்ம அருணா வீட்டுக்கு போய் இருக்காங்களாம்”

“இது எப்ப? இந்த அஞ்சு என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாளா பார்த்தியா?”

“என்கிட்ட இப்ப தான் சொன்னா, என்ன திடீர்ன்னு கேட்டதுக்கு, ஏன் எங்க மாமியார் போக கூடாதான்னு சண்டைக்கு வராத்தை”

“அவளுக்கு மாமியார் தான் முதல்ல முக்கியம். அப்புறம் தான் அம்மா அண்ணா  எல்லாரும், அதை விடு, நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் சேர்ந்து போய் இருப்பேன் இல்ல?”

“சரி அத்தை, நான் வீட்டுக்கு வந்ததும் மிச்சத்தை பேசிக்கலாம்” என்று வைத்து விட்டார் மஞ்சு.

‘இப்ப எல்லாரும் நல்லவங்க. சொர்ணம் சித்தி என்னடான்னா கிளம்பி போய்ட்டாங்க. அத்தை நானும் போய் இருப்பேன்ன்னு சொல்றாங்க. அஞ்சு அவங்க அவங்க சவுக்கிரியபடி போவோம்னு சொல்றா. நான் மட்டும் கெட்டவளா அப்ப? என் பொண்ணை பார்க்க எனக்கு ஆசை இல்லையா?’ அவருக்கு ஒரு மாதிரி மனசே சரி இல்லை. 

அன்று இரவு ஆனந்தனிடம் தன் மனநிலையை கூறவும், “மஞ்சு நான் ஒண்ணே ஒன்னு தான் சொல்வேன். நேத்து அம்மாகிட்ட ஒன்னு சொன்ன நியாபகம் இருக்கா? “

“நீங்க தான் என்னை புரிஞ்சுகிறீங்கன்னு சொன்னேன்”

“அதோட இன்னொன்னும் சொன்ன, நீங்க துணையா இருந்ததுனால தான் நான் வேலைக்கு போய் குழந்தைகளையும் பார்த்தேன்னு சொன்ன”

“ஆமா.. அதான் உண்மை, அத்தை துணையா இருந்ததால தான் எல்லாம் முடிஞ்சது”

“அந்த நம்பிக்கையை, அந்த சப்போர்ட்டை, அந்த பாதுகாப்பை, நீ அருணாக்கு கொடுத்தியா?”

“நான் ஒன்னும் செய்யலைன்னு சொல்றீங்களா? நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன். எப்படி அவகூட போய் இருந்திருக்க முடியும்?”

“விதண்டாவாதம் பேசுனா நான் ஒன்னும் சொல்லலை. நீயே இந்த கேள்வியை கேட்டு பாரு. நான் இப்பவும் யாரையும் தப்பு சரி சொல்லலை. ஒரு விரிசல் வந்துடுச்சு, ஆனா அவ நம்ம செல்ல பொண்ணு இல்லையா மஞ்சு. நீ அவளை பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு. எதுக்கு இவ்வளவு வீம்பு, சொல்லு?”

“நான் தான் வீம்பு பிடிச்சேன்னா? நம்மகிட்ட பொய் சொல்லிட்டு சொல்லாம போனது எல்லாம் சரியா? உங்க பொண்ணு வீம்பு பிடிக்கலையா?”

“உன் பொண்ணு தானே.. உனக்கு இருக்க வீம்பு தானே அவளுக்கும் இருக்கும். யாராவது ஒருத்தர் இறங்கி வரணும் இல்லயா? அது ஏன் நம்மளா இருக்க கூடாது?”

“நான் ரொம்ப கெட்டவளா? “

“மனசை போட்டு வருத்திக்காத மஞ்சு, உடம்பு முடியாம போயிடும். முடிஞ்சதை விடு, இனி நடக்கபோறதை பத்தி மட்டும் யோசி. இப்ப அடுத்து அருணாவுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கனும். நமக்கு அடுத்து ரித்து இருக்கா, அவ படிச்சு வேலைக்கு போகணும், அடுத்து அவ கல்யாணம். இப்படி நமக்கு இன்னும் நிறைய பொறுப்பு இருக்கு மஞ்சு. நம்மளோட ஒரு சின்ன மாற்றம், நம்ம பிள்ளைகளுக்கு சந்தோசத்தை கொடுக்கும்னா அந்த மாற்றத்தை நாம உருவாக்கலாமே? பொறுமையா யோசி.. இப்ப தூங்கு”

மஞ்சு, அருணா பிறந்தது முதல் ஒவ்வொன்றாக யோசித்து கொண்டே கண்ணயர்ந்தார்.

——-

சொர்ணம் பாட்டியை பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு அருணா அழைத்து சென்றாள். கொஞ்சம் தூரம் செல்ல வேண்டிய இடங்களுக்கு நந்தனும் குருவும் மாறி மாறி அழைத்து சென்றார்கள்.

வேண்டாம் என்று சொன்ன பாட்டியின் வார்த்தைகளை காதிலே போட்டுக்கொள்ளவில்லை.

“இது எல்லாம் எப்ப பார்ப்பீங்க? இமய மலைய பார்க்க வேண்டாமா?” என்று எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தார்கள்.

ஒரு வாரம் நந்தன் அங்கேயே இருந்துவிட்டு மும்பை செல்வதாக கூறினான்.

கோலுவை பற்றி வடிவேலு முன்பே கூறி இருந்தார். கோலுவிற்கும் சட்டை வாங்கி கொடுத்து விட்டிருந்தார்.

அவனும் பாட்டி பாட்டி என்று சொர்ணம் பாட்டியிடம் பிரியமாக இருந்தான்.

தினமும் மூலிகை எண்ணெய் ஒன்றை கொண்டுவந்து பாட்டி மறுக்க மறுக்க  கேட்காமல் அவருக்கு தேய்த்து மசாஜ் செய்து விடுவான்.

“எங்க கோலு  எப்படி  இது எல்லாம் செய்றான்? “ என்றாள்  அருணா.

“எங்க அம்மாக்கு நான் தான் பாபி தினமும் தேய்ச்சி விடுவேன். ருக்கு தீதிகிட்ட சொல்லி எண்ணெய் காய்ச்சி கொடுக்க சொன்னேன். தொடர்ந்து இதை தேய்த்தால் மூட்டு வலி எல்லாம் காணாமல் போய்டும் பாருங்க” என்றான் பெருமையாக.

“இந்த எண்ணெய்ல சக்தி இருக்கோ இல்லையோ, உன் நல்ல மனசுக்கு சக்தி இருக்கு கோலு. எனக்கு கால் வலி நிஜமா குறைஞ்ச மாதிரி தான் இருக்கு” என்றார் சொர்ணம் பாட்டி.

“எங்க அம்மா கூட உங்களை மாதிரி சொல்லுவாங்க பாட்டி. கோலு உன் கையில மந்திரம் இருக்குன்னு” என்றான் தன் தாயின் நினைவில்.

வடக்கே பிறந்த கோலுவின் தாயிற்கும், தெற்கே பிறந்த சொர்ணம் பாட்டிக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆனால் சொர்ணம் பாட்டியின் பேச்சில் தன்  தாயின் நினைவு வந்தது கோலுவிற்கு. இந்த உலகத்தில் அன்பு இருந்தால் அனைத்தும் சாத்தியமே!

“அம்மாடி, நாளைக்கு பூஜை இல்லையா, எல்லாம் தயார் செய்யணுமா?”

“அதை ஏன் பாட்டி கேக்கறீங்க, நாளைக்கு பாருங்க.. எல்லாருமா சேர்ந்து செய்வாங்க, நமக்கு பெருசா வேலையே இருக்காது“ என்றாள் அருணா.

வழக்கம் போல அருணாவும் குருவும் காலையிலே எழுந்து குளித்து தயாராகினார்கள். குரு சென்று துணிகளை அலசி காய போட்டான். அதற்குள் பாட்டியும் நந்தனும் குளித்து தயார் ஆகினார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர்ந்து வீட்டின் வெளிப்புறம் எல்லாம் கழுவிவிட்டார்கள்.

கம்லா பாட்டி பூவுடன் வந்தார். அருணா சொன்னது புரிந்தது. பின் சொர்ணம் பாட்டி நந்தனின் வரவால் மேலும் சிறப்பாக நடந்தது அன்றய பூஜை.

எட்டாவது வார விரதம் சிறப்பாக முடிந்தது.

சொர்ணம் பாட்டிக்கு பெருமையாக இருந்தது. எத்தனை மனிதர்களை சம்பாதித்து உள்ளனர் கணவனும் மனைவியும் என்று.

அன்று  இரவு ஊரில் இருந்து அழைத்த மஞ்சுளா “அருணா எப்படி இருக்க? இன்னிக்கு பூஜை நல்லபடியா முடிஞ்சுதா?” என்றார்.

“நல்லா இருக்கேன் ம்மா.. அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? பூஜை சூப்பரா முடிஞ்சுது ம்மா”

 “வாமிட் எல்லாம் இருக்காடா? நல்லா சாப்பிடுறீயா?”

“இல்லம்மா, வாமிட் இல்ல. பசி தான் கம்மியா இருந்த மாதிரி இருந்தச்சு. அதுவும் இப்ப பாட்டி கையால சமைக்கவும் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு. நல்லா சாப்பிடுறேன் ம்மா ”

பல நாட்கள் சென்று மகள் தன்னுடன் இயல்பாக பேசுவதாக பட்டது மஞ்சுளாவிற்கு.

“சரிடாம்மா,  உனக்கு ஏதாவது வேணுமா? அம்மா வந்து செஞ்சு தரட்டுமா?”

குரல் கரகரத்தது.

“உன் கையால செஞ்சு கொடுத்தா நல்லா தான் இருக்கும். ஆனா இப்ப உன்னால  எப்படி வர முடியும். ரித்துவை காலேஜ்ஜில சேர்க்கணும் இல்ல, அதுக்கு ஒரு நாலு நாள் லீவ் போடணும். அங்க அலைஞ்சிட்டு வந்து திரும்ப இங்க எப்படி வர முடியும். திரும்ப லீவ் கிடைக்கிறதும் கஷ்டம் இல்லம்மா? இப்ப பாட்டி இருக்காங்க. இல்லேன்னாலும் குரு என்னை நல்லா பார்த்துக்கிறான். அதுவும் இல்லாம இப்ப நானும் கொஞ்சம் பொறுப்பா தான் இருக்கேன். நீ நம்ப மாட்ட.. எனக்கு புரியுது மா.. உன்னால எப்ப வர முடியுமோ அப்ப வாம்மா” என்றாள் அருணா.

பாட்டியின் அறிவுரைகள் அருணாவை கொஞ்சம் இலகுவாக்கி இருந்தது. அதனாலேயே அம்மாவிடம் நன்றாக பேசினாள் இம்முறை.

மஞ்சுளாவிற்கு பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை. ‘என்னை பற்றி எவ்வளவு யோசிக்கிறாள் என் பெண். அவளுக்கு நான் தேவை என்கிறப்ப நான் யோசிக்கலயே’ 

“என்னம்மா.. என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற”

“இல்லடா உன்னை பார்க்கணும் போல இருக்கு, இங்க பாட்டியும் சொல்லிட்டே இருக்காங்க. சீக்கிரமா வரப்பார்க்கிறேன், ஜாக்கிரதையா இருடா”

“சரிம்மா..”

இவர்கள் பேசுவதை சொர்ணம் பாட்டியும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.

“அவ்வளவு தான் அருணா, நீரடிச்சு நீர் விலகாது. நீ அன்பா பேசவும் பாரு அவளே இறங்கி வந்துட்டா. அன்பை நமக்கு கொடுக்கிறவங்க கிட்ட தான் திருப்பி கொடுக்கணும்னு இல்ல… நம்மகிட்ட கடவுள் கொடுத்திருக்கும் அக்ஷய பாத்திரம் அன்பு. அது எல்லாருக்கும் கொடுத்துட்டே இருக்கலாம்”

“சோ ஸ்வீட் பாட்டி நீங்க, உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்குது தெரியுமா?” என்று அவரை கட்டி பிடித்து அவரது கன்னத்தில் முத்தமாக வைத்துக்கொண்டே இருந்தாள்”

“போதும் போதும்.. மிச்சத்தை என் பேரனுக்கு கொடு போ” என்று அருணாவை  லேசாக தள்ளி விட்டார்.

“அவருக்கு கொடுக்க நிறைய ஸ்டாக் வச்சிருக்கேன். அது வேற ஸ்பெஷல் ஐட்டம்… இது உங்களுக்கு மட்டுமே”

பாட்டியும் அருணாவும் பேசுவதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான் குரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!