Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மார்கழி மத்தாப்புக்கள்

மார்கழி மத்தாப்புக்கள் – 11

மார்கழி – 11

“ஆளுங்கட்சி அமைச்சர் பையன் நேரடியா இந்த வழக்குல சம்மந்தப்பட்டிருக்குறதால எல்லாரோட பார்வையும் இந்த கேஸ்ல தான் இருக்கு. பதவியை தக்க வச்சிக்கணும்னா பையன் ஒழுக்கமானவன்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு அமைச்சர்.”

“இயலுக்கு அதனால ஆபத்தா? அமைச்சரை பகைச்சிகிட்டு வாழ்ந்துற முடியுமாடா?” குறுக்கிட்டு பதறிய அறிவழகனை அடக்கினான் வேந்தன்.

“சொல்ல வர்றதை முழுசா கேளுடா எருமை. ஆளுங்கட்சியை ஆட்டம் காண வைச்சு ஓட்டு வங்கில கைவைக்க இந்த கேஸ் ஒரு துருப்புசீட்டாகிடுச்சு எதிர்கட்சிக்கு. அவங்க சைட்லேந்து இயலுக்கு சப்போர்ட் இருக்கு. ஆனா இதுல இன்னொரு பிரச்சனை என்னன்னா இயலோட ஒன்னுவிட்ட மாமா ஒருத்தன் அமைச்சருக்கு வேண்டப்பட்டவன் போல. ஒரே ஜனங்க அதை வச்சி இயலை மடக்கிட்டா அவளை ஆப் பண்ணிடலாம்னு குடைச்சல் கொடுக்கிறான். அவனுக்கு பயந்துட்டு தான் இயல் வீட்ல அவளை பாதுகாப்பா தங்க வச்சிக்க சொல்லிக் கேட்டாங்க.”



Advertisement

“தொல்லை பண்றானு அவனை தூக்கி உள்ள வைக்க முடியாதா?” ஆதங்கமாக கேட்டவன் நெஞ்சம் பதறவே செய்தது. 

“வச்சா உடனே வெளில வந்துருவான். அரசியல் ஆதரவு உள்ளவனை எவ்வளவு நாள் உள்ள வைக்க முடியும்னு நினைக்குற? மிஞ்சிப்போனா ஒரு வாரம். நிலவரம் அப்படித்தான் இருக்கு.”

“ம்ச் அப்போ இவ்வளவு நாள் தலைமறைவா இருந்தது எல்லாம் வேஸ்ட்டா? எதிர்க்கட்சி சப்போர்ட்டுனு சொன்ன அவங்களை வச்சி பிரச்சனையை முடிக்க முடியாதா?” 

Advertisement

“முடிக்க முடிஞ்சா ஏன்டா உன் வீட்ல கொண்டு வந்து விட்டிருக்க போறேன்? என்னதான் எதிர்க்கட்சி நாங்க துணையா இருக்கோம்னு வெளில காட்டிக்கிட்டாலும் அவனுங்களும் ஒரே குட்டையில் ஊறுனவுனங்க தான. இவங்க குடுமி அவங்ககிட்டேயும் அவங்க குடுமி இவங்ககிட்டேயும் இருக்கு. சப்போர்ட்டா இருக்கேனு சொல்றது எல்லாம் ஊரு உலகத்துக்கு தான். உள்ளுக்குள்ள இருக்குற பூசல்ல இயலுக்காக இறங்கி நின்னு எல்லாம் வேலை செய்ய மாட்டானுங்க. அதோட எல்லாம் ஒருநாள் கூத்து. வேற பிரச்சனை எதுவும் சிக்கலைன்னா மட்டும்தான் இயல் பக்கம் அவனுங்க திரும்பவே செய்வானுங்க.” எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை அருகிலிருந்து கணித்தது போல் துல்லியமாய் நண்பனிடம் கடத்தி இருந்தான் வேந்தன்.

Advertisement

“மீடியாகிட்ட போவோமா? ட்ரெண்ட் ஆனா இயலுக்கு ஆபத்து ஏற்படுத்த மாட்டானுங்கள்ல?”

“அவனுங்களும் யோக்கியதை இல்லை. ஆயிரம் பேர் பாத்தா ஒருத்தன் உதவ வருவான் அவனும் அரசியல் அதிகாரத்துக்கு பயப்படாதவனா இருக்கனும். ட்ரெண்ட் ஆகுறது எல்லாம் அதே ஒரு நாள் கூத்துதான். நேத்தி தூக்கி கொண்டாடுனா இன்னைக்கு இறக்கி பாடை கட்டிடுவானுங்க.” அறிவழகனின் யோசனைகள் அனைத்திற்கும் மறுப்பாய் பதில்கள் வைத்திருந்தான் வேந்தன்.

“அப்போ என்ன தான் செய்யலாம்னு சொல்ற?” 

Advertisement

“நாளன்னைக்கு கோர்ட்டுல கேஸ் ஹியரிங்க்கு வருது. இயல் சாட்சி சொல்லணும். அதுவரைக்கும் பத்திரமா இருந்தா கூட போதும். அமைச்சர் அடங்குனா ராஜேஷ் தானா அடங்குவான்.”

“சாட்சி சொல்லிட்டா தீர்ப்பு வந்து எல்லாம் முடிஞ்சிடும்ல.” ஆர்வமாய் கேட்ட அறிவழகனின் அறியாமையில் லேசாக சிரித்தான் வேந்தன்.

“கேஸ் போட்டே மூன்றை மாசம் தான் ஆச்சு. அதுக்குள்ள ஜட்ஜ்மென்ட் வந்துடும்னு நம்புறியா? அதுவும் அமைச்சர் பையன் இருக்குற கேஸை அதுக்குள்ள முடிக்க விட்டிருவாங்களா? இந்த ஹியரிங்குக்கு அப்புறம் இயல் திரும்ப சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறன். எப்படியும் வாய்தா வாங்கி வாங்கியே இழுத்துடுவாங்க. இயலுக்கு இருக்குற அச்சுறுத்தலும் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிடும்.” வேந்தனின் பதிலில் அதிருப்தியுற்றவனாய் நெற்றியை நீவிவிட்டுக்கொண்ட அறிவு,

“அவங்க வீட்டு அட்ரஸ் குடு.” என்று கேட்டிருந்தான். இயலணி அவள் வீட்டிற்குத் தான் பாதுகாப்பாய் சென்றிருக்கிறாள் என்று வேந்தன் அழைத்துச் சொல்லவும் ஆசுவாசம் கொண்ட அறிவழகன் இயலணி பற்றி தெரிந்துகொள்ள பேச்சை வளர்த்திருந்தான். 

“நான் என்னனு பாத்துட்டு சொல்றேன். நீயும் போய் திடுதிடுப்புன்னு நின்னு பிரச்சனையை கிளப்பி விட்டுறாத.”

“பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்.” என்று அறிவழகன் அழுத்தமாக கேட்க, வேந்தன் சம்மதிக்கவில்லை.

“என்ன பார்ப்ப? இப்போ சண்டை போட்டு அவளை போகவிட்ட மாதிரி திரும்ப எதுவும் பண்ணி இயல் வேற எங்கேயும் போயிட்டா எல்லாருக்கும் தான் தலைவலி.”

“அந்த தலைவலி வராம நான் பாத்துக்குறேன் நீ அட்ரஸ் சென்ட் பண்ணு.”

“அட்லீஸ்ட் அங்க நிலவரம் என்னனு போய் பாத்துட்டு உனக்கு சொல்றேன்டா. இயலோட மாமங்காரன் எதையும் இழுத்துவிடாம இருக்கணும்.”

“நீ நிலவரம் பாத்து சொல்ற வரைக்கும் எல்லாம் என்னாச்சோனு பயந்துகிட்டே என்னால காத்திருக்க முடியாது.” கேட்ட தகவலை கொடுக்க மறுக்கிறான் என்ற எரிச்சல் அறிவழகன் குரலில் கொட்டிக்கிடந்தது.

“அறிவு என்னடா நீ புரிஞ்சிக்காம புடிவாதம் புடிக்குற. அவங்க வீட்ல உங்க கல்யாணம் நடந்ததுக்கு என்ன சொல்றாங்கன்னு தெரியல. கல்யாணம் நடந்தது தெரிஞ்சா அந்த மாமன்காரன் என்ன கிரிமினல் வேலை பண்ணுவான்னு தெரியல. அவன் கண்ணுல நீ படாம இருந்தா இயலை பத்திரமா உன்கிட்டேயே கூட்டிட்டு வந்து விட்டுறேன்டா. கொஞ்ச நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் அதுதான் பாதுகாப்பு.” வேந்தன் தன் மறுப்பிற்கான காரணத்தை சொன்ன போதுதான் அறிவழகனிடமிருந்து அந்த வார்த்தைகள் வந்தது.

“என் பொண்டாட்டிடா அவ. எல்லாத்தையும் தனியா பேஸ் பண்ணட்டும்னு அப்படியே விட்டுற முடியாது.”

“எங்கிருந்துடா ஞானோதயம் வந்துது? புடிக்கல, பழி வாங்கப்போறேனு உளறிட்டு இருந்த?” ஆச்சர்யமாய் ஒலித்த வேந்தனின் கேள்விக்கு இது குற்றவுணர்ச்சியில் வந்த பற்று என்று எப்படி சொல்லுவான் அறிவழகன், அமைதி காத்தான். 

“அவங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு இருக்கேன். நிலவரம் பாத்துட்டு உனக்கு அட்ரெஸ் சென்ட் பண்றேன்.” என்று இறுதி வரை விலாசம் கொடுக்காமலேயே வேந்தன் அழைப்பை துண்டித்துவிட, முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்ட அறிவழகனுக்கு இருப்பு கொள்ளாமல் பொள்ளாச்சிக்கு பேருந்து ஏறினான். அங்கு சென்றபின் விலாசம் கேட்டுக்கொள்ளலாம் என்ற யோசனையுடன் பேருந்தில் அமர்ந்திருந்தவனுக்கு மேகலா அழைக்க, அழைப்பை ஏற்கவே இல்லை. எப்படியும் இயலணி பற்றி கேட்கக்கூடும். எதுவும் பேசி சமாளிக்கும் மனநிலை அவனுக்கில்லை. மனதின் இரணங்களுடன் கொங்கு நோக்கி பயணப்படும் வேளையில் அவன் வரவை எதிர்த்தாள் இயலணி.

“அவர் எதுக்கு ப்பா?” பரந்தாமன் அறிவழகனை வரச்சொல்லவும் மறுப்பாய் அசைந்தது அவள் தலை. 

“என்ன எதுக்குன்னு கேக்குற? என்ன முடிவுல இருக்க நீ?” கணவருக்கு முன் முந்திக்கொண்டார் வேம்பு.

“அவர் வேண்டாம்.” தன்னுடைய இந்த முடிவுக்கு பெற்றவர்கள் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற ஐயத்தில் அவள் விழிகள் தன்னால் மூடித் திறந்தது. 

“வேண்டாம்னா என்ன சொல்ற? இப்போ வர சொல்ல வேண்டாம்னு சொல்றியா? தெளிவா பேசு பாப்பா.” தந்தை உள்ளம் ஏதேதோ எண்ணி பரிதவிக்க அதனை மறைத்தபடி மகள் முகம் பார்த்தார்.  

“வேண்டாம்னா எப்போவும் வேண்டாம்.” 

மகளின் முதுகிலே ஒன்று வைத்துவிட்டார் வேம்பு. பரந்தாமன் பார்த்தாரே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை. சூழ்நிலையை கிரகித்தபடி மனதில் பல யோசனைகளுடன் இருந்தார். 

“உன் இஷ்டத்துக்கு கல்யாணமும் பண்ணிட்டு இப்போ வேண்டாம்னா என்ன அர்த்தம் இயலு? இதெல்லாம் விளையாட்டா போச்சா? எல்லாம் உன் இஷ்டம்தானா? யாருமே பாக்காத அந்த அஞ்சு பேர் உன் கண்ணுல பட்டதுதான் பட்டுச்சு நியாயம் வாங்கிக் கொடுப்பேன்னு இருந்த வேலையை விட்டுட்டு அலைஞ்சி ஓஞ்சி பத்திரமா வந்துட்டேன்னு நினைச்சா தாலியோட நிக்குற. சரி கூப்பிட்டு பேசுவோம்னு சொன்னா அந்த உறவே வேண்டாங்குற. மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? இப்படியே பொது சேவை பண்ணிட்டு வாழ்ந்துறலாம்னு இருக்கியா?” கேள்விகளில் விளாசிவிட்டார் வேம்பு.  

“ம்மா…”

“அந்த பையன் வேண்டாம்னா ராஜேஷ் ஓகேவா பாப்பா?” பரந்தாமன் கேள்வியாய் பார்க்க, நடுக்கம் மகளிடம்.

“இவன் இல்லைனா அவன்னு ஏன்ப்பா?” கலங்கிப் பார்த்தாள் இயலணி.

“தனியாவே இருந்துரலாம் இருக்கியா பாப்பா? இந்த பிரச்சனையெல்லாம் வராம இருந்திருந்தா எப்படியும் இந்த வருஷம் உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருந்தோம். அது தானாவே நடந்து போச்சு. அப்போ கூப்பிட்டு பேசி அடுத்து என்னனு பாக்கணும்ல?” தந்தையை ஆதங்கமாய் பார்த்தவள்,

“இப்போ எனக்கு யாரும் வேண்டாம் அப்பா. நீங்க மட்டும் போதும். ப்ளீஸ்.” இறைஞ்சும் மகளை யோசனையுடன் பார்த்தவர் முகம் வேதனையில் துடித்தது.

“அந்த பையன் உன்னை அடிச்சானா எதுவும் கொடுமை பண்றானா? அதான் வேணாம்னு சொல்றியா?” பதட்டமாய் கேட்டவர் பின் சமாளித்து, “ராஜேஷை கட்டுறதுக்கு அந்த பையனை கட்டுறது பெட்டர்னு சொன்னீல்ல?” என்றும் கேட்க, இயலணி முகம் கசங்கியது.

ஆம் தொல்லைக் கொடுக்கும் ராஜேஷை விட நன்னடத்தை உள்ள அறிவழகன் பல படிகள் உயர்ந்தவன் என்ற மேலான எண்ணத்தை அறிவழகனே முந்தைய இரவு கெடுத்திருக்க, தனக்கு எந்த துணையும் வேண்டாம் என்ற முடிவுக்கே வந்திருந்தாள். ஆனால் வீட்டினரிடம் சரியான காரணத்தை முன்வைக்க முடியாமல் தடுமாறினாள்.

“அந்த பையனுக்கு வேற பொண்ணோட நிச்சயம் பண்றதா இருந்துசுன்னு வேந்தன் சார் சொன்னாரு. அதனால வேணாங்குறியா?” ஒருவேளை மகளை கட்டியவன் வேறு பெண்ணின் நினைப்பில் இருப்பதால் மகளுக்கு ஒத்துவரவில்லையோ என்றே சிந்தித்தது அந்த தந்தையுள்ளம். 

“என்னனு சொல்லு இயலு. ஏன் வேணாங்குற? அப்பா கூப்பிட்டு பேசட்டும். அந்த பையன் நல்லவனா இருந்தா அடுத்து என்னனு பாக்கலாம். இப்படியே இருக்க முடியாது இயலு.” மகள் மனதை கரைக்க முயன்றார் வேம்பு.

“அம்மா…”

“அந்த பையன் நம்பர் குடு அப்பா பேசுறேன். பேர் என்ன அறிவுன்னு ஏதோ சொன்னியே.”

“அறிவழகன்.” என்றவள் அவன் வேலை குறித்து கேட்கவும் அதனையும் பகிர்ந்து கொண்டாள்.

“ரெண்டு பேரும் டீச்சிங் லைன். பேசி பாக்கலாம்டா பாப்பா. அப்புறமும் உனக்கு வேண்டாம்னா வேண்டாம்.”

“அப்பா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. என்னால அவரை ஏத்துக்க முடியாது.” முடிந்த மட்டும் கெஞ்சிப்பார்த்தாள் இயலணி.

“அவளை என்ன கேட்டுட்டு இருக்கீங்க வேந்தன் சாருக்கு போன் போட்டா யாரு என்னனு சொல்லிடப் போறாரு, அவர் பிரென்ட் தானே. இவ சொல்றான்னு அப்படியே அமைதியா இருக்க முடியுமா நாம.” வேம்பு சொல்வதிலும் நியாயம் இருப்பதால் வேந்தனுக்கே அழைத்து விடலாம் என்று அலைபேசி எடுக்க, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

அத்தனை நேரம் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருந்த மூவரின் முகமும் சட்டென கலவரம் பூசிக்கொண்டது. இயலணி வந்திருப்பது தெரிந்து விட்டதோ என்ற பீதியுடன் பெற்றவர்கள் மகளைப் பார்க்க, 

“நீ உள்ள போ பாப்பா.” மகளை உள்ளே அனுப்பினார் பரந்தாமன்.

அதற்குள் இரண்டு முறை ஒலித்து பின் தொடரொலியாய் கேட்டது அழைப்புமணி சத்தம். மனைவிக்கு கண்காட்டிவிட்டு இயல்பாய் இருப்பது போல் குனிந்து அலைபேசி பார்த்தார் பரந்தாமன். பயந்தது போலவே கதவைத் திறந்ததும் தடாலடியாக உள்ளே வந்தான் ராஜேஷ்.

“எங்க என் அக்கா மவ? வந்துட்டாளாமே. மூணு மாசமா அவளைக் காணாம எப்படி இளச்சி போயிட்டேன் பாரு அக்கா.” என்று வேம்புவிடம் சொல்லிக்கொண்டே உரிமையாய் உள்ளே வந்தவன் பரந்தாமன் அருகில் அமர்ந்து அவர் தோளில் கை போட்டான். வெறுப்பில் அவர் கையை தட்டிவிட, இளக்காரமாக ஒரு சிரிப்பு ராஜேஷிடம்.

“என்ன மாமா வரவேற்பு பலமா இருக்கு? பொண்ணை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க.” என்றவன் பார்வை வீட்டை வட்டமடித்தது. 

“உனக்கு பயந்து தான் எங்கேயோ போயிட்டா என் பொண்ணு. இன்னும் என்ன வேணும் உனக்கு?” என்ற வேம்புவை அலட்சியம் செய்தவன் கால் மேல் காலிட்டு அமர்ந்து மிதப்பாய் பார்த்தான்.

“உள்ள இருக்குற மவள வரசொல்லு அக்கா. இந்த மண்ணுல கால் வச்சதுமே எனக்கு தகவல் வந்துடுச்சு. இனியும் ஒளிச்சு வச்சி என்ன பண்ணப்போற? நாளைக்கு நல்ல நாளாம், பாரு தாலி வாங்கிட்டு நேரா இங்கதான் வரேன்.” என்று சட்டைப்பையில் இருந்த தாலியை எடுத்துக் காண்பிக்க, பெற்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அதிர்ந்து பேச்சற்று பார்த்தனர்.

“அவ கழுத்துக்கு இந்த கயிறு சரியா இருக்கானு பாக்க வேணாமா? வர சொல்லு அவளை.” என்று அமர்க்களம் செய்யும் போதே வேக எட்டுக்களுடன் அவன் முன் வந்து நின்றாள் இயலணி.

பெற்றவர்கள் பதறிப்போய் அவள் புறம் வந்து அரணாய் நிற்க, ராஜேஷின் பார்வை அவளை அளவெடுத்தது. அவனின் பார்வை போகும் இடங்கள் அருவருப்பை கொடுக்க, முகம் சுழித்த இயலணி பின் தெளிந்தவளாய் கழுத்திலிருந்த தாலியை வெளியே எடுத்துக் காண்பித்தாள்.

“என் கழுத்துக்கு சரியா இருக்குற தாலி வந்து சேர்ந்துடுச்சு. நீ போலாம்.” என்று வெளியே கை காண்பிக்க, அதிர்வில் வாய் பிளந்து எழுந்தவன் ஸ்தம்பித்து நின்றது நொடிகளே.

வீடே அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்தவன், “யார் கொடுத்த ஐடியா இது? உனக்கு நீயே ஒரு மஞ்சை கயிறை தாலின்னு கட்டிட்டு வந்து என் முன்னாடி நின்னா நம்பிடுவேன்னு நினைச்சியா?” என்று கேட்டுக்கொண்டே கை நீட்டி அவள் கழுத்தில் இருந்த தாலியை அறுத்தெடுக்க முயல, அவனது சிரிப்பில் சமைந்தவள் அவன் விரல் தன் மேல்படவும் தீ சுட்டது போல் அவனை தள்ளவிட்டு துள்ளி நகர்ந்தாள்.

“பாருடா… என் விரல் பட்டா கம்பளி பூச்சு ஊருதா?” என்று பவ்யமாய் கேட்பது போல் நடித்தவன் அவளை எட்டிப் பிடிக்கப் போக, பரந்தாமன் அவன் சட்டையை பிடித்து பின்னால் தள்ளிவிட்டார்.

‘என் பொண்ணு மேலேயே கை வைப்பானா’ கடுக்கடுங்காத ஆத்திரத்தில் ராஜேஷை அடிக்கப்போக, சுதாரித்தவன் அனாசியமாக பரந்தாமனை கீழே தள்ளி இருந்தான்.

“அப்பா… என்னங்க…” தாய் மகளின் கூக்குரலில் கண்ணாடியை போட்டுக்கொண்டு எழ முயன்றவர் முட்டியில் பலமாக ஒரு அடி. சுருண்டுவிட்டார் மனிதர்.

பயந்துபோன வேம்பு மகளை பிடித்து வாசல் நோக்கி தள்ளியவர், “இங்கிருந்து போயிடுடி. எங்களை பாத்துட்டு நிக்காத, ஓடு.” என்று அவசரப்படுத்த, கண்ணீருடன் அழுத்தமாய் நின்ற இயலணி அருகில் இருந்த சேரை தூக்கி ராஜேஷ் மேல் வீசினாள்.

லாவகமாக நகர்ந்து அதிலிருந்து தப்பித்தவன் அவளை நோக்கி நக்கல் சிரிப்பை உதிர்க்க, அடுத்து எதை கொண்டு அவனை தாக்கலாம் என்று அவள் விழிகளும் மூளையும் அவசரமாய் வீட்டை சுற்றி வந்தது.

“இயலு கிளம்புடி.” வேம்பு வேறு ஒரு பக்கம் மகளை வெளியே தள்ள, இயலணி அப்படியே கிளம்புவதாய் இல்லை. இங்கு வந்தால் ராஜேஷ் வருவான் என்று தெரிந்தே வந்தவள் அறிவழகன் கட்டிய தாலியை சாதகமாக பயன்படுத்தி ராஜேஷை விலக்கி வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்க, ராஜேஷ் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை என்பதே எரிச்சலைக் கொடுத்தது இயலணிக்கு. அதோடு அவனது பார்வை, அது கொடுத்த அருவருப்பு உடல் கூசி தகிப்பது போல் இருந்தது. அப்படியே விட்டு விட்டு ஓட மனம் இடம் கொடுக்கவில்லை. 

சமையலறைக்கு ஓடிச்சென்று கத்தியை எடுத்து வந்தவள் அவனை குத்துவது போல் நீட்ட, அவளைப் பிடித்து அதனை லாவகமாக பிடுங்கிவிட்டான். வேம்பு ஒரு டப்பியை தூக்கி முதுகில் போட, எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவன் இயலணியை விட்டு அவரை தாக்க செல்ல, நிலைமை மோசமாகும் முன் வந்து சேர்ந்தான் வேந்தன்.

வந்தவன் மூர்க்கமாக நிற்கும் ராஜேஷின் கைகளை அழுந்தப் பிடித்து முறுக்கியவன், “என்ன பிரச்சனை இங்க… ஓ, ராஜேஷ் சாரா… வாங்க வாங்க உங்களை தான் கஞ்சா கடத்துன கேஸ்ல தேடிட்டு இருந்தோம்.” என்று உடன் வந்த காவலருக்கு கைகாட்ட, ராஜேஷ் கையில் விலங்கு மாட்ட, வெளியேற மறுத்தவனை இரண்டு தட்டு தட்டி இழுத்துச் சென்றார்.

“நான் யாருனு தெரியாம கை வைக்குறீங்க. எவ்வளவு நாள் இந்த குடும்பத்தை காப்பாத்துறீங்கன்னு பாக்குறேன்.” என்று கோஷம் போல் முழங்கிக்கொண்டே சென்றான் அவன்.

அவனை அப்புறப்படுத்திய பின் ஆசுவாசம் கொண்டவராய் கணவர் கை பிடித்து எழுப்பி விட்டார் வேம்பு. இயலணி முதலுதவி செய்ய, அவர்களை அமைதியாக பார்த்தபடி அமர்ந்தான் வேந்தன். பரந்தாமன் சற்று தெரியவும் நன்றியாய் வேந்தனைப் பார்த்தார்.

“ரொம்ப நாள் எல்லாம் அவனை உள்ள வைக்க முடியாது. ரெண்டு நாள்ல வெளில வந்துருவான். நீங்க ஒரு கேஸ் கொடுங்க உங்க பொண்ணுக்கு தொந்தரவு குடுக்குறான்னு. ஒரு வாரம் புடிச்சி உள்ள வச்சி லாடம் கட்டிடுறேன். அதுக்குள்ள எல்லாம் கொஞ்சம் அடங்கிடும்.”

வேந்தனின் யோசனையில் நெற்றி சுருங்க மகளைப் பார்த்தார் பரந்தாமன். அவர் இறுக்கமாய் நிற்கவும்,

“உங்க பிரெண்டு?” என்று தயக்கமாய் வேந்தனைப் பார்க்க, அவனும் அவன் பங்குக்கு அறிவழகனின் தகவல்களைப் பகிர்ந்தான். 

“அந்த தம்பிக்கு எல்லாம் தெரியுமா?”

“சொல்லிட்டேன் சார்.” என்ற வேந்தனின் பார்வையும் அழுத்தமாய் இயலணியிடம் சென்று வந்தது. 

“அவரை இங்க வர சொல்றீங்களா? பேசிட்டு என்னனு பாக்கலாம். அவரையும் கேட்டுக்கலாம்.” என்ற தந்தையை கண்டனத்துடன் பார்த்தாள் இயலணி.

“வேண்டாம் அப்பா.”

“அப்போ இந்த ராஜேஷ் தொல்லையை சகிச்சிக்கிட்டு எப்போ என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்க சொல்றியா இயல்?” தந்தையின் குரல் உயர்ந்தது. ராஜேஷின் அத்துமீறிய செயலில் பயந்து போயிருந்தார் மனிதர். மகள் வாழ்க்கையில் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்தது.

“அவனே இங்க வரணும்னு கேட்டுட்டு இருக்கான். நான் வர சொல்றேன்.” நண்பனிடம் மறுத்த வேந்தன் இயலணி தந்தை கேட்டுக்கொண்டதோடு இயலணியின் மறுப்பில் சந்தேகம் கொண்டு அறிவழகனை அழைக்க முன்வந்து அலைபேசியை எடுக்க, 

“உங்க பிரெண்ட்கிட்ட நீங்க சொல்லக்கூடாது.” என்று கட்டளையாக வந்தது இயலணியின் வார்த்தைகள்.

என்னடா இது என்று புருவம் ஏறப் பார்த்தான் வேந்தன். அப்படியென்ன நிகழ்ந்திருக்கும் இருவருக்குள்ளும் என்ற ஆர்வம் எட்டிப்பார்த்தலும் இயலணியின் அழுத்தம் கவலையைக் கொடுத்தது. 

“புடிவாதம் புடிக்குற நேரம் இது இல்லை இயலு. எந்நேரமும் நெருப்பை கட்டிகிட்டே வாழ முடியாது.”

“அதுக்குன்னு நெருப்புல வாழ சொல்றியா என்ன?” பட்டென்று கேட்டிருந்தாள் இயலணி.

நண்பனை குறிப்பிடவில்லையென்றாலும் அது அவனுக்கானது என்று புரிந்துபோன பின் அமைதியாக இருக்க முடியவில்லை வேந்தனால், “அவனை பத்தி ஏதோ தப்பா புரிஞ்சிருக்கமா. ரொம்ப நல்ல பையன். ஏதோ கொஞ்சம் கோபத்துல இருக்கான் அவ்வளவுதானே ஒழிய சரியாகிடுவான்.”

“ஒருத்தன் நல்லவனா இல்லையானு அவன் பொண்டாட்டி சொல்லணும்.” என்று இயலணி கொக்கி போட்டு நிறுத்த, என்ன சொல்கிறாள் இவள் என்று தான் பார்த்தனர் அங்கிருந்தோர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!