Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 26

அத்தியாயம் 26

 

“நம்ம கொஞ்சம் பெரிய வீட்டுக்கு மாறிடலாம் செல்லம்மா.. சொன்னா கேளு, இனி அடிக்கடி ஊர்ல இருந்து யாரவது வருவாங்க. இன்னொரு ரூம் இருந்தா நல்லது தானே?”

 



Advertisement

“நம்ம வசதிக்கு அட்ஜஸ்ட் பண்ணி இருக்கிறவங்க மட்டும் வந்தா போதும். வசதி பத்தாதுன்னு நினைக்கிறவங்க வரவே வேண்டாம்”

 

“வரவங்க இருப்பாங்க செல்லம்மா.. ஆனா நமக்கு பிரைவசி..”

Advertisement

 

Advertisement

“இங்க பாரு குரு, இப்படியே பேசிட்டு இருந்தீன்னா எதையாவது தூக்கிப்போட்டு உன் மண்டைய உடைச்சிடுவேன்”

 

‘என்ன மரியாதை குறையுது?’ என்று குரு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அருணாவை பார்த்தான்.

Advertisement

 

“நீ எதுக்கு இந்த பிட்டை போடறன்னு எனக்கு தெரியும். எங்க அம்மாவும் உங்க அம்மாவும் வந்தா, இந்த வீட்ல எப்படி சமாளிக்கிறதுன்னு தானே?”

 

“ஆமா செல்லம்மா, நாமளே அவங்க பேச வாய்ப்பு கொடுக்க வேண்டாம்ல”

 

“நம்ம எவ்வளவு பெரிய மாளிகைல இருந்தாலும் அவங்க இரண்டு பேருக்கும்  குறை சொல்ல ஆயிரம் விஷயம் கிடைக்கும்”

 

“இருந்தாலும்…”

 

“சும்மா இழுக்காத குரு, முடிவா சொல்றேன், நம்ம வேற வீடு மாற போறது கிடையாது. அவங்க என்ன சொல்லுவாங்களோன்னு பயந்து பயந்து வாழ்ந்த வாழ்க்கைக்குள்ள திரும்ப போக முடியாது. புரியுதா?”

 

“சரி செல்லம்மா, விடு டென்ஷன் ஆகாத, நமக்காக மாறணும்னு தோணும்போதே மாறிக்கலாம்”

 

“இந்த சொக்கருக்கும் இந்த செல்லம்மாவுக்கும் இந்த வீடு வசந்த மாளிகை இல்லயா?.. இங்க வந்த பிறகு நாம எவ்வளவு சந்தோசமா இருக்கோம்”

 

“நீ சொல்றது சரிதான் செல்லம்மா.. என்ன பண்றது.. அம்மாக்களை நினைச்சா என்னை அறியாமலேயே டென்ஷன் ஆயிடறேன்“

 

“அவங்க இரண்டு பேரையும் நான் சமாளிச்சிக்கிறேன், முதல்ல அவங்க எப்ப வராங்களோ? அப்ப யோசிச்சுக்கலாம். நீங்க போய் வேலையை பாருங்க. இந்த வாரம் விரதம் முடிக்கிறோம். நிறைய வேலை இருக்கு. பாட்டி வரேன்னு சொன்னாங்க.. என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போடனும், யார் யாரை கூப்பிட்றதுன்னு முடிவு செய்யனும். பதினாறு குழந்தைகளை கூப்பிட்டு பூஜையை முடிக்கனும் “

 

“சரி செல்லம்மா, நான் கடைக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடறேன். நான் போய் கோலு கிட்ட லஸ்ஸி கொடுத்து விடறேன். கொஞ்சம் சில் ஆகு, ரொம்ப கோவப்படற நீ என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான்”

 

“சொக்கரே.. இப்ப வேண்டாம், நீங்க வரும்போதே எடுத்துட்டு வாங்க”

என்று சிரித்து கொண்டே வழி அனுப்பினாள்.

 

தொழில் இப்பொழுது மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் வேண்டும் என்றால் சற்று பெரிய வீட்டிற்கு செல்ல முடியும். ஆனால் அருணாவிற்கு விருப்பம் இல்லை. அவளுக்கு இந்த வீடும், அக்கம் பக்கம் உள்ளவர்களும் என எல்லாம் பிடித்திருந்தது. அதுவும் இல்லாமல் இந்த வீடு  கடைக்கும் பக்கம் பாட்டி வீட்டிற்கும் பக்கம்.

 

மாவிலை தோரணம் கட்டி, வாசல் நிரம்ப கோலம் போட்டு, திருவிழா போல காட்சி அளித்தது அவர்களது வீடு.

 

அவர்கள் குடி இருப்பில் இருக்கும் பெண்கள், கலசம் வைத்து அத்தனை அழகாக  சந்தோஷி அம்மனை தயார் செய்தார்கள்.

 

அருணாவிற்காக குரு, இலகுவான பருத்தி புடவை ஆரஞ்சு நிறத்தில் வாங்கி இருந்தான். அந்த புடவையில் லேசாக மேடிட்ட வயிறுடன் பேரழகியாக காட்சி அளித்தாள் அருணா.

 

வீட்டிலே உணவை தயார் செய்தார்கள். பாட்டி சொல்ல சொல்ல ருக்மணியின் உதவியோடு அருணாவும் குருவும் எல்லாம் செய்தார்கள். சர்க்கரை பொங்கல், பூரி, கிழங்கு, புலாவ், கீர் என்று புளி சேர்க்காமல் சிறு விருந்தை தயார் செய்து விட்டார்கள்.

 

நந்தா தேவி இண்டஸ்ட்ரீஸில் வேலை பார்க்கும் பெண்களையும் அழைத்திருந்தார்கள். அவர்களும் அவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

 

சிறிய வீட்டில் இடம் எப்படி போதும் என்று குரு யோசித்திருந்தான். ஆனால் வீட்டின் முன்புறம் அவர்கள் குடி இருப்பில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து, சாமியானா போட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டனர். “சந்தோஷி மாதா விரதம் முற்றோதலில் பங்கு பெற நாங்க பாக்கியம் செய்திருக்க வேண்டும். எதுவும் சொல்ல கூடாது” என்று அன்பால் இவர்களை கட்டி போட்டு விட்டார்கள்.

 

அருணாளினியும் கந்தகுருவும் தனியே நடத்தும் முதல் நிகழ்ச்சி. நூறு பேர் பங்குபெறும் சிறு விழா. அத்தனை நேர்த்தியாக அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

தங்கள் வேண்டுதலை இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றிய சந்தோஷி மாதாவிற்கு மனமாற நன்றி கூறி விரதத்தை முடித்தனர்.

 

அங்கே வந்திருந்த பெரியவர்களிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள். பின் அனைவருக்கும் தங்கள் கைகளாலே உணவு  பரிமாறினார்கள்.

 

பெண்களுக்கு தாம்பூலமும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் கொடுத்து நிறைவாக பூஜையை முடித்தனர்.

 

குருவின் வலது கை போலவே இருந்தான் கோலு. அன்று வந்தவர்கள் அனைவரும் “நம்ம கோலுவா இது? எப்படி இவ்வளவு பொறுப்பா இருக்கான்? ஏதாவது வைத்தியம் பார்த்தீங்களா?” என்று ருக்மணியிடம் கேட்க தவறவில்லை.

 

“எல்லாம் குருவும் அருணாவும் தான் காரணம், அவனை முழு மனிதனாக மாற்றி உள்ளனர்” என்றார் ருக்மணி நெகிழ்வாக.

 

விழா முடிந்ததும் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டே சென்றனர் பாட்டியும் ருக்மணியும்.

 

அருணா படுக்க சென்ற கொஞ்ச நேரமாகியும் குரு வரவில்லை. “சொக்கரே.. என்ன பண்றீங்க இன்னும் சீக்கிரம் வாங்க..”

 

“காலை பிடிச்சு விட்டுக்கிட்டே இருந்தியே செல்லம்மா.. அதான் ஒத்தடம் கொடுக்கலாம்னு வெண்நீர் எடுத்துட்டு வந்தேன்”

 

அவள் கால் பக்கம் அமர்ந்து, மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்தான்.

 

வாகாக அவன் மடியில் காலை வைத்துக்கொண்டாள். சற்று நேரம் கழித்து  

“போதும் சொக்கரே.. இப்ப நல்லா இருக்கு, நீங்களும் படுங்க” என்றாள்.

 

அதன் பிறகும் இதமா.. பதமா.. மெதுவா..  அவள் கால்களை பிடித்து விட்டான். 

 

அதன் சுகத்தில் அப்படியே தூங்கி விட்டாள் அருணா. 

 

குருவிற்கு தூக்கம் வரவில்லை.

 

‘விரதம் முடிக்கும் பொழுது நீங்க வாங்க’  என்று அருணாவிற்கு தெரியாமல் குரு  தன் அம்மாவையும் அத்தையையும் அழைத்து இருந்தான்.

 

“எங்களுக்கு வரணும்னு தான் ஆசை, ஆனா இப்ப சூழ்நிலை வர தோதா இல்லை. நாங்க போன்லயே எல்லாம் சொல்றோம். குழந்தை பிறக்கும் நேரம் வந்துடறோம், விரதம் தானே, சிம்பிளா செய்ங்க போதும் “ என்று இருவரும் ஒன்று போல கூறி இருந்தார்கள்.

 

அருணா சொன்னது தான் நினைவிற்கு வந்தது ‘மீண்டும் இவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மாற வேண்டுமா?  அவர்கள், அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து எப்பொழுதும் மாறப் போவது இல்லை. ‘

 

‘எவ்வளவு சிறப்பாக  இருந்தது இன்றைய விழா.. இவங்க சொன்னதை கேட்டு ஆன்லைன்ல விரதம் முடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்’ 

 

தவிர்க்க நினைத்தாலும் வளைகாப்பு விழா கண்முன்னே வந்து சென்றது.

 

‘இனிமே, செல்லம்மா சொல்ற மாதிரி.. நம் வாழ்க்கை, நம் கொள்கை, நம் இஷ்டம்..ன்னு இருக்க வேண்டியது தான்‘ என்று மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டான்.

 

பின், மடியில் இருந்த மனைவியின் கால்களுக்கு மிக மென்மையாக முத்தம் வைத்து, மெதுவாக கால்களை படுக்கையில் வைத்து, மனைவியின் அருகில் படுத்து கொண்டான்.

 

எவ்வளவு முயன்றும் வாரம் ஒரு முறை மட்டுமே தொலைபேசியில் பேசுவோம் என்ற அருணாவின் தீர்மானத்தை அஞ்சு மஞ்சுவால் உடைக்க முடியவில்லை.

 

குருவின் தித்திப்பான அன்பில் அருணாவும், அருணாவின் காரசாரமான காதலில் குருவும் ரசித்து ருசித்து வாழ்ந்தார்கள். ஆவலாக தங்கள் தங்கத்தை கையில் ஏந்தும் நாளுக்காக தவமிருக்கிறார்கள்.

 

அருணாவிற்கு ஆறு மாதம் முடிவடைந்து ஏழாம் மாதம் தொடங்க இன்னும் ஒருவாரம் இருக்கிறது.

 

அன்று காலையில் ஆனந்தனும் மஞ்சுளாவும் இவர்களை கைபேசியில்  அழைத்தார்கள்.

 

“சொல்லுங்க மாமா.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

 

“ஒரு முக்கியமான விஷயம் குரு. அருணாவும் பக்கத்துல இருக்காளா? இருந்தா ஸ்பீக்கர்ல போடுப்பா. “

 

“இந்த குடும்பத்துக்கு மட்டும் போன்லேயே எல்லா மீட்டிங்கயும் போடணும்..” என்று சத்தமாக முனங்கிக்கொண்டே வந்தமர்ந்தாள் அருணா.

 

“நாங்க தெக்கு கோடில இருந்தா நீ வடக்கு கோடில போய் உட்கார்ந்துகிட்டு   என்னடி பேச்சு? போன்ல மீட்டிங் போடாம, பின்ன மீட்டிங்க எங்க போடறது, வடக்குலயா தெக்குலயா.. இல்ல இந்த நந்தன் உட்கார்ந்திருக்கானே இரண்டுக்கும் நடுவுலயா?” என்றார் பாரு பாட்டி.

 

“தாத்தா எப்பவும் போல உங்க சரிபாதி ஜக ஜோதியா மீட்டிங்கை ஆரம்பிச்சாச்சு” என்றாள் ரித்விகா தாத்தாவிடம்.

 

“அருணா உடம்பு எப்படிம்மா இருக்கு?”

 

“நல்லா இருக்கேன் தாத்தா, அப்புறம் இந்த வருஷம் உங்க ஐம்பதாவது கல்யாண நாள் வருதே? என்ன ஸ்பெஷல் தாத்தா?”

 

“அதை பத்தி பேச தான்டா போன் போட்டோம்.. நீ நியாபகம் வச்சிருப்பேன்னு எனக்கு தெரியும்டா” என்றார் தாத்தா.

 

ஒரு வாரம் முன்பே அருணா குருவிடம் இதை பற்றி கூறி இருந்தாள்.

 

“நம்ம வீட்டோடு கொண்டாடலாம்ன்னு குரு. இங்க தஞ்சாவூர்ல நம்ம வீட்லயே காலையில கணபதி ஹோமம் வச்சிட்டு அப்புறம் நம்ம குடும்பமா சேர்ந்து சாப்பிடலாம்ன்னு, அஞ்சுவும் மச்சானும் சரின்னு சொல்லிட்டாங்க”

 

“சரி மாமா..”

 

“நீயும்  அருணாவும் வந்துடுங்க குரு”

 

“——————-”

 

“என்ன ஒரு பதிலும் இல்ல? உங்க பெட்டி கடைய விட்டுட்டு வர முடியாதா?” என்றார் பாரு பாட்டி.

 

“கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன் ம்மா” என்றார் ஆனந்தன்.

 

“இல்ல மாமா, அருணா இப்ப ட்ராவல் பண்ணனுமான்னு தான் யோசிக்கிறேன்”

 

“ட்ரெயின்ல கூட்டிட்டு வா குரு, எப்படியும் ஏழாம் மாசம் ஆரம்பிக்க போகுது. இங்க வந்துட்டீங்கன்ன , இவங்க கல்யாண நாளோடு சேர்த்து வளைகாப்பையும் சிம்பிளா வீட்டோடு முடிச்சிக்கலாம். இங்க நாங்க பெரியவங்க எல்லாம் இருக்கோம். பிரசவமும் இங்கேயே வச்சுக்கலாம், நானும் அஞ்சுவும் கலந்து பேசி தான் இதை முடிவு செஞ்சோம் “ என்றார் மஞ்சுளா.

 

“—————-”

 

“சட்டுன்னு முடிவு சொல்ல வேண்டாம்.நீங்க யோசிங்க”

 

“ஏங்க.. என்ன அப்படி முழிக்கிறீங்க? அஞ்சுவையும் கான்பரன்ஸ் கால்ல போடுங்க” என்றார் மஞ்சுளா ஆனந்தினடம்.

 

“ ஹலோ..குரு .. அருணா.. எல்லாம் எப்படி இருக்கீங்க?”- அஞ்சனா.

 

அருணா பல்லை கடித்து கொண்டு குருவை முறைத்தாள்.

 

நான் என்ன பண்ணுவேன் செல்லம்மா என்று குரு செய்கை காட்டினான்.

 

“நல்லா இருக்கோம் ம்மா.. “

 

“அண்ணா சொன்னாங்களா குரு, நம்ம தாத்தா பாட்டி விஷேசம், சிறப்பா செய்யணும். சீக்கிரமா டிக்கெட் போட்டுடுங்க.. இன்னும் பத்து நாள் தான் இருக்கு.”

 

“பார்த்தியா ரித்து, எப்படி பிளான் போட்டு மூணு பொம்பளைங்களும் வேலை செய்றாங்கன்னு“ என்றார் தாத்தா ரித்துவிடம்.

 

“இவங்க சொன்னா அருணா கேட்க மாட்டா.. அதான் அப்பாவை வைச்சு பேச வைச்சிருக்காங்க, இங்க டெலிவரிக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு இப்ப உங்க கல்யாண நாள வச்சு வர வைக்க பார்க்கிறாங்க. சரியான கேடி குரூப் தாத்தா..” என்றாள் ரித்து கடுப்பாக தாத்தாவிடம்.

 

“என்ன குரு பதிலே சொல்ல மாட்டேங்கிற?” – அஞ்சனா.

 

“என்னம்மா சொல்ல சொல்றீங்க?” என்றான் குரு எரிச்சலாக.

 

“பார்த்தீயா மஞ்சு, தலைச்சன் பேரன், அவன் வரணும்னு எனக்கு ஆசை இருக்காதா? எப்படி எரிச்சலா பேசுறான்” என்று மூக்கை உறிஞ்சினார் பாரு பாட்டி.

 

“தாத்தா, ஒரு நாள் உறியறப்ப அந்த மூக்கு கையோடு வரப்போகுது பாருங்க..” என்றாள் ரித்விகா தாத்தாவிடம்.

 

கிளுக் என்று சிரித்துவிட்டார்  தாத்தா.

 

பின் பாரு பாட்டி முறைப்பில் இருவரும் கப்சிப்.

 

“தாத்தா பாட்டி கல்யாண நாள்.. இப்ப தானே அப்பா சொல்றீங்க, நாங்க பேசி என்ன பண்றதுனு முடிவு பண்ணிட்டு சொல்றோம்” என்றாள் அருணா.

 

“என்னடி, அது மட்டுமா சொன்னோம். அதுகூட உன் வளைகாப்பு, டெலிவரி எல்லாம் பத்தி சொன்னோம்ல” என்றார் மஞ்சுளா.

 

“ஆமா அருணா, போன தடவை மாதிரி உங்க வறட்டு பிடிவாதத்தால கஷ்டத்தை இழுத்துகாதீங்க” என்றார் அஞ்சனா.

 

“ஆமா அம்மா, உன் ப்ரோமோஷன் கிடைச்சு புது பொறுப்புகள் எல்லாம் எப்படி போகுது? பாவம்  இதுக்கு நடுவுல ஒரு எட்டு வந்து என்னை பார்க்க கூட உனக்கு நேரமில்லை. இப்ப நான் அங்க வந்தா உனக்கு தானே ம்மா கஷ்டம், அதான் யோசிக்கிறேன்”

 

“அப்புறம் உங்க அக்கறை புரியுது அத்தை, மாசமா இருக்கிற பொண்னு மேல  தான் எத்தனை பாசம். உங்க புது ப்ராஜெக்ட் முடிஞ்சிதா? நீங்க வீட்ல இருந்தா கூட பரவாயில்லை. ஒரு மாசத்துக்கு மேலே பாட்டி இங்க இருந்தா, உங்களால உங்களையே பார்த்துக்க முடியலன்னு பாட்டிய திரும்ப கூப்பிட்டுக்கிட்டிங்க… நான் வந்தா கஷ்டம் இல்லையா?”

 

அருணா பேசவும் இரண்டு அம்மாக்களும் அமைதி…

 

“என்னடி புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா.. என் பொண்ணுக்கும் மருமகளுக்கும் திறமை இருக்கு, வேலைக்கு போறாங்க. இப்ப என்ன.. நான் இல்லையா? இல்ல சொர்ணம் அண்ணி இல்லையா? நீ வா.. நாங்க பார்த்துகிறோம்”

 

“வேண்டாம் பாட்டி, இப்ப உங்க கல்யாண நாளை கொண்டாடுங்க. அதை பத்தி மட்டும் பேசுங்க”

 

“சரி.. அப்ப அதுக்காகவாது  வாங்க”

 

“என்னால வர முடியும்ன்னு தோணலை, டாக்டர் போன தடவை செக்கப் போனப்பவே ட்ராவல் வேண்டாம்னு சொன்னாங்க. குருவை அனுப்பி வைக்கிறேன்”

 

“இல்ல அருணா, நீ அங்கே தனியா இருக்க வேண்டாம். குரு அங்கேயே இருக்கட்டும்” என்றார் வடிவேலு இப்பொழுது.

 

“இல்ல மாமா.. இங்கே கம்லா பாட்டி இருக்காங்க தானே. நான் சமாளிச்சிடுவேன். நாங்க பேசிட்டு கன்பார்ம் பண்றோமே?”

 

“யாருடி அது கம்லா பாட்டி, நான் உன்னை தூக்கி வளர்த்தேனா? அந்த கம்லா பாட்டி வளர்த்தாளா? பாட்டி.. பாட்டின்னு ரொம்பத்தான்..” பொங்கி விட்டார் பாரு பாட்டி.

 

“குருவுக்கு கடைக்கு போகணும் அப்பா.. நேரமாச்சு, நாளைக்கு நாங்க என்ன பண்றோம்னு சொல்றோம் ப்பா”

 

“என்னடி.. பெரிய கடை,அதுக்கு நேரமாச்சாம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ. வச்சிருக்க பெட்டி கடைக்கே உனக்கு இவ்வளவு திமிரு ஆகாது” பாட்டியும் விடுவதாக இல்லை.

 

“இப்ப என்ன சொல்லணும் பாட்டி, ஆமா நாங்க பெட்டி கடை தான் வச்சிருக்கோம். அதுல எனக்கு திமிரு இல்லை, பெருமை. எவ்வளவு பெருமைன்னு வார்த்தையால சொல்ல முடியாது. இதுவரைக்கும் நான் வெளிய சொல்லனும்னு நினைச்சது இல்லை, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. எங்க வருமானம் என்னனு உனக்கு தெரியுமா? நாலு பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி எங்க செலவுல படிக்க வைக்கிறோம். நாங்க எளிமையா வாழறோமே தவிர  ஏழையா இல்லை. எங்க நல்ல நேரம், அந்த ஆண்டவன் அருளால நாங்க இன்னிக்கு நல்ல நிலைமையில் தான் இருக்கோம். நல்ல வருமானமும் இருக்கு. வர வருமானத்தை வச்சு வாழற திறமையும் இருக்கு”

 

பாரு பாட்டிக்கு இது புது செய்தி, அவர் இவர்கள் காசுக்கே கஷ்ட படுவதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 

“அப்புறம் கம்லா பாட்டி.. குழந்தையும் பறிகொடுத்து வாழ்க்கையை வெறுத்து போய் இருந்தேனே.. அப்ப என்னை அவங்க குழந்தையா மடி தாங்கினாங்க”

 

“அது நீயே தேடிகிட்டது தானே.. உன் அம்மாவும் அத்தையும் வந்தங்களா இல்லையா? அவங்களை நீ தானே விரட்டி விட்ட?”

 

“ஆமா.. எனக்கு என்ன வேணும்னு அப்ப கூட கேக்கலையே.. அவங்களுக்கு என்ன வசதி அப்படி தானே யோசிச்சாங்க.. இங்க எங்களால பார்த்துக்க முடியாது.. ஊருக்கு கூட்டிட்டு போறோம்ன்னு நின்னாங்க”

 

“நாலையும் யோசிக்கணும் இல்ல..” பாட்டியின் சுருதி இறங்கி விட்டது.

 

“நாலையும் யோசிச்சீங்களா எல்லாரும்? ஆமா உனக்கு எத்தனை பிள்ளைங்க பாட்டி?”

 

“இரண்டு..”

 

“உங்க மருமகளுக்கு இரண்டு.. மகளுக்கு மூணு.. இல்லையா?”

 

“ஆமா..”

 

“பிள்ளை பால் சரியா குடிக்கலைனா அம்மாவுக்கு கஷ்டம்ன்னு உங்க மூணு பேருக்கும் தெரியுமா?”

 

“——–”

 

“பால்  குடிக்கிற பிள்ளையை பறிகொடுத்து நின்னேனே.. ஒரு அம்மாவா என்ன கஷ்டம் இருக்கும்னு ஒரு பொண்ணா நீங்க மூணு பேரும் யோசிச்சீங்களா?”

 

“——-”

 

“அப்ப ஒரு அம்மாவா எங்களை பார்த்துக்கிட்டாங்க கம்லா பாட்டி… என்ன மட்டும் இல்ல.. குருவையும் சேர்த்து அரவனைச்சுக்கிட்டாங்க… நமக்குள்ள இருக்கிறது ரத்த பந்தம்.. எங்களுக்கும் பாட்டிக்கும் இருக்கிறது தெய்வ பந்தம்”

 

“——”

 

“விளக்கம் போதுமா? இப்ப நாங்க போகலாமா? “

 

“குரு நீ கிளம்புப்பா.. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்றார் செந்தில் தாத்தா. மற்றவர்கள் யாரும் பேசும் நிலையில் இல்லை.

 

“நாங்களா பழசை எப்பவுமே பேச மாட்டோம். நாங்க அதை மறந்து அதை தாண்டி வந்துட்டோம். ஆனா திரும்ப உங்க ஆட்டத்துக்கு எங்களை வளைக்க பார்க்காதீங்க” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டாள் அருணா.

 

பாரு பாட்டி செந்தில் தாத்தாவின் ஐம்பதாவது திருமண நாள் விழாவிற்கு குரு மட்டும் வந்து விட்டு சென்றான்.

 

பாட்டிக்கு பிடித்த நாவல் பழ  நிற பட்டு சேலையும், தாத்தாவிற்கு வேட்டி சட்டை, என்று எல்லாம் வாங்கி கொடுத்து விட்டிருந்தாள் அருணா. விழா அன்று அதையே உடுத்தி கொண்டனர் தம்பதியினர்.

 

“யோவ் மச்சான்.. ஒரே ஒரு கேள்வி..” 

 

 “ஒன்னு என்ன இரண்டு கேள்வி வேணாலும் கேளுய்யா”

 

“இப்ப உன் சம்சாரமும் என் சம்சாரமும் கூட்டணி கட்சியா? எதிர்கட்சியா?”

 

ஆனந்தன் முறைக்கவும், “கேள்வி கேட்டா பதில் சொல்லணும், அதை விட்டுட்டு முறைக்கிற?”

 

“நேற்றா?இன்றா?நாளையா?”

 

“என்னய்யா உளர்ர”

 

“இல்ல.. நீ கேட்டியே கேள்வி.. கூட்டணியா எதிர்கட்சியான்னு.. அது நேற்றய நிலைமை பற்றியா, இன்னிக்கு நிலைமை பற்றியா? நாளைய நிலைமை பற்றியா?” என்றார் ஆனந்தன்.

 

“இனி உன்னை ஏதாவது கேள்வி கேட்டேனா பாருய்யா?” என்று முறுக்கி கொண்டார் வடிவேலு.

 

“ஆமா தாத்தா.. எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் நந்தன் தாத்தாவிடம். இவர்களுக்கு பின்புறம் தான் பேரப்பிள்ளைகள் தாத்தாவுடன் அமர்ந்திருந்தார்கள்.

 

“உனக்கும் உங்க அப்பன் புத்தி இருக்கும்ல.. கேளு பார்ப்போம்” என்றார் தாத்தாவும் சிரித்துக்கொண்டே.

 

“இவங்க இரண்டுபேரும் நிஜமாலே அப்பாவிங்களா? அட! பாவிங்களா?” என்றான் வடிவேலுவையும் ஆனந்தனையும் காண்பித்து.

 

அவனது கேள்வியில் வெடித்து சிரித்தனர் தாத்தா, அபி, ரித்து, குரு எல்லோரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!