31.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,555
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 31.2
.
“அச்சோ அம்மா” என்றால்? யசோ அம்மா! மின்சாரம் உடல் முழுவதும் பாய, செயலிழந்தான் கௌதமன்.
செல்ல மகளின் கண்களில் நீர். கண்ணீருக்கான காரணம் புரிகிறது. ஆனால்… காரணம் அறிந்தும் மகள் கேட்பதை அவனால் தர இயலாதே. முதல் முறையாக மகளின் கண்ணீரைத் துடைக்கும் வழி தெரியாது நிற்கிறான் தகப்பன்.
Advertisement
“மை அச்சோ அம்மா… அப்பா” விசும்பும் குட்டி மகளின் கண்ணீர் கழுத்தில் பட்டு மனதைச் சுட்டது. ‘நான் போதவில்லையா என் மகளுக்கு?’ தாயாக, தகப்பனாக என் மகளுக்கு எல்லாமாக நான் இருக்கிறேன், என நம்பியவன் நம்பிக்கை, “நானுக்கு அச்சோ அம்மா நேணும்” என்ற ஒற்றை கூற்றில், அவன் கண் முன்னே காற்று கலைத்த மேகமாக ஒன்றுமில்லாது போனது. மகள் அழ, கலங்கி நிற்கிறான் தகப்பன்.
‘பேபி, உனக்கு இன்னும் மூணு வயசு கூட ஆகலியே… இப்போவேவா?’ மனம் வாடினான் கௌதமன். மகளின் எந்த நினைவாற்றலை எண்ணி பெருமை கொண்டானோ… இன்று அதே நினைவாற்றலை முற்றிலுமாக வெறுத்தான்.
“அப்பா நேம் என்ன?” என மகள் கேட்ட வேளையில் உச்சி குளிர்ந்தான். “மை அப்பா நேம் இஷ் கௌமகன்” என மகள் கூறிய வேளை பெருமை பிடிபடவில்லை கௌதமனுக்கு. “வாட் இஷ் அம்மா நேம்?” என்ற அடுத்த கேள்விக்கு, “தாக்ஷாயினி” என இவன் கூற, “தாச்சி அம்மா இல்ல… ஆந்தி” என்ற குழந்தைக்குப் பெற்றவளின் பெயரைக் கூறிய போது அதை இப்படி நினைவில் வைத்துக் கொள்வாள் என இவன் எண்ணவில்லையே!
Advertisement
என்ன செய்வதென்று தெரியவில்லை தகப்பனுக்கு. மகளை என்ன கூறி ஆறுதல் படுத்துவான் அந்த வளர்ந்த ஆண்மகன்? இவள்… இந்த யசோதரா உன் தாய் இல்லை என்றால் என் மகளுக்குப் புரியுமா? புரிந்துகொண்டு ‘என் அம்மா எங்கே?’ எனக் கேட்டால்? கௌதமன் செயலிழந்தான் அந்த நிமிடம்.
Advertisement
ஆறு மாதங்கள் முன்பு வரை யாழினிக்கு தெரியாத உறவு, அம்மா. விளையாட்டு கூடத்தில் வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அம்மா என்ற ஒருத்தர் இருந்தார். அவர் வந்ததும் இவளோடு விளையாடிக் கொண்டிருக்கும் குட்டியும் ‘அம்மா’ என அவரிடம் பாயும். அவரும் அள்ளி வாரி அணைத்து முத்தம் கொடுப்பார். யாழினிக்கு தாயாகத் தகப்பனாக எல்லாமாக அவள் அப்பா இருந்தாலும், இப்படி ஓர் அம்மா தேவைப்பட்டது. இவளைக் கண்டதும் முகம் கொள்ளா புன்னகையும் “என் குட்டி பேபி” என அப்பாவைப் போலவே கொஞ்சிக் கொண்டே மகளை அள்ளி வாரி அணைத்து முகம் முழுவதும் முத்தம் கொடுக்க அம்மா தேவைப்பட்டது. அம்மா என்றவரின் பெயரை தவிர யாழினிக்கு தன் தாயைப் பற்றி எதுவும் தெரியவில்லை… இன்றுவரை.
இன்று தன் அன்னையைப் பார்த்துவிட்டாள். ‘யம்மா யசோ’ என்றதைக் குழந்தை கேட்டாளே… ‘அச்சோ அம்மா?’ என்று இவள் கேட்டதற்கு ‘ஆம்’ எனத் தலை அசைத்தாளே யசோ அம்மா. ஆனால்… தான் ஆசை கொண்டது போல் அவளின் ‘யசோ அம்மா’ தன்னை தூக்கிக் கொள்ளவும் இல்லை… முத்த மழை தரவும் இல்லை என்றதும் குழந்தையின் அந்தச் சின்ன மனது ஏங்கிப் போனது. உதடு பிதுங்கித் துடிக்க அப்பாவின் தோளில் தஞ்சம் அடைந்த குழந்தையின் குட்டி இதயம் அவள் கண்களைப் போலவே அழ ஆரம்பித்து இருந்தது.
யசோதராவிற்குக் குழந்தை அழும் காரணம் புரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் தான் தான் காரணம் என்பது மட்டும் புரிகிறது. எழுந்து வந்தாள் கௌதமனிடம். அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்தவள் குழப்பமாகக் கௌதமனை பார்க்க… முயன்று புன்னகைத்தான். அவ்வப்போது கல்லூரியில் பார்த்து நட்போடு புன்னகைத்துக் கொண்டாலும்… ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதிகப் பழக்கம் இல்லை இருவருக்கும். அதிகப் பழக்கமில்லை என்றாலும் விட்ட குறை தொட்ட குறை போல மெலிதான நட்பு இருவருக்குள்ளும் இழையோடுவதை இருவருமே உணர்ந்திருந்தனர்.
Advertisement
இவன் குழந்தை எனத் தெரிந்தபின், தைரியம் வரப்பெற்றவளாய், யாழியின் முதுகை யசோதரா மெல்ல வருடினாள். குழந்தை சட்டென திரும்பிப் பார்த்தாள். புன்னகை முகமாய், ‘வா’ எனத் தலையசைத்து, யசோ தன் கைகள் இரண்டையும் குழந்தையின் முன் நீட்ட, ஒரு கையை அப்பாவின் கழுத்திலிருந்து எடுத்த யாழி, தாவி தன் கரத்தை யசோவின் கழுத்தைச் சுற்றிப் போட்டாள்.
மூச்சுக் காற்று தீண்டும் தூரம் இருந்த இரு பெரியவர்களும் தர்ம சங்கடமாக விழிக்க, கௌதமன் மகளின் கரத்தை தன் கழுத்தை விட்டு எடுத்து விட்டான். இரு கரம் கொண்டும் யசோவை மகள் கட்டிக்கொண்டு “அச்சோ அம்மா” என அழுகையுடனே அழைக்க, இவள் கௌதமனை பார்த்தாள்.
விசும்பலுக்கு இடையே, “யாலி பேபி அம்மா நேம் இஷ் அச்சோ” என்றாள் குழந்தை. குழந்தையைத் தன்னோடு அணைத்தவள் பனிக் கட்டியாய் கரைந்தாள் என்றால் சரியாக இருக்குமா?
குழந்தையின் அணைப்பு இனித்தாலும், யசோவிற்கு குழப்பம் அதிகமே ஆனது. அந்தப் பெண்… கல்லூரியில் அவ்வப்போது இவனோடு ஒட்டிக் கொண்டு சுற்றும் தாக்ஷா… குழந்தையின் தாய் இல்லையா? சிற்றன்னையாக இருக்குமோ? இருந்தால்… குழந்தை ஏன் அன்னைக்காக அழுகிறாள்? மனம் எதை எதையோ யோசிக்க, குழப்பம் அதிகமே ஆனது.
யசோவின் முகம் தெளியவில்லை. அதைத் தெளியவைக்கும் எண்ணமெல்லாம் கௌதமனுக்கு இல்லை. அவன் கவனம் அவன் குட்டி பேபியின் மீதே இருந்தது. யாழியோ அடங்காது “அச்சோ அம்மா” என யசோவின் கழுத்தை விட்டாள் இல்லை.
குழப்பங்கள் எல்லாம் வேண்டாத ஆணிகள் என ஒதுக்கி வைத்து, மெல்ல மகளின் தலை தொடங்கி முதுகு வரை வருடி விட்டாள் யசோ. மகளுக்குப் போதவில்லை. அவள் கண்ட அம்மாக்கள் இப்படி இல்லையே… இன்னும் அழுகை அதிகரிக்க, கௌதமனால் தாளவே முடியவில்லை. தாயாய் தகப்பனாய் தான் இருந்தும் மகளுக்கு அவன் போதவில்லையே என உண்மையிலுமே துவண்டு போனான்.
“பேபி?” என இவன் குனிந்து மகளின் காதருகே அழைக்க, யசோவின் இதயம் நின்று துடித்தது.
“அப்பாட்ட வாங்க பேபி” என்றான் மன்றாடும் தொனியில்.
“நோ அப்பா… நானுக்கு அம்மா நேணும் அப்பா. பீஷ் அப்பா…” என மகளும் மன்றாட, யசோவிற்குப் புரிந்தது குழந்தையின் தவிப்பு.
மெல்ல மகளை உயர்த்தி கன்னம் துடைத்தாள் யசோ. “அம்மா” என மகள் யசோவின் கன்னத்தை ஈரப்படுத்த, இடையே இருந்த திரை கிழியப்பட்டு, முத்த மழையால் யாழினி நனைக்கப் பெற்றாள்.
தன் அச்சோ அம்மா, தன்னை கட்டிக் கொண்டாள். முகம் முழுவதும் முத்தம் கொடுத்துவிட்டாள். குழந்தை அகமும் புறமும் மலர்ந்து போனாள். “அப்பா… யாழி பேபி அச்சோ அம்மா” எனப் பற்கள் தெரிய அன்னையைத் தந்தைக்கு அறிமுகப் படுத்தினாள் அவர்களின் குட்டி மகள். மகளோடு எழுந்து நின்றாள் யசோ. குழந்தை வாகாக அன்னையின் மார்போடு ஒட்டிக் கொண்டாள்.
‘அம்மா!’ ஒன்றரை வருடங்களுக்கு முன், தன் நினைவில் மட்டுமே வாழுபவன் சாயலில், தான் கற்பனை செய்திருந்த அவர்கள் மகளைப் போலவே எதிரில் வந்து தன் மனதைக் கொள்ளை கொண்ட அதே பூக்குவியல் இன்று இவளைப் பார்த்து “அம்மா” என அழைக்கிறாள். யசோவின் இதயத்தில் பத்தாயிரம் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது என்றால்…
கௌதமனுக்கு மயக்கம் ஒன்று தான் வரவில்லை. “இப்படி என் பேபி பிஹேவ் பண்ணினதே இல்ல. ரொம்ப சாரி” என அவன் அவஸ்தையாகப் புன்னகைக்க, மகளை மென்மையாக அணைத்து தலையில் முத்தம் வைத்தவள், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவனுக்குக் கூற முற்பட்டாள்.
“தேங்க்ஸ்” என்றவன், “வா பேபி. வீட்டுக்கு போகலாம்… நீ தூங்கிட்டா அப்பாவால வண்டில வச்சு கூட்டிட்டுப் போக முடியாது” என்றது தான் தாமதம், “அம்மா வா வீட்டுக்கு போயாம்” என யசோவின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள் யசோதரா பெற்ற மகள்.
“பேபி இது என்ன புதுப் பழக்கம்?” எனச் சத்தம் உயர்த்தி, இவன் குழந்தையை வாங்கும் வண்ணம் மகளின் மீது கை வைக்கவும், அடிக்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள் யாழி.
இது முற்றிலும் புதிது. தகப்பனே உலகம் என வாழும் குழந்தை, தகப்பனிடம் வர மறுப்பது கௌதமனுக்கு புதிது. கௌதமனுக்கு என்ன செய்வதெனப் புரியாது விழிக்க, ‘அஞ்சு நிமிஷம்’ என வாயசைத்துக் கைகாட்டினாள் யசோ.
“சரி சரி அழாத. எங்கயும் போகல” எனக் கௌதமன் கூறவும், தலையைத் திருப்பி அப்பாவை ஒரு முறை பார்த்தவள், “மை அச்சோ அம்மா” என மீண்டும் யசோவின் கழுத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
இருவருமாகச் சற்று நேரம் அங்கேயே நடந்தனர். எழு ஸ்வர குழு சொல்லிக் கொண்டு கிளம்பும் முன் அவர்களை அவனுக்கு அறிமுகப் படுத்தினாள். இவள் மகளோடு நின்றிருக்க, அவர்கள் என்ன பேசினார்களோ, இவன் யசோவை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பிவிட, ‘போகலாம் பேபி’ என அழைக்க வந்தவன், மகளின் மலர்ந்த முகம் பார்த்து அமைதி காத்தான்.
தன் அம்மாவைக் கட்டிக் கொள்வதும், அவ்வப்போது முத்தம் கொடுப்பதும், கைகளை விரித்து கண்கள் விரிய மழலையில் கதைப்பதுமாக இருக்கும் யாழியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. தன்னிடம் மட்டுமே மகள் காட்டும் நெருக்கத்தை இவளிடம் எப்படி? கௌதமன் குழம்பிப் போனான். இவள், மகளைப் பற்றி எதுவும் நினைத்துவிடுவாளோ?
“யாழியோட அம்மாக்கும் உங்க பேரு தான். என் பொண்ணுக்கு அவ அம்மாவ தெரியாது. பிளே ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவ நிறைய கேட்டா… அதுல ஒண்ணு தான் அம்மா பேரு. கேட்டான்னு சொல்லிக் கொடுத்தோம். இப்படி அத நினைவுல வச்சிருப்பான்னு நினைக்கல” என்றான் கௌதமன் கடல் அலையைக் காலால் தட்டிக் கொண்டே.
“அப்பா… யாலி குட் பேபி தொல்லு” என மகள் அப்பாவிடம் கூற, ‘என்ன?’ என யசோ கௌதமனை பார்த்தாள்.
“யாழி வெரி குட். யசோக்கு உன் மேல் கோபம் இல்ல டா. அவங்களுக்குத் தொண்டை வலி. அதுதான் பேசல” என மகளைச் சமாதானம் செய்தான்.
“தப்பு செஞ்சா, ‘பேட் பேபி’ன்னு இவ கூட நான் பேச மாட்டேன். அதுதான் நீங்கப் பேச மாட்டேங்கறீங்கனதும் டென்ஷன் ஆகிட்டா” என்றான் யசோவிற்குப் புரியும் விதமாக.
“அம்மா…” எனத் தன்னை அழைக்கும் மகளை, தொண்டை அடைக்கப் பார்த்திருந்த யசோவிற்குத் தன் இயலாமையின் மீது அத்தனை கோபம் வந்தது. சுயநினைவிற்கு வந்த பின் அரவிந்தன் மருத்துவரைக் காண அழைக்க, யசோவிற்கு ஏனோ பேசும் ஆசை எல்லாம் வரவே இல்லை. பேச முயலவும் இல்லை. தனிமையும் மௌனமும் அவளுக்கும் இந்த உலகத்திற்கும் இடையே சுவராக இருக்க யசோவிற்கு அது மிகவும் பிடித்துப் போனது. அதனால், இன்று வரை பேச முயலவில்லை.
மூன்றரை வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டன யசோ பேசி… அவள் குரல் அவளுக்கு நினைவில் இல்லை. ஆனால் இன்று ஒரு முறை இந்தக் குட்டி மகளுக்காகப் பேச மனம் ஆசை கொண்டது. மருத்துவரைப் பார்த்திருக்க வேண்டும்! பேச முயற்சி செய்திருக்க வேண்டும். மனம் அடித்துக் கொண்டது.
பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து ‘நீ குட்’ என யசோ வாயசைத்து கன்னத்தில் கன்னம் வைக்க, மகளுக்கு அத்தனை ஆனந்தம்.
அன்னையின் கழுத்தை நீவி விட்டவள் அங்கு அவளின் குட்டி தலையை நுழைத்து ஆசையாகப் பல முத்தங்கள் கொடுத்தாள். யசோவின் தொண்டை அடைத்துக் கொண்டு வலித்தது. வலியில் துடித்த தொண்டைக்குள் ஈர முத்தங்கள் இதமாய் இறங்கின. “வலி போயினே. நோ அலுவுது” எனத் தொண்டையை வருடி ஆறுதல் படுத்தும் குழந்தையை, உள்ளம் பொங்கத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் யசோ. முதல் முறையாக ‘ஆஆஆ’ எனக் கத்த வேண்டும் போல் மனம் ஆர்ப்பரித்தது.
அன்னையின் அணைப்பு… அதில் இத்தனை இதம் இருக்குமா என்ன? “நானுக்கே நானுக்கு அச்சோ அம்மா” என வாய் கொள்ளா சிரிப்போடே குட்டி மகள் ஒய்யாரமாக அன்னையின் கழுத்தில் முகம் பதித்துக் கொண்டாள்.
கௌதமனுக்கு நம்பவே முடியவில்லை மகள் செய்யும் செயலை. நான் எங்குத் தவறினேன் எனக் குழம்பிப் போனான். மகள் ஓர் அன்னைக்காக இவ்வளவு ஏங்கினால்… பேசாது தாக்ஷாவை இப்பொழுதே மணந்து கொண்டால் என்ன என்றே தோன்றியது கௌதமனுக்கு. அன்று இரவே தாக்ஷாயினியை அழைத்தவன், “எங்க வீட்டுல இருந்து மேரேஜ் பத்தின பேச்ச ஆரம்பிக்க சொல்றேன் தாக்ஷா” என்றான்.
மகள் ஏதோ ஓர் அன்னைக்காக அல்ல, தன் அன்னைக்காக மட்டுமே ஏங்கித் தவிக்கிறாள் எனக் கௌதமனுக்கு எப்படிப் புரிய வைப்பது? மகள் அன்னைக்காக ஏங்க… தாக்ஷாயினி கௌதமனை மட்டுமே விரும்ப… கௌதமனோ மூவரும் சேர்ந்து குடும்பமாக வாழும் வாழ்விற்காகக் காத்திருக்க… இதெல்லாம் எங்குப் போய் முடியுமோ என நாமும் வருந்த… என்னவோ!
இருள் பரவ ஆரம்பித்தது. மகளை அணைத்துப் பிடித்திருந்தவளோடு கௌதமனும் நடந்தான். பேச வேண்டும் என அவன் நினைக்கவில்லை. ஆனால் பேசினான். அவனைப் பற்றி, மகளைப் பற்றிப் பேசினான். “என் மக, அவ வயசுக்கு ரொம்ப ஷார்ப்” என மகளின் பெருமைகளை அளந்து விட்டான். கண்கள் மின்னப் பேசும் கௌதமனின் ஆழமான குரலைக் கேட்கப் பிடித்தது யசோவிற்கு.
யசோவின் அபிநயம் படிக்கும் விழிகளும்… விரல்களும் பேசும் கதையையும் கேட்கக் கௌதமனுக்கு முன்பே பிடிக்கும். இன்று மகளை ஏந்திக் கொண்டே கதை பேசும் அவளின் விழிகளையும் உதட்டசைவையும் கர்மச் சிரத்தையாகக் கவனித்தான்.
கைப்பேசி சிணுங்கவும் அதைப் பார்த்தான். “எடுக்கவா… டூ மினிட்ஸ்?” எனக் கண்களைச் சுருக்கி கேட்பவனிடம் என்ன கூறுவாள், ‘நீங்க பேசுங்க’ எனக் கையசைத்தாள்.
“தேங்க் யூ…” என்றவாறே எடுத்தவன், “என்ன டா…?” எனக் கேட்டுக் கொண்டே நகர்ந்தான்.
அப்பா தன்னை தன் யசோ அம்மாவிடம் இருந்து தூக்கிக் கொள்வாரோ எனப் பயந்தவள் போல் அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த குழந்தை, ஒரு கட்டத்தில் நன்கு உறங்கியிருந்தாள்.
மணலில் சம்மணமிட்டு அமர்ந்த யசோதரா, மகளைத் தோளிலிருந்து மடிக்கு மாற்றினாள். குழந்தை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஆத்விக் நினைவில் வந்தான். தன் மீது அவ்வளவு அன்பை வைத்திருக்கும் ஆத்விக் கூட அவளை ‘அத்தமா’ என்றே அழைப்பான். மகளைப் பார்த்தது இல்லை. இருந்திருந்தால் இப்படித் தானே இருப்பாள். தன்னை அம்மா என வாய் நிறைய அழைத்துக் கொண்டு… இப்படி மடியில் படுத்து விளையாடி… மடியில் உறங்கி… அவள் தகப்பனை போலவே என் வாழ்வின் பக்கங்கள் அனைத்தையும் இனிமையாக்கி…
மனம் எதை எதையோ அசைபோட கரம் கலைந்திருந்த கேசத்தை வருடிக் கொண்டிருந்தது. தலையில் இருந்த கிளிப்பைக் கழட்டி ஓரம் வைத்தாள். கேசத்தினுள் விரலை விட்டு மெல்லக் கலைத்து… தலையை வருடினாள். குழந்தை தூக்கத்தில் யசோவின் வயிற்றோடு ஒன்றினாள்.
கழுத்தின் கீழ் இருந்த வியர்வை துளிகளைத் துப்பட்டா கொண்டு மென்மையாக ஒற்றி எடுத்து கழுத்தில் காற்றை ஊதினாள். முகத்தில் இருந்த கற்றை முடிகளை ஊதி விட்டவள், குனிந்து மகளின் உச்சந்தலையில் இதழ் பதித்தாள்.
‘வீட்டு வேல செய் டி… கைய பாரு குட்டி பாப்பாது மாதிரி புசுபுசுன்னு இருக்கு’ என அவன் மடியில் தலை சாய்த்திருந்தவளின் உள்ளங்கையை அவன் கன்னத்தில் வைத்து அழுத்தியது சுகமாக நினைவை வருடியது. நினைவுகளை வரிசையாக அடுக்கி வைத்திருந்த பொக்கிஷப் பேழையில், புதிதாக இடம் ஒதுக்கினாள். ‘தேனாய் இனிக்கும் மகளோடு சில மணி நேரம்’ என அதில் இந்த நாளை குறித்து வைத்தாள். ஆசை வரும் போதெல்லாம் அசைபோட்டுக் கொள்ளலாம்… மனம் இன்பத்தில் ஆர்ப்பரித்தது.
கையில் இருந்த துப்பட்டா கொண்டு குழந்தையின் உள்ளங்கையைத் துடைத்து… காலில் இருந்த மணலை மெல்லத் தட்டிவிட்டு… அந்தக் குட்டி கால்களிலும் கைகளிலும் ஆசை ஆசையாக இதழ் பதித்து எடுத்தாள்.
காற்றோடு போராட விருப்பம் இல்லாது அதன் இழுப்புக்கு அசைந்து கொடுத்தது யசோவின் கூந்தல். சம்மணமிட்டிருந்தவள் மடியில், உலகை மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது கௌதமனின் சொர்க்கம். நீலக் கடல் காதலன் தன் நிலாப் பெண்ணை காணப்போகும் குஷியில் குதித்துக் கொண்டிருந்தான். ஆழியில் மட்டும் தான் அலைகள் எழுந்து அடங்குமா என்ன?
கூறியது போலவே இரண்டாவது நிமிடத்தில் வந்திருந்த கௌதமன், தன் முன்னே அரங்கேறிக் கொண்டிருந்த அழகிய காவியத்தைக் கலைக்க மனம் இல்லாது, எம்பி எழுந்து ஆர்ப்பரிக்கும் உணர்வுகளோடு, கண்களை சிமிட்டவும் மறந்து நின்றிருந்தான்.