Skip to content
Post Views: 4,030
அத்தியாயம் 27
வாசலில் ஒரு டெலிவரி லாரி வந்து நின்றது. “மிஸ்டர். கந்தகுரு வீடு இதுதானே” என்று ஒருவர் வந்து கதவை தட்டினார்.
Advertisement
“ஆமா… என்ன விஷயம்” என்று வந்தாள் அருணாளினி.
“மேடம் உங்களுக்கு வாஷிங் மெஷின் டெலிவரி வந்திருக்கு. எங்க இறக்கி வைக்கணும்னு சொல்லுங்க.. நாங்க வச்சிடறோம்”
Advertisement
Advertisement
“வாஷிங் மெஷினா? நாங்க ஆர்டர் கொடுக்கலையே?”
“இல்ல மேடம், இந்த அட்ரஸ் தான். பெயர் கந்தகுரு தான் போட்டிருக்கு, பாருங்க” என்று ஆர்டர் பில்லை காட்டினான்.
Advertisement
பெயரும் விலாசமும் சரியாக தான் இருந்தது. “ஒரு நிமிஷம் இருங்க.. நான் என் வீட்டுக்காரர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்”
“குரு, வாஷிங் மெஷின் ஏதாவது ஆர்டர் பண்ணினியா? இங்க டெலிவரிக்கு வந்து நிக்குது?”
“இல்லையே செல்லம்மா.. உனக்கு தெரியாம நான் எப்ப பண்ணுனேன்? இரு நான் வீட்டுக்கு வரேன்”
அதற்குள் அருணா அந்த பில்லை ஆராய்ந்ததில் ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பதாக போட்டிருந்தது.
‘அஞ்சுவா மஞ்சுவா தெரியலையே’ என்று கடுப்பாக நின்று கொண்டிருக்கையில் குரு வேகமாக வந்து சேர்ந்தான்.
“என்ன செல்லம்மா? அட்ரஸ் தப்பா வந்துட்டாங்களா?”
“இல்ல குரு.. ஆன்லைன்ல நம்ம வீட்டுக்கு தான் புக் பண்ணி இருக்காங்க“
“சார், சீக்கிரம் சொல்லுங்க சார்.. எனக்கு இன்னும் நாலு டெலிவரி இருக்கு. நாங்க வச்சிட்டு போயிடறோம், நீங்க அப்புறமா பேசிக்கோங்க” என்றான் அந்த நபர் கடுப்பாக.
“சாரி பய்யா.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அதுவரை நீங்க நம்ம கடையில் சூடா ஒரு டீ சாப்பிடுங்க. எங்க சொக்கன் டீ ஸ்டாலில் டீ சூப்பரா இருக்கும்” என்றாள் அருணா.
“நம்ம கடையா மேடம், டெலிவரி முடிச்சிட்டு குடிக்கணும்னு தான் இருந்தோம்”
கூட மூணு பசங்களும் இருந்தார்கள்.
”குரு, கூட்டிட்டு போ.. நம்ம கடை ஸ்பெஷல் டீ கொடு எல்லாருக்கும். அதுக்குள்ள யார் வேலைன்னு நான் போன் பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்”
முதல் முறையாக அருணா கான்பரன்ஸ் காலில் அஞ்சு மஞ்சு இருவரையும் அழைத்தாள்.
“சொல்லு அருணா? எப்படி இருந்தது சர்ப்ரைஸ்..? “ எடுத்ததும் உற்சாகமாக ஆரம்பித்தார் மஞ்சுளா.
“ராஜாத்தி.. உனக்கு பிடிச்ச ஆப்பிள் க்ரீன் கலர், நான் தான் செலக்ட் பண்ணேன்.. நேத்து தான் புக் பண்ணோம், அதுக்குள்ள டெலிவரி வந்துடுச்சா?”
“இன்னிக்கு ட்ரை பண்ணி பாத்துடு அருணா. அப்ப தான் எதாவது கோளாறுன்னா உடனே ரிட்டர்ன் பண்ண முடியும்”
“ராஜாத்தி, நீயே பண்ணாத.. குரு வந்ததும் பண்ணுங்க”
வழக்கம் போல இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் சொன்னேன் இல்ல மஞ்சு, பார்த்ததும் ராஜாத்தி சந்தோச படுவான்னு..”
“ஆமா அஞ்சு, அருணாவே நம்ம இரண்டு பேருக்கும் கான்பரன்ஸ் கால் போட்டிருக்கா பாரேன் “
“ராஜாத்தி, நாங்க தான் அனுப்பினோம்ன்னு எப்படிடா கண்டுபிடிச்ச?”
“இந்த மாதிரி அதிக பிரசங்கி வேலை எல்லாம் உங்க இரண்டு பேரை தவிர வேற யாராலும் செய்ய முடியாதே?”
“ஆங்..”
“ஆங்..”
“யாரை கேட்டு ஆர்டர் பண்ணிருக்கீங்க?”
“நிறைமாசமா இருக்க இல்ல அருணா, எப்படி துணிய கையில துவைச்சிட்டு இருக்க முடியும், அதான் பண்ணோம்”
“இப்பதான் தீடீர்னு நான் நிறைமாசமா இருக்கேன்னு நியாபகம் வந்துச்சா?”
“இல்ல ராஜாத்தி.. நாளைக்கு குழந்தையும் வந்தப்புறம் எப்படி சமாளிக்க முடியும், உனக்கு கஷ்டமா இருக்கும் இல்ல?”
“நாங்க எல்லாரும் வரோம் அருணா, அப்ப எப்படி சமாளிக்கிறது, நல்லது செஞ்சா கூட தப்பா நினைக்கிற நீ ”
“எங்களுக்கு வேணும்னா நாங்களே வாங்கி இருப்போம். நாங்க உங்க கிட்ட கேக்கவே இல்லையே. நீங்க வரப்போற பத்து நாளைக்கு எத்தனை கலாட்டா? “
“நாங்க வாங்கிட்டோம்.. இப்ப என்ன அதுக்கு..?”
“எங்களுக்கு வேண்டாம். நான் திருப்பி அனுப்பிடறேன். நீங்க பேசி கேஷ் பேக் வாங்கிக்கோங்க”
“நாங்க குரு கிட்ட பேசிக்கிறோம்” என்று இருவரும் கோவமாக வைத்துவிட்டார்கள்.
இவர்கள் குருவிடம் பேசிக்கொண்டிருக்கையிலே, அருணா வாஷிங் மெஷினை திருப்பி அனுப்பி விட்டாள்.
“அம்மா.. இங்க கடையில ரொம்ப கூட்டமா இருக்கு.. அப்புறம் பேசுறேன்” என்று குரு போனை கட் செய்துவிட்டான்.
“உங்க பொண்ணு பண்றது சரியா?” என்று மஞ்சுளா ஆனந்தனிடம் சண்டைக்கு கிளம்பினார்.
“இங்க பாரு மஞ்சு.. நீங்க வாங்கும் போதே நானும் மச்சானும் சொன்னோம். அருணா கிட்ட ஒரு வார்த்தை கேளுங்கன்னு.. அப்ப, பொம்பளைங்க விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்கன்னு சொன்னீங்களா இல்லையா.. இப்ப எதுக்கு என் கிட்ட சொல்ற? நீங்களே பேசிக்கோங்க “ என்று கழண்டு கொண்டார்.
“புறா கூடு வீட்ல எப்படி பத்து நாள் இருக்க போறோம்னு தெரியலை.. இதுல வாஷிங் மெஷின் கூட இல்லன்னா எப்படி சமாளிக்க முடியும்?” என்று புலம்பி கொண்டிருந்தார் அஞ்சனா வடிவேலுவிடம்.
“நீங்க இப்படி யோசிப்பீங்கன்னு தெரிஞ்சு தான் அருணா திரும்ப அனுப்பிடிச்சு. நீங்க இப்படி சலிச்சு புளிச்சு ஒன்னும் என் பையன் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை” என்றார் வடிவேலு சற்றே கோபமாக.
பிரசவத்திற்கு டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னும் சரியாக பத்து நாட்கள் இருந்தது. சரியாக இரண்டு நாட்கள் முன்பு அங்கே செல்வதற்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள் இரண்டு அப்பா அம்மாக்களுக்கும். அங்கே இப்பொழுது குளிர்காலம் என்பதால் பாட்டியை வரவேண்டாம் என்று சொல்லி இருந்தான் குரு.
‘ஒரு வாரம் முன்னே போறது நல்லது’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார் சொர்ணம் பாட்டி.
“நாங்க எங்க பேரக்குழந்தையோட ஒரு வாரமாச்சும் இருக்கனும் அத்தை.. அதனால லேட்டா போனா தான் குழந்தையோட இருக்க முடியும். பத்து நாள் லீவ் போட்டிருக்கோம் எல்லாரும். அதுக்கு மேலே முடியாது இல்ல? “
———–
“மருத்துவமனையில் அட்மிட் பண்ணும் போது என்ன என்ன எடுத்து வைக்கணும்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி இருக்கேன் அஞ்சு”
“எனக்கும் அனுப்பி வை மஞ்சு.. நானும் செக் பண்ணிட்றேன்.. எதுவும் விட்டு போய்ட கூடாது இல்ல?”
“ஓகே, அஞ்சு, நம்ம ஆளுக்கொரு பேக் ரெடியா வச்சுப்போம். மேலே லேபிள் ஒட்டியே வெச்சுடுவோம், ஒண்ணுக்கு இரண்டாவே இருக்கட்டும்”
“பேபி டிரஸ் எல்லாம் வாங்கலாம்னு சொன்னா.. அத்தை குழந்தை பிறந்ததும் தான் வாங்கணும்னு சொல்றாங்க..”
“அதான் நம்ம இரண்டு பேரும் போறோமே.. அங்க போய் சமாளிச்சிக்கலாம், அங்கேயும் ஆன்லைன் டெலிவரி இருக்கு அஞ்சு”
“நம்ம இப்பவே செலக்ட் பண்ணி வச்சுக்கலாம். அங்கே போய் ஆர்டர் உடனே பண்ணிடுவோம்”
“ஆமா மஞ்சு, நம்ம பிளானிங் பத்தி எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும். நம்ம அருமை அப்பவாது புரியுதா பாப்போம்”
இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளுடன் ஹல்த்வானி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள் அஞ்சுவும் மஞ்சுவும்.
ஒரு பக்கம் சொர்ணம் பாட்டி, பிரசவ லேகியம், சத்து மாவு என்று அருணாவிற்கு கொடுப்பற்காக எல்லாம் தயார் செய்து எடுத்து வைத்தார்.
இன்னொரு பக்கம் பாரு பாட்டி , “நீங்க பத்து நாளில் வந்துட்றேன்னு சொல்றீங்க. எப்பிடியாவது அருணாவையும் குழந்தையும் இங்கே கூட்டிட்டு வர பாருங்க.. இல்லனா அப்பறம் நானும் உங்க அப்பாவும் அங்க போய் இருந்து பார்த்துக்கிறோம்” என்று கூறி இருந்தார் ஆனந்தனிடம்.
—————-
“போதும் பாட்டி.. இதுக்கு மேலே நடக்க முடியலை”
“சரி கொஞ்ச நேரம் உட்காரு அருணா, அப்புறம் திரும்ப வீட்டுக்கு போகலாம்”
தினமும் காலையில் கம்லா பாட்டியுடனும் இரவில் கந்தகுருவுடனும்
வாக்கிங் செல்கிறாள் அருணா.
அன்று ஏனோ பத்து நிமிடத்திற்கு மேலே நடக்க முடியவில்லை.
“இன்னிக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வருவோமா?”
“நாளைக்கு தான் பாட்டி செக் அப்.. நைட் சரியா தூங்கலை, அதான் கொஞ்சம் களைப்பா இருக்கு போல”
“எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கனும் அருணா. எதுன்னாலும் உடனே சொல்லு” என்று அருணாவிடம் கூறிவிட்டு, குருவிற்கும் அழைத்து “அருணா முகம் சோர்வா தெரியுது.. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ.. எதுனாலும் எனக்கு உடனே கால் பண்ணு… மேலே ரமேஷ் கிட்ட எந்நேரம்னாலும் டாக்சி தேவைன்னு சொல்லி வச்சிடு” என்று கூறினார்.
ருக்மணியிடம் கூறி நான்கு காட்டன் புடவைகளை அலசி காய வைத்தார். ஒரு சேலையை குழந்தையின் இடுப்பிற்கு கட்டும் அளவிற்கு கிழித்து அழகாக மடித்து வைத்தார். மேலும் மருத்துவமனை செல்ல தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தார்.
குருவும் அருணாவும் பதற்றம் இல்லாமல் அமைதியாக இருந்தனர். வாழ்க்கை வலிக்க வலிக்க கற்று கொடுத்த பாடம் அல்லவா.. அமைதியாக சந்தோஷி மாதாவிடம் “தாயே, நீ தான் எல்லாம் நல்ல படியாக நடத்தி கொடுக்கணும்” என்று வேண்டிக் கொண்டார்கள்.
“காலையில இருந்தே சோர்வா இருக்கியே செல்லம்மா.. மருத்துவமனை போயிடலாமா செல்லம்மா?”
“இன்னும் பத்து நாள் இருக்கே குழந்தை பிறக்க, வேற ஒன்னும் செய்யல குரு.. காலை வர பாப்போம் “
இருவரும் அமைதியாக படுத்து கொண்டார்கள்.
“நான் கால் அமுக்கிவிடவா செல்லம்மா.. வலிக்குதா?”
“நீங்க அமுக்கி விட்டா சுகமா தான் இருக்கும்.. ஆனா இப்ப வலி இல்ல.. தூங்குங்க என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு கண்களை மூடி கொண்டாள்.
படுத்து கொஞ்ச நேரத்தில், குழந்தையின் அசைவு அதிகமாக இருப்பதாக தோன்றியது குருவிற்கு…
“என்ன சொக்கரே.. தங்கம் தூங்கவே விடமாட்டேங்குது?” என்று எழுந்து அமர்ந்தாள் அருணா.
“நானும் கவனிச்சேன் செல்லம்மா.. நம்ம கிளம்புவோம்.. எதுக்கும் மருத்துவமனை போய்டலாம்”
“மணி என்ன?”
“ஒரு மணியாகுது.. நான் போய் வண்டியை எடுக்கிறேன். நேத்தே ரமேஷ் அண்ணன் என்கிட்ட சாவி கொடுத்திட்டாரு”
“அம்மா….” சுளீர் என்று வலி, ஒரு வினாடி தான் இருந்தது.
அதற்குமேல் தாமதிக்கவில்லை. இருவரும் கிளம்பினார்கள்.
குரு பாட்டிக்கு அழைத்து கூறவும், அவர் ”நான் தயாரா இருக்கேன். வந்து என்னையும் கூப்பிட்டுக்கோ“ என்றார்.
ஆனந்தனுக்கும் வடிவேலுவுக்கும் அழைத்து சுருக்கமாக விஷயத்தை கூறி, மீண்டும் மருத்துவமனை சென்று அழைப்பதாக கூறி வைத்தான்.
பிறகு குரு விளக்கு ஏற்றி, சொர்ணம் பாட்டி சொல்லி இருந்தது போல குல தெய்வத்திற்கு பதினொரு ரூபாய் எடுத்து வைத்தான். இறைவனை வேண்டி அருணாவிற்கு விபூதி குங்குமம் வைத்து விட்டான்.
இவர்கள் மருத்துவமனை செல்வதற்கு முன் நான்கு ஐந்து முறை வலி வந்துவிட்டது.
பிரசவலி தான் என்று மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டார்கள்.
——————–
“இன்னும் பத்து நாள் இருக்கே அஞ்சு ? அதுக்குள்ள எப்படி வலி வரும்?”
“கொஞ்சம் ரெஸ்ட்டா இருந்திருக்கனும்.. நம்ம சொன்னா கேட்டாத்தானே? இப்ப நம்ம உடனே எப்படி போக முடியும்? ”
“நம்ம வரதுக்குள்ள என்ன அவசரம்.. நீ சொல்ற மாதிரி ரெஸ்ட்ல இருந்திருந்தா நம்ம போற வரைக்கும் வலி வந்திருக்காது”
“இப்ப எல்லாரும் நம்மளை தான் குறை சொல்லுவாங்க..”
அஞ்சுவும் மஞ்சுவும் தான் கைபேசியில் புலம்பி கொண்டிருந்தார்கள்.
பொறுமையின் சிகரமான சொர்ணம் பாட்டியாலே தாங்க முடியவில்லை.
“இங்க பாரு அஞ்சு…. முதல்ல போனை வை.. இப்ப நீங்க இரண்டு பேரும் அங்கே இல்லன்னறது தான் முக்கியமா? நான் எத்தனை தடவை சொன்னேன். கொஞ்சம் முன்னமே போங்கன்னு.. இப்ப குழந்தை நல்ல படியா பிறக்கனும், தாயும் சேயும் நல்லா இருக்கணும்னு சாமிய கும்பிடுங்க.. புரியுதா “ என்று அதட்டலிடவும் அஞ்சு கப்சிப்.
“மகளுக்கும் மருமகளுக்கும் திறமை இருக்கு.. அவங்க வேலைக்கு போறாங்கன்னு பீத்திக்கிட்டேன் இல்ல, எனக்கு வேணும். வெறும் வாய் தான் இரண்டுபேருக்கும், பெத்தவ.. கொஞ்சம் முன்ன போகணுமா வேண்டாமா பிரசவத்துக்கு, எப்ப பாரு போன்.. ஆன்லைன்.. வெட்டி பந்தா.. “ பாரு பாட்டி விலாசவும் மஞ்சுவும் கப்சிப்.
மறு நாள் காலை பத்து மணிக்கு அம்மாவை அதிக சிரமப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பிறந்தாள் கந்தகுரு அருணாளினியின் தங்க மகள்.
நர்ஸ் வந்து குழந்தையை கொடுக்கவும், குரு கம்லா பாட்டியை முதலில் வாங்க சொன்னான்.
பாட்டி குழந்தையை ஆசையாக வாங்கி, கந்தகுருவின் கையில் கொடுத்தார்.
‘அவன் தங்கம்.. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் கையில் வாங்கிய அதே தங்கத்தை போல இருந்தாள். அதே போன்ற சுருள் சுருளான கேசம்.. அதே நிறம்.. அதே மிருதுவான சருமம்.. ‘
“பாட்டி.. எங்க தங்கம் பாட்டி..” என்றான் கண்கள் கலங்க.
பாட்டி ஆதுரமாக அவன் தலையை வருடி விட்டார்.
நர்ஸ் வந்து குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றார்.
குரு இரு வீட்டினருக்கும் அழைத்து மகள் பிறந்ததிருப்பதை மகிழ்ச்சியாக கூறினான்.
ஆச்சி, பாட்டி, தாத்தா, அப்பா, மாமா, அம்மா, அத்தை, தம்பி, அபி,ரித்து என்று அனைவரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டான்
அருணா கண் விழிக்கவும், அருணாவிடம் குருவே தங்கள் தங்கத்தை காட்டினான்.
ஆனந்த கண்ணீர் மட்டுமே இருவரிடமும்.
“அதான் உங்க தங்கம் உங்க கையில இப்ப தங்கமா இருக்காளே. எதுக்கு அழுகை.. அழக்கூடாது அருணா.. நீயும் தான் குரு” என்று கூறிய கம்லா பாட்டியின் கண்களில் இருந்தும் நிற்காமல் வழிந்தது ஆனந்த கண்ணீர்.
“கண்ணீரும் இன்று தித்திக்குதே!!! “ என்ற அருணாவை கட்டி அணைத்து கொண்டார் கம்லா பாட்டி.
——————–
error: Content is protected !!