பிரசன்னா அயனிடம் கண்டிப்பாக வர முடியாது என்று சொல்லி வைத்துவிட்டாள். மருத்துவமனையில் இருந்தவள் ஐசியுவிற்கு வெளியே இருக்கும் வெயிட்டீங் அறையின் ஒரு மூலையில் நின்று பேசிவிட்டு வர, அவளுக்கு முன் ஒருவன் வேக நடையோடு பெரியம்மா, அம்மா உட்கார்ந்திருந்த பக்கம் சென்றான். அவன் பிரசன்னாவை முந்திக்கொண்டு நடந்துவிட, அவளும் அவன் சென்ற இரு நொடிகளில் பெரியம்மா பக்கத்தில் நின்றாள்.
“திலக் சார் ஆக்சிடெண்ட் விஷயமா பேசணும் மேம். நான் இந்த கேஸோட ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடிங் ஆஃபிசர்” என்று சொல்ல,
“உங்க பெயர்?” என்று அவனை உன்னிப்பாய்க் கவனித்தாள் பிரசன்னா. கணவனிடம் விசாரித்த அதிகாரியோ என்று யோசனை.
Advertisement
“ஜீவபிரகாஷ் ஏசிபி” என்றான்.
“மேம் கிட்ட நான் தனியா பேசணும்” என்று சொல்ல, பெரியம்மாவைப் பார்த்தாள். அமராவதியோ,
“என் பொண்ணுதான். நீங்க என்ன கேட்கணுமோ கேளுங்க” என்றார். ஜீவபிரகாஷ் தோளை லேசாக குலுக்கிவிட்டு தன் விசாரணையைத் தொடர்ந்தான்.
Advertisement
“திலக் ஸாருக்கு யாரெல்லாம் எதிரிங்க? கட்சில அவரைப் பிடிக்காதவங்க?” என்று எல்லாம் கேட்க, அமராவதியோ,
“குடும்பத்துல யாரும் பண்ணல” என்றார் அமராவதி உறுதியாக.
Advertisement
“இவங்க ஹஸ்பண்ட்?” என்று பிரசன்னவர்தினியை ஒற்றை விரலால் காட்ட, அவளுக்கு அப்படியோரு கோபம்.
“வாட் நான்சென்ஸ்?” என்று கொஞ்சம் குரல் உயர்த்த, நர்மதா மகளை கவலையோடு பார்த்தார்.
“இட் மேக்ஸ் பெர்ஃபெக்ட் சென்ஸ். திலக் தான் சிட்டிங் எம்.பி, இந்த எலெக்ஷன்ல அவருக்குத்தானே சீட் கொடுக்கிறதா இருந்தது. எப்படி உங்க ஹஸ்பண்ட்க்கு சீட் கிடைச்சது? திலக்கோட ஆக்ஸிடெண்ட்ல பயன் அடைஞ்சது அவர்தானே?” என்று கேட்க, பிரசன்னவர்தினிக்குக் குத்தியது. இப்படியான பேச்சுகள் என்றும் வந்துவிடக்கூடாதென கணவனிடம் அவ்வளவு சண்டையிட்டும் அவன் கேட்டால்தானே?
இந்த குற்றச்சாட்டில் அமராவதியின் பார்வை பிரசன்னாவின் பக்கம் திரும்பியது. அமராவிற்கு மகன் பிழைத்து வர வேண்டும் என்பதே ஜீவனின் வேண்டுதலாக இருக்க, ராஜமகேந்திரனை அப்படி நினைக்கவில்லை.
நினைக்கவில்லை என்பதை விட வேறெதுவும் நினைவில் நிற்கவில்லை. இந்த அதிகாரி சொல்வது போல, ஒருவேளை பதவிக்காக பிரசன்னாவின் கணவனே இப்படி செய்திருப்பானோ என்று தோன்றியது. அதுவரை எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே கவலையில் இருக்கும் மருமகளிடம் இதையும் சொல்லி வருத்த வேண்டாம் என்று வெங்கட கிருஷ்ணன் நினைத்தார்.
பெரியம்மாவின் பார்வை பிரசன்னாவை வலிக்கச் செய்ய, எதிரே நின்ற ஜீவபிரகாஷிடம்,
“எப்படி என் பெரியப்பாவோட இறப்புல உங்கப்பா பயனடைஞ்ச மாதிரியா?” என்று கேட்டாள். அமராவதி உடலில் அதிர்வலை ஓடியது. கண்கள் கலக்கமடைய ஜீவபிரகாஷைப் பார்க்க,
“மைன்ட் யுவர் வர்ட்ஸ் பிரசன்னவர்தினி.” என்றவனுக்குள் அமராவதி என்ன நினைப்பார் என்ற கவலை. அது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய,
“அன்பழகன் அண்ணா பையனா நீ?” என்ற அமராவதியின் வார்த்தையில் வாஞ்சை. அவனை சின்ன வயதில் பார்த்தது. மகனை இழந்த துக்கத்தில் அன்பழகனின் வாழ்க்கையில் உயிரைத் தவிர மற்றவையை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தார் வெங்கட கிருஷ்ணன். அன்பழகனே அரசியலில் இருந்து விலகிவிட, அவனது தொழிலுக்கும் இடையூறு செய்தவரை மிகவும் போராடி நிறுத்தினாள் அமராவதி.
அன்பழகன் குடும்பத்தோடு வெளியூர் செல்ல முடிவெடுத்தான். ஊர், பெயர், மொழி எல்லாவற்றையும் விடுத்து தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனையாக அதனை நினைத்தான். போகும் முன் அமராவதியைச் சந்தித்தான்.
“எங்க இருந்தாலும் நீங்க நல்லாயிருக்கணும்னு அவர் நினைப்பார்ணா. பத்திரமா இருங்க” என்றாள் அமராவதி.
“அத்தை! நாங்க போயிட்டு வரோம்” என்று முதல்முறைப் பார்க்கும் அமராவதியிடம் அழகாய்ச் சொன்னான் ஜீவபிரகாஷ். பிரகாஷின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்த அமராவதியிடம்,
“ஒருதடவ திலக்கை நாங்க பார்க்கலாமா மா?” என்று அன்பழகன் கேட்க, அமராவதி மறுத்துவிட்டாள்.
“வேண்டாம்னா. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். நீங்க யார்ன்ற கேள்விக்கு என்னால முழு உண்மையை சொல்ல முடியாது.” என்று சொல்லிவிட அன்பழகன் வலி சுமந்த முகத்தோடு சென்றதை இன்றும் அமராவதியால் மறக்க முடியாது.
அன்பழகன் மீது பிழையே கிடையாது. அவன் அப்பா செய்த தவறுக்கு அவனிடம் கோபம் காட்டக் கூடாதென்ற தெளிவு இருந்தபோதிலும், அவனுக்காகத்தானே அவன் அப்பா செய்தார்? ஏனோ கணவனின் மரணத்திற்கு அன்பழகனும் ஒரு காரணம் என்ற எண்ணம் கொஞ்சமாய் அமராவதியின் அகத்தில் இருந்தது.
தனது எண்ணம் அவர்களைப் பாதிக்க வேண்டாம் என்பதினால் ஒதுங்கியே இருந்தார். இப்போது வளர்ந்த வாலிபனாக, அன்பழகனின் மகன் தன் முன் நிற்கிறான். கணவன் இருந்திருந்தால் நண்பனின் மகனை கொண்டாடி இருந்திருப்பான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘நினைத்துக் கொள்வதெல்லாம் சந்திப்பு’ என்ற கலீல் ஜிப்ரான் வார்த்தையாகவே வாழ்ந்தார் அமராவதி. ஒவ்வொரு சூழலையும் கடக்கும் போதும் கணவன் இருந்தால் என்ன செய்வான் என்றெண்ணியே, அவ்வெண்ணப்படியே வாழ்பவர்.
ஜீவாவின் தலை ஆமோதிப்பாக அசைய,
“எல்லாரும் எப்படி இருக்கீங்க?”என்று கேட்க,
“நல்லாயிருக்கோம்” என்றவன் பெருமூச்சோடு தலை நிமிர்ந்தான்.
“மிசஸ். பிரசன்ன வர்தினி உங்ககிட்டயும் நான் விசாரிக்கணும்” என்று சொல்ல,
அமராவதி, “ஜீவா! பிரசன்னா கிட்ட இப்படி பேசாத” என்றார்.
“சாரி மேம்! விசாரணைனு வந்துட்டா எல்லாரையும் நான் கேள்வி கேட்டுத்தான் ஆகணும்” என்றான்.
“கொஞ்சம் தனியா பேசலாமா?” என்று பிரசன்னாவைப் பார்க்க, பெரியம்மா முன் இவன் எதையும் கேட்டுவிடக் கூடாதென்று, அவளும் தள்ளி வந்தாள்.
பிரசன்னவர்தினிக்கு ஜீவபிரகாஷின் பேச்சு பிடிக்கவில்லை. தனக்கே இப்படியென்றால், தன் கணவனை சொல்லவே வேண்டாம். மகேந்திரனுக்கு மரியாதை மிகவும் முக்கியம். அவன் இயல்பான பேச்சே எடக்கு மடக்காக இருக்க, இப்படி பேசினால் அவ்வளவுதான். இந்த ஜீவா என்ன பேசினானோ, அதற்குத்தான் தன் கணவன் அலைப்பேசியில் தாம் தூம் என்று குதித்தான் எனப் புரிந்தது.
“என்ன கேட்கணுமோ கேளுங்க ஸர்.” என்ற பிரசன்னாவின் குரலில் எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அவரோட ஆபிஸ்ல இருந்திருப்பார், எனக்கு சரியா ஞாபகமில்ல.”
“நீங்க எங்க இருந்தீங்க?”
“என்ன எதுக்கு இந்த கேள்வி கேட்குறீங்க?” கடுங்கோபத்தோடு பிரசன்னா ஜீவாவைப் பார்த்தாள்.
திலக்கின் விபத்திற்குப் பின் வீடே நன்றாக இல்லை. அதில் பிரசன்னாவின் மனநிலையும் பெரும்பான்மை இல்லாத அரசு போல் நித்தமும் ஊசலாடிக்கொண்டிருந்தது. இதில் இப்படியான கேள்விகள் காயப்படுத்தின.
“பாலிடிக்ஸ் ஹேஸ் நோ மெர்சி(அரசியலுக்கு இரக்கமில்லை). ஸோ நீங்க எங்க இருந்தீங்கனு சொல்லுங்க. நீங்களும் கட்சில இருக்கீங்கதானே?” ஜீவா விடவே இல்லை. திலக்கிற்காக, அவன் அப்பாவின் நண்பன் கார்வண்ணனுக்காக, அவன் அப்பாவிற்காக அவன் இந்த வழக்கைத் தீர ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஏதோ ஒருவகையில் தான் பார்க்காத கார்வண்ணன் மாமாவுக்கு இதனை செய்ய நினைத்தான்.
“நான் வீட்ல இருந்தேன்”
பிரசன்னா திலக்கின் விபத்தைக் கேள்விப்பட்டபோது வீட்டில் இருந்தாள். பிரபஞ்சன் அழைத்துச் சொல்லியிருந்தான். அடுத்த நிமிடம் கணவனுக்கு அழைக்க, அவன் தெரியும் என்றான்.
அது எதார்த்தமானதா இல்லை, அவன் எதிர்ப்பார்த்ததா என்று தெரியாத தலைவலி இன்றும் அவளை விட்டுப் போகவில்லை. இயல்பான ஒரு நாளின் முக்கியத்துவம் அது இயல்பின்றி போகும்போதே புரிகிறது. அமைதியாக கழிகின்ற ஒரு பொழுதின் மகத்துவம், சச்சரவுகளை எதிர்கொள்ளும்போதுதான் விளங்குகிறது. பிரசன்னாவிற்கும் அந்த நாள் அப்படியானது.
வீட்டில் அவர்கள் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவளை அலைப்பேசி தொந்தரவு செய்தது. ரஞ்சன் சொன்ன செய்தியில் அதிர்ந்தவளுக்குக் கண்கள் உடைப்பெடுக்க, பயத்தில் அழுகை வந்தது. உடனே கணவனைத் தேடினாள். அவனுக்கு அழைத்துச் சொல்ல,
“தெரியும்” என்றான் ராஜமகேந்திரன்.
“நான் நேரா ஹாஸ்பிட்டல் போறேன். பக்கத்துல இருக்கேன். நீ ட்ரைவரோட வா” என்று சொல்லி வைத்தான். மருத்துவமனையில் மிகவும் சாதாரணமாக நின்றவன், பிரசன்னா வரவும்
“டீரிட்மெண்ட் போயிட்டிருக்கு.” என்றான். அழுகை கூட நின்று, அதிர்வில் உறைந்திருந்த பெரியம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் பிரசன்னா. தாத்தாவும், அப்பாவும் மருத்துவரிடம் ஏதோ பதட்டமாகப் பேசிக்கொண்டிருக்க, பிரபஞ்சன் பயத்தோடு நின்றான்.
திலக் என்றால் பிரபஞ்சனுக்கு அவ்வளவு பிரியம். அண்ணன், தோழன், ஆசான் என்று எல்லாவற்றிற்கும் அவன் திலக்கைத் தேடுவான். அண்ணனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்று அவன் பயத்தில் நிற்க, பிரசன்னாவின் கணவனோ சிறிது நேரம் சும்மா நின்றவன் கிளம்ப, பிரசன்னா அதனைப் பார்த்து அவனிடம் சென்றாள்.
“எங்க போறீங்க?” என்றிட
“இங்க இருந்து என்ன பண்ண போறேன்? எனக்குக் கட்சி ஆபிஸ்ல வேலையிருக்கு. திலக்குக்கு இப்படி ஆச்சு, அடுத்தென்னனு அங்க பேச்சுப் போகுது. இப்போ நான் அங்க இருக்கறது முக்கியம்” என்று பேசியவனிடம் பதில் பேசக் கூட தெம்பில்லை.
கணவன் விரும்பும் அரசியல் இத்தனை மோசமானதா? இல்லை தான் விரும்பும் கணவன் மோசமானவனா என்ற திகைப்பில் நின்றாள் பிரசன்னா. பிரசன்னாவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது ராஜமகேந்திரன் சென்றான்.
கணவன் மீது முதல்முறை கசப்புத் தோன்றியது. இப்போதும் அந்த கசப்பின் சுவை குணம் மாறாமல் தெரிய, ஜீவாவின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் தந்தாள்.
“ஓகே! உங்க கணவருக்கும் அண்ணாவுக்கும் டெர்ம்ஸ் எப்படியிருந்தது?” என்று கேட்க, என்ன சொல்வாள்? உண்மையைச் சொன்னால் கணவன் மீதே அத்தனை சந்தேகமும் திரும்பும். ஏற்கனவே அவன் மீதுதான் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கின்றனர்.
பொய். அதனை சொல்லி என்ன பயன்? தன் கணவன் செய்திருக்கக் கூடாது என்று அத்தனை முறை வேண்டியவளுக்குக் கூட முழுமையான நம்பிக்கை இல்லை.
வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்பவன். இதனை செய்திருக்க மாட்டானா? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“சொல்லுங்க பிரசன்னா” என்று எதிரே நின்று உயிரை வாங்கினான் ஜீவா.
“அண்ணாவும் அவரும் பெருசா பேசிக்க மாட்டாங்க. மத்தபடி சண்டையெல்லாம் போட்டதில்லை” என்றவளுக்கு அவன் கேள்விகள் கணவன் மீதான நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தது.
“ஓகே! உங்க சொந்த அண்ணா பிரபஞ்சன், அவர் எப்படி?” என்று கேட்க,
“இங்க பாருங்க ஏசிபி. நீங்க இந்த கேஸ் விசாரிக்குறேன்னு வீட்ல இருக்கவங்க எல்லாரையும் இழுக்காதீங்க. ரஞ்சன் எங்க பெரியண்ணாவை ரோல் மாடலா பார்க்கிறவன். இப்படி என்னைக் கேட்ட மாதிரி ரஞ்சண்ணாவைக் கேட்டுடாதீங்க. அவனால தாங்க முடியாது. அவனுக்கு எந்த மோடீவும் இல்லை.”
“யார் செஞ்சாங்கனு கண்டுபிடிக்க முடியலன்னா எங்க வீட்ல உள்ளவங்களையே சொல்லி தப்பிச்சிக்க பார்க்காதீங்க.” கோபத்தின் மொழிபெயர்ப்பாக பிரசன்னாவின் வார்த்தைகள் வந்தன.
“ஓகே! என்னோட கடமையைத்தான் நான் செய்றேன்.” என்றவன் குரலை செருமிக்கொண்டு
“இங்க பாருங்க பிரசன்னா, என்னோட தாத்தா செயலை வச்சு, இன்னமும் எங்கப்பாவைப் பேசுறது நல்லா இல்ல. ஒருவேளை நீங்க அவரை சந்திக்கிற நிலைமை வந்தா, இப்படி பேசிடாதீங்க. ஒரு ரெக்வெஸ்டா நான் கேட்குறேன்” என்ற ஜீவாவின் குரலில் அப்பாவின் மீதான பாசம் வெளிப்பட்டது.
பிரசன்னா அப்படி யாரையும் நோகப் பேசுபவள் இல்லை. ஆனால் சூழ்நிலை அவளை அவளாக இருக்க விடவில்லை.
பிரசன்னா தலையசைக்க, “அண்ட் உங்க அண்ணாவைப் பத்தி பேசும்போது இருந்த நம்பிக்கை உங்க கணவரைப் பத்தி பேசும்போது ஏன் இல்லைனு எனக்குள்ள ஒரு கேள்வி ஓடுது. உங்களுக்கு அந்த கேள்விக்குப் பதில் தெரிஞ்சா எனக்குச் சொல்லுங்க” என்றவன் கிளம்பிவிட்டான்.
ஜீவா சென்றதும், பிரசன்னா பெரியவர்கள் இருக்குமிடம் நோக்கிச் சென்றாள்.
“கொஞ்ச நாளா உன்னை மகேந்திரனோட பார்க்க முடியல, அவனையும் காணும்.” என்ற அமராவதி பெருத்த சங்கடத்தோடு,
“பிரசன்னா மகேந்திரன் பத்தி ஜீவா சொன்னது..?” என்று இழுக்க
“பெரியம்மா! அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்” என்றாள் உடனடியாக.
“இந்த வாழ்க்கை எனக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லாம போற பெரிய தண்டனையைக் கொடுத்துடுச்சு பிரசன்னா.” என்றார்.
“மகேந்திரன் பிசியா இருக்கார் பெரியம்மா. எங்களுக்குள்ள கொஞ்சம் சண்டை, அதான் நான் நம்ம வீட்ல இருக்கேன்” என்றும் சொல்ல, சில மாதங்கள் கழித்துதான் அதுவே அமராவதிக்குத் தெரிந்தது.
“சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடாதடா.” என்ற அமராவிடம்
“பெரியம்மா! அன்பழகன் அங்கிள் பையன் எப்படி நம்ம அண்ணா கேஸை ஒழுங்கா விசாரிப்பான்? இந்த தாத்தா ஏதோ செஞ்சு ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசி இந்த ஆள் வந்திருக்கார்” என்று எரிச்சலாக பேச, அமரா கண்டிப்பான குரலில்,
“உன் திலக் அண்ணா வயசு அவனுக்கு. மரியாதையா பேசணும். அவனும் உனக்கு அண்ணா மாதிரி. தாத்தா தெரிஞ்சிருந்தா அவனைப் போட்டிருக்க மாட்டார். இப்போ அதனால என்ன? அவன் கிட்ட நேர்மையைப் பார்த்தேன். அன்பழகன் அண்ணா உன் பெரியப்பாவை நான் கொன்னேன்னு நினைச்சு, என்னையே கொல்லப் பார்த்தவர். அப்படிப்பட்டவர் பையனும் கண்டிப்பா நேர்மையா இருப்பான். ப்ரண்டுக்காக அவ்வளவு தூரம் போக நினைச்சவர், ப்ரண்டு பையனுக்காக என்ன வேணும்னாலும் செய்வார். அவர் பையனுக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்குன்னா இவன் கடமையைத் தாண்டி நிச்சயம் திலக் இப்படியாக யார் காரணம்னு கண்டுபிடிச்சிடுவான்” என்றார் நம்பிக்கையாக.
“எனக்கு என் புள்ள சீக்கிரம் கண்முழிச்சுப் பழையபடி இருந்தா போதும் நர்மதா.” என்றார் அமராவதி ஆயாசமாக.
மகேந்திரன் வீட்டில் இருந்த பாத் டாப்பில் குளித்து வந்தான். ஈரம் சொட்டச் சொட்ட நின்றவனுக்கு உள்ளத்தின் கொதிப்பு அடங்கவில்லை. பாத்ரோபோடு நின்றவன், அவனது உடை இருக்கும் வார்ட் ரோபைத் திறக்க, அதில் பிரசன்னாவின் ஜீன்ஸ், டீஷர்ட் மாற்றி அடுக்கப்பட்டிருந்தது.
மகேந்திரனுக்கு அது பிடிக்காது. அவனது இடத்தில் அடுத்தவரின் பொருட்கள் வைப்பது சுத்தமாக ஆகாது. அவளிடம் சொன்னால்,
“உங்க கப்போர்ட் ரொம்பப் பெருசு. என் வெஸ்டர்ன் டிரஸ் அங்க வச்சுருக்கிறதால என்ன பிரச்சனை?” என்று கேட்டு அங்கே வைத்தாலும், மகேந்திரன் அதனை எடுத்து, புடவைகள், சுடிதார்கள், இன்னும் பிற என்று இடம்கொள்ளாத மனைவியின் வார்ட் ரோபில் அதனை தூக்கி எறிந்தவனுக்கு வியன் சொன்னதே மனத்தில் ஓடியது.
மனைவியை நினைத்த கணத்தில் அவளிடமிருந்து அழைப்பு. மாலை ஜீவா கேட்ட கேள்வியே அவளை குடைந்தது. திலக் இல்லையென்றதும் உடனே எப்படி அவனுக்கு சீட் கிடைத்தது? என்னவோ செய்திருக்கிறான் என்று மட்டும் திண்ணமாக புரிந்தது.
கல்லூரியில் அவள் எலெக்ஷனில் நின்றபோது அவளுக்கே தெரியாமல் அவளை ஜெயிக்க வைத்தவன். அவனுக்காக எதுவும் செய்யாமலா இருந்திருப்பான்?
“ஹலோ! உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்? உண்மையைச் சொல்லணும். சொன்னா நான் உடனே அங்க வந்துடுவேன்” என்று மெல்ல பொறுமையை வரவழைத்துக் கொண்டு பிரசன்னா பேச,
“உன்னை யாரு இங்க வர சொன்னா?” என்று கேட்டு, அவளை வெறுப்பேற்றினான்.
“மகேந்திரன்!” என்று கடுப்பாக அவன் பெயரை உச்சரித்தவள், “ஓகே! அண்ணா ஆக்சிடென்ட் ஆனப்போ நீங்க எப்படி அதே ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருந்தீங்க? வீட்ல இருந்து எனக்குத் தெரியறதுக்கு முன்னாடி எப்படி உங்களுக்கு விஷயம் தெரிஞ்சது?” என்று வரிசையாகக் கேள்விகள் கேட்டாள். ஜீவாவைப் பார்த்தால் நிச்சயம் யார் தவறு செய்தது என்று கண்டுபிடித்துவிடுவான் என்று தோன்றியது.
தன் கணவன் எதுவும் செய்யவில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தால் நம்பிக்கையாக இருப்பாள். அவனிடம் எப்போது கேட்டாலும் உண்மையைத் தவிர அத்தனையும் சொல்பவனிடம் எப்படி அவளுக்கு நம்பிக்கை வரும்?
அவன் பதில் சொல்லும் முன், இதுதான் வாய்ப்பு என்று அடுத்தடுத்து கேள்விகள் தொடுத்தாள்.
“எந்த தப்பும் செய்யாம நேர்மையா நீங்க சீட் வாங்கினீங்களா? அப்படி செஞ்சிருந்தா என்ன செஞ்சீங்க?” என்றெல்லாம் கேட்க,
மகேந்திரனின் பதிலில் அவளுக்கு அழுவதா கோபப்படுவா என்றே தெரியவில்லை.
“நீ என்ன நினைக்கிற?”
“நீங்க எதையோ எங்கிட்ட மறைக்குறீங்க”
“லெட் இட் பீ” என்றான் இயல்பாக. ஆம் இல்லை என்ற நேரடியான பதிலில் எல்லாம் தெளிந்துவிடும் என்று நம்பினாள் பிரசன்னா. ஆனால், இல்லை என்றாலும் அவள் மனம் நம்பாது என்றும் அவளுக்குத் தெரியும்.
மகேந்திரன் தவறு செய்தான். அதற்காக வருந்தவும் செய்கிறான். ஆனால் போரில் நியாயம் பார்க்க முடியாதே! அவன் மனைவியோ நியாயமா அவனா என்றால் நியாயத்தின் பக்கமல்லவா நிற்பாள்.
“இப்படி பேசாதீங்க. உண்மையைச் சொல்லுங்க, வீட்ல இருந்து யாரும் உங்ககிட்ட நியுஸ் சொல்லல, ஈவன் மீடியாவுக்கே எந்த ஹாஸ்பிட்டல்னு நியூஸ் போகல. உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?”
மகேந்திரனோ எரிச்சலில் இருந்தான். அவள் இல்லாத எரிச்சல். அவள் பேசியதில் எரிச்சல். அவள் தள்ளி இருப்பதில் எரிச்சல். நம்பாததில் எரிச்சல் என்று குளித்தும் குளிராத நிலையில் இருந்தவன் ஏசி குளிரை அதிகப்படுத்தினான்.
“உன் கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. உனக்கு நம்பிக்கை இல்லாம தானே போன. அங்கயே இரு, ஐ டோண்ட் கேர்” என்றான் திமிராக.