Skip to content
Post Views: 4,241
அத்தியாயம் 6
“ஏன் அருணா, காலையிலே சப்பாத்தி செஞ்சுட்டு இருக்க? பிரட் ஆர்டர் போட்டிருக்கலாமே?” என்று கூறிக்கொண்டே வந்து உணவு மேஜையில் அமர்ந்தான் கந்தகுரு. ஒரு பிரெட்டும் ஒரு கிலோ கோதுமை மாவும் ஒரே விலை. ஆனா, ஒரு கிலோ கோதுமை மாவு நம்ம இரண்டு பேருக்கும் ஒரு வாரம் வரும்.”
Advertisement
“ஆங்” என்று விழித்தான் குரு.
கார்டு மூலம் சம்பளம் வரும். கணக்கு பார்த்து இதுவரை செலவு செய்தது இல்லை இருவரும். கல்யாணம் ஆன நாளில் இருந்தே அவசர வாழ்கை. இவர்கள் அனாவசிய செலவுகள் எப்பொழுதும் செய்வது இல்லை தான். ஆனால் தினசரி செலவுகளை நின்று யோசித்து செய்வது என்பதும் கிடையாது.
Advertisement
Advertisement
“நாம நம்ம வாழ்கை முறையை இனி கொஞ்சம் கொஞ்சமாக மாத்திக்கனும் இல்லையா குரு? உங்களுக்கு இதுல ஒன்னும் வருத்தம் இல்லையே?” என்றாள் அருணா சற்றே இறங்கிய குரலில்.
“இனி இப்படி யோசிக்காத அருணா. இது உன் முடிவு மட்டும் இல்லை. இது நம்ம முடிவு. அதனால வர நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நம்ம இரண்டுபேருக்கும் தான். நீ இதை நல்லா மனசுல வாங்கிக்கோ. இந்த முடிவு எப்படி வேணும்னாலும் போக வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை தவறாய் போனால், அதுக்கு நீ காரணம்னு குற்ற உணர்ச்சி உனக்கு வரவே கூடாது. நான் முழு மனசா, நீ சொன்னதை கேட்டு தான் இதுக்கு சம்மதிச்சேன், புரியுதா?”
Advertisement
அருணாளினிக்கு உண்மையில் குருவை கட்டாயப் படுத்துகிறோமோ என்ற சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. குருவின் பேச்சு அவளுக்கு ஆசுவாசத்தை கொடுத்தது.
“அடுத்து என்ன அப்படின்னு சீக்கிரம் முடிவு செய்யனும்” என்றான் குரு.
“சாப்பிட்டுட்டு பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நான் செய்த சப்பாத்தி ஆறுனா சாப்பிடறது கஷ்டமாயிடும்” என்று கூறி இருவருக்கும் தட்டுகளில் சப்பாத்தி வைத்து தக்காளி தொக்கு வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“அவ்வளவு மோசமில்லை அருணா, நல்லா தான் இருக்கு” என்று சாப்பிட்டான்.
“தேங்க்ஸ்” என்றாள் அருணா முகம் கொள்ள புன்னகையோடு.
சமையலுக்கு காலை மாலை இருவேளையும் ஆள் வைத்திருந்தார்கள். அவசரத்திற்கு இருவரும் சமைப்பார்கள். அதை ரசித்து சாப்பிடவோ பாராட்டவோ இருவருக்கும் நேரம் இருந்ததில்லை.
“அருணா, நீ இப்படி சிரிச்சா ரொம்ப அழகா இருக்க. எப்பவும் சிரிச்சிட்டே இரு” என்றான் குரு மென்மையாக.
சாப்பிட்டு முடித்து இருவரும் சேர்ந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.
“அருணா, நம்ம எந்த ஊருக்கு போறதுன்னு முடிவு செய்யலாமா?”
“நீங்க எந்த எந்த ஊர் யோசிச்சு வச்சிருக்கீங்க?”
“சென்னை, மும்பை,ஹைதராபாத், இது மாதிரி சிட்டிக்கு போனா வேலை கிடைக்கிறது ஈஸியா இருக்கும். ஆனா மனசுக்கு பிடிச்ச ஊர்னா எங்க மயிலாடுதுறை தான்”
“நாம தான் நம்ம படிப்பை உபயோகிக்க வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கோமே? அப்புறம் சிட்டிக்கு போறது எதுக்காக? ”
“அதான் காசு எல்லாத்தையும் கொடுத்துட்டோமே? இப்ப என்ன பிரச்சனை?”
“நம்ம இந்த படிப்பை எல்லாம் விட்டுட்டு வேற எதாவது செய்யலாம் குரு?”
“வேறன்னா, பிசினஸ் மாதிரியா? பிசினஸ் செய்றதுன்னா என்ன பிசினஸ் அப்படின்னு முதலில் யோசிக்கணும். அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி ஊருக்கு போகனும். நம்மக்கிட்ட இருக்க காசை வச்சு என்ன செய்யலாம்னு யோசிக்கனும். இல்ல பேங்க் லோன் கேக்க முடியுமான்னு பார்க்கனும் ”
“நிப்பாட்டு, நிப்பாட்டு “
“ஏன் அருணா? இதுயெல்லாம் யோசிக்கணும் தானே “
“எல்லாம் ஒண்ணா யோசிக்க வேணாம். மெதுவா ஒன்னொன்னா பாப்போம். முதலில் எந்த ஊருக்கு போறதுன்னு முடிவு செய்வோம். அப்புறம் என்ன தொழில்னு பார்க்கலாம்”
“சரி, நீ எந்த ஊர் எல்லாம் யோசிச்சிருக்க? ஊர் செலக்ட் பண்ணிட்டா அப்புறம் என்ன பிசினஸ்ன்னு அதுக்கு ஏத்த மாதிரி கூட யோசிக்கலாம்.”
“நான் ஒரே ஒரு ஊர் தான் யோசிச்சு வச்சிருக்கேன். நீங்க சொன்ன நாலு ஊரும் நமக்கு ஒத்து வராது. மயிலாடுதுறை நல்ல ஊர் தான். ஆனா அங்கே போனா நம்மளால நம்ம இஷ்டத்துக்கு எதுவும் செய்ய முடியாது. இங்க இருக்கிறதைவிட நிலைமை மோசமா தான் இருக்கும். அதனால நான் சொல்ற ஊருக்கே போவோம்”
“எந்த ஊர் அருணா”
“ஹல்த்வானி”
“என்ன வாணி? எங்க இருக்கு அந்த ஊர்? நான் கேள்வி பட்டதே இல்லையே?”
“உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கு.”
குரு மனைவியை அதிர்ச்சியாக தான் பார்த்தான்.
“நான் இந்தியா மேப்பில் கூட அந்த ஸ்டேட் எல்லாம் கவனிச்சு பார்த்தது இல்லை. சின்ன வயசுல வேலைக்கு சென்னை பெங்களூரு போகணும்னு நினைச்சிருக்கேன். அப்புறம் ஆபிஸ் போகும் போது, அமெரிக்கா, சிங்கப்பூர் அப்படி போக வாய்ப்பு கிடைக்குமான்னு நினைச்சிருக்கேன். வயசானதுக்கு அப்புறம் மயிலாடுதுறைல செட்டில் ஆகணும்னு யோசிச்சிருக்கேன். ஆனா உத்தரகண்ட் எல்லாம் நினைச்சு கூட பார்த்தது இல்ல அருணா”
“நான் கூட தான் நினைச்சு பார்த்தது இல்ல. ஹல்த்வானி, நம்ம கம்லா பாட்டி ஊர். நல்ல ஊர் அப்படின்னு அன்னிக்கு பேசிகிட்டு இருக்கும் போது சொன்னாங்க. அவங்க சொல்லும்போது, நம்ம அங்க போலாம்னு மனசுல ஒரு எண்ணம் வந்தது”
“ஓ..” சற்று ஆசுவாசம் வந்தது அவனுக்கு. கம்லா பாட்டி மீது கடந்த சில நாட்களில் அவனுக்கு நிரம்ப மரியாதை வந்திருந்தது.
“பாட்டி கிட்ட இது சம்மந்தமா பேசுனியா? என்ன சொல்றாங்க?”
“இப்படி எல்லாத்தையும் வித்துட்டு வரோம்னு சொன்னா யாராவது ஒத்துப்பாங்களா? அது எல்லாம் இன்னும் பேசல. நாம சுத்தி பார்க்கிற மாதிரி ஒரு மாசம் போவோம். அங்கே போய் மத்ததை பார்த்துப்போம்”
“அங்கே நமக்கு ஒத்து வரலைன்னா? வேற யோசிக்கனும்ல அருணா, கையில மொத்தமா நாலு லட்சம் தான் இருக்கு. விக்கிற விலைவாசியில் நாலு மாசத்துல செலவாயிடும்”
“அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு என்ன சொன்னீங்க?”
“என்ன சொன்னேன்?”
“உங்க சொக்கன் தாத்தா என்ன சொன்னாங்கன்னு சொன்னீங்க?”
“நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்”
“அதான். இனிமே நல்லதே நடக்கும்னு நினைப்போம், நம்புவோம்.ஓகே ”
மனைவி கூறியதை கேட்டு நாலா பக்கமும் தலையை உருட்டினான், “தாத்தா, நீ தான் துணை” என்று மனதிற்குள் தாத்தாவிடம் வேண்டிக்கொண்டான்.
அன்றே கம்லா பாட்டியிடம் இவர்கள் ஒரு மாதம் பாட்டியின் ஊரிற்கு மனமாற்றத்திற்காக வர விரும்புவதாக கூறினாள்.
பாட்டி மகிழ்ச்சியாக வருமாறு அழைத்தார்.
அங்கே தங்குவதற்கு வாடகை வீடு கிடைக்குமா? என்று விசாரித்தாள். ஒரு மாதம் தானே, எங்க வீட்லயே இருக்கலாம் என்றார் பாட்டி.
“இல்ல பாட்டி, தனியா இருந்தா கொஞ்சம் பிரைவசி கிடைக்கும்”
“நாளைக்கு என் பொண்ணு வரா, இன்னும் நாலு நாள்ல நான் புறப்படலாம்னு இருக்கேன். அவ வந்ததும் பேசிட்டு, ஊரிலும் விசாரிச்சிட்டு சொல்றேன். நீங்க எப்போ வர்றீங்க? என் கூடவே வந்துடறீங்களா?”
“டிக்கெட் எல்லாம் எடுக்கனுமே பாட்டி. கிடைச்சதும் நாங்களே வந்துடறோம்”
பாட்டி சற்று நேரம் பேசிவிட்டு சென்றார். எப்போ செல்வது? எப்படி செல்வது என்று அருணாவும் குருவும் பேசத் தொடங்கினார்கள்.
அதற்குள் வீட்டில் இருந்து கான்பரன்ஸ் கால்.
“என்ன குரு, ஊருக்கு போயிட்டு ஒரு போன் கூட பண்ணல” என்று காரசாரமாக தான் ஆரம்பித்தார் அஞ்சனா.
“என்னிக்கு அமெரிக்கா போறீங்க, வீடு எல்லாம் காலி பண்ணனும் இல்ல? என்ன வேலை இருக்குன்னு லிஸ்ட் போட்டுட்டீங்களா? நாங்க எப்ப வரனும்? எதுவுமே சொல்லல” என்றார் மஞ்சு.
“இவங்க இரண்டுபேரும் சொல்லி தான் நம்ம ஊர்ல சூரியன் கூட உதிக்கும்னு நினைப்பு” என்றாள் அருணா முணுமுணுப்பாக.
“இன்னும் ஒரு வாரத்துல கிளம்பனும்” என்றான் குரு.
“என்ன குரு நீ, ஒரு வாரம் நாலு நாள்னு சொல்லிட்டு இருக்க? என்ன டேட், என்ன டைம்ன்னு கரெக்டா சொல்லு. டிக்கெட் விவரம் எல்லாம் மெசேஜ் அனுப்பு.” என்றார் அஞ்சு.
“நாங்களே பார்த்துகிறோம் அம்மா, எத்தனை தடவை சொல்றது?”
இவன் சொல்வதை வழக்கம் போல இரண்டு பேரும் கண்டுகொள்ளவில்லை.
“வீட்டு சாமான் எல்லாம் பேக் பண்ணி ஊருக்கு அனுப்பிடுங்க. திரும்ப வரமாறி இருந்தா, எல்லாம் திரும்ப வாங்க முடியாது இல்ல. ஒரு வேலை அங்கேயே செட்டில் ஆனீங்கனா நாங்க இங்க பார்த்து வித்துக்கிறோம்” என்றார் மஞ்சு.
“நீங்க என்ன செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்கீங்க?” என்றார் அஞ்சு.
“நாங்க இன்னும் முடிவு செய்யல” என்று தான் ஆரம்பித்தான்.
“நாங்க பார்த்துப்போம் பார்த்துப்போம்னு பந்தாவா சொன்னா மட்டும் போதுமா?” என்று தொடங்கினார் அஞ்சு.
“வெறும் வாய் தான் அஞ்சு, இரண்டு பேருக்கும் என்னிக்கு தான் பொறுப்பு இருந்திருக்கு?”
“அத சொல்லு மஞ்சு, வாய் மட்டும் எட்டு ஊருக்கு போது இப்ப எல்லாம். செயல் என்னமோ பூஜ்யம் தான்”
இவர்கள் இருவருமே மேலும் சில நிமிடங்கள் பேசினார்கள்.
“சரி, குரு, நல்ல பேக்கர்ஸ் அன்ட் மூவேர்ஸ்கிட்ட சொல்லி, மயிலாடுதுறை பாட்டி வீட்டுக்கே சாமான் எல்லாம் அனுப்பிடுங்க. என்னைக்கு வரும்னு சொன்னா, அப்பாவை போய் இறக்கி வைக்க சொல்லிடறேன்” என்றார் அஞ்சு.
“சரிம்மா”
“பாரு குரு, நீங்க வேண்டாம்னு சொன்னாலும் எங்களால சும்மா இருக்க முடியாது. நான் பெத்துக்கு தான் புரியலை, நீயாவது புரிஞ்சுக்கோ. அவளுக்கும் எடுத்து சொல்லு” என்றார் மஞ்சு.
“சரித்தை”
“அங்கே அமெரிக்காவுல தங்கற ஏற்பாடு எல்லாம் பண்ணிடீங்களா?”
“தங்கிறது ஆபிஸ்ல ஏற்பாடு பண்ணிடுவாங்கம்மா”
“அங்கே என்ன எல்லாம் எடுத்துட்டு போக போறீங்க. எவ்வளவு எடுத்து வைக்கணும் எல்லாம் பார்த்துட்டீங்களா?”
“இனிமேல் தான் அத்தை பார்க்கனும்”
“இங்க என் பிரண்ட் பையனும் மருமகளும், இப்ப தான் மூணு மாசம் முன்னாடி அமெரிக்கா போனாங்க. அவங்க என்ன பேக் பண்ணாங்கன்னு லிஸ்ட் கேட்டு எழுதி வச்சிருக்கேன். இப்ப அனுப்பி வைக்கிறேன். பார்த்து அதே மாதிரி நீங்களும் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிடுங்க. எங்க இரண்டுபேருக்கும் அனுப்பி வைங்க. நாங்க சரி பார்த்ததும் பேக் பண்ணிடுங்க.”
“சரித்தை”
“விளையாட்டு தனமா இருக்காதீங்க குரு. அவ்வளவு தூரம் போறீங்க. பார்த்து எல்லாம் செய்யனும். வேலைக்கு ஆள் யாராவது கூப்பிட்டுகோங்க குரு. நீங்களே பார்க்க முடியாது”
“சரிம்மா”
“சீக்கிரமா வேலையை ஆரம்பிங்க. வேற ஏதாவது சொல்லனும்னா திரும்ப கூப்பிடறோம்”
“சரித்தை.. சரிம்மா..”
அருணா உம்மென்று அமர்ந்திருந்தாள். முதலில் இந்த போனுக்கு ஒரு முழுக்கு போடணும்னு மனதிற்குள் குறித்து கொண்டாள்.
‘எப்படி இங்கே இருந்து செல்வது? இவர்களிடம் இருந்து சொல்லாமலே செல்வது அவ்வளவு சுலபம் இல்லை போலவே” என்று கவலையாக மனைவியை பார்த்தான்.
அதையே “எப்படி இவங்ககிட்ட எல்லாம் சொல்லாம செல்லமுடியும் அருணா” என்று கேட்டான்.
“நம்ம இரண்டு பேரும் உருகி உருகி காதலிப்போமா?”
“என்ன சம்பந்தம் இல்லாம பேசுற? நாம ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சிட்டு தானே இருக்கோம்”
“கணவன் மனைவி அப்படின்ற பந்தத்துல வலுக்கட்டாயமா நம்மள தள்ளிட்டாங்க. நமக்கு பிடிச்சிருந்தது, பாசமா இருந்தோம், இருக்கோம். ஆனா, நம்ம இனிமே புதுசா காதலிப்போம். அத்தை பொண்ணு, மாமா பையன் அப்படி இல்லாம, அருணாளினியா கந்தகுருவா மட்டும். எந்த கட்டுப்பாடுமில்லாம, புதுசா தினுசா காதலிப்போமா?”
“காதலிப்போமே”
“லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணிகிறவங்களுக்கு ஐடியா அருவியா கொட்டுமாம்”
“ஆங்..”
“நாம கல்யாணம் பண்ணி, எங்கம்மா உங்கம்மா நடுவுல சிக்கி, நொந்து நூடுல்ஸ் ஆன கதை எல்லாம் வேற. இப்ப காதலிக்க போறோம். எப்படி காதலிக்க போறோம்”
“புதுசா.. தினுசா.. “ என்றான் அருணா கூறியதை போலவே.
“கரெக்ட். அதுக்காக இப்ப ஓடி போக போறோம்ன்னு நினைச்சு யோசிங்க. ஐடியா வரும்”
“அருணா, நான் ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா?”
“சொல்லுங்க”
“இந்த ஐடியா எல்லாம் எனக்கு வரும்ன்னு தோணல. நான் எப்படி புதுசா தினுசா லவ் பண்றதுன்னு வேணா யோசிக்கிறேன். எங்க அம்மா உங்க அம்மவை எல்லாம் எப்படி சாமளிக்கிறது? எப்படி இங்க இருந்து போறது, இது எல்லாம் நீயே யோசி. நீ சொல்றதை நான் அப்படியே செய்றேன்” என்றான் பாவமாக.
“ஹா ஹா ஹா.. அப்படியே ஆகட்டும் குருவே”
அதன் பிறகு அருணா முழு மூச்சாக களத்தில் இறங்கினாள்.
சாமான்களை எல்லாம் முதலில் ஊருக்கு அனுப்ப தனியாக பிரித்து வைத்தார்கள். அத்யாவசிய பொருட்களை மட்டும் தங்களுடன் எடுத்து செல்ல தனியாக எடுத்து வைத்தார்கள்.
ஊருக்கு வருகிறோம் என்ற அம்மாக்களிடம், “ஒரு வாரம் லீவ் போட்டு வாங்க. எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்திட்டு, எங்களை சென்ட் ஆப் பண்ணிட்டு போங்க” என்றாள்.
“ஒரு வாரம் லீவ் கிடைக்காது” என்றனர் ஒன்றுபோல.
“நாங்க போன்ல எல்லாம் சொல்றோம். கடைசியா நீங்க போற அன்னிக்கு வந்திடறோம்” என்றனர்.
“எதுக்கு டாட்டா காட்டவா. வேலை எல்லாம் போன்ல செய்ய முடியும்ல, அப்ப டாட்டாவையும் போன்லேயே காட்டுங்க, போதும்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டாள்.
“ஆங்..” என்று பார்த்தான் குரு.
எப்படி என்று புருவங்களை உயர்த்தி கணவனிடம் கேட்டாள்.
“அம்மாடி, நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல“ என்று கூறி மனைவியை தோளோடு அணைத்து கொண்டான்.
“சரி, அடுத்து நமக்கு பிளைட் டிக்கெட் புக் பண்ணனும் அருணா”
“எதுக்கு?”
“நம்ம போறதுக்கு தான்”
“நம்ம பட்ஜெட்க்கு ட்ரெயின் தான் சரிவரும்“
“அதுவும் சரி தான், எவ்வளவு நேரம் ஆகும் பார்த்தியா? இரு நான் பார்க்கிறேன்” என்று கந்தகுரு பார்க்க தொடங்கினான்.
“என்ன அருணா இது? அந்த வானி ஊருக்கு நேரடியா இங்க இருந்து ட்ரெயின் இல்ல போலவே, நீ போய் பாட்டிகிட்ட கேட்டுட்டு வர்ரீயா? எப்படி போறது பெஸ்ட் ஆப்ஷன்னு”
“அது எல்லாம் நான் கேட்டு வச்சிருக்கேன். இங்க இருந்து டெல்லிக்கு டிக்கெட் போடு. அங்க இருந்து பஸ்ல நம்ம ஊருக்கு டிக்கெட் புக் பண்ணிடு. பஸ் இல்லனாலும் டாக்ஸி கிடைக்குமாம்.”
“நம்ம ஊருக்கா?”
“ஆமா. என் மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டேன். நம்ம ஊரு ஹல்த்வானி. சீக்கிரம் டிக்கெட் போடு”
“ஆமாம், பாட்டி எப்ப போறாங்க?”
“பாட்டி அவங்க மருமகனோடு பிளைட்ல நாளைக்கு கிளம்பிடறாங்க”
பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தேறியது. பொருட்கள் மயிலாடுதுறை சென்றது.
வளைகாப்பன்று எடுத்த புகைப்படம் பிரேம் போட்டு வந்து சேர்ந்தது.
“இங்க பாருங்க, நம்ம தங்கம்” என்று அந்த புகைப்படத்தை வருடிக்கொண்டே கணவனிடம் காட்டினாள்.
“நம்ம தங்கத்தோட நினைவு இது மட்டும் தானே” என்று அந்த புகைப்படத்தை தங்களுடன் எடுத்து செல்ல பத்திரப்படுத்தினர்.
அடுத்த மூன்றாவது நாள், இருவரும் பெங்களூரில் இருந்து டெல்லி புறப்படும் ட்ரெயினில் அமர்ந்திருந்தனர்.
எதை நோக்கி இந்த பயணம்? பயணத்திற்கான தேடல் என்ன?அந்த தேடலினின் முடிவு என்னவாக இருக்கும்? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் மனைவியுடன் அமைதியாக புறப்பட்டான் குரு.
இருவரும் புதுசா.. தினுசா காதலிக்க புறப்பட்டனர் இந்தியாவின் வடக்குத்திசையை நோக்கி.
error: Content is protected !!