Skip to content
Post Views: 5,411
மார்கழி – 2
ஏர் பூட்டி உழுது, பிள்ளை போல் பார்த்து பார்த்து வளர்த்த நெல்மணிகளை அறுவடை செய்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் முறை காலத்திற்கு ஏற்ப சில மாறுதல்களோடு இன்றும் பண்பும் பற்றுமாக கொண்டாடப்படுகிறது. அதுவும் டெல்டா பகுதிகளில் உழவு மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு பொங்கல் என்றால் திருவிழா தான். வேலைக்கென வெளியூர் சென்றிருக்கும் பூர்வகுடிகள் மீண்டும் தங்கள் ஊர் வந்து பொங்கலிட்டு குதூகலிக்கும் விடுமுறை தினங்களுக்கு ஈடு இணை இல்லை என்று சிலாகித்துக்கொள்ளும் அறிவழகன் இம்முறை அடங்கி ஒடுங்கி ஒதுங்கிவிட்டான். விழாக்கோலம் கொள்ளும் அவனின் வீடும் ஒளியிழந்து அமைதியாய் பொங்கலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
“பொங்கல் மாதிரியே இல்லை. ஏன்மா இப்படி இருக்க?” காலையே தங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு தாய் வீடு வந்து இறங்கியிருந்தாள் அறிவழகனின் தங்கை தாமரை.
“இப்போ என்னடி பண்ணணுங்குற?” வெல்லம் தட்டிக்கொண்டிருந்த மேகலாவிடம் எரிச்சல் மிகுந்திருந்தது. பண்டிகை என்று வந்துவிட்டால் மகிழ்வுடன் எப்போதும் ஓடியாடி வேலை செய்யும் அவரிடம் இன்று மருந்துக்கும் மகிழ்வு இல்லை என்று அவர் முகமே காட்டிக்கொடுத்தது.
Advertisement
“ம்மா?”
“ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா வீட்ல இருக்குறவளுக்கு வேலை தான் ஓடுமா இல்லை சீவி சிங்காரிச்சிகிட்டு பண்டிகையை கொண்டாட தான் முடியுமா? அவங்களை மாதிரி எனக்கும் ஒரு ரூம் கட்டிக்கொடுக்க சொல்லு நானும் போய் அடஞ்சிக்குறேன்.” கடுகு போட்டால் வெடித்துவிடும் அளவுக்கு நெடி.
“நான் போய் எல்லாரையும் அழைச்சிட்டு வரேன்.” உடனே நிலைமையை சீர் செய்ய முயன்ற தாமரை நேரே சென்றது தந்தையிடம்.
Advertisement
“அங்க அம்மா பொங்க பானையை ஏத்திடுச்சு இங்க என்ன பண்றீங்க அப்பா?”
Advertisement
“வரேன்மா. நீ போ.” பண்டிகைக்கு என வீடு வந்திருக்கும் மகளை வருத்த விரும்பாதவராய் தணிந்தார் மனிதர்.
“நம்ம வீட்ல பொங்கல் பொங்கும் போது எல்லாரும் ஒண்ணா தான கத்துவோம், எந்த பானை முதல்ல பொங்கும்னு நானும் அண்ணனும் போட்டிப்போடுவோம். அதையெல்லாம் மிஸ் பண்ணக்கூடாதுனு எங்க வீட்ல ஒருமாதிரியா தாஜா பண்ணி இங்க வந்தா ஆளுக்கு ஒருபக்கம் இருக்கீங்க ப்பா…” என்று தாமரை சிணுங்கவும் மாறன் எழுந்துகொண்டார்.
மகளை கட்டிக்கொடுத்து எட்டு மாதங்களே ஆகியிருக்க, இது அவளுக்கு தலை பொங்கல். சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று தாமரையை இறக்கிவிட்டு வெளியே சென்றிருக்கும் மாப்பிள்ளை வீடு திரும்பும் சமயம் தாங்கள் இப்படி இருந்தால் மரியாதையாய் இருக்காது என்று எண்ணி பின்கட்டுக்குச் சென்றார். அங்கு முற்றம் போன்ற அமைப்பில் தான் மண் அடுப்பு வைத்து பொங்கல் விடுவது அவர்களது வழக்கம். இரு அடுப்பு வைத்து இரண்டிலும் பானை ஏற்றப்பட்டிருந்தது. மேகலா அமைதியாய் ஒரு பானையை கிண்டி விட்டுக்கொண்டிருக்க, இவர் ஒருபுறம் சென்று அமர்ந்துகொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் தங்கையுடன் வந்த அறிவழகன் மறுபுறம் சென்று அமர்ந்துகொண்டான்.
Advertisement
இருவரையும் முறைத்துப் பார்த்த தாமரை, “இதுக்குத்தான் உங்களை கெஞ்சி கூத்தாடி ரூம்லேந்து இழுத்துட்டு வந்தேனா?”
“என்னது கெஞ்சுனியா? என் மாமியார் மாமனார் எல்லாரையும் சமாளிச்சு நான் கிளம்பி வந்தா நீ பொத்துனாப்புல ரூம்ல இருப்பியான்னு மிரட்டி கூட்டிட்டு வந்தமா, நியாபகம் இருக்கட்டும்.” அமர்ந்த இடத்திலிருந்து கொட்டுவது போல் கை உயர்த்தினான் அறிவழகன்.
“என்னை வெளில கல்யாணமும் கட்டிக்கொடுத்து கையும் ஓங்குவீங்களா? இதெல்லாம் வயலென்ஸ்ல வரும். என் புருஷன்கிட்ட சொல்லிடுவேன் பாத்துக்கோ.” என்று தாமரை மல்லுக்கட்ட, சில நொடிகளில் உடன்பிறப்புகளின் சலசலப்பு இயல்பை மீட்டது போலிருந்தது.
“செத்த நேரம் கம்முனு இருக்கீங்களா? பொங்கல் பொங்கப்போவுது இங்க வந்து நில்லுங்க.” என்ற மேகலாவின் சத்தத்தில் மற்ற மூவரும் பொங்கல் உலை அருகே வந்து நின்றனர்.
“இந்த டைம் நான் சக்கரைப் பொங்கல்.” என்ற அறிவழகனின் பேச்சுக்கு உடனே மறுப்பு தங்கையிடம்.
“செல்லாது செல்லாது… போன டைம் நாந்தான் பெரிய பானை, லேட்டா பொங்குச்சு. அதனால இந்த முறை நான் சக்கரை பொங்கல்பா…” என்று மீண்டும் ஒரு போட்டி அவர்களிடம்.
பிள்ளைகளின் கவனம் பொங்கல் பானையில் இருக்க, பார்வையை சுற்ற விட்ட மாறன் நெற்றி யோசனையில் சுருங்கியது.
“தாமரை எங்க அந்த பொண்ணு? போய் கூட்டிட்டு வா.” மாறனின் கட்டளையில் மற்ற மூவரும் அமைதியாகிவிட, சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்துக்கொண்ட மேகலா தன் வேலையைத் தொடர்ந்தார். இறுகிப்போனவனாய் அறிவழகன் நகர்ந்து சென்று பழைய இடத்தில் ஒதுங்கிக்கொண்டான்.
தாமரை அண்ணனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்து நிற்க, “என்ன பாத்துட்டு நிக்குற தாமரை? எங்களை எல்லாம் கூப்பிட்ட உன் அண்ணியாக போகுது அந்த பொண்ணு, கூப்பிட்டிருக்கணும்ல.” என்று கண்டிப்பு காட்ட, அவர் பேச்சில் இருந்த அழுத்தத்தை மீற முடியாமல் வீட்டினுள் சென்றாள்.
“என்ன மேகலா, இதெல்லாம் பாக்க மாட்டியா நீ?” மாறனின் கேள்வி இப்போது மனைவியிடம் திரும்ப, அவரோ வெடுக்கென்று முகத்தை வெட்டினார்.
“எனக்கு என்ன பத்து கண்ணா இருக்கு எல்லாத்தையும் பாக்க.”
“உன் மகன் பண்ண கூத்துக்கு என்கிட்ட முகத்தை காட்டுனா ஆச்சா?”
“ஆமா நான் குந்தி தேவி என் மகனை தனியா பெத்தெடுத்து வளர்த்து விட்டிருக்கேன்.” இருந்த கடுப்பில் மேகலாவின் வார்த்தைகள் ஏகத்துக்கும் வந்தது.
“அவனோட சேர்ந்துக்கிட்டு மூஞ்சை தூக்கி வைக்குறியா நீயி?”
“நான் தூக்கி வச்சா கீழ இறக்கி விசாரிக்க ஆளா இருக்கு?”
“என்ன விசாரிக்கல இப்போ?” மகனுக்கு வரிந்துகட்டுகிறார் என்பது புரிந்து பொடுபொடுவென்று வந்தது மாறனுக்கு.
“அவன் விருப்பத்தையும் பாக்கணும்ல.” கிடைத்தது நேரமென்று மகன் பக்கமிருந்தும் பார்க்கச் சொன்னார் மேகலா.
“அதான் ஊரே பாத்துச்சே.”
“ம்ச்… உங்க வளர்ப்பு மேலேயே நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை இருக்கப் போய் தான் அந்த பொண்ணு வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கேன். ஒழுங்கா தாலி கட்டி குடும்பம் பண்ண சொல்லு.” என்று முடிவாய் சொல்ல, அதற்கு மேல் உன்பாடு என்பது போல் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார் மேகலா.
அறிவழகனுக்கு அவர்களின் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் இனி தன் பக்கத்தை தந்தை கேட்கப்போவதில்லை என்று முடிவுக்கு வந்திருந்தவன் வேறொரு எண்ணத்தில் இருந்தான். அதனை கலைக்கும் விதமாய் கொலுசுச் சத்தம். கொலுசின் சொந்தக்காரி தாமரை என்று தெரிந்தாலும் அவளுடன் நடந்து வருபவள் யாராக இருக்கும் என்று அறிந்தமையால் மாறனைத் தவிர மற்ற இருவரும் பார்வையை உயர்த்தவில்லை. என் வேலை முடிந்துவிட்டது என்பதுபோல் தாமரை மேகலாவிடம் சென்றுவிட்டாள்.
“பொங்கல் அதுவுமா ஏன் உள்ளேயே இருக்கமா… நீயும் இதெல்லாம் பார்த்து தெரிஞ்சிக்க, அடுத்த பொங்கல் நீதான் வைக்கணும்.” என்ற மாறனின் குரலில் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் இயலணி.
“ஏன் அங்கேயே நிக்குற. இங்க வா மா…” அவளின் தயக்கம் உணர்ந்து தள்ளி நின்று இயலுக்கு வழி விட்டார் மாறன்.
கால்கள் பின்ன அடி மேல் அடி வைத்து அவர் காட்டிய இடத்தில் அவள் வந்து நிற்கவும் பொங்கல் பொங்கவும் சரியாக இருந்தது. தாமரை மட்டும் பொங்கலோ பொங்கல் என்று குதூகலிக்க, அந்த நிகழ்வை கொண்டாடும் மனநிலை அறிவுக்கும் இயலுக்கும் சுத்தமாக இல்லை.
நிமிர்ந்தால் அறிவழகனை பார்க்க நேரிடுமோ என்ற பீதியில் பார்வையை நிலத்திலிருந்து அகற்றவில்லை இயலணி. நிமிர்ந்து பார்த்திருந்தால் தீயின்றி தகிக்கும் அவன் பார்வையில் பொசுங்கி இருப்பாளோ என்னவோ.
மேகலா ஒரு கரண்டியும் தாமரை ஒரு கரண்டியுமாய் பிடித்து பொங்கலை கிண்டிவிட, தனித்து விடப்பட்ட இயலணியைப் பார்த்த மாறன், பக்கத்தில் இருந்த முந்திரி மற்றும் ஏலக்காய் பாக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டினார், “எவ்ளோ போடணும்னு அத்தைகிட்ட கேட்டு உடைச்சி, தட்டிக்கோமா.”
அவர் குரலில் பட்டென்று நிமிர்ந்த இயலணி நடுக்கத்துடனே அதை வாங்கிக்கொண்டு மேகலாவைப் பார்த்தாள். அவளை பார்க்காமலேயே ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து நீட்டியவர் அது நிறைய முந்திரி எடுத்து வைக்கச் சொன்னார். வேகமாக தலையாட்டிய இயலணி ஒரு கையில் கிண்ணத்தையும் மறுகையில் முந்திரியையும் இறுக பற்றிக்கொண்டு அங்கேயே ஒரு ஓரமாய் கீழே அமர்ந்து முந்திரி பாக்கெட்டை வேகமாக பிரிக்க, பெரிதாக கிழுந்துவிட்ட பையிலிருந்து மொத்தமும் சிதறி பரவலாய் கீழே விழுந்தது. பதறிப்போய் நிமிர்ந்து பார்த்த இயலணியின் விழிகளில் மருட்சி அப்பட்டமாய் படர்ந்திருந்தது.
‘சுத்தம்.’ என்ற கடுகடுப்பு மேகலாவிடம்.
“என்னடா பாத்துட்டு இருக்க, போய் உதவி பண்ணு.” இயலணியின் பயத்தைக் கண்டு மகனை விரட்டினார் மாறன்.
தந்தையை முறைத்தானே தவிர கொஞ்சமும் அசையவில்லை அறிவழகன்.
“இல்…லை… நான்… நானே எடுத்துடுறேன்.” இயலணி ஒருபக்கம் பதட்டத்தில் இரண்டு கைகளாலும் முந்திரிகளை பொறுக்கினாள்.
ஒரு தட்டு எடுத்து வந்த தாமரை தானும் அவளுடன் சேர்ந்து அனைத்தையும் தட்டில் எடுத்துப்போட்டாள்.
“நான் பாத்துக்குறேன். நீங்க போங்க.” இயலணியின் முகம் பாராது சொன்ன தாமரையிடம் பேசவே அச்சமாய் இருந்தது இயலணிக்கு. அவளிடம் மட்டுமல்ல அவ்வீட்டில் யாரையும் ஏறெடுத்து பார்த்து ஒரு வார்த்தை பேசவும் அத்தனை பயமும் தயக்கமும். மனதில் இருந்ததை தான் வெளிப்படுத்தி இருந்தாலும் தவறு செய்துவிட்டது போல் மனம் குறுகுறுத்து அவளை குறுக வைத்தது. சட்டென எழுந்து ஒரு ஓரமாய் நின்றுகொண்டாள். அங்கிருப்பதே நெருப்பில் நிற்பது போலிருக்க, பின்னந்தலையிலிருந்து காதோடு வழிந்து கழுத்திற்கு இறங்கிய வியர்வையை புறங்கையால் துடைத்தாள்.
அதீத பதட்டத்தின் வெளிப்பாடான அவள் செய்கைகள் சந்தேகம் கொடுத்தாலும் மாறன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மகன் கோபமாக இருக்கிறான், மனைவியும் அப்பெண்ணிடம் சரியாக பேசவில்லை, குடும்ப அமைப்பும் தங்களின் குடும்பமும் அவளுக்கு புதிது அதனால் குழம்பி பயந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டார். சிறிது காலம் சென்றால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டு அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்யவில்லை.
இயலணியின் வரவுக்கு முன் உடன்பிறப்புகளால் உண்டான இயல்பான சூழ்நிலை மீண்டும் இறுக்கம் பெற்றது. தாமரையும் மேகலாவும் அவர்களுக்குள் பேசி பொங்கல் கிண்டி, இறக்கி, பூஜைக்கு தயாராகினர். மாறன் ஒருபுறம் வாழை இலைகளை அலசிக்கொண்டிருந்தார். இயலணி மெல்ல நிமிர்ந்து அறிவழகனைப் பார்த்தாள். அவளை தான் வன்மமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவழகன். அவன் பார்வை வீச்சில் பட்டென்று சரிந்தது இயலணியின் சிரம்.
‘ஐயோ இப்படி பாக்குறாங்க?’ பயந்தவளாய் கண்களை இறுக மூடி உதட்டை மடித்துக்கொண்ட இயலணிக்கு தன்னருகே யாரோ வந்து நிற்பது போல் தோன்ற, சட்டென்று கண்களை திறந்து நிமிர்ந்து பார்த்தாள்.
தன் முழு உயரத்திற்கு விறைப்பாய் நின்று அவளை முறைத்துக் கொண்டிருந்தான் அறிவழகன்.
“என் கண்ணுல சிக்காம ரூமுக்குல அடைஞ்சிகிட்டா விட்டிருவேன்னு நினைச்சியாடி?” நாக்கை மடித்து ரெளத்திரத்தில் சிவந்து விரிந்திருக்கும் அவன் முகத்தை அருகே கண்ட இயலணிக்கு மயக்கமே வந்துவிடுமளவுக்கு படபடப்பு.
“இல்லை, நான் வந்து…”
“நாடகமா ஆடுற என் குடும்பத்துக்கு முன்னாடி… போனா போகுதுனு உதவி பண்ண பாவத்துக்கு என் அடிமடியிலேயே கை வச்சிட்டீல்ல வந்து பேசிக்கிறேண்டி உன்னை…” விரல் நீட்டி எச்சரித்தவன் தங்கையின் பார்வை தன் மீது திரும்புவது உணர்ந்து நகர்ந்து சென்றான்.
வந்து மிரட்டிச் செல்பவனை கலக்கமாய் பார்த்தவள் மெல்ல எழுந்து உள்ளே சென்றாள். எதிர்ப்பட்ட தாமரையின் கணவர் இவளை ஆராய்ச்சியாய் பார்த்துவிட்டு உள்நுழைந்ததை கூட கவனிக்கவில்லை அவள். சமையலறை ஒட்டிய பூஜையறை அருகே சிறிதாக இருக்கும் சேமிப்பு அறையில் தான் அவளை தங்க வைத்திருந்தார்கள். அங்கேயே பதுங்கிவிட்டது பெண்.
சற்று நேரத்தில் பூஜைக்கு ஒன்றுகூடிய போது கவனித்து மாறன் அவளை மீண்டும் அழைத்து வரச்சொல்ல, கணவனுடன் நின்றுகொண்ட தாமரை நகரவே இல்லை. மேகலாவை பார்க்க, ‘மகாராணியை கூப்பிட ஆள் அனுப்பிட்டே இருக்கணுமா?’ என்று பார்த்து வைத்தார். மகன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று நின்றான். வேறு வழியின்றி தானே சென்று அழைக்க, சங்கடமாய் உணர்ந்த இயலணி அதன்பின் அவர்களுடன் இருந்தாலும் சற்று பின்தங்கி நின்றுகொண்டாள். பொங்கல் படைத்து, சாமி கும்பிட்டு உணவு உண்ணும் வரை நெளிந்தவள் விட்டால் போதுமென்று அறைக்குள் அடைந்துகொண்டாள்.
மதியம் ஓய்வாக அனைவரும் கண்ணசர, மாலை வேளை நெருங்கவும் உடைந்த தன் அலைபேசியை சரி செய்யும் பொருட்டு வெளியே கிளம்பினான் அறிவழகன். டெல்டா பகுதியில் முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்கும் சிறிய ஊர் அவர்களுடையது. அலைப்பேசி சரி செய்ய வேண்டுமென்றால் குறைந்தது இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டவுனுக்கு செல்ல வேண்டும். மற்றைய நேரமாக இருந்தால் சோர்வுற்று கிளம்பாமல் இருந்திருப்பான். தற்சமயம் அலைபேசி சரிசெய்யும் சாக்கில் டவுனுக்கு அருகே இருக்கும் அத்தை வீட்டு பக்கம் சென்றால் உமாவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற முனைப்புடன் தந்தையின் டீ.வி.எஸ் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அரை மணி நேரத்தில் டவுனை அடைந்தவன் திறந்திருக்கும் போன் கடையைத் தேடி சென்று கொடுக்க, சரி செய்து தர ஒரு மணி நேரமாகும் என்றான். அதுதானே எனக்கு வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு அத்தை வீட்டுப் பக்கம் வண்டியை விட்டான். இவன் எதிர்பார்த்தது போல் உமா வாசல் பெருக்கிக்கொண்டிருந்தாள். வண்டியை அப்படியே ஓரமாக நிறுத்திவிட்டு அவளை நோக்கி நடக்க, எதிர்ச்சியாக அவன் மாமா வீட்டினுள் இருந்து வெளியே வந்தவர் இவனைப் பார்த்துவிட்டார்.
“உமா உள்ள போ.” மகளை லேசாக இழுத்து வீட்டினுள் தள்ளியவர் கதவை இழுத்து மூட, வேகமாக ஓடி வந்தான் அறிவழகன்.
“அப்பா… அத்தான்.” உமா பதட்டமாக வெளியே பார்த்தாள்.
“மாமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்லை.” வாசல் இரும்புக்கதவை பிடித்துக்கொண்டு அறிவழகன் கெஞ்ச,
“இனி எதுவும் இருந்தா எங்களுக்கு என்ன இல்லைனா என்ன? இனி வீட்டுப்பக்கமோ என் பொண்ணு பக்கமோ வந்துறாத. மரியாதை கேட்டுரும்.” என்று மிரட்டினார் அவன் மாமா.
“மாமா… ப்ளீஸ்.”
இம்முறை நிலைக்கதவும் படாரென அவன் முகத்திற்கு எதிரே சாற்றப்பட்டது. சோர்வுற்றவனாய் அங்கிருந்து கிளம்பினான். அலைபேசியின் திரை மாற்றப்பட்டதும் உமா எண்ணிற்கு அழைப்பு விடுத்துப் பார்த்தான், அழைப்பு செல்லவே இல்லை. அவன் அத்தை எண்ணிற்கு அழைக்க அதுவும் எடுக்கப்படவில்லை. என்ன செய்வது என்று அறியாது அன்றைய நாளும் நிறைவு பெற, மறுநாள் விடியும் போதே வீட்டினில் பேச்சுக்குரல் கேட்டது. தேதியை பார்த்தான் இன்னும் இரண்டு நாளில் கோவிலில் வைத்து திருமணம் என்று வாக்கு கொடுத்திருந்தார் அவன் தந்தை. அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அலைபேசி எடுத்துக்கொண்டு எழுந்து வெளியே செல்ல, மேகலாவின் ஒன்றுவிட்ட தங்கை வந்திருந்தார். இவனை பார்த்து விசாரித்தோடு இயலணியைப் பற்றி கேட்க, பற்றிக்கொண்டு வந்தது அறிவழகனுக்கு.
“எல்லாம் அவ பேச்சை கேட்டு தானே ஆடுறாங்க. அவளையே கேளுங்க.” என்று கத்திவிட்டு அங்கிருக்க பிடிக்காமல் பின்புறம் சென்றான்.
“என்ன மேகலா க்கா இப்படி பேசிட்டு போறான்?”
“எதுவும் புரியலைடி எனக்கு. இவங்க அப்பா தான் புடிச்ச புடியில நிக்குறாரு. இந்த பொண்ணு வேண்டாம் வேண்டாம்னு சொல்ற இவனும் துணிஞ்சு எதுவும் செய்ய மாட்டேங்குறான். அத்தைக்காரி மவ உமாவை புடிச்சிருக்குங்குறான். உமா அப்பா எங்க உறவே வேண்டாம்னு அத்துவிடுற மாதிரி பேசிட்டு போயிருக்காரு. இவன் வாழ்க்கை என்ன ஆகப்போகுதோனு பயமா இருக்கு.” என்று புலம்ப, வயிறு பசிக்கு ஏதாவது குடிப்போம் என்று வெளியே வந்த இயலணி காதில் இவர்களின் பேச்சு அச்சுபிசகாமல் விழுந்தது.
தன்னை பிடிக்கவில்லை அத்தை மகளை பிடித்திருக்கிறது என்று அறிவழகன் சொன்னதாய் அவன் தாய் பகிர்வதை கேட்டு மனம் சுருக்கென்றாலும், ‘தப்பு பண்றியா இயல்?’ என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொண்டாள்.
யோசிக்காமல் ஆம் என்றது சிந்தை. குற்றம் புரிந்தது போல் படபடப்பு அதிகரித்து கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. உணர்வுப் பிடியில் கால்கள் நடுங்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அவனுடனான மூன்று மாத காலத்தை மனதில் ஓட்டிப்பார்த்தாள், அவன் குடும்பத்தோடு செலவிட்ட கடந்த இரண்டு நாட்களையும் நினைத்துப்பார்த்தாள். அவள் மனசாட்சியே அநீதி இழைக்கிறாய் என்றது. அதற்கு மேல் அவளால தாள முடியவில்லை. தன் விருப்பத்தை, நேசத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு இதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற அவசர முடிவுடன் அறிவழகனைத் தேடிக்கொண்டு பின்கட்டிற்கு சென்றாள்.
மாமரத்திற்கும் வாழைக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் கையிலிருக்கும் போனை வெறித்த வண்ணம் நின்றிருந்தான் அறிவழகன்.
“சார்…” என்றுதான் அழைத்திருப்பாள், மின்னலென பாய்ந்து வந்து அவள் கைமுட்டியை அழுந்தப் பற்றியவன், “இதுவரைக்கும் நீ எழுதுன கதைக்கு தான எல்லாரும் வசனம் பேசுனாங்க. இனி நான் எழுதுறேன்டி கதை. பொம்மையா வந்து ஆட தயாரா இரு. குறிச்ச தேதியில் நீ விரும்புன மாதிரியே கல்யாணம் நடக்கும். மறுநாளே நாம ஊருக்கு போறோம். அப்புறம் வச்சிக்கிறேன்டி என் கச்சேரியை.”
அவன் அழுத்தத்தின் தடம் அவளது கைகளில் வலி கொடுக்க, கைகளை தேய்த்துக்கொண்டே தன்னை கடந்து செல்பவனை அச்சத்துடன் பார்த்து நின்றாள் இயலணி.
error: Content is protected !!