Skip to content
Post Views: 7,615
உயர்த்திய கரத்தை கூட இறக்க முடியாமல் குழந்தையின் மறுப்பை ஏற்க முடியாமல்.. தவித்து உறைந்து போனான் ரியான்.
எவ்வளவு நேரம் நீடித்ததோ அந்நிலை.. லேசாக ஆடத்தொடங்கிய சிறு மேஜையின் அசைவில் சுயநினைவுக்கு வந்தவன்.. அதிர்ந்து போனான் தன் மகன் நிலை கண்டு.
Advertisement
உடல் லேசாக வெட்டி இழுக்க குழந்தை துடித்து மூச்சுக்கு திணறிக்கொண்டிருந்தான்.
“முகுந்த்..” என்ற அலறலுடன் அவனை கைகளில் அள்ளிக்கொண்டவன் அவசரமாக வெளியே ஓடி லிஃப்டினுள் புகுந்தான்.
Advertisement
Advertisement
அவன் அலுவகம் விட்டு வெளியே வரவும்.. அப்போது தான் வந்த வெங்கடேஷூம் சம்யுக்தாவும் பார்க்கிங்கில் பேசி கொண்டிருக்க,
ரியான் வரும் வேகத்தை கண்டு, “எதோ பிரச்சனை..” என உணர்ந்து அவனை நோக்கி ஓடினர் இருவரும்.
Advertisement
ரியானை நெருங்கும் போதே, முகுந்த் நிலை இருவருக்கும் புரிந்து விட சாதுர்யமாக ரியானிடமிருந்து வாகன திறப்பை பெற்ற வெங்கடேஷ்,
விரைந்து அவன் வாகனத்தை எடுத்து வர ரியானுடன் சம்யுக்தாவும் ஏறிய அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான் முகுந்த்.
மருத்துவர்கள் உள்ளே குழந்தையை பரிசோதிக்க வெளியே கல்லென இறுகி போய் அமர்ந்திருந்தான் ரியான்.
அவனை நெருங்கவோ.. என்ன நடந்தது என கேட்கவோ.. மற்ற இருவருக்கும் தயக்கம் எழுந்த போதும் அவனை அப்படியே விட்டு விலகி நிற்கவும் மனமில்லை அவர்களுக்கு.
எனவே ரியானிடம் சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து.. அவனின் இரு கரத்தையும் இருவரும் இருபுறமும் பற்றிக்கொள்ள.. ரியானின் கண்களோ கலங்கி கண்ணீரை வழிய விட்டது.
“என்ன ஆச்சு அண்ணா.. முகுந்த்.. திடீர்ன்னு.. எப்படி..?” என வெங்கடேஷ் தயங்கி வருத்தத்தோடு கேட்க.
“எல்லாமே இந்த பாவியால தான். நானெல்லாம் இருக்கவே கூடாது..” என தனது கையை விலக்கி எடுத்து தன் முகத்திலேயே அடித்துக்கொண்டு அழுதவனை தடுக்கவே முடியவில்லை அவர்களால்.
ஒரு கட்டத்தில் அவனாக ஓய்ந்து போன பிறகே.. அவனை அடக்க முடிந்தது வெங்கடேஷால்..
“என்ன அண்ணா.. இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க..?
கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க..” என சத்தமாக வெங்கடேஷ் உரிமையாய் அதட்ட,
அப்போது ரியானுக்கும் அந்த உரிமையான கண்டிப்பும் தேவைப்பட்டதோ என்னவோ..
வெங்கியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய் அமைதியானான் சிறு பிள்ளையாய்.
சிறு அமைதிக்கு பின் மெல்ல நடந்ததை சொல்ல.. ‘என்ன சொல்வது..’ என்பதே புரியவில்லை இருவருக்கும்.
ரியானின் எண்ணமும் தவறில்லை.
அதே போல சிறு குழந்தையின் ஏக்கமும் புரியத்தான் செய்கிறது.. எனும் போது அவர்களும் இதில் யாரின் புறம் பேச.
எனவே முகுந்த் பற்றி டாக்டர் என்ன சொல்ல போகிறார்களோ..? என்ற பதட்டத்தோடு அவர்களும் காத்திருக்க ஆரம்பித்தனர் அமைதியாக.
அரை மணி நேரம் சென்று வெளியே வந்த மருத்துவரை அவசரமாக மூவரும் நெருங்க, “குழந்தையோட பேரண்ட்ஸ் இதுல யாரு..?” என்றார் மருத்துவர் மூவரையும் கேள்வியாய் பார்த்து.
ஒரு பெண், இரு ஆண்.. என நின்றதில் எழுந்த குழப்பம் அவருக்கு.
“டாக்டர், நா தான் முகுந்த் அப்பா. இவங்க என் ப்ரண்ட்ஸ்.. நா சிங்கிள் பேரண்ட்..” என்றான் தன் நிலை எண்ணி கசப்பாக.
“ஓ..! ஐ ஷீ..” என்றவர் மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“குழந்தைக்கு ஏற்கனவே நிறைய காம்பிளிக்கேஷன்ஸ் இருக்கும் போது.. கொஞ்சம் ஷாப்ட்டா ஹேண்டில் பண்ண வேணாடா..?” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.
அதைக்கேட்டு தலை குனிந்த ரியான், “சாரி டாக்டர்.. எதோ கோபத்துல தெரியாம..” என தடுமாற..
“சார்.. உங்க கோபத்தை காட்ட அந்த குழந்தை தான் கிடச்சதா..?” என்றார் கடுமையாக.
அதை கேட்ட மற்ற இருவருக்குமே பயமாய் போனது.. ரியான்.. ‘மெதுவாக அடித்தேன்.. என்றது பொய்யோ.. அவன் வேகத்தை குழந்தை தாங்க முடியாத படி இருந்திருக்குமோ..?’ என.
லேசாக என்றாலும்.. கை நீட்டியது உண்மை தானே.. என்ற எண்ணத்தால்,
ரியான் தலை நிமிர்த்தாமல் கூட நிற்க அவர்களின் பயம் கூடித்தான் போனதே அன்றி குறையவில்லை.
எனவே, “ஏன் டாக்டர்.. குழந்தைக்கு எதாவது பெருசா..?” என சம்யுக்தா தடுமாற்றத்தோடு பதற..
“ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்ல.
குழந்தை கான்சியஸ் வந்ததும் அவங்க அப்பா அடுச்சாங்கன்னு அழறான்.
அதான் கேட்டுட்டு இருக்கேன்..” என்ற பிறகே மூச்சு சீரானது மற்றவர்களுக்கு.
“அழுதாலும் அப்பா வேணுமுன்னு அடுத்த செக்கன்ட் உங்களை தேடற பிள்ளையை கை நீட்ட எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு..?
உங்க தனிமை வளர்ப்பு புரியுது. அப்படி கஷ்டமுன்னா.. வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க.
இனி இப்படி அவனிடம் நடக்காதீங்க.
இப்போ குழந்தை நார்மலா இருக்கான்.
எதுக்கும் இன்னைக்கு ஒரு நைட் இங்கேயே ஸ்டே பண்ணுங்க.
மார்னிங் பார்த்துட்டு டிஸ்ச்சார்ஜ் பண்ணலாம்..” என்றுவிட்டு,
“சிஸ்டர்.. ரூம் நெம்பர் பார்த்து பேசன்ட்டை ஷிப்ட் பண்ணிடுங்க..” என்றுவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார் அந்த மருத்துவர்.
‘குழந்தைக்கு ஒன்றுமில்லை..’ என்ற பிறகே மூவருக்கும் இதயத்துடிப்பு சீரானது.
சில நிமிடத்தில் ஒரு அறைக்கு முகுந்த் மாற்றப்பட்டிருக்க அவனை நெருங்கவே பயந்து தள்ளி நின்றிருந்தான் ரியான்.
ஏற்கனவே இங்கே வந்த மறுநாள் தனியாக விட்டு வந்து.. மலரை கண்டு பயந்த கோபத்தில், “ஐ ஹேட் மை ப்பா..” என்ற குழந்தை..
இன்று கை நீட்டி அடித்த பின்.. அதை சொல்லமாட்டான்.. என்று என்ன நிச்சயம்..?
அதோடு தவறு முழுவதும் இன்று ரியான் புறம் தானே.
அப்படியிருக்க குற்ற உணர்வு கொண்டு மறுகி நின்றான் தலை குனிந்து ஓரமாக.
அறைக்கு மாற்றும் போதே, “லைட் ஃபுட் எதாவது கொடுத்துட்டு சொல்லுங்க. அப்புறம் தான் இன்ஜக்ஷன் போடனும்..” என்றுவிட்டு நர்ஸ் செல்ல,
வெங்கடேஷ் ஹோட்டலுக்கு சென்று வாங்கி வந்ததை சம்யுக்தா தான் ஊட்டி கொண்டிருந்தாள்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் தந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான் குழந்தையும்.
இருந்த சோர்விற்கு அவனால் பேச முடியாமல் இருக்க, ‘ப்பா.. ஏன் என்கிட்ட வரல..?’ என்ற ஏக்கமே அந்த பிஞ்சின் கண்ணில்.
அதை கவனிக்கும் நிலையிலா அவன் இருந்தான்..!
ஏற்கனவே அவன் மீது அவனை காணாமலேயே கோபத்தில் இருப்பவளின் கண்ணில் அது பட்டால்..?!
ஆம்..! சம்யுக்தா இன்னும் வீட்டிற்கு வராமல் போக சம்யுக்தாவிற்கு அழைப்பு விடுத்திருந்தாள் அமிழ்தினியாள்.. முகுந்தை அறைக்கு மாற்றும் முன்பாக.
சம்யுக்தா இங்கே இருக்கும் நிலையை சொல்லி, “அக்கா.. நா முகுந்தை ரூமுக்கு ஷிப்ட் பண்ணதும் பார்த்துட்டு, கொஞ்ச நேரம் கூட இருந்துட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட,
முன்னரே குழந்தை மீது பரிதாபம் கலந்த பாசத்தில் இருந்தவளுக்கு மனது கேளாமல் மருத்துவமனை எதுவென கேட்டுக்கொண்டு, நேரே அங்கு வந்தவள் கண்டது.. ஏக்கத்தோடு தந்தையையே பார்த்திருந்த அந்த பிஞ்சின் முகத்தையே..!
“ச்சே.. என்ன மனுஷன் இவன்.. இவனுக்கு இந்த பிள்ளை தேவையா..?” என்ற எண்ணம் ஸ்திரம் பெற்றது மீண்டும் அவளுள் பலமாக.
விளைவு….??!!!!
error: Content is protected !!