18 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,080
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 18
.
பிரிவும் அதை அடுத்த சேர்க்கையும் ரகுவிற்கும் தாராவிற்கும் பழகிப் போனது. அவன் வரப் போகிறான் என்றால் முன் தினமே பாட்டி இவளிடம் கூறிவிடுவார். அதன்பின் அவள் பார்வை பக்கத்து வீட்டு வாயிலில் குடிகொண்டுவிடும்.
Advertisement
எட்டாம் வகுப்பு பள்ளி வாழ்க்கை நன்றாகவே சென்றது ரகுவிற்கு. சந்திரிகா கூறியபின் கேளாதிருப்பானா? தன்னை… தன் நலத்தைக் கருத்தில் கொண்டான். படிப்பு, விளையாட்டு என எதை எடுத்தாலும் அதில் ரகு தனித்து நின்றான். ஆசிரியர்களிடமும் ‘அறிவாளி பையன்’ என்ற நல்ல பெயரோடு பள்ளியில் வலம் வந்தான். பள்ளியிலும், வீட்டின் அருகிலும், நெருங்கிய தோழர்கள் என ஒரு கூட்டமும் இருந்தது ரகுவிற்கு. ஆக… திருச்சியில் இருந்து வந்து மூன்று வருடங்கள் பிடித்தது, ரகுவிற்கு சென்னையில் கால் ஊன்ற.
Advertisement
இந்த வருடம் ரகுவின் காட்டில் மழை எனலாம். பள்ளி வாழ்க்கை களை கட்டியது என்றால், வீட்டிலும் அதிகக் கெடுபிடி இல்லை. காரணம் அக்ஷரா. அடுத்த வருடம் நடைபெறும் 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் அக்ஷரா. வயது வரம்பின் காரணமாக இன்னும் ஒரு வருடம் மட்டுமே தேர்வை எடுக்க முடியும் என்பதால், செய்து கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு இந்த வருடம் கோச்சிங் சென்று முழு முயற்சியில் படித்துக் கொண்டிருக்கிறார். தேர்வுக்கு அதிக ஆயத்தம் செய்ய வேண்டியிருப்பதால் கவனம் படிப்பில் சென்றுவிட, அவரால் வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க முடிவதில்லை.
Advertisement
வார நாள்களில் கணவனும், வீட்டு வேலையாட்களுமாகக் குடும்பத்தைச் சமாளித்தாலும், வார இறுதியில் அந்த வகுப்பு… இந்த வகுப்பு என நகுலனின் விழி பிதுங்கியது. அக்ஷராவை போல் அவரால் வீடு… வேலை… பிள்ளைகள் என அனைத்தையும் கவனிக்க முடியவில்லை. அதனாலேயே பள்ளியின் அனைத்து விடுமுறை நாள்களில் பிள்ளைகளைத் தன் அம்மா விட்டிற்கும், ரகுவை அவன் அம்மாச்சி வீட்டிற்கும் பெட்டி கட்டி அனுப்பி விடுகிறார் அக்ஷரா. அதில் பிள்ளைகளுக்கு அத்தனை ஆனந்தம்.
Advertisement
மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்துவிட்டால்… ரகுவை பார்க்கும் ஆவலில் காலமே எழுந்து ஆயத்தமாகி விடுவாள் தாரா. ஒரு சில நாள்கள் தமையனோடு, தம்பியும் தங்கையும் தங்கிவிடுவதுண்டு.
விடுமுறை நாள்கள் என்பதால் ரகுவின் பழைய நட்புகளும் பாட்டி வீட்டிற்குப் படை எடுத்துவிடுவர். அந்த சில தினங்கள் செங்கல் வீடு உயிர் பெறும்.
கூட்டமாகச் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றித் திரிவதும், ஏக்கர் கணக்கில் பல வாழைத் தோப்புகள் இவர்களுக்குச் சொந்தமாக இருக்க அதில் சுற்றி திரிவதும், பம்பு செட்… தொட்டி நீரில் ஆட்டம் போடுவதும்… மலைக்கோட்டைக் கோவிலுக்குச் செல்வதும் என திருச்சியில் தங்கியிருக்கும் அவன் நாள்கள் பேபியோடு ஆர்ப்பாட்டமாகவே செல்லும்.
குட்டி குட்டி விடுப்புகள், கால் ஆண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, தீபாவளி, பொங்கல், ஈஸ்டர் என அதிக நாள்களை திருச்சியில் கழித்தான் ரகு. அக்ஷராவின் தேர்வுக்குப் பின் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது என்பது ரகுவிற்கு நன்கு தெரியும் என்பதால் கிடைத்த நிமிடங்களை அவன் ஐயா குடும்பத்தோடு ஆசையோடு கழித்தான்.
வேக வேகமாக வருடம் அதன் முடிவை எட்டியது. அந்த வருடத்திற்கான கடைசி தேர்வும் முடிந்தது. தேர்வு மட்டுமா? இதோ… இதோடு அவன் சென்னை வாசம் முடிவடைகிறது. இரண்டு மாதங்கள் முன்பு தந்தை, தில்லியில் வேலை எனப் பெட்டியைக் கட்டும் பொழுது கூட இதை எதிர்பார்க்கவில்லை ரகு. கண்ணீரோடு தோழர்கள் அவனுக்கு விடைகொடுத்தனர். ரகுவிற்கு அழுகை வரவில்லை. ஆனால்… உள்ளுக்குள் ஒரு இறுக்கம். இன்னும் எத்தனை முறை இப்படி இடம் மாறவேண்டும்? தனக்கென ஓர் கூடு கிடைக்கவே கிடைக்காதா என்ற எண்ணம் மீண்டும் எட்டிப் பார்த்தது. பள்ளி… ஆசிரியர்கள்… தோழர்கள் இவர்களை விட்டுச் செல்வதே வலிக்கிறதே, திருச்சிக்கு எப்படி விடை கொடுப்பான்?
பாட்டி வீட்டிற்கு செல்லவென கிளம்பியவனிடம், “திருச்சிக்கு போக நேரம் இல்லன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?” என அக்ஷரா சத்தம் போட்டார். ஆனால் ரகு பிடிவாதமாக நின்றுவிட்டான். அக்ஷராவோடு எதற்கும் வாதம் செய்யாத ரகு, “உங்களுக்கு வசதினா மட்டும் என்னை அங்க தொரத்துவீங்க. ஆனா என்னை வளர்த்தவங்கள பாக்கணும்ன்னு நான் கேட்டா அனுப்ப மாட்டீங்களா?” என நேருக்கு நேர் நின்று கேட்டான்.
சண்டைக்கு தயாராக நிற்கும் மகனிடம் என்ன கூறுவார் அக்ஷரா? “ரெண்டு வாரம் தான்” என்ற நிபந்தனையோடு ரகுவை அனுப்பி வைத்தார் திருச்சிக்கு.
சேட்டின் கிரே ஸ்கோடா லாரா பாட்டியின் வீட்டு வாசலில் நின்றது. விடுமுறை ஆரம்பமானாலே ரகுவின் வரவிற்கு காத்திருந்து, கார் வாசலில் நின்றதுமே ஓடி வந்து அவன் கைபிடித்து, “ல்ல்லகு…” என ஆர்ப்பாட்டமாக விளிக்கும் குட்டி புயல் இன்று வரவில்லை என்றதுமே இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அவளுக்கு வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களோடு “பேபி” எனப் பக்கத்து வீட்டிற்குச் சென்றவன் கண்டதோ பூட்டியிருந்த கதவை. பதின்ம வயதிற்குள் கால் வைத்திருந்த ரகுவின் மென்மையான குரல் உடைய ஆரம்பித்திருந்தது. அவள், அவன் குரலைக் கேட்டால் கண்டிப்பாகக் கேலி செய்வாள் என நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு ஏமாற்றமே.
“ஸ்கூல் லீவ் தான? பேபி வீட்டுல எங்க போயிட்டாங்க பாட்டி?” என விழுந்துபோன முகத்தோடு வந்து நிற்பவனைப் பார்த்து பாட்டிக்குச் சிரிப்பு வந்தது.
“வந்தா… என்னை விசாரிக்க வேண்டாமா? அது என்ன கூப்பிட கூப்பிட நிக்காம ஓடறது? போ… சொல்ல மாட்டேன்” என்று அவர் முறுக்கிக் கொள்ள, ரகுவிற்கு பட்டியிடம் தாஜா செய்ய வரவில்லை. வீட்டினுள் செல்லாது மார்புக்கு குறுக்காகக் கைகட்டி அவரை பார்த்து முறைத்து நின்றிருந்தான்.
“என்ன முழி டா இது? கைய கட்டிட்டு முறைச்சா பயந்துடுவேனா?” என்ற பாட்டியின் சிரிப்பு இன்னுமே அதிகமானது. ம்ம்கூம் ரகு அசைந்தான் இல்லை. தன் மகளின் அதே பிடிவாதமும் அழுத்தமும் கொண்டவனாகக் கைகட்டி நிற்கின்றான் பேரன். தன் உயரத்திற்கு வளர்ந்திருந்தாலும், ஐந்து வயது ரகுவின் அதே பிடிவாதத்தோடு முறைத்து நிற்பவனை வெறுப்பேற்றப் பாட்டிக்கு மனம் இல்லை.
“யாரோ க்ளோஸ் ஃப்ரெண்டாம்… வீட்டு விசேஷத்துக்குன்னு சேலம் வரைக்கும் போயிருக்காங்க. நாளைக்கு திரும்பிடுவேன்னு சொல்லிட்டு காலைல தான் போனாங்க. நீ உள்ள வா” என உள்ளே இழுத்துச் சென்றார்.
ரகுவிற்கு இருப்பு கொள்ளவில்லை. ஐயா அம்மா மேல் கோபமாக வந்தது. அது எப்படி அவன் வரும் வேளை அவர்கள் செல்லலாம்?
“நான் வரேன்னு நீங்க அம்மாட்ட சொல்லலியா?” என்றவன் குரலில் கோபமும் ஏக்கமும் கொட்டிக் கிடக்க, “அதனால தான் டா நாளைக்கே திரும்பறாங்க” என்ற பதில் அவனைச் சற்றுச் சமாதானம் செய்தது.
“எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்க?” குடிக்க நொங்கு சர்பத்தைக் கொடுத்துக் கொண்டே பாட்டி கேட்கவும்,
“ஸ்கூல்ல படிக்கிறது போதாதுன்னு ஒரு வருஷமா ஹிந்தி கிளாசுக்கு உன் அம்மா அனுப்பறாளே ஏதாவது கத்துகிட்டியா?”
“ம்ம் ம்ம்ம்” என்றான், வாயில் அகப்பட்ட நொங்கை மென்று கொண்டே.
“என் பேரு என்னன்னு கேளு பாப்போம்” சிரித்துக் கொண்டே பேரன் அருகில் அமர்ந்தார் பாட்டி.
“ஆப் கா நாம் கியா ஹே?” என்றான் சிறு புன்னகையோடே.
“நிஜமா ஹிந்தி பேச கத்துகிட்டியா கண்ணு?” எனச் சின்னவன் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் பாட்டி.
“அதுக்கு நீங்க என்ன சொல்லணும் தெரியுமா? மேரா நாம் விஜயா ஹே!” என்றான், ‘இன்னும் வேண்டும்’ எனும்விதமாக கண்ணாடிக் குவளையை நீட்டிக்கொண்டே.
“இத எல்லாம் இனி எப்போ கண்ணுல பார்ப்பியோ? இந்த கிழவிய பாக்க வருவியா கண்ணு?” என்றார், கையில் இருந்த மீதி பானத்தையும் அவன் குவளையில் ஊற்றியவர்.
“அது எப்படி நான் வராம போவேன்? அதெல்லாம் டான்னு லீவுக்கு ஃபிலைட்ல வந்திட மாட்டேன்?” என்றான்.
பாட்டிக்குப் பெருமை கொள்ளவில்லை என்றாலும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. மருமகன் மத்திய அரசாங்கத்தில் வேலை புரிய, அவருக்குப் புது தில்லிக்கு மாற்றம் வந்துள்ளது. ‘வந்துள்ளது’ என்பதை விட, கேட்டு வாங்கி சென்றிருக்கிறார் என்பதே சரி.
“ஏன் இப்போ?” எனக் கேட்டதற்கு, “அம்மா அப்பாக்கு வயசாகுது. பக்கத்துல இருந்தா பாத்துக்கலாம்” என்றார். சரிதானே… இவர்களுக்குத் தான் உறவென மகள் இல்லை, ஆனால் நகுலனுக்கு… நகுலனின் பெற்றோர் கான்பூரில் இருக்கத்தானே செய்கிறார்கள். நகுலன் தில்லிக்குச் சென்று மாதம் இரண்டு ஓடிவிட்டிருக்க, மனைவி மக்கள் இதோ… இந்த விடுப்பில் தில்லிக்குப் பயணப்பட்டுவிடுவர்.
“டெல்லிக்குப் போனதும் பாட்டிய மறந்திட மாட்டியே கண்ணு?” என்ற பாட்டியின் நா தழுதழுத்தது.
“பாட்டி… எதுவும் மாறாது. வாரத்துக்கு ஒரு நாள் ஃபோன் பேசலாம். எப்பவும் போல வருஷத்துக்கு ரெண்டு தரம் லீவுக்கு ஓடி வந்துடுவேன்” எனப் பாட்டியை சமாதானப் படுத்தினான்.
“ம்ம்” என்றவர் முந்தியில் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார். சென்னையில் இருக்கும் பொழுதே, ‘வேலை பளுவால் வர முடிவதில்லை’ எனக் கார் ஓட்டுநரோடு ரகுவை அனுப்பி வைக்கும் மருமகன், தில்லிக்குச் சென்றபின் பேரனை அழைத்து வந்துவிட்டுத் தான் மறு வேலை என நினைத்துக் கொண்டார் முதியவர்.
நாள் முழுவதும் எங்கும் செல்லாது அறையில் அடைந்து கிடந்தான் ரகு. கட்டிலில் படுத்திருந்தவன் கையிலிருந்த பந்து சுவரில் மோதி, நல்ல பிள்ளையாய் கைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது. அவனுக்கும் கை வலிக்கவில்லை பந்துக்கும் வலிக்கவில்லை. ‘எப்போ பேபி வருவா?’ என்பதை தவிர வேறு எண்ணமே அவனுள் எழவில்லை.
இரவு தாலாட்டு இல்லாது கண்ணயரப் பிடிக்கவில்லை. மாடிக்குச் சென்றான். தாத்தாவின் கயிற்றுக் கட்டிலில் விழுந்தான். நிலா மங்கையும் அவன் பேபியைப் போலவே காணாமல் போயிருந்தாள். வேப்ப மரம் பூக்களால் நிறைந்திருந்தது. சித்திரை வந்தாலே வேப்பம் பூ ரசம் மணக்கும் பேபியின் வீட்டில். ஐயாவோடு இவனும் அவளுமாகத் தான் பூக்களைச் சேகரிப்பர்.
இதோ… இந்தக் கட்டிலில் தான் வெள்ளை வேட்டியை விரித்து அதில் கழுவிய பூக்களை அம்மா உலர்த்துவார். இவர்கள் இருவரும் காவல் காப்பார்கள். இதை மட்டுமா காவல் காப்பார்கள்? மாவடு… எலுமிச்சை… உப்பிலும் பச்சை மிளகாயிலும் ஊற வைத்த, பெரிய துண்டுகளாக வெட்டிய பச்சை மாங்காய் கூட இங்கு தான் மண் சட்டியில் காயும். நிமிடத்திற்கு ஒரு முறை இருவரும் மாடிக்கு ஓடி வந்துவிடுவர்… இல்லாத காக்காவை விரட்ட. “ரெண்டு காக்காக்கும் முதுகுல நாலு வச்சா தெரியும்” எனப் பின்னோடு வரும் அம்மா இவர்களை விரட்டுவதெல்லாம் வேறு கதை.
பேபியின் வீட்டு மொட்டை மாடியில் நிலாச் சோறு ஊட்டுவார் அம்மா. அம்மா பேபிக்கு ஊட்ட, இவனுக்கு பேபி ஊட்டி விடுவாள். “நிலா பாரு… ஆஆ காட்டு. நிலா அம்மா அதோட பாப்பாக்கு சோர் ஊட்டுது பார். அது மாதிரி சமத்தா வாங்கணும்” என சந்திரிகா அவளுக்குக் கூறியதெல்லாம் இவனுக்கும் அவள் மூலம் வந்து சேரும்.
அன்னையாக மாறி, “ச்சாப்பிடு ல்லகு” என அன்போடு ஊட்டும் குட்டி கையில் இருக்கும் பருக்கைகளை ஆசையோடு வாங்கிக் கொள்வான் ரகு.
“நான் பெரியவன் ஆகிட்டேன். நான் உனக்கு ஊட்டுவேன்” என்ற இவன் கோரிக்கை அவள் காதுகளில் விழுந்ததே இல்லை. ஒற்றை எண்ணை வயதாக வைத்திருக்கும் போதே அந்த அலப்பறை செய்பவள் நாளையோடு பத்தை பூர்த்தி செய்திடுவாள். இனி அவளை கையில் பிடிக்க முடியாதே என நினைத்தவன் சிரித்தான்.
வந்ததும், “எஎன் பர்த்டேக்கு என்ன வாங்கி வந்திருக்க ல்ல்லகு?” என அவன் முன் வந்து நிற்பாள். அவன் காட்டப் போகும் பரிசு அவளுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என நினைத்துக் கொண்டான். அவளுக்கு வேண்டும் என்பதை இவனிடம் கேட்கத் தயங்குவதெல்லாம் இல்லை. மிட்டாய் எல்லாம் கேட்பதில்லை. பல நிறத்தில் எழுதும் பேனா, அழிப்பான் கொண்ட பென்சில், பொம்மை வடிவ அழிப்பான், கைக்கடிகாரம் என பலதும் பாட்டியின் மூலம் கேட்டிருக்கிறாள் இம்முறை. ஒவ்வொரு முறையும் இவனுக்குப் பரிசாக மயில் இறகில் இருக்கும் ஒற்றை மயிரை பிய்த்துத் தருவாள்.
“ப்பத்திரமா ந்நோட்டுக்குள்ள வை லகு. க்கலர் பென்சில் தூள் போடு. க்க்குட்டி போடும்” என அக்கறையாக அறிவுரை வந்துவிடும். அவனும் சென்ற வருடம் வரை அக்கறையாகப் பார்த்துக் கொண்டான். குட்டி போட்டது போலும் இருந்தது இல்லாது போலவும் இருந்தது. அதனால் பல வண்ண கிரையான் துகள்களை வைப்பான். இப்பொழுது, அவளுக்காக… அவள் நினைவாக புத்தகத்தின் நடுவே வைத்திருக்கிறான்.
பேபி, மயில் இறகோடு நின்றிருந்தாள். மயில் தோகை விரித்து அவன் முன் நடனமாடியது. வேப்பமரம் தாலாட்டு பாடியது கூடவே அங்கு வைத்திருந்த டேபிள் ஃபேனும். தூக்கம் கண்களை எப்பொழுதோ தழுவியிருக்க, தன்னையும் அறியாது ஒரு காலை மட்டும் போர்வைக்கு மேல் எடுத்துப் போட்டான். தன்னை மறந்து ரகு கண்ணயர்ந்தான்.