Skip to content
Post Views: 12,073
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 18
எல்லோர் முகமும் திகைப்பில் இருக்க, “என்ன ஆச்சு?” என்றார் தந்தை.
பிரவீனா சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்தினாள். அவளுக்கு மனதில் சொல்ல முடியாத அளவுக்கு குற்ற உணர்வு. கண் பார்வை படுக்கை அறை பக்கம் செல்ல, அடி வாங்கி சோர்வில் உறங்கும் மகனை கண்டு மனது வலித்தது.
“என்ன ஆர்த்தி ஆச்சு. நீ ஆதிரன் தான் பணம் எடுத்தான்னு தப்பா நினைச்சுட்டியா?” என்றான் பிரேம்.
Advertisement
“ஆமாங்க.. அவன் பையில பணம் பார்க்கவும்.. அவனா தான் இருக்கும்ன்னு நினைச்சுட்டேன்.அண்ணி கிட்ட வேற சத்தம் போட்டேன்” லேசான குற்ற உணர்வு அவள் முகத்தில்..
அதே நிலையில் தான் இருந்தார் மகேஸ்வரி. அவரும் வெளியில் காட்டி கொள்ளா விட்டாலும், பேரன் தான் எடுத்து இருப்பான் என்று நினைத்தார். வேற யார் அவனுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிரவீனா, பிள்ளையை தள்ளி கொண்டு அறைக்கு சென்றதும்.. பேரனின் அழுகை சத்தத்தில் மகள் அடிக்கிறாள் என்று தெரிந்தும் அமைதியாக இருந்தது குற்ற உணர்வை கொடுத்து. தப்பு செய்து இருக்க, அடித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் மிகுந்து இருந்தது.
Advertisement
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? சின்ன பையன் கையில பணம் கொடுத்தீங்களே, எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணாம். நாங்க என்னன்னு நினைக்கிறது?” கணவரை சாடினார் மகேஸ்வரி.
Advertisement
“காலைல போற அவசரத்துல, அவன சமாதானப்படுத்துவதற்காக பணம் கொடுத்துட்டு போனேன். அதுக்குள்ள நீங்க என் பேரன் மேல திருட்டு பட்டம் கட்டுவிங்களா? ஆர்த்தி புதுசு.. மருமகளுக்கு என்ன தெரியும். உனக்கு எங்க போச்சு அறிவு” என்று அவர் மனைவியை சாட,
இந்த பக்கம் பிரேமும் ஆர்தியை திட்டிக் கொண்டிருந்தான். அவளும் தன் சந்தேகத்திற்கு காரணத்தை அடுக்கிக் கொண்டிருந்தாள். வாக்குவாதம் பெருகி கொண்டிருக்க, பிரவீனா நிலை தான் சொல்லும் படி இல்லை. யார் என்ன சொன்னாலும், பெற்றவள் பிள்ளையை நம்பி இருக்க வேண்டும் அல்லவா…
எதுவும் சொல்லத் தோன்றாமல் தன் மகனோடு அறையில் முடங்கிக் கொண்டாள் பிரவீனா. அவளுக்கு யார் மீதும் கோபமோ, ஆதங்கமோ கூட வரவில்லை. இதில் முதல் குற்றவாளி அவள்தான்…
Advertisement
பொட்டு தூக்கம் இல்லாமல் நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள். இளங்கோவின் நினைவு வேறு அதிகரித்தது. தலைவலி விண்வென்று தெறிக்க தானாக கண்மூடும் சமயம், ஆதிரனுக்கு உடல் தூக்கி போட்டது. இதுவரை தன் நினைவில் மூழ்கிக் கொண்டிருந்தவள், அவசரமாக பிள்ளையை தூக்கிப் பார்த்தாள். காய்ச்சல் கொதித்தது.. அவன் போட்டிருந்த மேல் சட்டையும் தாண்டி அனல் அடிக்க பயந்து போனாள் பிரவீனா. அவசரமாக சட்டையை கழட்டி விற்று மகனை ஆராய்ந்து பார்த்தவள் மனம் நடுங்கிப் போனது. நன்றாக சிவந்த நிறம் ஆதிரன். இவளும் கரண்டியை வைத்து கண்மண் தெரியாமல் கொடுத்து இருக்க.. உடம்பு முழுக்க தடுப்பு தடுப்பாக ரத்தம் கட்டி சிவந்து போய் இருந்தது.
அப்போது தான் அவள் தப்பின் வீரியம் புரிந்தது. மகனுக்காக தான் வாழ்க்கை என்றவள், என்ன காரியம் செய்து இருக்கிறாள். அவள் மனமே அவள் தவறை மன்னிக்க மறுத்தது. பிள்ளை உடலின் வெப்பம் அதிகரிக்க.. இனி, தாமதிக்க முடியாது என்று புரிந்தவள் ஓடிப்போய் தந்தையை எழுப்பி வந்தாள்.
பதறி போய் பிள்ளையை ஹாஸ்பிடல் தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆதிரனுக்கு ஜன்னி காண, எல்லோர் முகத்திலும் அதீத பயம். பிரவீனா இறுகி போய் அமர்ந்து விட்டாள். தாயும், தந்தையும் அவ்வளவு பேச்சு. அப்படி போட்டு அடித்ததால் தான் பயத்தில் பிள்ளைக்கு முடியாமல் போயிருக்க… தப்பு முழுக்க பிரவீனா மீது தான் திரும்பி விட்டது.
அவளும் மறுக்க வில்லை. அவளின் நிதானமின்மை, பொறுமையின்மை தன் பிள்ளையை அல்லவா வேதனைக்குள்ளாகி விட்டது. அந்த மருத்துவமனை வளாக டாக்டர் மாலதி, இவளது தோழி தான்.
“என்னாச்சு பிரவீ உனக்கு? எப்ப இருந்து இவ்ளோ மூர்க்கம்மா மாறிப்போன.. உடம்பு முழுக்க செவந்து போற அளவுக்கு அப்படி என்னடி கோபம் உனக்கு.. வேற யாராவது இருந்தா போலீஸ் கேஸ் ஆகும் தெரியுமா!.. நான் பார்த்த அமைதியான, அடக்கமான பிரவீனாவா நீ, சந்தேகமா இருக்கு? உனக்கு பிறந்தா நீ என்ன வேணா செய்யலாமா?” தோழியும் அவளையே குற்றம் சொல்ல இன்னும் உள்ளுக்குள் இறுகிப்போனாள் பிரவீனா.
ஒரு நாள் முழுக்க ஆதிரன் மருத்துவமனை வாசம் தான். மறுநாள் எப்பவும் போல வரும் நேரத்திற்கு பிரவீனா ஆபீஸ்க்கு வராமல் போக, கேள்வியாக சாய் ஸ்ரீயை பார்த்தான் மித்ரன் . அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. முன்பே லீவ் என்றால் தன்னிடம் சொல்லி இருப்பாளே அல்லது ஒரு மெசேஜ்சாவது போட்டு இருப்பாளே…
அவசரமாக செல்லை எடுத்து பிரவீனாவுக்கு அழைக்க, அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க பயத்திலும், குற்ற உணர்விலும் மனம் இறுகிப்போய் கிடந்தவள்.. தோழி அழைக்கவும் அழுது கொண்டே உண்மையை சொல்லிவிட்டாள்.
அதற்கு அடுத்து சாய் ஸ்ரீக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவளும் மித்ரனிடம் நிலைமையை விளக்கி ஹாஸ்பிடல் நோக்கி விரைய… அதற்கு மேல் மித்ரன் எவ்வாறு பொறுப்பான். அவனும் ஆதிரனை பார்க்க வந்து விட்டான், உடன் ரஞ்சனும்…
பிரவீனா நிலை புரிந்ததாலோ என்னவோ அவள் நட்பு வட்டம் ஆறுதல் சொல்ல தேடி வந்து விட்டது. பிரவீனா வீட்டு ஆட்களும் அங்குதான் இருந்தார்கள். காலையில் லேசாக முழித்துப் பார்த்த ஆதிரன், திரும்பவும் உறங்கத் தொடங்கி விட்டான். ஆகாரம் என்று எதுவும் கொடுக்கவில்லை. பிள்ளையின் உடல் சூடு குறையாமல் இருந்தது…
“பைத்தியக்காரி. அவன் என்னடி உனக்கு பாவம் பண்ணான். உன் வயித்துல பிறந்தது தான் அவன் பண்ண பாவம். நாம பெத்த பிள்ளையா இருந்தாலும் கண்டபடி அடிக்க நமக்கு உரிமை இருக்கா? தப்பு பண்ணா, எல்லா பெத்தவங்களும் தான் பிள்ளையை அடிப்பாங்க. ஆனா, உன்னை மாதிரி இப்படி ஹாஸ்பிடல்ல படுக்க வைக்கிற அளவுக்கு அடிக்க மாட்டாங்க பிரவீனா”என்று சாய் ஶ்ரீ கத்த,
“உன் இயலாமையையும், கோபத்தையும், அழுத்தத்தையும் காட்டுகிற இடம் உன் மகனா பிரவீனா?” என்றான் மித்ரன்.
அவனின் வார்த்தைகள் அவளை மிக காயப்படுத்தியது.
“சார், என் சூழ்நிலை அப்படி. இதுவரைக்கும் அவன் கையில நாங்க யாரும் பணம் கொடுத்து பழகல.. காணாம போச்சுன்னு சொன்ன பணம் அவன் பையில இருக்கவும் என்னால நம்பாம இருக்க முடியல… எம் மகன் தப்பா போயிட்டான்ற கோபம். அப்பா இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு நாம தான் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோமோ அப்படின்ற ஆதங்கம். எல்லாரும் சொல்ற மாதிரி அடிச்சு வளக்காதனால, அவன் தப்பா வளந்துட்டானோ? அவனும் சேட்டை பண்றவன் தான்”என்று பிரவீனா விளக்கம் கொடுக்கும்போதே,
“சேட்டை பண்ற குழந்தை தவறு செய்ற குழந்தையா இருக்கும்ன்னு உனக்கு யார் சொன்னது பிரவீனா?” என்றான் மித்ரன்.
“மித்ரன் சார்” என்றாள் தவித்து போய்…
“ஆதிரன் ரொம்ப ஆக்டிவ்வா இருப்பான். துறுதுறுன்னு ஓடுவான். நம்ம கண்ட்ரோல்ல நிக்க மாட்டான். நாட்டி பாய்.. அதுக்காக அவன் திருடிட்டானு சொல்றது.. எப்படி நீ யோசித்த பிரவீனா?” அவன் எப்போதோ ஒருமைக்கு தாவி இருந்தான்.
அவளால் வாய் திறந்து பதில் சொல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் இதையெல்லாம் எங்கே அவள் யோசித்தாள்.
“உங்க வீட்ல இத்தனை பேர் இருக்காங்க. எல்லாருமே பணத்தை பாதுகாப்பாவா வச்சிருக்காங்க. டேபிள்ல, சேர்ல வேற எங்கேயோ வச்சுட்டு போயிருக்கலாம். இதுவரைக்கும் ஆதிரன் அப்படி வச்சுட்டு போன பணத்தை எடுத்து இருக்கானா? எதையும் யோசிக்கலயா பிரவீனா நீ” குரல் கோபமாக வந்தது மித்ரனுக்கு…
இல்லையே.. அந்த நேரம் அவள் எங்கே யோசித்தாள். ஆர்த்தி பேசிய பேச்சும், மகேஸ்வரின் பார்வையுமே அவளுக்கு மகன் மீதான நம்பிக்கையை சரிய செய்தது. மித்ரன் சொன்ன பின், அவ்வாறு ஏன் யோசிக்கவில்லை என்று நொந்து கொண்டாள் மனதில்…
பொதுவாகவே வீட்டில் காய்கறி வாங்கிய பணம், வீட்டு செலவுக்கு தேவையான பணம் என்று எல்லாமே டேபிளில் தான் வைத்து செல்வார் தந்தை. இதுவரை ஒருநாள் கூட அந்த பணத்தை மகன் தொட்டதில்லையே!.. கொஞ்சம் பொறுமையாக கேட்டு இருக்கலாம் மனம் நொந்து கொண்டது.
“அவனை யாரு ஒரு வார்த்தை சொன்னால் என் மனசு பொறுக்க மாட்டது. இப்படி ஒரு பேச்சு வாங்கிட்டானே என்ற கோபம். இவனுக்காக தானே நான் வாழ்கிறேன் அந்த ஆதங்கம் எல்லாம் சேர்ந்து…” திணறிப் போனாள் பெண்.
பிரவீனாவுக்கு தன் நிலையை புரிய வைக்க வார்த்தைகளை கோர்க்க தெரியவில்லை. எத்தனை விதமான நியாயமான வார்த்தைகளை தேடினாலும், செய்த செயல் அநியாயம் அல்லவா!.. அதுவும் ஒரு ஐந்து வயது சின்னப் பையனுக்கு?…
“பிரவீனா இந்த உலகத்துல குற்ற படுத்தாத, விமர்சனங்களை எதிர்கொள்ளாத ஒரு மனுசன் கிடையவே கிடையாது. ஆதிரன் உங்க பையன். அவனுக்கான கிரெடிட் நீங்க தான் கொடுக்கணும்.. அதையே வெளி உலகத்துல எதிர்பாக்குறீங்க..” என்று மித்ரன் சொன்னதும்,
ஆர்த்தி முகம் தூக்கி அவனை பார்த்தாள். “இவன் எனக்கு அண்ணன் தானே.. என்னதான் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் நான் இவன் சொந்தம் அல்லவா! தன்னை தெரிந்த மாதிரி கூட காட்டிக் கொள்ளவில்லையே”
உண்மையில் மித்ரன், ஆர்த்தியை தன் சொந்தமாக நினைக்கவே இல்லை. அந்த நேரம் அவனுக்கு தெரியவும் இல்லை. அவன் சொந்த ரத்த உறவுகளை ஒரு எல்லைக்கோட்டில் நிறுத்துபவன், ஒன்றுவிட்ட சொந்தத்தை எல்லாம் யார் என்று தான் கேட்பான். அவன் எல்லைக் கோட்டைக்கு தாண்டி உள் நுழைந்து ஆட்சி செய்வது பிரவீனா மட்டும்தான்.
பிரேமின் பார்வையும் மித்ரனை வட்டமிட்டது. அவனின் பேச்சும், உரிமையான நடவடிக்கையும் ஒரு நட்புக்கான அடையாளமாக தெரியவில்லையே?…
“எல்லா பெத்தவங்களும் பிள்ளையை யாரும் ஒரு குறை சொல்லக்கூடாதுன்னு தான் நினைப்பாங்க சார். நானும் அப்படித்தான். இந்த வாழ்க்கையே அவனுக்காக தான்” கண்களில் நீர் மல்க சொன்னாள் பிரவீனா.
“நீங்கதான் அவனோட தாய் பிரவீனா. அப்ப அவனோட வாழ்க்கைக்கான பொறுப்பு உங்களுக்கு தான் இருக்கு.. அது ஒன்னும் தியாகம் கிடையாது. அப்படியே அது தியாகம் இருந்தாலும் நீங்க அவனுக்காக இருந்த மாதிரி, அவன் உங்களுக்காக இருக்கணும்னு நினைக்கிறது நியாயமே கிடையாது. அஞ்சு வயசு சின்னப் பையனுக்கு உங்களோட தத்துவமும், கோட்பாடும் புரியாது. ஆயிரம் ரூபாயோட மதிப்பு தெரியுமா அவனுக்கு… ஒரு பொருளோட மதிப்பு தெரிஞ்சா தானே அதை திருட முடியும். ஆதிரனுக்கு அவன் கையில இருக்கிற காசோட மதிப்பு தெரியாதுன்னு போது அதை அவன் எடுத்து வச்சு என்ன பண்ணப் போறான். ஒரு சின்ன லாஜிக்கா கூட யோசிக்க தெரியலையே உங்க யாருக்கும்?” எல்லோரையும் குத்துவது போல கேள்வி கேட்டான் மித்திரன்.
“இந்த தற்குறிக்கு இதெல்லாம் புரியாது சார். அவளுக்கு யாரும் ஒரு வார்த்தை அவளை சொல்லிட கூடாது. அவள் பிள்ளையும் சொல்லிடக்கூடாது. அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து சாகணும்னு நினைப்பா” கடுப்பாக சொன்னாள் சாய் ஸ்ரீ.
“ஏன் பிரவீனா இன்னைக்கு அவன் பணம் எடுத்து இருப்பான்னு சொன்னதும், நம்புன நீ… நாளைக்கு அவன் இருக்கிறதே கஷ்டம்னு சொன்னா என்ன பண்றது உத்தேசம்” என்று சாய் ஶ்ரீ கேட்க.
அவள் வீட்டு அட்களுக்கு லேசாக கோபம் வந்தது. ஏதோ அவளுடன் வேலை பார்ப்பவர்கள் அக்கறையில் உடன் இருக்கிறார்கள். சில வார்த்தைகள் பேசுகிறார்கள் என்று விட்டால், தங்கள் குற்றம் சொல்வது போல பேசுகிறார்களே என்று கோபம் வந்தது.
மித்ரன் யாரையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டான். எந்த இடத்திலும் என் நிலைப்பாடு இது என்பதை உடைத்து பேசி விடுவான். பிரவீனா மாதிரி முகம் பார்த்து, தயங்கி, சங்கடப்பட்டு நிற்கும் குணம் மித்ரனுக்கு கிடையாது. அதனாலே அவர்களை வைத்துக் கொண்டு அவன் மனதில் தோன்றுவதை பேசினான்.
“பிரவீனா லீசன். இந்த உலகமும், நீ நம்புற சமுதாயமும் என்ன சொல்லணும்னு பார்த்து, பயந்து, நீ வாழ்கிற மாதிரி ஆதிரனை கொண்டு வர முடியாது. அவன் ஒரு தனி மனுசன். அவன் விருப்பத்துக்கு தான் அவள் வாழ்வான். அப்பா இல்லன்றது நிச்சயம் அவனுக்கு வலி தான். ஆனா, ஆதிரன் வாழ்க்கைக்கு அது ஒரு குறைபாடு கிடையாது. நமக்கு அப்பா இல்லை. அதனால, பல இடத்துல அனுசரிச்சு, ஒதுங்கி அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்னு அவசியம் கிடையாது. ஒரு குழந்தைக்கு அம்மா அப்பா இரண்டு பேரும் இருந்தாலுமே இந்த உலகம் நமக்கு என்ன சொல்லிக் கொடுக்குதோ, நம்ம என்ன பார்த்து, பழகி, படிச்சு வாரமோ அதுதான் நம்ம எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்றவன்,
“நான் உண்மையா ஒரு வார்த்தை சொல்லவா பிரவீனா. இன்னைக்கு ஆதிரனுக்கு வயசு அஞ்சு. நீ அடிச்சாலும் திரும்ப அம்மான்னு உன்ன தேடி வர வயசு. அப்பா இல்லாத குறை தெரியாம நீ வளர்க்கிறேன்னு நினைச்சுட்டு இருக்க… இதே மாதிரி மத்தவங்களை பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் நீ ஆதிரனை நடத்தினேனா? கண்டிப்பா அவன் ஃபீல் பண்ணுவான். நமக்கு அப்பா இல்லையேன்னு பீல் பண்ணிடுவான். என்ன தான் நீ அவனுக்காக இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்துல நமக்கு அப்பா இருந்திருக்கலாமோ!.. அப்படின்ற உணர்வை நீ கொடுத்துடுவ பிரவீனா. ஒருவேளை இளங்கோ உயிரோட இருந்தா, இந்த சிச்சுவேஷனை அவர் எப்படி ஹேண்டில் பண்ணி இருப்பாரு.. உன்ன மாதிரி கண்மூடித்தனமா மத்தவங்க சொன்னதை கேட்டுட்டு பிள்ளையை அடிச்சு ஹாஸ்பிடல் அனுப்பி இருப்பாரா?” என்று நறுக்கென்று மித்ரன் கேட்டதும், பிரவீனா இதயத்தில் ஒரு வலி.
உண்மைதானே அப்பா இல்லாத பிள்ளையை சரியாக வளர்க்கணும் என்று அப்பா இல்லாத வலியை ஆதிரனுக்கு கொடுத்து விட்டோமோ என்று பயமாக இருந்தது பிரவீனாவுக்கு…
“இங்க பாரு பிரவீனா, ஒரு விஷயம் தான் ஒன்னு ஒத்து வாழு, இல்லன்னா அத்து வாழு… உன் கையில இருக்குறது அஞ்சு வயசு சின்ன பையன். இப்போதான் அவன் நிறைய விஷயங்களை கத்துக்கவும், தெரிஞ்சிக்கவும் ஆரம்பிப்பான். என்னதான் நாம நல்ல படிப்பையும் வசதியான வாழ்க்கையையும் கொடுத்தாலும்.. சரியான குடும்ப சூழ்நிலையும் கொடுக்கணும்… அதற்கு ஒரு பெரிய உதாரணமா நானே இருக்கேன் பிரவீனா. எங்கிட்ட அவ்வளவு பணம் இருந்துச்சு, வசதியான வாழ்க்கை இருந்துச்சு ஆனால், நல்ல குடும்ப சூழல் இல்லை. நான் என்ன கண்டேனோ அந்த மாதிரி நான் வளர்ந்து வந்துட்டேன். இதுல நான் முழுசா பாதிக்கப்பட்டதால தைரியமா எடுத்து சொல்ற கடமை எனக்கு இருக்கு… இப்போதைக்கு ஆதிரனுக்கு நீ அடிச்சது மட்டும் தான் அவன் மனசுல இருக்கும். தன் மேல விழுந்த பெரிய பழி அவனுக்கு தெரியாது. ஆனால், விவரம் புரியும்போது? இனி நீதான் யோசிக்கணும்”என்று முடித்து கொண்டான் மித்ரன்.
மித்ரன் பேச்சு பிரேமுக்கு அவ்வளவு கோபத்தை கொடுத்தது. இவன் யார் எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட? ஆனால், வாய் திறக்கவில்லை. ஒன்று இதில் பெரிய தவறு தன் மனைவி மீது தான் இருக்கு.. மற்றொன்று பிரவீனா அவனை தட்டியோ, எதிர்த்தோ பேசவில்லை. ஆக, மித்திரனின் பேச்சை பிரவீனா ஆதரிக்கிறாள். இன்னும் ஆதிரன் வேறு கண் விழிக்காமல் இருக்க, வேற யாராலும் எதுவும் பேச முடியவில்லை. ஆதங்கத்தில் சாய் ஸ்ரீ தான் கத்தி கொண்டு இருந்தாள்.
பிரவீனா பெற்றோர் கூட ஆச்சரியப்பட்டு போனார்கள். மிக அமைதியான பெண்ணான பிரவீனாவுக்கு இவ்வளவு அருமையான நட்புகளா?.. பிரவீனாவின் தந்தைக்கு மித்ரன் மேல் ஒரு பெரிய மரியாதையே வந்தது அவன் தங்களை தான் குற்றவாளி என்று மறைமுகமாக சாடுகிறான் என்று அறிந்தாலும்.. அவன் பேச்சில் உள்ள நியாயம் அவர் மனதை சுட்டது. சாஃப்ட்வேர் லைனில் இருந்தாலும் ஆண் நட்புகளோடு ஒரு அடி தள்ளி நின்றே பழகும் பிரவீனாவுக்கு மித்ரன் எவ்வாறு இவ்வளவு நெருக்கமான நண்பன் ஆனான். யோசனையானார் தந்தை.
ஆதிரன் லேசாக கண் விழித்தான். அம்மா என்று தான் முதலில் அழைத்தது.. பிரவீனாவுக்கு கண்களில் நீர் வழிந்தது. தன்னால் அல்லவா பிள்ளைக்கு இந்த நிலைமை… மித்ரன் சொன்னது போல தான் சரியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?..
ஆதிரனுக்கு உடல் சூடு இன்னும் குறையவில்லை. நேத்து ராத்திரி முழுக்க குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. காலையில் கொஞ்சம் சரியாகத்தான் இருந்தான். தற்போது திரும்பவும் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மித்ரன் சென்று பிரவீனாவுக்கு இட்லியும், டீயும் வாங்கிக் கொண்டு வந்தான்.
பிள்ளைக்கு இன்னும் எதுவும் உணவு கொடுக்கப்படாமல் இருக்க, தான் மட்டும் எவ்வாறு உண்பது என்று பிரவீனா மறுத்தாள். சற்று நேரத்துக்கு முன்பு தான் பிரவீனா பெற்றோர் கிளம்பி சென்று இருந்தார்கள். இரவு முழுக்க யாரும் வீடு செல்லாமல், உடை கூட மாற்றாமல் இருந்ததால் பிரவீனா நண்பர்கள் வந்ததும் அவர்களிடம் விட்டுவிட்டு, இவர்கள் கிளம்பினார்கள்.
“பிரவீனா, எங்க எல்லாருக்கும் ஆதிரன் மேல பாசம் இருந்தாலும், அவன் கண் திறந்ததும் அம்மானு உன்னை தான் தேடுவான். அவன தூக்கி வச்சு சமாதானப்படுத்தவாது உனக்கு தெம்பு வேணும்ல.. ஒழுங்கா சாப்பிடு” என்று ஒரு அதட்டல் போட, அதன் பின்பு தான் பிரவீனா உணவை கையில் தொட்டாள்.
இது எதுவும் பிரேமின் கண்களுக்கு தப்பவில்லை. அவன் மனதில் என்னவோ ஒரு நெருடல். மாசமாக இருக்கும் பெண் என்று ஆர்த்திக்கு உணவை அவன் கவனித்தான் தான். ஆனால், பிரவீனா இருக்கும் மனநிலையில் அவள் உண்ண மாட்டாள் என்றே தவிர்த்தான். ஆனால், அதைக் கூட கருத்தில் வைத்து மித்ரனின் கவனிப்பு.. அவன் மனதில் நெருடலை உண்டு பண்ணியது.
ஆதிரன் கண் விழிக்க காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் மூன்று முறை பிரவீனாவுக்கு டீ வாங்கிக் கொடுத்து விட்டான். பத்து முறை எழுந்து ஆதிரன் அறையை எட்டிப் பார்த்து விட்டான். அவ்வளவு ஏன் சீப் டாக்டரிடம் கூட சென்று வேற ஹாஸ்பிடலுக்கு மாற்றலாமா என்றெல்லாம் கேட்டு வந்தான். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் மகன் மீது அப்படி என்ன அக்கறை.. மித்ரன் பார்வை ப்ரேமுக்கு சரியாக படவில்லை. நிச்சயம் அவன் பார்வையில் நட்பை தாண்டி ஏதோ ஒரு பாசம், உரிமை, அக்கறை தென்பட்டதை உணர்ந்தான்.
அடுத்து ஆதிரன் கண் விழித்து தாயை தேடியதும் பிரவீனாவோடு உடன் நின்றது மித்ரன் தான். மித்ரன் மிக கவனமாக தன்னோடு சாய் ஸ்ரீயை நிறுத்தி கொண்டான். தனியாக என்றால் பிரவீனா கூட கண்டு கொள்வாள் அல்லவா… ஆனால், ஏற்கனவே ஒருத்தன் கண்டு கொண்டான் என்பதை அவன் அறியவில்லை. அப்படி அறிந்தாலும், அதற்கெல்லாம் பயந்து ஒதுங்கும் ரகமும் மித்ரன் இல்லை.
உணர்ச்சியின் பிடியில் ஆதிரனை பிரவீனா அழுத்திப் பிடிக்க,
“அவனை கொஞ்சம் ஃப்ரீயா விடு பிரவீனா. அவனுக்கு எதுவுமே தெரியல பாரு, உன்னை பார்த்து சிரிக்கிறான்”
“நீங்களே அவனுக்கு சொல்லிக் கொடுப்பீங்க போல மித்ரன் சார்” மகன் கொஞ்சம் நன்றாகவும் பேச்சு வந்தது அவளுக்கு…
“சொல்லாம என்ன சார் எழுந்து வரட்டும், ஒரு ரெண்டு நாளைக்காவது நான் எங்க வீட்டுக்கு கடத்திட்டு போயிடுறேன்” என்று உண்மையாகத்தான் சொன்னான். பிரவீனா தான் ஏதோ கிண்டல் அடிக்கிறான் என்று அமைதியாக இருந்தாள்.
மித்ரன் சொன்னது போல ஆதிரனுக்கு தன் மேல் விழுந்த குற்றம் தெரியவில்லை. அவ்வளவு கோவமாக இருந்த தாய், தன்னோடு சமாதானம் ஆகிவிட்டாள், தன்னை கொஞ்சுகிறாள் என்பதே பெரிய விஷயமாக இருந்தது. குழந்தை அல்லவா உடனே சமாதானமாகி தாயிடம் ஒட்டிக்கொண்டான்.
மித்ரன், ஆதிரனுக்கு பழச்சாறு வாங்கி வந்து குடிக்க வைத்தான். பிரவீனா மனதில் எழுந்த நன்றி உணர்ச்சிக்கு அளவே இல்லை. எத்தனை நல்ல நட்புகளை கடவுள் தனக்கு கொடுத்திருக்கிறார். தன் மகனுக்காக தன்னோடு சண்டை போட்டானே.. எவ்வளவு உன்னதமான நட்பு அவனோடது.. மனதில் சிலிர்த்துக்கொண்டாள்.
பல மணி நேரம் உறக்கத்திலிருந்து எழுந்த பிள்ளை வெளியே செல்ல அடம் பிடிக்க, ட்ரிப்ஸ் ஏத்திய கை வேறு வீங்கி இருந்தது. பிரவீனா மகனை அதட்டிக் கொண்டிருந்தாள்.
“விடு பிரவீனா, அவன் சின்ன பையன். ரொம்ப நேரம் ஒரே அறையில் எப்படி அடைந்து கிடப்பான். நீ, சாய் ஸ்ரீ கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. நான் அவனை வெளியே தூக்கி வச்சுட்டு இருக்கேன்” என்றவன், அவன் கை அசையாதவாறு பிடித்துக்கொண்டு தன் தோளில் போட்டபடி வெளி வராண்டாவில் நடந்து கொடுத்தான்.
ஆதிரனுக்கு அவனை கண்டதும் ஒரே குஷி. தான் வாங்கிய அடி கூட பின்னால் போய்விட்டது. இருவரும் நிறைய நிறைய பேசி சிரித்தார்கள். மித்ரன் மெல்ல மெல்ல அவனிடமிருந்து என்ன நடந்தது என்ற விஷயத்தை வாங்கினான். பிள்ளை தனக்கு விழுந்த அடியை பற்றி சொல்லவும், மித்ரனுக்கு, பிரவீனா மீது அவ்வளவு கோபம். எப்பவும் செல்லம் கொஞ்சம் தாய் கோபமாக அதட்டிக் கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறான் பிள்ளை. அதுவே, அவன் மீது குற்றம் நிரூபணமாக போதுமாக இருந்தது போல…
மதியத்துக்கு மேல் நன்றாக இருந்த ஆதிரன் மாலை ஆறு மணிக்கு மேல் திரும்ப காய்ச்சல் கொதிக்க ஆரம்பித்தது. அவள் பெற்றோரும் வந்திருக்க எல்லோருக்கும் பயமும், பதட்டமும்… யாரைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் மித்ரன் தான் ஆதிரன் உடன் நின்றது.
வலியில் பிள்ளை அனத்த தொடங்க மித்ரன் தான் இறக்கி விடாமல் தூக்கி வைத்து இருந்தான். அவனுக்கே தன் செயல் அதிகப்படியோ என்று தோன்றியது. அந்த அளவுக்கு ஆதிரன் மேல் உரிமையாக நின்றான் மித்ரன். அந்த உரிமையின் அளவு என்ன என்பதை அவன் நன்றாக அறிவான்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிவாக முடிவெடுத்த பின் தான் உரிமையாக பிரவீனா அருகில் வந்து நின்றது. ஆதிரனுக்கு நரம்பு ஊசி போட, நரம்பைத் தேட கையில் சிக்கவே இல்லை. ஏற்கனவே ட்ரிப்ஸ் ஏத்தி ஏகத்திற்கும் கை வீங்கி இருந்தது. இப்போது ஆதிரன் சத்தமாக அழ ஆரம்பித்தான்.
எங்கும் நரம்பு கிடைக்காமல் போக மித்ரன் தான் சின்னவனின் கால் கட்டை விரலை அழுத்தி பிடித்து ஊசி போட உதவியது. நல்ல வலி பிள்ளைக்கு… அவ்வளவு சத்தம் போட்டான் ஆதிரன். மகனின் அழுகையும் வேதனையும் பிரவீனாவுக்கு நிற்காமல் கண்களில் நீர் வழிந்தது. அவளால் மித்திரன் போல அருகில் நிற்கவே முடியவில்லை. மகனின் அழுகை சத்தம் அவள் மனதை பதற வைத்தது.
எல்லோரும் அழும் பிள்ளையை சமாதானம் செய்ய, ஆதிரனை தூக்கிப்பிடித்து இருந்த மித்ரனின் கண்கள் கலங்கியது. தன்னையும் மீறி நெஞ்சு துடித்தது. மித்ரன் நிறைய விஷயங்களை வாழ்க்கையில் கடந்து வந்தவன் தான். எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று தள்ளியவன் தான். அவனுக்கே ஆதிரன் அழுகை நடுங்க வைத்தது.
மித்ரன் கண்களில் கண்ணீரை பார்த்த பிரவீனா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். இவள் பெற்றவள்.. பிள்ளையின் அழுகையை பார்த்து, இவளுக்கும் அழுகை வருகிறது. இவன் யார்? வெறும் நட்பு தானே.. எதற்காக இவன் கண்கள் கலங்க வேண்டும். இதன் அர்த்தம் என்ன? பிரவீனா நெஞ்சம் பயத்தில் துடித்தது.
ஆதிரன் அழுகை நின்றதும், பிள்ளையை பெற்றவளிடம் கூடத் தராமல் மித்ரன் தூக்கி வைத்து நின்றான். ஆதிரன் அழும்போது இருந்து மித்ரன் தூக்கி வைத்திருப்பதால், சின்னவனும் அவனிடம் அழுகாமல் இருப்பதால், யாருக்கும் ஒன்றும் தெரிய வில்லை.
ஆனால், பிரவீனா விடவில்லை. வேகமாக மித்ரன் அருகே சென்றவள் பட்டென்று பிள்ளையை பிடுங்கிக் கொண்டாள். தா என்று கூட கேட்காமல் பிள்ளையை பிடுங்கிய விதம் மித்ரனை யோசிக்க வைக்க.. அவன் மெதுவாக பிரவீனா கண்களை ஆழம் பார்த்தான்.
பிரவீனா மறுபக்கம் திரும்பிக் கொள்ள, லேசாக சிரித்தவன்..
“இனி, நீங்க ரெண்டு பேரும் என்னோட பொறுப்பு தான் பிரவீனா” என்றான் மித்ரன் அழுத்தமாக…
error: Content is protected !!