32.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,949
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 32.1
…………………………………………
ராகமாய் “தாச்சா ஆந்திஈஈ” என அழைத்துக் கொண்டே அலுவலக அறைக்குள் துள்ளிக் குதித்து ஓடிவந்த குட்டி புயலைக் கண்ட மாத்திரத்தில் தாக்ஷாயினியின் முகம் மலர்ந்து போக, “வாங்க வாங்க வாங்க…” என ஆசையோடு குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள்.
Advertisement
“உம்மா” எனச் சத்தம் வரக் கன்னம் இரண்டிலும் அழுந்த முத்தம் கொடுத்தவள், “என் குட்டி பேபி எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே தன் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தாள்.
“ஹய்” எனக் கையசைத்தவாறே கௌதமன் வந்து கொண்டிருக்க, தாக்ஷாவின் முகம் புன்னகையில் வசீகரித்தது.
“அம்மாவும் பொண்ணும் செட்டில்டா?” எனக் கௌதமன் முடிக்கும் முன், “அச்சோ அம்மா எங்க?” என மகள் அங்கும் இங்குமாக தலையை உருட்ட, கௌதமனுக்கு தலையைச் சுற்றியது. இப்பொழுது இவள் அம்மா புராணத்தை ஆரம்பித்தால் யார் இவளின் புலம்பலை நிறுத்துவது?
Advertisement
“அம்மா இங்க இருக்கேன்” என்ற தாக்ஷா, “பிளே ஏரியால புதுசா அந்தரத்துல நெட் போட்டு, அது பூரா பால் போட்டிருக்கோம். அங்க விளையாடலாமா?” எனக் கேட்டதும், போகத் தயாரான குழந்தை, “ஓ எஷ் போளாம் போளாம்” என தாக்ஷாவின் கரத்திலிருந்து இறங்கினாள்.
Advertisement
கௌதமனின் கண்கள் வரவேற்பறையை அலசியது. ஒரு வருடம் முன் வந்தது, அப்பொழுது இந்தக் குடில் இருந்திருக்கவில்லை. முன்பிருக்கும் அந்த பெரிய கட்டிடத்தில் ரிஷப்ஷன், டைனிங், பிசினஸ் எனப் பல அறைகள் இருக்க, அதில் ஒன்றாக அலுவலக அறை இருந்தது.
“தனி ஸ்பேஸ்சா இருந்தா நல்லா இருக்கும்ன்னு இங்க ஷிப்ட் ஆகிட்டேன். யாராவது பாக்க வந்த ஹால்ல வச்சு பேசி அனுப்பிடுவேன். ஆஃபீஸ் ரூம்ல ஒருத்தருக்கும் அனுமதி இல்ல. அப்பறம் ரெஸ்ட் எடுக்க தோணினா, அதுக்கு ஒரு பெட் ரூம்” என மூன்று அறைகளையும் சுற்றிக் காட்டினாள்.
பட்டு திரைச்சீலைகள், இயந்திரங்களை விடுத்து கரங்களால் வடிவமைக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் என ராஜா காலத்து உள்ளமைப்போடு மூன்று அறைகள் கொண்ட அந்தக் குடில் செல்வத்தில் புரண்டு எழுந்திருந்தது.
Advertisement
கலை நுட்பத்தோடு இருந்த குடிலின் அழகைப் பருகியவன், “உன் ஆஃபீஸ் இன்டீரியர் ரொம்ப அழகா இருக்கு” எனப் பாராட்டவும் செய்தான்.
“ஆல் தேங்க்ஸ் டூ அவர் ஆர்டிஸ்ட் அக்ராஸ் இண்டியா. தோக்கரா மெட்டல் கிடாஃப்ட், ஜெய்பூர் பிளூ பாட்டரி, ஒடிசாவோட பட்டாச்சித்ரா பெயின்டிங்… எக்சட்ரா எக்சட்ரா. எல்லாமே மேட் இன் இண்டியா… ஹேண்ட் கிராப்டட் பை அவர் லோக்கல்ஸ். திறமை இருந்தும் பிரபலம் ஆகாத கலைஞர்களை தேடிப்பிடிச்சு, நேரடியா அவங்கட்ட இருந்து வாங்கறோம். இந்த குடில்ல மட்டும் இல்ல… இங்க இருக்க எல்லாக் குடிலும் ஒவ்வொரு மாநிலத்தோட செட்டப்ல இருக்கும். கைவினைக் கலைஞர்களுக்கு என்னால முடிஞ்ச வேலை வாய்ப்பு திட்டம் ” என்றவளை எப்படிப் பாராட்டாது இருப்பான்.
“அப்போ இந்த ஃபர்னிச்சர்ஸ் எல்லாமே ஹேண்ட் கிராப்டட்டா? அமேசிங்” என மேசையின் வேலைப்பாட்டில் லயித்து நின்றான்.
“ஓ.. யா. சகாரன்பூர் உட் கார்விங்க்ஸ். இங்க ராயல் ரூம்ல பெட் ஃபிரேம்ம காட்டுறேன். அசத்தலா இருக்கும். ஒவ்வொரு ஸ்வீட்டும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டில இருக்கும்”
தாக்ஷா காட்டிய மரக் குதிரையோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, “அப்பா பிக் ஹாஸ் கேட்டிங் போயிங்க… வாங்க பாலுங்க” என அப்பாவின் கரம் பற்றி இழுக்க, மகள் கூறியது அவனுக்கு எங்குப் புரிந்தது?
நான்கு சக்கரப் பலகையின் மீது, மகள் உயரத்திற்கு இருந்தது மகள் காட்டிய அழகிய குதிரை. “அப்பா பாலுங்க…” என அவள் இழுக்க, அவளோடு சக்கரக் குதிரையும் உருண்டு வந்தது.
“ஹார்ஸ்… ஸ்கேட்டிங் போகுதுன்னு சொன்னீங்களா பேபி?”
“எஸ் அப்பா. பிக் ஹாஸ் கேட்டிங் போயிங்க” என கைக் கொண்டி மகள் சிரித்தாள்.
“இது டிராஜன் ஹார்ஸ் டா பேபி” என்பதோடு நிறுத்தாது, குதிரைக்கு… அதுவும் மரக்குதிரைக்கு இவ்வளவு மரியாதை தேவையா? என நினைத்தவன், “பேபி… ஹியூமன்ஸ்க்கு மட்டும் வாங்க போங்கன்னு மரியாதை கொடுத்தா போதும் பேபி.” எனத் தெரியாது அவன் கூறிவிட, அடுத்த அரை மணி நேரம் மகளின் கேள்வி கனைகளைத் தாங்க வேண்டியதாகப் போனது கௌதமனுக்கு.
“போதும்… இதோட நிறுத்திப்போம்.” என இடையே வந்த தாக்ஷா, “யாழி பேபி பால் குடிக்கிறீங்களா?” எனச் சின்னவளைத் தன் பக்கம் திருப்பினாள்.
“நானுக்கு பால் நேணா. பசில” என வேகமாகத் தலையாட்டினாள் குழந்தை.
“சரி வேண்டாம். ஆனா பசிக்கும் போது என் கிட்ட சொல்லணும் சரியா?”
“எஷ் எஷ்… யாலி பேபி சொல்லும்” என அதற்கும் தலையை ஆட்டினாள் குழந்தை.
“நல்லா விளையாடினா நல்லா பசிக்கும். இப்போ விளையாடுவோம். பசிச்சதும் சாப்பிடுவோம்.” பேசிக்கொண்டே தாக்ஷா சின்னவளின் கரம் பிடித்து விளையாட்டு கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ‘பேபி மாம் டைம்’ என அவ்வப்போது தாக்ஷா குழந்தையோடு ஒரு நாள் முழுவதையும் கழிப்பது வழமை தான் என்றாலும், இன்று தனியாக நேரம் செலவிட வேண்டும் என இவள் தான் கௌதமனிடம் கேட்டிருந்தாள்… ஆனால் கௌதமன் கிளம்பும் வேளை அவளே, “பேபிய பாக்கணும் போல இருக்கு” என மகளை அழைத்து வரக் கேட்டிருந்தது கௌதமனை குளிர்வித்திருந்தது.
கடற்கரையை ஒட்டின ரெசார்ட். வெப்பத்தைக் குறைக்கப் பல ரகத் தென்னை. ரெசாட்டைச் சுற்றி புதிதாக முளைத்திருந்த பனை மரங்கள். ஒன்றில் இருந்து மூன்று அறைகள் கொண்ட தனித்தனி குடில்கள். பெரியவர்களுக்குச் சிறியவர்களுக்கு என தனித்தனி நீச்சல் குளம். ஆங்காங்கே பழச்சாறு கூடம்… சுடச் சுட பண்டங்கள் சுட்டுக் கொடுக்கும் குடில். சொகுசு அறைகளை ஒட்டி தோட்டமும் ஜக்கூசியும் எனப் பணச் செழுமையை அந்த இடம் காட்டி நின்றது.
“ஒரு வருஷத்துல இடத்தையே மாத்திட்ட தாக்ஷா. உள்ள வந்தா வெளியில போகவே தோணாது” என்றவன் பாராட்டை, “தேங்க்ஸ் கௌதம்.” என ஏற்றவளின் அர்ப்பணிப்பு நன்றாகவே தெரிந்தது அந்த இடத்தில்.
“நம்ம குட்டி வாலு கேட்ட மாதிரி, சின்ன குட்டிங்க விளையாடக் குட்டி குட்டி டால் ஹவுஸ் ரெடி. ஃபுல்லா பீச் மணல் போட்டு, இண்டோர் பீச் செட் அப். மேடம் எப்படி எக்சைட் ஆறாங்கன்னு பாப்போம்” என அழைத்துச் சென்றாள்.
நடந்து கொண்டிருந்த குழந்தையின் கண்களில் விழுந்தது பல நிறப் பொம்மை வடிவக் கோப்பைகளும் அதில் வளைந்து நெளிருந்த நீள ஸ்ட்ராக்களும்.
“தாச்சாஆஆ ஆந்தி நானுக்கு கலும்பு ஜூஸ் நேணும்… பீஈஈ..ஷ்” என விரல்களைக் குவித்துக் கேட்கும் குழந்தையை நின்று பார்த்தவள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
“என்ன சொன்ன? பீஷ்..சா? நாளுக்கு நாள் உன் க்யூட்னஸ் ஏறிட்டே போகுது. உனக்கு யாரு பிளீஸ் எல்லாம் சொல்லி தந்தது?” எனக் குனிந்து குழந்தையின் கன்னம் வழித்தவள், “போ… போய் நீயே அந்த அங்கிள்ட்ட கேளு குடுப்பாங்க” என அங்கிருந்த பழச்சாறு குடிலில் நின்றிருந்தவரை காட்டினாள்.
“டேங்க்ஸ் தச்சா ஆந்தி” எனக் குழந்தை துள்ளித் துள்ளி ஓட, இடைவெளி விட்டு இவர்கள் பின்னோடு வந்த பெண்ணிடம் கண்ணைக் காட்ட, “ஓக்கே மேடம்” எனக் குழந்தையை ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்தாள் அவள். இது எப்பொழுதும் நடப்பது என்பதால் கௌதமன் பார்வையாளர் மட்டுமே. அவர்கள் வீட்டில் அம்மாவின் மேற்பார்வையில் சங்கீதா போல் இங்கு லீலா மகளோடே இருப்பாள்.
“நல்லா பேச ஆரம்பிச்சுட்டா” என்ற தாக்ஷா, “இங்க எக்ஸ்பேன்ஷன் போயிட்டு இருக்கு. பார்ட்டி புக்கிங் இருக்கனால ரெண்டு வாரத்துல வேல கண்டிப்பா முடியணும், சோ நகர நேரம் இல்ல. இதுல… ஒரு ரெசார்ட் விலைக்கு வருதா… அதை வாங்கலாமான்னு பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. ரொம்ப பிஸி… உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல.” என்றவள் பேச்சில் வருத்தம் எட்டிப்பார்த்ததைக் கௌதமனும் கவனித்தான்.
“ஆமா கௌதம்… அது யார் அச்சோ அம்மா?” என்றவளை புருவம் உயர அவன் பார்க்க… “என்ன பார்வை இது?” என அதே பார்வையை அவன் மீது செலுத்தினாள் தாக்ஷா.
“தேங்க்ஸ். டாப்பிக்க மாத்தாம, சொல்லு யாரு அது? அம்மான்னு சொன்னதும், அச்சோ அம்மான்னு சொல்றா? நீயும், அன்னைக்கு ஈவ்னிங், கல்யாணம் வேண்டாம்ன்னு சண்டை போட்ட… நைட் போன் போட்டு வீட்டுல இருந்து பேச சொல்றேன்னு சொல்ற? என்ன நடக்குது?”
“பிளே ஸ்கூல்ல, அம்மா அப்பா தாத்தா பாட்டின்னு எல்லார் பேரையும் வச்சு பேமிலி டிரீ வரைஞ்சு கொண்டு வந்தாளே… அன்னைக்கு அம்மா பேரு யசோன்னு சொன்னத இன்னும் நினைவு வச்சிருக்கா” என்றவனுக்கு அன்றைய யசோவும் மகளும் மனதில் வந்து சென்றனர்.
“அன்னைக்கு பீச்ல… யசோன்னு பேர் கேக்கவும் அம்மா வேணும்ன்னு நிக்கிறா” என்றவன் பெருமூச்சோடே, “குழந்தை வளர ஆரம்பிச்சுட்டா தாக்ஷா. அம்மாவ தேடறா.” என்றான்.
“இப்பவும் உன் மகளுக்காகத் தான் கல்யாணம் இல்லையா?” என்றவள் தொனியில் ஏமாற்றம் எட்டிப் பார்க்காது இல்லை.
“ப்ச்… ஏன் டி நீ வேற?” என்றான் அலுப்போடே.
“உன்ன ரொம்ப காதலிக்கிறேன்… என்னால நீ இல்லாம இருக்க முடியல… கல்யாணம் செய்து சேர்ந்து வாழலாம்ன்னு, நீ சொல்லி இருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பேன் தெரியுமா கௌதம்?”
“கண்டிப்பா சொல்லி இருப்பேன்… உன்ன மாதிரி நானும் லைப்ல செட்டில் ஆகி இருந்தா கண்டிப்பா கல்யாணத்துக்குக் கேட்டிருப்பேன் தாக்ஷா. காதலுக்கு, நீயும் நானும்… காதலும் போதும். கல்யாணம்ன்னு வந்துட்டா, காதல் மட்டும் போதறது இல்ல. உன் லைப் ஸ்டைலுக்கும் என் லைப்ஸ் ஸ்டைலுக்கும் பேங்க் பேலன்ஸ் ஹெவியாவே இருக்கணும். அஃப் கோர்ஸ் என் அப்பா சேர்த்த சொத்து இருக்கு, நீ சம்பாதிக்கிற!
ஆனா அது எனக்கு மரியாதைய வாங்கி தராது. வருமானம் இல்லாத என்னை உங்க வீட்டுல மதிக்க மாட்டாங்க. நாளடைவுல, உனக்கும் என் மேல இருக்க மரியாதையும் போயிடும். மரியாதையோட கைய பிடிச்சுட்டு நிம்மதியும் சந்தோஷமும் கூடவே போயிடும். அப்பறம் வாழ்க்கையில காதலும் இருக்காது… கல்யாணமும் மிஞ்சாது. முதல்ல நான் தடுமாறாம, ஒரு நிலையா நிக்கணும். என் மனைவிக்கும் என் மகளுக்கும் நான் செலவு பண்ற நிலை வந்தா தானே உனக்கும் மரியாதை எனக்கும் மரியாதை.”
“இப்போ என்ன மாறி போச்சு? நீ இன்னும் செட்டில் ஆகலியே?”
மாறவில்லை தான். அவனுக்குத் தெரியாதா? ஆனால் மகள்? அவளின் அன்னைக்கான தவிப்பு? கடற்கரையிலிருந்து வந்த அன்று, நடு இரவில் எழுந்தவள் அன்னையைத் தேடி அழுத அழுகை? ஒரு வருடம் சமாளிக்கலாம்… பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபின் மகளின் கேள்விகளுக்கு இவனால் பதில் கூற முடியுமா?
நீளமாக மூச்சை வெளியிட்டவன், என்ன நினைத்தானோ அனைத்தையும் இன்றே கூறிவிட முடிவெடுத்தான். கூறியபின் இந்தத் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி உள்ளுக்குள் எழாது இல்லை. தன் ஒற்றை பார்வைக்காக மட்டுமே தவம் இருந்த பதின்ம வயது தாக்ஷா இல்லை இவள். நிற்கவும் நேரம் இல்லாது ஓடிக் கொண்டிருப்பவள் இவள். நான் இப்படித் தான்… யாருக்காகவும் மாற மாட்டேன் என ஸ்திரமாகக் கால் ஊன்றி நிற்பவள்.
முன்பு இவர்கள், செல்வச் செழிப்பில் கழுத்து சுளுக்கும் அளவு உயர்ந்து இருந்தனர். அன்று தாக்ஷா வீட்டில் எந்த எதிர்ப்பும் வந்திருக்காது. இன்று தராசு வேறு கதை கூறுகிறது. தர்ஷனை சுற்றி துப்பாக்கி ஏந்திய காவல் இருக்கும் நிலையை அடைந்த அவர்கள் குடும்பம், இவர்கள் திருமணத்திற்கு ஆதரவு கொடுக்குமா தெரியாது. அதுவும் இவன் வரலாறு இருக்கும் இலட்சணத்திற்கு?
“என்ன யோசன கௌதம்?”
மகளைப் பார்த்தான். லீலாவோடு பேசிக் கொண்டே அவள் முன் இருந்த கரும்பு சாற்றை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சுற்றிப் பார்த்தவன் தனித்து இருந்த இருக்கையை நோக்கிச் சென்றான்.
“என்ன ஆச்சு கௌதம்? பெரிய வெடி குண்டா எதையாவது என் தலையில போட போறியா?” எனச் சிரித்தாள் தாக்ஷா. சிரித்த அவளை ஆசையாகப் பார்த்தான். உயிராகக் காதலிக்கப்படுவது என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை ருசிக்கக் கொடுத்தவள். அவனிடம் எதையுமே எதிர்பார்க்காத காதல் தாக்ஷாவினது… இல்லை ஒன்றிருக்கிறது. எல்லா மனுஷனையும்… மனுஷியையும் போல், தன் இணைத் தன்னை மட்டுமே அதிகமாகத் தேட… காதலிக்க வேண்டும் என்பதை அவனிடம் எதிர்பார்ப்பவள்.
இவள் காதலுக்கு, தான் எந்த விதத்தில் பொருத்தமானவன் எனக் கௌதமன் பல முறை நினைத்திருக்கிறான். இன்றும் நினைக்கிறான். பொருத்தமோ… இல்லையோ, தாக்ஷா கேட்கும் அளவிற்கு அவளைக் காதலில் திளைக்க வைக்கத் தெரியவில்லை என்றாலும், அவன் காதல் தாக்ஷா மட்டுமே.
ஏன் இந்த மௌனம் இவனிடம்? “கௌதம்?” என்றவள் முகத்தில் கவலையில் ரேகை எட்டிப்பார்த்தது.
“வாழ்க்கையில எல்லாமே அளவுக்கு அதிகமா இருந்தனாலயோ என்னவோ… எனக்குன்னு பெருசா எந்த லட்சியமும் இருக்கல தாக்ஷா. நமக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ன்னா தானே தேடல் இருக்கும்? எனக்கு வாசுதேவன் பையன்னு சொல்லிக்கவே அத்தன பெருமையா இருக்கும். அதுவே எனக்கு போதுமானதாவும் இருந்துது. கொஞ்ச வருஷம் இப்படி பசங்களோட ஊர் சுத்தி ஜாலியா இருந்துட்டு, என்னைக்காது ஒரு நாள் அப்பாவோட சேர்ந்து தொழில பார்த்துகலாம்ன்னு நினைச்சு காலேஜ் லைப்பையும் வாழ்ந்து முடிச்சேன்….” என ஏதோ போல் புன்னகைத்தான்.
“அந்த வயசுல நம்ம செட்ல எல்லாருமே அப்படித் தானே சுத்தினோம். இருந்துது அனுபவிச்சோம். அதுக்கு ஏன் இப்படி ஒரு விரக்தியான சிரிப்பு?”
“விரக்தின்னு இல்ல… வாழ்க்கைல நான் வந்த பாதைய நினைச்சேன்.” என்றவன், “ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணினா சரியா இருக்கும் இல்ல? படத்தை முடிச்சு… டைரக்டர்ன்னு எனக்குன்னு ஒரு பேர் இருக்கும் இல்ல…” எனக் கேட்டான் நீள மூச்சோடே.
ஏதோ வரப்போகிறது என்பதை தாக்ஷா உணர்ந்தாள். ஏனோ மனம் நிலையில்லாது தவித்தது. திருமணம் இப்போது வேண்டாம் என்றான். திருமணம் செய்து கொள்ளலாம் என்றான். இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்கிறான். ஏதோ ஒன்று இவனைப் பாடாய்ப் படுத்துகிறது… என்ன அது? தான் யாழிக்கு அம்மாவாக இருக்க மாட்டேன் என நினைத்து விட்டானோ? மனம் சட்டென வாடிப் போனது. இதற்கு மேல் தன் அன்பை எப்படி நிரூபிப்பது என அவளுக்கும் தெரியவில்லையே!
“ஒரு வருஷம் இல்ல… ஒன்பது வருஷம் ஆனாலும் நான் காத்திருக்கத் தயார் கௌதம். நான் உன்ன ரொம்ப ரொம்ப விரும்பறேன் கௌதம். கல்யாணத்தை நினைச்சு நீ டென்ஷன் ஆகாத. அண்ணாக்கு கல்யாணம் தகைஞ்சு வருது. என்னை வீட்டுல வச்சுட்டு, பண்ணிக்க மாட்டேன்னு அவன் பிரஷர் கொடுக்கவே தான் நான் உன்கிட்ட கல்யாணம் பத்தி பேசினேன். விடு. நான் வீட்டுல பேசறேன். அதுக்காக நீ டென்ஷன் ஆகாத. நீ இப்போ தான் படிச்சு முடிக்கவே போற. இன்னும் உனக்கு காலம் இருக்கு… உன்ன ப்ரூவ் பண்ண. பொறுமையா போகலாம். சரியா? எனக்கு எந்த அவசரமும் இல்ல.” என அவன் கரம் பற்றினாள்.
“நீ என் வாழ்க்கையில இருந்து போன… அப்பறம் நீ வந்த, அந்த கேப்ல என்ன ஆச்சுன்னு உனக்கு தெரிய வேண்டாமா?”
“அவசியம்னா நீ சொல்லி இருப்பியே.”
“அவசியமான்னு நீ தான் சொல்லணும்!” என்றவன், “ஒரு ஆக்சிடென்ட்… ஸ்பைன் இஞ்சுறி. ஆறு மாசம் பேரலைஸ்ட்டா பெட் ரிட்டன் ஆகிட்டேன். ஐ வாஸ் டையிங் தாக்ஷா. கடைசி முயற்சியா ஆர்கன் டிரான்ஸ்பிளாண்ட் டிரை பண்ணலாம்ன்னு டிரை பண்ணி, என்னை எழுந்து நடக்க வச்சாங்க” என அவள் முகம் பார்த்தான். ‘என்ன டிரான்ஸ்பிளாண்ட்? என்ன ஆர்கன்?’ என அவள் அதில் ஆர்வம் காட்டினால், அனைத்தையும் கூறிவிடும் நோக்கில் இருந்தான் கௌதமன்.
“ஓஹ்… சாரி. எனக்கு தெரியல. உன் கூட இல்லாம போயிட்டேன். அதுதான் ஏர்போர்ட்ல பார்த்தப்போ ஃபேஸ்ல ஸ்கார் இருந்துதா?” என அவனைப் பார்த்த நாளிற்குச் சென்றாள்.
“ம்ம்… உனக்கு டீட்டெயிலா தெரியணும்னா, என்னை டிரீட் பண்ணின டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன். உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் அவர் தீர்த்து வைப்பார்” என்றவன் பேச்சை அப்படியே கத்தரித்தாள் தாக்ஷா.
“அது உன் பாஸ்ட். இப்போ நல்லா இருக்க தானே? நல்லா இல்லாட்டா அதுக்கு வேணும்னா டாக்டர பார்ப்போம். உனக்கு பிரச்சன ஏதாவது இருந்தா அதை சேர்ந்தே சமாளிப்போம்” என்றவளிடம் இத்தனை முதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை போலும்… “ம்ம்” எனத் தலை அசைத்தவனுக்குக் கூற இன்னும் உள்ளதே.
“ஒரு வருஷம் வேணும் தாக்ஷா… சினிமா தான் எனக்கான பாதையான்னு தெரிஞ்சுடும். ஏனோ கொஞ்ச நாளா மனசு எதையோ உணர்த்த பாக்குது போல… ஒரு மாதிரி இருக்கு. புரியாத ஏதோ வந்து வந்து போகுது. யாழியும் வளர ஆரம்பிச்சுட்டா. எனக்கு நீ வேணும் தாக்ஷா. நீ, நான், பேபி… ஒரு ஃபேமிலியா…” எனக் கோர்வை இல்லாது ஆரம்பித்தவன், “உனக்கு யாழிய பிடிக்கும் தான?” என அவள் முகம் பார்த்தான் கேள்வியாக.
“ப்ச்… இது என்ன கேள்வி? உன்ன பிடிக்கிற எனக்கு, நீ பெத்த குழந்தைய பிடிக்காம போகுமா?” என்றாள் வலி நிறைந்த பார்வையோடே.
‘நீ பெத்த குழந்தை’! யாழியை இவள் நேசிக்க ஒரு காரணம் உள்ளது. காரணம் உண்மை இல்லை என்று தெரியும் வேளை? கௌதமன் மனம் அடித்துக் கொண்டது. உண்மையைக் கூறுவதா? வேண்டாமா? மனம் குழம்பித் தவித்தது. அவனால் மகளையும் இழக்க முடியாது… தாக்ஷாவையும் விட முடியாது.
“மேடம் இளநீர்” என இருவர் முன்னிலும் இளநீர் வைக்கப்பட்டது.
“குடி கௌதம்” என்றவள், இனிப்பாக இருந்த நீரால் மனதின் படபடப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
அவன் பங்கிற்கு எதிரில் இருந்த குளிர்ந்த நீரைக் கொண்டு உள்ளுக்குள் எழுந்த சூட்டைத் தணித்தான்.
“சோ… பேபிய, என் மகங்கிற ஒரே காரணத்தால தான் பிடிக்கும் இல்ல?” என எச்சில் விழுங்கினான் கௌதமன்.
“என்ன ஆச்சு கௌதம்? கேள்வி எவ்வளவு அபத்தமானதுன்னு தெரியுதா? அக்கா பிள்ளையை ஏன் பிடிக்கும்? அது அக்காவோட குழந்தைங்கிற காரணத்தால தான? அதவிடு… அனாதை இல்லத்துக்கு போனா அங்க நிறையக் குழந்தைங்க இருப்பாங்க. அவங்க மேல நமக்கு பரிதாபம் தோணலாம். இன்ஸ்டன்ட் பாசம் உற்பத்தியாகலாம். உதவி கரம் நீட்டலாம். ஆனா அவங்க எல்லாருக்கும் நாம தாயா தகப்பனா ஆகிறது இல்லையே! அது மாதிரி தானே இதுவும். பாக்கிற குழந்தை மேல எல்லாம் தாயன்பு வராது இல்லையா? எனக்கு உன் மேல கடலளவு காதல் இருக்கு. அப்போ உன்னைச் சார்ந்த எல்லார் மேலயும் எனக்கு பாசம் வரது மாதிரி தான் குழந்தை மேலயும்…”
“இன்கேஸ் யாழி, கௌதமனோட ரத்தம் இல்லன்னா?” என இவன் தாக்ஷாவின் முகம் பார்க்க, அதிர்ந்த பார்வை அவளிடம்.