Skip to content
Post Views: 12,280
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 20
தேவ தாஸ் பேரன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து போய் தன் மனைவியை பார்த்தார். மகேஸ்வரி நிலையும் அதே…
“என்ன மித்ரன் தன் மகளிடம் திருமணத்திற்கு கேட்டான?”
“என்ன சொல்ற அத்து கண்ணா.. அந்த மித்ரன் தம்பியா உங்க அம்மா கிட்ட கேட்டது” மேலும் உறுதிபடுத்தி கொள்ள கேட்க.
Advertisement
“ஆமா, மித்து என் ஃப்ரெண்ட் தான் அம்மா கிட்ட கேட்டாங்க. எங்க மாமாவுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே.. எங்க அம்மாவுக்கும், என் பிரண்டு மித்துக்கும் நடக்குமா தாத்தா?” என்று விவரம் அறியாத பேரன் கேட்க.. மேலும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் தம்பதிகள்.
“என்னங்க சொல்றான் நம்ம பேரன்” நடுங்கும் மனதோடு மகேஸ்வரி கேட்க.
“அவசரபடாத மகேஸ். நான் என்னன்னு விசாரிக்கிறேன். அதுக்கு முந்தி நீ, நம்ம பிரவீ கிட்ட எதுவும் கேட்காத.. அதேபோல மத்த பசங்க கிட்டயும் எதுவும் சொல்லாத.. யார்கிட்டயும் வாயை திறக்காத.. மகேஸ்வரி, நான் திரும்ப சொல்றேன் விஷயம் நம்ம மகளை பத்தினது. உங்க சொந்தம் பந்ததுல கூட உளறி வைக்காதே” என்று கண்டிப்பாக கண்வன் சொன்னதும், ஓரளவுக்கு நிலைமை புரிந்து சரி என்று தலையாட்டினார் மகேஸ்வரி.
Advertisement
தேவதாஸ் முகம் யோசனையை காட்டியது. இது உண்மையாக இருக்குமோ!.. அப்படி இருந்தால் அவருக்கு அது நல்ல செய்தி தான். மித்ரன் ஒருவகையில் அவர்கள் குடும்பத்தோடு சொந்தமும் கூட… தான் உடன் பிறந்தவள் என்று பார்த்து மகளை வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அவரவர் குடும்பம் என்று இருக்கும் பொழுது, தன் மூத்த மகள் மட்டும் ஒற்றை பிள்ளையோடு தனிமையில் அல்லாடுவதை பார்க்க அவ்வளவு வேதனையாக இருக்கிறது.
Advertisement
இத்தனை வயதிலும் மூன்று மக்களை திருமணம் செய்து கொடுத்து பேரன் பேத்தி பார்த்த பின்பும், இன்றும் கூட வெளியில் சென்று வந்தால் அவர் கண்கள் முதலில் தேடுவது தன் மனைவியை தான். காலம் கடந்த வயதிலும் பேச, சிரிக்க, விவாதிக்க ஆலோசனை பண்ண என்று ஆயிரம் விஷயங்கள் கணவன் மனைவிக்குள் இருக்கும். வயதான பின்பு தேவதாஸ், மகேஸ்வரி இருவரும் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். இந்த வயதிலும் கூட தன் துணையோடு பேசுவதையும் வெளியில் செல்வதையும் விரும்புகிறது மனம். தன் பிள்ளைக்கு என்ன வயதிருக்கும்.. ஒரு வருடம் கணவனோடு ஒரு வாழ்க்கை, அடுத்த எட்டு மாதம் நோயாளியான கணவனோடு மற்றொரு வாழ்க்கை. பாவம் பிரவீனா நொந்து போய் இருப்பாள். அவளுக்கு ஒரு நல்லது நடந்தால் பெற்றோர்களாகிய தங்களுக்கு வேறு என்ன வேண்டும்.
தேவதாஸ் எதையும் யோசிக்கவில்லை. எத்தனையோ முறை பிரவீனாவிடம் மற்றொரு வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார். ஆனால், அவள் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரேடியாக எனக்கு, என் பிள்ளை மட்டும் போதும் என்று முடிவு எடுத்து விட்டாள். ஒன்று அவள் கணவனோடு அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்திருக்க வேண்டும். அதனால் தான் மற்றொரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க கூட பிடிக்காமல் ஒதுங்கி இருக்கிறாள். அல்லது பிரவீனா, இளங்கோவின் கடைசி கட்ட வாழ்க்கையில் அவனோடு சேர்ந்து நிறைய வலியையும், வேதனையையும் அனுபவித்தாள். ஒருவேளை அதனால் கூட கல்யாண வாழ்க்கையை வெறுக்கிறாளோ என்ற பயமும் இருந்தது. எதுவாக இருந்தாலும் சாமி வரம் கொடுத்தது போல மித்ரன் கல்யாணத்திற்கு கேட்டு இருக்க மறுக்க தோன்றவில்லை பெற்றவர்களுக்கு…
தேவதாஸ் மனதில் மித்ரனின் முகத்தை கொண்டு வந்தார். உயரம், எடை, அழகு, வேலை படிப்பு எல்லாம் மிகுதியாக இருக்க பரம திருப்தி மனதில்… இது மட்டும் நன்றாக அமைந்தால் போதும் உலகில் வேற எதுவும் வேண்டாம்.
Advertisement
நொடியில் முடிவெடுத்தவர் உடனடியாக தன் சம்மந்தி மூலம் மித்ரனின் போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அவன் எந்த நேரம் வீட்டிற்கு வருவான் என்பதை அறிந்து கால் செய்ய, முதலில் தெரியாத எண்ணில் இருந்து போன் வரவும், சிறிது யோசித்து தான் கால் எடுத்தான் மித்ரன்.
“ஹலோ”
“மித்ரன் தம்பிங்களா?”
“ஆமா சார். நீங்க?” கேள்வியாக இழுத்தான்.
“நான் தேவதாஸ்”
“தேவதாஸ்” என்று அவனும் இழுக்க,
“ஆர்த்தி மாமனார்”
“அங்” என்றான் யோசனையாக…
“பிரவீனா அப்பா தம்பி நான்” என்றதும்,
“ஐயோ சார் நீங்களா.. சாரி சார், சடானா எனக்கு ஞாபகத்துக்கு வரல.. சொல்லுங்க சார் வேற எதுவும் பிராப்ளமா? ஆதிரன் எப்படி இருக்கான்? பிரவீ.. அவளுக்கு ஒன்னும் இல்லையே.. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க தான” என்று மித்ரன் அவசரமாக கேட்டதும்.. மறுபக்கம் அமைதி.
கொஞ்சம் தடுமாறினான் மித்ரன். அவராக நான் பிரவீனா அப்பா என்றதும் அவர்களுக்கு தான் என்னவோ என்று கேட்டான். அவனையும் மீறி பிரவீனாவை உரிமையாக அவள் என்று அழைத்து விட்டான். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தடுமாறி நிற்க,
தேவதாஸ் மனம் கொஞ்சம் நிம்மதியை கண்டது. பிரவீனா பெயரை சொன்னதும், அவன் தன்னை கண்டு கொண்டது. அவர்களின் நலம் விசாரித்தது என்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
“சார்” என்று மேலும் அவன் இழுக்க,
“கொஞ்சம் உன்கிட்ட பேசணும்ப்பா.. நீ எப்ப ஃப்ரீயா இருப்ப?” என்று கேட்டதும்,
மித்ரன் மனம் ஓரளவு ஊகித்தது “சொல்லுங்க சார்.. பர்சனலா இல்ல அபிஷியல சார்”
“பர்சனல் தாம்பா குடும்ப விஷயம் பேசணும்”
மித்ரனுக்கு தெளிவாகியது. அவனோடு அவர்கள் குடும்ப விஷயம் பேச என்ன இருக்கிறது? பிரவீனாவை தவிர…
“நாளைக்கு காலைல கூட வாங்க சார்”
“உங்களுக்கு வேலை?”
“நான் பார்த்துப்பேன் சார்” எப்போது வருவார் என்று கேட்டு கொண்டான்.
மனம் ஒரு மாதிரி அலை பாய்ந்தது. கல்யாண விசயம் பேச வருகிறார் போல… பிரவீனாவிடம் தன் காதல் குறித்த கோபம் என்றால் இவ்வளவு அமைதியாக பேசி இருக்க மாட்டார். அவர்கள் வீட்டிலும் இரண்டு ஆண் மக்கள் இருக்க, கொதித்துக் கொண்டு அல்லவா வந்திருப்பார்கள். தயங்கி நின்று பர்மிஷன் கேட்கிறார் என்றால் ஓரளவு விஷயத்தை கிரகித்தான் மித்ரன். நாளை பிரவீனா அப்பா வந்து பேசும்பொழுது தான் தடுமாறி நிக்கக்கூடாது. தெளிவான பதிலை அவருக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானித்தவன்.. உடனே தன் அக்காக்கள் கணவர்களுக்கு போன் செய்து விட்டான்.
“ஹலோ”… “ஹலோ” இரண்டு குரல் உரசியது.
“யாரு புவன் அண்ணனா?”
“குமரா நீயுமா?”
“ஆமா, என்னவாம் மித்து கான்பிரன்ஸ் கால் போட்டு இருக்க..எனிதிங் சீரியஸ்?”
“ஆமாம் மாமா, விஷயம் கொஞ்சம் முக்கியம்தான். ஆனால், அதை எப்படி சொல்ல” தலையை கோதி விட்டான் மித்ரன். அவனுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது.. எப்படி சொல்ல எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று…
“என்னடா மித்து எதுவும் ப்ராப்ளமா” என்று புவன் கேட்க.
“ப்ராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்ல மாமா. நாளைக்கு” என்றவன்,
“ஐ திங்க், நாளைக்கு என்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்க போல… என் பக்கம் நீங்க ரெண்டு பேரும் இருக்கணும்.. அதுக்கு தான் போன் பண்ணேன்” பட்டென்று உடைத்து விட்டான் மித்ரன்.
அந்தப் பக்கம் இடியோ, புயலோ, மழையோ ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.
“மாமா.. ரெண்டு பேரும் லைன்ல இருக்கீங்களா?”
“என்னடா சொல்ற மித்ரா.. திடீர் குண்டு வெடிப்பு மாதிரி இருக்குடா உன் விஷயம்” என்று புவன் சொல்ல,
நீங்க இப்படி சொல்றீங்களா அண்ணா? பத்து நிமிஷத்துல இட்லி ரெடி ஆகும். சாம்பார் ரெடி ஆகணும் தான் பார்த்திருக்கேன். இவன் கல்யாணத்துக்கு ரெடியாகி நிக்கிறான்” லேசாக சிரிப்போடு குமரன் சொல்ல,
ஆண்கள் முகத்தில் சிரிப்பு. தன் அக்காக்கள் கணவர் என்றாலும் அவர்களோடு நல்ல நட்பில் இருந்தான் மித்ரன்.
“கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்.சார் ஒன்றை வருசமா சிங்கிளா சுத்தும் போதே ஓரளவுக்கு கெஸ் பண்ணேன். பொண்ணு யாருடா?” என்றான் புவனேந்திரன்.
“பிரவீனா என்கூட தான் வேலை பார்க்கிறா. நாம.. எங்க வீட்டு சொந்தத்துல ஒரு கல்யாணத்துக்கு கூட ரீசண்டா போனோமே” என்றவன் இன்னும் அவர்கள் ஞாபகத்துக்கு கொண்டு வர வேண்டி,
“மாமா ஒரு பொண்ணு குழந்தையை மடியில வைத்து கொண்டு மேடைக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்துச்சில்ல… கொஞ்சம் குட்டையா, லாங் ஹேர்ரா, ஹோம்லியா இருக்குமே.. ஹஸ்பண்ட் இல்லன்னு மேடைக்கு வராம ஒதுங்கி இருந்து, கொஞ்சம் கலாட்டா கூட ஆச்சுல்ல” என்று எடுத்து கொடுக்க,
உண்மையில் அந்தப் பக்கம் இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனதில் தான் இடியும், மழையும் ரவுண்டு கட்டியது.
தன் தொண்டையை கொஞ்சம் செருமி கொண்ட புவனேந்திரன்,
“ஏற்கனவே கல்யாணமான பொண்ணா மித்ரன்?” என்றான் புவன்.
“ஆமா மாமா. ஆனா, நம்ம பிரவீயோட ஹஸ்பண்ட் கல்யாணம் ஆகி ஒன்றரை வருசத்திலே உடம்பு முடியாம இறந்துட்டாங்க.. பாவம் அவ, தனியா ஒரு குழந்தையை வைத்து சமாளிச்சுட்டு இருக்கா”
“சிம்பதியா மித்ரன்” என்றான் குமரன்.
“அவ மேல இரக்கமெல்லாம் நிறைய இருக்கு. ஆனா, அதுக்காக எல்லாம் கல்யாண வரைக்கும் நான் யோசிக்கல மாமா. உண்மையா எனக்கு அவளை பிடிச்சிருக்கு.. இந்த பொண்ணு கூட கடைசி வரைக்கும் வாழலாம்டா, அப்படின்னு என் மனசு ஒருத்திய காட்டுச்சின்னா.. அது அவள் தான்” பளிச்சென்று சொன்னான் மித்ரன்.
கேட்டிருந்த இருவருக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. உண்மையில் மித்ரன் சொல்லியதற்கு நியாயமாக இவர்கள் வரவேற்றுக்க வேண்டும். படித்த பண்பான மனிதர்களாக அவனின் முடிவை வரவேற்கத்தான் தோன்றியது. ஆனாலும், என்னவோ திருமணமாகி கையில் ஒரு பிள்ளையோடு இருக்கும் பெண் மீது தான் இவனுக்கு காதல் வரவேண்டும் என்ற ஆதங்கமும் நிறைய இருந்தது.
“என்னாச்சு மாமா?”
“என்ன சொல்லன்னு தெரியலை மித்ரன்”
“சரி விடுங்க மாமா அதெல்லாம் ஒன்னும் இல்லை. வீட்ல அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க. குழந்தைங்க என்ன பண்றாங்க. எனக்கும் அவங்கள பாக்கணும் போல இருக்கு.. ஒரு ரெண்டு நாள்ல வாரேன்னு சொல்லுங்க. எங்கையாவது கெட் டு கெதர் மாதிரி போலாமா?” அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு அடுத்த விஷயத்திற்கு சென்றான் மித்ரன்.
அந்தப் பக்கம் இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மித்திரனை நினைத்து கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அடுத்த வீட்டில் நடக்கும் போதும், வேறு எங்கோ கேள்விப்படும்போதும் பாராட்ட தோன்றிய விஷயம். தன் வீட்டில் எனும் பொழுது நிறையவே தடுமாறிப் போனார்கள்.
சத்தியமூர்த்தி, சாரதா தம்பதிகளுக்கு ஒற்றை மகனை பற்றி நிறைய கனவுகளும், ஆசைகளும் இருந்தது. அவன் வாழ்க்கையில் தடம் மாறிப் போனாலும் என்றாவது ஒருநாள் மாறி திரும்ப தங்கள் குடும்பத்தில் இணைவான் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏற்கனவே கல்யாணமாகி, கையில் ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணை மணமுடிக்க சம்மதி இருப்பார்களா?
அத்தோடு மித்ரன் ஒன்றும் நேர்மையானவன் கிடையாது. அவன் வாழ்க்கை முறை உலகறிந்தது தான். ஆனால், மித்திரன் அழகன், படித்தவன், பணக்காரன். இன்றும் அவனுக்கு பெண் கொடுக்க பெண் வீட்டார்கள் நிற்கிறார்கள். கல்யாண சந்தையில் முதன்மையாக தான் இருக்கிறான் மித்ரன்.
அவன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது… இன்று தானாகவே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணத்திற்க்கு நிற்கும் அவனை நன்முறையில் வரவேற்கத்தான் வேண்டும். ஆனால், முடியவில்லை. ஒரு குடும்பத்தை நடத்தும் அளவுக்கு பக்குவமோ, ஐந்து வயது குழந்தைக்கு தந்தையாக இருக்கும் பொறுப்போ.. இவனுக்கு என்ன தெரியும்.
அடுத்தடுத்து சில வார்த்தைகள் பேசிவிட்டு மித்ரன் போனை வைத்து விட்டான். இதற்கு மேல் அவர்களை எந்த விதத்திலும் அணுக மாட்டான். பிரவீனாவாக இருந்தால் அவன் எளிதாக டீல் செய்து விடுவான். அவள் அப்பா பேசும் பொழுது எந்த விதத்தில் அவருக்கு தன்னை புரிய வைப்பது.. அதுவும், கல்யாண பேச்சு எல்லாம் அவனுக்கு ஒரு குழப்பத்தை கொடுத்தது. அதனால்தான் தன் வீட்டு சார்பாக வீட்டு ஆட்களாக தான் அக்காக்கள் கணவர்களை கேட்டது.
மித்ரனுக்கு தன் பெற்றோர்களிடம் சொல்ல கூட எந்த தயக்கமும் கிடையாது. முன்பே அவன் அப்படித்தான். இனியும், அவன் அப்படித்தான். அவன் வாழ்வில் அவனாக தேர்ந்தெடுத்த திருமண வாழ்க்கை.. தான் உயர்வாக மதிக்கும் தன் குடும்பத்து ஆட்களை முன்வைக்க நினைத்தான். அவர்கள் மனதில் நெருடல் இருந்தால்.. அதற்கு தான் என்ன செய்ய முடியும். உலகத்தில் எல்லா வகையான ஆட்களையும் திருப்திப்படுத்த முடியாது.
வீட்டை கொஞ்சம் ஒழுங்கு படுத்தினான். காலையில் கொஞ்சம் பால், பிஸ்கட், உயர்தர ஸ்வீட், காரம் எல்லாம் வாங்கி வைத்தான். தனக்கு பொருத்தமான உடையை ஒரு அரை மணி நேரம் நின்று தேர்வு செய்தான். முன்பே காபிக்கு டிகாஷன் இறக்கி வைத்தவன் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்க.. ஒரு நிமிடம் கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தவன் பின் கதவை திறந்தான். அங்கு நின்றிருந்தது புவனேந்திரனும், திருக்குமரனும் தான்.
“மாமா.. நீங்க ரெண்டு பேரும் எங்க? என்கிட்ட சொல்லவே இல்லையே” என்று அவர்களுக்கு வழிவிட..
சிரித்த முகமாக உள் வந்தவர்கள், வீட்டின் அலங்காரத்தையும் தயாராக இருந்த உணவையும் பார்த்து ஆச்சரியம் தாங்கவில்லை. நேற்று பேசும்போது கூட அந்த அளவுக்கு அவன் திருமணத்துக்கு தயாராக இருப்பானா என்று யோசனை ஓடியது. இன்று பார்த்ததும் அவ்வளவு பிரமிப்பு. உங்க சிஸ்டமே ஓல்ட் என்று சொல்பவன் இன்று கல்யாணத்துக்கு இவ்வளவு மெனக்கிடுகிறான்.
“உண்மையில் அந்தப் பெண்ணை இவன் அவ்வளவா நேசிக்கிறான்? ஆச்சரியமாக இருந்தது.
“ரொம்ப லவ் பண்றியாடா மித்து” என்று குமரன் கேட்டதும்.
பின் தலையை கோதிக் கொண்டு கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்க்க சங்கட சிரிப்போடு நின்றிருந்தான்.
சொந்தம் என்று கூட மித்ரன் இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போக மாட்டான். அவன் எல்லையிலே நிற்பான். மிக மரியாதையாக பழகக் கூடியவன். அவன் வாழ்க்கை முறை தான் வித்தியாசமே தவிர, மிக மிக நல்லவன்.
தங்கள் மீது எவ்வளவு மதிப்பிருந்தால், என் திருமணத்திற்கு பேசுங்கள் என்று அழைத்திருப்பான். எப்போதடா அவன் கல்யாணத்திற்கு சரி சொல்வான் என்று ஒரு குடும்பமே காத்துக் கிடக்க… இன்று அவனாகவே திருமணத்திற்கு தயாராக நிற்கிறான். நிச்சயம் அதற்கு துணை நிற்க வேண்டும். என்ன ஒன்று சத்தியமூர்த்தி, சாரதா தம்பதிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி. நிச்சயமா அவர்கள் ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், என்ன பண்ண அவன் முந்தைய வாழ்க்கைக்கு.. இன்றைய முடிவு மிக மிக சிறப்பு.
“எப்போதடா உன் மாமனார் வருகிறேன் என்று சொன்னார்”
லேசாக சிரித்தவன். “இப்போது வந்துட்டு தான் இருப்பாங்க”
“அந்த பொண்ணு கிட்ட பேசிட்டியா? அந்த பொண்ணுக்கு ஓகே தானே”
“பேசினேன், கொஞ்சம் முரண்டு தான். அவ லவ் பண்ணிட்டு டூயட் படுற கேஸ் இல்லை மாமா. ஸ்ட்ரைட்டா கல்யாணம் தான். மேடம்க்கு கல்யாண வாழ்க்கையில் தான் ரொம்ப நம்பிக்கை. அதனால, நானும் அந்த வழியில் நிற்கிறேன்”
“இப்பவே மனைவி சொல்லே மந்திரம்னு நிக்கிறான்” குமரன் சொல்ல,
“தப்பில்லை. சரியான விஷயத்தை பொண்டாட்டி சொன்னாலும் கேட்டுக்க அதுல தப்பில்லை” என்று மித்ரன் சொன்னதும்,
“இப்படி ஒரேடியா கவுந்து போனையேடா நீ..”
“அண்ணா நீங்க வேற.. இந்த காதல் வந்தா கடவுள் கூட கவுந்து போவர். நம்ம மித்ரன் கவுந்ததுல ஆச்சர்யம் ஒன்னுமில்லை”
“எஸ் ஐ லவ் லாட் ஆப் ஹெர்” பெருமையாக சொன்னான் மித்ரன்.
அங்கு தேவதாஸ் கிளம்பினார். இங்கு பிரவீனாவும் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டு தான் இருந்தாள்.
ஆர்த்தி, தாலி எடுத்துக் கொடுத்து சீர் செய்த நாத்தனார் இருவருக்கும் சேலை வாங்கி இருந்தாள்.
“அண்ணி சேலை எடுத்துக் கொண்டு வந்து இருக்கேன் பாருங்க” என்ற வார்த்தை சொல்லவும்,
எடுத்து பார்த்தாள் பிரவீனா. நல்ல வானம் நீல வண்ண நிறத்தில் உடல் முழுக்க ஜரிகை இழையோட, பார்டர் முழுக்க கல் வைத்து ஆங்காங்கே ஜமிக்கி ஒர்க் செய்யப்பட்டு இருந்தது. உண்மையில் பிரவீனாவுக்கு மிகப் பிடித்திருந்தது. ஆசையாக அதை எடுத்து தடவி பார்க்க,
“நல்லா இருக்கா அண்ணி”
“உண்மையா ரொம்ப அழகா இருக்கு ஆர்த்தி” என்று தன் தோளில் வைத்துப் பார்க்க போக,
‘அது உங்களுக்கு இல்லை அண்ணி. அது ப்ரீத்தி அண்ணிக்கு.. உங்களுடைய கவர் அங்க இருக்கு” என்று கை காட்ட. அப்போது கூட பிரவீனா முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை தனக்கு வேற நிறத்தில் எடுத்திருப்பார்களோ என்று அந்த கவரை பிரித்துப் பார்த்தாள்.
அது பாசி பச்சை நிறத்தில் நூல் காட்டன் சேலை. பார்டரில் சின்ன கரை வைத்து இருந்தது. விலை என்னவோ இரண்டுக்கும் ஒரே மாதிரி தான்.
பிரவீனா முகம் மாறி போனது. ஒரு மாதிரி முகம் சுருங்கி நிற்க. வெளியில் எதையும் சொல்ல வில்லை.
“தேங்க்ஸ் ஆர்த்தி” என்று வாங்கி கொண்டாள்.
“ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி சேலை எடுக்க வேண்டிய தான ஆர்த்தி?” என்று மாமியார் கேட்க.
“அண்ணி எப்பவும் இப்படித்தானே கட்டுவாங்க அத்தை. எங்க அம்மா தான் ரெண்டு பேருக்கும் இது பொருத்தமா இருக்கும்னு எடுத்து கொடுத்தாங்க. ரொம்ப ஜரிகை வச்சு கட்டுனா பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமா இருக்கும்” ஆர்த்தி சொல்ல,
பிரவீனா வேற ஒன்றும் சொல்லவில்லை. உண்மைதான், இளங்கோ இறந்த பின்பு இந்த மாதிரி உடைகளை முழுதாக தவிர்த்து விட்டாள். அவள் சொல்வது போல அது என்னவோ வித்தியாசமாக இருக்கும். மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ.. அப்படி சொன்னாலும் அதை சாதாரணமாக கடக்க இந்த மனதால் முடியாது.
ஒரு பெருமூச்சு விட்டு தன் தம்பியை பார்த்தவள், “பிரேம், தம்பி ஸ்கூல்ல பாதர்ஸ் டே ப்ரோகிராம் இருக்கு.. எப்பவும் அவனை லீவு போட்டு வீட்டுல வச்சுப்பேன். கொஞ்சம் விவரம் தெரிந்ததிலிருந்து நானும் போவேங்குறான். இன்னைக்கு எல்லா கேம்ஸ்லயும் நானும் கலந்துகுவேன்னு ஒரே அடம்டா.. நீ போயிட்டு வந்துரு பிளீஸ்” என்றாள்…
“சரிக்கா, நார் பார்த்துக்கிறேன்.. ஆப்டர்நூன் தானே”
“ஆமாமா மறந்துடாத ஜஸ்ட் ஒரு ஒன் ஹவர் போதும்.. சும்மா குட்டி குட்டி விளையாட்டு மட்டும் தான் இருக்கும். அவன் பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அப்பாவோட கலந்துக்கும் போது அவன் மட்டும் தனியா இருக்க முடியலையாம்.. ஒரு மணி நேரம் மட்டும் தான் பிரேம் ப்ளீஸ் மறந்துடாத.. போன வருசம் இருந்து சொல்லிட்டே இருக்கான்” பலமுறை சொல்லிவிட்டாள் பிரவீனா.
ஆதிரன் ஸ்கூலில் கிராண்ட் பேரன்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே, சில்ட்ரன்ஸ் டே என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதில், எல்லாம் அவர்கள் பேரன்ட்ஸ் ஓட பிள்ளைகள் கலந்து கொள்வார்கள். விளையாட்டு, கேம்ஸ் என்று பொழுது நன்றாக போகும். எப்பொழுதும் பிரவீனா ஃபாதர்ஸ் டேக்கு தன் மகனை அனுப்ப மாட்டாள். விவரம் தெரிந்த பின் அவ்வளவு பிடிவாதம். வேற வழி இல்லாம இந்த வருடம் தன் தம்பியை கேட்டு இருக்கிறாள்.
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேவதாஸுக்கு, எப்படியும் மித்ரன் உடனான பிரவீனா சம்பந்தத்தை பேசி முடிப்பது என்று முடிவுக்கு வந்து விட்டார்.
உடுத்தும் உடையிலிருந்து நடந்து கொள்ளும் விதம் வரைக்கும் மற்றவர்களை பார்த்து ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளையே… தன் இயல்பு மீறி ஒரு பெண்ணால் தன் ஆயுள் முழுக்க எப்படி வாழ முடியும். கடவுள் தன் மகளுக்கு காட்டிய நல்ல வழியை விட்டு விடுவதில்லை என்று முடிவெடுத்தார் தேவதாஸ்.
பிரவீனா ஒரு மாதிரி தயக்கத்தோடும், கோபத்தோடும் தான் அலுவலகம் சென்றது. நிச்சயம் மித்ரன் இருப்பான். ஏதாவது வம்பு செய்தால் ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைத்துப் போக.. அன்று, விடுமுறை எடுத்து இருந்தான் மித்ரன்.
அவளும் நிம்மதியாக தன் வேலையை பார்த்து மாலை வீடு வந்து விட்டாள். ஆனால், வீட்டிற்கு இன்னும் மகன் வராமல் இருக்க.. பிரேம் தன்னோடு அழைத்து வந்து விடுவேன் என்று சொன்னதால் அவனுக்கு அழைத்தாள்.
“பிரேம், எப்போ வீட்டுக்கு வர.. தம்பி என்ன பண்றான்”
“நான் இங்கே என் மாமியார் வீட்ல இருக்கேன்,வர லேட் ஆகும் அக்கா”
“மாமியார் வீட்டிலா? எப்போ அங்க போன”
“ஆர்த்தி தான் எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல வாங்கன்னு சொன்னா.. நான் காலையில இங்க வந்துட்டேன்”
“என்ன?” என்று அதிர்ந்து போனவள், “ அப்போ ஆதிரன்?”
“சாரிக்கா, என்னால போக முடியல. அவன் சின்ன பையன் தானே ரொம்ப ஒண்ணும் அடம் பண்ண மாட்டான்”என்றான் பிரேம்.
பாதர்ஸ் டேக்கு என்று தன்னை தனிப்பட்ட தயார்படுத்திக் கொண்டு சந்தோஷமாக பள்ளிக்கு கிளம்பிய மகனின் முகம் பிரவீனா நெஞ்சில் எழுந்தது.
error: Content is protected !!