Skip to content
Post Views: 12,081
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 23
“நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் பிரவீனா. நானே உன் மேல கோபப்படுற மாதிரி நடக்காத… எம் மேல இருக்குற கோபத்தை பிள்ளை மேல காட்டாத” அடக்கப்பட்ட குரலில் மித்ரன் சொல்ல,
“நீங்க யாரு எனக்கு? உங்க மேல எனக்கு என்ன கோபம். என் பையனை, நான் அடிக்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது” கோபமாக பிரவீனா சொல்ல,
அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் சொல்லாமல் ஆதிரனை நோக்கி கை நீட்டினான்.
Advertisement
“அத்து” என்று பிரவீனா கண்டிக்கும் போதே, ஆதிரன் உதட்டை பிதுக்கி கொண்டு மித்ரனின் கால் ரெண்டையும் கட்டி கொண்டான்.
“ஆதிரன், அம்மா கிட்ட வா” என்று அவன் கையை பிடித்து இழுக்க முற்பட,
அவள் கையை தட்டி விட்ட மித்ரன், பிள்ளையை தூக்கி கொள்ள,
Advertisement
“அத்து, அம்மா போயிடுவேன்” என்று சொன்னாலும், மித்ரன் கழுத்தை கட்டிக் கொண்டு விட வில்லை.
Advertisement
“அம்மா, உன்னை விட்டு வீட்டுக்கு போயிடுவேன். நைட் தனியா இருக்கணும். அம்மா கேட்டு அழுதாலும் வர வரமாட்டேன்” அப்போதும் அத்துவிடம் அசைவு இல்லை.
“அம்மா இல்லாம இருந்துடுவியாடா?” என்று பிரவீனா சொல்லும் பொழுதே அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து போனது.
இதுதான் முதல் முறை ஆதிரன், தாயை விட்டு தள்ளி நிற்பது.. இதற்கு முன்பும் பலமுறை அடி வாங்கி இருக்கிறான் தான். அப்பொழுதெல்லாம் அழுது கொண்டே கூட அம்மா என்று ஓடி வருவான். அடித்ததும் அவள் தான், அடுத்து தூக்கி வைத்து சமாதானம் செய்வதும் அவள்தான்… ரெண்டுக்கும் அம்மாவை தான் தேடுவான். இன்று இவளை விட்டு தள்ளி போய் மித்ரனை கட்டிக்கொண்டு நிற்கிறான் பிரவீனாவுக்கு தாங்கவே முடியவில்லை. அப்படியே அதிர்ந்து போய் அங்கிருந்த மேடையில் அமர்ந்து விட்டாள்.
Advertisement
அவளைக் கண்டு கொள்ளாமல் பிள்ளையை தூக்கி போய் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து, அங்கு மற்ற குழந்தைகளோடு விளையாட விட்டவன். சிறிது நேரத்திற்கு பின்பே பிரவீனாவை தேடி வந்தான். அவனுக்கும் பிரவீனா மேல் கோபம் தான். என்னதான் நாம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், எதற்கென்றாலும் கையை ஓங்குவது அவனுக்கு பிடிக்கவில்லை. பிரவீனாவை கண்டிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
மெல்ல அவள் அருகில் போய் அமர, “எப்பவும் நான் அடிச்சிட்டே இருக்கனால, அவனுக்கு என்னை பிடிக்கல போல” கண்களில் நீர் இருந்தது…
“அது அப்படி இல்ல பிரவீனா. ஆதிரன் சின்னப் பையனா இருந்தாலும் அவனுக்கும் சில விஷயங்கள் தெரியும். தன்னுடைய தப்பு எதுன்னு கூட தெரியும். இப்ப அவன் தப்பே பண்ணலன்னு நினைக்கிறான். உண்மையையும் அதுதான். உன்னோட கோபம்.. அதுக்கு பிள்ளை மேல கை நீட்டறது சரி கிடையாது”
“அவனுக்காக மட்டும் தான் நான் உயிரோடவே இருக்கேன்”
“அதுக்காக என்னோட கட்டுப்பாட்டில் தான் நீ இருக்கணும்ன்றது சரி கிடையாதே” என்றான் மித்ரன்.
“அவன் சின்ன பையன் மித்ரன். அவனுக்கு எதுவும் தெரியாது. உலக விபரமும் புரியாது. நான் அடிக்கிறதுனால உங்களுக்கு கூட நான் தப்பா தெரியலாம். ஆனா, என் பிள்ளையை யாரும் ஒரு வார்த்தை சொல்றதுக்கு முன்னால நானே அவனை அடிச்சிடுவேன். அவனை யாரும் எதுவுமே சொல்லிறக்கூடாது. என்னால் அதை தாங்கவும் முடியாது”
“நீ அவனை ரொம்ப கட்டுப்படுத்துற பிரவீனா. அவனை ரொம்பவும் உன் கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வார.. உண்மைதான், அப்பா இல்லாத பசங்க ஈஸியா விமர்சனத்துக்குள்ள வந்துருவாங்க. அப்படி விமர்சனம் பண்றவங்கள நம்ம கேர் பண்ண கூடாது. நீ ஏன் இந்த சொசைட்டியை பார்த்து பயப்படுற”
“ஏன்னா அந்த சொசைட்டிகுள்ள தான் நான் வளர்ந்தேன் மித்ரன். எப்படி வாழனும்னு சொல்லிக் கொடுத்தது இந்த சொசைட்டி தான். இந்த சொசைட்டில தான் என் பிள்ளையைம் நான் வளர்க்கிறேன். நாளைக்கு அவனோடு எதிர்காலமும் இந்த சொசைட்டியை சுற்றித்தான். சோ, அதுக்கு தக்க தான் நான் மாறுவேன்”
“இதை யாருக்கு சொல்ற?”
“எனக்கும், உங்களுக்கும் சேர்த்து தான் மித்ரன். ஒரு குழந்தையோடு இருக்கிற என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்களே, அதுக்கும் சேர்த்துதான். என்னோட பேர் கெட எனக்கு விருப்பம் இல்லை”
“பிரவீனா ஃபர்ஸ்ட் ஒரு விஷயம். ஆதிரனுக்கு, அப்பா இல்லைன்றது ஒரு குறை கிடையாது.நமக்கு அப்பா இல்ல, சில இடத்துல நம்ம இப்படித்தான் இருக்கணும்.. அப்படின்னு கண்ட்ரோல் பண்ணி நீ அவனை கொண்டு போகாத.. அவனை, அவனாகவே வாழ விடு… கோபப்பட்டா கோபப்படட்டும், பொய் சொன்னா பொய் சொல்லட்டும்.. குழந்தைக கிட்டயும் சின்ன சின்ன தப்பு இருக்கத்தான் செய்யும் பிரவீனா. அதை சரி பண்ண தான் நீ இருக்க… உன் சொந்த வீட்டுல கூட அவனுக்கு சுதந்திரம் இல்லாம, அவனை கட்டுப்படுத்தாத” எனவும்,
“எங்க அப்பா சொன்னாரா?” என்றாள் லேசாக சிரித்து.
“ஆமா, உன் தம்பி, தம்பி மனைவியெல்லாம் உன்னை விட சின்ன பசங்க.. உன் பிறந்த வீடு. அவங்களை பார்த்து நீ அட்ஜஸ்ட் பண்ணி, ஆதிரனையும் அட்ஜஸ்ட் பண்ண வச்சு ஒரு உரிமையில்லாத உறவுகளை நீ அவனுக்கு கொடுக்குற” பிரவீனா பதில் பேச வில்லை.
“இளங்கோ உன் கூடவே இருந்தா கூட பரவாயில்லை. அவர் இந்த உலகத்தில இல்லை. உங்க ரெண்டு பேருக்கான உறவை நான் விமர்சனம் பண்ண மாட்டேன் பிரவீனா. ஆனா, இந்த உலகத்துல இல்லாத ஒருத்தருக்காக நீ உண்மையாய் இருந்து, அந்த கோட்டுக்குள்ளையே ஆதிரனையும் கட்டி போடுற… தான் பார்த்தே அறியாத அப்பாவுக்காக, தன்னை தொட்டு தூக்காத அப்பாவுக்காக அவன் ஏன் கடைசி வரைக்கும் நிறைய விஷயங்களை இழந்துட்டு நிக்கணும். அத்து, அப்பாவா என்னை நினைக்கிறான். எங்க ரெண்டு பேருக்கும் நெருக்கமும், பாசமும் இருக்கு. அது ஏன் உன்னை பாதிக்குது. ஆதிரன், இளங்கோவோட பையனா தான் இருக்கணும்னு ஏன் விரும்புற” என்று மித்ரன் கேட்க.
“எனக்கு விருப்பமே இல்லாட்டியும் கூட ஆதிரன், இளங்கோவோட பையன் தான் மித்ரன். நான் ஏன் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை யோசிக்கவே இல்ல தெரியுமா? ஏன்னா, என்னை நம்பி ஒரு பையன் இருக்கான் மித்ரன். அவனை தாண்டி எனக்கு என்ன வாழ்க்கை?”
“பிரவீனா நான் உன்கிட்ட காதல் சொல்லும்போது நீ ஆதிரனோட அம்மாவா தான் இருந்த.. இளங்கோ உயிரோட இருந்து நான் உன் பின்னாடி வந்து இருந்தா, அது தப்பு. இப்ப அவர் இல்லை. நீங்களும் தனியா இருக்கீங்க, நானும் என் வாழ்க்கையில வெறுமையா இருக்கேன். எனக்கும் குடும்பம் வேணும் பிரவீனா. அந்த குடும்பம் என்ற வட்டத்தில் நீ மட்டும் கிடையாது. ஆதிரனும் இருக்கான்.. என் மகனா” என்று மித்ரன் சொன்னதும், விரக்தியாக சிரித்தவள்,
“மித்ரன்.. இந்த உலகத்துல அவனுக்குன்னு உரிமையுள்ள உறவா இருக்குறது நான் மட்டும் தான். உண்மைதான், என் வாழ்க்கை ஒரு வருஷத்திலே முடிஞ்சு போச்சு. அதுக்காக நான் எனக்குன்னு வேறொரு வாழ்க்கையை தேடிக்கிட்டேனா.. அவனுக்கு யார் இருக்கா? அம்மான்னு என் மேல இருக்கிற உரிமையும் அவனுக்கு போயிரும் மித்ரன். வேணாம், நான் அவனுக்கு மட்டுமே அம்மாவா இருக்க விரும்புறேன்”
“நான் அப்படிப்பட்டவனா பிரவீனா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உன் பையன்றதுக்காக இல்லாமலே ஆதிரன் மேல எனக்கு பாசம் இருக்கு”
“நீங்க மட்டும் இல்லை மித்திரன். எல்லாருமே அப்படித்தான்… அவங்கவங்களுக்குன்னு குடும்ப வரும்போது ரத்த சொந்தமே இல்லாத ஆதிரன் தள்ளி போயிடுவான். என் பிள்ளை ஒதுக்கப்பட்டு நிற்கிறது என்னால தாங்கவே முடியாது மித்ரன்” பிரவீனா கண்கள் அழுதது.. அந்த நினைப்பு கூட அவ்வளவு வேதனை.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்றது பிரவீனா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உனக்கான ஒரு வாழ்க்கை உன் பையன தனிமையாக்கிறும்னு நீ நினைக்கிற? அது அப்படி கிடையாது. ஆதிரனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு கண்ணால பாக்குற நீயே இப்படி சொல்லும்போது வேற என்ன நான் சொல்ல?” அமைதியாகி கொண்டான் மித்ரன்.
“நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு குழந்தை வரும் போது ஆதிரன் என்ன ஆவான் மித்ரன். நமக்கு கல்யாணமானா நான் பிரவீனா யுவி மித்ரான மாறலாம். ஆனா, ஆதிரன். அவன் என்னைக்கும் இளங்கோவோட பையன் தான். அப்படித்தானே இந்த ஊரு, உலகமும், உங்க குடும்பமும் பார்க்கும்.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா உங்க குடும்பத்துக்காக, இந்த உலகத்துக்காக நிறைய இடத்துல என் பையன விட்டுக் கொடுத்து நிக்கிற மாதிரி இருக்கும். எனக்கு அது வேணாம். ஆதிரனுக்கு அப்பா இல்லாட்டியும் அம்மாவாது கூட இருக்கணும்” உறுதியாக சொல்லி முடித்தாள் பிரவீனா.
தூரத்தில் விளையாட்டு கொண்டிருந்த மகனை அழைத்தான் மித்ரன். அத்து வரவும்,
“நீ உங்க அப்பாவ பாத்திருக்கியா அத்து?”
“பார்த்து இருக்கேன் போட்டோல” தெளிவாக சொன்னான் ஆதிரன். பிரவீனா தான் புரியாமல் பார்த்து நின்றாள்.
“உங்க அப்பாவ நேர்ல பார்க்க உனக்கு ஆசை இல்லையா அத்து” என்று கேட்க.
“இருக்கு, ஆனா எங்க அப்பா தான் சாமிகிட்ட போயிட்டாரே.. அவரால திரும்ப வர முடியாது. அப்புறம் எப்படி பார்க்க முடியும்” மித்ரன் பிரவீனாவை ஒரு பார்வை பார்த்தான். சின்ன குழந்தைக்கு கூட கடந்த காலமும், நிகழ்காலமும் தெரிகிறது. இந்த உலகத்தில் இல்லாத தந்தை திரும்ப வரமாட்டார் என்று புரிகிறது. ஆனால், பிரவீனா தான் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்வது.
“ஒருவேளை திரும்பவும் உங்க அப்பா வந்தா, நீ உங்க அப்பா கூடவே இருந்துக்கிறியா அத்து” என்று மித்ரன் கேட்கவும்,
“நீங்க?”
“உங்க அப்பா இருக்கும்போது நான் எதுக்கு?”
“அவர்தான் வரமாட்டாரே மித்து. எனக்கு நீங்களே இருங்க. உங்க கூடத்தான் ஜாலியா இருக்கு. எனக்கு நீங்க தான் வேணும்” என்றான் சிறுவன், பிரவீனா திகைத்து போய் அமர்ந்து இருக்க,
“அவனுக்கு புரியும் பிரவீனா, இளங்கோ தான் அவனோட அப்பான்னு… அவர் தான் அவனோட பயாலஜிக்கல் பாதர். அதை நானும் மாத்த மாட்டேன். ஆனால், உணர்வு ரீதியா அவன் நெருங்குறது என்னதான். நீ என்னதான் இளங்கோ போட்டோவ காட்டி அப்பான்னு சொல்லிக் கொடுத்தாலும்.. அவன் தேடுறது இந்த மித்திரனை தான். ஏன்னா, அப்பான்ற உணர்வை அவன் என்கிட்ட உணர முடியும். இளங்கோ போட்டோ பார்க்கும்போது உணர முடியாது. ஆனா, நீ இதைத்தான் உனக்கு காட்டிட்டு இருக்க…” என்றவன்,
“நான், உன்னோட நல்ல ப்ரெண்ட். என்னோட குணம் உனக்கு தெரியும். நான் எப்படினும் தெரியும். வீணா, வீம்பா இருக்காம கொஞ்சம் யோசி பிரவீனா. இளங்கோ இல்லை. அதோட உன் வாழ்க்கையை இழுத்து முடிட்ட… நான் உன்னை தேடி வந்திருக்கேன் தானே. என்னை கொஞ்சம் யோசி. என்னோட உன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு யோசி. ஆதிரனுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேனான்னு யோசி. இளங்கோவோட உன் வாழ்க்கை கதவு மூடியாச்சு. அதை திறக்க சொல்லி நீ தான் தட்டிட்டு இருக்க.. என்னைக்குமே திறக்க முடியாத கதவ… ஒருவேளை நமக்கு கல்யாணமானா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்னு நெனச்சு பாரு.. சரி வராதுன்னு தோணுச்சுன்னா நான் ஒதுங்கி போறேன்” என்றவன் மித்ரனுக்கு பை சொல்லி கிளம்பி விட்டான்.
பிரவீனா தான் ஒரு மாதிரி திகைத்து போய் அமர்ந்திருந்தாள். இளங்கோ இறந்தபின் அவள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், வேதனைகளையும் பார்த்து இருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் கடவுளிடம் கேட்பது என் கணவர் உயிரோடு இருந்திருக்கலாமே!… அவள் மனமும் இந்த நேரம் என் புருசன் மட்டும் இருந்தால் என்று தான் சிந்திக்கும். தவிர, ஒரு நாளும், இனி ஒரு நல்ல எதிர்காலம் அமையுமோ என்று யோசித்ததே இல்லை. மித்ரன் அந்தப் பக்கம் அவள் மனதை கொஞ்சம் திருப்பி விட்டான்.
வீட்டில் தேவதாசம் மனதளவில் மகள் திருமணத்திற்கு தயாராகி பிரவீனாவுக்கு என்ன தேவை என்று பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஒரு நம்பிக்கை எப்படியும் மகளை சம்மதிக்க வைத்து விடலாம் என்று… மகேஸ்வரிக்கும் மகளை எப்படியாவது மித்திரன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணம்.
இளங்கோ மருத்துவமனையில் இருக்கும் போது பிரவீனாவிடம் இருந்த நகைகளை எல்லாம் அவள் விற்று விட்டாள். கணவன் பிழைத்து விடுவான் என்று நினைத்து இருப்பாள் போல… அதனால எதிர்காலம் குறித்து எந்த யோசனையும் இன்றி எல்லா நகைகளையும் விற்று விட்டாள்.
தற்போது அவளிடம் தங்கம் என்று ஒன்று கூட இல்லை. சாதரணமாக வீட்டில் அணிவது மட்டுமே இருந்து. எந்த விசேசத்திற்கும் போகவே யோசிக்கும் நிலையில் இருப்பவள் நகைகளை போடுவதையா யோசிப்பாள். ஆனாலும், பெற்றவர்களுக்கு வெறும் கையோடு மகளை அனுப்ப மனமில்லை. மித்ரன் எதையும் எதிர்பார்க்க மாட்டான் தான். இருந்தாலும்.. ஒன்று இரண்டு நகைகளையாவது மகளுக்கு எடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
பிரவீனாவுக்கு நினைவெல்லாம் மித்ரனை சுற்றியே வந்தது. அவன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பெரிதாக அவள் யோசிக்கவில்லை புதிதாக பார்க்கும் மனிதனை தான் விமர்சனம் செய்ய முடியும். மித்திரன், அவளின் உற்ற நண்பன். அவன் தன்னைப் பற்றி மறைக்காமல் முழுதாக சொல்லியவன், மனம் மாறி நிற்பவனை, முந்தைய வாழ்க்கையின் பிழையை சுட்டிக்காட்டி ஒதுக்க மனமில்லை. அந்த அளவிற்கு பிரவீனா மோசமான பெண்ணும் கிடையாது.
மித்ரன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு குன்னூர் பயணமானான். இதுவரை அவன் யோசிக்காத ஒன்றை பிரவீனாவும் கேட்டாள். அதுதான் அவனின் குடும்பம் குழந்தையோடு இருக்கும் தாயை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்களா என்று?… வாழப்போவது அவன், காலம் முழுக்க வைத்து தாங்க போவது அவன்.. வேற யார் வேண்டும். ஆனாலும், பிரவீனா சொல்வதில் இருந்த நியாயம் அவனை குன்னூர் நோக்கி வர செய்தது.
தன்னைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார் என்றதும் யாராக இருக்கும் என்ற யோசனையோடு சத்தியமூர்த்தி வெளியே வந்தார். சத்தியமாக அங்கு தன் மகனை எதிர்பார்க்கவே இல்லை. அவனைப் பார்த்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாகியது. அப்படி எல்லாம் பெற்றோர்கள் என்று ஓடி வருவதோ, போன் பண்ணி நலம் விசாரிப்பதோ மித்ரன் கிடையாதே…
“மித்து, என்னடா சர்ப்ரைஸ் இது? திடீர்னு வந்திருக்க.. உங்க அம்மாவுக்கு தெரியுமா?”
“யாருக்கும் சொல்லலை. உங்ககிட்ட தான் கொஞ்சம் லைஃப்ப பத்தி பர்சனலா பேசணும் ப்பா” ஒட்டாத தன்மை அவன் குரலில்…
“உன் பர்சனலா சரிதான்” என்று மனதில் நினைத்தவர் “என்னடா எதுவாக இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு?” அவருக்கு புரியவில்லை, அவன் விருப்பத்திற்கு தக்க தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மித்ரன் அலட்டிக் கொள்ளவே இல்லை. “நான் ஒரு பொண்ண விரும்புறேன். அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரைக்கும் அவ கூடவே வாழனும்னு நினைக்கிறேன்”
“என்னடா மித்து சொல்ற? பேசுறது என் மகன் தானா? யாருன்னு சொல்லுடா, யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறோம். வேற எதுவும் எங்களுக்கு தேவை இல்லை. நீ இப்ப எடுத்த முடிவே போதும்” மனிதர் துள்ளிக் கொண்டிருந்தார் இதற்காகத்தானே இத்தனை வருஷம் காத்திருந்தது…
“என்கூட வேலை பாக்குற பொண்ணு தான் ப்பா பிரவீனா. ஆதிரன்னு அஞ்சு வயசுல ஒரு பையன் இருக்கான்” என்றதும்,
சத்தியமூர்த்தி நெஞ்சை பிடித்தார், “என்னடா சொல்ற லிவ்விங் டு கெதர் போய் இப்ப கல்யாணம் ஆன பிள்ளைக பின்னாடிலாம் போக ஆரம்பிச்சுட்டியா?”
“அப்பா” என்ற அதட்டியவன் “சும்மா உளறாதீங்க. பிரவீனா ஃபர்ஸ்ட் கணவர் இறந்துட்டாரு. ஒரு குழந்தையோடு தனியாத்தான் இருக்கா”
“இரக்கமா மித்ரன்” என்றார் ஒரு மாதிரி குரலில்.
“நிச்சயமா இல்லப்பா நான் அவ மீது இரக்கப்பட்டா, அவ வேலையில தான் ஹெல்ப் பண்ணியிருப்பேன். கடைசி வரைக்கும் என் வாழ்க்கை துணையா அவளை நான் தேர்ந்தெடுத்துருக்க மாட்டேன். உங்களுக்கே தெரியும் கல்யாணத்தை பத்தி என்னோட புரிதல்… ஆனால், அவதான் என் மனசையும் மாத்துனா… கணவன், மனைவி உறவு, அதுக்கான மரியாதை எல்லாம் அவகிட்ட தான் நான் பார்த்தேன்” என்றவன் முகம் மென்மையானது,
“உணர்வுபூர்வமா நிறைய அனுபவிச்சேன். அதை என்னால உங்க கிட்ட வார்த்தையா சொல்ல முடியல. பட், நான் சாகுற வரைக்கும் ஒரு பொண்ணோட வாழலாம் அப்படின்னா அது பிரவீனா மட்டும்தான். இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும், இவ கூட குழந்தை பெத்துக்கணும், அவ கூட கடைசி வரை சந்தோஷமா வாழனும் அப்படின்ற உணர்வு எனக்கு வந்ததும் பிரவீனா மேல மட்டும் தான். வேற யார் மேலையும் வராது”என்று உறுதியாக சொன்னான்.
“நாங்க வேணா சொன்னா?”
“உங்களோட மறுப்பு என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவளுக்காக மட்டும் தான் நான் உங்களை தேடி வந்தேன். பிரவீனா குடும்பம் என்ற வார்த்தைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பா.. நீங்களும் ,அம்மாவும் என் குடும்பமா வந்தா மட்டும்தான். அவ என் வாழ்க்கைகுள்ள வருவா” என்று மித்ரன் சொல்லவும்,
மகன் முகமே பார்த்திருந்தார் சத்தியமூர்த்தி. எப்படி விரைப்பாக நிமிர்ந்து கொண்டு நின்றவன் ஒரு பெண்ணுக்காக தலைகீழாக நிற்கிறான்.
“நாங்க உனக்கு என்னடா பண்ணினோம். ஏன்டா எங்களை விட்டு தள்ளி நிக்குற மித்ரன்”
“நீங்க எனக்கு எதுவுமே பண்ணலப்பா அதுதான் உண்மை. நான் தனியாவே இருந்தேன். தனியாவே வளர்ந்தேன். எனக்கு உங்க கிட்ட பிடிப்பு வரமாட்டுது. ஒரு பதிமூனு வருஷம் உங்க கூட இருந்திருப்பேனா.. அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியல. எனக்கு விவரம் தெரியும் போது நான் தனியா இருந்தேன். என் வாழ்க்கையோட முடிவுகளை நானே தனியா எடுத்தேன். என்னை ஏம்பா தனியா விட்டீங்க”
“என் வாழ்க்கையே ரொம்ப தப்பா இருக்கு. நிறைய வெறுமையை உணர்ந்துட்டேன். என்னால உங்களோடு ஒட்டவும் முடியல. நான் எனக்குன்னு கேட்கிற ஒரு உறவு பிரவீனாவும், ஆதிரனும் மட்டும்தான். ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்”
“என்னடா மித்து.. அப்பா கிட்ட போய் ப்ளீஸ் போட்டுக்கிட்டு” சங்கட பட்டார் சத்யமூர்த்தி.
“நான் அப்படியே பழகிட்டேன் ப்பா. பிரவீனா வந்தா நான் மாறுவேன்னு நினைக்கிறேன். ஏன்னா அவ என்ன சொன்னாலும் குடும்பம் சொந்தம் ரொம்ப பர்க்கிற ஆள்” என்றதும்,
முகம் பார்க்காத பிரவீனா மேல் நல் மதிப்பு தோன்றியது. இல்லையென்றால் நிச்சயம் பிரவீனாவை தப்பாகத் தான் நினைத்து இருப்பார். கணவன் இல்லாததால் வசதியான தன் மகனை வளைத்து விட்டாள் என்று கூட நினைத்து இருப்பார். ஆனால், அப்படியில்லாமல் பிரவீனா மேல் மதிப்பு உருவாக காரணமே, தன் மகன் தன்னை தேடி வந்ததுதான்.
இத்தனை காலம் மகன், நான் ஒரு பெண்ணோடு லிவிங் டு கெதரில் தான் இருக்கிறேன். அதற்கு என்ன என்று நிமிர்ந்து கேட்பவன். இன்று, ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று வந்து நிற்கிறான். எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்கிறான். அப்படி கேட்க வைத்த பெண் மேல் உண்மையில் சத்தியமூர்த்திக்கு ஒரு மரியாதை தாவந்தது. ஏனெனில் மித்ரன் தன் மகனாக இருந்த போதும், அவன் குணம் அறிவார்.
என்ன ஒன்று பிரவீனா யாராக இருந்தாலும் ஜாதி, அந்தஸ்து, பணம் என்று எதுவும் பார்க்காமல் மகனோடு சேர்த்து வைக்க தயார் தான். ஆனால், மனதில் நெருடலாக நின்றது அவளின் முந்தைய வாழ்க்கை.. கணவனை இழந்த பெண் என்றால் கூட பரவாயில்லை. கையில் குழந்தையோடு நிற்கிறாளே!…
“அப்பா, நான் ஆதிரனை பார்க்கும் போதெல்லாம் என்ன பார்க்கிற மாதிரியே இருக்கும். அவனுக்கு அப்பா இல்லை. எனக்கு நீங்க எல்லாம் இருந்தும் இல்லாம இருந்தேன். ரொம்ப சின்ன வயசுல வெளிநாட்டு வாழ்க்கை. எனக்கு ஒண்ணுமே புரியலை. நிறைய இடத்துல ஆதிரன் மாதிரியே ஒடுங்கி போயிருக்கேன். அந்த சூழல் பழகி, உணர்ந்து நான் தனியா நிக்கிறதுக்கு ரொம்ப சிரமப்பட்டேன்”
“மித்ரன்” என்றார் தந்தை. இன்று தான் மகன் மனம் திறக்கிறான். இதுவரை ஏன் மித்ரன் தங்களை விட்டு தள்ளி நின்றான் என்று புரியாமல் நின்றவர் தான்.
“ஆதிரன் எனக்கு பிரவீனாவுக்கும் மேல ரொம்ப ஸ்பெஷல். அவனோட கண்ணுல நான் என்னை பார்க்கிறேன். நிச்சயம் பிரவீனாவும் ஆதிரனும் தான் ப்பா என் வாழ்க்கை. எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க.. நீங்கதான் பிரவீனா வீட்ல வந்து பேசணும்” என்று உறுதியாக சொன்னான்.
மகன் உடைத்து பேசி விட்டான். எதையும் மறைக்கவில்லை. உள்ளது இதுதான் என்று சொல்லியும் விட்டான். இவர்கள் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் மகன் நிச்சயம் அந்த பெண்ணை விட போவதில்லை. ஒருவேளை தாங்களே அவன் காதலை சேர்த்து வைத்தால், தங்கள் மேல் உள்ள மனதாங்கள் குறையுமோ என்று யோசித்தார். அவன் நல்லதுக்கு என்று தான் காசை கொட்டி படிக்க வைத்தார். அவன் இவ்வளவு தனிமையை உணர்வான் என்று நினைக்கவே இல்லை. எப்படியும் மகனை தங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
மகன் விரும்புவது குழந்தையோடு இருக்கும் ஒரு விதவைப் பெண் என்ற விஷயம் வருத்தத்தை அளித்தாலும், திருமணத்தை நடத்திக் கொடுப்பதை தவிர அவருக்கு வேற வழியில்லை. அவர்களின் ஒற்றை புதல்வன் அவன்.. வெறுத்து ஒதுக்கியோ, சாபமிட்டோ தள்ள முடியாது. எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். இனி மனைவியை சமாளிக்க வேண்டும்.
தேவதாசும், மகேஸ்வரியும் ஒரு பத்து பவுனில் ஆரமும், இரண்டு வளையல்களும் பிரவீனாவுக்கு எடுத்தார்கள். வேற என்னென்ன எடுக்கலாம் என்று மகேஸ்வரி திட்டம் போட அதை எப்படியோ தெரிந்து கொண்டாள் ஆர்த்தி.
அடுத்து என்ன? உடனே ப்ரீத்திக்கு போன் பண்ணி வீட்டில் நடக்கும் விஷயத்தை ஒப்பித்த விட்டாள். அடுத்த நாள் காலையிலே பிரேம், ப்ரீத்தி இருவரும் தாய் தந்தை மீது பஞ்சாயத்தை கூட்டி விட்டார்கள்.
“அப்பா, நீங்க அக்காவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் சரிதான். நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனா, அவளுக்கு போட வேண்டிய நகை எல்லாம் போட்டு இளங்கோ மாமாவுக்கு கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. திரும்பவும் எங்க ரெண்டு பேரை மறந்துட்டு. அவளுக்கு மட்டுமே இவ்வளவு செய்றது நியாயமா?” என்று பிரீத்தி கேட்க.
“பத்து பவுன் எட்டு இலட்சம். எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம மூணு பேருக்கு சேர வேண்டிய பணத்தை எப்படி நீங்க தனியா அக்காவுக்கு மட்டும் கொடுக்கலாம். அன்னைக்கு ஒரு இடம் பாக்க நான் கேட்டதுக்கு என்ன சொன்னீங்க? உனக்கு கொடுத்தா மூணு பேருக்கும் கொடுக்கணும்னு சொன்னீங்க. இன்னைக்கு மட்டும் நீங்க பண்றது நியாயமா?” என்று கேட்டு நின்றான் பிரேம்.
error: Content is protected !!