Skip to content
Post Views: 3,635
மார்கழி – 20
ஆட்டோ நின்றதும் அதுவரை இல்லாத தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ள, எடுத்த முடிவு சரிதானா என்ற குழப்பம் வந்துவிட்டது. இறங்க முற்படாமல் வெளியே வெறித்தபடி இருந்தவளை கலக்கமாய் பார்த்த அறிவழகன்,
“இயல் வீட்டுக்கு வந்தாச்சு.” என்றவன் லேசாக தலையசைத்து இறங்கும்படி சமிக்ஞ்சை செய்ய,
“ஹான் இதோ.”
Advertisement
ஒருவித கலக்கத்துடன் இறங்கியவள் நிமிர்ந்து எதிரே இருந்த கட்டடத்தை பார்த்தாள். ஆட்டோவிற்கு பணம் கொடுத்து வந்தவன், “பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கு நம்ம வீடு.” என்று முன்னே சென்று கதவை திறந்து வைத்து அவளை பார்த்தபடி அவளுக்கு வழி விட்டு நிற்க, தயக்கத்தில் தர்க்கம் செய்த காலை இழுத்து வந்தாள். வாசல் கதவை இழுத்து மூடி தாழிட்டு வந்தவன் முன்னே வழி காட்டி நடக்க, சங்கடத்தில் தடதடக்கும் நெஞ்சத்தை மறைத்தவண்ணம் அவனை தொடர்ந்தாள்.
குடந்தையில் இருந்தது போலவே ஒரு அறை கொண்ட வீடு. ஆனால் அதைவிட சிறியது.
“ரூம்ல படுத்துக்கோ.” என்று அறையைக் காண்பிக்க, அவனையும் அறையையும் மாறி மாறி பார்த்தாள்.
Advertisement
“எதுவும் வேணுமா இயல்?”
Advertisement
இல்லை என்பதாய் தலையசைத்தவள் சோர்வாய் உள்நுழைய, பின்னோடே சென்று பாய் விரித்து தலையணை எடுத்துப்போட்டான்.
“இங்க வெளில ஹால்ல இருப்பேன். எதுவும் வேணும்னா ஒரு குரல் கொடு.” என்று அவன் வெளியே நகர, பையை கீழே வைத்துவிட்டு மெதுவாய் அமர்ந்தவளுக்கு சட்டென எதுவோ நினைவு வர,
“நீங்க இன்னும் சாப்பிடலையே.” என்று அவனை நிறுத்தினாள்.
Advertisement
அவளின் அக்கறையில் கனிந்திருந்த மனம் குளுமை பூசிக்கொள்ள, “பசிக்கல இயல். ஒருமணி நேரம் கழிச்சி உனக்கு குடிக்க எதுவும் வாங்கிட்டு வரப்போ சாப்புட்டுக்குறேன். இப்போ ஒரு கால் இருக்கு பேசிட்டு வரேனே.” கண்களைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் சொல்லிவிட்டு சென்றவனைக் காண்கையில் இதழ்கள் துடித்தது. அவனைக் கண்டாலே பீறிட்டு கிளம்பும் அதிருப்தியும் கோபமும் எங்கு சென்று ஒளிந்து கொண்டது? சில மாதங்களுக்கு முன் தன் அறையில் அவன் நிழல் படுவதைக் கூட விரும்பாதவள் இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவன் வீட்டில் அந்த அறையில் அண்டிக்கிடக்கிறாளாம்? அவன் அருகாமையை உணர்ந்து முகம் சுழித்த நாட்கள் போய் அவன் தோள் சாயும் காலங்கள் வந்துவிட்டதா என்ன? கேள்விகள் அணிவகுக்க, தலையை பிடித்துக்கொண்டாள்.
‘ச்ச என்ன இது?” என்ன உணர்கிறோம் என்று உணர முடியாத நிலையில் அவன் வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றது தெரிந்தது. கண்டுகொள்ளவில்லை. கதவை திறந்துகொண்டு அவன் வெளியே செல்லும் அரவம் கேட்க, அப்படியே தரையில் சரிந்து படுத்துக்கொண்டாள். கண்களை மூட உறக்கம் வருவேனா என்றது. வயிற்றில் சுள்ளென்று ஒரு வலி. உடலை சுருக்கி வயிற்றை அணைத்தார் போல் சுருண்டுகொண்டாள். வலி லேசாக மட்டுப்படுவது போலிருந்தாலும் தூக்கம் வரவில்லை. எதிரே இருந்த சுவற்றை வெறித்துக்கொண்டு வெறுமென படுத்திருந்தாள். மனதின் கேள்விகள் ஆயிரம் இருந்தாலும் அந்நேரம் யோசிக்க தோன்றவில்லை. வலியை முழுமையாய் உள்வாங்கி அதனை அசைபோட்டபடி கிடக்க, அவன் உள்ளே வருவதை உணர முடிந்தது.
“இயல் கொஞ்சம் எழுந்துக்கோ.” அவனின் அழைப்பில் புருவங்கள் நெரிந்தது.
‘என்னவாம்?’ கேள்வி எழுந்தாலும் கேட்கவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“தூங்க முடியலைல. இதை கொஞ்சமா குடிச்சிப் பாரேன்.” என்று எதையோ அவள் முன்னே நீட்ட, புரண்டு படுத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“இளநீரும் மோரும் வாங்கிட்டு வந்திருக்கேன். எது குடிக்க புடிச்சிருக்கோ அதை குடி.” என்று இரு தம்ளரை அவளிடம் நீட்டினான்.
“வேண்டாமே.” என்று அவள் பார்க்க,
“வயிறு வலின்னு காலையும் இட்லி கம்மியா தான் சாப்பிட்டிருப்ப. வயிறு காலியா இருந்தாலும் தூக்கம் வராது.”
இதழ் வளைத்து அமர்ந்த இடத்திலுருந்தே கண்களை விரித்து அவன் கையில் இருந்தவற்றை பார்த்தவள், “மோர் குடிக்கிறேனே. ஆனா இவ்ளோ வேணாம்.” என்றாள் தம்ளரின் அளவை பார்த்து.
“முடிஞ்ச வரைக்கும் குடி.”
“ஏன் மிச்சத்தை நீங்க குடிக்கவா?” என்று முனங்கிக்கொண்ட மோரை வாங்கிக்கொள்ள,
“மிச்சம் கிடைக்குமா?” என்ற குரலில் விஷமம் தொக்கி இருந்ததோ ஆராய்ச்சியாய் விழிகளை உயர்த்தியவள்,
“மிச்சம் கிடைக்கனும்னா இவ்ளோ வாங்கிட்டு வந்தீங்க?” என்று அவன் முகம் பார்க்க, லேசாக வெளிவரத் துடித்த புன்னகையை இதழ்களுக்குள் மெல்வது போல் இதழ்களை உள்ளிழுத்து ஈரப்படுத்தியவன்,
“வலி தேவலையா இப்போ?” என பேச்சை மாற்றினான்.
“கொஞ்சம் தேவலை. இன்னும் சுருக்குனு இருக்கு.” மெல்ல மோரை உறிஞ்சியபடி பதில் சொல்லியவள் சட்டென அதிகரித்துவிட்ட வலியில் வயிற்றை பிடித்துக்கொண்டு பின்னே சாய,
“விழுந்துடாத இயல்.” பதறியவன் நொடியில் அவளைப் பிடித்து பின்னால் நகர்ந்து அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டான்.
“பின்னாடி சுவரு இல்லை இயல், விட்டா விழுந்திருப்ப.” தான் பிடித்ததற்கான காரணத்தை சொல்லிக்கொண்டே அவள் கையிலிருந்த தம்ளரை வாங்கி கீழே வைத்தவன் அருகில் இருந்த இளநீரை அவள் உதட்டருகில் சாய்த்து, “இதை குடிக்குறியா?”
“வேண்டாம்.” பலகீனமாக ஒலித்தது அவள் குரல்.
“இதை குடிச்சிட்டு செரிமான டானிக் குடிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும். குடியேன்.” மெலிதான குரலில் வார்த்தைக்கு வலித்துவிடுமோ என்று அவள் முகம் நோக்கி குனிந்த வண்ணம் மொழிய, அவன் தோளில் இருந்தபடியே இடவலமாய் தலையசைத்தவள் மெதுவாய் நகர்ந்து நிமிர்ந்தாள்.
அவள் விலகலில் தலையணை ஒன்றை எடுத்து சுவரில் சாய்த்து அவள் முதுகுக்கு வைத்தவன், “கொஞ்சம் பின்னாடி நகர்ந்து உக்காந்துக்கோ.” என்று சொன்னதோடு இல்லாமல் அவளை பிடித்து வாகாக அமர வைத்தான்.
“நானே.” என்று கை காட்டி இடையை விட்டு நழுவி விலகிய சேலையை அவள் இழுத்துவிட்டபடி அமர, முகத்தை திருப்பிக்கொண்டான் அறிவழகன்.
“நான் தூங்கிடுவேன்.”
“தூங்கிடுவன்னு தெரியும். அதுக்கு முன்ன இதை கொஞ்சம்…” இளநீரை எடுத்து அவனே அவளுக்கு புகட்ட, சோர்வாய் கண் மூடி உறிஞ்சினாள்.
“மதியம் சாப்பிட்டுட்டு மோர் குடிக்கலாம். காலைல போட வேண்டிய மாத்திரையை மதியம் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்தீன்னா சீக்கிரம் சரியாகிடும்.” என்று பேச்சு கொடுத்தப்படி இருக்க, தம்ளரை முழுதாய் சாய்த்தவன் அவள் குடித்து முடித்ததும் தன் கைக்குட்டை வைத்து வாயை துடைத்துவிட்டான்.
“ப்ச் வேண்டாம்.” உரிமையான அவன் செயல்களை ஏற்க முடியாமல் அவள் முகம் திருப்ப,
“சரி படுத்துக்கோ. அதுக்கு முன்னாடி இதுல ஒரு மூடி குடிச்சிடு.” எளிதாக செரிமானமாகும் மருந்தை அதன் மூடியில் ஊத்திக் கொடுத்தான்.
“ஹா… நல்லாயில்லை.” மருந்தின் சுவையில் இயலின் முகம் எட்டுத்திக்கிலும் சென்று வந்தது.
“உடம்பு சரியாகணும்னா கொஞ்சம் கசப்பு எடுத்துக்க தான் வேணும்.”
“அவ்ளோ மோசமா இல்லைனாலும் இந்த கார்ப்பும் கசப்பும் இல்லாம மருந்து தயாரிக்கலாம்.”
“தேவையானதை தேவையான அளவுல சேர்த்தா கசப்பு கூட ருசிக்குமாம் காபி மாதிரி. கஷ்டமா இருந்தாலும் சிலது எல்லாம் சகிச்சிக்க தான் வேணும். இப்போ கஷ்டப்பட்டா அப்புறம் நீதான் நல்லாயிருக்கப் போற.” என்றவனின் பேச்சு அவளிடம் இரு பொருளாய் சென்று சேர, அவனை ஏற்க மனம் தயாராகிக்கொண்டிருந்தது.
“படுத்து கண்ணை மூடிக்கோ.” அவளை படுக்க ஊக்கி, அவள் தோள் தொட்டு மெதுவாக தட்டிக்கொடுக்க, நெஞ்செல்லாம் இதம் பரவியது.
பிடிவாதமாய் மற்றவர்களை ஒதுக்கி யாருமற்ற வெறுமையை தேடிக்கொண்டவளுக்குள் ஒரு ஆசுவாசம். தனக்கு ஒன்றென்றதும் தனக்காக பார்க்கிறானே, தன் நலன் வேண்டுகிறானே, உடன் வைத்து பார்த்துக்கொள்ள விழைகிறானே என்று மனம் அவன்பால் சரியத் துவங்க, இதைத்தான் எதிர்ப்பார்த்தாயா? உனக்கான அக்கறையை கொஞ்சம் காட்டிவிட்டால் அனைத்தும் மறந்து போய்விடுமா? இல்லை இப்படி இவன் ஆறுதல் கொடுத்து அரவணைத்துச் சென்றால் செய்த தவறுகளை எளிதாக மறந்து மன்னித்துவிட முடியுமா? மன்னிக்க முடிகின்ற குற்றமா அது? விருப்பத்திற்கு மாறாக நடந்த செயலை எதிர்த்து குரல் கொடுத்தவளின் மனத்திடம் அவனின் இந்த சிறு சிறு செய்கைகளில் சிதறலாமா? பாழாய்போன மனதின் உறுதியை அசைத்துப்பார்க்க இது போதுமா? அத்தனை பலவீனமானதா தன் மனது? அகத்தினுள் பதிலறியா பல கேள்விகள். பதில் அறிய வேண்டியவளோ வலி கொடுத்த உடல் அசதியிலும் அவனின் இதமான கைச்சூட்டிலும் மெல்ல உறங்கிப்போக, வெகு நேரம் சென்று அவன் தோள் தொட்டு உசுப்புகையில் எழுந்தாள்.
“நேரமே சாப்பிட சொல்லியிருக்காங்களே. எழுந்திரு இயல். சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன், சாப்பிட்டு தூங்குவியாம்.”
கண்களை தேய்த்துக்கொண்டு எழுந்தவள் மலங்க மலங்க விழிக்க,
“இப்போ வலி எப்படி இருக்கு இயல்?”
“ஓகே.”
“போய் கை கழுவிட்டு வா.” அறையிலிருந்த பாத்ரூமை காட்டிச் சொல்ல, அமைதியாய் சென்று வந்தாள்.
பொட்டலங்கள் பிரிக்கப்பட்டு உண்ண ஏதுவாக வைக்கப்பட்டிருந்தது குழைந்த தயிர் சாதமும் ஒரு பொரியலும். அவன் எதுவும் சொல்லும் முன் அவளாகவே அமைதியாக உண்ணத் துவங்க, அவளை பார்த்துக்கொண்டே அவனும் தன் உணவை பிரித்தான்.
“நல்லாயிருக்கா இயல்?”
“ம்ம்..”
“காரம் இல்லாம இதுதான் வாங்க முடிஞ்சித்து. நாளைலேந்து இங்க ஒரு அக்காகிட்ட சொல்லி இருக்கேன் காரமில்லாம சமைக்க சொல்லி. நீ ஹாஸ்டல்ல சாப்பிட வேண்டாம். மூணு வேளையும் நேரத்துக்கு நான் எடுத்துட்டு வந்துறேன்.”
“எப்போலேந்து டெலிவரி சர்வீஸ் ஆரம்பிச்சீங்க?” விடாது தாங்கிக்கொண்டே இருக்கிறானே என்ற உணர்வில் பட்டென்று அவள் கேட்டுவிட,
“இந்த நிமிஷத்துலேந்து.” என்றான் அவனும் அசராது.
“ப்ச்… எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். என்னை நானே பாத்துப்பேன்.”
“உன்னை நீயே பாத்துப்பேன்னு தெரியும் ஆனா உன் கையில இல்லாத இந்த சாப்பாட்டு விஷயத்துல என்னை ஹெல்ப் பண்ண விடலாமே. அதுவும் இந்த மாதிரி நேரத்துல உடம்புக்கு ஒத்துக்குறதா பார்த்து கவனமா சாப்பிடனும். ப்ளீஸ்.” என்று கேட்டிட, தேவையற்ற வீம்பில் உடலை கெடுத்துகொள்ள விரும்பவில்லை இயலணி. அதுவும் இந்த அரை நாள் வலியே அவளை படுத்தியெடுத்து இதற்கு மேல் துன்புற முடியாது என்றது. இவனிடம் முறைத்துக்கொண்டு எதையாவது உண்டு இன்னும் வலி அதிகரித்துவிட்டால்? ஐயோ தலையை உலுக்கிக்கொண்டவள் சரியென்றாள்.
“காலையில இட்லி, தோசை, உப்புமா இப்படிதான் இருக்கும். அதையே சாப்புட்டுக்குறேன். லஞ்ச் நீங்க பஸ்ல வரும் போது எடுத்துட்டு வந்து கொடுங்க.”
அவனுக்கு வேறொரு யோசனை இருந்தாலும் அவள் இந்தளவுக்கு சம்மதித்ததே பெரிது என்று விட்டுவிட்டான்.
“புது வேலை கஷ்டமா இருக்குனு சொன்னீங்க. எப்படி நைட்டுக்கு நீங்க சாப்பாடு எடுத்துட்டு வர முடியும்? வொர்க்கிங் அவர்ஸ்ல எனக்காக பர்மிஷன் போட வேண்டாம்.” என்றாள் அவளாகவே யோசித்து.
தான் அனுப்பும் குறுஞ்செய்திகளை கவனித்திருக்கிறாள் என்ற நிதர்சனமே அவனை உற்சாகப்படுத்த, “ஆபீஸ் அவர்ஸ் அதுக்கு ஏத்த மாதிரி மாத்திக்க முடியும் இயல். உனக்கு டின்னர் கொடுத்துட்டு மீதி வேலையை வீட்ல வந்து பாத்துப்பேன்.”
‘பிறகு உங்கள் விருப்பம்.’ என்று விட்டுவிட்டவள் எழுந்துகொள்ள, அவளுக்கு தயாராக மாத்திரைகள் பிரித்து வைத்திருந்தான். அவன் செயலில் புருவங்கள் உயர, இடுப்பில் கைவைத்து ஆழ மூச்செடுத்தவள், “என்ன செய்ய ட்ரை பண்றீங்க?”
“என்ன புரியல?”
“இப்படி செய்யுறதால என்னோட மனசு மாறும்னு தப்பு கணக்கு போட வேண்டாம்.”
“அப்போ சரியான கணக்கு சொல்லிக்குடு.”
“லிமிட் கிராஸ் பண்றீங்க.” விரல் நீட்டி அவள் எச்சரிக்கவும் முகம் தேய்த்து நெற்றியில் விரலால் கோடிழுத்தவன், “நான் செஞ்சதை மாத்தவோ நியாயப்படுத்தவோ முடியாதுன்னு எனக்கு தெரியும் இயல். அதுக்காக இப்படியே லைஃப் வேஸ்ட் பண்ணி என்ன கிடைக்கப் போகுது சொல்லு. அடுத்து என்னன்னு பாக்கணும்ல. என் மேல கிரஷ் இருக்குனு சொன்னீல்ல அதையாவது தக்க வச்சுக்கணும்னு நினைச்சேன். போக போக செட் ஆகிடுவோம்ல.”
இத்தனை தினம் மன்னிப்பு மட்டுமே யாசித்து நின்றவனுக்கு அந்த மன்னிப்பு மட்டும் போதாது என்று புரிந்தது. அடுத்த கட்டத்திற்கு அவன் தங்களை நகர்த்திச் செல்ல முயல்வது தெரிய, அதனை ஏற்கமுடியாதவளாய்,
“நான் கிளம்புறேன்.” என்றுவிட்டாள்.
“ம்ச்… ஓடிட்டே இருக்க இயல்.” அதிருப்தி கொட்டிக்கிடந்தது அவனது உடல்மொழியில்.
“…”
“முதல்ல என் மேல இருந்த கோவத்துல இந்த ஊருக்கு வந்த. இப்போ எங்க மனசு மாறிடுமோன்னு கிளம்பப் பாக்குற. பிரச்சனையை நின்னு பேஸ் பண்ற வரைக்கும் அது குடைச்சல் குடுத்துட்டே தான் இருக்கும். மனசை அரிச்சிட்டே தான் இருக்கும். இதுதான்னு முடிவெடுக்க விடாது. அதுவே கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து அதை கடந்து வர பாரேன், கண்டிப்பா அடுத்து என்ன பண்ணனும்னு தெரியும்.”
அவன் வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்கிறாளா என்ற சந்தேகம் இருந்தாலும் பேசிவிட வேண்டும் என்று தொடர்ந்தான்.
“உன்கிட்ட சாரி கேட்டுடணும்னு தவிச்சி நின்ன எனக்கு அதுக்கு மேல யோசிக்க தோணல. உன் விருப்பம்னு உங்க வீட்ல சொல்லிட்டாலும் நான் அங்கேயே தேங்கி நின்னுட்ட மாதிரி இருந்துச்சு. எனக்குள்ள இருக்குற குற்றவுணர்ச்சி என்னோட கடைசி மூச்சு வரைக்கும் துரத்தும் ஆனா அதை கடந்து வர மெனக்கெட்டதால தான் உன்கிட்ட இயல்பா பேச முடியுது இயல். நீயும் முயற்சி பண்ணேன். மறந்துடலாம்னு சொல்லல, கடந்து வர ட்ரை பண்ணலாமே. இப்படியே இருக்க இருக்க இன்னும் இன்னும் சோர்ந்து தேங்கிடுவோம் இயல். வாழ்க்கையை கொண்டு போறதுக்கான கலகலப்பும் உந்துதலும் இல்லாதப்போ வாழ்க்கையே வெறுத்துடும். தப்பு பண்ணது நான்தானே நீ ஏன் உனக்கு தண்டனை கொடுத்துகிட்டு வாழ்க்கையை வேஸ்ட் பண்ணனும் சொல்லு. நீ சந்தோஷமா இருக்கனும், இந்த இறுக்கத்தை விட்டுறேன். எனக்காக கேக்கல உனக்காக சொல்றேன்.” அவன் இத்தனை நீளமாக பேசினாலும் எந்த எதிர்வினையும் இல்லை அவளிடம்.
“இயல்…”
அவனை மன்னிக்க முடியாமலும் அவனை விட்டு விலகிச் சொல்லும் தந்தையின் பேச்சை ஏற்க முடியாமலும் மனம் அலைபாய்வது பிரச்சனையைக் கண்டு ஓடுவதால் தானே. இவன் சொல்வது போல் கடந்து வர பழகினால் உள்ளத்தை அலைக்கழிக்கும் அலைப்புறுதல்களுக்கு ஒரு விடை கிடைத்துவிடுமே. உள்ளுக்குள் வைத்து மருகுவதை விட வெளியேற்றும் வழியைக் கண்டறிந்தால் மனப்புழுக்கமாவது குறையுமே என்று தோன்றிவிட, நிதானமானாள் இயலணி.
“எனக்கு டைம் வேணும்.”
“சீக்கிரம் ஒரு மாற்றம் வரும்னு நம்புறேன். இப்போ ரெஸ்ட் எடு. நைட் சாப்பிட்டுட்டு நானே கொண்டு போய் விடறேன்.” என்றவன் யோசனைக்கு மறுப்பு சொல்லாமல் அறைக்குச் சென்றுவிட்டாள்.
‘சீக்கிரம் எல்லாம் மாறிடும்.’ என்று சொல்லிக்கொண்டவனுக்கும் அலுவல் வேலைகள் நெருக்க, அதற்கு மேல் அவளிடம் பேச நேரம் வாய்க்கவில்லை. எளிமையாக இரவு உணவை வாங்கி கொடுத்து அவளை உண்ண வைத்தான்.
“நான் ஹாஸ்டல் போறேன்.” சூரியன் மறைந்து இருளத் துவங்க அதுவரை இல்லாத அசவுகரியமும் பதட்டமும் வந்து ஒட்டிக்கொண்டது இயலணியிடம். அந்த இரவின் தாக்கம் மெல்ல அலைபுரிதலை கொடுத்தது. இருப்பு கொள்ளவில்லை. அதன் பொருட்டு கிளம்புகிறேன் என்று பையை மாட்டிக்கொண்டு நிற்க,
“இந்த கால் மட்டும் பேசிட்டு வந்துறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணேன்.” கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனை.
“நான் ஆட்டோல போயிக்கிறேன். நீங்க வேலையைப் பாருங்க.” என்று இறுக்கமாய் நின்றாள்.
“இயல்…”
“நான் போறேன்.” என்று வாசல் நோக்கி நடக்க,
“போய்ட்டு வரேன்னு சொல்லு.”
“ப்ச்… ரொம்ப முக்கியம் இப்போ.” சலித்துக்கொண்டவள் நிற்கவில்லை அலைபேசியில் ஆட்டோ போட்டுக்கொண்டே கீழிறங்க, உடனே அவள் பின் செல்ல முடியாமல் அவன் பெயரை மீட்டிங்கில் அழைக்கவும் வாசலையும் லேப்டாப்பையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே தவிப்புடன் அலுவலில் பேசினான். சில நிமிடங்கள் நீடித்த அந்த மீட்டிங்கை முடித்துக்கொண்டு ஓடாத குறையாக பரபரவென கீழே இறங்கி வந்து பார்க்க, ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தாள் இயல்.
படியிலிருந்தே தன் பெயர் சொல்லி அழைத்தவனை கவனியாமல் ஆட்டோவை கிளப்பச் சொல்லி சென்றும்விட்டாள் இயலணி.
‘பிடிவாதக்காரி. இவ்வளவு நேரம் இருந்தவளால இன்னும் கொஞ்ச நேரம் இருக்க முடியாதாமாம். என்ன பண்ணிடுவேனாம்.’ சுணங்கிக்கொண்டான் அறிவழகன்.
‘அடக்கி வாசிடா. இவ்வளவு நேரம் இருந்தால்ல. டைம் வேணும்னு கேட்டிருக்கா, அதுவே பெரிய சேஞ்.’ என்று சமாதானம் கூறிக்கொண்டே மேலேறினான். விடுதிக்கு சென்றதும் செய்தி அனுப்பும்படி சொல்லிவிட்டு காத்திருக்க, சில நிமிடங்களில் அவள் விடுதிக்கு சென்றுவிட்டதாக செய்தி வந்தது.
‘முதன்முதலா உன் மெசேஜுக்கு ரிப்ளை பண்ணியிருக்கா.’ நெஞ்சை நீவிக்கொண்டு லேசாக புன்னகைத்தான். அனைத்தும் சரியாகிவிடும் என்ற இதம் பரவ, மறுநாள் காலையே அவள் விடுதி முன் வண்டியுடன் சென்று நின்றான்.
‘வண்டியை வச்சுக்கிட்டா தினம் பஸ்ல வந்த?’ என்பது போல் வண்டியையும் அவனையும் மாறி மாறி பார்க்க,
“உன்னை பாக்கணும்னா பஸ்ல வந்தாதான முடியும்.” என அவள் எண்ணத்திற்கு பதில் கூறியிருந்தான்.
‘இவனை.’ உச்சுக்கொட்டி கையை நீட்டினாள் உணவு டப்பிக்காக.
“மருந்து மாத்திரை சாப்பிட்டியா? வலி எப்படி இருக்கு.”
“பஸ் வந்துடும். லன்ச் குடுத்தா நான் போயிட்டே இருப்பேன்.”
“என் வண்டியும் உன் ஸ்கூலை தாண்டித்தான் போகுது. வாயேன் உன்னை ட்ராப் பண்றேன்.” என்று அவன் இலகுவாய் கேட்க அப்பட்டமாய் முறைத்தாள்.
“டைம் கேட்டதால அட்வான்டேஜ் எடுக்க பாக்குறீங்களா?”
“உன் டைம்ல நான் குறுக்க வரல. எவ்ளோ நாள் வேணுமோ எடுத்துக்கோ. ஆனா என் டைம்ல நீ வரலாம்ல. எனக்கும் உன்னை புரிஞ்சிக்க டைம் கிடைக்கும்.”
அவனது பேச்சுக்களும் அணுகுமுறையும் தன்னை ஒருவித சுழலுக்குள் இழுப்பது போலிருக்க, அதனுள் மாட்ட விரும்பாதவளாய் தலையை உலுக்கிக்கொண்டவள், “ம்ச்… உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. முடிஞ்சா லஞ்ச் கொடுங்க இல்லை நான் பாத்துக்குறேன்.” என்று நகரப் போனாள்.
“சரி சரி உடனே மலை ஏறாத. இந்தா, நைட்டுக்கு நான் எடுத்துட்டு வரேன். இங்கேயே சாப்புட்டுறாத.” என்று அவன் உணவுப்பையை நீட்ட, அதனை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.
‘இவளை எப்படி தான் கரெக்ட் பண்றதோ தெரியல. எந்த பக்கம் போனாலும் கேட் போடுறா. அழுத்தக்காரி.’ என்று புலம்பிக்கொண்டே வண்டியை கிளப்பியவன் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே அவளை கடந்து செல்கையில் ஹாரன் அடித்து அவள் கவனத்தை தன்புறம் திருப்பிவிட்டு பறந்தான்.
தன்னைக் கடந்து செல்லும் அவனை பெருமூச்சுடன் பார்த்தவள் இதழ்கள் மெலிதாக விரிவேன் என்று போக்கு காட்டியது.
‘பேசி பேசியே என்னமோ பண்றாரு இந்த வாத்தி. சரியான கரைச்சல் பார்ட்டி.’ என்ற முனகலுடன் வந்து நின்ற பேருந்தில் ஏறிக்கொண்டாள் இயலணி.
error: Content is protected !!