Skip to content
Post Views: 17,903
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… இறுதி அத்தியாயம்
கிடா வெட்டு கலை கட்டியது. அந்தக் கோயிலை சார்ந்த பங்காளி வகையறாக்கள் அனைவரும் கிடா வெட்டி, பொங்கல் வைத்தார்கள். ஆதிரனுக்கு , பிரேம் மடியில் வைத்து தான் முடி இறக்கினார்கள் பிரவீனா ஒரு பக்கம் பொங்கல் வைத்து கொண்டிருந்தாள் ஐஸ் ப்ளூ கலர் சேலையும், அதற்கு தகுந்த வைர நகையும் அவளை அலங்கரித்து இருந்தது.
சாய் ஸ்ரீக்கு திருமணம் நடந்து முடிந்திருக்க, அவளும் வந்திருந்தாள்.
“பிரவீ நீ ரொம்ப அழகா இருக்க. நான் வந்ததுல இருந்து மித்ரன் சாருக்கு போட்டியா, உன்னை சைட் அடிச்சுட்டு இருக்கேன்” என்று சாய் சொல்ல,
Advertisement
முகம் செம்மையுர, “போடி லூசு, உனக்கு வேற வேலை இல்லை. கல்யாணம் ஆனாலும் நீ மாற மாட்டியா சாய்”
“பிரவீ, நம்ம ஆபீஸ் நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன் ப்பா. எந்த கவலையும் இல்லாம செம ஜாலியா இருந்துச்சு மித்ரன் சார் உன்னை கலாய்ச்சிட்டு இருப்பார். நீ அவரை என்கிட்ட பொளந்து கட்டிட்டு இருப்ப… நானும், ரஞ்சனம் கேலி பேசி சிரிச்சுட்டு இருப்போம். வாரத்துக்கு ஒரு நாள் டூர், நல்லா சாப்பாடு, எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இருந்தோம். இப்ப இந்த கல்யாணத்தை பண்ணிட்டு” என்றதும், பயந்து போன பிரவீனா,
“எதுவும் பிரச்சனையா சாய்?”
Advertisement
“ஆமா, ரொம்ப பொறுப்பா இருக்க சொல்றாங்க” என்றது, அவளை முறைத்த பிரவீனா முகம் திருப்பிக் கொள்ள…
Advertisement
“எலியும், பூனையுமா இருந்த ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டீங்க”
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சன், “அது மட்டுமா சாய் மாமா, சோபமா… அத்தான் பொத்தான்னு ஒருத்தன் நக்கல் பேசிட்டு இருந்தான். இன்னைக்கு என்னங்கன்னு ஒரு வார்த்தை வந்தா போதும், துள்ளி குதிச்சுட்டு ஓடிவாரான். காலம் மாறும்னு இவன பார்த்து தான் நம்பனும் போல” என்று ரஞ்சனும் கேலி பேச,
“வெளியில வீர வசனம் பேசுறவங்க எல்லாம், வீட்ல பொண்டாட்டி கிட்ட எலின்னு உங்களுக்கு தெரியாத ரஞ்சன்” என்று சாய் ஶ்ரீயும் விடாமல் கலாய்த்தாள்.
Advertisement
“அப்புறம் என்ன மித்திரன் சார், மேடம் முகம் பாருங்க சிவந்த வானம் மாதிரி சிவந்து போச்சு. ஆதிரனுக்கும் ஆறு வயசுக்கு மேல ஆச்சு அவனுக்கு துணைக்கு ஒன்னு வேண்டாமா?” பிரவீனாவின் நெருங்கிய நட்பு என்பதால் தாராளமாக கேட்டாள்.
இவர்கள் உறவினர்களும் குடும்பமும் அங்கு தான் அமர்ந்திருந்தார்கள். எல்லோர் மனதிலும் அந்த கேள்வி இருக்க, சத்தியமூர்த்தி மகனைப் பார்த்தார்.
“ரொம்ப வயசு வித்தியாசம் வேணாம் மித்ரன். உங்க அப்பா தான் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருக்காரே, வரிசையா வாரிசு பெத்து போடு” என்று பெரியவர் ஒருவர் கேலி பேச,
“அடுத்து என்ன பொண்ணா, பையனா?” என்றான் ரஞ்சன்.
“அவனுக்குன்னு ஒரு வாரிசு வேணாமா? கெடக்குற ஆஸ்திக்கு ஆம்பள பிள்ளை தான் வேணும்” சொன்னது ஆர்த்தியின் அம்மா தான்.
“ஆஸ்திக்கு தான் ஒரு பையன் இருக்கானே சித்தி. பொண்ணு தான் வேணும்” என்று நேரடியாக மித்ரன் சொல்ல, பார்த்தவர்களுக்கு பெருமையாக இருந்தது.
பொங்கல் வைத்து படையல் முடித்து எல்லோரும் அந்த அம்பாளை வணங்க… பிரவீனாவும் தன் கணவன் மகனுடன் சேர்ந்து நின்று தங்கள் வீட்டு குல தெய்வத்தை பார்த்தாள்.
அவள் கண் மூடி எல்லாம் வேண்டவில்லை. கண் திறந்தே தன் வீட்டு தெய்வத்தை பார்த்தாள். மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத மூக்கு விடைத்து, கண்ணீர் கண்களில் நிறைய ஆரம்பித்தது.
“வேண்டாம் பிரவீனா, உன் மகனுக்கு நடக்கும் முதல் நல்ல காரியம். எத்தனை நாட்கள் தன் மகனுக்கு என்று விழா எடுத்துச் செய்ய ஆள் இல்லாமல் தனித்து நின்று இருப்பாய், இன்று பார், ஊரே சேர்ந்து நிற்கிறது. விடு பழசை நினைக்காதே” என்று மனம் எவ்வளவு அறிவுறுத்திய போதும் கண்ணீர் கரகரவென உதிர்ந்தது.
யாருக்கும் எதுவும் புரியவில்லை. எதற்கு இந்த பெண் நல்ல காரியம் நடக்கும் போது இப்படி அழுகிறாள். எதுவும் அருள் வந்து விட்டதா என்று மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு இருந்தது பிரவீனாவின் கண்ணீர்… அழுகை சத்தம் இல்லை, விம்மல் என்று எதுவும் இல்லை. ஆனால், கண்ணீர் மட்டும் அடை மழை போல ஊத்தியது.
“பிரவீனா என்னடி இது?” என்று தாய் அதட்டியதோ…
“பிரவீனா என்னம்மா” என்று தந்தை கேட்டதும்.. “பிரவீன் என்னாச்சு” என்று நாத்துனார்கள் பதறியதும் எதுவும் அவள் கவனத்தில் இல்லை.
கடவுளிடம் வைராக்கியமாக இருந்தவள், இளங்கோ இறந்த அன்று இருக்கும் சாமி புகைப்படங்களை எல்லாம் அள்ளி சாக்கில் கட்டி மேலே தூக்கிப் போட்டவள். துணை இழந்த வலியில், நிற்கதியாக நின்ற நிலையில்,கடவுளே இல்லை என்ற கடவுளிடமே வாதாடியவள்.
இன்று கைகூப்பி கடவுளைப் பார்த்ததும் கண்ணீர் பொழிந்தது. யாராக இருந்தால் என்ன கடவுள் எல்லாம் ஒன்றுதானே…
“பிரவீனா என்னடி?” என்று உலுக்கினான் மித்ரன். என்னவோ தவம் இருப்பது போல இரண்டு கைகளை கூப்பி கடவுளைப் பார்த்து, கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.
தன் மகனை கைபிடித்த பிரவீனா, கண்ணீரை கூட துடைக்கவில்லை. சாமி முன் தன் மகனை நிறுத்தினாள்.
குலதெய்வம் என்பது அவர்களின் குடும்பத்திற்கானது… அவர்களின் வம்சாவளி. அவர்கள் வம்சத்தில் பிறந்து நிற்கும் மக்களை காத்து நிக்கும் முன்னோர்கள் அல்லவா!…
நாங்கள் யார்? எங்கள் வழி என்ன? எங்கள் குலதெய்வம் எங்கே? எங்களின் வம்சம் எது? என் மகன் யார் வீட்டு வாரிசு? சொந்த இடத்திலே துரத்தி விடப்பட்ட விதவை தாயும், மகனும் அல்லவா!…
கணவனை இழந்த பின், அவர்கள் வழிவந்த குலதெய்வ எல்லையை தொட உரிமையில்லாமல் அல்லவா விரட்டிவிடப்பட்டார்கள். எத்தனை பெரிய அங்கீகாரம் எங்களுக்கு?… கையெடுத்து வணங்கினால் எல்லாம் சாமிதான்.
எங்கோ பிறந்து, யாருக்கோ வாக்கப்பட்டு, பிள்ளையோடு கணவனை இழந்து, கண்ணால் கூட கடவுளை தள்ளி வைத்தவளை, கண்ணோக்கி பார்த்து கை தூக்கி விட்டாயே! நீயே கதி… என்று மகனோடு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்.
பார்க்கும் எல்லோருக்கும் மனதை பிசைந்தது. என்னவோ அவள் மனம் யாருக்குத் தெரியும்.
“எதுக்கு இந்த நடிப்பு. ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் முடிச்சு நல்லாத்தான இருக்கா” என்று ஆர்த்தி சொல்ல,
“அதனால தான் அவ புருஷன் என்ன சொன்னாலும் தலையாட்டுறான். உனக்கு தான் விபரம் பத்தல ஆர்த்தி” என்றார் அவள் அம்மா.
கடவுளிடம் வேஷம் போட முடியுமா!… ஒருவர் கடந்து வந்த வலியும், அனுபவித்த வேதனையும் அவரவர் நிலையில் நிற்பவர்களுக்கே தெரியும். வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு ஒருவரின் மன ஆழம் என்ன புரியும். பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள்.
முன்பு வீட்டோட நாத்தனார். எல்லா பொறுப்பும் எங்கள் தலையில் விழுமோ என்று நினைத்த ஆர்த்தி… இன்று தங்களை விட முன்னேறி நிற்கும் பிரவீனாவை பார்க்கும் பொழுது காரணம் இல்லா பொறாமை வந்தது.
சில மக்கள் அப்படித்தான் அவர்களிடம் அண்டியும் வாழ முடியாது, வெட்டியும் வாழ முடியாது.
அது மித்ரனின் தோப்பு வீடு. மகன் உறங்கி இருக்க, பின்பக்கம் தெரியும் தென்னந்தோப்பை பார்த்தவாறு நின்றிருந்தாள் பிரவீனா.
“பிரவீ” என்ற கணவன் அழைப்பில் முகம் மலர திரும்ப,
“காலைல என்னடி ஆச்சு உனக்கு? எதுக்கு அவ்வளவு அழுகை” என்றதும்,
“தேங்க்ஸ், எதுவும் சொல்லாமல் என் நன்றியை ஏத்துக்கணும்”
“என்னன்னு சொல்லு? நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்க மாட்டோமே” என்றான் கணவன்,
அதற்கும் பதில் சொல்லாமல், “என்னங்க எனக்கு குழந்தை வேணும்”
“என்னது” என்றான் அதிர்ந்து…
“ஆமா, நம்ம அத்துக்கும் ஆறு வயசு ஆச்சு இல்ல. எனக்கு ஒரு குழந்தை வேணும் அதுவும் உங்கள மாதிரியே” என்ற மனைவியின் பேச்சு மித்ரன் முகம் பெருமையில் மலர்ந்தது.
“என்னவாம்” என்றான் அவளை பின்னே இருந்து அணைத்து, அவள் முடிக்கும், கழுத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் முகத்தை புதைத்து….
“ஆசை தான். என் புருசனை மாதிரி எனக்கு ஒரு குழந்தை பெத்துக்கணும்ன்னு… அத்து என்னை மாதிரி இருக்கான் தான, எனக்கு உங்களை மாதிரி ஒரு பாப்பா வேணும்” என்ற மனைவியின் வார்த்தை அவள் காதலை சொல்ல, மனம் மயக்கம் கொண்டது.
மித்ரன் மனைவியின் பின் கழுத்தில் முத்தமிட்டு கொண்டே இருக்க, பிரவீனா அவளை அணைத்து பிடித்து இருந்த கையை இறுக்கினாள்.
“எதுக்கு நன்றி சொன்ன?”
“என்னை அடிதடியா கல்யாணம் பண்ணதுக்கு.. அப்படி அவசரமா நீங்க கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, நிச்சயம் நானா உங்ககிட்ட காதலை சொல்லி வந்திருக்க மாட்டேன்”
“ஏனாம், உனக்குத்தான் என்னை பிடிக்குமே. அது தெரிஞ்சு தானே கல்யாண வேலையில் இறங்கினேன்” அணைப்பை விடவில்லை.
“ஏன்னா நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ மித்ரன்” என்றதும் ஆட்சேபித்தான் மித்ரன்.
“என்ன பேச விடுங்க” என்றவள் “கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுக்கு கல்யாணம் என்பது கனவு. ரொம்ப எதிர்பார்ப்பு ஆசை இருக்கும். ஆனா, எனக்கு… என் கையில ஒரு பையன் இருந்தான். அவன் என்னை மட்டுமே நம்பி இருந்தான். அவனுக்கு உரிமையான உறவாக இருந்தது நான் மட்டும் தான். அப்ப நான் நிறைய யோசிச்சேன்” என்றவள், கணவன் முகம் பார்த்து,
“நிறைய நாள் எனக்குள்ள வாழ்க்கைத் துணையை பத்தின ஏக்கம் இருந்துச்சு. சில நேரம் கட்டிப்பிடித்து அழுகணும்னு தோணும், மனசு விட்டு பேசுவதற்கு ஆள் வேணும்னு தோணும், என்னை யாராவது அணைச்சுட்டு படுத்தா நல்ல தூக்கம் வரும்னு தோணும், சின்ன சின்ன விஷயங்கள் கூட ஏக்கமா இருக்கும் மித்ரன். எங்கேயாவது பையன கூட்டிட்டு வெளியே போவேன். அங்க என்ன தேவையோ எனக்கு நானே பாத்துக்கணும். அதாவது எனக்கு யாராவது டீ வாங்கிட்டு வந்து கொடுக்கணும், உங்களுக்கு தெரியும் இல்ல குலாப் ஜாமுன் எனக்கு பிடிக்கும், அதை யாராவது வாங்கிட்டு வந்து தரணும் சேலை எடுத்து தரணும், சினிமா கூட்டிட்டு போகணும், உடம்பு முடியலன்னா ரெஸ்ட் எடு என்று சொல்லவாது ஆள் வேணும்னு நெறைய நான் ஏங்கி இருக்கேன்”
“பிரவீ, ஏன் இந்த பேச்சு?”
“நானும் ஒரு பொண்ணு தானே. எம் மனசுல நிறைய ஆசையும், ஏக்கமும் இருந்தாலும் எல்லாத்தையும் அடக்கிட்டு என் பையனுக்காக ஓடினேன். எனக்கான வாழ்க்கை துணை கிடைக்கிறது ஈஸி. ஆனால், என் பையனுக்கு அப்பா கிடைக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா, நீங்க சொல்ல வார்த்தையே இல்லை” என்றதும்,
“பிரவீனா, என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்ததே நீ தான். என்னடா வாழ்க்கை இதுன்னு ஒரே சலிப்பு. சாப்பிட கூட தோணாது, பசிக்கவும் செய்யாது… என்னவோன்னு வாழ்ந்துட்டு இருந்தேன். எனக்கே என்ன புடிக்கல. என்னையே வெறுத்து, அப்படியே விட்டிருந்தா தற்கொலை தான். அப்படி ஒரு மனநிலையில தான் ஓடிட்டு இருந்துச்சு வாழ்க்கை. ஆனா, நீயும் என் பையனும் தான் என் வாழ்க்கையை அழகாக்குனிங்க. எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, என்ன எதிர்பார்த்து மனைவி இருக்கா, ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பேன்னு என் பையன் இருக்கான். இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது நீங்க வந்து தான் எனக்கு புரிய வச்சிங்க. அதுக்கு நான் எத்தனை தடவை நன்றி சொல்றதாம்”
“ஆனா, உங்க லவ் எனக்கு சொல்ல வார்த்தையே கிடையாது மித்ரன். வெளிப்படையா சொல்லாட்டியும் நிறைய நாள் அதை நினைச்சு நான் பூரிச்சு போய் இருக்கேன். உங்க மனைவியா நான் வரும்போது அஞ்சு வயசு பையனுக்கு அம்மா. அந்த உடல் அமைப்பு தான் என்கிட்ட இருந்துச்சு. வெளியில பார்க்க அழகா தெரியலாம். ஆனா, கணவன் மனைவிக்கான உறவு என்பது அதையும் தாண்டி இருக்கு இல்ல. என் இடுப்ப விட்டு வயிறு இரண்டு அடி தள்ளி கீழே தொங்கும், பிள்ளை பெத்த உடம்பு வயிறு முழுக்க கோடு இருக்கும், புதுசா கல்யாணம் ஆன ஆண்கள் எதிர்பார்க்கிற அழகான தோற்றம் என்கிட்ட இல்லை. ஆனா, நீங்க என்னை ரசிச்சீங்க. எனக்கான ஒருத்தரா இருந்தீங்க. உங்களோட லவ்வுக்கு நான் தகுதியான்னு கூட யோசித்து இருக்கேன்”
“பிரவீனா, என்ன இது?”
“ஆனா, ஐ லவ் யூ. எங்க மாமா பத்தின நினைப்பு எனக்கு இருக்கு. மூணு வயசுல ஸ்கூல் போனேன். பதிமூணு வயசுல வயசுக்கு வந்தேன், இருவது வயசுல என் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் நடந்துச்சு. வெறும் நினைவு மட்டும் தான். வலி இல்ல மித்ரன். நான் கடந்துட்டேன். எனக்கு இன்னும் கொஞ்சம் வாழனும். திரும்பவும் கர்ப்பம், குழந்தை பிறப்புன்னு நிறைய விஷயங்களை நான் உங்களோடு பாக்கணும். உங்கள மாதிரி ஒரு குழந்தையை பெத்துக்கணும், ரொம்ப பெருமையா உங்க கைல கொடுக்கணும். நிறைய நிறைய ஆசை மித்ரன்” கொஞ்சம் வெட்கமும் மகிழ்ச்சியுமாக பகிர்ந்தாள் பிரவீனா.
“நீ ஒரு வார்த்தை சொன்னாலே நான் தலைகீழா கேட்பேன். இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம்? அதுவும் ரொமான்ஸ் கூட நாலு செவுத்துக்குள்ளே இருக்கணும்னு நினைக்கிற மேடம். இன்னைக்கு வாய் திறந்து ஐ லவ் யூ சொல்லி இருக்காங்க. உன் கட்டளையையே சாசனம் பிரவீனா” என்று மனைவியை அணைத்துக் கொண்டான் மித்ரன்.
சாரதாவுக்கு மகன் சொன்ன வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாக குத்தியது. ஆதிரன், அவன் மேல் மகன் கொண்ட பாசம் எல்லாம் சரிதான். அதற்காக அவன் மட்டுமே எப்படி வாரிசாக இருக்க முடியும். அதை மகனிடமே நேரடியாக கேட்கவும் செய்தார். எனக்கு உன்னோட வாய்ஸ் வேண்டும் என்று…
மித்ரன் தாயைப் பார்த்து சிரித்தான். இந்த அமைதி எல்லாம் பிரவீனா வந்த பின் தான்.
“அம்மா, ஆதரன் மேல எனக்கு இருக்கிற பாசம் உங்களுக்கு புரியல நினைக்கிறேன்”
“அதில்லை மித்து கண்ணா”
“ஒரு அஞ்சு வயசு குழந்தையை சீரழிச்சு கொன்னுட்டாங்க. ஊரே அதுக்காக போராடியது. நீங்க ரெண்டு நாளா அழுதீங்க. அந்த குழந்தை முகத்தை டிவில பார்த்து அவ்வளவு அழுகை… அந்த அஞ்சு வயசு பொண்ணுக்காக நீங்க ஏன் அழுகணும். அவங்க என்ன உங்க ரத்த சொந்தமா?”
“மித்ரன்”
“கொரோனால தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள் மூணு பேரும் தனியா கஷ்டப்படுறாங்கன்னு, அவங்க படிப்பு செலவு, ஹாஸ்டல், வீடு, சாப்பாடு டிரஸ் எல்லாம் நம்ம தான் பாக்குறோம். அவங்க என்ன நமக்கு ரத்த சொந்தமா?”
“யாருக்காவது அநியாயம் நடந்தால் நம்ம மனசும் கொந்தளிக்குது. அவங்க என்ன நம்ம ரத்த சொந்தமா? யாருக்கோ நடக்குதுன்னு நம்ம மனசு நினைக்குதா? அதுவும் குழந்தைகள் கொடுமை அனுபவிக்கும் போது… நம்ம எல்லாம் மனுஷங்க தானே. நம்மளுடைய இதயம் வெறும் சதை. அதுக்கு வலிக்கும். நம்மளோட ரத்த சொந்தமே இல்லாத ஒருத்தரோட கஷ்டங்களை, வலியை உணர முடியும்னா… அன்பு, பாசத்தை ஏன் வைக்க முடியாது”
“ஆதிரன் என்னோட பையன். அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுற அவனை, நான் தள்ளி வைக்க முடியுமா? அவனை நான் தான் வளர்க்கிறேன் ம்மா. என் நெஞ்சில் தான் தூங்குறான், எங்கையால தான் சாப்பிடுறான். அவன் என் ரத்தம் இல்லைன்னு நான் தள்ளி வச்சா? நான் என்ன மனுசன்” என்ற மகனை திகைத்து பார்த்தார் சாரதா.
மகன் கைகளைப் பிடித்துக் கொண்ட சாரதாவுக்கு மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு அன்பானவன் என் மகன். அவனைப் போல் தன்னால் யோசிக்க முடியுமா என்று தெரியாது. ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும். மகன் மனம் புரிந்து கொண்ட தாய், அவனை தடுக்கவில்லை.
மித்ரன், கோவில் காரியமாக வந்தாலும் இளங்கோவின் அண்ணனை அழைத்து தனியே பேசி விட்டான். இளங்கோ இல்லை அவருக்கு பிறந்த ஒற்றை மகன். அவனை எப்படி ஒதுக்க முடிந்தது. பிரவீனாவே தள்ளி நிற்கும் பொழுது தான் போய் நியாயம் கேட்கப்போவதில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் எங்கள் உரிமை என்று ஆதிரனை கேட்டு அவர்கள் வந்து விடக்கூடாது.
தேவதாஸ் கூட சொன்னார், “நீங்க இருக்கீங்களே மாப்பிள்ளை… நம்ம அத்துக்கான உரிமையை பெறணும். ஆனா, பிரவீனாவுக்கு விருப்பமில்லை. எதுக்காக விடனும், யாரோ அவன் சொத்தை அனுபவிக்கவா?”
“மாமா, அங்க நீங்களும் நானும் கிடையாது. பிரவீனா மட்டும்தான் இருந்திருக்கா… அவ மனசு என்ன பாடு பட்டுச்சுசோ, எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாளோ உரிமையான சொத்தை கூட விட்டுட்டு வருவா… ஆதிரன் என்னோட மகன். அவனோட அடையாளம் நானாவே இருக்கேன். அவங்க என்றைக்கும் என் பையன் மேல உரிமை கொண்டாடக்கூடாது. இளங்கோ பத்தி ஆதிரன் கிட்ட மறைக்க போறதில்ல. ஆனா, அவனோட அப்பா நான் தான்”
“ஆனாலும் மாப்பிள்ளை சொத்து”
“அது என்ன சொத்து, தேவையே கிடையாது மாமா. என் பிள்ளைக்கு நான் பாப்பேன். இப்போ என்கிட்ட இருக்கிறதே அவனோட பேரனோட, பேரன் வரைக்கும் சரியா போகும்”என்ற மித்ரனை நெகிழ்ச்சியாக பார்த்தார் தேவதாஸ்.
பிரவீனாவுக்கு தற்போது ஒன்பது மாதம். மிக ஆசையாக இந்த பிள்ளைக்கு காத்திருக்கிறார்கள். குடும்பமே அவளை கையில் வைத்து தங்கியது. வளைகாப்பு முடிந்ததிலிருந்து சாரதா மருமகளுடன் தான் இருக்கிறார். தன் பெரிய வயிற்றை தடவிக் கொண்டு நிறைய கனவுகளோடு கிளம்பி கொண்டு இருந்தாள் பிரவீனா. ஒரு நாள் முன்பே வந்து அட்மிட் ஆக சொல்லி இருந்தார்கள்.
மித்ரன் தான் டென்ஷனாக இருந்தான். அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. ஒரு புதிய, பயந்த அனுபவம். பிரவீனா ஹாஸ்பிடல் செல்ல மகனை கையில் பிடித்துக் கொண்டு நடந்து வர, ஓடி வந்து பிள்ளையை தூக்கியவன்,
“பார்த்து வா பிரவீ. மெல்ல நட… வலிக்குதா? நான் தூக்கவா? எதுக்கு மூச்சு வாங்குது? என்ன பண்ணுது?” மனைவி முறைக்க, அவளை கண்டு கொள்ளாமல்,
“என்ன முகம் வேர்த்து இருக்கு? கண்ணெல்லாம் சோர்வா இருக்கே… எங்கேயாவது வலி இருக்கா” என்றதும், சுற்றி இருந்த பிரவீனா மாமியார், அம்மா, நாத்தனார் எல்லோரும் சிரித்தார்கள்.
“என்னங்க, நான் என்ன வலி வந்தா பிள்ளை பெறப் போறேன். எனக்கு முதல் குழந்தை ஆபரேஷன் தான். நாலு இட்லி, மீன் குழம்பு வச்சு நல்லா சாப்பிட்டு தெம்பாதான நடந்து வாரேன். எனக்கு ஒரு பயமும் கிடையாது. எனக்கு வலிக்கவும் இல்லை” என்றதும்,
“நான் என்ன பண்ண எனக்கு பயமா இருக்கு” என்றவன் தான் பிரவீனா, மகளோடு வெளியே வரும் வரை பயந்து கொண்டு இருந்தான். அவன் ஆசைப்பட்டது போலவே பெண் குழந்தை.
சாரதா தான் முதலில் கையில் வாங்கியது, “என்னங்க அப்படியே நம்ம மித்ரன் மாதிரியே இருக்கா பாருங்க” என்றதும் அந்த நர்ஸ்,
“உங்க பேரன் கூட மித்திரன் சார் மாதிரி தான். முக ஜாடை தான் அவங்க அம்மா மாதிரியே தவிர, கலர் எல்லாம் மித்ரன் சார் தான். பேசறது, நடக்கிறது, சாப்பிடறது கூட மித்ரன் சார் மாதிரி தான்” சொந்தக்கார பெண் என்பதால் சகஜமாக பேசினாள்.
உண்மையும் அதுதான். மித்ரனோடவே இருந்து பழகிய ஆதிரன். அவனின் வளர்ப்பாகவே நின்றான்.
“இங்க பாருடா குட்டி கண்ணா. உன் கூட விளையாட தங்கச்சி வந்தாச்சு” என்ற சாரதாவும் பேரனிடம், பேத்தியை காட்டினார். இறுதியில் மகளை கையில் வாங்கிய மித்ரன், சந்தோஷமாக மனைவியிடம் பகிர சென்றான்.
மித்ரனின் மகள் ஆதிரா பிறந்து ஆறு மாதத்திற்கு பின் மித்ரன் குடும்பம் முழுதாக குன்னூர் சென்று செட்டில் ஆகிவிட்டது. பொறுப்புள்ள தந்தையாக தன் குடும்பத்தை பார்த்துக் கொள்பவன், நல்ல மகனாக தந்தைக்கு ஓய்வு கொடுக்க எண்ணி தங்கள் தொழிலை கையில் எடுத்துக் கொண்டான்.
ஒரே குடும்பம் என்று இல்லாமல் ஒரே காம்பவுண்டில் வாழ்ந்தார்கள் மித்ரனும், அவர்கள் தந்தையும்…
சத்தியமூர்த்தி தான் ஒரே இடத்தில் இருந்தாலும் தள்ளி இருப்பது நல்லது என்று முடிவெடுத்தார். சாரதாவிடம் அனுசரணை தெரிந்தாலும் ஒரு எல்லைக்குள் நிற்பது நல்லது என்று நினைத்தார்.
பிரவீனா பயங்கர பிஸி. முழு இல்லத்தரசி என்று இல்லாமல் அவ்வப்போது தங்கள் தொழில் கணவனுக்கு உதவி செய்து வந்தாள். அதுவும் குடும்பத்திற்கு ஒதுக்கிய நேரம் போக, சின்ன சின்ன ஆபீஸ் வேலைகளை பார்த்தாள்.
குடும்பமாக நிற்கும்போது கணவன் மனைவி இருவரின் கவனமுமே பிள்ளைகளிடம் மட்டுமே இருக்கும். அவர்கள் உறங்கிய பின் தான் தங்களுக்கான நேரத்தை வகுத்துக் கொள்வார்கள். அதுவரை பொறுப்பான அம்மாவுக்காக இருப்பவர்கள், அதன் பின் ஒருவருக்கொருவர் செல்லமாக மாறிக்கொள்வார்கள். அதிலும் பிரவீனா, தான் மித்ரனிடம் அதிக சலுகைகளை எடுத்துக் கொள்வாள். அவனும் சந்தோஷமாக தன் மனைவியை காத்துக் கொள்வான்.
நன்றி🙏🙏🙏🙏
error: Content is protected !!