Skip to content
Post Views: 11,211
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!…
அத்தியாயம் 6
அன்றும் அவசரமாக வேலைக்கு வரும் பிரவீணாவை பார்த்தவாறு அமர்ந்து இருந்தான் மித்ரன். அவள் ஒரு கணவனை இழந்த பெண் என்று இன்னும் அவனால் நம்பவே முடிய வில்லை. அவள் மாமா என்று ஏதாவது சொல்லும் போதெல்லாம் கண்களோடு, முகமும் மலரும். அவ்வளவு ஆசையாக, ஆர்வமாக பேசுவாள்.
மித்ரன் கூட நினைத்து கொள்வான் காதலித்து திருமணம் செய்து இருப்பார்கள் போல.. அதான் இவ்வளவு அன்பு. ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் கப்புள் என்று எண்ணி இருந்தான். ஆனால், அவன் நினைத்தது போல இல்லை அவள் வாழ்க்கை. அவள் கண்கள் பேசும் காதல் வாழ்க்கை ஒரு வருடம் தான் என்று நம்பவும் முடிய வில்லை.
Advertisement
என்னவோ அவள் மேல் அப்படி ஒரு மரியாதை வந்தது. அவன் முகத்தில் நக்கல், நையாண்டி இல்லாமல் இயல்பான புன்னகையில் வணக்கம் சொன்னான்.
“பிரவீ.. உனக்கு தெரியுமா! இந்த வீகெண்ட் நம்ம டீம் கூட அவுட்டிங் போறோம். நம்ம மித்ரன் சார் தான் பிளான்..” என்றாள் சாய்.
இது எப்பாவாது நடப்பது தான். பெரும்பாலும் குரூப்பாக சினிமா போவார்கள். இன்று எங்கே?
Advertisement
“எனக்கு வர முடியுமா தெரியல சாய். தம்பியை பார்க்கணும்…”
Advertisement
“வீட்டுல அம்மா இருப்பாங்க தான..”
“இருப்பாங்க தான். ஆனா, நிறைய சொந்தக்காரங்க வருவாங்க. நம்ம பிள்ளையா இருந்தாலும் அத்து ரொம்ப சேட்டை, கட்டி வைக்கவே முடியாது. யாரும் எதுவும் சொல்லிட்டா, கை நீட்டிட்டா எனக்கும் மனசு தாங்காது. நான் வர முடியாதுன்னு நினைக்கிறேன்..” என்றதும்,
நம்ம மித்ரன் சார் கிட்ட கேளு.. உங்க வீட்டு ஆளுக கூட இருக்குறதுக்கு தம்பிய கூட்டிட்டு வெளிய வா.. நான் இருக்கேன், பாத்த்துப்பேன்…” என்று சாய் சொல்லியதும்,
Advertisement
திரும்பி மித்ரனை பார்த்தவள், “சார் குழந்தைகளை கூட்டிட்டு வரலாமா?…”
“சென்னையை விட்டு கொஞ்சம் தள்ளி தான் பிரவீணா மேடம். பெரியவங்க அக்டிவிட்டி எரிய, குழந்தைங்க பிளே ஏரியா எல்லாம் இருக்கும். தாராளமா கூட்டிட்டு வாங்க…” பல் தெரியுமளவு சிரித்தான் மித்ரன்.
“ஹே!.. சாய், நம்ம சாருக்கு புது கேர்ள் ப்ரெண்ட் கிடைச்சுடாங்க போல.. பாரேன், அவர் முகம் பல்ப் போட்ட மாதிரி இருக்கு..” என்று பிரவீ சொன்னதும்,
“இருக்கும் இருக்கும்.. இப்போ எல்லாம் உன்னை நக்கலடிக்காம டூத் பேஸ்ட் விளம்பரம் மாதிரி சிரிச்ச முகமா தான் சார் இருக்கார்..” என்று சாய் சொல்ல,
“நல்ல மரியாதையை சம்பாதித்து வச்சு இருக்கடா மித்ரா நீ…” தன்னையே கேலி செய்து கொண்டான்.
அன்றைய நாள் நல்ல படியாக கடக்க, சிரித்த முகத்துடன் தான் வீடு வந்தாள் பிரவீணா. மகனை கண்கள் தேடும் போதே, ஹாலில் பிரேம், அத்து குட்டியின் பெரிய புகைப்படத்தை சுவற்றில் இருந்து கழட்டி கொண்டு இருந்தான்.
“ பிரவீ ஏதாவது சொல்ல போறா?..” என்று தாய் புலம்ப,
“அவ சொல்ல என்ன இருக்கு.. வேற எங்கேயும் செட் ஆகல தான…” என்று பிரித்தி சொல்லி கொண்டு இருக்க,
என்ன ஆச்சு…” என்று வந்து விட்டாள் பிரவீணா.
“பிரேமுக்கு வந்த கிஃப்ட் எல்லாம் போட்டோ தான் நிறைய வந்து இருக்கு.. இந்த போட்டோ ரொம்ப அழகா இருக்கவும், மாட்டி வைக்க ஆசை வந்துருச்சு சாருக்கு.. போட்டோ பெருசு வேற எங்கேயும் செட் ஆகல. அது தான் ஆதிரன் போட்டோ எடுத்துட்டு இவங்க போட்டோ வைக்கிறான்…” என்று பிரீத்தி சொல்லும் போதே,
அப்படி ஒரு கோபம் பிரவீணாவுக்கு வந்தது. இங்கு அத்தனை போட்டோ இருக்க என் பிள்ளை போட்டோவ தான் கழட்ட வேண்டுமா?.. அதுவும் வேறு இடம் பார்த்து கூட மாட்டாமல்.. ஏற்கனவே இவள் வைத்திருக்கும் மகனின் போட்டோவை எடுத்துவிட்டு.. அவர்களின் போட்டோவை பிரேம் மாட்ட தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவளால்…
தம்பி கையில் இருந்த தன் மகனின் போட்டோவை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு வேக வேகமாக தன் அறைக்கு சென்றவள் தூக்கி பரணையில் போட்டு விட்டாள். அழுகையில் தொண்டை துடிக்க முகம் எல்லாம் சிவந்து விட்டது. வெளியே நின்று இருந்த தாயின் வார்த்தைகள் தெளிவாக கேட்டது.
“அவ கோவப்படுவாண்டு நான் தான் சொன்னேன்ல்ல…”
“அம்மா அத்து போட்டோவ தூக்கி கீழயா போட போறோம். எங்க போட்டோ மாட்ட வேற இடம் கிடைக்கல.. போட்டோ பெருசு. அதுதான்.. இதுக்கு ஏன் நம்ம பிரவீ கோவப்படணும். ஒண்ணுமே இல்லாத விஷயம், வேற இடத்துல நம்ம ஆதிரன் போட்டோ மாட்ட போறோம். ரொம்ப ஓவரா தான்ம்மா பண்ணுது பிரவீ..” என்று மகன் சொன்னதும்,
மகள் அறைக்கு வந்தார் மகேஷ்,
“ஏன்டி பிரவீ இப்படி பண்ற? அவன் யாரு உன் தம்பி தானே.. அவன் மேல உனக்கு என்ன?..”
“அவன் மேல எனக்கு என்ன? என் பையன் போட்டோவ கழட்டிட்டு தான் அவங்க போட்டோவ மாட்டனுமா… அப்படி என்ன அவசரம். நாளைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்து வீடு முழுக்க அவங்க போட்டோவ மாட்டுங்க. யாரு கேட்க போறா?..” என்று ஆவேசமாக பிரவீணா கேட்க.
“உன் பையன் போட்டோவ தூக்கி கீழ போட்டோமா?.. வேற இடம் பார்த்து வைப்போம் தான.. அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு, தூக்கிட்டு ஓடி வர..” என்று கோபமாக தம்பி சத்தம் போடவும்,
எதிர்த்து பேச திடம் இல்லாம் வாயை மூடி கொண்டாள். ஆனால், நிறைய வலித்தது. ஆர்த்தியும் வந்து எட்டி பார்க்க, தன்னை விட சின்ன பையம் அதட்டும் நிலையில் இருக்கோமே என்று வருத்தமாக இருந்தது.
“அந்த போட்டோவ எடு…” என்று பிரேம் மீண்டும் அதட்ட,
லேசாக கண்களில் நீர் கட்டி விட்டது. “ நான் முன்னவே நினைச்சு இருந்தேன் பிரேம்.. அத்து போட்டோவ என் ரூம்ல மாட்ட. இங்க மாட்டி வச்சுகிறேன், விடு..” என்றாள் மெல்ல..
“ரொம்ப ஓவரா போற பிரவீ நீ.. ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு முகத்தை தூக்கிட்டு, போட்டோவ பிடுங்கிட்டு வார… அத்து போட்டோவுக்கு வேற இடம் பார்த்து இருக்கேன். ஓவர் ஆக்ட் பண்ற…”என்று மேலே கிடந்த போட்டோவை எடுக்க,
தடுக்க வந்தாள் பிரவீ, “வேணாம் பிரேம்..” என்று சொல்லும் போதே,
“என்ன ஆச்சு பிரவீ உனக்கு? எதுக்கு இப்ப இவ்வளவு சீன் கிரியேட் பண்ற? நம்ம வீட்டிலேயே வேற வேற போட்டோ வரும் போது மாற்றி வைக்கிறது இல்லையா? அந்த மாதிரி நினை..” என்று பிரீத்தி எடுத்து சொல்ல,
“உனக்கு என் பீலிங்ஸ் புரியலையா பிரித்தி. இந்த வீடு முழுக்க சுவர் இருக்கு. அவன் ஆசைப்பட்ட மாதிரி எங்க வேணா போட்டோ வச்சுக்கட்டும். நான் ஒண்ணுமே சொல்லல.. எத்தனை போட்டோ வேணும்னாலும் வச்சுக்கட்டும். எனக்கு அத பத்தி ஒன்னுமே கிடையாது. என்னுடைய ஃபீலிங்ஸ் எல்லாம் என் பையனோட போட்டோவ ஏன் எடுக்கணும். அது இருக்கட்டுமே.. இந்த வீட்ல அது மட்டும் தானா வேற எங்கேயுமே இடம் கிடையாதா?…” என்றாள் ஆதங்கமாக,
ஆர்த்தியே, “ஏங்க விட்டுடுங்க.. அவங்க பையன் போட்டோவே இருக்கட்டும். அவங்க போட்டோவ கழட்டாம, நம்ம போட்டோவ மாட்டுங்க..” என்று சொன்னாலும், அவளுக்கு பிரவீ மேல் ஒரு பிடித்தமின்மை வந்து விட்டது.
மருமகள் இப்படி சொன்னதும் மாமியாருக்கு ஒரு மாதிரியா ஆகிவிட்டது. நேற்று வந்த பெண் அவளுக்கான இடம் கொடுக்கணும் தானே.. ஒரு போட்டோவை கழட்டி மாட்டுவதால் என்ன இருக்கு…
“உனக்கு அப்படி என்னடி வலிக்குது. உன் தம்பி பொண்டாட்டி.நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு.. அவள நாம தான் பாக்கணும். நம்ம வீட்டு பிள்ளை நினை பிரவீ, தப்பா எதுவும் தோணாது.. போட்டோ அங்க தான் இருக்கும். உன் வீம்புக்கு எல்லாம் நாங்க ஆள் கிடையாது போ…” என்று மகேஷ் சொல்ல,
“அப்ப நான் தான் தப்பு சொல்றீங்களாமா?..”
“மூணு பேருக்கு மூத்தவ நீ.. கொஞ்சமும் பொறுமை, நிதானம் எதுவும் இல்லை. ஒரு போட்டோவுக்கு என்ன வந்துச்சு, கொலை குத்தமா ஆகி போச்சு. ஒரு நிமிஷம் மூஞ்சிய தூக்கிட்டு, கண்ணுல தண்ணி வச்சுட்டு என்ன அநியாயம் பண்ணிட்டு இருக்க.. நேத்து வீட்டுக்கு வந்த பொண்ணு என்ன நெனப்பா நம்மள பத்தி.. போட்டோவ மாத்தி தான வைக்கிறான் உன் தம்பி, தூக்கி குப்பையில் போடவில்லை தானே..” தாய் சத்தம் போட,
“அப்ப நான் தான் தப்பு…” மீண்டும் பிரவீ ணா கேட்க.
“யோசிச்சு பாரு பிரவீ. ஜஸ்ட் ஒரு போட்டோ, அதுல என்ன இருக்கு.. நீ இவ்ளோ அழுகுறதுக்கு ஒன்னுமே கிடையாது. தேவையில்லாம ஓவர் எமோஷன் ஆகுற. உன்ன கஷ்டப்படுத்தற மாதிரி நீ பேசிட்டு இருக்க.. வெளியில சொன்னாலும் நாலு பேர் உன்னை தான் தப்பு சொல்லுவாங்க நேத்து வந்து பொண்ணு கிட்ட மல்லுக்கு நிக்கிற போய் வேலையை பாரு பிரவீ …” என்று சத்தம் போட்டது பிரீத்தி தான்.
யாருக்கும் அவள் ஃபீலிங்ஸ் புரியவே இல்லை. ஒருவேளை எல்லோரும் சொல்வது போல நாம் தான் t தவறோ என்று நினைத்தாள். வெளியே தாயின் பேச்சு சத்தம் கேட்டது.
“டேய் என் பேரன் போட்டோவை வேற எங்கயாவது மாட்டுடா.. உங்க அக்கா பார்த்தா அப்புறம் திரும்பவும் ஏதாவது சொல்லுவா?..”
“அட போம்மா!.. என் வீட்ல, என் விருப்பப்படி ஒரு போட்டோ கூட மாட்ட கூடாதா? அநியாயம் பண்றாங்க..”
“அவளுக்கு நிறைய காம்ப்ளக்ஸ் வந்துருச்சு போல பிரேம். நாம தனியா இருக்கோம், அம்மா வீட்ல இருக்கோம். வேற ஒரு பொண்ணு உள்ள வந்த உடனே நமக்கு மதிப்பு இல்லாம போயிருமோன்னு பயப்படுவா போல…”
“அதுக்காக நான் கல்யாணமே பண்ணாம இருக்க முடியுமா ப்ரீத்தி..”
“அவளும் புருஷன், பிள்ளை, அவ வீடுன்னு இருந்தா எதுவும் தெரியாது பிரேம். அவ இங்க அம்மா வீட்டுல இருக்கால்ல.. சோ அது தான் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் அவளுக்கு…”
“என்னமோ போ ஒரு போட்டோவுக்கு இவ்வளவு அலப்பறை தேவையா?.. என் வீட்ல தானே நான் மாட்டுறேன். பிரவீ ய வீட்டை விட்டு போக சொன்ன மாதிரி அழுகிறது. என்ன சொல்ல?..” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டார்களே.. தவிர, யாரும் ஆதிரன் போட்டோவை திரும்ப மாட்டவே இல்லை. அடுத்தடுத்து வேலை வர அவன் போட்டோ குப்புற கவுந்து கிடந்தது.
அதை கையில் எடுத்துப் பார்த்தால் பிரவீணா. அதில் அவனுக்கு ஒரு எட்டு மாதம் இருக்கும். அப்போதெல்லாம் கொஞ்சம் தவழ்ந்து கொண்டிருக்கிறான். இளங்கோ உடல் நிலை முடியாத நிலையில் இருக்க, வீட்டில் இருக்கும் நகை எல்லாம் அடகு வைக்க வேண்டிய சூழல். சின்னப்பையன் பொருட்களைக் கூட அடகு வைக்க எடுத்துக் கொண்டாள் பிரவீணா.
திரும்ப மீட்க முடியாமல் போகும் சூழல் வரும் என்று நினைத்தவள், அப்போதெல்லாம் இளங்கோ ஹாஸ்பிடலில் இருக்கிறான். எட்டு மாத குழந்தையாக அவனுக்கு புது உடை அணிவித்து இருக்கும் நகைகளை எல்லாம் போட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாள். அதை சர்ப்ரைஸ்சாக மருத்துவமனையில் இருக்கும் கணவனிடம் பரிசாக கொடுத்தாள். அன்று தான் அவன் மகனின் புகைப்படம் பார்த்து கடைசியாக சிரித்தது. அதற்குப் பின் கட்டிய மனைவியையும், பெத்த மகனையும் அடையாளம் தெரியாத அளவிற்கு நினைவு தப்பி போனான்.
அதை பார்க்கும் போதெல்லாம் மகனை தொட்டு ரசித்த கணவனின் சிரித்த முகம் நினைவில் வந்து போகும். அதை மிகவும் பெரியதாக்கி தன் வீட்டு சுவற்றில் மாற்று இருந்தாள். கிட்டத்தட்ட நான்கு வருடமாக அதை ஒரு ஆளும் மாற்றியது இல்லை. இன்று அவளுக்கு நிறையவே வலித்தது.
மறுநாள் காலையிலே சாய் ஸ்ரீயிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள்.
“எனக்கு என் தம்பி பொண்டாட்டி மேல கோவமும் கிடையாது. பொறாமையும் கிடையாது. சாய், அவ உண்டு அவ வாழ்க்கை உண்டு. நான் உண்டு என் பையன் உண்டு. அவ்வளவுதான். அவங்க வீடு நிறைய கூட போட்டோ மாட்டி வைக்கட்டும். எனக்கு ஒண்ணுமே கிடையாது அவ்ளோ பெரிய வீடு, எத்தனை சுவர் இருக்கு. அவன் நினைச்சா ஒரு ஆணி எடுத்து எவ்வளவு பெரிய போட்டோவையும் மாற்றி வைக்க முடியாதா? எதுக்கு ஆசை ஆசையா மாட்டி இருந்தா என் பையனோட போட்டோவ கழட்டிட்டு, அவங்க போட்டோவ வைக்கணும் அது எனக்கு எவ்வளவு வலிக்கும்..”
“உனக்காக என் பீலிங்ஸ் புரியுதா சாய் எல்லாரும் நான் காம்ப்ளக்ஸ்ல இருக்கேன் பொறாமை படுறேன் தனியா இருக்கனால அப்படி யோசிக்கிறேன் ஏதேதோ சொல்லி கடைசில நான்தான் தப்பு பண்ற மாதிரி ஆகிட்டேன்..”
“விடு பிரவீ.. புது பொண்ணு அதான் அப்படி பேசு இருப்பாங்க…”
“என்ன சொல்ல சாய். இதுவே என் வீட்ல நான் இருந்திருந்தா, யாராவது ஒரு ஆள் என்னை ஏதாவது சொல்ல முடியுமா?.. நானும் யோசிக்கிறேன் என் புருஷன் என் கூட இருந்திருந்தால் இப்படி எல்லாம் நானும் இருந்திருக்க மாட்டேன் இல்ல. என்னவோ தெரியல, ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு சாய். என் பையன் போட்டோவ கழட்டி வச்சத, என்னால ஏத்துக்கவே முடியல…” அவளிடம் மட்டும் புலம்பி கொண்டாள் பிரவீணா.
அந்த வார இறுதியில் பிரவீ ணா மகனோடு தான் தன் டீம் அவுட்டிங்கில் கலந்து கொண்டாள். மித்ரன் டி ஷர்ட் ஜீனில் வந்திருந்தான். எப்பவும் அணியும் ஃபார்மல் கெட்டப்பை விட்டு விட்டு படு ஸ்டைலிஷ் ஆக இருந்தான். பெரியவர்கள் அவர்களுக்கான இடம் பார்த்து என்ஜாய் பண்ண, குழந்தைகளோடு வந்தவர்கள் பிள்ளைகளுக்கான பார்க்கில் ஒதுங்கிக் கொண்டார்கள்.
பிரவீ ணா எப்பவும் போல சேலையிலே வர,
“அட என்ன பிரவீ . நியெல்லாம் இன்ஜினியரிங் படிச்சியா இல்லையா?.. இன்னைக்கு கூட இந்த சேலையை தான் சுத்திட்டு வரணுமா.. ஒரு சுடிதார் போட்டு வந்தா என்ன?..” சாய் கடிந்து கொள்ள,
“என்னை பார்! என் உடம்பு இருக்கிற சைஸுக்கு சுடிதார் போட்டு வந்தா எவ்வளவு அசிங்கமா இருக்கும்…”
“அப்படி ஒன்னும் நீ குண்டு கிடையாது தெரியுமா!.. கை எல்லாம் ஒல்லியா தான் இருக்கு. அந்த தொப்பை வயிறு, கொஞ்சம் இடுப்பு.. அப்புறம் பின்னாடி அவ்வளவுதான். அது ஈஸியா சரியாகிவிடும். உன்னை விட குண்டா இருக்கவங்க எல்லாம் ஜீன் போட்டே நான் பார்த்து இருக்கேன்..”
“அட போப்பா எனக்கெல்லாம் சுடிதார் ஒத்து வராது. நம்ம அத்து வயித்துல ஏழு மாசம் இருக்கிற வரைக்கும் சுடிதார் போட்டேன். அப்புறம் விட்டுட்டேன் இப்ப சுத்தம்..”
“நான்லாம் எனக்கு பேரன் பேபி வந்தாலும் ஜீன்ல தான் சுத்துவேன் போ..” என்று சாய் ஶ்ரீ சொல்ல,
“ஒரு பிள்ளை வந்ததுக்கு அப்புறம் நீ எப்படி மாறுரென்னு நானும் பார்க்க தான போற..” கேலி பேசினாள் பிரவீணா.
ஆதிரன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, அவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்தா ள் பிரவீ ணா. அவளால் அவனோடு சேர்ந்து ஓட முடியவில்லை. அப்படி எல்லாம் அம்மா வெளியில் கூட்டி சொல்லும் ரகம் இல்லை என்பதால்.. என்றோ கிடைக்கும் இந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவித்தான் மகன்.
மித்ரன் பார்வை முழுக்க தாய், மகன் மீதுதான்.. பிரவீணா என்னவோ ரொம்ப கவனம் எடுத்துப் பிள்ளையை பார்ப்பதாக தோன்றியது அவனுக்கு.. ஆதரன் கைக்கு சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். அவள் என்ன தான் ஒரு குழந்தைக்கு தாய் என்று மித்ரன் அறிந்திருந்தாலும், இன்று தான் ஒரு தாயாக அவளை முழுதாக பார்க்கிறான்.
பட்டென்று மேலே வந்து மகன் விழுந்தாலும் அவனைத் தாங்கிக் கொண்டு, சாய் கூட சகஜமாக பேசுவது போலவே சில நேரம் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள், தன் சேலை முந்தி கொண்டு அவன் முகத்தை துடைக்க, மூக்கை துடைக்க, தலையை சரி செய்து விட, அடிக்கடி தண்ணீர் கொடுக்க, எதையாவது ஊட்டி விட பெற்றவள் கவனம் முழுக்க பிள்ளை மீதுதான்.
மதியம் ஒரு மணிக்கு மேல் ஆதிரனுக்கு லேசாக உறக்கம் சுழட்டியது. அங்கு உறங்கும் இடம் இல்லாததால் பிரவீணா மகனை தன் மடியில் போட்டு விட்டாள். வசதியாக இல்லாமல் மகன் சினுங்கிக் கொண்டு இருக்கவும், லேசாக காலை ஆட்டி, தன் சேலை முந்தியை கொண்டு விசிறி விட்டு அவனைத் தூங்க வைக்க தொடங்கினாள்.
இன்று வெளியில் செல்வதாலோ என்னவோ எப்பொழுதும் இறுக்கமாக பின்னி இருக்கும் தலை இன்று கொஞ்சம் லூசாக இருந்தது மாம்பழ வண்ணத்தில் கிரேப் சில்க் சேலை அணிந்து இருந்தாள். எப்பவும் போல லேசான சந்தன கீற்று. மித்ரன் பார்வை முழுக்க அவள் மீதுதான். மகன் மீதான அவளின் அன்பு அவனுக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் ஆர்வமாகவும், ஒரு துளி ரசனையாகவும் மாறியது.
error: Content is protected !!