Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

29.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 29.1

.

 



Advertisement

அன்று அரவிந்தனின் மனம் போலவே  மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். 

வானம் மேகமூட்டமாக இருந்ததால் அதிகக் கடினமில்லாது… எந்த வித அசம்பாவிதமும் இல்லாது சுமார் 60கிலோ மீட்டரை, மார்பகப் புற்று நோய் விழுப்புணார்விற்காக மாணவர்கள் கடந்திருந்தனர். இவர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ வசதியோடே ஒரு வேனும் வந்திருக்க, பயணத்தின் இடையே முடியவில்லை என்ற இருவர் சைக்கிளை வேனில் போட்டு, அதில் அமர்ந்து கொண்டனர்.

 

Advertisement

அங்கிருந்த பள்ளி ஒன்றில் இவர்களுக்கான காலை உணவு தயாராக இருந்தது. உணவருந்திய பின் மாணவர்களை அழைத்துச் செல்லக் கல்லூரி பேருந்துகள் காத்திருந்தன.

Advertisement

 

அன்றிரவு விடுதியில் தங்கி, மறுநாள் மாலை சென்னைக்குச் செல்வதாகச் சிலர் திட்டம் போட்டிருக்க, அதில் கௌதமனும் அடக்கம். முன்பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்ற கௌதமனும் அவன் நண்பர்களும் உணவை முடித்து சற்று நேரம் அலுப்பு தீர அங்கிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து கிடந்தனர். சைக்கிளில் இவ்வளவு தூரம் செல்வது இவர்களுக்கு முதல் முறை இல்லை என்பதால் அப்படி எல்லாம் நண்பர்களுக்குக் கடினமாக இருக்கவில்லை.

 

Advertisement

இரண்டு மணியளவில் வைஷாலி அழைத்தார். “என்ன மா?” என்றது தான் தாமதம் வைஷாலி மகனைத் திட்டித் தீர்த்துவிட்டார். தகப்பனுக்கு ‘டாடா’ காட்டி தாத்தாவோடு வீட்டிற்கு வந்ததில் இருந்தே “அப்பா நானுக்கு சைக்கி நேணும்” என்ற அழுகையை ஆரம்பித்திருந்தாள் அவனின் செல்ல மகள்.

 

இந்தா நீயே பேசி அவ வாய மூட வை. சங்கீதா இன்னைக்கு வரல. வீட்டுல அப்பாவும் இல்ல. வேலையாள் ஒருத்தரையும் பக்கத்தில வர விட மாட்டேன்றா. என்னால ஒத்த ஆளா இவளோட மாரடிக்க இதுக்கு மேல முடியாது” எனக் கைப்பேசியைச் சின்னவளிடம் கொடுத்தார் பாட்டி. அழும் மகளிடம் மெல்லப் பேச்சு கொடுத்தான் தகப்பன். மகளின் அழுகை அதிகமே ஆனது.

 

அப்பா எங்க போன” எனத் தேம்ப ஆரம்பித்து, “அப்பாக்கு நேணும் பேபி” என அழுகையில் மூழ்கினாள் சின்னவள். தக்கப்பன் இல்லாத அந்தப் பளிங்கு மாளிகையில் குட்டி மகளை அமைதிப்படுத்த ஆள் இல்லை. அழும் வேளைகளில் அப்பா இல்லை என்றால் தாத்தா வேண்டும் யாழிக்கு. ஆனால் வாசுதேவன் வீட்டில் இருப்பது அரிதாகியிருக்க, மகளை யார் சமாதானம் செய்வது?

 

ஏற்கனவே இருக்கும் தூரத்து உறவு முறையின் காரணமோ… இல்லை ஏற்படப் போகும் புதிய உறவு முறையின் காரணமோ, திரைத் துறையில் கால் மிதிக்கும் தர்ஷன் குழுமம், வாசுதேவனோடு கரம் கோர்க்கத் தயாராக உள்ளது. மீண்டுமாகப் பல நூறு கோடிகளில் படம் தயாரிக்க ஒரு வாய்ப்பு. அதன் பொருட்டு, வாசுதேவனுக்கு அலைச்சல் அதிகம், வீட்டில் அதிகம் இருப்பதில்லை.

 

அறிவும், அரசியலும், தொழிலும் என அனைத்திலும் ஆழ வேர் ஊன்றிக் கொண்டிருக்கும் மகாதேவ் தர்ஷன் இவரோடு கரம் கோர்த்தால் மீண்டும் வாசுதேவன் விட்டதைப் பிடித்துவிடுவார். பெரிய அளவில் புரொடஷன், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துப் புகழின் உச்சியில் இருக்கும் இயக்குநர், தென் இந்தியத் திரை உலகை ஆட்டிப் படைக்கும் கதாநாயகன், நாயகி… இவர்களோடு ஒரு திரைப்படம் என்பது பலரின் கனவு. பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்ததோடு நில்லாது… வாசுதேவன் முன் இருக்கிறது. ஏற்பதும் தவிர்ப்பதும் வாசுதேவனை பொறுத்ததே. இந்த வாய்ப்பைத் தக்க வைத்தாலே போதும், நான்கு வருடங்களாக முடங்கிக் கிடந்த வாசுதேவன் மீண்டும் அவர் துறையில் ஆழமாகக் கால் ஊன்றிவிடுவார்.

 

தர்ஷன் குழுமத்தோடு இணைந்தால், சில வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பழைய படத்தையும் மீட்டு விடலாம். பட்டி டிங்கரிங்களோடு வெளியிட முடிந்தாலே போதும், படம் நன்றாக ஓடிவிடும். கோர்வையான புள்ளிகள், அதைச் சாமர்த்தியமாக இணைத்தால் ஏணி நிச்சயம்… தவறினால் பாம்பின் தலையில் கால் ஊன்றியதற்குச் சமம். இம்முறை வாசுதேவன் மிக மிகக் கவனமாகக் களத்தில் இறங்குகிறார்.

 

பண்டைக் காலத்தில் முத்துக் குளிக்கும் வழக்கம் இருந்தது. மூச்சை அடக்கி சிப்பியை எடுக்கக் கடலுக்குள் செல்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் மூச்சிரையாகி விடுவார். நீரில் இருப்பவரின் இயக்கம் நின்றதும் அவரை வெளியே இழுக்கவில்லை என்றால் மரணம் நிச்சயம். அதனால் முத்து குளிப்பவரைச் சுற்றி கயிறு கட்டி அதன் முனையை நீருக்கு வெளியே இருப்பவரிடம் கொடுப்பார்கள். உள்ளே செல்பவனின் உயிரில் யாருக்கு அதிக அக்கறை இருக்கும்? மைத்துனனுக்குத் தானே? மனைவியின் அண்ணனை நம்பி முத்து குளித்தார் வாசுதேவன்.

 

மரண வாசலில் மகன் இருந்த வேளை, அவருக்கு மகன் மட்டுமே தெரிய, மச்சானை நம்பி கேட்ட இடத்தில் எல்லாம் கை ஒப்பம் இட்டார். கயிற்றை நேரம் பார்த்து விட்டிருந்தார் ஜெகநாதன்.

 

இம்முறை வாசுதேவன் யாரையும் எதற்கும் நம்புவதாக இல்லை. தானே ஒப்பந்தம் முதல் அனைத்தையும் ஆராய்ந்து தலையை விட முடிவெடுத்திருக்கிறார். அரசனை நம்பி புருஷனை விட்ட கதை ஆகிவிடக் கூடாதே. குடும்பத்திற்காக இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டாமா?

 

மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கும் வாசுதேவனால் மனைவி மகனோடு நேரம் செலவிட முடிவதில்லை. அதனால் இன்று பேத்தியிடம் அல்லாடி நிற்கும் மனைவியைக் காப்பாற்ற வாசுதேவன் வீட்டில் இல்லை.

 

தன்னை தூக்காது திரைக்குள் இருக்கும் தகப்பனைப் பார்த்த குழந்தையின் அழுகுரல் அதிகமானது. “எனக்கு வர எரிச்சலுக்கு…” என ஆரம்பித்த அன்னையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டி போட்டுக் கொண்டு வெடிப்பதை இயலாமையோடு பார்த்து அமர்ந்திருந்தான் கௌதமன்.

 

மகளைப் பார்ப்பதா? அன்னையைப் பார்ப்பதா? யாரைப் பார்த்து என்ன செய்ய? மகளின் அழுகையை யார் நிறுத்துவது?

 

அப்பா இல்லையா மா?” என்ற கௌதமன் கேள்விக்கு, “ஆமா டா… பொழுது போகாம நீ தெருவுல இருந்து தூக்கிட்டு வர தொல்லையைத் தூக்கி சொமக்க தான் நானும் உன் அப்பாவும் இருக்கோம் பாரு! என் வீட்டு வாரிசுன்னா கூட பரவால்ல…” என எரிச்சலில் எரிந்து விழுந்தவர், மகனின் ஆழப் பார்வையில், “என்ன டா?” என்றார் அதே எரிச்சலோடே.

 

பிடரியை அழுந்த தேய்த்தவன், “அப்பா இல்லையான்னு கேட்டேன்” என்றான் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டே.

 

மகனின் முக மாறுதலைக் கண்டவருக்கு விட்ட வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. “ஏதோ ஸ்ட்ரெஸ்… சொன்னத பெருசா எடுத்துக்காத. காலையிலேயே போன அப்பா இன்னும் சாப்பாட்டுக்குக் கூட வரல. ரெஸ்டே இல்லாம அவர் கஷ்டப்படுறத பார்த்து ஏதோ ஆதங்கம். கோபத்த உன் மேல இறக்கிட்டேன். ஃபோன் போட்டேன், பேத்தி அழறான்னு சொன்னதும் வரேன்னு சொன்னார்.”

 

வெளியில சாப்பிட்டு இருப்பார் மா” என்றான் மற்றதை விடுத்து.

 

வெளில சாப்பிட மாட்டார் டா. நீ பிறந்த நேரம் இப்படித் தான் நேரம் காலம் இல்லாம சாப்பாடு தூக்கம் இல்லாம வேல வேலன்னு சுத்துவார். இப்போ என்னவோ கௌதமா… அதையே செய்யறார். கொஞ்சம் என்னன்னு பாரு டா.  வயசு பையன வச்சுகிட்டு அவர் அவஸ்த படணுமா?” வைஷாலி கூறிக்கொண்டிருக்க, கைப்பேசியில் தெரிந்த தகப்பனைப் பார்த்துக் கொண்டே “அப்பா வா… ஆலிய சூக்கு அப்பா” என கைகளைத் திரையை நோக்கித் தூக்கி அழுகையைத் தொடர்ந்தாள் யாழி.

 

 “அப்பா சீக்கிரம் வரேன் டா பேபி. அதுவரைக்கும் பாட்டிட்ட விளையாடிட்டு இரு.”

பாத்தி நேணா. சூக்கு அப்பா… நான சூக்கு” எனத் திரையில் இருக்கும் அப்பாவிடம் மகள் அடம் பிடித்து அலற ஆரம்பித்தாள்.

 

வரேன் டா பேபி. அப்பா வரும் போது என்ன வாங்கிட்டு வரணும்?” என அவன் என்ன முயன்றும் மகளின் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

எச்சில் ஒழுக, “அப்பா நேணும்” என முகம் சிவக்க மகள் அழ, “தாத்தாட்ட வாங்க, சாக்கி வாங்கலாம்” என அப்பொழுது உள்ளே நுழைந்த வாசுதேவன் பேத்தியைத் தூக்கிச் சென்றார். மகளின் அழுகை ஓய்வதாகத் தெரியவில்லை.

 

என்ன மா இப்படி அழறா?”

 

இன்னைக்கு அவ ஏதோ முடிவில இருக்கா கௌதமா. அறை குறை தூக்கத்துல இப்படி அவள நீ தூக்கிட்டு போகாம இருந்திருந்தா இவ்வளவு தேடி இருக்க மாட்டா. காலேஜ் போயிருக்கன்னு சொல்லி சமாளிச்சு இருப்பேன். தூக்கம் வருது… தூங்க மாட்டேன்றா. பசிக்குது சாப்பிட மாட்டேன்றா. அழுகையும் என் காது ஜவ்வ கிழிக்குது! செல்லத்த குறைன்னா நீயும் கேக்கறியா? வீட்டுல இருக்கும் போதெல்லாம் அவ பின்னாலயே சுத்தினா இப்படி தான் அடம் பிடிப்பா. உனக்குன்னு ஒரு வாழ்க்கைய வாழ முடியாது.

 

இப்படியே போனா நாளைக்குப் பின்ன கல்யாணம்… குடும்பம்… உனக்குன்னு ஒரு குழந்தை வரும் போது என்ன செய்வ? தாக்ஷாக்கு என்ன தலை எழுத்தா இத எல்லாம் சகிச்சுக்கணும்ன்னு?” என எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்ல, “மா… என்னை பெத்த பிறகு அப்பாவும் நீங்களும் சந்தோஷமா தான இருக்கீங்க? என்னை தொல்லைன்னு நினைச்சு தூக்கி போடலியே. அப்படித் தான் நானும் என் மகளும்.” என்றவனுக்குக் கோபமும் ஆதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன.

 

தவமா தவம் இருந்து உன்னை நாங்க பெத்து எடுத்தோம் கௌதமா. நீயும்… தூக்கிட்டு வந்த இந்தக் குட்டியும் ஒண்ணா?” என சுள்ளென விழுந்தார் வைஷாலி.

 

கௌதமன் மனம் சட்டென அடிவாங்கியது. எங்கிருந்து வந்தால் என்ன? யாழி அவன் மகள்! 

 

குழந்த ரொம்ப ஷார்ப் மா… அவளுக்கு உங்க பேச்சு புரிய ஆரம்பிச்சா, மறக்க மாட்டா. நானும் பொறுத்துக்க மாட்டேன் மா. இனி இந்த மாதிரி பேசவே பேசாதீங்க. இதுவே லாஸ்டா இருக்கட்டும்!” எனச் சத்தம் உயர்த்தினான் மகன். அது என்ன அம்மாவிற்கும், தாக்ஷாவிற்கும் அவன் மகளைக் குறைகூறாது இருந்தால் தூக்கம் வராதோ?

 

மகனின் கோபத்தைக் கிளற விரும்பாது, “சரி சரி இப்போ என்ன செய்யறது அத சொல்லு” என அடக்கி வாசித்தார் வைஷாலி.

 

யோசித்தவன், “மதிய வெயில்… கிளம்பினாலும் கஷ்டம்! ஒண்ணு பண்ணுங்க, நீங்க மூணு பேரும் கிளம்பி வாங்க மா.  ஒரு நாள் இருந்துட்டு போவோம். உங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்” என்றான்.

 

கேட்டு பாக்கிறேன் அப்பாட்ட. இல்லாட்டா நீ கார் பிடிச்சு, சைக்கிள அதுல போட்டு எடுத்துட்டு வா” என்றார் அன்னை.

 

அப்பாட்ட கேட்டுட்டு, கிளம்பறேன். பேபிய பாத்துக்கோங்க மா” என்றவனை முறைத்தவர், “உன்ன வளத்தது நான் டா. இந்த சின்னத பாத்துக்க தெரியாதா?” எனக் கைப்பேசி அழைப்பைத் துண்டித்தார். இவர் மாற்றி மாற்றி பேசுவது கௌதமனுக்கு ஆயாசமாக இருந்தது.

 

வாசுதேவன் வருவதாகக் கூறவும், “வாட்ஸ் ஆப்ல லொக்கேஷன் ஷேர் பண்ணுங்க” என்றவன், ஆன்லைன் மூலமாக அருகில் இருந்த ரேடிசனிலில் இரு அறைகளை முன்பதிவு செய்தான். கௌதமனுக்கும் வாசுதேவனுக்கும் இருக்கும் இடம் சுத்தமாகவும், வசதிகாவும் இருக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் வைஷாலியால் சின்ன இடங்களில் தங்கவெல்லாம் முடியாது. அவருக்காகவே ரேடிசன் பிளூவில் தங்க இடம் பாக்க வேண்டியதாகப் போனது.

 

அன்றைய பகல் பொழுதைத் தூக்கத்தில் கழித்திருந்தனர் நண்பர்கள்.  மாலை காபியை அருந்தியவன், “சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாமா?” எனக் கேட்க, “சத்தியமா முடியாது” என மைக்கேலும் சுரேஷும் விலகிக்கொண்டனர்.

 

ஒரு வாக் போயிட்டு வரதுக்குள்ள என் யாழி பேபி வந்துட்டா நான் நேரா என் மகள பாக்க போயிடுவேன்.” எனக் கிளம்பினான் கௌதமன்.

 

        “கற் சிற்பங்களுக்குப் பெயர் போனது மாமல்லபுரம். இங்குள்ள கல் மண்டபங்களும் சிற்பங்களும் பாரம்பரியம் மிக்கவை என்பதால் இவை பண்பாட்டுச் சின்னம் என யுனெஸ்கோ அறிவித்து, இதை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.” என ஒரு டூர் கைட், வெளிநாட்டவன் ஒருவனுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

 

இங்குள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.” எனப் பாடம் நீண்டு கொண்டே சென்றது.

 

வெளிநாட்டவன் பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருக்க, இருவரையும் பார்த்த கௌதமன் முகத்தில் புன்னகை அரும்பியது. சென்ற வருடம் ஃபிலிமட்டோகிராபி பயிலும் வேளை குறும்படம் எடுக்க இங்கு வந்த வேளையில் இவனுக்கு ஒருவன் இப்படித் தான் பாடம் எடுத்தான். அன்று கௌதமனும் இப்படிதான் வாய் பிளந்து நின்றான்.

 

அங்குள்ள மண்டபங்கள் கௌதமனுக்கு மிகவும் பிடிக்கும். பெரும் பாறையின் முன்புறத்தைத் தட்டையாகச் செதுக்கி, முன்னிருந்து பின்னோக்கி குடைந்து, குகையைத் தூண்கள் கொண்டு தாங்கும் கட்டிட அமைப்பே மண்டபம். பல மண்டபங்கள் முழுவதுமாக முடிந்திருந்தாலும் சில மண்டபங்கள் முடிக்காமல் இருப்பதை மாமல்லபுரத்தில் பார்க்கலாம்.

 

கட்டிடக் கலை வல்லுநர்களிடம் ‘ஒரு கட்டிடத்தை எப்படிக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்?’ எனக் கேட்டால்… ‘முதல்ல ஃபொண்டேஷன்ல்ல ஆரம்பிக்கணும்’ என்பார்கள். ஆனால் நம் முன்னோர்கள் வித்தைக்காரர்கள். ஒற்றை பாறையை மேலிருந்து கீழ் நோக்கிச் செதுக்கி கட்டிடம் உருவாக்க அவர்களால் எப்படி முடிந்ததோ? இப்படியான கட்டிட அமைப்பையே இரதம் என்று அழைப்பார்கள். இந்த இரதங்களுக்குள் சில தளங்கள் உள்ளன. மண்டபங்கள் போலவே… பாதி நிலையில்… முடிவடையாத சில இரதங்களையும் மாமல்லபுரத்தில் நாம் பார்க்கலாம்.

 

கற்களைச் செதுக்கி ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, இன்றைய கோவில்களுக்கு வழிகாட்டியான கட்டுமானக் கோயில்கள்; சிற்பங்கள் செதுக்கப்பட்ட வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் என மாமல்லபுரம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பொக்கிஷம்.

 

நடந்துகொண்டே சுற்றிலும் பார்வை ஓட்டிக் கொண்டிருந்தான் கௌதமன். கற் சிற்பங்கள், கலைப் பொருட்கள், வீட்டு உபயோக அம்மி போன்றவை கடைகள் முன் குவிந்திருந்தன.

 

மகளுக்கு ஏதேனும் வாங்க வேண்டும் என எண்ணியவனாகக் கடைத் தெருக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். சிப்பியிலான மாலை, கிளிப் எனக் குட்டி மகளுக்கு எடுத்தவனுக்கு மகளின் கையில் அதன் ஆயுசு காலம் சில நிமிடங்களே என நன்கு தெரியும், இருந்தாலும் எடுத்துக் கொண்டான். கருங்கல்லினால் ஆன சதுரங்கக் காய்களைப் பார்த்ததும் தகப்பனுக்காக எடுத்துக் கொண்டவன், குட்டி கௌதம புத்தர் சிலையை அம்மாவிற்கு எடுத்துக் கொண்டான். தாஜ் மஹாலின் மேல் அதிக நாட்டம் இல்லை என்றாலும் தாக்ஷாவிற்கு பிடிக்கும் எனப் பளிங்கால் ஆன தாஜ்மஹால் ஒன்றை அவளுக்கும் எடுத்தவன், அவை அனைத்தையும் தன் அறைக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொண்டான்.

 

 கடையை விட்டு வெளியே செல்லும் வேளை கைக்குள் அடங்கும் அளவு யானை சிற்பம் ஒன்றைப் பார்த்தான். பளிங்கால் செதுக்கப் பெற்றிருந்தது. யானையின் சல்லடை வயிற்றிற்குள் குட்டி யானை இருந்தது. அதைப் பார்த்தவனுக்குத் தனக்குள் தன் மகள் இருப்பது போல் தோன்ற, வாங்கியவன் அதை கையில் எடுத்துக் கொண்டான்.

 

குட்டி யானை யாழினியாள் என்றால், பெரிய யானை கௌதமனா இல்லை யசோதராவா? குட்டி யானை யாருக்குச் சொந்தமோ, அவர்களிடம் யானை சிற்பம் இருப்பது தானே சரி?

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!