Skip to content
Post Views: 11,077
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 7
“பிரவீனா மேடம்…” என்றான் மித்ரன்.
சொல்லுங்க சார்…” என்றாள் பிரவீ உறங்கும் மகனை பார்த்தவாறு,
“நான் கேட்டா நீங்க தப்பா எல்லாம் எடுத்துக்க கூடாது. என்ன இவன் நம்ம பெர்சனல் லைஃப் பத்தி கேக்குறான்னு நினைக்க கூடாது…” என்று அவன் பீடிகை போட,
Advertisement
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் கிட்ட என் பெர்சனல் லைஃப் பத்தி கேட்க என்ன இருக்கு..” என்று பார்க்க,
“அதை அப்புறம் சொல்றேன். ஃபர்ஸ்ட் நீங்க லவ் மேரேஜ் தான?..” என்றதும்,
“இல்லை மித்ரன் சார், பெரியவங்க பார்த்தது தான்..” என்றாள் அமைதியாக,
Advertisement
“அப்புறம் உங்க அத்தை பையன்னு சொன்னீங்க.. லவ் இல்லாம எப்படி இவ்வளவு லவ்?…” என்றான் புரியாமல்,
Advertisement
“என்ன சொல்றீங்க சார். எனக்கு புரியல?…”
“உங்க கல்யாண வாழ்க்கை பத்தி சொல்லுங்களேன்…” என்றதும், அவனை ஆச்சர்யமாக பார்த்தவள்,
“என்னவாம் சார்…” பிரவீனாவுக்கு இன்னும் புரிய வில்லை. என் கல்யாண வாழ்க்கையை பத்தி இவன் ஏன் கேட்கிறான். தன் உடன் வந்த ஆட்கள் எங்கே என்று பார்க்க,
Advertisement
மதிய உணவு முடிந்து ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் சந்தேகத்தோடு மித்ரனை பார்க்க,
லேசாக சிரித்தவன், “அது வந்து மேடம். எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையில பெருசா நம்பிக்கையே கிடையாது. கல்யாணம்ன்றது என்ன பொறுத்த அளவுக்கு ஒரு கட்டாயம். நம்மள எல்லாம் கட்டி போடுது. ரொம்ப ஃப்ரீயா இருக்க முடியல, நம்ம விருப்பம் போல நம்ம வாழ்க்கையை கொண்டு போக முடியல.. ம்ம், எப்படி சொல்ல லைஃப்ல ஒரு ப்ரீடம் வேணும்ல.. அந்த ஒரு ஃப்ரீடம் வந்து கல்யாண வாழ்க்கைல கண்டிப்பா கிடைக்காது. விருப்பப்பட்டு வாழ்ற வரைக்கும் ஓகே, அப்புறம் பிடித்தமின்மை வந்துருச்சு அப்படின்னா அதிலிருந்து வெளியே வரணும். அப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்காவது கல்யாண வாழ்க்கையில் இருக்கணும்..”
“இங்க வந்து அது ஒரு கட்டாயம். கல்யாணம் ஆயிடுச்சா கடைசி வரைக்கும் அவங்களோடையே நம்ம வாழ்க்கை முடிஞ்சு போயிரும்.. எனக்கு புடிக்கல, நான் கம்ஃபர்ட்டா பீல் பண்ணல, என்னால மூவ் ஆன் பண்ண முடியல அப்படின்னா.. அந்த ரிலேஷன்ஷிப்பை விட்டு வெளியே வர ஃப்ரீடம் எனக்கு வேணும் தானே. அதை விட்டுட்டு குடும்பம், அதுல இருக்குற பொறுப்பு, கடமை, அப்படின்னு சொல்லிட்டு அதுக்குள்ளே கட்டி போற ஒரு லைஃப் வந்து எனக்கு சுத்த போர்..”
சாய் ஸ்ரீயும், பிரவீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மித்ரன் இப்படித்தான் என்று ஒரு கணிப்பு இவர்களுக்கு முன்பே இருந்தது. ஆனால், இன்று தான் மனம் திறந்து பேசுகிறான். தாங்கள் ஒன்னும் அவ்வளவு நெருக்கமான நட்பு வட்டம் கிடையாது. ஒரே டீம் என்ற அளவில் சகஜ பாவம் இருக்குமே தவிர, நெருக்கமான நண்பர்கள் எல்லாம் கிடையாது. இந்த கொஞ்ச நாளாகத்தான் மித்ரன் நட்பாக பழகுகிறான். அப்படி இருக்கு, அவனின் வாழ்க்கை பெற்ற எண்ணங்களை பிரதிபலிப்பது ஆச்சரியமாக இருந்தது.
அவர்கள் இருவரையும் பார்த்தவன், “நான் ஏன் என்ன பத்தி இவ்ளோ டீடைல்ஸ் கொடுக்கிறேன் அப்படின்னா.. எனக்கு, நீங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கீங்க பிரவீனா மேடம். வாழ்க்கையை எப்படி எல்லாம் என்ஜாய் பண்ணி வாழலாம் அப்படின்னு மக்கள் தேடி ஓடிட்டு இருக்காங்க. அதுல நீங்க வித்தியாசமா இருக்கீங்க. பழைய மூடநம்பிக்கைகள், பெண் அடிமை, ஜாதி வேறுபாடு.. இந்த மாதிரி கல்யாணமும் ரொம்ப பழமையான ஒரு விஷயம். கல்யாண வாழ்க்கை எனக்கு பெருசா ஆர்வத்தை, ஆச்சரியத்தை எதையுமே கொடுக்கல.. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு என் லைஃப் நான் ரொம்ப ஹேப்பியா லீட் பண்ணி கொண்டு போறேன். கல்யாணத்தை பொருத்த அளவுக்கு என்னோட கருத்து கல்யாணம் தப்பு கிடையாது. ஒரு லைஃப் காம்ப்ளிகேட்டடா ஆயிருச்சுன்னா அதிலிருந்து வெளியே வர ஃப்ரீடம் ஓட இருக்கிற கல்யாணம் தப்பு கிடையாது. அதை விட்டு குழந்தைகள், குடும்பம், சமுதாயம் சமுதாயத்தை காரணம் காட்டி கடைசி வரைக்கும் அந்த லைஃப்ல புடிச்சு வைக்கிற ஒரு உறவு வந்து எனக்கு சரியா படல.. பட் அதுல நீங்க ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க பிரவீனா. எனக்கு நிஜமா உங்களை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு…”
“என்ன ஆச்சரியம் சார்?..”
“அது வந்து தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு உங்க கணவர் இல்ல அப்படின்றது தெரியாது. ரொம்ப லவ்வபல் கப்புள்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். உங்களோட கணவர் இந்த உலகத்திலேயே இல்ல. அவரோட நீங்க வாழ்ந்த வாழ்க்கையும் ரொம்ப ஷார்ட். ஆனாலும் உங்களுக்கு அவரை பிடிச்சிருக்கு. அவரோட ஜர்னி ஆகுற மாதிரியே பேசுறீங்க. அவருக்கு ரொம்ப ராயல்டியா இருக்கீங்க. இதனால உங்களுக்கு என்ன கிடைச்சுச்சு, எதுவுமே கிடையாது. அப்படி இருந்தும் உங்க கணவர் மேலே ஏன் அவ்வளவு லவ். உங்க கூடவே இல்லாத ஒருத்தர் மேல… உங்க வாழ்க்கைய நீங்க தானே லீட் பண்ணனும்… அப்படி இருந்து உங்களுடைய எல்லா நேரத்திலும் அவர் இருக்காரு.. இதுக்கெல்லாம் ரீசன் என்ன? நீங்க எப்படி இருக்கீங்க?…” மித்ரன் அவன் மனதில் ஓடிய கேள்விகளுக்கு அவளிடம் பதிலை கேட்டான்.
“நிஜமாவே நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு தெரியல சார். இதுக்கு நான் என்ன விளக்கம் கொடுக்கன்றது கூட தெரியல. நீங்க என்ன மாதிரி பதில் எதிர்பார்த்து என்கிட்ட கேள்வி கேக்குறீங்க அதுவும் புரியலை. என்ன பத்தி உங்களுக்கு ஏன் இவ்வளவு கொஸ்டின்?..”
“நீங்க இவ்ளோ எல்லாம் யோசிக்காதீங்க சார். நான் ரொம்ப சாதாரணம். நம்ம ஊர்ல எல்லாருக்கும் நடக்குற மாதிரி கல்யாணம் வாழ்க்கை தான். எனக்கு வாழ்க்கை ஆரம்பிச்சதும் தெரியல, முடிஞ்சதும் தெரியல. அவ்வளவுதான்..” ரெண்டே வார்த்தையில் முடித்து விட்டாள் பிரவீணா.
“அப்போ உங்க கல்யாண வாழ்க்கை?..” மித்ரன் இப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
“பெருசா ஒன்னும் இல்ல. சொந்த அத்தை பையன், முன்னாடியே தெரியும். ஆனா, கல்யாணம் எல்லாம் பேசி வைக்கல. எங்க வீட்ல மூணு பேரு.. நான் மூத்தவ, பிள்ளைகளை வளர்க்க சிரமம் அப்படின்னு நான் பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன். திருநெல்வேலி பாட்டி வீடு, ஸ்கூல் முடிச்சதும் அங்க தான். அப்புறம் இன்ஜினியரிங் திருச்சி, கல்யாணம் மதுரை. எனக்கு அப்புறம் ரெண்டு பேர் இருக்கனால வேலைக்கு போறதுக்கு எல்லாம் அப்பா விருப்பப்படல. நான் படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ற மாதிரி தான் பேசுனாங்க. ஒன் இயர் வீட்ல இருந்தேன். அப்புறம் எங்க அப்பாவோட அக்கா தான். எனக்கு மாப்பிள்ளை பாக்குறது தெரிஞ்சு வந்து கேட்டாங்க. இளங்கோவன் மாமா.. அவரும் எங்க அத்தை வீட்டில் மூத்தவர் தான். அவருக்கு அப்புறம் ஒரு தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க.. அப்பா கொஞ்சம் யோசிச்சாரு, ஏன்னா இளங்கோ மாமா கொஞ்சம் முடியாதவர். சின்ன வயசுல இருந்தே மூச்சு பிரச்சனை இருந்துச்சு.. ஆனாலும், சொந்தம்.. என்ன பண்ண சரின்னு சொல்லி கட்டி கொடுத்துட்டாரு.,.” என்றதும்,
“என்ன” அதிர்ந்து போய் மித்ரன் பார்க்க,
“முடியாதவர்ன்னு தெரிஞ்சுமா உன்னை கட்டி கொடுத்தாங்க..” அதிர்ச்சியாக கேட்டாள் சாய் ஸ்ரீ.
“அது சின்ன வயசுல கொஞ்சம் வீசிங் ப்ராப்ளம் இருந்துச்சு. அப்புறம் நல்லா தான் இருந்தாரு. அரசியல் அதிக ஈடுபாடு. என்ன கல்யாணம் பண்ணும் போதே கவுன்சிலர இருந்தாரு.. அடுத்த எலக்சனுக்கு எம்எல்ஏ சீட் கொடுப்பாங்கன்னு கூட பேசிக்கிட்டாங்களா.. எங்க அப்பாவுக்கு ஒரு ஆசை வந்துருச்சு. அதோட அவரு எங்க அப்பாவோட சொந்த அக்கா பையன். அப்புறம் எப்படி விட்டுக் கொடுப்பாங்க..”
“என்னதான் சொந்தமா இருந்தாலும் விருப்பம்னு ஒன்னு இருக்குல்ல.. உனக்கு விருப்பம் இருந்துச்சா பிரவீ..” சாய் ஸ்ரீக்கும் நடைமுறை தெரியும். முன் கதை எதுவும் அவ்வளவாக தெரியாது. அதனால் என்ன என்று விலாவாரியாக கேட்க ஆரம்பித்தாள்.
“எங்க வீட்ல அப்படி எல்லாம் கேட்டுக்க மாட்டாங்க ஸ்ரீ. வீட்ல சொல்றது தான். அவங்களா பார்த்து பேசி சரின்னு பட்டுச்சின்னா.. எங்க கிட்ட சொல்லுவாங்க. நானும் அப்படித்தான், என் தங்கச்சியும் அப்படித்தான். எங்க அப்பா கைய நீட்டுனாரு.. நான் கழுத்தை நீட்டினேன். அவ்வளவுதான்” என்றாள் சாதரணமாக.
“சொந்தம் என்றால் கல்யாணம் பண்ணி வச்சுருவாங்களா பிரவீனா மேடம்..” என்றான் மித்ரன்.
“அப்படித்தான் சார். மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஏரியா ஃபுல்லா பாருங்க.. மோஸ்ட்லி சொந்தத்துல தான் கல்யாணம் பண்ணிக்க பார்ப்பாங்க. அதுதான் சேப்டியும் கூட.. நான் எங்க அத்தை பையன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் தங்கச்சி, எங்க மாமா பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. எங்க பக்கம் எல்லாம் சொந்தத்துல மாப்பிள்ளை இருக்கான்னு பாத்துட்டு தான், வெளிய பார்க்க ஆரம்பிப்பாங்க…”
“சோ காதல் எல்லாம் இல்ல. வீட்ல பார்த்த கல்யாணம்..” என்றவன்,
“ஆனால், உங்க ஹஸ்பண்ட் மேல உங்களுக்கு ரொம்ப அன்பு இல்ல”
“ஆமா.. எனக்கு எங்க வீட்டுக்காரர் ரொம்ப பிடிக்கும்..” என்றாள் லேசாக தயங்கி..
“ஆனா, ஏன்?.. எதனால இவ்வளவு அன்பு..” ஆச்சரியமாக கேட்டான் மித்ரன்.
“பெருசா ஒன்னும் இல்ல. அவர் எங்க வீட்டுக்காரர் அவ்வளவுதான்..” ரொம்ப சிம்பிளாக சொல்ல,
“பிரவீனா மேடம், என்ன சொல்றீங்க ஹஸ்பண்ட்னாலே அன்பு வந்துருமா.. ஒருத்தர் எப்படி, அவங்க ஒரிஜினாலிட்டி என்ன, அவங்க ரியாலிட்டி எப்படி?, அவங்க யாரென்று கூட தெரியாம.. கல்யாணம் பண்ணா ஒரு அன்பு வந்துருமா”
“அதெல்லாம் எனக்கு தெரியாது சார். எனக்கு கல்யாணம் ஆச்சு. அவரு என் ஹஸ்பண்ட். அவங்க தான் என் வாழ்க்கை, எதிர்காலம், அதுதான் என் குடும்பம். அப்படித்தான் எங்களை வளர்த்தாங்க. நாங்களும் கழுத்துல தாலி ஏறிட்டா.. அதுதான் எங்க வாழ்க்கை, அந்த ஒருத்தரோட தான் எங்க எதிர்காலம். அவங்களோட வாழ்க்கைய பங்கு போட்டுக்கிட்டு அதுல வர கஷ்டம், நஷ்டம், சந்தோஷம், குழந்தைகள், குடும்பம், பிரச்சனை.. எல்லாத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சு சரி கட்டி ஒரு நிம்மதியான வாழ்க்கையை கட்டமைச்சு முன்னேறுவதுதான் இந்த தாம்பத்தியம்..” என்றாள் லேசாக சிரித்து,
“இது உங்களுக்கு ஒரு மாதிரி கட்டாயமா, காம்ப்ளிகேட்டடா தெரியலையா பிரவீனா..” என்றான் மித்ரன்.
“நிச்சயமா தெரியல சார். எனக்கு கல்யாண வாழ்க்கை பிடிக்கும். என் கணவர், என் குடும்பம் என் குழந்தைகள்ன்னு ஓடுற ஓட்டம் எனக்கு விருப்பம் தான். ஐ லவ் மை கல்ச்சர். எனக்கு அது பழைய பஞ்சாங்கமா தெரியல.அது கட்டுப்பாடாக தெரியல. எனக்கு புடிச்சிருக்கு. நான் ரொம்ப விரும்பி தான் என்னோட கல்ச்சர்ல இருக்கேன். எந்த கட்டாயமும் கிடையாது..”
“நான் சொல்றது ஒன்னு தான் சார். நான் வந்து என்னுடைய வாழ்க்கை துணையை இழந்துட்டதால, நான் சொல்றது மத்தவங்களுக்கு பெருசா படாது. பட், நமக்கு ஒரு நிம்மதியான, பாதுகாப்பான, அமைதியான ஒரு வாழ்க்கை வேணும்னா.. கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கோங்க. கல்யாண வாழ்க்கையே எப்படின்னு எக்ஸ்பிளைன் பண்ண முடியாது. வாழ்ந்து பார்த்தா தான் தெரியும்…” என்றாள் சந்தோசமாக,
அவள் முகத்தையே பார்த்திருந்தான் மித்ரன். கல்யாண வாழ்க்கையை எவ்வளவு ஆசையாக சொல்கிறாள். இவளுக்காகவாது கடவுள் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம். ரொம்ப நேரம் பிள்ளையை ஒரே மாதிரி மடியில் வைத்திருந்தது கால் மரத்துப்போக, காலை நீவி விட்டாள்.
“என்ன ஆச்சுங்க பிரவீனா. கொடுங்க கொஞ்ச நேரம் தம்பியை நான் வச்சிருக்கேன்..”
அவள் வேண்டாம் என்று சொல்லும் முன்னே குனிந்து பிள்ளையை தூக்கி இருந்தான்.
“ஹப்பா நல்லா வெயிட்..” ஆதிரனை தூக்கியதும் மித்ரன் சொல்ல, பிரவீனா முகம் சுருங்கியது.
“வெயிட்டா இருந்தா என்கிட்ட குடுங்க சார் நான் வச்சுப்பேன்..”
“ஏன்? என்னாச்சு பிரவீனா?” என்றதும்
“வெயிட்டாவே இருந்தாலும், நாம வெயிட்ன்னு சொல்லக்கூடாது சார் கண்ணு பட்டுடும்..” என்றாள்.
“ஓ!.. அப்படியா, ஓகேங்க இனி அப்படி எல்லாம் சொல்லல..” என்று உடனே ஒத்து கொண்டான்.
அடுத்து வீட்டுக்கு கிளம்பும் வரை ஆதிரன், அவன் கையில்தான். அவனை தூக்கிப்போட்டு, ஓடி பிடித்து, தண்ணீரில் நீச்சல் அடித்து என முழுவதும் மித்ரன் தான் பார்த்துக் கொண்டான். கண்பார்வையில் தாய் இருந்ததால் ஆதிரனும், அவனோடு ஒட்டினான்.
எல்லோரும் கிளம்பும்போது சாய் ஸ்ரீ தான்,
“பிரவீ நாளைக்கு வரியா நீ?..”
“இல்ல சாய், நாளைக்கு அம்மா, வீட்ல இருக்க சொன்னாங்க. நான்தான் என் தம்பியை கல்யாணத்துக்கு விருந்து வைக்கிறேன்..”
“பாருடா…”
“ஆமா, எனக்கெல்லாம் இந்த கவனிப்பு கிடையாது. நான் சொந்த அத்தை பையனவே கல்யாணம் பண்ணிட்டு போனனால, பெருசா புது பொண்ணுக்கான சௌகரியம் எதையும் அனுபவிக்கல. சரி நாம தான் இப்படி, நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணையாவது நம்ம நல்லா கவனிப்போம்..”
“நீ சொல்ற சரி உங்க வீட்டுக்கு வந்த பொண்ணு எப்படியாம்?..”
“இப்போதைக்கு பெருசா ஒன்னும் பிரச்சனை இல்ல சாய். பின்னாடி எப்படின்னு தெரியல.. நாம என்ன அவங்க வம்புக்கும் போக போறது இல்ல, தும்புக்கும் போக போறது இல்ல. நம்ம, உண்டு நம்ம வேலை உண்டு அவ்வளவுதான்..” என்று பேசியவாறு கிளம்ப மித்ரன் காதில் விழுந்தாலும், அவன் கவனம் எல்லாம் ஆதிரன் மேல் தான் இருந்தது. தனக்கென்று கல்யாணம், குடும்பம், மனைவி பிள்ளைகள் என்று விருப்பமில்லையே தவிர, மற்றபடி குழந்தைகளை பிடிக்கும். அவர்களோடு சீக்கிரமாகவே இணங்கி விடுவான்.
அன்று இரவு மித்திரன் வீட்டுக்கு வந்த பின்னும் பிரவீனா சொன்ன வார்த்தைகளே, அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வெளியில் வானத்தை வெறிக்க பார்த்து அமர்ந்திருந்தான். மித்ரன் கல்லூரி முடித்த சமயம் அவனுக்கு ஒரு பெண் மேல் ஈர்ப்பு.
அவள் மகதி. அவனைப் போலவே இந்திய பெண்ணாக இருந்த பொழுதும் மித்ரனின் கொள்கையை உடையவள். ஒரே நாட்டவர் என்ற நட்பு. அவரவர் குண நலன் தெரிந்த பின் நெருக்கமாகி, பின் காதலாகி, அதன்பின் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு தள்ளியது.
அவன் சொல்வது போல மிக மிக சுதந்திரமான வாழ்வு. எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவரவர் துறையில் தடையில்லாமல் முன்னேறி கொண்டார்கள். சம்பளத்தை வாங்கி மனைவியிடம் கொடுப்பது, கணக்கு சொல்லுவது, பணத்தை மிச்சம் பண்ணுவது, உறவுகளை வளர்ப்பது, குடும்பத்தை கட்டுவது, குழந்தைகளை பார்ப்பது என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்க்கையை மிகவும் ருசிகரமாக ரசித்து கொண்டு போனார்கள். அவளுடனான அவன் வாழ்க்கை மிக திருப்தி.
பிரிவு என்ற ஒன்றை அவன் யோசிக்கவே இல்லை. ஆனால், மகதிக்கு எப்படியோ?.. பெரிதாக எந்த விளக்கமும், காரணமும், சண்டையும் எதுவும் இல்லை. மித்ரன், ஐ அம் நாட் கம்ஃபர்ட் வித் யூ.. ஒற்றை வார்த்தை தான். அன்றே முழுதாக ஒதுங்கிக் கொண்டாள்.
மித்ரன் வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய ஏமாற்றம் அது.. அவனால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஏன் பிரிவு என்று தெரியவில்லை. காரணம் கேட்டு கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தும் உறவு அவர்களது இல்லை என்பதால்.. சமூகமாகவே ஒதுங்கிக் கொண்டான்.
அடுத்தடுத்து அவன் வாழ்க்கையில் பெண்களே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இந்த ஒரு வருடமாக எல்லாவற்றிலும் ஒரு சலிப்பு. எந்தப் பெண்ணையும் அறிந்து கொள்ள ஆர்வம் எழவே இல்லை. கொஞ்சம் தனிமையை விரும்பி ஓடிக் கொண்டிருக்கிறான் ஆனால், அதுவும் எவ்வளவு காலத்திற்கு.. அதற்காக வீட்டில் சொல்வது போல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை அடகு வைக்கும் முட்டாள் தனத்தை அவன் பண்ண விரும்பவில்லை. என்னவோ என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்றைய பிரவீனாவின் பேச்சு அவனை லேசாக அசைத்துப் பார்த்தது. தாம்பத்திய வாழ்க்கையின் அரிச்சுவடி அறிந்தவன் அவன்.. அப்படியெல்லாம் ஒதுங்கி நிற்கும் வயதும் இல்லை. ஆனால், அந்தப் பெண் நிற்கிறாள். இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு கணவனுக்காக மிகவும் நேர்மையாக நிற்கிறாள்.
அவளின் கல்யாண வாழ்க்கை முடிந்து போன ஒன்று.. ஆனால், அந்த கல்யாண வாழ்க்கைக்கு உண்மையாக வாழ்கிறாள். முப்பது வயது கூட நெருங்காமல் துறவு வாழ்க்கை வாழ்ந்து என்று காலம் முடிய…
தாங்கி, பாதுகாத்து, நல்ல துணையாக உடன் என்றும் வாழும் வாழ்க்கைத் துணைக்குள்ளே எவ்வளவோ, பிரச்சனை பஞ்சாயத்து. பத்து நாளைக்கு நூறு கிப்ட் கொடுத்தாலும் முட்டிக் கொள்ளும் தம்பதிகளும் இருக்கிறார்கள் தான்.
நிதர்சனமான உண்மை என்னவென்றால் பிரவீனாவின் கடந்த கால வாழ்க்கை அவளின் நிகழ்காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ வழி காட்டப் போவது கிடையாது. இந்த வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை, துன்பங்களை, பிரச்சனைகளை தனி ஒருத்தியாக அவளே போராடி கடந்து வர வேண்டும். இதில் எந்த இடத்திலும் துணையாக வந்த ஒருவன், துணை நிற்கப் போவதில்லை. அவனின் நினைவுகள் மட்டுமே அவளின் துணை. ஆனால், அது மட்டும் போதும் என்று எத்தனை வருடம் கடக்க முடியும்?..
மனரீதியாக, பொருளாதார ரீதியாக பிரவீனாவின் வாழ்க்கைக்கு இளங்கோவின் நினைவுகள் துணை நிற்க போவதில்லை. ஆனாலும், அவள் நிற்கிறாள். அந்த நினைவு மட்டுமே வாழ்க்கை என்று..இந்த மாதிரியான ஒரு அன்பு எல்லாம் தனக்கு சாத்தியப்படுமா? என்று யோசித்து நின்றான். உணவு, தேவை, இருப்பிடம் போன்ற விருப்பங்களில் மாற்றம் நிகழ்வது போல் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது மித்ரனுக்கு…
இதுதான் என்று ஒரு கோடு போட்டு வாழும் வாழ்க்கை அவன் வாழவில்லை. அப்படி வாழும் வாழ்க்கை மூடநம்பிக்கை, பழமை என்றிருந்தான். அந்தப் பழமையை தூக்கிப் பிடிக்கும் பெண்தான் அவனை அசைத்துப் பார்த்தாள். எப்போதும் வானத்தைப் பார்த்து ஆழ்ந்து யோசிக்கும் பொழுது சில நொடி தென்படும் மகதியின் முகம். இன்று இல்லை.. ஏனோ பிரவீனா முகம் தான் தோன்றி மறைந்தது.
error: Content is protected !!