Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 1

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!…

அத்தியாயம்1

      காலை நேர பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்னை மாநகரம் செயல் பட்டு கொண்டு இருந்தது. அந்த பரபரப்பு ஊடே, தனது வாகனத்தை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான் மித்ரன். அவன் யுவி மித்ரன். முப்பத்தி மூன்று வயது இருந்தாலும்.. துள்ளுவதோ இளமை என்று சுற்றி திரியும் ரகம்…

     ஒரு நவீன பொறியியல் கம்பெனியில் டெக் லீடாகா பணியாற்றுகிறான். தற்போதைய ஆடம்பரமும், நவ நாகரீக சிந்தனையும் கொண்டவன். முன் பக்க குட்டி தாடியோடு, பின் பக்கம் முடி வளர்த்து ஒரு பேண்டில் அடக்கி இருந்தான். நல்ல உயரமான, திடகாத்திரமான ஆண் மகன். நல்ல வசீகரமானவனும் கூட… ஆனால், இன்னும் சம்சார சாகரத்தில் மூழ்க வில்லை. அதற்காக பிரம்மச்சாரி என்றும் கிடையாது.கார் வேகமாக சென்று கொண்டு இருந்தாலும், மித்ரன் ஒரு ஆங்கில பாடலை கூலாக பாடி கொண்டு வந்தான்.



Advertisement

     “ மாமா.. சீக்கிரம். எனக்கு லேட் ஆச்சு…” என்று சத்தம் கொடுத்தது சின்ன சிட்டு மான்சி.

  அவனின் இரண்டாவது அக்கா மகள். அவளின் பெற்றோர் இருவரும் அவசர வேளையில் இருக்க.. அக்கா மகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பொறுப்பை தனதாக்கி கொண்டான்.

   “ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் பேபி…” என்று அவளை செல்லம் கொஞ்சியவன், காரை வேகமெடுக்க…

Advertisement

     முன் பக்கம் சென்ற ஒரு குட்டி ஸ்கூட்டி ஒதுங்கி வழி விடாமல் அழிச்சாட்டியம் செய்தது. அது பள்ளிக்கு செல்லும் கிளை பிரிவு.. குழந்தைகள் நடமாட்டம் காணப்படும் என்பதால் வேகமாக சென்று முந்த முடியாது. மித்ரனும் ஆரன் அடித்து ஓய்ந்து போனான்.

Advertisement

    அவன் முகத்தில் லேசான எரிச்சல் மண்டியது. கொஞ்சம் வழி விட்டால் தான் என்ன?… சின்ன ஸ்கூட்டி, லேசாக சாய்ந்து ஒதுங்கி கொண்டால் போதுமே… யார் அந்த பெண்?

       பள்ளி வளாகத்தில் வண்டி நுழைந்ததும்.. தனக்கு வழி விடாத அந்த நல்ல பெண் யார் என்று வேகமாக பார்க்க..

  “அட! இந்த அம்மாவா!.. அதுசரி…” நினைத்தான் மித்ரன்.

Advertisement

        தன் குட்டி ஸ்கூட்டியில் இருந்து இறங்கிய அந்த அம்மாவும்.. தன்னை லேசான முறைப்புடன் பார்க்கும் அவனை கண்டு கொள்ளாமல், தன் மகனோடு நகர்ந்து விட்டாள்.

  “சே.. சரியான ராகு காலம்” என்று முணங்கிய மித்ரனும், தன் அக்கா மகளோடு நகர்ந்தான்.

         பிள்ளைகளை அவரவர் வகுப்பறைக்கு வெளியே விட்ட பின்… இருவரும் ஒரே நடை பாதையில் தான் வந்தார்கள். ஆனால், பேசி கொள்ள வில்லை.. இருந்தும் மித்ரன் மனம் முரண்டியது.

     “வேண்டாம் யுவி. இந்த அம்மா சரியான ரூல்ஸ் ராமானுஜம். நம்மளை கண்டாலே.. பார்க்க கூடாததை பார்த்தது போல முகத்தை தூக்கி கொண்டு போவாள். வீணாக வம்பு வேண்டாம்..” என்று மனம் நினைத்த போதும்…

     “இங்க பாருங்க பிரவீனா மேடம்.. காலையிலே ஏன் அலும்பு பண்றீங்க. உங்களுக்கு என்னை பிடிக்காது தான். அதுக்காக எனக்கு வழி விடாம பண்றது அநியாயம்…” என்றான்.

   “இங்க பாருங்க யுவி மித்ரன் சார். இது பள்ளிக்கு பக்கத்துல இருக்குற போக்குவரத்து சாலை. மெதுவாக போகணும், வாகனங்களை முந்த கூடாதுன்னு முக்குக்கு மூணு போர்ட் வச்சும்.. என் காது வலிக்கிற அளவுக்கு சத்தம் கொடுக்குறீங்க…” என்றவள்,

  “அத்தோடு இது அரசாங்க ரோடு. சின்ன வண்டி, பெரிய வண்டி எல்லாம் பொது தான். கார் போகுறதுக்கு மட்டும் இன்னும் அரசாங்கம் தனியா ரோடு போடல… அப்படி போடும் போது உங்க வண்டிக்கு நான் வழி விட்டு நிக்கிறேன்…” என்று மெதுவாக.. ஆனால், திடமாக குரல் வர,

   “எனக்கு தேவை தான்…” என்று நினைத்து கொண்டான் மித்ரன்.

      அத்தோடு நகர்ந்து விட்டவள். அவன் காதில் கேட்குமாறு,

  “யாரு அலும்பு பண்றாங்க. நீங்க யாரு எனக்கு? உங்க கூட நான் எதுக்கு அலும்பு பண்ணனும். நீங்க என்ன எனக்கு சொந்தமா? இல்ல விரோதியா? உங்களை பிடிக்காமல் போக… நீங்க யாரோ? நான் யாரோ?.. ரொம்ப பழக்கமானவங்க மாதிரி பேச்சு என்ன வேண்டி கிடக்கு…” விடாமல் முனங்கி கொண்டே அவள் செல்ல…

     யுவி மித்ரன்.. ருத்ர மூர்த்தியாக மாறி கொண்டிருந்தான். “தன் இடது பக்க நெஞ்சில் கை வைத்து கூல் யுவி. சில்லி கேர்ள். இவங்களுக்காக எல்லாம் உன் மைண்ட்ட பிரஸர் பண்ணாத.. ஜஸ்ட் க்னோர்..” அவனுக்கு அவனே சொல்லி கொண்டு நகர்ந்து விட்டான்.

    அவள் சொல்வது போல யாரோ தெரியாதவர் எல்லாம் கிடையாது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். ஒரே டீம் மற்றும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமானவர்களே…

      மித்ரன் மிக மிக கலகலப்பானவன். ஆண், பெண் பேதமின்றி சகஜமாக பழக கூடியவன். வெளிநாட்டில் படிப்பிற்கு சென்றவன். அந்த படிப்போடு.. அதன் பழக்க வழக்கத்தையும் கற்று கொண்டவன். வாழ்க்கை வாழ்வதற்கே… அதன் நடைமுறையும் அவரவர் விருப்பம் மட்டுமே என்ற எண்ணம் கொண்டவன்.

  கல்யாணம், குடும்பம் என்பதில் பெரிதாக ஆர்வம் இல்லாதவன்.. அதற்காக தன் நாட்டு கலாச்சாரத்தை மதிக்காதவன் என்றெல்லாம் கிடையாது. மித்ரனுக்கு.. இவையெல்லாம் பழமை என்ற நினைப்பு.

   மித்ரன் குடும்பம் குன்னூரில் உள்ளார்கள். இரண்டு அக்களோடு பிறந்தவன். வீட்டின் கடை குட்டி. நல்ல பணக்கார வர்க்கம் தான். டீ எஸ்டேட், பழ பண்ணை, காய்கறி தோட்டம் என்று கோடி கணக்கில் முதலீடு செய்பவர்கள்.

  ஆனால், என்ன ஒன்று.. ஜாதகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் அவனின் அன்னை சாரதா. தும்மினால் கூட சகுனம் பார்ப்பார். அப்படி தான் மித்ரனின் பதிமூன்று வயதில்.. அவன் ஜாதகத்தில் ஏதோ தோஷம். பெற்றவர்களோடு பிள்ளை சேர்ந்து இருக்க கூடாது என்றதில் தொடங்கியது மித்ரனின் வெளிநாட்டு வாழ்க்கை. சாரதாவின் அண்ணன் வீடு தான்.

     ஆனாலும், புது இடம், மொழி, சூழல், பெற்றோர் பிரிவு என்று மிக சிரம பட்டான் மித்ரன். ஆரம்பத்தில் ஒவ்வாமையோடும், பிடித்தமின்மையோடும் பார்த்து பழகியவை எல்லாம், காலப்போக்கில் பிடித்து போனது. அந்த வாழ்க்கை முறைக்கும், சுதந்திரத்துக்கும் நன்றாக பழகி கொண்டான்.

       சத்திய மூர்த்தி, சாரதா தம்பதிகள் படிப்பை முடித்து மகன் வருவான், தங்கள் தொழிலை கையில் எடுப்பான் என்று நினைத்து இருக்க… படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பாதவன். தன் இருவத்தியெழு வயதில் தான் திரும்ப தாய் நாடு வந்தான். அதுவும் எனக்கு விருப்பம் ஐ.டி பீல்டு தான் என்றதோடு… பெற்றவர்களின் எதற்கும் அடங்காமல் நின்றான்.

    என்ன செய்தும் மகனை கட்டுக்குள் வைக்க முடிய வில்லை. இரு பெண் பிள்ளைகளை ஒரு சத்தமில்லாமல் கட்டி கொடுத்தவர்களால் , ஒற்றை மகனை சரி கட்ட முடியவில்லை. அவன் விருப்பம் போலவே வாழ்ந்தான்.

     பெற்றோரோ அல்லது உடன் பிறந்தவர்களோ, அவனின் வாழ்க்கை முறை பற்றி அறிவுரை சொன்னாளோ, கண்டித்தாலோ.. அவர்களிடமிருந்து முழுதாக ஒதுங்கி விடுவான். அதற்கு பின் அவன் இறங்கி வருவது சிரமம். முழுதாக வளர்ந்த மகனை சரிப்படுத்த முடியாமல் திணறி தான் போனார்கள்.

    ஆனால், மித்ரன்.. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், உடன் பிறப்புகளை விட மாட்டான். எந்த விசேஷம், நல்லது, கெட்டது எதற்கும் தமையனாக முன் நிற்பான். ஆனால், என்ன ஒன்று.. என் வாழ்க்கை, என் விருப்பம். ஒரு கட்டத்துக்கு மேல் உடன் பிறப்புகளும் விட்டு விட்டார்கள். ஆனால், தம்பி மனம் மாறி தங்களை போல குடும்பம், குழந்தைகள் என்று வாழ நிறைய ஆசை உண்டு…

    சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்த மித்ரன் கண்கள் தேடியது அந்த குட்டி ஸ்கூட்டியை தான். இன்னும் வராமல் போக.. ஒரே குஷி. அவன் தான் பிரவீனா டீம் டி.எல். தாமதமாக அவள் வந்தால்.. அவளை கொஞ்சம் வைத்து செய்ய ஆசை வந்தது.

   அதற்கு தக்க பிரவீனாவும் கால் மணி நேரம் தாமதமாக வர.. மித்ரன் முகத்தில் கள்ள புன்னகை…

    “ஹாய் சாய்!.. குட் மார்னிங் ரஞ்சன்…” என்று சிரித்த முகமாக சொன்னவள், மித்ரன் அருகில் வந்ததும், கொஞ்சம் தயங்கி, முகத்தை சுருக்கி,

  “குட் மார்னிங் சார்…” என்று சொல்ல,

 அவள் முக பாவனையில் இன்னும் கடுப்பானவன்,

“டைம் என்னன்னு தெரியுமா பிரவீனா மேடம்…” என்று மேடம் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

      அவர்கள் டீமில் இருக்கும் மற்ற எல்லோரிடமும் ஓரளவு சகஜமாக பழகும் பெண் தான். ஆனால், மித்ரனை கண்டால் மட்டும் எட்டி தான் நிற்பாள். அது தன் வாழ்க்கை முறையை கொண்டு தான் என்று மித்ரனுக்கு தெரியும்.

   “சோ வாட்.. என் வாழ்க்கை நான் எப்படியும் வாழ்வேன். இவளுக்கு என்ன வந்தது. இவள் கையை பிடித்தா இழுத்தேன். பட்டிகாடு.. கட்டுபெட்டி தனமான கொள்கையை வைத்து கொண்டு என்னை முறைக்கிறாள். ஜஸ்ட் கோ வேர்கேர்.. அந்த முறையில் பழக வேண்டிய தானே.. ஏதோ நான் பெரிய பெண் பித்தன் போல முகத்தில் வெறுப்பை காட்டுவது. கற்கால சில்லி கேர்ள்..” முனங்கி கொள்வான். அதனாலே சமயம் கிடைக்கும் போது வைத்து செய்வான்.

       “சாரி சார், ஹெவி ட்ராஃபிக். அதான் லேட்…” தயங்கியே சொன்னாள் பிரவீனா.

     “இந்த சாக்கு எல்லாம் சொல்லாதீங்க மேடம். ஈவ்னிங் ஃபைவ் கிளாக் மேல ஆனாதும் நொடி தாமதிக்காமல் வீட்டுக்கு கிளம்புறீங்க தானா… அந்த வேகத்தை வேலைக்கு வரும் போதும் காட்டுங்க…”

“சாரி சார்…”

“இந்த சாரியை இனிமே கேட்காத அளவுக்கு நடந்துகோங்க.. உங்களோட அந்த ஓட்ட ஸ்கூட்டியோட டயர் தேயிற அளவுக்கு, ரோட்டுல போட்டு இருக்குற தார் கையோட வர்ற அளவுக்கு மெதுவாக வண்டி ஓட்டாமா.. நேர, காலத்துக்கு தக்க நடந்துகோங்க…” என்று பெரிய அட்வைஸ் கொடுத்து, அது வரை நிற்க வைத்து அவளை அனுப்பினான்.

      அவன் மேல் வரும் வெறுப்பை முகத்தில் காட்டாமல் இருக்க கஷ்டபட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தாள் பிரவீனா.

  சாய் ஶ்ரீ, அவளை திரும்பி பார்க்க… பிரவீனா பெருமூச்சு விட்டாள்.

   “இவன் எப்ப தான் சாய் வேற டீம் போவான்.. பார்த்தாலே வேப்பங்காயா இருக்கு…” என்று முகத்தை சுருக்க.

   “நீயும் தான் ஓவரா பண்ற பிரவீ.. மித்ரன் எப்படி இருந்தா உனக்கு என்ன?.. நம்ம கிட்ட நல்ல படியா தான நடந்துகிறார். அடுத்தவங்க கேரக்டர் அனாலைசஸ் பண்ணாத பிரவீ.. அவரை பார்த்தாலே முகத்தை சுருக்கற.. அவருக்கு எப்படி இருக்கும்…”

“அவன் நடத்தை எல்லாம் சரியா? நம்ம வேலைக்கு வந்த புதுசுல ஒரு பெண்ணோடு இருந்தான். இப்ப வேற ஒருத்தி.. என்ன கண்றாவி வாழ்க்கை இது?.. அவனை பார்த்தாலே என்னால சகஜமா இருக்க முடியல…”

  “அதை தான் சொல்றேன். அவரை ஏன் பாக்குற.. நாம ஒரே இடத்துல வேலை செய்யிறோம், அவ்வளவு தான். அவர் ஒன்னும் நமக்கு உறவு கிடையாது. நம்ம கிட்ட நல்ல மாதிரி இருக்காரா!.. அது மட்டும் பாரு…”

“அப்படி கிடையாது சாய். உங்க மாமா அடிக்கடி சொல்வார். இந்த மாதிரி ஆளுக கிட்ட எல்லாம் நாம தள்ளியே நிக்கனும். கொஞ்சம் சகஜமா பேசினோம். அவன் லிஸ்ட்ல நம்மளையும் சேர்த்திடுவான். அவனை விட்டு ஒதுங்கியே இருக்கிறது தான் பாதுகாப்பு…”என்று பிரவீனா சொல்லும் போதே..

   “ரெண்டு நாட்டு தலைவர்களும் மேலாண்மை பத்தி பேசி முடிச்சாச்சுன்னா, வேலையை தொடங்கலாமே…” முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டு, குரலில் அழுத்தம் கூட்டி சொல்ல,

   பயந்து போய் இருவரும் கணினியில் தலையை கொடுத்தார்கள்.

   “குட் மார்னிங் மித்ரன். சாரி கொஞ்சம் லேட்…” என்று ஓடி வந்தாள் அனன்யா.

 ஓர கண்ணால் பிரவீனாவை பார்த்தவன்.

  “இட்ஸ் ஓகே அனு.. அவ்வளவு ஒன்னும். லேட் ஆகல.. போய் வேலையை பாருங்க…” என்றவன்,

  பிரவீனா முகம் கடுக்கவும் ஒரே குஷி அவனுக்கு…

   “சாய்.. நான் சொன்னேன் தான, பார்த்தியா?.. உங்க மாமா சொன்னா சரியா இருக்கும். இவன் ரொம்ப டெஞ்சர்…” என்று மேலும் சொல்ல,

 பல்லை கடித்தவன், “உனக்கு இருக்கு…” என்று நினைத்தான்.

  மாலை மூன்று மணி வரை அவளுக்கு பெரிதாக வேலைகள் எதுவும் இல்லை. சும்மா சின்ன சின்ன வேலைகளை பார்க்க, அடுத்து ஒரு பெரிய டாஸ்க் அசைன் பண்ணி கொடுத்தான் மித்ரன்.

   “இதை இன்னைக்கே முடிக்கணும் பிரவீனா மேடம். டெஸ்டிங் அனுப்பணும், முடிக்காம வீட்டுக்கு போக முடியாது…”அழுத்தமாக சொன்னான் மித்ரன்.

  பிரவீனாவுக்கு எப்படியும் இன்று மாலைக்குள் முடிக்க முடியும் என்று தோன்றவே இல்லை. ஆனாலும், முயற்சி செய்தாள். மாலை ஐந்து ஆகவும் ஒவ்வொருவராக சொல்லி கொண்டு கிளம்ப, பிரவீனா திணறி விட்டாள்.

   கொடுத்த வேலையில் கால் வாசி கூட முடிக்க வில்லை. பிள்ளை வேறு காத்திருப்பான் என்று தோன்றியது. நேரமும் போய் கொண்டு இருந்தது.

   நிமிர்ந்து மித்ரனை பார்க்க, அவன் கண்டும் காணாத மாதிரி அமர்ந்து இருந்தான். சாய் ஶ்ரீயும் இவளுக்காக காத்திருக்க…

  “ நீ போ சாய்.. கொஞ்சம் தான். இப்போ முடிஞ்சுரும், நான் வந்துடுவேன்…” என்று அனுப்பி வைக்க,

  “அப்ப சரி பிரவீ.. பார்த்து போ.. வீட்டுக்கு போய் கால் பண்ணு…” என்று கிளம்பி விட்டாள்.

  எட்டு மணி இருக்கும் போது, முக்கால்வாசி ஆண் மக்கள் கிளம்பி இருந்தார்கள். மித்ரன் மட்டும் அமர்ந்து கேம் விளையாடி கொண்டு இருந்தான். ஒரு மாதிரி பயமாக இருந்தது அவளுக்கு.. அம்மா வேறு நான்கு முறை கால் செய்து விட்டார். அம்மா வந்தால் தான் சாப்பிடுவேன் என்று பிள்ளை அடம் பிடிக்கிறதாம். இப்படியே அமர்ந்து இருக்க, என்ன பயன். மெல்ல எழுந்து மித்ரன் அருகே சென்றவள்,

   “சார்…”

  “சொல்லுங்க மிஸஸ் பிரவீனா. வேலையை முடிச்சாச்சா, நான் வந்து பார்க்கலாமா…”

 “சார் அது முடிக்க எப்படியும் காலை ஆகிரும் சார்…”

  “சோ வாட்..” என்றான் அலட்சியமாக.

  “வீட்டுல குழந்தை இருக்கு சார்…” என்றாள் தயங்கி..

  “அதுக்கு நான் என்னங்க பண்ணட்டும். இந்த மாதிரி சாக்கு சொல்லாம, வேலையை பாருங்க.. காலையில வந்ததும் லேட். குழந்தை இருக்குன்னா, ஏன் வேலைக்கு வரணும். பெரிய கண்ணகி பரம்பரை மாதிரி பேசிவீங்களே.. வேலையை ஒழுங்கா பார்க்க வேணாம். போய் கொடுத்த வொர்க்க பாருங்க…” விரட்டி விட்டான் மித்ரன்.

    சுருங்கிய முகத்தோடு வந்தவள், போனை எடுத்து மகனுக்கு பேசி, கொஞ்சி சமாதானம் செய்து முடித்து, திரும்ப வேலையை பார்க்க அமர்ந்தாள்.

  அடுத்த ரெண்டு மணி நேரம் போனது. இதற்கு மேல் போனால், வீடு செல்வது சிரமம் என்று தோன்ற… அவன் மேல் எழுந்த வெறுப்பை முகத்தில் காட்டாமல், கொஞ்சம் பவ்வியமாக மித்ரன் அருகே சென்றாள்.

  “சார்..”

“ சொல்லுங்க மேடம்…”

 “ ஓரளவுக்கு முடிச்சுட்டேன் சார். காலையில சீக்கிரம் வந்து மிச்சமும் முடிச்சு கொடுக்கிறேன் சார்…” குரல் பணிந்தே வந்தது.

  பெரிதாக யோசிப்பது போல பாவனை செய்தவன், “சரி உங்களை பார்த்தாலும் பாவமா இருக்கு.. மார்னிங் சீக்கிரம் வந்து முடிச்சு கொடுங்க…” பெரிய மனது வைத்து சொல்ல,

  சிரிப்பது போல காட்டி கொண்டு வேகமாக நகர்ந்து விட்டாள். மணி பதினொன்றுக்கு மேல்… அவன் பெயரை அரைத்து கொண்டே வேகமாக நடக்க, பின்னோடு அவன் நடந்து வரும் சத்தம் கேட்டது.

  அடுத்து பிரவீனா கப்சிப் தான். அதிக நேரமானதால் ஸ்கூட்டியை எடுப்பது சரிப்படாது என்று கேப்க்கு காத்திருந்தாள். அவளை கடந்தவன், தன் காரை எடுத்து நகரும் போது தொங்கி போன முகத்தோடு ரோட்டை பார்த்து நிற்பவள் மேல் லேசான கரிசனம் வர,

 “நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா பிரவீனா?…”

 அவனை பார்த்தவள், “வேணாம் சார். நான் போய்ப்பேன்…” என்று சாந்தமாக சொன்னவள்,

  “வேலியில போற ஓனானை எதுக்கு வேட்டிக்குள்ள விடணும்…” என்று முனங்கி கொண்டாள்.

  “என்ன சொன்னீங்க பிரவீனா…” என்றான் மித்ரன்.

  “ஒன்னுமில்லை சார்…”

  “நீங்க எப்பவும் சேலை தான கட்டுறீங்க…” என்றான் சீரியசாக.

  “ஆமா சார், ஏன்?..”

“அப்ப பழமொழியை மாத்தி சொல்லுங்க…” என்று நக்கலாக சொல்லி நகர,

  என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் விழித்தவள், புரிந்ததும்…

 “இடியட்.. மாமா, சொன்ன மாதிரி இவன் ரொம்ப டெஞ்சார். தள்ளியே நில்லு பிரவீ… இவன் ஒரு ஆளுன்னு, இவன் கூட சேர்ந்து வேலை பார்க்க விட்டையே முருகா…” புலம்பிய படி நின்று இருந்தாள் பிரவீனா.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!