Skip to content
Post Views: 8,017
வந்ததில் இருந்து கோவர்த்தனுக்கு குடிக்கவும், பெண்களை நோட்டமிடவும் தான் நேரம் சரியாக இருந்தது. அவன் பார்வை சைட் அடிப்பதாகவும் இல்லை, ஜொள்ளு விடுவதாகவும் இல்லை. புதிதாக ஒரு இடத்துக்கு சென்றால், அங்கிருப்பதை எப்படி ஆசையாய் பார்ப்போமோ அப்படி தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனிடம் ‘பார்க்காதே’ என்று சொல்ல முடியாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள் வாணிலா.
Advertisement
அவளுக்கும் ஏதாவது குடிக்கலாம் போல தான் இருந்தது. முதல்முறை போல எக்குத்தப்பாக ஆகிவிடுமோ என்றஞ்சி அவள் அமர்ந்திருக்க, அவள் முகத்தை கூட பார்க்காமல், “லெமன் ஜூஸ்ன்னு நினைச்சு வோட்காவை முழுங்கிடாத… நானே இன்னைக்கு ஒரு ஸ்டெப் அதிகமா போயிட்டேன்… நீ தான் டிரைவ் பண்ணனும்” என்றான்.
Advertisement
விழி விரித்து திரும்பியவள், அவனை மேலும் கீழுமாய் பார்க்க, அவனிடம் எந்தவித மாற்றமுமில்லை. அத்தனை இயல்பாக இருந்தான். கண்கள் மட்டும் அவளிடம் திரும்பவே இல்லை. அதுநேரம் வரை அவன் பெண்களை ரசித்துக்கொண்டிருக்கிறான் என நினைத்து கடுப்பில் இருக்க, அவனோ போதையில் சிக்கிக்கொண்டிருந்துருக்கிறான்.
Advertisement
“கோ… என்ன பாருங்க!” அவள் அழைக்க, அவன் திரும்பவில்லை.
Advertisement
அவன் தாடையை பிடித்து அவளே திருப்ப, சேரில் இருந்து தள்ளாடினான். பதறிப்போனாள் அவள்.
“ஏய்ய்ய்ய்…” அவள் பிடித்து அமர வைத்தாள்.
அமர்ந்ததும் மீண்டும் கையில் இருந்ததை அவன் பருக, “போதை ஏறுதுன்னு தெரியுதுல? அப்புறம் ஏன் குடிக்குறீங்க இன்னும்?” பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டாள்.
“நல்லா இருக்கு…” அவன் சொல்லும்போதே கண்கள் சொக்கியது.
“ஒரு பொண்ணோட வெளில வந்துருக்கீங்க… இப்படி தான் செய்வீங்களா கோ? ஐ’ யம் ரியலி டிசப்பாயின்டட்!” அவனை இப்படி பார்க்க பிடிக்கவே இல்லை அவளுக்கு.
“இது என்னன்னு தெர்ல நிலா… குடிச்சோன ஏறாம மெதுவா மண்டைக்கு ஏறுது… இட் பீல்ஸ் குட்! பர்ஸ்ட் டைம் தெரியுமா?” என்றான் வாய் கூட குழராமல்.
முகத்தை சுளித்தபடி திரும்பிக்கொண்டாள் வாணிலா. அப்போதும் கையில் இருந்ததில் மிச்சமிருந்த ஒரு மிடரை விழுங்கிவிட்டே நிறுத்தினான் கோவர்த்தன். அது அவளை இன்னமும் கோவப்படுத்தியது.
“கடைசியா இந்த அளவு குடிச்சு பத்து வருஷம் இருக்கும். அது மட்டமான சரக்கு. அடிச்சு காலி பண்ணிடுச்சு! அப்புறம் இப்போ தான் குடிக்குறேன்…” என்றான் அவனே.
அவள் பதில் சொல்லவில்லை.
“அப்போ ரொம்ப மனசு கஷ்டம்… குடிச்சேன்! இப்போ சந்தோசமா இருக்கேன். குடிச்சேன்!” சொல்லிவிட்டு அவளை பாராமலேயே அவள் கரத்தை பற்றிக்கொண்டான் கோவர்த்தன்.
அவள் கோவத்தில் கையை விலக்கபார்க்க, தலையை மட்டும் அவள் புறம் சாய்த்து, “எனக்கு உன்னை எவ்….ளோ பிடிக்கும் தெரியுமா?” என்றான் கரகரத்த குரலில். அதில் உறைந்தாள் அவள்.
“எனக்கு முக்கியத்துவம் குடுக்குற, என்னை மட்டுமே முக்கியமா நினைக்குற ஒருத்தர்… எனக்கே எனக்கா மட்டும் வேணுன்னு சின்ன வயசுல இருந்தே ஆசை! தெரியுமா?” என்றவனிடம் கேள்வி கேட்கக்கூட தோன்றவில்லை அவளுக்கு.
“அம்மாவை கட்டிப்பிடிச்சு தூங்கனும்… அப்பாக்கூட வண்டில சுத்தணும்… அக்காக்கு பிடிச்ச தம்பியா நான் தான் இருக்கனும்… அண்ணாக்கூட கிளோஸ்ஸா நான் தான் இருக்கணும்… தங்கச்சிக்கு ஒண்ணுன்னா அவ என்னை தான் முதல்ல கூப்பிடனும்… தம்பி நான்தான் அவனை தூக்கனும்ன்னு அழனும்… என் அத்த பொண்ணுங்களுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கணும்… இப்படி நிறைய நிறைய!!!” சொல்லிவிட்டு நிறுத்தியவன்,
“கேக்க அல்பமான ஆசையா தெரியும். வீட்டுக்கு நடு புள்ளையா பொறந்துட்டு இது எதுவுமே எனக்கு அமையல… எல்லாத்துக்கும் போட்டி! விட்டுக்குடுத்து விட்டுக்குடுத்தே கடைசில வீட்டை விட்டே வந்துட்டேன்” என்றான்.
அவள் பேசப்போக, அடுத்து அவன் சொன்னதில் பேச்சே நின்றுப்போனது அவளுக்கு.
“எனக்குன்னு ஒருத்தி வந்தா… நீ தான் முக்கியம்ன்னு சொன்னா… நம்புனேன்!” என்று அவன் நிறுத்த, பெண்ணவளின் கண்களில் நொடிப்பொழுதில் மின்னி மறைந்தது அவன் கன்சல்டிங் ரூமில் இருந்த கவிதைகள்.
அந்நேரம் வானிலாவின் அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர, வேகமாய் துண்டித்தாள். பேசும் நிலையில் எல்லாம் இல்லை அவள்.
“டுவல்த் முடிச்சுட்டு வெளிநாட்டுல மெடிசின் பண்ண என்ட்ரன்ஸ் எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருந்தேன். சென்னைல ஒரு ஃபேமஸ் இன்ஸ்டிடியூட்! அங்க தான் அவளை பார்த்தேன். ரொம்ப அழகு!” அவன் சொன்னபோது, இங்கே பெண்ணின் முகம் சுணங்கியது.
“அவளே தான் பேசுனா… நானும் பேசுனேன்! பிடிச்சுது… பழகுனோம்! அவ மெடிசின் பண்ண கனடா போனா… நான் இங்க வந்தேன்! அப்போ இன்டர்நேஷனல் கால்ஸ் எல்லாம் அவ்ளோ அஃப்போர்டபில் இல்லையே! ஈ-மெயில்ஸ் மட்டும் தான். ரெண்டு வருஷம் ஈ-மெயில்ஸ் ல பேசிக்கிட்டோம். அப்புறம் ஆன்லைன் ஃபோன் கால்ஸ். அப்டியே படிப்பை முடிச்சேன். அவளும் முடிச்சா!”
அப்போதும் மீண்டும் வானிலாவின் அலைபேசி சிணுங்க, “பேசிடு!” என்றான் கோவர்த்தன். பேசவே விருப்பமில்லை என்றாலும், இந்திய எண்ணாக வர, “ஹலோ” என்றாள் எடுத்ததும்.
மறுமுனையில் மிக மிக சன்னமான குரல் கேட்டிட, “ஹெலோ கேக்கல” என்றாள் வாணிலா. கிளப்பில் வேறு பாடல் சத்தமாக ஒலிக்க, போனில் வரும் மெல்லிய குரல் அவளை எட்டவில்லை.
“ஹ…ல்லோ… நான்… நான் ரேகா!”
“புரில… ரேகா’வா?” வாணிலா கேட்டதும், “ஆமா!” என்றது அந்த குரல்.
“எனக்கு அப்படி தெரியாதுங்க!” அவள் சொல்ல, “நான் சுரேஷ் வைஃப்” என்றாள் அவள்.
இங்கே கோவர்த்தன் இன்னொரு காக்டெயிலுக்கு கைதூக்க அவனை தடுக்க வேண்டி, “சாரிங்க அப்டி யாரும் தெரியாது, ராங் நம்பர்” என்றுவிட்டு உடனே அழைப்பை துண்டித்தாள். அதோடே அந்த எண்ணை ‘ப்ளாக்’ லிஸ்டிலும் போட்டாள். அவள் அன்னை காஞ்சனாவின் வேலையாக இருக்குமோ என்ற ஐயம்!
காக்டெயிலை வாங்கியவனிடம் இருந்து அதை பறித்து ஓரம் வைத்தவள், “நான் தனியா கிளம்பிடுவேன் கோ!” என்று மிரட்ட, ‘சாரி’ என்றுவிட்டான் அவன்.
“இப்ப நீ இருக்க… அன்னைக்கு என்னை குடிக்க வேண்டாம்ன்னு சொல்ல யாரும் இல்ல தெரியுமா?” என்றான்.
“யாரும் இல்லன்னா… குடிக்கனுமா என்ன?” கோவமாய் கேட்க நினைத்தாலும் அவளுக்கு வரவில்லை. அவன் கரத்தினுள் சிக்கியிருந்த அவள் கரம் உணர்ந்த வெப்பம், அவளை குளிர்வித்தது உண்மை.
“ப்ச்… என் கனவே வேற அப்போ! என்னை ஒரு பொண்ணு பயங்கரமா லவ் பண்ணனும், அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சொந்தக்காரங்க முன்னாடி கெத்தா வாழணும்ன்னு ஆசை. அவளை அப்படி தான் நினைச்சுருந்தேன்… கனவு கண்டுருந்தேன். ஆனா அவ கனவு வேறயா போச்சு! அவளுக்கு வேற ஒருத்தனை அங்க பிடிச்சுருந்துதாம். அமெரிக்கால செட்டில் ஆன டாக்டர் பையன். என்னை வேண்டாம்ன்னு சொன்னா… நான் திட்டல, சண்டை போடல… ஜஸ்ட் ‘குட் பை’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான்.
அவனிடம் இப்போதும் வருத்தம் தெரிகிறதா என அவன் முகத்தை ஆராய்ந்தாள் வாணிலா. நல்லவேளையாய் அப்படி ஒன்றும் தெரியவில்லை.
“என்னை மட்டுமே முக்கியமா நினைக்குற ஒருத்தி வேனுங்குறது தான் என் கனவே! அதுவே இல்லன்னு ஆன பிறகு எதுவும் பேச வரல… ஆனா மனசெல்லாம் ரொம்ப வலி. காட்டுத்தனமா குடிச்சேன் அன்னைக்கு. படிப்பை முடிச்சுட்டு வந்த புதுசு. அவளை பாக்கணும்ன்னு சென்னை போயிருந்தேன். நடு ரோட்ல நாயோட நாயா இருந்தேன்…” என்றுவிட்டு சின்னதாய் சிரித்தான்.
“என்கிட்டே இல்லன்னு அவ நினைச்சதை இருக்குன்னு காட்ட தான் இங்கேயே வேலைக்கு வந்தேன். காசு சேர்த்தேன். செட்டில் ஆனேன். ஆனா மனசுல எங்கேயோ ஒரு ஓரத்தில் ‘இதுக்கெல்லாம் அவ காரணம் இல்ல’ ன்னு ஒரு குரல் கேக்கும்.
நான் நினைச்சுருந்தா வேற பொண்ணுங்களை பார்த்துருக்கலாம். இந்நேரம் ஒரு பர்பெக்ட் பேமிலிய கிரியேட் பண்ணிருக்கலாம். ஆனா நான் செய்யல. செய்யத்தோனல” எங்கோ பார்த்து சொல்லிக்கொண்டிருந்தவன் சட்டென அவள் புறம் சரிந்தான்.
“இப்ப தோணுது… உன்னை பார்த்த பின்னாடி தோணுது…!
உன் மடில கிடந்து சாகனும்ன்னு தோணுது.
உன்னை மூச்சுக்கு திணற வைக்கணும்ன்னு தோணுது.
இதுவரைக்கும் நான் செய்யாம இருக்க ஒன்னை உன்கிட்ட செஞ்சு பாக்கணும்ன்னு தோணுது.
உன்னோட எல்…லாமா நானே இருக்கனும்ன்னு தோணுது…
உன் அக்காவை விட உனக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கனும்ன்னு தோணுது…
நான் இல்லாம நீ இருக்கவே கூடாதுன்னு தோணுது, அதுக்காக உன்னை என் கைக்குள்ளையே வச்சு இறுக்கிக்கணும்ன்னு தோணுது. இன்னும் என்னென்னவோ தோணுது…!” உணர்ச்சி வேகத்தில் மூச்சு வாங்க சொல்லி நிறுத்தினான் கோவர்த்தன்.
தன்னை தீண்டிக்கொண்டிருக்கும் அவன் கரத்தின் வெம்மை அவளை குளிர்வித்ததை தாண்டி மெல்ல சூடேற்றியது. அவன் வார்த்தைகளில்… ஸ்பரிசத்தில் திணறிப்போனாள் அவள்.
அவள் கழுத்தில் தன் தாடையை அழுந்த ஊன்றியவன், “சொல்லும்மா! உனக்கு என்னை பிடிக்குமா? என்னை மட்டுமே பிடிக்குமா?” என்று கேட்டான். அவளுக்கு எங்கே வார்த்தை வந்தது? காற்றுக்கூட வரவில்லை. உள்ளே படபடவென அடித்துக்கொண்டது.
“எனக்கு தெரியும், உனக்கு என்னை பிடிக்கும்! ஆனா இது எனக்கு பத்தவே பத்தாது. என் எதிர்ப்பார்ப்பு ரொம்ப்ப்பாஆஆ பெருசு…! அன்கன்டிஷனல் லவ்’ தெரியுமா? அப்படி வேணும் எனக்கு!!!”
“சரி போலாம் கோ, டைம் ஆச்சு” தன்னை சமாளித்து அவனை பார்க்காமல் சொன்னாள்.
“நீ பதிலே சொல்லல நிலா”
“வீட்டுக்கு போலாம்!!!” அழுத்தி சொன்னவளை மீறாமல் எழுந்து நின்றான். தலை அவனுக்கு முன்னே நான்கு சுற்று சுற்ற தடுமாறி விழப்பார்த்தவனை அணைத்துப்பிடித்தாள் நிலா. படபடப்பெல்லாம் நொடியில் மறைந்து கடுப்பு வந்தது அவளுக்கு.
“உன்னை நம்பி வந்தேன் கோ… எப்படி பண்ற பாரு நீ” திட்டிக்கொண்டே அவனை முடிந்தமட்டும் தாங்கியவள் அங்கிருந்து மெல்ல நடத்திக்கொண்டு போனாள்.
கண்ணில் எதிர்ப்படும் அத்தனை பேருமே போதையின் பிடியில் தான் இருந்தனர். பேச்சு குழறல் இல்லை. கெட்ட வாடை இல்லை. இந்த லேசான தள்ளாட்டம் மட்டும் இல்லையென்றால் கோவர்த்தன் குடித்திருப்பதை கண்டே பிடிக்க முடியாது.
வாசலுக்கு போகும் டனல் போன்ற குறுகிய வழியில் புகை மூட்டத்தை கிளப்பிக்கொண்டு ஆங்காங்கே சிலர் இருக்க, அவர்களை தாண்டி மெல்ல அவனை அழைத்து சென்றுக்கொண்டிருந்தாள் வாணிலா.
அப்போது அவள் பின்னிருந்து ஒருவன், “ஹே பேப்” என்ற குழறலோடு கைப்பிடிக்க வர, அவன் தொட்டுவிடாதபடி துள்ளி நகர்ந்தாள் அவள். அதில் சுவாரசியமானவன் மீண்டும் அவளை தொட நெருங்க, அடுத்த நொடி அந்த கண்ணாடி டனலில் அவன் ஒருபக்க முகம் ரத்தம் வடிய ஒட்டிக்கொண்டது.
ஸ்தம்பித்துப்போனாள் வாணிலா.
“என்ன பண்ற கோ?” பதட்டமாய் அவள் நிற்க, தலையை வேகவேகமாய் உலுக்கினான் கோவர்த்தன்.
“குடிச்சுருக்கக்கூடாது!” அவனே சொல்லிக்கொண்டான். அந்த புகைமூட்டத்தில் இப்படி ஒன்று நடந்ததே யார் கவனத்தையும் கவரவில்லை.
“குடிக்கலன்னா அடிச்சுருக்க மாட்டீங்க! இப்ப பாரு… எதாவது பிரச்சனைன்னா…” அவள் பதறியபடி அவனை இழுத்துக்கொண்டு பார்கிங்கிற்கு விரைந்தாள்.
காருக்குள் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்ப, மனமெங்கும் பதட்டம். அவனுக்கு எதாவது என்றால் கோவர்த்தன் மாட்டிக்கொள்வானே என்று. அவனுக்கு அப்படி ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. அடித்தவனுக்கு தெரியுமன்றோ அடியின் அளவு! அதனால் இயல்பாக தான் இருந்தான்.
அவள் தான் ஏகத்துக்கும் பதறினாள். மறுநாள் விடிந்தும் அவள் பதட்டம் போகவில்லை. போலீஸ் தான் வந்துவிட்டதோ என அடிக்கடி வாசலை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மருத்துவமனை சென்றும் கூட அடிக்கடி அழைப்பாள். அவனுக்கு எந்த இடரும் வரக்கூடாது என்பது அவள் வேண்டுதலாய் இருந்தது.
நாட்கள் சென்றாலும், அவன் பாரில் பேசியதை தெரிந்தது போல அவள் காட்டிக்கொள்ளவே இல்லை. அவனுக்கு என்ன பேசினோம் என தெளிவாக தெரியாவிட்டாலும், மனதை சொல்லிவிட்டோம் என்பது வரை உணர்ந்திருந்தான்.
அவன் சொன்னதற்கு பதில் சொல்லாமல், தன் பதிலை அதை செய்கையில் காட்டும் அவள் அன்பிற்குள் அமிழ்ந்துப்போக தொடங்கினான் கோவர்த்தன்.
error: Content is protected !!