ஸ்பானிஷ் மொழி பயிற்ப்பிக்கும் வகுப்பின் வாசலில் வந்து நின்றனர் கோவர்த்தனும் வானிலாவும். இரண்டு மாத கோர்ஸில் எளிதில் ஸ்பானிஷ் பயின்றுக்கொள்ள வானிலாவை சேர்த்துவிட அழைத்து வந்திருந்தான் கோவர்த்தன்.
உள்ளே சென்று விவரங்கள் கேட்டு, தொகையை கட்டி அவளுக்கு அட்மிஷன் போட்டுவிட்டு வெளியே வர, “கண்டிப்பா நான் கத்துக்கணுமா?” என்றாள் வாணிலா. அவளுக்கு ஸ்பானிஷ் பயில்வதில் விருப்பமே இல்லை.
Advertisement
“இந்த நாட்டுல இருக்கணும்ன்னா இங்க இருக்க மொழியை கத்துக்கிட்டு தானே ஆகணும்?” அவன் கேட்க, “ப்ச்… நான் அமேரிக்கா போறேன்” என்றாள் முகத்தை திருப்பி.
“எனக்கு உங்கக்கூட இருக்கனும்ன்னு அன்னைக்கு டைலாக் அடிச்ச? அதெல்லாம் சும்மாவா அப்போ?” அவன் சட்டென கேட்டதும், ‘ஸ்ஸ்’ என உதட்டை கடித்துக்கொண்டாள் பெண்.
Advertisement
Advertisement
‘லூசு மாறி எதாவது உளறிட்டு மாட்டிக்குற டி நீ’ தன்னை தானே திட்டிக்கொண்டாள்.
“சிலதெல்லாம் பிடிக்கலன்னாலும் செஞ்சு தான் ஆகணும் நிலா. ரெசிடென்சி’க்கு அப்ளை பண்ணிட்டேன். அந்த ப்ராசெஸ் இனிமே இருக்கும். இந்த நாட்டு மொழி உனக்கு தெரியலன்னா மார்க்ஸ் கம்மியாகும்” அவன் பொறுமையாய் எடுத்து சொல்ல, “சரி சரி! கத்துக்குறேன்” என்றாள் வாணிலா முகத்தை சுருக்கி.
Advertisement
“இல்ல, உனக்கு நிஜமாவே இங்க வேண்டாம்ன்னா நீ வேற நாட்டுக்கு கூட வொர்கிங் விசா அப்ளை பண்ணலாம். அமெரிக்கா’ன்னா கூட எனக்கு ஆள் இருக்கு அங்க” அவன் சீரியஸாக சொல்ல, இவளுக்கு சுறுசுறுவென ஏறியது.
அவன் விளையாடுகிறானோ என்று முகம் பார்க்க, அவன் முகத்தில் துளியும் விளையாட்டில்லை.
பதில் சொல்லியே ஆக வேண்டும் போல பாவனையில் அவன் வானிலாவின் முகம் பார்த்து நிற்க, “எனக்கு இங்க வேண்டாம்ன்னு சொன்னா ‘போ’ன்னு விட்டுடுவீங்களா?” என்று கேட்டாள்.
ஒரு கணம் கூட யோசிக்காமல், “கண்டிப்பா!” என்றிருந்தான் கோவர்த்தன். திகைத்து நின்றுவிட்டாள் வாணிலா.
இருவரும் தங்கள் திருமணத்தை பதிந்து அன்றோடு பத்து நாட்கள் கடந்திருந்தது. ஒரே அறையில் புழங்கினாலும் வாணிலா முன்பை போல அவனிடம் நெருங்கி பழகுவதில்லை. கோவர்த்தன் நெருங்கி வந்தாலும் அவள் பிடி கொடுக்கவில்லை. ஒன்றாக அமர்ந்து உண்ணுவது, கதை பேசுவது என்றிருந்த அவர்களுக்கான நேரங்களில் கூட முன்பை போலன்றி வாணிலா ஒதுக்கம் காட்ட யோசனையானான் கோவர்த்தன்.
அதன் வெளிப்பாடு தான் இப்போது அவள் சொன்ன வார்த்தையை இலகுவாய் எடுக்க விடாமல் பதில் சொல்ல வைத்தது அவனை.
“சும்மா ஏதாவது உளறாதீங்க” என்றவள் விறுவிறுவென காருக்குள் சென்று அமர்ந்துவிட்டாள். சில நொடிகள் அங்கேயே நின்றவன் பின் பொறுமையாய் நடந்து காரை அடைந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான். அவள் அவனை பார்க்கவே இல்லை.
சிரித்து சிரித்து பேசும் குணத்தையே பார்த்து பழகியிருந்தவளுக்கு அவனது இந்த தீவிரமான முகம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அவளுடன் அதே வீட்டில் உரிமை இல்லாமல் யாரோ ஒருவனாய் இருந்தபோது ஒன்றும் தெரியவில்லை. இப்போது ‘மனைவி’ என ஆனபின்பு அவன் மனம் எதையெதையோ எதிர்ப்பார்கிறது.
‘விவாகரத்து’ தருகிறேன் என்று சொல்லி தான் இந்த திருமணமே பதிவு செய்யப்பட்டது என்றாலும், அதை அவன் விளையாட்டாக மட்டும் தான் சொன்னதே! அவளும் அப்படி தான் என்று தான் நினைத்திருந்தான். அந்த மனோதத்துவ நிபுணனின் மனது அடித்து சொன்னது அவள் மனதில் அவன் ஸ்திரமாய் இருக்கிறான் என்று! அந்த திடத்தில் தான் அவன் இத்தனை தூரம் இதை கொண்டு சென்றதே!
இப்போது ‘இல்லையோ’ என்ற ஐயம் எழுந்தது. பெண்கள் மனதை படிக்க மனோதத்துவம் பயின்றாலும் பலனில்லையோ என்று தோன்றியது. அப்படியே அமர்ந்திருந்தவன் நேரமாகவும் எழுந்து உள்ளே சென்றான்.
அவன் ஜாகையை அவள் அறைக்கு அடியோடு மாற்றிக்கொண்டதால் நேரே அங்கே தான் சென்றான். அவள் வேறு உடைக்கு மாறி பால்கனியில் நின்று எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். தானும் மாற்றுடையோடு குளியலறைக்கு சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தான்.
இது இருவரும் ஒன்றாக காஃபி அருந்தும் நேரம். எப்போதும் அவன் தான் மணக்க மணக்க போட்டு வந்து கொடுப்பான். சில நேரம் காஃபி ‘டீ’யாக மாறியிருக்கும்.
இப்போதும் போட்டுக்கொண்டு வர தோன்றியது. ஆனாலும் விருப்பமில்லாத ஒருத்தியை தான் கட்டாயப்படுத்துகிறோமோ என்று எண்ணம் எழுந்தது. பெற்றவர் மேலுள்ள கோவத்தில் வேறு நாட்டுக்கு வந்து, நெருங்கிய உறவை இழந்து, அந்த வருத்தத்தில் தோள் சாய நட்பின்றி தனித்திருந்தவளுக்கு, அந்நிய நாட்டில் ஒருவன் அன்பாய் பேசியதும் இயல்பாய் வந்த பிடித்தத்தை தான் ‘காதல்’ என்று எண்ணிவிட்டோமோ!? என்று கூட பயம் எழுந்தது.
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியனுக்கே பைத்தியம் பிடித்த நிலை தான் அவனுக்கு.
எதையும் மனதில் வைத்து அழுத்தி பழக்கம் இல்லாதவன், வெளிப்படையாய் பேசியே பழக்கப்பட்டவன், இப்போதும் அந்த வழியை தான் தேர்ந்தெடுத்தான். அடுத்த கணம் பால்கனியில் நின்றவளின் எதிரே சென்று நின்றான்.
“நிலா, உன்கிட்ட பேசணும்” அவன் ஆரம்பிக்க, முகத்தை சுருக்கிக்கொண்டு மறுபக்கம் திரும்பினாள் வாணிலா.
அவள் செய்கையில் தான் பேசியே ஆக வேண்டும் என்று திண்ணமாய் எண்ணியவன், “உனக்கு என்னை பிடிக்கவே இல்லையா நிலா?” என்றான்.
திரும்பி அவன் முகம் பார்த்தவள், ‘இதென்ன கேள்வி?’ என்று பார்வையால் கேட்க, “எனக்கு இந்த பார்வை எல்லாம் வேண்டாம் வாணிலா. கேக்குறதுக்கு ஓபனா பேசிடு” என்றான். அவனிடம் இதுவரை அவள் காணாத தீவிரம்.
“இப்ப எதுக்கு அதெல்லாம் கேக்குறீங்க?” அவள் கேட்டதும், “நான் என் மனசுல இருந்ததை உன்கிட்ட சொல்லிட்டேன்னு எனக்கு தெரியும். அதை கேட்டும் நீ இன்னும் பதில் சொல்லல. உனக்கு என்னை பிடிக்கும்ன்னு நானாவே நினைச்சுக்கிட்டேன். உண்மையா சொல்லனும்ன்னா ஓவர் கான்பிடன்ஸ்…” என்றவன் தலையை அழுந்த கோதிக்கொண்டான்.
“உன் அக்காவோட கல்யாணம். அதுக்கு பிறகு அவங்களோட மரணம், உனக்கு ஏற்ப்பாடு செஞ்ச கட்டாய கல்யாணம்… இதெல்லாம் உன் மனசுல ‘கல்யாணம்’ன்னாலே ஒரு அலர்ஜி ஃபீல்ல உருவாக்கியிருக்கும்” அவன் சொல்ல, அவள் புருவங்கள் திகைப்பில் மேடேறின. அது ‘உண்மை தானே’.
“அதனால தான் உன்னை கம்போர்ட் பண்ண ஏதேதோ பேசி மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ண வச்சேன். மேரேஜ் லைஃப்’ப நீ எக்பீரியன்ஸ் பண்றப்போ உன்னோட அலர்ஜி போய்டும், அதுக்கு அப்புறம் வீட்ல சொல்லி முறையா கல்யாணம் பண்ணலாம்ன்னு யோசிச்சு வச்சுருந்தேன்.
நீ ‘டிவோர்ஸ்’ வேணுன்னு கேட்டது கூட உனக்குள்ள கல்யாண வாழ்க்கையை நினைச்சு இருக்க பயம் தான், கொஞ்ச நாள்ல அது சரியாகிடும்ன்னு தோனுச்சு” அவன் சொல்லிக்கொண்டே போக, அவன் தன்னை எந்த அளவுக்கு ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான் என்று வியந்தாள் அவள்.
“இப்ப பயமா இருக்கு நிலா!” அவன் சொன்னது மட்டுமல்லாமல் அந்த ‘பயம்’ அவன் முகத்திலும் தெரிய, இவளுக்கு உள்ளே தவித்தது.
“என்கிட்டே இயல்பா பேசக்கூட வர மாட்டேங்குது உனக்கு. ஒதுங்கி ஒதுங்கி போற! எனக்கென்னவோ நீ என்னை ‘ஹஸ்பன்ட்’ங்குற இடத்துல வச்சு பாக்குறியோ? அதனால உனக்கு என் மேலயும் அந்த ‘அலர்ஜி ஃபீல்’ வந்துடுச்சோன்னு பயமா இருக்கு” என்று சொல்ல, அவள் அந்த அளவுக்கு எல்லாம் நினைக்கவே இல்லை.
“இல்ல கோ…” அவள் மறுக்க வர, “உனக்கு நிஜமா என்னை பிடிச்சுருந்தா என் கூட இரு நிலா. இல்லனா நான் உன்னை கட்டாயப்படுத்தல. உனக்கு எங்க பிடிக்குமோ? எங்க ஓகே’வோ அங்க நான் விட்டுடுறேன்!” என்று வேகமாய் சொன்னவன்,
“எனக்குன்னு நிறைய ஆசை இருக்கு வாணிலா. எனக்கே எனக்குன்னு ஒருத்தி வேனுங்குறது என்னோட ‘பேராசை’ன்னு கூட சொல்லலாம். இத்தனை வருஷம் எனக்கு தோணாத ஒன்னு, உன்னை பாத்த பிறகு தான் தோனுச்சு. என்னவோ என்னால உன்னை விடவே முடில. உன்னை ‘பிரன்ட்’டா பார்த்தப்போ எதிர்ப்பார்ப்பில்லாம பழக முடிஞ்ச என்னால, இந்த பத்து நாளா உன் ஒதுக்கத்தை சத்தியமா தாங்கவே முடிலடி!” இறுதிவரியை அத்தனை கலக்கமாய் சொன்னான் கோவர்த்தன்.
“என் எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்கு உன்கிட்ட. உள்ள கடக்குற ஆசை எல்லாம் வெளில வருது” என்றவன், சில நொடிகள் பொறுத்து, எச்சில் விழுங்கி, “என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாது நிலா. ஒடஞ்சு போய்டுவேன். அதே நேரம் விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி கூட வச்சுக்கவும் முடியாது. எதுவா இருந்தாலும் மியூசுவலா பேசிடலாம்” கரகரத்த குரலில் சொன்னான்.
“நீ எடுக்குற எந்த முடிவா இருந்தாலும் ஓகே எனக்கு. இதுக்கும் உன்னோட ரெசிடென்சி’க்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீ ப்ரீயா யோசி!” என்றவன்,
“என்னையும் மனசுல வச்சு யோசிடி!” கலங்கும் கண்களை மறைத்து, அவன் குரல் வெட்கமின்றி கெஞ்சியது அவளிடம்.
வானிலாவுக்கு உணர்வுகள் செயலற்ற நிலை. தன்னை இத்தனை யோசிக்கும் இவனை விட யார் கிடைப்பார் எனக்கு? என்று பெருமிதம் எழ, அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று, இரு கைகளையும் இரும்பு கம்பியில் அழுத்தி பிடித்து, எங்கோ பார்த்தபடி நிற்கும் அவனை அள்ளிக்கொள்ள சொன்னது அவள் மனம்.
அவனிடம் தன் காதலை வெளிப்படுத்த இத்தனை நாட்கள் தயங்கி கண்ணாமூச்சி ஆடிய அவள் மனம், இந்த நொடியோடு அதை நிறுத்திவிடு என உத்தரவிட, மறுநொடி ஒருவித வேகத்தில், அவன் முதுகோடு சென்று இறுக கட்டிக்கொண்டாள் பெண்.
அப்பொழுது கூட தடம் புரளாமல் நின்றவன், “எமோஷனலா ஒரு முடிவு எடுக்காத நிலா… நல்லா யோசி, டைம் எடுத்துக்கோ” என்று சொல்ல, அவள் கைகளின் இறுக்கம் கூடியது அவன் உடலில்.
தடுப்பு கம்பிகளை பற்றியிருந்த அவன் விரல்கள் மேலும் அழுத்தம் கொடுத்து அவனை சமநிலைப்படுத்த முயன்றது.