Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 22 1

“என்ன இருந்தாலும் தூரத்து சொந்தம் தூரம் தான்… நெருங்குன சொந்தம் நெருக்கம் தான்” சடைவாக சொல்லிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தான் சுபாஷ். சுபாஷும் அவர்களுக்கு சொந்தம் தான் என்றாலும், நகுலன் அம்சவர்த்தினியின் அண்ணன் மகன். மற்றவர்களை விட நெருக்கம் தான்.

கோவர்த்தனும் நகுலனும் தனியே பேசிக்கொண்டு நிற்ப்பதை பார்த்ததும், இப்படி சொல்லிக்கொண்டே வந்த சுபாஷிடம், “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அயித்தான்” என்று இன்முகமாய் சொன்னான் கோவர்த்தன். அதன்பிறகு பேச்சு எங்கெங்கோ சென்றது.  பொதுவாய், ஊர் பற்றி, வேலை பற்றி, குடும்பம் பற்றி என அவர்கள் பேசிக்கொண்டிருக்க, வானம் நன்றாக வெளுத்திருந்தது.



Advertisement

மூவரும் வீட்டுக்குள் வந்தபோது, வீடே மணமணத்தது.

“ஆஹா, அத்தையோட கைப்பக்குவம் சுண்டி இழுக்குதே!” சுபாஷுக்கு இப்போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது. இவர்கள் பேசிக்கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில் பர்வதம் கோவர்த்தனின் அறையை சுத்தம் செய்திருந்தாள்.

Advertisement

Advertisement

“போடா… போய் குளிச்சுட்டு வேற உடுப்பு மாத்திட்டு வா” அவள் சொல்ல, “இன்னுமா ராகா எழுந்துக்கல?” என்றான் நகுலன் பர்வதத்திடம்.

“சடவா இருக்குன்னு ராத்திரி உலாத்திட்டு கடந்தா… மொள்ள எழுந்துக்கட்டும் என்ன இப்ப?” என்ற பர்வதம், “நீ போடா” என்றாள் மீண்டும்.

Advertisement

கோவர்த்தனுக்கு வாணிலா எங்கே? அவள் புது இடத்தில் தன்னை தேடுவாளே? அசௌகர்யமாய் உணர்வாளே?! என்றெல்லாம் தோன்ற, அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டுக்கொண்டு அந்த அறைக்கு சென்றான். வெறுமென சாற்றியிருந்த கதவை மெல்ல அவன் திறக்க, அங்கே தேக்கு கட்டிலில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள் அவன் பாதி.

அவள் தன் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டாளே என்ற மகிழ்வெல்லாம் அவனுக்கு இல்லை. தன்னை அவள் தேடவே இல்லையே என்ற ஆதங்கம் தான் அதிகரித்தது. அதுவரை முகம் அறியா பெண்ணின் நிலை பற்றி கலங்கியிருந்தவன் சித்தம் முழுக்க அவன் நிலா தான்.

சுணங்கிய முகத்தோடு மாடியில் தனது அறைக்கு சென்றான் கோவர்த்தன். அவன் எப்படி விட்டு சென்றானோ, அதேப்போல எந்த மாற்றமும் இன்றி துப்புரவாக இருந்த அறை அவனுக்கு ஆசுவாசம் கொடுக்கவில்லை. எதையோ இழந்ததை போன்ற பாரம். நெஞ்சை நீவிக்கொண்டான்.

அவளுக்கு உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்றுக்கூட அவனால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அதே நினைவோடு நேரம் போவது தெரியாமல் கிடந்தவன், வெளியே ஸ்ரிவர்த்தன், “ப்ரோ… சாப்பிட வாங்க” என்று கத்தவும், அவசரமாய் சென்று குளித்துவிட்டு இலகுவான உடைக்கு மாறிவிட்டு வந்தான்.

கீழே அவன் வரும்போது பட்டாலையில் (ஹாலில்) யாருமே இல்லை. மூன்றாம்கட்டில் (சமையல் அறையோடு சேர்ந்த கூடம்) தான் இருப்பார்கள் என்று தெரிந்து அவன் அங்கே போனபோது அவனைத்தவிர மொத்த குடும்பமும் கீழே வட்டமிட்டு அமர்ந்து உண்டுக்கொண்டிருந்தனர்.

இவனைக்கண்டதும், ராகவர்த்தினி எழப்பார்க்க, “உட்காரு டி… வெடுக்குன்னு எழுந்துரிக்காத” என்று அதட்டிய அம்ஸா, “ஒரு ஆம்பளை குளிச்சு முடிச்சு வர இவ்ளோ நேரமாடா?” என்றார். அவன் கண்கள் வானிலாவை தான் தேடியது. அவளுக்கு இருபக்கமும் ஹர்ஷவர்தன் மற்றும் பர்வதவர்த்தினியின் பிள்ளைகள்.

காலையிலேயே கன்று போட்ட மாடு ஒன்றிற்கு மருத்துவம் அளிக்க சென்றிருந்த ஹர்ஷவர்த்தன், அப்போதுதான் கோவர்த்தனை பார்த்தான்.

“டேய் வாடா, எப்படி இருக்க?” அவன் கேட்க, “நல்லாருக்கேன்” என்று சொன்னாலும் அவன் கண்கள் வானிலாவிடம் தான். அவள் அவனை பார்க்க நினைத்தாலும், அருகே பிள்ளைகள், ‘சித்தி’ ‘அத்தை’ என அவளை ஒரு நிமிடம் சும்மா விடவில்லை. கோவர்த்தனின் குடும்பமே அவளை அந்த வீட்டில் இயல்பாக ஏற்றுக்கொண்டது. என்னதான் கோவர்த்தனுடன் கிளம்பி வந்தாலும், மனதில் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. கிராமத்தில் இருக்கும் ஆட்கள் பையன் ஒரு பெண்ணுடன் வந்து நின்றால் அதை எப்படி பேசுவார்களோ என்று!

அவர்கள் அப்படி அவள் மனம் சுணங்கும்படி எதுவும் சொல்லாது இருந்ததே அவளுக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது. அந்த காலத்து ஆட்களான ஐயா, அப்பம்மா கூட அவளை வேறாக பார்க்கவில்லை. அந்த சந்தோசத்தில் அதற்கு காரணமானவனிடம் கவனம் வைக்க தவறிவிட்டாள்.

அவள் பார்க்கவில்லை என்றாலும், அவள் அருகில் அமர்வோம் என பிள்ளைகளை நகர சொல்ல போனவனை, “அண்ணா… என்கிட்ட வா!” என்று ஆசையாய் அழைத்தாள் ராகவர்த்தினி. வயிற்றில் பிள்ளையோடு அமர்ந்திருப்பவளை ஏமாற்ற தோன்றாமல் அமைதியாய் சென்று அவளோடு அமர்ந்தான்.

“எங்க வர மாட்டியோன்னு அழுகையா வந்துச்சு… அழுதா எல்லாரும் திட்டுவாங்களேன்னு சும்மா இருந்தேன்” கோவர்த்தனின் கையை பிடித்துக்கொண்டு ஆசையாய் சொன்னாள் ராகவர்த்தினி.

அம்ஸா, விஷ்ணு தம்பதியை பொறுத்தவரை கோவர்த்தன் வரைக்கும் தான் திட்டமிட்ட குடும்பம். அதற்குமேல் வந்த இரண்டும் அவர்கள் கணக்கிலேயே இல்லாதது. கோவர்த்தன் பிறந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் ராகவர்த்தினி அடமாய் வந்து பிறக்க, விட்டேனா என அடுத்த எட்டு ஆண்டுகளில் வந்தவன் தான் ஸ்ரிவர்த்தன். பிள்ளைகளின் வயது வித்தியாசம் எல்லாம் அப்போது பெரிதாக தோன்றவில்லை. ஏனென்றால், ஸ்ரிவர்த்தன் பிறக்கும்போது அம்சாவுக்கே முப்பத்து ஆறு வயது தான் முடிந்திருந்தது. நாற்பது வயதில் புது மாப்பிள்ளை போல கிண்ணென இருந்தார் விஷ்ணுவர்த்தன்.

அதனால் ராகவர்த்தினியும் ஸ்ரிவர்த்தனும் வீட்டின் இருக்கும் எல்லோருக்கும் எப்போதும் செல்லம் தான்.

கோவர்த்தனுக்கு தட்டை கொடுத்து, அதில் விதவிதமாய் அடுக்கினார் அம்சவர்த்தினி.

கல்கண்டு வடை, கந்தரப்பம், வெள்ளை பணியாரம், கார இடியாப்பம், உப்பு கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் என அவர் வைக்க, அம்மாவின் கைபக்குவத்துக்கு ஏங்கும் அவன் நாவு, இப்போது அசையவேயில்லை.

“பந்தல் போட ஆளுங்க வராங்கடா… வளைகாப்பு வச்சுருக்கனால கறி சமைக்க முடியாது. ரெண்டு நாளைக்கு காய்கறி தான்” மகனுக்கு பிடித்த உணவுகளை சமைக்க முடியவில்லையே என்ற வருத்தத்தோடு சொன்னார் அம்ஸா. அதெல்லாம் அவன் எங்கே காதில் வாங்கினான்? பார்வை எல்லாம் பாவை மீதே தான்.

சுபாஷ் தான் சப்புக்கொட்டி உண்டுக்கொண்டிருந்தான்.

“ராகா… உண்டுட்டு வீட்டை பார்த்து கிளம்பு… வளைகாப்பு முடிச்சு இங்க தான் வரப்போற? அதுவரைக்குமாது மாமன் வீட்டுல இரு” ‘செய்’ என்ற கட்டளை குரலில் சொன்னார் அம்ஸா.

“ம்ஹும்…ம்ஹும்… ம்மா?! அண்ணே வந்துருக்குல்ல? எப்படி நான் அங்க போவேன்?” உண்பதை நிறுத்திவிட்டு அவள் முகத்தை சுருக்க, “இது ஒரு சாட்டு உனக்கு” என்று முறைத்தார் அம்சா.

“இன்னும் அண்ணிக்கிட்ட நான் பேசவே இல்லம்மா… நாளைக்கு போறேனே” அவள் கேட்க, “தீபா… ரெண்டு பணியாரம் வச்சுக்கோ” மருமகளுக்கு கொடுத்தவர், வேறு யாருக்கு என்ன வேண்டும் என பார்க்க ஆரம்பித்தார். ராகாவை கண்டுக்கொள்ளவே இல்லை.

“அண்ணே… அம்மா ட்ட சொல்லு” கோவர்த்தனிடம் கிசுகிசுத்தாள்.

அவன் நகுலனை பார்க்க, சிறு சிரிப்போடு இவர்களை கண்டுக்கொள்ளாமல் உண்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு தெரியாதா அவன் மனைவியின் ஜால்ஜாப்பு!

“கொஞ்சம் தேங்காய்பால் ஊத்துக்கோ நிலா” அவளுக்கு அம்ஸா வைக்கப்போக, ‘போதும்’ என்று மறுக்க வந்தவள், வாயை மூடிக்கொண்டாள். அவளுக்கு காலையில் உண்பதே சிரமம் எப்போதும், இதில் இத்தனை பதார்த்தங்களை அம்ஸா வைத்ததும், வீண் செய்யாமல் உண்ண வேண்டுமே என்ற நினைவே அசௌகர்யம் கொடுத்தது. பிள்ளைகளின் பேச்சால் மனதை மாற்றி கொஞ்சகொஞ்சமாய் உண்ண ஆரம்பித்திருந்தாள். நான்கு வாய்க்கு மேல் போகப்போக குமட்டல் ஆரம்பித்திருந்தது. சமாளிக்க பார்த்தும் முடியவில்லை.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த கோவர்த்தன், “வெளில வா நிலா” என்று நொடியில் எழுந்து அவளருகே வந்து பின் வாசலுக்கு அழைத்து சென்றான். உண்டதை விட இருமடங்காய் ஓங்கரித்த பெண்ணுக்கு நிற்கவே முடியாமல் கால்கள் நடுங்கியது.

“என்னடா ஆச்சு?” வாசல்படிக்கட்டில் நின்று பதட்டமாய் குரல் கொடுத்த அன்னையிடம், “ஜெட் லாக் தான்ம்மா! நான் கூட்டிட்டு வரேன், நீங்க போங்க” என்றிருந்தான்.

அங்கேயே தண்ணீர் மொண்டுக்குடுத்து அவள் சுத்தப்படுத்திக்கொண்டதும், “கொஞ்சம் உக்காரு… அப்புறம் போகலாம்” என்றான். அவளும் மரத்தடி திட்டில் கண்ணை மூடி அமர்ந்துவிட்டாள்.

“பரவால்லையா கொஞ்சம்?” அவன் கேட்டதும், சோர்வோடு கண் திறந்தவள், “ம்ம்ம்… ரொம்ப டயர்டா இருக்கு கோ… ஏன் வாந்தி வருதுன்னே தெரியல…” என்றதும், “நான் தான் சொன்னேன்ல? நீ ப்ரெக்னன்டா இருக்க” என்றவனை முறைத்தாள் வாணிலா.

“சும்மா எல்லாம் தெரிஞ்ச மாறி பேசாத”

“நான் டாக்டர்… எனக்கு தெரியாதா?” அவன் கேட்க, “போடா போலி டாக்டர்” என்றுவிட்டாள். சலிப்பாக இருபக்கமும் தலையாட்டியவன், “இப்போ எதுவும் சாப்பிட வேண்டாம். கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரி” என்று சொல்ல, எழுந்தவள் வீட்டுக்குள் செல்லப்போக, “அப்படி வேண்டாம். எல்லோரும் இருப்பாங்க. சைட் டோர் வழியா போலாம் வா” என்று அழைத்து சென்றான்.

அவளுக்கென ஒதுக்கிய அறையில் அவளை படுக்க வைத்தவன், “கொஞ்ச நேரம் தூங்கு… சரியாகும்! நான் லெமன் ஜூஸ் போட்டு கொண்டு வரேன், அப்புறம் குடி” என்று போக, வாசல் வரை அவன் போன பின்பே நினைவு வந்தவளாக, “நீ இன்னும் சாப்பிடலையே கோ! போய் ஃபுல்லா சாப்பிடு” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!