Skip to content
Post Views: 7,304
வீட்டு வேலைகள் அத்தனையும் முடித்துவிட்டு தனது அறையில் வெறும் தரையில் சுருண்டிருந்தாள் ரேகா. அடிவயிறு இழுத்துப்பிடித்தது. அவள் இருந்த மனஉளைச்சலில், கணவன் தினமும் படுத்தும் பாடும் சேர, ஒரு வாரத்திற்கு முன்பே மாதவிலக்கு ஆகியிருந்தாள். எப்போதும் இருப்பதை விட இந்த முறை வலி அதிகமாக இருந்தது, ஆனால், அதைக்கூட உணர முடியாவண்ணம் அவள் மனம் வேதனையில் உழன்றது.
“ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு சென்றவன், இரவே புது உடைகளோடு வந்து, “இந்த வீக்கென்ட் ட்ரிப் போறோம்… உனக்கு வேனுங்குறது சொல்லு, வாங்கி தரேன்” என்றான். அவளுக்கு அந்த உடைகளை எடுத்து பார்க்கக்கூட ஆசையில்லை. அதற்கும் திட்டுவானே என்று பயந்து, அவள் எடுத்துப்பார்க்க, எல்லாமே வேறு மாதிரியாக இருந்தது.
Advertisement
“இ…இதெல்லாம் எப்டிங்க போடுறது?” தயங்கினாலும் அவள் கேட்டுவிட, “போடு, உடனே கழட்டிடலாம்” என்று கண்ணடித்தான் அவன். உடலே அருவருத்துப்போனதை போல ஆனது அவளுக்கு.
அவள் வயிற்றுவலியில் சுருண்டிருந்த போது கூட, “வீகென்ட் க்கு முன்ன முடிஞ்சுடும்ல? ப்ளான் ஏதாவது சொதப்புச்சு, உன்னை நானே கொன்றுவேன்” என்று மிரட்டிவிட்டு தான் வேலைக்கு சென்றிருந்தான்.
Advertisement
Advertisement
தன் நிலையை நினைத்துப்பார்த்து அழுதபடி இருந்தவள் திரும்பிப்படுக்க, பீரோவின் கால்களுக்கு அடியில் முன்பொருமுறை அவள் அவசரமாய் மறைத்து தள்ளிவிட்டிருந்த டைரி தென்பட்டது. வேகமாய் வெளியே எடுத்தாள்.
திலகா காலை நேர உறக்கத்தில் தான் இருந்தார். கணவன் வீட்டில் இல்லை என்ற தைரியத்தில் அதை பிரித்து பார்த்தாள். அழகான கையெழுத்துகளில் ‘தேனிலா சுரேஷ்குமார்’ என்று இருந்தது முதல்பக்கம். அதன் கீழே அவள் சொந்த குறிப்புகள், எமர்ஜன்சி என்ற இடத்தில் வானிலாவின் மெயில் ஐடி, வாட்சப் நம்பர் எல்லாம் இருந்தது. அவள் பிறந்த வீட்டின் விலாசத்தை தவிர, பெற்றோரின் குறிப்புகள் எதுவும் இல்லை.
Advertisement
ஏற்கனவே படித்தது தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை மனம் கனக்க திருப்பினாள். முதல் முறை இந்த டைரியை அவள் படிக்க நேர்ந்தபோது, ‘என்ன இவள் என்னென்னவோ எழுதியிருக்கிறாள்?’ என்று அதிர்ந்தாலும், கணவன் மேல் நம்பிக்கை இருந்தது. அப்போது அவளுக்கு தெரியவில்லை, இன்னும் சில நாட்களிலேயே தானும் தேனிலாவின் நிலைக்கு தள்ளப்படுவோம் என!
தேனிலா அடைந்த துயரங்களுக்கு சாட்சியாய் அவள் கையெழுத்தாவது இருக்கிறது… தான் மண்ணுக்குள் போனப்பின் என் கஷ்டங்களும் யாருக்கும் தெரியாமல் என்னுடனே போய்விடுமே என்று மறுகினாள். யாருக்கு தெரியும்? வேறொரு இளைத்த வீடாய் பார்த்து மகனுக்கு மூன்றாம் மணம் முடித்தாலும் முடிப்பார் தன் மாமியார் என விரக்தியாக எண்ணிக்கொண்டாள்.
தெளிவான கையெழுத்தில் இருந்த முதல் பக்கத்தை படித்தாள்.
“அப்பா, அம்மா விட்டு தனியா இருந்ததே இல்ல… இது தான் முதல் முறை! கொஞ்சம் பயமா இருக்கு. வாணிலா கூட சொன்னா, இவ்ளோ தூரத்துல எதுக்கு கட்டிக்கிட்டுப்போற? மாப்பிள்ளையை பிடிக்கலன்னு சொல்லிடுன்னு.
எப்படி சொல்லுவேன்? எனக்காக தேடி, அவங்க மனசுக்கு திருப்தியா ஒரு மாப்பிள்ளையை பார்த்துருக்காங்க என்னை பெத்தவங்க. நான் மாட்டேன்னு சொன்னா அவங்க மனசு வருத்தப்படாதா!?
அவங்க மனசு வருந்தாதபடி நல்லவிதமா என் வாழ்க்கையை அமைச்சுப்பேன் நான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”
இப்படி இருந்தது முதல் பக்கத்தில்.
“சுரேஷும் அவங்க அம்மாவும் ரொம்ப நல்லவிதமா இருக்காங்க. அத்தே என்கிட்ட ரொம்பவே பாசமா இருக்காங்க. இந்த வீட்டுக்கு நான் பழகணும்ன்னு எல்லாமே சொல்லித்தராங்க. சும்மா இருந்தா வீட்டு நியாபகம் வரும்ன்னு எதாவது ஒரு வேலை குடுத்து என்னை பிசியாவே வச்சுருக்காங்க.
சுரேஷ் தான் ரொம்ப மோசம். சொல்லவே வெட்கமா இருக்கு. என்னை ரொம்ப லவ் பண்றார் போல, ஒரு நாள் கூட தனியா விட மாட்டேங்குறாரு. இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வச்சுருக்கணும் நான்!”
இதைப்படித்த ரேகாவின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தது. ‘அவங்க உண்மையான குணத்தை கூட புரிஞ்சுக்க தெரியாத அப்பாவியா இருந்துருக்கா’ என்று இறந்தவள் மேல் இரக்கம் வந்தது. பக்கங்கள் வேகமாய் புரண்டன. கையெழுத்து கூட கிறுக்கலாய் இருந்தது. ஆங்காங்கே பேப்பர் சுருங்கி இருக்க, கண்ணீரின் தடம் என்று காட்டியது அது.
“நிஜமா எல்லாரும் இப்படி தான் வாழ்றாங்களா? இல்ல எனக்கு மட்டும் தான் இந்த கஷ்டமான்னு தெரியல எனக்கு. என்னை ஒரு ‘செக்ஸ் டாய்’ மாறி யூஸ் பண்றாரு. என்னால தாங்க முடில. கொஞ்சமும் பாசமே இல்ல என்மேல. அத்தே… அவங்க கூட ஒரு வார்த்தை கேக்குறது இல்ல. நான் கத்துனாலும் கதறுனாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. வேலை சொல்ல மட்டும் தான் பேசுறாங்க.
அப்பா, அம்மாகிட்ட சொல்லலாம்ன்னு தோணுது, அவங்க வருத்தப்படுவாங்கன்னு நினைச்சா கஷ்டமா இருக்கு, என்ன செய்யன்னு தெரியல”
தானும் இதே நிலையில் தான் இருக்கிறோம் என்று தோன்றியது ரேகாவுக்கு. தந்தை என்ற ஒற்றை ஜீவனுக்காக தானே பார்க்க வேண்டியதா இருக்கிறது என்று தோன்றியது. துணிந்து வெளியேற ஒரு நொடி போதுமா? அதன்பின்…?! வாழாவெட்டியாய் வந்த மகளை பார்த்து நொந்தே செத்துப்போவார் தந்தை. யார் தயவுமின்றி தன்னால் இந்த உலகில் காலம் தள்ளத்தான் முடியுமா? வருமானம் கூட கிடையாதே அவளுக்கென!!!
“அம்மா கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்… அவங்க வருவாங்க எனக்காக. எப்படியாது அவங்ககூடவே போய்டணும். நான் சொன்னா அம்மா அப்பா புரிஞ்சுப்பாங்க. எனக்கு விடுதலை கிடைச்சுரும்”
இது மட்டுமே ஒரு பக்கத்தில் இருந்தது. அடுத்த சில பக்கங்களில் ஒன்றுமில்லை. பின் வந்த பக்கத்தில், கிறுக்கலாய் இருந்தன எழுத்துக்கள்.
“நான் என்ன தப்பு செஞ்சேன்? எதுக்கு எனக்கு இப்படி ஒரு நிலைமை? பெத்தவங்க கூட என் வார்த்தையை நம்பல. நான் எவனையோ வச்சுருக்கேன்னு இந்தம்மா சொல்லுது, அதை அப்படியே நம்புறாங்க என் அம்மா.
தப்பே செஞ்சாக்கூட பிள்ளைங்களை விட்டுக்குடுக்காம தானே பேசுவாங்க எல்லாரும்?! தான் பிள்ளை சொல்றதை தானே நம்புவாங்க எல்லாரும்!? ஆனா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? இப்ப நான் என்ன பண்ணுவேன்!? எங்க போவேன்!? போக தான் முடியுமா? எனக்கு வெறுப்பா இருக்கே
எல்லாத்தையும் வாணிலா கிட்ட சொல்லி அழனும் போல இருக்கு. அவகிட்ட கூட என்னை பேச விடுறது இல்ல… அப்டியே பேசுனாலும் என்னன்னு சொல்லுவேன்? சின்னப்பொண்ணு அவ! அவளால என்ன செய்ய முடியும்?”
தன் நிலையே மோசமாக இருக்க, ரேகாவோ இறந்துப்போனவளின் நிலையை எண்ணி வருந்திக்கொண்டிருந்தாள்.
“நான் கர்ப்பமா இருக்கேன்னு என்னை பார்க்க என் அப்பா அம்மா வந்தாங்க. கூடவே வானிலாவும் வந்தா! அவளை பார்த்ததும் எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
நான் இங்க நல்லா இருக்கேனான்னு அவ மட்டும் தான் கேட்டா! சொல்லவா முடியும்? நான் நல்ல இல்லன்னு. இல்ல அப்படி சொன்னா மட்டும் எதாவது ஆகிட போகுதா? இல்லவே இல்ல. என் பெத்தவங்களை பொறுத்த வரை நான் செத்தாலும் புருஷன் வீட்டுல தான் சாகனும்.
அவங்க இப்படிப்பட்ட ஆளுங்கன்னு நிஜமா தெரியாது எனக்கு! என்னை மாதிரி இல்லாம வானிலாக்காது நல்ல குடும்பம் கிடைக்கணும். ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்காது”
அதன் பிறகான முக்கால்வாசி பக்கங்கள் காலியாக தான் இருந்தது. எழுத ஒன்றும் இல்லையா இல்லை அதே துயரத்தை திரும்ப திரும்ப எழுதி என்ன ஆகப்போகிறது என்று நினைத்தாலா என்று தெரிவில்லை.
பக்கங்களை பரபரவென புரட்டிய ரேகா, பாரமேரிய மனதோடு பின்னால் வரப்போவதை படிக்க ஆரம்பித்தாள். என்ன வரப்போகிறது என்று அவளுக்கு தெரியும் என்றாலும், மனம் பிசைவதை தடுக்க முடியவில்லை.
“என்னால ஜீரணிக்கக்கூட முடியாத விஷயம் எல்லாம் என்னை சுத்தி நடக்குது. சுரேஷ் என்கிட்ட மட்டும் தான் இப்படி எல்லை மீறி நடக்குறாருன்னு இவ்ளோ நான் நினைச்சுருந்தேன். அது இல்லன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது. அவர் ஃபோன்ல அவ்ளோ அசிங்கத்தை வச்சுருக்கார். என்னென்னவோ வீடியோ எல்லாம் இருக்கு. அதுல இருக்க ரெண்டு மூணு பேரை பிரன்ட்’ன்னு என்கிட்ட அறிமுகம் கூட பண்ணிருக்காரு.
அவர்க்கிட்ட இதை எப்படி கேக்குறதுன்னு தெரியல, அருவெறுப்பா இருக்கு. அவர் என்னை தொடும்போதெல்லாம் குமட்டுது எனக்கு. என்ன பண்ணப்போறேன்னு தெரியல”
இப்படி இருந்ததற்கு சில பக்கங்கள் இடைவெளியிலேயே,
“நான் கேட்டுட்டேன். ஏன்டா கேட்டு தொலைச்சோம்ன்னு இப்ப ஒவ்வொரு நிமிஷமும் நொந்து சாகுறேன் நான்…
இவனுக்குள்ள இப்படி ஒரு கேவலமான முகம் இருக்கும்ன்னு நான் நினைச்சே பாக்கலை…
ஏதோ ‘கக்ஓல்ட்’ஆம்…(cuckold)
தன்னோட பொண்டாட்டியை இன்னொருத்தன் கூட அனுப்பிட்டு அதை வேடிக்கை வேற பார்ப்பானாம். அவன் மட்டும் இல்ல, அவனோட பிரன்ட்’ன்னு இன்னும் அஞ்சு பேரு இப்படி இருக்கானுங்க. அவனுங்களுக்குள்ளேயே பொண்டாட்டிங்களை ஸ்வாப் பண்ணிப்பாங்களாம். ரொம்ப வருஷமா நடக்குதாம் இது!
இதை கேட்கும்போதே என் உடம்பு முழுக்க கம்பளிப்பூச்சி ஊருற மாறி இருக்கு. இதுல என்ன சொல்றான் தெரியுமா? சீக்கிரமே நானும் இதுக்கு பழகிக்கனுமாம். அதுக்கு நான் செத்துப்போலாம்”
என்று முடித்திருந்தாள். அதன்பிறகான பக்கங்கள் எல்லாமே வெறுமை தான். எழுத மனமில்லையா? எழுதக்கூட மனமில்லையா? என்று தெரியவில்லை. டைரியின் கடைசி பக்கத்தில் மட்டும்,
“வாணிலா… உன்னை விட்டு போறேன்னு கஷ்டமா இருக்கு. ஆனா, இப்படி நான் இருக்குறதுக்கு போறது தான் மேல்! உனக்கு என்னை மாதிரி எந்த கஷ்டமும் வராதுடா தங்கம். எனக்கும் சேர்த்து நீ சந்தோஷமா வாழனும். எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்.
நல்லா இருடா!
நான் இல்லாம போன பிறகு என்னை பத்தி ஆயிரம் சொல்லுவாங்க. எனக்கு எந்த கவலையும் இல்ல. ஆனா, நீ அதை எல்லாம் நம்பிட கூடாது. இருக்குமோன்னு சந்தேகம் கூட படக்கூடாது. நீயும் என்னை தப்பா நினைச்சுடாதடா!
மறுஜென்மத்துல எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. உன் ஒருத்திக்காக திரும்ப பிறக்கனும்ன்னு ஆசைப்படுறேன். என் மனசு முழுக்க இப்போ உன் நினைப்பு தான். உன்னை ஒருமுறை பார்த்துட்டா கூட போதும்… ஆனா, முடியாதே! உன் நிழல் கூட இங்க படக்கூடாது! இவனுங்க சகவாசமே உனக்கு வேண்டாம் டா… அக்கா போறேன்!”
மொத்தமாய் மீண்டுமொருமுறை படித்துவிட்டு கண்ணீரோடு ரேகா அந்த டைரியை மூடி வைக்க, திலகத்தின் குரல் வெளியே கேட்டது.
“வேலை செய்யாம என்னடி போய் ரூம்க்குள்ள பதுங்கி கடக்குற?” என்று!
உடல் சோர்வை கூட விட்டு வாரி சுருட்டி எழுந்தவள், டைரியை மீண்டுமாய் மறைத்து வைத்துவிட்டு வெளியே போய்விட, வேலைகளை அதன்போக்கில் நடந்தாலும், மனசெல்லாம் தேனிலாவின் எழுத்துக்கள் தான். அவள் எழுதாத எழுத்தாக இப்போது ரேகா அவளிடத்தில்!
இந்த வார இறுதியில் ட்ரிப் போக வேண்டும் என்ற சுரேஷ், அவர்கள் குழுவை பற்றி முற்று முழுதாக சொல்லியிருந்தான். ஏற்கனவே டைரியை படித்து தெரிந்துக்கொண்டது தான் என்றாலும், உடல் நடுங்கியது அவளுக்கு.
தேனிலாவின் டைரியை வானிலாவிடம் சேர்ப்பிக்க நினைத்து தான் அவளை தொடர்புக்கொள்ள தன்னை மீறிய தைரியத்தில் முயன்றிருந்தாள் ரேகா. இறுதியாய் டைரியின் இரு பக்கங்களை புகைப்படம் எடுத்து அவளது மெயிலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்போது தான் அதை சுரேஷ் கண்டுக்கொண்டு ஃபோனை தூக்கி உடைத்தது. நல்லவேளையாய் அந்த டைரியை அவன் கிழித்தெரியவில்லை.
உண்மையில் அவனுக்கு அகங்காரம் அதிகம். தேனிலா அழுதபோதே அவள் பெற்றோர் வந்து இவனை தட்டிக்கேட்டிருந்தால் இந்த அளவுக்கு தைரியம் வந்திருக்காது. அவர்கள் இவனுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க திமிர் ஏறிப்போனது. அதோடு அவள் இறந்தபோதும் அவனை எந்த குற்றசாட்டும் வைக்காமல் மரியாதையாய் அவர்கள் நடத்த, கொம்பில் ஏறிக்கொண்டான்.
அதன் மமதை மண்ணில் விழுந்தது, வாணிலா ஒரு நாள் அவனை காவல் நிலையத்தில் அமர வைத்த அன்று தான்! அவன் கொண்ட பயத்தை தூசி போல தட்டி விட்டனர் காஞ்சனாவும் ஜெயமோகனும். அவனுக்கே காரணம் தெரியாது, அவர்கள் ஏன் தன்னை இந்த அளவு நம்புகிறார்கள் என்று.
ஏன் காஞ்சனா ஜெயமோகனுக்கே அது தெரியாதே! வீட்டின் மாப்பிள்ளை, மகளின் வாழ்க்கை. அவர் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது என்ற ஆதிகால எண்ணமாய் கூட இருக்கலாம்.
அதே திமிருடன் தான் ரேகாவை திருமணம் செய்திருந்தான். தேனிலாவுக்காவது சொந்தபந்தம், சொத்துபத்து, உற்றார் உறவினர் என ஆட்கள் இருந்தனர். இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது வேறு, இருந்ததனர் தானே அவளுக்கு?!
ஆனால், ரேகாவுக்கு அப்படி எதுவும் இல்லை. தந்தை என்பவரை தான் கேள்வி கேட்க ஆளில்லாத அனாதை. அதனால் தேனிலாவிடம் பதுங்கியவன் இங்கே பாய்ந்தான்.
“என் கூட ட்ரிப் வர! அங்க என்ன நடந்தாலும் அதுக்கு ஒத்துழைக்குற! மீறுன உன்னை ஒன்னும் செய்யமாட்டேன். உன் வீடியோ அத்தனையும் நெட்ல ஹாட்டா சுத்தும். கூடவே உங்க அப்பனுக்கும் போட்டு காட்டுவேன். பாத்துக்க!”
அவன் போக்கிற்கு வர மாட்டேன் என்று மறுத்தவளை முகம் வீங்க அடித்தவன், இப்படி முடிவாக சொல்லிவிட்டான். அதற்கு மறுநாள் தான் நகுலன் இவளை சந்தித்தது. அவனிடம் எல்லாம் சொல்லலாம் என்றாலும், மானம் போய்விடுமோ என்று அஞ்சினாள். சொன்னாலும் போகும், சொல்லவில்லை என்றாலும் போகும்.
சுரேஷின் கட்டளைக்கு அடிபணியாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே அதுவரை அவள் எண்ணம். ஆனால், சட்டென தோன்றியது. தேனிலா க்கு பதில் ரேகா… ரேக்கக்கு பதில் நாளை இன்னொருத்தி!
எப்படியும் உயிர் வாழும் ஆசை விட்டுப்போய்விட்டது. தன் உயிர் போகும் முன் தன்னை இந்த அளவுக்கு வதைத்தவன் நன்றாக இருக்க தான் விடலாமா? அது இன்னொரு பெண்ணுக்கு தான் செய்யும் அநியாயம் ஆகிவிடாதா? தேனிலா போல தானும் இவனை சௌக்கியமாய் விட்டுவிட்டு சாவதா? இப்படி பலதும் தோன்ற ஆரம்பித்தது. அதே போக்கில் எண்ண அலைகள் சுழன்றது.
கலைந்து விழுந்த முடியை அள்ளி முடிந்தாள், ஒரு முடிவோடு!
error: Content is protected !!