Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எழவு வீடு

எ லவ் 5.2

            இந்நால்வர் இருக்கும் இடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, வேறொரு பிரதேசத்தில்… அதாவது ‘பிற’தேசத்தில்… மனிதர்கள் கண்ணிற்க்கே புலப்படாத ஒரு விஷேட விஷயம் அரங்கேறிக்கொண்டிருந்தது.

சோப்பு நுரை வட்ட வளையத்திற்குள் புகுந்து வெளிவரும்போது, ஒரு உரு கொள்ளுமே! அது போன்ற ஒரு காற்றில் மிதக்கும் கனமற்ற ஓர் வளையம்! உற்று பார்த்தாலும் அதன் இருப்பை கண்கள் அறிய முடியாத வண்ணம் காற்றில் மிதந்துக்கொண்டிருந்தது.

just for your imagination

அந்த வளையத்திற்குள் பெரிதாய் என்ன இருக்கக்கூடும்!? காற்றை தவிர!!! ஆனால், இருந்ததே!!! கற்பனையில் கூட நினைக்க முடியாதபடி, அதற்குள் ஏகப்பட்ட உருவங்கள், அதுவும் உயிருடன்!!!



Advertisement

பல்லாயிர அண்மையாக்கள் (ஜூம்) செய்து அவ்வளையத்தை உற்று நோக்குகையில், அதற்குள் சிறு கிராமம் போன்றே பெரும் அமைப்பே இருந்தது. செடி, கொடிகள், மரங்கள், அதில் செழித்து தொங்கும் பழங்கள்,  புல்லால் செய்த குடிசை அமைப்பை ஒத்த வீடுகள், கூடவே… மனித உருவில் முதுகில் இறக்கை கொண்ட சிறு புள்ளியிலும் சிறிய உருவங்கள்!!!

Advertisement

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான அந்த உருவங்கள் அத்தனையும் ஒரு குடிசையின் முன்னே குழுமி நிற்க, அங்கே மலர்ந்த பூ ஒன்று சிம்மாசனம் போல அதன் தலைவனுக்காக காத்திருந்தது.

Advertisement

கூட்டத்தில் ஒரே சலசலப்பு!!! உலகின் ஒட்டுமொத்த பூக்களின் அழகும் அந்த சிறு கிராம பூக்களுக்கு இருக்க, அவற்றை கொடியாய் தொடுத்து, காணுமிடமெங்கும் அலங்கரித்திருந்ததில் இருந்து, அங்கே ஏதோ ‘விழா’ நடைபெற இருப்பதை யூகிக்க முடிந்தது.

Advertisement

ஆனால், சந்தோசத்திற்கு பதில் சலசலப்பு ஏன்!?

சற்று நேரத்தில் அந்த குடிசையின் உள்ளிருந்து அரவம் தெரிய, கூட்டத்தின் சலசலப்பு நொடிப்பொழுதில் நின்றுப்போனது.

இலைகளும் பூக்களும் ஆடையாக, தலையில் கிரீடம் போன்ற பதாகையுடன் மெல்ல மிதந்தபடி வெளியே வந்தவரின் முகத்தில் சோர்வு எட்டிப்பார்த்தது. அவரை தொடர்ந்து இரு உரு வெளியேற, இறுதியாய் ஒன்று இறக்கையின்றி கால்களால் நடந்து வந்தது.

தலைவன் வந்து மலர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும், அவர் அருகே இருந்த மலர்களில் மீதமிருந்தோர் அமர,

“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினார் ஒருவர்.

அட, அவர்கள் மொழி கூட நமக்கு புரிகிறதே!!!

தலைவன், ‘தெரியவில்லை’ என்பதை போல தோள்களை குலுக்க, அவரை ஒத்த கவலையுடன், தனதெதிரே முறைத்துக்கொண்டு நிற்கும் தன் மகன்களை நோக்கினார் தலைவி.

பால்வண்ணத்தில் பளபளக்கும் மேனியுடன், பட்டையொத்த சிகை தோளை தொட, இறக்கைகளை கம்பீரமாய் விரித்துக்கொண்டு நிற்கும் ஒரு மகனை கண்ட அவர் கண்கள், அவனுக்கு பக்கவாட்டில், கறுத்த மேனியும், சுருண்ட சிகையும், உடலில் ஆங்காங்கே மனித ரத்தமும் கொண்டு அந்த கூட்டத்திற்கும்  அவனுக்கும் தொடர்பே இல்லாத வகையில் பொலிவின்றி நிற்கும் தன் மூத்த மகனை வாஞ்சையும் வருத்தமும் ஒரு சேர கண்டார்.

“என்ன இருந்தாலும் இவர் தான் உங்களின் மூத்த மகன். முறைப்படி, முடி இவரை தான்  சேரும்!” என்று ஒருவர் சொல்ல,

“அதெப்படி? நம் கூட்டத்தை விட்டு வெளியேறி, எப்போது ஒரு மனித உடலை சேர்ந்தாரோ அப்போதே இவருக்கும் நமக்குமான தொடர்பு அற்றுவிட்டது! அவ்வாறிருக்கையில், பத்து மாதங்களுக்கு பிறகு வந்து அரியணைக்கு உறவு கொண்டாடுவது மரபல்ல!!!” என்றார் இன்னொருவர்.

“மனித உடலை அடைந்தது அவர் தவறா? அல்லது நம் தவறா?” இந்த கேள்வியை ஒருவர் கேட்டபோது சற்று நேரம் யாரிடமும் பதில்லில்லை.

“தவறு யார்புறம் இருந்தாலும், நியதிக்கு புறம்பான ஒன்றை நம்மால் எப்படி ஏற்க இயலும்?” என்றொருவர் கேட்டிட, அவரை ஒத்து, “ஆம்! அவரை அவதானியுங்கள்! நமக்கும் அவருக்கும் சிறிதேனும் ஒப்புமை இருக்கிறதா? அவர் ஒரு மனித குழந்தை! ஒரு மனிதனின் சாயல் அவரிடம் அப்பட்டமாக தெரிகிறது! அவர் உருவ அளவை  வேணுமானால் நம்மால் குறைத்திருக்க முடியுமே தவிர, அவரது குணநலன்கள், திறமைகள் எதையும் நம்மால் சீர் செய்ய இயலாது!” என்றார் இன்னொருவர்.

அவரது இந்த கருத்து அங்கே பலரிடமும் ஓங்கி ஒலித்தது. அதன் பிரதிபலிப்பாய் அவ்விடம் சலசலப்பில் ஆழ்ந்தது.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் உண்டு! அந்த இறக்கை மனிதர்களுக்கு வயது கிடையாது, வியாதி கிடையாது, வயோதிகம் கிடையாது! மார்க்கண்டேயனை மீறிய இளமை வனப்பை கொண்டவர்கள். இதோ இப்போது தலைவனாய் இருப்பவனுக்கு கூட வயது தோராயமாய் ஐநூறு ஆண்டுகள் இருக்கலாம்! சொல்ல முடியாது, அதற்கு மேலும் கூட இருக்கலாம்!

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, தலைவன் தன் பொறுப்பை, அவனுடைய வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு, சுற்றித்திரியும் வேலையை விடுத்து, அவனிடத்தில் ஓய்வெடுக்கலாம்! அந்த ‘குறிப்பிட்ட காலம்’ இப்போது தலைவனுக்கு வந்துவிட்டதால், பொறுப்பை ஒப்படைக்க, தன் தலைவியுடன் இணைந்து வாரிசுகளை படைக்கும் வேலையில் அவன் ஈடுபட்டான்.

(ஒரு நிமிஷம்!!! வாரிசு உருவாக்குறதுன்னா, நீங்க நினைக்குற மாதிரி இல்ல…! இது வேற!)

அங்கே மலர்ந்து விகாசிக்கும் பூக்களிலே மயக்கும் மணம் கொண்ட ‘இஷ்க் புங்கா’ என்றவொன்று, பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கென்றே நூற்றுக்கணக்கில் ஆட்கள் கூட உண்டு!

அந்த மலரில் இருந்து சுரக்கும் தேனை தலைவன் தன் கையால் எடுத்து, தலைவியின் கருவிழிக்குள் செலுத்தும்போது, கண்களுக்குள் விழும் தேன், இருநாட்களுக்கு பின்னே அவள் கண் திறக்கையில், முத்து போன்ற உருண்டையாய் மாறி ஜொலிக்கும்! அந்த முத்தை தன் உள்ளங்கைக்குள் வைத்து பதினாறு நாட்கள் அவள் அடைகாக்க வேண்டும்! அவள் சோரும் காலத்தில் வேறு பெண்கள் அவளுக்கு பதில் அதை அடைகாக்கலாம்!

அப்படியாக, அவள் அடைகாத்த நேரத்தில், தலைவன் அவளை அழைக்க, தன் உள்ளங்கை முத்தை இன்னொருவளிடம் ஒப்படைத்துவிட்டு அவள் நகர, சற்று நேரத்திலேயே மூடியிருந்த உள்ளங்கைக்குள் ஒருவித குறுகுறுப்பு! முதலில் மெலிதாக இருந்த குறுகுறுப்பு நேரம் போக போக குடைச்சலை மாற, விரல்களை பிரித்தே ஆகவேண்டும் போன்ற உந்துதல்.

ஆனால், பிரிக்கக்கூடாதே!!! என்ன செய்வதென்று தெரியாமல், மெல்ல மிதந்து தலைவன் கூடாரத்தை அவள் அடைய, அந்நேரம் அவள் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளங்கையின் குறுகுறுப்பில் விரல்களை விரித்துவிட்டாள்.

விரித்த கணம், துள்ளி குதித்த முத்து, காற்றில் மிதந்து ஓட, “ஐயோ, அதை பிடியுங்களேன்!!!” என்ற அவள் சத்தத்தில் மொத்த கூட்டமும் பரபரப்பாகி போனது. பின்னே, இதுநாள் வரையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே இல்லையே!

அவர்களை பொறுத்த வரையில் இது பெரும் அசம்பாவிதமே!!!

மிதந்து ஓடும் முத்தை பிடிக்க, ஒவ்வொருவருமே முயற்சிக்க, யார் கைக்கும் அகப்படாமல் கண்டவிதமாய் ஓடிக்கொண்டிருந்தது அது. தங்கள் வேலைகளுக்காக வெளியேற வருபவர்களுக்காக, வாயில் கதவை திறந்து வைத்திருந்த காவலர்களும் கூட முத்தை பிடிக்க முந்தினர்.

வெளியே வந்து பார்த்த தலைவனுக்கும் தலைவிக்கும் இந்த காட்சி பெரும் அதிர்வை கொடுத்தது.

“யாரேனும் பிடியுங்களேன்!” தலைவி கூச்சலிட, அத்தனை பேரின் முயற்சிக்கும் சவால் விட்டது அந்த முத்து! தலைவனும் விரைந்து பறந்து அம்முத்தை கைக்குள் பொத்த பாய, அவர் விரல்கள் அதை தொட இருந்த கடைசி கணத்தில் வளையத்தின் வாயில் வழியே அது வெளியேற, புவியின் ஈர்ப்புவிசை காரணமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தது.

அது விழுந்த நேரம், மொட்டை மாடியில், மகளுக்கு வானில் திரியும் காக்கைகளை ‘கா…கா…’வென அழைத்து வேடிக்கை காட்டியபடி சோரூட்டிக்கொண்டிருந்த பெண்ணின் திறந்த வாய்க்குள் அது விழுந்து விட, ‘அவ்ளோதான்… அது முடிஞ்ச்சு!’

இனி அம்முத்து நம்மை சேராது என்றுணர்ந்து, தங்கள் வரலாறு காணாத இந்த துர்சம்பவத்தை நினைவடுக்கில் பின்தள்ளிவிட்டு,  அவர்கள் அடுத்த மகனை தயார் செய்து, அவனுக்கு முறையான பயிற்சியளித்து, இதோ இன்று அரச பதவியும் கொடுக்கலாம் என்று ஏற்ப்பாடு செய்தால், பிரசவம் முடித்த கையோடு, வாரிசுரிமை கொண்டாட வந்து நிற்கிறானே இவன்!!!

“முடிவாக என்ன செய்வது!?” ஒருவர் கேட்டதும்,

“எனக்கொரு எண்ணம்!” என்று வாயை திறந்தார் தலைவர்.

எல்லோரும் என்னவென்று ஆர்வமாய் பார்க்க, “ஒரு சோதனை வைத்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்! அந்த சோதனையில் இவன் தேறி வந்தால், அரசபதவியோடு, நமக்கான பிரத்யேக சக்திகளை அவனுக்கு நான் தருவித்துத்தருவேன்!” என்றார் அவர்.

மீண்டும் சலசலப்பு!!! அதன்பின்னே, ஒருமனதாய் அம்முடிவை ஒப்புக்கொண்டனர். அதன்படி, அவனுக்கான ‘சோதனை’ என்னவென்று தலைவர் சொல்ல, கேட்ட அனைவரின் கண்களும் விரிந்தது வியப்பில்.

‘இது எப்படி சாத்தியம்!? இது நடக்காத ஒன்று!’ என்ற எண்ணம் தான் அனைவருள்ளும்! ஆனால், அந்த கறுத்த மேனியவனோ, ஒரு குறுஞ்சிரிப்போடு, “எவ்ளவோ பண்ணிட்டோம்! இதை பண்ண மாட்டோமா?” என்று விரல்களை சுழற்றி ஸ்டைலாக கேட்டுவிட்டு உற்சாகமாய் அங்கிருந்து ஓட,

“பேச்சை பார்!!! இதற்குத்தான் இவனை வேண்டாம் என்றேன்! மனித சகவாசம், குல நாசம்!” என்று தலையில் அடித்துக்கொண்டார் அக்கூட்டத்தில் ஒருவர்.

-தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!