Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 15 2

“நம்ம அப்பா மாதிரியா மா?”, என்று கேட்டாள் பவித்ரா.

“ஆமா டா குட்டி? அந்த ஹீரோ என்ன செஞ்சார் தெரியுமா? ஒரு நாள் மழை பெஞ்சிட்டு இருக்கும் போது ஒரே ஒரு ஆட்டு குட்டி மட்டும் தன்னோட வீட்டுக்கு போகத் தெரியாம மழைல நனைஞ்சிட்டு இருந்துச்சாம். அதைப் பார்த்த அந்த ஹீரோ மின்னல் இடி மழைக்கு எல்லாம் பயப்படாம அந்த குட்டி ஆட்டைத் தூக்கிட்டு அதோட வீட்டைத் தேடி ஓடினாராம். அப்படி போகும் போது அவருக்கு கைல எல்லாம் அடி பட்டுச்சு. கால்ல எல்லாம் முள்ளா குத்துச்சு. எப்படியோ அந்த ஆட்டுக் குட்டியோட வீட்டைக் கண்டு பிடிச்சு அதோட அம்மா கிட்ட சேத்துட்டாராம். அந்த குட்டி ஆடும் மேன்னு கத்திக்கிட்டே அம்மா கிட்ட போயிருச்சாம். நீ மான்னு சொல்லிட்டு என் கிட்ட வருவல்ல அப்படி. அவ்வளவு தான் கதை முடிஞ்சிருச்சு. பாப்பு சாப்பிட்டும் முடிச்சிட்டாங்களே?”



Advertisement

“அவ்வளவு தானா கதை? இன்னும் சொல்லு மா”

Advertisement

“இன்னுமா? அப்புறம் என்ன ஆகும்? அப்பா ஹீரோ இருக்காரே ஆட்டுக் குட்டியை விட்டுட்டு தன்னோட வீட்டுக்கு போனாராம். அப்பா ஹீரோ வீட்ல யார் இருப்பா? நீயும் நானும். அப்பா ஹீரோ வந்த உடனே அம்மா என்ன செஞ்சேன் தெரியுமா? அவர் மேல உள்ள காயத்தைப் பாத்து அழுது மருந்து போட்டேன்”

Advertisement

“நீ ஏன் அழுத? உனக்கு அடி பட்டுச்சா?”

Advertisement

“இல்லை டா குட்டி, அப்பாக்கு அடி பட்டா அவரை விட அம்மாக்கு தான் டா ரொம்ப வலிக்கும். ஏன்னா நமக்கு அவர் தானே முக்கியம்? நீ பெரியவளா ஆன பிறகும் அப்பா சொன்னதை அப்படியே கேக்கணும் சரியா? அப்பா கிட்ட மறுத்து எதையும் சொல்லக் கூடாது. ஏன்னா உனக்கும் எனக்கும் அவர் தான் ஹீரோ. சரி வாங்க. கொஞ்ச நேரம் விளையாடலாம்”, என்று சொல்லி அவள் கதையை முடிக்க புவிக்கு ஓடிச் சென்று மனைவி மற்றும் மகளை அணைக்க வேண்டும் போல் கைகள் பரபரத்தது. 

இத்தனை நாள் போல ஆசையை அடக்காமல் அவர்களை நெருங்கினான். சுஜி அவனை திகைப்பாக பார்க்க “அப்பா”, என்ற படி அவன் தோளில் ஏறிக் கொண்டாள் பவித்ரா. 

மனைவியைப் பார்த்துக் கொண்டே அவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட அவனை ஆவேன்று பார்த்தாள். அவள் கண்களில் வழிந்த ஏக்கத்தில் உண்மையில் உள்ளுக்குள் நொந்து போனான் புவி. அவளை தவறாக புரிந்து கொண்ட தன்னுடைய மடத் தனத்தை நொந்து கொண்டு “அம்மு, என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டான்.

“அம்மா அப்பா ஹீரோ கதை சொன்னா. நாங்க விளையாடப் போறோம்”, என்று பவித்ரா சொல்ல அவன் அது என்னவென்று கேட்பானோ என்று சுஜிக்கு திக்கென்று இருந்தது. 

ஆனால் “அப்பாவும் இன்னைக்கு உங்க கூட விளையாடுறேன்”, என்று சொல்ல அதிர்ச்சியாக இருந்தது சுஜிக்கு. குழந்தையுடன் விளையாடினாலும் அவன் பார்வை அவளையே தொட்டு தொட்டு மீண்டது. மனைவியை ரசனையாக பார்த்தான். அவளை மூன்று வயது குழந்தைக்கு தாய் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் அழகில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தான் புவி. 

குழந்தையை விளையாட விட்டுவிட்டு புவி சுஜி அருகில் அமர “சரி நீங்க விளையாடுங்க. நான் உள்ள போறேன்”, என்று சொன்னாள் சுஜி.

“கொஞ்ச நேரம் இரு டி, எப்பவும் வேலை தானா?”, என்று புவி கேட்க அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் “இது என்ன புதுசா? எப்பவும் அப்படித் தானே?”, என்று கேட்டாள். 

“இனி அப்படி இருக்கணும்னு என்ன அவசியம்? கொஞ்சம் புருசனையும் கவனிக்கலாம்”, என்று அவன் சொல்ல அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

“உங்களைக் கவனிக்காம எப்ப இருந்தேன்?”

“கவனிக்கிற லட்சணம் தான் தெரியுமே? என் முகத்தைக் கூட பார்க்க மாட்ட”, என்று ஏக்கத்துடன் கேட்க அவன் மனதிலும் அந்த ஏக்கம் இருக்கிறதா என்று வியந்து பார்த்தாள்.

அவள் அவனையே பார்க்க அவனோ அவளை தின்று விடுவது போல பார்க்க ஆரம்பித்தான். அவன் பார்வையில் தவித்துப் போய் அவள் எழுந்து கொள்ள “இப்ப தானே சொன்னேன் எங்க கூட இருன்னு?”, என்றான் புவி. இந்த புவி அவளுக்கு புதியதாக தெரிந்தான். 

அவன் அருகில் அமர்ந்து “நீங்க இப்படி பாத்தா எப்படி பேசுறதாம்?”, என்று அவள் முணுமுணுக்க “எப்படி பாக்குறேன்?”, என்று சரசமாக கேட்டான். 

“ஆளையே முழுங்குற மாதிரி பாக்குறீங்க”, என்று அவள் தவிப்புடன் சொன்னாள். “மனசுல இருக்குற ஆசை கண் வழியா வெளியே தெரிஞ்சிருச்சு போல?”, என்று அவன் வெளிப்படையாகவே சொல்ல அவள் முகம் சிவந்தது.

“நான் உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் அங்கிருந்து ஓடி விட்டாள். 

சிறிது நேரம் கழித்து “இந்தாங்க டீ”, என்று சொல்லி டம்ப்ளரை அவனிடம் நீட்டினாள். 

அதை வாங்கிக் கொண்டே அவளைப் பார்த்தான். மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்று எண்ணிக் கொண்டு சற்று இடைவெளி விட்டு தயக்கத்துடன் அமர்ந்தாள். அவனே பேசும் போது அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அவள் தயாராக இல்லை. 

“டீ சூப்பரா இருக்கு”, என்று அவன் உரைக்க “இதைச் சொல்ல இத்தனை நாளா?”, என்று அவள் உதடுகள் முணுமுணுத்தது .

அது அவன் காதிலும் விழுந்து விட “எனக்கே தெரியுது  எல்லாத்துலயும் நிறைய நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்னு”, என்றான். 

அவள் படபடப்பாக அவனைப் பார்க்க அவளைக் கண்டு இமை சிமிட்டிச் சிரித்தவன் “டீ நல்லா இருக்குனு முன்னாடியே சொல்லிருக்கணும்ல? அதைச் சொன்னேன்”, என்றான்.

பவித்ரா தூக்கத்துக்கு சிணுங்க அவளை தூக்கிச் சென்றாள். புவியும் அவள் பின்னேயே சென்று விட்டான். புவியின் பார்வை அவளை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. 

“நீ ரொம்ப அழகா இருக்க சுஜி”, என்று வெளிப்படையாக புகழ்ந்து அவளை வெட்கப் பட வைத்தான். அவள் அருகாமையை ரசிக்க “கொஞ்ச நேரம் இங்கயே இரு டி பிளீஸ்”, என்று கெஞ்சினான். 

இப்போதெல்லாம் அவனது சீண்டல் அதிகமாக இருக்க கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிக் கொண்டிருந்தாள் சுஜி. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளை சீண்டினால் அவளும் தான் என்ன செய்வாள்?

அடுத்த நாள் காலையில் அவன் அவளுக்கு காபி கொடுக்க அவளைப் பார்த்தவாறே காபியை ரசித்து ருசித்து அருந்தினான். ஏதோ அவளையே பருகுவதைப் போல இருந்த அவன் பாவனை அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது. அவன் முன்னே இருப்பது திருமண முடிந்த புதுப் பெண்ணுக்கு இருப்பது போல அவஸ்தையாக இருந்தது. 

அங்கிருந்து எழுந்து செல்லவும் மனதில்லாமல் அவன் பார்வை வீச்சைத் தாங்கவும் முடியாமல் நெளிந்தவள் சட்டென்று எழுந்து விட்டாள்.

அவள் அங்கிருந்து செல்லப் போவதை உணர்ந்தவன் சட்டென்று அவள் கையைப் பற்றி விட்டான். அவள் திகைத்து விழிக்க அவளது மறு கையில் டம்ளரைக் கொடுத்தவன் “இனி தினமும் டீ டைம் இப்படி தான் இருக்கும்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கால்கள் தள்ளாட அப்படியே தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. 

“மா”, என்று பவித்ரா சிணுங்க குழந்தையின் குரலில் கலைந்தவள் அதன் பிறகு அவனை மறந்து குழந்தையைக் கவனிக்க ஆரம்பித்தாள். 

அவன் கடை வேலையாக வெளியே சென்று விட முதல் வேலையாக வெண்ணிலாவைத் தான் அழைத்தாள். 

“சொல்லு டி”

“வெண்ணிலா, இங்க எனக்கு… படபடப்பா வருது டி. உங்க அண்ணன் சரியே இல்லை. என் கிட்ட நல்லா பேசுறாங்க டி. அழகா இருக்கேன்னு வேற சொல்றாங்க. எனக்கு என்னமோ இதெல்லாம் கனவு மாதிரியே இருக்கு டி”

“ஏய் லூசு, அது எல்லாம் உண்மை தான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அதைச் சொல்ல இத்தனை நாள் அவனுக்கு தைரியம் இல்லாம இருந்துச்சு”

“அப்படி தான்னு தோணுது. ஆனா மனசு நம்ப மாட்டிக்கு டி. அத்தை சொன்னாங்கன்னு தான் என் கிட்டயே வந்தாங்க தெரியுமா?”

“பூனைக் குட்டி வெளிய வந்துருச்சு. இது தான் உன் மன வருத்தத்துக்கு காரணமா? ஏன் சுஜி அடுத்தவங்க சொன்னாங்கன்னு ஒருத்தரால பிடிக்காத பொண்ணு கூட வாழ முடியுமா?”

“வெண்ணிலா”, என்று அதிர்வாக விழித்தாள். 

“சரி அதை விடு. எங்க அம்மா பேசின அன்னைக்கேவா எங்க அண்ணன் உன்னைத் தொட்டான்?”

“இல்லை டி”

“அம்மா சொன்னதைக் கேட்டுருந்தா அவன் அன்னைக்கே அதைப் பண்ணிருப்பான். உன்னை விட்டு விலகி இருந்ததுக்கு அவனுக்குள்ள இருந்த தயக்கம் தான் காரணம். அந்த தயக்கத்தை அவனே புரிஞ்சிக்காம ஹாஸ்பிட்டல் போய் டெஸ்ட் எடுத்து டாக்டர் கிட்ட கவுன்சிலிங்க் போய் அதுக்கப்புறம் தான் அந்த மாற்றம் எல்லாம். அவன் மாறினப்ப நீ விலகி போயிட்ட போல? உனக்கு பிடிக்கலைன்னு அவன் விலகிட்டான்”

“என்ன டி என்னல்லாமோ சொல்ற?”, என்று கேட்ட சுஜிக்கு இப்போது எல்லாம் புரிந்தது.

“உண்மையை தான் சொல்றேன். வேணும்னா அண்ணன் பீரோவை குடைஞ்சு பாரு. உனக்கே புரியும்? ஆனா டெஸ்ட் விஷயம் எல்லாம் அவன் கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. அதுவும் நான் சொன்னேனு அவன் கிட்ட தயவு செஞ்சு சொல்லாத. அவன் உணர்வுக்கும் நாம மதிப்பு கொடுக்கணும். அவன் மாறிட்டு வரான் டி. நீ முறுக்கிக்கிட்டு திரியாம உன் புருஷனை இறுக்கிப் பிடிச்சிக்கோ”, என்று சொல்லி போனை வைத்தாள்.

வெண்ணிலா சொன்னது போல அவனது பீரோவைக் குடைய அந்த பேப்பரைக் கண்டு பிடித்து விட்டாள். தான் ஒரு ஆண் மகன் தானா என்று அவன் சோதனை செய்திருக்க அதை அவளால் எப்படி சாதாரணமாக நினைக்க முடியும்? அதைக் கண்டு அழுகையாக வந்தது அவளுக்கு. 

அவன் மேல் இருந்த வருத்தம் எல்லாம் மாயமாக மறைய அவன் மீதிருந்த காதல் இன்னும் அதிகமாக பீறிட்டு வெளியே வந்தது. அவன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அவன் மதியம் சாப்பிட வரவில்லை. 

அன்று மாலை சாமி கும்பிட்டு விட்டு குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு இரவு சமையலில் இறங்க ஆரம்பித்தாள். சப்பாத்தியும் கொண்டைக் கடலைக் குழம்பும் வைக்கலாம் என்று எண்ணி செய்ய ஆரம்பித்தாள். 

அவள் சப்பாத்தியை உருட்ட ஆரம்பிக்க அப்போது தயக்கத்துடன் அங்கே வந்தாள் ரேணுகா. அவளைப் பார்த்து புருவம் உயர்த்திய சுஜி “ஏதாவது வேணுமா ரேணு?”, என்று கேட்டாள்.

தான் அவ்வளவு பேசிய பிறகும் இவளால் எப்படி இந்த அளவு அன்பாக பேச முடிகிறது என்று எண்ணிய ரேணு “நான் வேணும்னா சாப்பாத்தி போட்டு எடுக்கவா? நீ தனியா செய்யுறது கஷ்டமா இருக்கு சுஜி”, என்றாள்.

இந்த மாற்றம் தன்னுடைய கணவன் பேச்சால் விழைந்த மாற்றம் என்று புரிந்து சிறு சிரிப்புடன் “சரி செய்யேன். எனக்கும் வேலை சட்டுன்னு முடிஞ்சிரும்”, என்று சொன்னாள்.

செய்கிறேன் என்று சொல்லி விட்டாலும் ரேணுவால் அதை செய்ய முடிய வில்லை. அதைப் பார்த்த சுஜி அவளுக்கு இரண்டு சப்பாத்தி எப்படி போட என்று சொல்லிக் கொடுக்க அதன் பிறகு சந்தோசமாகவே செய்தாள்

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!