Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 2 3

பாரி வேந்தன் மல்லிகா தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் புவி. அவனுக்கு அடுத்து மகேஷ். அதற்கு பின்னர் ரோஹினி, கடைசியாக வெண்ணிலா. இவர்களை தவிர அந்த வீட்டில் இருப்பது மல்லிகாவின் தம்பி உறவில் இருக்கும் பரணி. பரணியைத் தான் முதலில் திருமணம் செய்யச் சொல்லி பாரியும் மல்லிகாவும் நச்சரித்தார்கள். அவனோ முடியவே முடியாது என்று சாதித்தான். ஏனோ அவனுக்கு திருமணத்தில் விருப்பமே இல்லை.

அதனால் அடுத்து திருமண வயதில் இருக்கும் புவியை திருமணம் செய்யச் சொன்னார்கள். அவனும் பரணியைப் போலவே முடியாது என்று சாதிக்க அவனுக்கு அடுத்து பிறந்த மகேஷ்க்கு திருமணம் செய்ய முடிவு எடுத்தார்கள். அண்ணன் திருமணம் செய்யாமல் இருக்கிறான், பரணி திருமணம் செய்யாமல் இருக்கிறான் தான் மட்டும் செய்யவா என்றெல்லாம் எண்ணாமல் திருமணத்துக்கு சம்மதம் சொன்னான் மகேஷ்.



Advertisement

மல்லிகா தன்னுடைய அண்ணன் சிதம்பரத்திடம் அவருடைய மகள் ரேணுகாவை மகனுக்காக பெண் கேட்க அவர் முதலில் மறுத்தார். ஏனென்றால் சிதம்பரம் பாரி மல்லிகாவை விட மிகப் பெரிய கோடீஸ்வரர்.

Advertisement

ஆனால் தங்கை மீண்டும் மீண்டும் கேட்கவும் சம்மதித்தார். கூடவே மகளின் விருப்பம் மகேஷ் மேல் இருக்கிறது என்பது தெரிந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

Advertisement

மகேஷ் ரேணுகா திருமணத்தில் “மூத்தவன் இருக்கும் போது எதுக்கு சின்னவனுக்கு பண்ணுறீங்க?”, என்று பாரி மற்றும் மல்லிகாவைக் கேட்காத ஆட்கள் இல்லை.

Advertisement

ரேணுகா பணக்காரி. அதனால் யாரையும் மதிக்கவே மாட்டாள். அவளைக் கண்டிக்க வேண்டியது அத்தை மல்லிகா தான். ஆனால் பணக்காரி என்பதால் அவளைத் தாங்குவாள் மல்லிகா. அதனால் ரேணுகாவும் அத்தை அத்தை என்று மல்லிகாவை காக்கா பிடித்துக் கொள்வாள்.

அவள் குணம் அறிந்த பாரி இரண்டு முறை கண்டித்துப் பார்த்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவளை அவர் திட்டி விட்டால் உடனே சிதம்பரத்திடம் இருந்து வீட்டுக்கு அழைப்பு வந்து விடும்.

“இங்க பாருங்க மாப்பிள்ளை, என் தங்கச்சி ஆசை பட்டுச்சுன்னு தான் என் பொண்ணை உங்க மகனுக்கு கட்டிக் கொடுத்தேன். ஆனா நீங்க என்ன அவளைத் திட்டுறீங்களாம்? அவ பிறக்கும் போதே கோடீஸ்வரி. அவளை எப்படி நீங்க வேலை செய்யச் சொல்லலாம்?”, என்று ஒரு மணி நேரம் பேசித் தள்ளி விட்டார் சிதம்பரம்.

“புருஷன் பக்கத்துல நின்னு பரிமாறுன்னு சொன்னது ஒரு குத்தமாயா?”, என்று மனதில் எண்ணிக் கொண்ட பாரி அதற்கு பின்னர் ரேணுகாவை தண்ணீர் எடுத்துட்டு வா மா என்று கூட சொல்ல மாட்டார். மகேஷுக்கும் அதே நிலைமை தான். மனைவி வந்த பிறகும் அவன் வேலைகளை அவனே தான் செய்தான்.

யாரும் ஒன்றும் சொல்லாததால் ரேணுகா புகுந்த வீட்டிலும் மகாராணியாக தான் இருந்தாள்.

அதற்கு அடுத்து புவியையும் பரணியையும் திருமணம் செய்யச் சொல்ல அப்போதும் அவர்கள் தலையசைக்க வில்லை என்பதால் மகேஷ்க்கு அடுத்து பிறந்த ரோஹினிக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். அவள் காலேஜ் முடித்து விட்டு வீட்டில் தான் இருந்தாள். அவள் மல்லிகாவின் மறு பதிப்பு. அவளுக்கு அவளுடைய சுயநலம் தான் முக்கியம்.

அவளுக்கு வரனும் அமைய பெரிய அளவில் அவளுடைய திருமணத்தையும் முடித்தார்கள். அவள் கணவன் தான் ராகவன். டெல்லியில் உள்ள ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில் பணி புரிகிறான். திருமணம் முடிந்து ரோஹினி கணவனுடன் சென்று விட்டாள். அப்போது கடைசி பெண்ணான வெண்ணிலா இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளது உயிர்த் தோழிகள் தான் சுஜிதாவும் மைதிலியும்.

வெண்ணிலா எதையும் தீர்க்கமாக யோசித்து செய்பவள். எதையும் நேருக்கு நேர் பேசி விடுவாள். மைதிலியோ எப்போது என்ன பேச வேண்டும்? அது சரியா தவறா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து நேரம் வரும் போது பட்டென்று கேட்டு விடுவாள். ஆனால் சுஜியோ எல்லாவற்றையும் மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளும் குணம் படைத்தவள்.

“நீங்கள் செய்தது தவறு”, என்று ஒரு நாளும் யாரையும் குற்றம் சொல்ல மாட்டாள். இப்படி மூவரும் வேறுவேறு குணம் கொண்டிருந்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பின் பிணைப்பு அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

அன்று கல்லூரிக்கு வந்து கிளாசில் அமர்ந்திருந்த சுஜியின் கண்கள் காலேஜ் கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மைதிலி “என்ன டி அங்கயே பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டாள்.

“இல்லை, வெண்ணிலாவை காணும், அதான்”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல “நீ வெண்ணிலாவைத் தேடுறியா? இல்லை அவளைக் கூட்டிட்டு வரும் ஆளைத் தேடுறியா?”, என்று மைதிலி கேட்க சுஜிதா முகம் சிவந்தது.

ஆனாலும் அவளை முறைத்து பார்த்து “வாயை மூடு மைத்தி”, என்றாள். “நான் வாயை மூடுறது இருக்கட்டும். இப்ப உன்னோட வாய் மூடவே செய்யாது. வாட்டர் பால்ஸ் கொட்டும். அங்க பாரு உன் ஆள் வந்தாச்சு”, என்று சொன்ன மைதிலி கண்ணைக் காட்ட அங்கே திரும்பிப் பார்த்தாள் சுஜிதா.

வெண்ணிலாவை அழைத்து வந்த புவி அவளை இறக்கி விட்டுவிட்டு அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். சுஜியின் பார்வை புவியின் மீதே இருந்தது.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது வெண்ணிலாவை அழைத்து வரும் போது தான் சுஜி புவியைப் பார்த்தாள். பார்த்ததும் வந்த ஒரு மயக்கம் இந்த நான்கு ஆண்டுகளில் இம்மியும் குறையாமல் இப்போது வரை தொடர்கிறது.

வெண்ணிலா அப்படியே பாரியின் மறுபிம்பம். அவளுக்கு யாரையும் கஷ்டப் படுத்த தெரியாது. கூடவே தன்னுடைய அண்ணன் புவியின் மேல் அதிக அன்பு வைத்திருந்தாள். அதனால் தனக்கு பிடித்த அண்ணனின் பெருமைகளையும் அவன் குடும்பத்துக்காக படிப்பை நிறுத்தியதையும் பேசி பேசி சுஜியின் மனதில் ஆசைகளை வளர்த்திருந்தாள். அது வெண்ணிலாவுக்கு தெரியாது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை மைதிலிக்கு கூட சுஜியின் மனதில் இருப்பது தெரியாது. கடந்த வாரத்தில் ஒரு நாள் மைதிலியின் அழைப்பைக் கூட உணராமல் பிரம்மித்துப் போய் சுஜி பார்த்துக் கொண்டிருக்க அன்றில் இருந்து அவளை விடாமல் கண்காணித்துக் கண்டு பிடித்தது தான் புவியின் மீதான சுஜியின் காதல்.

“ஏன் டி சுஜி, நீ புவி அண்ணனை சைட் அடிக்கிறியா?”, என்று நேரடியாவே கேட்டு விட அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் சுஜி விழித்த விழியே அவள் மனதை மைதிலிக்கு புரிய வைத்தது.

அன்றில் இருந்து மைதிலி கிண்டல் அடிப்பதும் சுஜி நாணி கோணுவதும் தொடர்கிறது. ஆனால் இந்த உண்மை வெண்ணிலாவுக்கு தெரியக் கூடாது என்று சுஜி கேட்டுக் கொண்டதால் இருவருக்கும் இடையே மட்டும் இந்த ரகசியம் இருக்கிறது.

அண்ணனை அனுப்பி விட்டு கிளாசுக்கு வந்த வெண்ணிலா தோழிகளின் அருகில் அமர்ந்து “எப்ப டி வந்தீங்க ரெண்டு பேரும்?”, என்று கேட்டாள்.

“நாங்க அப்பவே வந்துட்டோம். சரி நீ யார் கூட வந்த?”, என்று சுஜி கேட்க “அடப்பாவி, இவ்வளவு நேரம் அவனைத் தானே பாத்த?”, என்று கேட்க வந்த வாயை கையால் மூடிக் கொண்டாள் மைதிலி.

“இவ ஏன் டி வாயை மூடுறா?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

“அவ கிடக்கா வெண்ணிலா. நீ சொல்லு, எப்படி வந்த?”, என்று கேட்டாள் சுஜி.

மைதிலியை ஒரு தினுசாக பார்த்த வெண்ணிலா “வேற யார் கூட டி வருவேன்? எங்க புவி அண்ணன் கூட தான் வந்தேன். அவனை விட வேற யார் பொறுப்பா இருப்பாங்க? எனக்காக என் அண்ணன் என்ன வேணும்னாலும் செய்வான்….”, என்று அண்ணன் பெருமைகளை அள்ளி விட மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சுஜிதா.

“பைத்தியம் முத்திருச்சு”, என்று தோழியை நினைத்துச் சிரித்துக் கொண்டாள் மைதிலி.

அதே போல மைதிலி கவனித்த இன்னொரு விஷயம் வெண்ணிலாவுக்கு பரணியை அவ்வளவு பிடிக்கும் என்று. ஆனால் அது காதலா என்று மைதிலிக்கு தெரியாது. ஆனால் பரணி மேல் வெண்ணிலாவுக்கு ஒரு சொல்ல முடியாத உணர்வு இருக்கிறது என்று புரிந்தது. ஆனால் மைதிலி அதை அவளிடம் கேட்க வில்லை. இல்லாத ஒன்றை உருவாக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். இப்படியே மூன்று தோழிகளுக்கும் நாட்கள் கழிந்தது. ஒரு நாள் வெண்ணிலா கல்லூரிக்கு சோகமாக வந்தாள்.

என்னவென்று அவளிடம் விசாரித்தார்கள் மைதிலியும் சுஜியும்.  “வீட்ல ஒரே சண்டை டி. என் ரெண்டாவது அண்ணன் மகேசுக்கும் கல்யாணம் ஆகிருச்சு, அடுத்து ரோஹினி அக்காவும் கல்யாணம் ஆகி போயிட்டா. ஆனா புவி அண்ணா மட்டும் கல்யாணம் பண்ண மாட்டிக்கான். அதுக்கு தான் சண்டை”, என்று சொன்னாள் வெண்ணிலா.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!