Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 6 2

“அவ சந்தோசத்தைப் பத்தி நீ யோசிக்கிற பாத்தியா? அந்த எண்ணம் இருந்தா போதும் மாப்பிள்ளை. அவ நல்லா இருப்பா”

“எனக்கு தெரியலை மாமா. அம்மா அவளை கஷ்டப் படுத்த தான் போறாங்க. பேசாம அவ கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் பேசவா?”



Advertisement

“தாராளமா போய் பேசு. ஆனா நீ கல்யாணம் வேண்டாம்னு பேசினது தெரிஞ்சா வெண்ணிலா அடுத்த நிமிஷம் என்ன செய்வான்னு தெரியாது மாப்பிள்ளை”

Advertisement

“ஆமா மாமா, அன்னைக்கே அப்படி பண்ணிட்டாளே? சரி விடு. நடக்குறது நடக்கட்டும்”, என்று சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்தாலும் அவன் மனது அமைதியில்லாமல் இருந்தது.

Advertisement

அன்று மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த போது பாரியின் மொபைலில் இருந்து சுஜிதா வீட்டு எண்ணை எடுத்துக் கொண்டான். பின் பரணியிடம் “ஒரு ஆளைப் பாத்துட்டு வரேன் மாமா. நீ கடையைப் பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

Advertisement

அவன் வட்டித் தொழில் பற்றி தெரியுமாதலால் பரணி அவனைப் பற்றி அதிகம் யோசிக்க வில்லை. ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி இருந்த புவி சுஜி வீட்டுக்கு அழைத்தான்.

போனை எடுத்ததும் “சுஜிதாவோட அப்பாங்களா?”, என்று கேட்டான்.

“ஆமா, நீங்க யாரு?”, என்று கேட்டார் தணிகாச்சலம்.

“நான் புவியரசன் பேசுறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போனோமே?”, என்று சொன்னதும் அவருக்கு யாரென்று புரிந்தது.

“நான் உங்களைப் பாத்து கொஞ்சம் பேசணும். உங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற காபி ஷாப்க்கு வர முடியுமா?”, என்று அவன் கேட்க “இங்க வீட்டுக்கே வரலாமே?”, என்று கேட்டார் அவர்.

“இல்லை நான் உங்க கிட்ட பேசுறது யாருக்கும் தெரியக் கூடாது. உங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் தெரிய வேண்டாம்”

“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் குழப்பத்துடனே கிளம்பிச் சென்றார்.

அந்த காபி ஷாப் வந்ததும் அவர் அவனைத் தேட அவனே அவர் முன்னால் வந்து நின்றான். தர்மசங்கடமாக இருவரும் சிரித்துக் கொண்டார்கள். உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்ததும் “என்ன விஷயம் சொல்லுங்க”, என்றார் தணிகாச்சலம்.

“எங்க வீட்ல உள்ளவங்க பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்று அமைதியாக சொன்னான் புவி.

அவனை வியப்பாக பார்த்தவர் “பரவால்ல விடுங்க”, என்று சொன்னாலும் “இப்ப வந்து மன்னிப்பு கேக்குறவன் அங்க வச்சே அவங்களைக் கண்டிச்சிருக்கலாமே?”, என்று மனதில் எண்ணிக் கொண்டார்.

“நான் அப்பவே கேட்டுருக்கணும். ஆனா அவங்களையும் விட்டுக் கொடுக்க கூடாதுல்ல அதான்”, என்று அவனே பதில் சொல்ல அவருக்கு மேலும் வியப்பாக தான் இருந்தது.

“குடும்பம்னா அப்படி தான் இருக்கும். விடுங்க”, என்று சொன்னார் தணிகாச்சலம்.

“நான் இப்ப பேச வந்தது எதைப் பத்தின்னா… நான் சின்ன வயசுல இருந்து கடை கடைன்னு இருந்துட்டேன். அதனால பொண்ணுங்க, கல்யாணம் இப்படி எல்லாம் யோசிச்சது இல்லை. வீட்ல வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா என் தங்கச்சி தான் கேக்கலை”

“இப்ப என்ன சொல்ல வறீங்க? எனக்கு புரியலை. நாங்க இந்த கல்யாணத்தை நிறுத்தணுமா?”, என்று குழப்பத்துடன் கேட்டார் தணிகாச்சலம்.

“இல்லை இல்லை… நான் அப்படிச் சொல்ல வரலை. உங்க குடும்பச் சூழ்நிலை கொஞ்சம் தெரியும். பிள்ளைங்க படிப்புன்னு செலவு அதிகம் ஆகிருக்கும். அதனால சட்டுன்னு கல்யாணம்னு உங்களுக்கும் கவலையா இருக்கும். உங்க பொண்ணுக்கு எங்க வீட்ல எதிர்பார்க்குறது மாதிரி எல்லாம் போட முடியாது”

“எனக்கு நிஜமாவே நீங்க பேச வரது புரியலை. எங்க பொண்ணுக்கு நகை போடுறது பத்தி நாங்க தானே கவலைப் படணும்? நீங்களும் உங்க வீட்ல உள்ளவங்க மாதிரி எங்களை வக்கத்தவங்கன்னு சொல்றீங்களா தம்பி?”

“நான் அப்படிச் சொல்ல வரலை. எனக்கு கோர்வையா பேசத் தெரியாது. அதனால தான் மனசுல உள்ளதைச் சட்டுன்னு சொல்ல முடியலை. சரி நான் நேரடியாவே சொல்றேன். நான் பணம் தரேன். அதை வச்சு உங்க பொண்ணுக்கு நகை போட்டுருங்க”, என்று அவன் சொன்னதும் திகைத்துப் போனார். அவருக்கு அவன் பேசியதை எந்த முறையில் எடுக்க என்று கூட தெரியவில்லை.

அவர் குழப்பமாக அமர்ந்திருக்க “நான் பணம் தர விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். என்ன டா திருட்டுத் தனமா கொடுக்குறேன்னு நீங்க நினைக்க கூடாது. இது என்னை நம்பி வரவளுக்கு நான் எங்க வீட்ல கௌரவத்தை வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். கொஞ்சமா நகை போட்டு வந்தான்னு யாரும் அவளை கஷ்டப் படுத்திறக் கூடாது. அதனால தான் சொல்றேன்”, என்று அவன் சொல்ல அவனை அவருக்கு அவ்வளவு பிடித்தது.

கட்டாயம் அவன் தங்கள் மகளை நன்கு பார்த்துக் கொள்வான் என்று நம்பினார். படிப்பு இல்லை என்றாலும் அவன் உரமேரிய தேகம் அவன் உழைப்பை அவருக்கு புரிய வைத்தது. சபையில் அவனுடைய குடும்பத்தை விட்டுக் கொடுக்காத பாங்கு பிடித்தது. அவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டியது பிடித்தது. மனைவியை யாரும் குறை சொல்லக் கூடாது என்று நினைக்கும் அவனது மனது பிடித்திருந்தது.

தான் பாத்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்திருக்க மாட்டோம் என்று எண்ணிக் கொண்டவர் “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிறலாம் மாப்பிள்ளை”, என்று முழு மனதாக சொன்னார்.

“சரிங்க மாமா, உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. நான் பணம் அனுப்பிறேன். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்”, என்று அவனும் உரிமையாக பேசினான்.

“யாருக்கும் சொல்ல மாட்டேன் மாப்பிள்ளை”, என்று வாக்கு கொடுத்த தணிகாச்சலம் அக்கவுண்ட் நம்பரைச் சொல்ல அதைக் குறித்துக் கொண்டவன் “நாளைக்கு பணம் அனுப்பிறேன். சரி நான் கிளம்புறேன்”, என்று எழுந்து கொண்டான்.

“சரிங்க மாப்பிள்ளை”, என்று அவர் சொல்ல “அப்புறம் ஒரு விஷயம். நான் உங்க பொண்ணு அளவுக்கு படிக்கலை தான். எனக்கு உழைப்பு மட்டும் தான் தெரியும். ஆனா என்னால உங்க பொண்ணை கண்டிப்பா சந்தோஷமா வச்சிக்க முடியும்”, என்றான்.

“நான் உங்களை நம்புறேன் மாப்பிள்ளை”, என்று சொன்னதும் அவனும் காபிக்கான பணத்தைக் கொடுத்து விட்டு சிறு சிரிப்புடன் அவரிடம் இருந்து விடை பெற்றான்.

அவனும் நீங்கள் உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள் என்று கேட்க வில்லை. அவரும் சொல்ல வில்லை. சொன்னது போல அடுத்த நாளே பணம் அனுப்பி விட்டான்.

பணம் அக்கவுண்டில் ஏறியிருப்பதைப் பார்த்த தணிகாச்சலம் சுந்தரியிடம் எல்லாமே சொல்லி விட்டார். அதைக் கேட்டு அவளும் ஆச்சர்யப் பட்டுப் போனாள்.

“நூறு பவுன் எடுக்குற அளவுக்கு பணத்தை அனுப்பிருக்காங்க. என்னால இதை நம்பவே முடியலை”, என்றாள் சுந்தரி.

“என்னாலயும் தான் சுந்தரி. கண்டிப்பா இவர் நம்ம பொண்ணை நல்லா தான் பாத்துக்குவார்”

“இப்ப மாப்பிள்ளை பெருமை பேசுறீங்க? இப்படி ஒரு மாப்பிள்ளையை பாத்த மதனை எதுக்கு அப்படி திட்டனுமாம்?”

“அப்பா மகன் சண்டை எல்லாம் பெரிய விஷயமா டி? அதெல்லாம் சரியாகிரும்”

“சுஜி கிட்ட பேசலாம்ல?”

“கொஞ்சம் கொஞ்சமா பேசுறேன் டி”

“சரிங்க. அப்புறம் ஒரு விஷயம் கேக்கணும்?”

“என்ன சுந்தரி?”

“நான் ஏற்கனவே சுஜி கல்யாணத்துக்கு அம்பது பவுன் நகை சேத்து வச்சிருக்கேன். என்னோட நகையும் அவளுக்கு தான். இன்னும் ஒரு இருபத்தி அஞ்சு பவுன் எடுக்க பணம் அவ பேர்ல கிடக்கு. கல்யாணச் செலவுக்கு உங்க ஆபீஸ்ல லோன் போட்டுக்கலாம். எப்படியும் அவங்க வீட்ல எதிர் பார்த்த நூறு பவுன் போட்டுருவோம் தானே? அப்புறம் எதுக்கு மாப்பிள்ளை கிட்ட இந்த பணத்தை வாங்குனீங்க?”

“அவங்க நூறு பவுன் போட்டு வந்ததுக்கு அவ்வளவு பெருமைன்னா நம்ம பொண்ணு இருநூறு பவுன் போட்டுட்டு போகட்டுமே டி? அப்படின்னா அவளைத் தாங்குவாங்க தானே? அதனால தான் அவர் கிட்ட எதுவும் சொல்லாம அமைதியா வந்துட்டேன். எப்படியும் அது திருப்பி அவர் கிட்ட தானே போகப் போகுது?”, என்று சொல்ல கணவனின் புத்தி கூர்மையை எண்ணி வியந்து போனாள். ஆனால் இவர்கள் பெருமை எல்லாம் காற்றோடு போகப் போகிறது என்று யார் அவர்களுக்குச் சொல்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!