Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 7 3

அவனிடம் என்ன கேட்க, எப்படி கேட்க என்று அவளுக்கு சுத்தமாக புரிய வில்லை. “எதனால படுத்துட்டீங்க? ஏன் என் கூட பேச மாட்டுக்கீங்க?”, என்று அவளால் சட்டென்று கேட்க முடியவில்லை. என்ன தான் கணவன் என்றாலும் இந்த நிமிடம் அவன் அவளுக்கு புதியவன் தானே?

திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து அவன் ஏதாவது அவளிடம் பேசி இருந்தால் அவளும் அவனை சகஜமாக நெருங்கி இருப்பாள். ஆனால் அவன் அவளை திரும்பிக் கூட பார்க்காத போது அவளால் என்ன செய்ய முடியும்? இப்படி பலவாறு யோசித்தவள் கண்ணில் விழுந்தது பால் டம்பளர். அவனிடம் பேச வாய்ப்பு கிடைத்து விட்டது என்று எண்ணி அவள் மனம் குதுகளித்தது.



Advertisement

“ஒரு நிமிஷம்”, என்று சொன்னாள். என்னவென்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

Advertisement

“வெண்ணிலா பால் கொடுத்து விட்டா”, என்று சுஜி சொன்னதும் எழுந்து அமர்ந்தவன் அந்த பால் டப்ளரை எடுத்து அவசர அவசரமாக குடிக்க ஆரம்பித்தான்.

Advertisement

அவனுக்கு பால் பிடிக்காது என்று கூட அவனுக்கு அந்த நிமிடம் நினைவில் இல்லை. தனக்கு ஒரு சிப் கூட கொடுக்காத அவனைப் இமைக்காமல் பார்த்தாள் சுஜி.

Advertisement

அவனோ குடித்து முடித்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்ள அதற்கு மேல் என்ன செய்ய என்று தெரியாமல் அவளும் கட்டிலில் படுத்தாள். சேலையும் நகைகளும் கசகசவென இருக்க அதை மாற்றலாம் எண்ணி எழுந்தாள்.

அவள் எழுந்ததும் “என்ன ஆச்சு?”, என்று கேட்டான் புவி.

“இல்லை… சேலை மாத்தலாம்னு”, என்று சொல்லி அவள் அவனைப் பார்க்க “சரி மாத்திக்கோ”, என்று சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான். அவள் நைட்டியைத் தேடி அந்த இருளிலே சேலையைக் கழட்டி அதை மாற்ற இங்கே அவள் பக்கம் திரும்பாமல் படுத்திருந்தவனின் இதயம் வேகமாக துடித்தது. அது என்ன உணர்வு என்று அவனுக்கு புரியவே இல்லை.

புதியதாக திருமணம் செய்த ஆண் இப்படி ஒரு சூழ்நிலையில் என்ன செய்வான் என்று எண்ணிக் கொண்ட புவிக்கு தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று புரியவில்லை. படபடப்பாகவே தான் இருந்தான். அவன் சகஜமாக இல்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

மனதில் எழுந்த விரக்தியோடு உடை மாற்றியவள் அவன் பக்கம் திரும்பி அவன் முதுகைப் பார்த்த படி படுத்து விட்டாள். அவன் முதுகைப் பார்த்தாளாவது அவன் தன்னருகே இருக்கிறான் என்ற நிம்மதி வருமே. அதற்காக தான். அவன் தன்னை ஏற்க வில்லை என்றாலும் மனதுக்கு பிடித்த கணவன் கிடைத்த சந்தோஷம் அவளுக்கு வந்தது. அப்படியே சந்தோசத்தில் கண்ணயர்ந்து விட்டாள்.

அவனுக்கு தான் தூக்கம் வந்த பாடில்லை. எப்போதுமே படுத்ததும் தூங்கி விடுபவனுக்கு இன்று அதைச் செய்ய முடியவில்லை. மெதுவாக அவள் புறம் திரும்பிப் படுத்தான். அவள் நன்கு உறங்கிக் கொண்டிருக்க அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தான்.

தான் அவளுக்கு நியாயம் செய்ய வில்லை என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் அவனால் இயல்பாக நெருங்க முடியவில்லை. ஒரு நாளே அவள் அருகாமையை சமாளிக்க முடியவில்லை. இதில் தினமும் என்றால் அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டான்.

சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கி விட்டான். அடுத்த நாள் அழகாக விடிந்தது. முதலில் எழுந்த புவி குளித்துக் கிளம்பி கடைச் சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவனால் யாரையும் இப்போது எதிர்க் கொள்ள முடியாது என்பதால் தான் சென்று விட்டான். போகும் போது தூங்கும் மனைவியை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு தான் சென்றான்.

ஏனோ திருமணம் என்னும் பெயரில் அவளுடைய வாழ்க்கையை அழித்து விட்டோம் என்று அவனுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அவன் கிளம்பிச் சென்றது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் சுஜி.

தன்னுடைய வீட்டில் விடுமுறை என்றால் எட்டு மணிக்கு தான் எழுந்து கொள்வாள். அந்த நினைப்பில் அவள் அசந்து தூங்கி விட புவி எழுந்ததோ அவளை பார்த்ததோ அவள் அறிய வில்லை.

எட்டு மணி போல தான் லேசாக கண் விழித்து பார்த்தாள். இருக்கும் இடம் புரிய அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.

“கடவுளே, நான் என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். இன்னைக்கு நான் செத்தேன்”, என்று எண்ணிக் கொண்டு அவசர அவசரமாக எழுந்தவள் அங்கிருந்த பீரோ கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

நேற்றைய கோலம் அப்படியே இருக்க ஒரு விரக்தி சிரிப்பு எழுந்தது. அவசரமாக மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றவள் மீண்டும் ஒரு சேலையை எடுத்து கட்டிக் கொண்டு தயக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் வந்த போது ஹாலில் மல்லிகா அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்கவே சுஜிக்கு பயமாக இருந்தது. அவளுக்கு சப்போர்ட் செய்ய வேண்டிய புவியும் அங்கே இல்லை. வெண்ணிலாவும் அங்கே இல்லை.

அவளைக் கண்டதும் முறைத்துப் பார்த்த மல்லிகா “நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. புருஷன்காரன் எந்திச்சு கடைக்கு போனது கூட தெரியாம தூங்கினா இந்த குடும்பம் விளங்கிரும். நல்ல வளமான குடும்பத்துல பிறந்திருந்தா சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி எந்திச்சு வேலைக்கு போறவனுக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்கணும்னு அறிவு இருந்துருக்கும். இங்க அப்படியா? ஒண்ணும் இல்லாத வீட்ல இருந்து வந்தா இப்படி தான்”, என்று கத்த சுஜிக்கு கோபம் வந்தது தான்.

“நான் ஒண்ணும் ஒண்ணும் இல்லாம வரலை. இருநூறு பவுன் நகையோட தான் வந்திருக்கேன்”, என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படி சுய தம்பட்டம் அடித்தால் அவர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணி அமைதியாக நின்றாள்.

அது மட்டுமில்லாமல் “இது நீ தேடிகிட்ட வாழ்க்கை சுஜி. உன்னால இனி பிறந்த வீட்டுக்கு போய் நிக்க முடியாது. இப்ப நீ என்ன பேசினாலும் அவங்க தப்பா தான் பாப்பாங்க. பேசாம நின்னுரு”, என்று அவள் மனசாட்சி எடுத்துரைக்க மரம் போல நின்றாள்.

அவள் அமைதியாக இருக்கவும் மல்லிகா மேலும் திட்டிக் கொண்டே இருந்தாள். பாரி மல்லிகாவைத் திட்டியும் கூட அவள் வாயை மூட வில்லை. அப்போது “அம்மா, காலையிலே இங்க என்ன சத்தம்?”, என்று கேட்ட படி வந்தாள் வெண்ணிலா. தோழியைக் கண்டதும் கொஞ்சம் தைரியம் வந்தது சுஜிக்கு.

“உன் அண்ணன் வேலைக்கு போனது கூட தெரியாம இவ்வளவு நேரம் தூங்குறா. இதுக்கு தான் சொன்னேன் இந்த சம்பந்தம் வேண்டாம்னு”, என்றாள் மல்லிகா.

“அம்மா, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? என்னப்பா இதெல்லாம்?”, என்று வெண்ணிலா கேட்க “சில ஜென்மங்களை திருத்த முடியாது மா”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றார் பாரி.

“என்ன டி திமிரா? எனக்கா அறிவில்லைன்னு சொல்ற?”, என்று கேட்டாள் மல்லிகா.

“ஆமா உங்களைத் தான் சொன்னேன். சுஜிக்கு நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு. அவளை விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் கடைக்கு எதுக்கு போனன்னு நீ அண்ணனை தான் முதல்ல கேக்கணும். நாளைக்கு எனக்கும் கல்யாணம் ஆகும். அப்ப நானும் இப்படி தான் சீக்கிரம் எந்திச்சு வரணும்னு நினைப்பியா? இல்லை நான் நைட் முழுக்க என் புருஷன் கூட சந்தோஷமா இருந்து காலைல அசந்து தூங்கிட்டேன்னு நினைப்பியா?”, என்று பட்டென்று வெண்ணிலா கேட்க சுஜியே அவள் பேச்சை வாயைப் பிளந்து பார்த்தாள்.

“சின்ன பொண்ணு மாதிரியா டி பேசுற?”, என்று மல்லிகா கேட்க “ நீ வீட்டுக்கு பெரியவளா லட்சணமா நடந்துக்கோ மா. அப்ப நானும் சின்ன பிள்ளை மாதிரி இருப்பேன். வா சுஜி”, என்று சொன்ன வெண்ணிலா அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய அறைக்குச் சென்றாள்.

“என்ன டி அத்தை கிட்ட இப்படி பேசிட்ட?”, என்று கேட்டாள் சுஜி.

“அம்மா எப்பவும் இப்படித் தான். நான் பட்டு பட்டுனு பேசினா தான் அடங்குவாங்க. இல்லைன்னா வரைமுறை இல்லாம பேசிட்டே போவாங்க. முன்னாடி எல்லாம் இவங்க இப்படி கிடையாது. எப்ப இந்த ரேணுகா வீட்டுக்கு வந்தாளோ அப்ப இருந்து அம்மாவும் பணம் பணம்னு அலைய ஆரம்பிச்சிட்டாங்க. சரி அதை விடு. நைட் எல்லாம் ஓகே தானே?”, என்று கேட்டு கண் சிமிட்டினாள் வெண்ணிலா.

“ஓகே தான்”, என்று சுஜி சலிப்புடன் சொல்ல “நான் என்ன கேக்குறேன்னு புரியுதா சுஜி? நீ வெறும் அண்ணியா மட்டும் இருந்திருந்தா இந்த கேள்வியைக் கேட்டுருக்க மாட்டேன் டி. என் பிரண்டா போய்ட்டியா? அதனால தான் கேக்குறேன். சொல்லு, எல்லாம் ஓகே தானே?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

“அதான் சொன்னேனேனே எல்லாம் ஓகேன்னு? என்ன புரியலையா? ஒகேன்னா நல்லா தூங்கி எழுந்தேன்னு அர்த்தம்”, என்று விரக்தியாக சொல்ல “சுஜி”, என்று அதிர்வாக அழைத்தாள் வெண்ணிலா.

காதல் தொடரும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!